வரும் போதே கால் செருப்பை கழற்றி வீசி விட்டு, தடுமாறி உள்ளே வேகமாக நுழைந்த சங்கரி அலறியது,“ஃபேனைப் போடுங்க முதல்ல. அம்மாவுக்கு வேர்க்கும். அய்யோ, அம்மா, எப்படீம்மா , இப்படிப் படுத்திருக்கே?”
முகத்தில் பெரிதாக குங்குமம் அப்பி, அமைதியாகக் கிடந்திருந்த அந்த முதியவளிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. அவர் உயிர் நீத்து இரண்டு மணி நேரமாகியிருந்தது.
“அம்மா காலெல்லாம் ஏன் கட்டியிருக்கு? ஏன் மூக்குல பஞ்சு?. எடுடா, நாகராஜா, எடுடா அதை. அய்யோ, வயறு கலங்குதே? நான் என்ன ப்ண்ணுவேன், நான் என்ன பண்ணுவேன்?”
பதைபதைத்து, அம்மாவின் கையை, காலைத் தொட்டு, அலறி விழுந்த சங்கரி, டாய்லெட் போய்வந்து, தேம்பி அழுது, ஒரு மூலையில் துவண்டு மயக்கமாகக் கிடந்தாள்.
அரைமணி நேரம் அழுதபின் சங்கரி செல்ஃபோனில் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், “நாளைக்குத்தான் எடுக்கப்போறாங்க. ஆமா, பெரியண்ணன் நைட் பஸ்லதான் கிளம்பராரு. நாளைக்கு நீங்க பிள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, சாவியை சரிதா அம்மா கிட்ட கொடுத்திருங்க. அவங்க மத்தியானம் கூட்டிட்டு வந்திருவாங்க. பால்காரன் நம்பர்….”
மிகத் தெளிவாகச் சிந்திக்கிற இதே சங்கரிதானா, அரைமணி முன்னே அரற்றியது? எப்படி ஒரு இழப்பு இருக்கும்போதே, நிமிடங்களில் மூளை மற்ற விசயங்களைத் தானே மாற்றியமைத்துக் கொள்கிறது? கண்கலங்கி நின்றிருந்த பலரும் சில நிமிடங்களில் சிரித்துப் பேசியதையும் நாம் கண்டிருக்கலாம். அவர்களது உணர்ச்சிகள் பொய்யானவையா? நிச்சயமாக இல்லை.
சரி, சோக உணர்வு அடங்கியபின், ஏன் நகைச்சுவை வருகிறது? வீட்டில் ஒரு சோகச் சூழல் இருப்பது, தருக்கம் செறிந்த மூளைக்குத் தெரியுமே? அப்புறமும் ஏன் , சூழ்நிலைக்குப் பொருந்தாதவாறு சிரிக்கச் செய்கிறது?
மனிதன் சமூக விலங்கு. சமூகத்தின் அடையாளம் சுமுகமாகச் செல்லுதல். சூழ்நிலை கனத்திருப்பதால், பெருமூளையிலிருந்து மீண்டும் ஆளுமை விலகிச்செல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே, சமூகத் தொடர்பை மீட்டெடுத்துக் கொள்ள, மூளை இயல்பாக நடக்க முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதி நகைச்சுவை, சுமூகப் பேச்சு வார்த்தைகள்.
மூளையைப் பற்றிச் சில வரிகள். மனித மூளையைப் பெருமூளை, சிறுமூளை, லிம்பிக் அமைப்பு மற்றும் மூளைத்தண்டு என நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இதில் கவனத்திற்குப் பெருமூளையையும், லிம்பிக் அமைப்பையும் மட்டும் எடுத்துக்கொள்வோம். பெருமூளையின் முற்பகுதி (Pre-frontal cortex) கவனத்தையும், தருக்க ரீதியான சிந்தனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. லிம்பிக் அமைப்பு (limbic system) மிகப் புராதான அமைப்பு. அதாவது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பரிணாம வளர்ச்சியில் உயிரிகளில் இருக்கும் ஒர் அமைப்பு. பரிணாமத்தில் வளர்ந்த ஒரு அமைப்பு. அதிலும் பெருமூளையின் முற்பகுதி, பாலூட்டிகளில் சமீபத்தில் வளர்ந்த உறுப்பு. இதுவே, பாலூட்டிகளுக்கு மேலதிக அறிவினை தக்கவைக்கும் பகுதி.
தருக்கம், ஆய்வு சார்ந்த சிந்தனை போன்றவை பெருமூளையின் முற்பகுதியின் பணி. உணர்வுகள், அதன் அடிப்படையான இயக்கத் தூண்டல்கள், லிம்பிக் அமைப்பின் உள்ளே இருக்கும் அமிக்டெலாவின் பணி.
மூளையில் அமிக்டெலாவும், பெருமூளையின் முற்பகுதியும், தகவல் மேலாட்சியைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவரும் போட்டியில், நமது உணர்ச்சிகளும், யதார்த்த நடத்தைகளும் மாறுவதன் வெளிப்பாடுதான் சங்கரியின் வேறுபட்ட இயக்கங்கள் போன்றன.
இழப்பு அல்லது ஒரு அதிர்ச்சிச் செய்தி என்பது முதலில் தற்பாதுகாப்பற்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது. கற்கால மனிதனில் இது நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டி, அட்ரினலினை ரத்தத்தில் செலுத்தி விடவும், மூளை பயங்கர வேகத்தில் “ஓடு” என்பதாகக் கட்டளை இடுகிறது. அதற்கு உடல் , சர்க்கரையை ரத்தத்தில் அதிகரித்து, சக்தியைத் தந்திருந்தது.
இப்போதும் அதிக வித்தியாசமில்லை. சுரப்பிகள் தங்கள் வேலையைச் செய்கின்றன. உடல் படபடக்கிறது. நின்று நிதானிக்கும் ஆற்றலைத் தற்காலிகமாக நாம் இழக்கிறோம். உடல் உறுப்புகளின் கட்டுப்பாடு நம் பெருமூளையிலிருந்து சில நிமிடங்கள் அகன்று விடுகிறது. கண்கள் குவியத்தை இழக்கின்றன.
யாரிடம் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே அறியாத ஒரு நிலை. உடல் கட்டுப்பாடு , மூளையின் தருக்கப் பகுதியிலிருந்து அற்றுப்போய், பீதி, பயம், காப்பற்ற நிலை போன்ற உணர்ச்சிகளின் கருவூலமான அமிக்டெலாவின் ஆணையின் கீழ் வருவதில் உள்ள தடுமாற்றமே நாம் சங்கரியிடம் கண்டது.
தமிழ்த் திரைப்படங்களில் “அப்பா, நான் அவரைக் காதலிக்கிறேன்” என்று மகள் சொன்னதும் , அப்பா தடுமாறி நெஞ்சைப் பிடிப்பதும் இந்த அமிக்டெலா நாடகத்தின் ஒரு அபத்த நிலைதான்.
அதிர்ச்சியின் அடுத்த நிலை , தற்காப்பிற்காக தாக்குதல், அல்லது தப்பியோடுதல். இரண்டும் கிடைக்காத நிலையில் , மூளை தடுமாற, அது அமிக்டெலாவின் ஆளுமையிலேயே இருப்பதால், இயலாமை, மற்றொரு உணர்வின் வடிவெடுக்கிறது. கோபம்.
“எனக்கு ஏன் இந்த நிலை?” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா?” என்கிறாள்.
இந்த உணர்வுக் கொந்தளிப்பு நிலை 20 நிமிடங்கள் நீடிக்கலாம். பெரும்பாலும் 10 நிமிடங்களில் மூளையின் தருக்கப்பகுதி தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிடும். அமிக்டெலா, கொந்தளிக்க வைத்து, கற்கால மனிதனை ஓட வைத்த நிம்மதியில், அடங்கிவிடும். அடங்காதவர்களை, அமைதியாக அமர வைக்கப்பட்டு, நீர் அருந்த வைத்து, மூச்சை இழுத்திப் பிடித்து விட வைத்தால் , சில நிமிடங்களில் அமிக்டெலாவின் ஆதிக்கம் சற்றே அடங்கும்.
இந்த அதிர்ச்சியில் , இல்லாத புகழ்ச்சியும், தூற்றலும் தூக்கலாகவே வரும்.
“நான் வர்ற வரை உயிரோட இருப்பேன்னியேம்மா? எழுந்திரு… எந்திரிங்கறேன்ல, எந்திரி”
“அய்யோ, அவ என்னிக்குமே எங்கிட்ட பேசாம தூங்கமாட்டா.” என்னிக்குமே என்பது நிஜமாக இருக்கலாம், இல்லாமில் இருக்கவும் வாய்ப்பு பெருமளவு இருக்கிறது. இந்த உயர்வு நவிற்சி, சாத்தியமற்றவை கூறுதல் என்பன, பயத்தால் , இரக்கத்தால் வந்தவை அல்ல. தனக்குப் பிடித்த ஒன்றின் இழப்பு, மிகப்பெரிது என்பதை அமிக்டெலா உலகிற்குக் காட்டும் முயற்சி . இதுவே ஒப்பாரிப் பாடல்களில் வரும் உயர்வு நீட்சி வரிகள்.
“அஞ்சாறு புலிசிங்கம் அறைஞ்சே கொன்னவனே” என்று ஒருவேலையும் செய்யாது, சோம்பேறியாகக் கிடந்து இறந்தவனைப்பற்றிப் பாடுவதில் பொருள் பார்க்க்கூடாது. அமிக்டெலாவின் வேலையெனத் தள்ளி நின்று ரசிக்கவேண்டும்.
இதையெல்லாம் நாலே வரியில் கம்பன் ரசிக்க வைக்கிறான்.
இராமாயணத்தில் , வாலி இறந்த சேதிகேட்டு தாரை புலம்புகிறாள்:
நீறாம் மேருவும் நீ நெருக்கினால் மாறோர் வாளி உன் மார்பை ஈர்வதோ?
தேறேன் யானிது, தேவர் மாயமோ?
வேறோர் வாலி கொளாம் விளிந்துளான்?
நீ நெருக்கினால் மேருமலையும் பொடியாகும். என்பது ஒரு உயர்வு நீட்சி. அவளால் நம்ப முடியாத அதிர்ச்சி தரும் செய்தி, “வேறோருவன் அம்பு , உனது மார்பைப் பிளப்பதோ?”
“நான் நம்ப மாட்டேன். இது தேவர்களின் மாயஜாலமோ“ என்பதில் பெருமூளை சற்றே வந்து மீண்டும் மறைகிறது. “தேறேன் யானிது” ஒரு கையறு நிலையைச் சற்றே காட்டுகிறது.
அடுத்த வரியில் கம்பன் அமிக்டெலாவின் பணியை அற்புதமாகச் சொல்கிறான். “வேறோர் வாலிகொளாம் விளிந்துளான்?” – வேறொரு வாலி செத்திருக்கிறான் போலும்.
மூளை ஒரு தூண்டுதலைப் பதிவு செய்யும் விதத்தை இரு வகையாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒன்று, தூண்டுதலை தாலமஸ் என்ற உறுப்பு பதிவு செய்து, அத்தூண்டுதலை மூளையின் பிற பகுதிகள் கிரகிக்கும் மின் குறிகளாக மாற்றுகிறது. தூண்டுதல், பார்க்க்க்கூடிய குறிபடைத்ததாக இருப்பின், அது மூளையின் பின்பகுதியில் இருக்கும் விஷூவல் கார்ட்டெக்ஸ் பகுதிக்குச் செலுத்தப்படுகிறது. விஷூவல் கார்ட்டெக்ஸ், இதனைப் பெருமூளையின் முன்பகுதிக்கும், அமிக்டெலாவுக்கும் அனுப்புகிறது. பார்க்கப்படுவது உணர்வைத் தூண்டுவதாக இருக்குமானால், அமிக்டெலா தூண்டப்படுகிறது. பார்க்க்ப்படுவது தர்க்கத்தையோ, சிந்தையையோ தூண்டுவதாக இருக்குமானால் பெருமூளை தூண்டப்படுகிறது.
இரண்டாவது வகையில், இப்படி தாலமஸ் – விஷூவல் கார்ட்டெக்ஸ் என மட்டும் நேர்க்கோட்டில் மூளை செலுத்துவதில்லை. தாலமஸிலிருந்து மின்குறிகள் அமிக்டெலாவுக்கும் சென்றுவிடுகிறது, என்கிறார்கள். இதன் பின்புலம், நாம் பார்க்கும் பொருள் பார்க்கப்படாமலேயே, உணர்வு பூர்வமான இயக்கஙக்ள் தூண்டப்பட்டுவிடுகின்றன என்ற நிதர்சனமான ஆய்வு முடிவுகள். பாம்பு போல ஒன்று சரியாகப் பார்க்கப்படுவதன் முன்னரேயே, தாலமஸ்ஸின் தவறான (சரியான?) தூண்டுதலால், அமிக்டெலா தூண்டப்பட்டு, ஒன்றுமில்லாமலேயே நாம் பதறிவிடுகிறோம். இதில் பெருமூளையும் தவறுதலாகத் தூண்டப்படுவதால், கேள்விகளாகவோ, அல்லது தீர்மானமான பதிலாகவோ உளறுகிறோம்.
‘அய்யோ அங்க பாம்பு, பாம்பு!’ என்று அலறும் ஒருவரின் கை நீளும் இடத்தில் ஒரு கயிறு கூட இருந்திருக்காது. பெருமூளை சரியாக வேலை செய்யும் வேறொருவர், பரிசோதித்து, ‘இங்க ஒண்ணுமே இல்லையே?’ எனும்போது , பதறியவர் சற்றே அமிக்டெலா அடங்கி, ‘சே, ப்ரமைதான் போல’ என்பார். பதறியவர், தருக்கப் பிழையாகப் பேசுவது, அவரது அமிக்டெலாவின் ஆதிக்கமும், தவறிய பெருமூளையும் நிகழ்த்திய விபரீதக் களேபரம்.
“மூக்குல எதுக்கு பஞ்சு? நாகராஜா எடுடா, எடுடா அதை…ஃபேனைப் போடுங்க, அம்மாவுக்கு வியர்க்கும்,” என்ற சங்கரியின் உளறலும் இதுபோன்ற பார்வைத் தூண்டுதலில், தாலமஸ் அமிக்டெலாவை முதலில் தூண்ட, பெருமூளை பரிதவிக்கும், விபரீத உணர்ச்சிவெளிப்பாட்டு வகைதான்.
“வேறோர் வாலிகொளாம் விளிந்துளான்?” இதுபோன்ற ஒன்றேதான்.
இந்தப் பாடலை விட, அமிக்டெலா மற்றும், பெருமூளையின் முற்பகுதியின் பெரும்போரைக் கண்முன்னே காட்டிய பாடலை நான் இது வரை கண்டதில்லை.
~oOo~
உசாத்துணைகள்
- Emotional Intelligence – Daniel Goleman
- Vital lies and Simple Truths – Daniel Goleman
- Interpretation of Dreams – Sigmund Freud
- The Amygdala & Emotions
- Brain Structures and Their Functions
Excellent article by Sri Sudhakar Kasthuri explaining the functions of various parts of the brain with a fictional event and from Kamba RamayaNam. Very informative. My admiration towards the writer increases manifold for his choice of subjects and style of writing and wide reading. Thank you Sri Sudhakar.
R. Jagannathan