குளக்கரை


[stextbox id=”info” caption=”சிறுவர் மணம்: அமெரிக்காவில் நிலவும் அசிங்கம்”]

இந்தியர்களை இந்து மதத்திலிருந்து வெளியேற்றி, அவர்களைப் பரமபிதாவின் கருணைக்குப் பாத்திரமானவர்களாக ஆக்கவும், இப்படி சமூகத்தை உடைப்பதன் மூலம் மதப் போர்களை உருவாக்கி இந்தியாவையே உடைக்கவும் அமெரிக்க மதம் மாற்றும் தந்திரசாலிகள் பல பத்தாண்டுகளாக முயன்றுவருகிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் இந்த மதம் மாற்றும் எந்திரம் மிகத் திறமையாக வேலை செய்து தென்னிந்தியாவில் பரவலாக ஊடுருவி இருப்பதாகத் தகவல்கள் அங்கங்கே வெளியாகி வருகின்றன.

அது எப்படி இருந்தாலும், அமெரிக்க அரசாகட்டும், அரசியலாளராகட்டும், ஊடகங்களாகட்டும் எல்லாமே ஒன்றிணைந்த பார்வையோடு இந்தியாவை அணுகுகின்றன. நாகரீகமில்லாத நாடு, பண்பாடில்லாத மக்கள், அரை நிர்வாணமாக உலவுபவர்கள், பத்தாம் பசலிகள், காட்டு மிராண்டிகள், வன்முறைக்கு உடனே இறங்குபவர்கள், ஊழல் நிறைந்த நாடு இத்தியாதி. தமக்கு அதிகம் பரிச்சயமில்லாத மக்களைப் பற்றி இத்தனை இழிவான நோக்கு கொள்ள என்ன காரணமாக இருக்கும்? பல உண்டு. அவற்றில் ஒன்று வெள்ளை இன மேட்டிமைப் பார்வை. இன்னொன்று மேலைக் கிருஸ்தவம்- இதன் மையச் சிந்தனைக் கூறு கிருஸ்தவரல்லாதவர் மனிதரே அல்ல. மூன்றாவது பொருளாதார வளம் கொடுத்த மேட்டிமை மனோபாவம்.

இவை மூன்று மட்டுமே அல்ல. வேறு உந்துதல்களும் உண்டு. அமெரிக்க/ யூரோப்பிய மேல் நிலைக்கு எந்த சவாலும் உலகின் எந்தப் புறத்திலும் வராமல் பார்த்துக் கொள்ளும் ராஜதந்திர நோக்கமும் உண்டு.
இப்படி ஏற்கனவே எரிகிற கொள்ளிக்கு யாராவது எண்ணெய் வார்க்க வேண்டாமா? அதுவும் சொந்தமானவர்களே ஊற்றினால் இன்னும் மேல். இந்தியத்தை எதிர்த்து, இந்து சமுதாயத்தை ஏளனம் செய்து, முதலிய வெள்ளையத்துக்கு எப்போதும் உதவவே போகும் நபர்கள் நம் ஊர் இடது சாரி மேதைகள். இத்தனை நம்பகமான காலாட்படையை வெள்ளை நாகரீகம் இழக்குமா? அங்குள்ள பல்கலைகள், அறக்கட்டளைகள் என்று பல வகை ஆயுதங்கள் உண்டு அவர்களிடம். அவற்றிலிருந்து மேற்குக்கு வந்து அங்கு ‘சொற்பொழிவு’ ஆற்றச் சொல்லி அழைப்புகளை அனுப்புவார்கள். சில நேரம் பல்கலைகளில் போதிக்கக் கூட அழைப்பு வரும். இப்படி இந்தியப் பல்கலைகளில் இருந்து நிரந்தரமாக மேற்கில் குடியேறிய ‘மேதைகள்’ பலர் உண்டு. சிலர் இந்தியாவிலிருந்து வருடத்தில் பாதி மாதங்கள் மேற்கில் ‘போதித்து’ விட்டு மீத மாதங்களை இந்தியாவில் இருந்து தீர்க்கிறார்கள்.

இவர்கள் தொடர்ந்து இந்து சமுதாயத்தைத் தோண்டி எடுத்து இழிவுகளாகப் பார்த்துப் பதிவு செய்வதில் வல்லவர்கள். இப்படி பிச்சைக்காரர்களின் கந்தல் துணி போல பல இழிவுகளைக் கோர்த்து இவர்கள் உருவாக்கிய ஒரு உருவில்தான் இன்றைய இந்து சமுதாயம் பற்றிய கருத்துகள் மேற்கிலும், ஏன் இந்தியப் பல்கலைகளிலுமே கூட நிலவுகிறது. ஏனெனில் இரு புறமும் இவர்கள்தான் இந்திய வரலாறு/ பண்பாடு/ தத்துவம் (ஆம், தத்துவத்தைக் கூட விட்டு வைப்பதில்லை மார்க்சிய ‘மேதைகள்’) ஆகியவற்றைப் போதிப்பவர்கள். மாற்றுக் கருத்துகள் பல்கலைகளுக்குள் நுழையாமல் கவனித்துக் கொள்வதிலும் இவர்கள் 60 ஆண்டுகளாகப் பயிற்சியோடு மிக்க சாதுரியமும் பெற்றிருக்கிறார்கள்.

இந்த வகைப் பதிவுகள் வெள்ளையர் நடுவே ஏற்கனவெ இந்தியாவை, இந்தியரைப் பற்றி உள்ள கேவலமான கருத்துகளை மேலும் உறுதி செய்யும் என்பதால், மேலைப் பல்கலைக்கழகங்கள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் இந்தியா/ இந்து சமுதாயம் பற்றி ஏதாவது ஆக்க பூர்வமான தகவல் அளிப்பு என்றால் மிகவுமே தேடித்தான் பெற முடியும்.

இவர்களின் எரிகார முயற்சிகளுக்குத் துணையாக, அங்கிருந்து இங்கு அனுப்பப்பட்டு, ஒன்றரை மாதமோ, ஒரு வருடமோ தங்கி எதெல்லாம் கோணல், எதெல்லாம் வக்கிரம் என்றே முழுதும் தேடி அவற்றைக் கண்டு பிடித்து, உடனே ஊதிப்பெருக்கி அப்பத்திரிகைகளில் எழுதித் தம் தொழில் திறமையை மிகவே கூர்மையாக்கிக் கொள்ளும் மேலை ‘ரிபோர்டர்’கள் இந்த கேலிச் சித்திரங்களை மேன்மேலும் வலுப்படுத்தி விடுவார்கள்.
ஆனால் ஒரு பில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் எங்காவது ஒரு பெண் வன்முறையில் உயிரிழந்தார் என்று செய்தி கிட்டினால் அதைக் கட்டம் கட்டிப் பிரசுரிப்பார்கள். ஏன் நம் ஊடகங்களே கூட இதைத்தான் செய்கின்றன, அவர்களைச் சொல்லி என்ன பயன்?

பஞ்சம், வெள்ளம், ரயில் கவிழ்ந்தது, வெடிகுண்டு வெடித்துப் பலர் சாவு, ஆட்சி கவிழப் போகிறது என்ற அச்சுறுத்தல் கூடுவது, இந்திய வங்கிகளின் செல்லாக் கடன் ஏராளம் என்ற செய்தி, தவிர ஓ, மிகவும் பிடித்தமான செய்தி, முஸ்லிம்களை இந்துக்கள் கொல்வது, சர்ச்சின் உண்டியல் திருட்டுப் போவது போன்றன மட்டுமே பிரசுரமாகும். ஆனால் அமெரிக்கப் போர்விமானங்கள் நூற்றுவரைத் தவறான செய்தியால் குண்டு வீசிக் கொன்றால், ஒரு சிறு கட்டத்தில் வெளியாகும் அந்தச் செய்திக்கு உள்ளூர் இடது சாரி, வலது சாரி, விஜயம் செய்யும் இந்திய மேதைகள் யாரும் கடிதங்கள் எழுதிக் கண்டனம் தெரிவித்து, ஊர்வலமெல்லாம் போக மாட்டார்கள்.

இதை எல்லாம் விட மேலை மக்கள் மிக ரசித்துப் படிக்கும் செய்தி, எங்காவது ஒரு பெண் தன் கணவரின் சிதையில் பாய்ந்து தீக்காயம் பட்டு மருத்துவ மனையில் கிடந்தால் அது அல்லவா அதி- ரசமானது. இப்படியாக அற்புதச் செய்திகளால் மேலை உலகு இந்தியாவைப் பற்றித் தினம் அறிகிறது.

கீழே உள்ள செய்தி அறிக்கையில் இருப்பது வேறொரு கோணத்தை நமக்குக் காட்டுகிறது.

குழந்தைத் திருமணம் என்ற காட்டுமிராண்டித்தனத்தை இந்தியர்கள் இன்னும் கை விடவில்லை என்று இந்தியாவிலும், வெளிநாட்டிலும் புலம்பிக் கூக்குரலிட்டு, இந்துக்களின் கேவலமான பழக்க வழக்கங்களை இந்திய அரசாங்கம் உடனே தடை செய்து அவர்களைத் தண்டிக்க வேண்டும், அல்லது கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று அறிக்கை விடும் மேலைத் தன்னார்வல அமைப்புகளின் கவனத்தில் இருந்து தப்பி இருக்கிற ஒரு சிறு விஷயம் பற்றிய செய்திக்கான சுட்டி இது.

இது அத்தனை முக்கியமான செய்தியே இல்லை என்பது அமெரிக்க ஊடகங்களின் கருத்து. இல்லையென்றால் கடந்த முப்பதாண்டுகளில் இந்தச் செய்தியை நீங்கள் ஓரிரு தடவைக்கு மேல் அமெரிக்க/ மேலை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனாலும் எப்படியோ கசிந்து இப்போது வெளி வந்திருக்கிறது.

உலகுக்கு அற போதனை செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவில், பெரும்பாலான மாநிலங்களில் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடையேதும் இல்லையாம். 13, 14 வயதினர் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவும் சில நேரம் 14 வயதுப் பெண்கள் அவர்கள் வயதைப் போல இரட்டை மடங்கு மூத்த ஆண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்களாம். அதோடு முடிந்ததா கதை, ஒரு (வயதால் மூத்த) ஆண், சிறுமியை வன்புணர்வு செய்து அவள் கர்ப்பமானால், அவளை அந்த ஆண் திருமணம் செய்து கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம். இதைப் பற்றிப் பலமான விவாதங்கள் சட்ட சபைகளில் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

கிருஸ்தவம் அரசியலிலும், ஊடகங்களிலும், கருத்து வெளியிலும், கல்விக் கூடங்களிலும் ஆட்சி செய்யத் துவங்கி விட்ட இன்றைய இந்தியாவில், இந்து சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சிக்க அவர்களுக்குப் பிரச்சாரத்துக்கு நிதி உதவியைக் கொட்டும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று. அந்த அமெரிக்காவில் கிருஸ்தவ ஆட்சியே மேலோங்கி உள்ள பல மாநிலங்களில், தீவிரக் கிருஸ்தவர்களான பல அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் சட்டசபையாளர்கள், இத்தகைய திருமணங்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது ஏன் என்று செய்தி விளக்குகிறது.

இப்படி ஒரு மாநிலமான டெக்சாஸில் மட்டும் 2000 த்திலிருந்து 2014 ஆம் ஆண்டுவரையான 14 வருடங்களில் 40,000 சிறு பிராயத்தினர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் எத்தனை ஆயிரம் பேர் இப்படி மணம் செய்திருப்பார்கள் என்று நாம் ஊகிக்கலாம். [டெக்ஸாஸின் சட்டசபை உறுப்பினர்களும், ஆளுநரும் எத்தகைய குணவான்கள் என்பதைப் பேசும் ஒரு கட்டுரையை இங்கே பார்க்கலாம்:
http://www.newyorker.com/magazine/2017/07/10/americas-future-is-texas

இதைப் பற்றி இந்திய ஊடகங்களில் ஏதாவது பார்க்க முடியுமா என்றால், யார்ரா பைத்தியக்காரன் என்று நம் ஊடக நிர்வாகிகள் கேட்கக் கூடும். ஆனால் இந்தியர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று ஒரு பெண்மணி தன் அதிபுத்திசாலித்தனத்தால் கண்டு பிடித்து முகப்புத்தகத்தில் ஒரு பதிவு போட்டால், அது எப்படி ‘வைரலாக’ எங்கும் பரவியது என்று செய்தியைப் பிரசுரித்து ரொம்பவே மகிழ்வார்கள் நம் ஊடகதாரிகள். ]

கடந்த பதினான்காண்டுகளில் எத்தனை செய்தித்தாள்கள்/ தொலைக்காட்சிகள் இந்தச் செய்தியை வெளியிட்டன என்று கேட்போமாயின் அனேகமாக ஏதும் வெளியிட்டிராது. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் திருமணம் பற்றி நக்கல் செய்யும் செய்திகள் எத்தனை முறை அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும்? அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் ஆண்டுக்கு ஒரு தடவையிலிருந்து பல தடவை இச்செய்திகள் வெளியாகி இருக்கும் என்று ஊகிக்கலாம். இந்தியாவிலேயே கூட ஏராளமான செய்தி அறிக்கைகள் இந்தியக் குழந்தைத் திருமணங்கள் பற்றியவை வெளியாகின்றன.

வலையில் தேடினால் வெறும் விடியோக்களே பத்து வலைப் பக்கங்களை நிரப்பக் கூடிய அளவு கிட்டும்.

மாறாக அமெரிக்கக் குழந்தைத் திருமண விடியோக்கள் மிகக் குறைவாகத்தான் கிட்டும். ஆனால் திருமணங்கள் ஒரு வேளை மிகக் குறைவா? இல்லை. இங்கே பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றின் செய்திக்கான சுட்டி:

http://www.independent.co.uk/news/world/americas/200000-children-married-us-15-years-child-marriage-child-brides-new-jersey-chris-christie-a7830266.html

கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவில் இரண்டு லட்சம் சிறு வயதினர் திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவை பற்றிய அறிக்கைகள் வெளிவரத் துவங்கியது இந்த வருடம்தான். 15 வருடங்களாக இந்த ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தனவாம்? அதற்கு முந்தைய நூறாண்டுகளில் எத்தனை லட்சம் சிறு வயதுத் திருமணங்கள் நடந்திருக்கும்? அது பற்றி இந்த ஊடகங்கள் இத்தனை பத்தாண்டுகளாக எதுவும் பேசவில்லை, ஏன்?

இந்தியாவில் செய்தித்தாள்களில் அமெரிக்காவில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் பற்றியோ, தினம் சுட்டுக் கொல்லப்படும் கருப்பு அமெரிக்கர்களின் கொடும் சாவுகள் பற்றியோ, வெள்ளை மாளிகை முன்னரே துப்பாக்கிகளோடு உலவி கருப்பு அமெரிக்க அதிபரை அச்சுறுத்த முயன்ற வெள்ளை இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டங்கள் பற்றியோ, அங்கு பல மாநிலங்களில் அமலில் இருக்கும் எத்தனையோ இனவெறுப்புச் சட்டங்கள் பற்றியோ, மாநகரங்களில் தெருவில் பிச்சை எடுப்பவர்கள், வீடின்றி நடைபாதையில் தூங்கும் ஏழைபாழைகள், முதியவர்கள் என்று அமெரிக்கா மட்டுமல்ல, பல மேலை நாடுகளின் அவலங்கள் பற்றிய விரிவான செய்தி அறிக்கைகளோ, படங்களோ, அலசல்களோ இந்தியச் செய்தித்தாள்களில் மிக மிக அரிது.

வெறும் செய்திகளோ, அல்லது அலசல்களோ வந்திருக்குமா என்றால் எதற்கு என்று நம் ஊடகங்களின் பதிலாக இருக்கும். அப்படி ஒரு அலட்சியத்துக்கு என்ன காரணமாக இருக்கும்? இனி அமெரிக்காவில் குழந்தைத் திருமணம் எத்தனை ஆழமாகப் பரவியுள்ள ஒரு பண்பாட்டு வழக்கம் என்று இந்தச் செய்தியைப் பார்த்தால் தெரியும்.

http://www.slate.com/blogs/xx_factor/2017/06/16/texas_the_state_with_the_country_s_second_highest_child_marriage_rate_finally.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”இங்கிலாந்து நாட்டின் இறங்குமுகம்”]

இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கர்ஜித்துக் கொண்டு இருந்த சிங்கம், இப்போது புஷ்டி இழந்து, படிப்படியாக இளைத்துக் கொண்டே போகிறது. இருந்தாலும் அவ்வப்போது கர்ஜிக்க முயல்வதை நாம் பார்க்கையில் கொஞ்சம் பரிதாப உணர்வு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இங்கு சிங்கம் என உருவகப்படுத்தியது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பதைத்தான். பிரிட்டனை இன்னும் ஏதோ ஒரு ‘உலக’ அரசியல் சக்தியாக உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பது அதன் மாநகரமான லண்டனும், அதில் குவிந்திருக்கும் உலக முதலியர்களின் கொள்ளைப் பணமும்தான். வேறு ஏதும் பிரிட்டனில் அப்படி உருப்படியாக, உலகளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சில பல பல்கலைகளும், கொஞ்சம் அறிவியல் ஆய்வுகளும் உண்டு. அவை ஒரு நாட்டை உலகச் சக்தி என்று சொல்லுமளவு உயர்த்தாது.

சௌதி ஆட்சியாளர்களும், இந்திய ஊழல் மன்னர்களும் , இதர ஆசிய ஆஃப்ரிக்கக் கொள்ளைக்காரர்களும் தம் மக்களிடம் இருந்து சுரண்டிய ஏராளமான நிதியை லண்டனில் உள்ள பற்பல நிதி நிறுவனங்களிலும், பங்குச் சந்தையிலும் கொட்டி மறைத்து வைத்திருக்கிறார்கள். ஒரு காரணம் சமீப காலம் வரை அன்னிய முதலீட்டுக்கு பிரிட்டன் வரி விலக்கு கொடுத்தது, அல்லது மிகக் குறைவான வரிதான் விதித்தது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மட்டுமல்ல, லண்டனில் காலூன்றிய பல வங்கிகளும் (பலவும் அன்னிய நாட்டு வங்கிகள் என்றாலும்) உலக நிதிச் சந்தையில் நிறைய தாக்கம் கொண்டிருந்தன. இந்த வகை வங்கிகளில் பல சௌதி மேலும் இதர அரபு பெருநிதிக்கிழார்களின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்பது அத்தனை வெளிப்படையாகத் தெரிந்த விஷயம் இல்லை.

ஆனால் 2008 இல் அமெரிக்காவில் நிதிச் சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்த போது, உலக பணச் சந்தையில் பெரும் குழப்பங்கள் எழவும், லண்டனில் இருந்த பல வங்கிகள் தம் வலுவை இழந்து போயின. கருப்புப் பணம் உலகெங்குமிருந்து லண்டனில் சலவை செய்யப்படுவதாகக் கருத்து நிலவத் துவங்கவும் லண்டனின் மீது இருந்த ‘நம்பிக்கை’ சரிந்தது. அதற்குப் பிறகு பிரிட்டிஷ் பொருளாதாரமோ, வங்கிகளோ இன்னும் நிதானத்தைப் பெறவில்லை. பிரிட்டிஷ் பொருளாதாரம் யூரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு அதன் தன்னிச்சையான செயல்பாடும் சாத்தியப்படவில்லை. இவையும், சீனா/ இந்தியா போன்ற நாடுகளின் எழுச்சியும் பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் அந்தஸ்தைக் குலைத்துக் கீழிறக்கியதில், பிரிட்டனின் மரபுவாதிகள் மறுபடி பிரிட்டனின் உலக அந்தஸ்தை மேலேற்ற வேண்டும் என்று கருதும் அரசியலை முன்வைக்கிறார்கள். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக மரபுவாதிகள் (கன்ஸர்வேடிவ் கட்சி) ஆட்சியில் இருந்த போதும் பொருளாதாரம் அப்படி ஒன்றும் மேம்படவில்லை.

சமீபத்தில் பிரிட்டனில் பல பத்தாண்டுகளாக இருந்து வந்த பொதுப் பணிகள், அரசு நிதியால் இயங்கி வந்த சமூக சேவை மையங்கள் போன்றன அரசின் ஆதரவை இழக்கத் துவங்கியுள்ளன. அரசின் அளவைக் குறைக்க தாச்சர் காலத்திலிருந்தே மரபுவாதிகள் முயன்று வருகின்றனர். சமீபத்தில் இந்த வகை அரசுடைய ஆதிக்கத்தைக் குறைக்கும் முயற்சி தீவிரப்பட்டு விட்டிருக்கிறது. இதன் ஒரு விளைவாக, பிரிட்டனில் நிறைய ஊர்களில் இருந்த சமூக நூலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதை இந்த வலைப்பக்கச் செய்தி சொல்லி பிரலாபிக்கிறது. கௌன்ஸில் எனப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊழியர் எண்ணிக்கை, செலவுக்கான தொகைகள் போன்றன வெட்டப்பட்டு வருகின்றன.  இந்தக் கௌன்ஸில்களின் நிதி உதவியோடு நடத்தப்பட்ட பல சமூகக் கல்வி நிகழ்ச்சிகள் இப்போது அளிக்கப்படுவதில்லை. தூலமான அமைப்புகள் மட்டுமல்ல, கௌன்ஸில்களின் வலைப் பக்கங்கள் கூடப் பராமரிப்பின்றி க்ஷீணித்து விட்டனவாம்.

இந்தக் கட்டுரை ஹார்ன்ஸீ என்னும் ஒரு ஊரையும் அங்கிருக்கும் கௌன்ஸில் நூலகம் பற்றியும் ஒரு நடப்புச் சித்திரத்தைக் கொடுக்கிறது. இத்தனை போதாமைகளுக்கிடையில் பிரிட்டிஷ் மக்களுக்கே உரித்தான பிடிவாதத்தோடு இந்த நூலகமும், இதன் பல சமூகக் கூடம் போன்ற அறைகளும் இயங்கி வருகின்றன. ஆனால் புது நூல்கள், புது செயல் திட்டங்கள் என்று புதுரத்தம் பாய்வது நின்று விட்டிருக்கிறது. நூலகத்திலும் அதிகம் பயன்படுத்துவோர் முதியோர்தான் என்கிறார் கட்டுரையாசிரியர்.

படித்தால் பிரிட்டனின் தேய்மானம் அதிகரிப்பதை நாம் உடனே தெரிந்து கொள்ளலாம். என்ன செய்வது, இனிமேல் கடற்படை, விமானப்படைகளை அனுப்பி ஒரு நாட்டை ஆக்கிரமித்து அந்த மக்களிடம் இருந்து பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து வர முடியாதில்லையா?

வேறு வழிகளில்தான் முயல வேண்டும். அவை அனேகமாக வலை உலகு, பன்னாட்டுத் தொடர்பு முறைகள் மூலமாக இதர நாடுகளை ஆக்கிரமித்து அங்கிருந்து நிதியைக் கொள்ளை அடிப்பது. இதில் கூட பிரிட்டனில் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. அதில் ரஷ்யர்களும் சீனர்களும் ஏற்கனவே மேலதிகாரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

http://www.themillions.com/2017/06/austerity-and-the-british-library.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”பெண்கள் மீது மட்டும் பிரயோகிக்கப்படும் நியாயமற்ற சட்டம்”]

காலனியாதிக்கம் என்ற கொடுங்கோலாட்சியை இன்றைய இந்தியர்கள் நினைப்பதும் இல்லை, அதன் அழிப்புகள் இந்திய நாகரீகத்தில் என்னவெல்லாம் ஒழித்தன என்பதையும் அவர்கள் ஒழுங்குமுறையாக யோசித்துப் பார்ப்பதில்லை. மாறாக காலனியம் சொல்லிக் கொடுத்த பிரிவினை வாதம், சுய வெறுப்பு ஆகியவற்றையே அவர்கள் இன்னமும் திரும்பிக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள், அல்லது அதையே ‘முற்போக்கு’ என்ற பெயரில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் போதித்து மார் வீங்கிக் கொண்டிருக்கிறார்கள். (முற்போக்கு= செகுலரியம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.)

ஸ்பெயினின் கொடுங்கோலாட்சியில் சில நூறாண்டுகள் ஒடுங்கி இருந்து கொல்லப்பட்டு, அழிக்கப்பட்ட பெரும் நாகரீகங்கள் தென்னமெரிக்காவிலும், மத்திய அமெரிக்காவிலும் பற்பல உண்டு. அந்நாடுகள் எல்லாமே தொடர்ந்த கலவரத்திலும், பெரும் குழப்பங்களிலும் சிக்கி உள்ளவை. ஸ்பெயின் அமெரிக்காக்களை விட்டு நீங்கிய பின்னும் ஸ்பெயினின் எச்ச சொச்சப் பண்பாடுதான் அங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. பழங்குடி அமெரிக்கர்கள், (இந்தியர்கள் என்று அவர்களை இன்னமும் உலகம் அழைத்துக் கொண்டிருக்கக் காரணம் உலகம் இன்னமும் யூரோப்பியத்தின் பிடியில்தான் இருக்கிறது.) எங்குமே ஆட்சியில் இல்லை. ஒருகாரணம் அவர்களின் ஜனத்தொகை பெரும் அளவில் குறைந்து போனதும், தம்மை அழித்த நவீன யூரோப்பியப் பண்பாட்டில் பங்கெடுக்க அவர்களுக்குச் சிறிதும் ஊக்கமில்லாததும், அப்படிப் பங்கெடுத்தவர்கள்/ பங்கெடுக்க முயன்றவர்களையும் யூரோப்பியமும், கிருஸ்தவமும், வெள்ளை இனமையப் பார்வையும் தொடர்ந்து பலி வாங்கியது தடுத்து நிறுத்தி இருக்கிறது. சரி, எஞ்சிய வெள்ளையினத்தவராவது, அல்லது கலப்பினத்தவராவது நன்னிலையில் இருக்கிறார்களா என்றால், இல்லை. ஸ்பெயினை அடுத்து அங்கு ஆதிக்கம் செலுத்த வந்த அமெரிக்க மறைமுகக் காலனியம், அதாவது பன்னாட்டு முதலியம் அந்த நாடுகளில் பெரும் நிலப்பரப்புகளைப் பிடித்துக் கொண்டு பற்பல சந்தைக்கான விவசாய நுகர் பொருட்களை விளைக்கும் நாடுகளாக, ஏற்றுமதியை மட்டுமே நம்பும் நாடுகளாக அவற்றை ஆக்கி விட்டது. உதாரணமாக, கோக்கோ (சாகொலேட்), காஃபி, ரப்பர், புகையிலை, பஞ்சு, மாட்டு மாமிசம், வாழைப்பழங்கள், பல இதர வகைப் பழங்கள் என்று பட்டியலே போடலாம். சில நாடுகளிலிருந்து நிலத்தடி எண்ணெயும் ஏற்றுமதி ஆகிறது- பிரேஸில், வெனசுவேலா போன்றன. சர்க்கரையும், பெரும் நிலப்பரப்புகளில் கரும்பு பயிரிடப்படுவதால் பெறப்பட்டு ஏற்றுமதி ஆகிறது.

இப்படி வணிக விவசாயத்தால் அழிக்கப்பட்ட நாடுகளில் எல் சால்வடாரும் ஒன்று. இத்தனைக்கும் எல் சால்வடோரியர்கள் தொடர்ந்து காலனியாதிக்கத்துக்கும், உலக முதலியத்துக்கும் எதிராகப் போராட்டங்களும், ஏன் ஆயுதம் தரித்த உள்நாட்டுப் போர்களையும் கூட நடத்தியவர்கள். ஆனால் பழமை வாதக் கிருஸ்தவத்தை ஆயுதம் தரித்த மார்க்சியப் போராளிகள் எங்குமே வென்றதில்லை. ரஷ்யாவில் கூட மறுபடி பழமை வாதக் கிருஸ்தவம் அதிகாரத்துக்கு வந்து விட்டது. ஏதோ கிருஸ்தவத்தைத் தாம் அழிப்பதாக மார்க்சியர்கள் என்ன பாவலா காட்டினாலும், உள்ளீட்டில் மார்க்சியத்தின் கடைசி இலக்கு கிருஸ்தவத்தின் ‘சொர்க்கம்’ என்ற அதே கற்பனைப்பிரதேசம்தான்.

ஆக மார்க்சியர்கள் ஆயுதம் தரித்து நடத்திய உள்நாட்டுப் போர்கள் எல்லாம் முடிந்து பழமைவாதிகளும் (அரீனா கட்சி) கொரில்லாக்களும் (எஃப் எம் எல் என் அணியினர்) சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு, தேர்தலில் நின்று அதிகாரத்தில் மாற்றி மாற்றி அமர்கிறார்கள். தற்போது முன்னாள் ‘புரட்சிகள்’ அதிகாரத்தில். வாக்கு விகிதத்தில் இவர்கள் கால் சதவீதமோ, முக்கால் சதவீதமோதான் பழமை வாதிகளை விடக் கூடுதல் என்பதால் இவர்களின் அதிகாரம் களிமண் அஸ்திவாரம் கொண்டது. எனவே பெண்ணெதிர்ப்பு நோக்கம் கொண்ட பழமை வாதக் கிருஸ்தவம் இயற்றிய பல சட்டங்கள் இன்னமும் அமலில் இருக்கின்றன. அப்படி ஒரு சட்டம், கருக்கலைப்பு செய்தால் பெண்கள் சிறைவாசம் பெறுவர் என்பது. தற்செயலாக அல்லது விபத்தால் கருக்கலைப்பு நேர்ந்தாலும் பெண்கள் தண்டிக்கப்படலாம். படுவர்.

அப்படி ஒரு சம்பவம் ஒரு 2016 இல் நேர்ந்தது. சாண்ட்ரா என்னும் 19 வயதுப் பெண் தான் கர்ப்பமாயிருப்பதை வயிற்று வலி வந்தபோதுதான் தெரிந்து கொண்டார். கழிப்பறையில் என்ன நடந்தது என்பது தெளிவில்லை. காவல்துறை சாண்ட்ரா தன் கருக்கலைப்பால் வெளிவந்த குழந்தையைக் கொன்றார் எனக் குற்றம் சாட்டிச் சிறையிலடைத்தார்கள். சாண்ட்ராவின் வழக்கறிஞர்கள் அக்குழந்தை 5 மாதத்தில் வெளி வந்ததற்குக் காரணம் சாண்ட்ராவுக்கு முன்னர் வந்த ஒரு தொற்று நோய். அது கர்ப்பத்தைச் சிதைக்கும் என்பது தெரிந்தது. சாண்ட்ராவுக்குத் தான் கர்ப்பமாயிருப்பது தெரியாததால் அது இறந்து பிறந்திருக்கிறது என்பது.
அரினா கட்சியினரின் சட்டப்படி இப்படிப் பட்ட பெண்கள் 20 அல்லது 30 வருடங்கள் கூடச் சிறைத் தண்டனை பெறலாம். ஆட்சியில் உள்ள எஃப் எம் எல் என் (புரட்சி!) கட்சியால் இந்தச் சட்டத்தை இன்னும் அகற்ற முடியவில்லை, ஒரு காரணம் என்ன புரட்சி பேசினாலும் முக்கால் வாசி ஜனத்தொகை இன்னமும் கருக்கலைப்புக்கு எதிராக உள்ளது என்பது கசப்பான உண்மை. நில உரிமைக்காகப் புரட்சி பேசுவதோ, போருக்குப் போவதோ வேறு விஷயம். பெண்களுக்குச் சுதந்திரமோ, சம உரிமையோ கொடுப்பது? அது என்ன ஏற்கக் கூடியதா?

கீழே உள்ள முதல் சுட்டியில் 2016 இல் வந்த செய்தி த எகனாமிஸ்ட் பத்திரிகையில் இருந்து கிட்டுகிறது. அது பெண்களுக்கு எத்தனை எதிரான சூழ்நிலை மத்திய/ லத்தீன் அமெரிக்காவில் நிலவுகிறது என்பதைச் சுட்டுகிறது.

https://www.economist.com/news/international/21711033-where-miscarrying-can-mean-life-jail-miscarriage-justice

சரி, அது ஒரு வழக்குதானே, இதை எப்படி மொத்த நாட்டுக்கும் பொதுமைப்படுத்துகிறீர் என்று கேட்பவர்களுக்கு அதே செய்தியில் 17 கிராமத்துப் பெண்கள் கருக்கலைப்பு நேர்ந்ததால் சிறையில் வாடும் தகவலும் கிட்டி இருக்கும். பொறுப்பாகப் படித்தால் அது நிலைமையை உடனே உணர்த்தும். அது போதவில்லை என்றால் சில தினங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் பத்திரிகையான த கார்டியனில் வந்த செய்தியைக் கொடுக்கிறோம். அதில் இன்னொரு உயர்நிலைப் பள்ளி மாணவி, குற்றக் கும்பலால் பல முறை வன்புணர்வு செய்யப்பட்டுக் கருவுற்ற பெண், சான்ட்ராவைப் போலவே பள்ளியின் கழிப்பறையில் எதிர்பாராமல் குழந்தை பிறக்கவும் அது இறந்து பிறந்ததாகச் சொல்கிறாள், ஆனால் காவல்துறை அந்தப் பெண் அக்குழந்தையை கழிப்பறையில் போட்டுக் கொன்றதாகச் சொல்கிறார்கள்.

அந்தப் பெண்ணுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறது. மருத்துவர்கள் அந்தக் குழந்தை இறந்து பிறந்ததா அல்லது பிறந்த பின் இறந்ததா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று சாட்சியம் சொன்னாலும் நீதி மன்றம் அதைச் சட்டை செய்யாமல் தண்டித்திருக்கிறது.

https://www.theguardian.com/global-development/2017/jul/06/el-salvador-teen-rape-victim-sentenced-30-years-prison-stillbirth
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.