இந்தியர்களுக்கு மாரடைப்பு அதிகம் வருகிறதா?

“கேபேஜ்” (CABG) என்று சுருக்கமாக சொல்லப்படும் கொரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராஃப்ட்டிற்கு எனது தமிழாக்க சுருக்கம் இதய ரத்தக்குழாய் மாற்றுவழி சிகிச்சை: (இ.ர.மா.சி.) – இரமாசி.

இது மாரடைப்பிற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை. உலகளவில் மாரடைப்பு வியாதி மிக அதிக அளவில் உள்ளதால் இந்த அறுவை சிகிச்சையும் எல்லா நாடுகளிலும் சர்வ சகஜமாகி விட்டது. மற்ற இனத்தவர்களை விட இந்தியர்களிடையேதான் இவ்வியாதி அதிகமாகவும் உக்கிரமாகவும் உள்ளது. இதற்கு காரணம் எல் பி ஏ எனும் தீமை பயக்கும் கொழுப்பு அதிகமாகவும் எச்.டி.எல். எனும் நற்கொழுப்பு குறைவாக இருப்பதும் ட்ரைகிளிசரைட் எனும் தீய கொழுப்பு அதிக அளவில் இருப்பதும் ஒரு காரணம். ரத்தக்குழாயின் அகலக்குறைவு மற்றொரு காரணம். வயிற்றை சுற்றி சேரும் கொழுப்பு ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும் இன்சுலினுடைய சக்தியை குறைக்கிறது. இந்த கொழுப்பு மற்ற இனத்தவர்களை விட இந்தியர்களிடம் அதிக அளவில் சேருவதால் சிறுவயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்பட காரணமாயுள்ளது. இதனால் சர்க்கரை வியாதியினால் பீடிக்கப்பட்டவர்கலின் எண்ணிக்கை கூடுதலாயிருப்பது இன்னொரு காரணம். மேலும் இந்தியர்களிடையே இருதயத்தை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சியில் ஈடுபாடு உள்ளவர்கள் ஒரு சிலரே. மேலும் பொது நபர் உடற் பயிற்சி கூடங்கள் அமைப்பதிலோ இந்த வியாதியை தடுப்பதில் உடற்பயிற்சிக்குள்ள முக்கிய பங்கை பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலோ அரசாங்க பொது சுகாதார துறை அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

மேற்சொன்ன காரணங்களால் இரமாசியின் எண்ணிக்கை இந்தியாவில் கூடிக்க்கொண்டே போகிறது. வருடத்திற்கு 60000 இந்தியர்கள் இச்சிகிச்சையை பெறுகிறார்கள். அமெரிக்காவில் இச்சிகிச்சையின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் முப்பது சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் காரணம் அறுவை சிகிச்சை இல்லாமல் குறுகிய ரத்த குழாய்களை விரிவுபடுத்தும் முறைகளும் (ஆன்ஜியோபிளாஸ்டி ) உட்குழாய்களை (ஸ்டென்ட்) பொருத்துவதும் புழக்கத்தில் வந்துள்ளதே ஆகும். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் இதயம் எவ்வாறு இயங்குகிறது என்ற கேள்வி வாசகர்களிடையே எழலாம். மற்ற இனத்தவர்களை விட அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மாரடைப்பு வியாதி நான்கு மடங்கு அதிகமாய் உள்ளது இந்தியர்களின் வாழ்நாள் கலிஃபோர்னியா போன்ற நகரங்களில் மற்ற இனத்தவர்களை விட அதிகமாயிருந்தாலும் மாரடைப்பினால் மரணத்தை தழுபவர்கள் 35 சதவிகிதத்திற்கும் மேல் எனும் புள்ளி விவரம் வியப்பையும் அச்சத்தையும் கிளப்புகிறது. இனி இரமாசியில் நம் கவனத்தை செலுத்துவோம்.

இரமாசி செய்முறை

அறுவை சிகிச்சையை நினைத்தாலே மயங்கி விழுமளவுக்கு இதயம் பலஹீனமாக உள்ள வாசகர்கள் இப்பகுதியை தவிர்த்து விடலாம். முதலில் மார்பில் உள்ள நடுவெலும்பு இரண்டாக பிளக்கப்படுகிறது. பிறகு, சிகிச்சையை செவ்வனே செயது முடிக்கும் வரை பொட்டாசியம் கலந்த திரவத்தை இதயத்தினுள் செலுத்துவதின் மூலம் இதயத் துடிப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. இதயத்தின் வேலையையும் நுரையீரலின் வேலையையும் ஒரு இயந்திரம் (ஹார்ட் லங் பை பாஸ் மெஷின்) மேற்கொள்கிறது. சமீப காலத்தில் இதயத்துடிப்பை நிறுத்தாமல் இச்சிகிச்சையை செய்வதில் பல மருத்துவர்கள் அனுபவம் பெற்றுள்ளதால் இந்த இயந்திர இணைப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. இச்சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் ரத்தக்குழாய்களில் முக்கியமானவை லெஃப்ட் இண்டெர்னல் தொராசிக் ஆர்ட்டரி, சபினேஸ் வெயின் என்ற இரண்டாகும். முதற் சொன்ன ரத்தக் குழாய் இரண்டாவதை விட அதிக நாட்கள் அடைபடாமல் இருப்பதால் பிற்கால விளைவுகள் சிறப்பாக உள்ளன. பொதுவாக, மேற்பாகம் அடைபட்டும் கீழ் பாகம் அடைபடாமலும் உள்ள ரத்தக் குழாய்களே இச்சிகிச்சைக்கு பொருத்தமானவை . அடைபடாத பாகத்தின் ஒரு பக்கத்தை கிழித்து அதனுடன் மேற்கூறிய ரத்தக்குழாய்களில் ஒன்றின் முனை தைக்கப்படுகிறது. இச்சிகிச்சையிலேயே இதுதான் மிகக் கடினமான பகுதியாகும். ரத்தக் குழாயின் இன்னொரு முனை வெயினாக இருந்தால் பெருந்தமனி என்று சொல்லப்படும் அயோர்ட்டாவுடன் இணைக்கப்படுகிறது. மார்புக் கூட்டினுள்ளே உள்ள தமனி(ஆர்ட்டரி) பெருந்தமனியின் கிளையாக இருப்பதால் ஒரு நுனியை பழுதுபட்ட ரத்தக்குழாயுடன் இணைத்தாலே போதும்.சிகிச்சையின் முடிவில் பிரிவுபட்ட நடுவெலும்பு மெல்லிய உலோகக் கம்பிகளினால் இணைக்கப்படுகிறது. இச்சிகிச்சையை முடிக்க 3 முதல் 5 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. ஐந்திலிருந்து ஏழு நாட்கள் மருத்துவ மனையில் தங்க நேரும். முழு நிவாரணம் பெற 6 முதல் 12 வாரங்கள் தேவைப்படும சிகிச்சை முடிந்த சில நாட்களுக்குள் ஏற்படும் விளைவுகளில் முக்கியமானவை பக்கவாதத் தாக்குதலும் அறிவாற்றல் முடக்கமுமாகும். பக்கவாத தாக்குதலுக்கு காரணங்கள் முதிய வயது, சர்க்கரை வியாதி, முந்தைய பக்கவாத தாக்குதல், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயிலோ பெருந்தமனி என்று அழைக்கப்படும் அயோர்ட்டாவில் கொழுப்படைப்போ ஆகும். அறிவுச்செயல் முடக்கத்திற்கு நீண்ட நேர அறுவைசிகிச்சையும், முதிய வயது, மனச்சோர்வு,முன்னரே இருந்த அறிவு முடக்கம் ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகிறது.

மருந்தா? இரமாசியா?

மருத்துவர் உங்களுக்கு மாரடைப்பு வியாதி உள்ளது அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றவுடன் நோயாளியின் முதற் கேள்வி இதை மருந்தால் குணப்படுத்த முடியாதா என்பதாகத்தான் இருக்கும். இந்த கேள்விக்கு தக்க பதில் 23 வருடங்களுக்கு முனபு 2649 நோயாளிகளிடம் செய்த ஆய்களிருந்து தெரிய வந்துள்ளது. 3 ரத்த குழாய்கள் அடைபட்டிருந்தாலோ, கடுமையாக பழுதடைந்திருந்தாலோ, இடது பக்க இதயக் கீழறை( லெஃப்ட் வென்ட்ரிகிள்) சேதமடைந்திருந்தாலோ அறுவை சிகிச்சைக்குட்பட்டவர்கள் மருந்து சிகிச்சை பெற்றவர்களை விட அதிக வருடங்கள் வாழ்கிறார்கள் என்பது திண்ணம் என்று இந்த பகுத்தாய்வு கூறுகிறது

இந்த பகுப்பாய்வில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பெண்மணிகளும் ஒரு சிலரே. தற்போது கட்டாய உபயோகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் மருந்துகளும் ஆஸ்பிரின் போன்ற ரத்தமிளக்கிகளும் இந்த ஆய்வு நடைபெற்ற சமயத்தில் அவ்வளவு உபயோகத்தில் இல்லையென்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்..

இரமாசியா? உட்குழாய்களா?

2009ல் வெளியான 7000த்திற்கும் மேலான பல ரத்தக் குழாய்கள் அடைபட்ட நோயாளிகளை கொண்ட பகுத்தாய்வு இரமாசிக்கும் உட்குழாய் பொருத்தலுக்கும் வித்தியாசமேயில்லை;. இரண்டு சிகிச்சைகளிலும் 6 வருடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரே அளவுதான் என்று அறிவித்தது. அது மட்டுமல்லாமல், இரமாசி பெற்றவர்கள் அதிக அளவில் பக்கவாதத்தால் தாக்கப்படுகிறார்கள். உட்குழாய் பொருத்தியவர்ககுக்கு மீண்டும் புதிய உட்குழாய்களை பொருத்த வேண்டியுள்ளது என்றும் இந்த பகுத்தாய்வு அறிவித்துள்ளது. இந்த பகுத்தாய்வின் முடிவுகள் பழைய ஆய்வுகளில் இரமாசியால் பயனடைந்தவர்களை சேர்க்காததால் இரமாசிக்கு அனுகூலமாக இல்லாதது போல் உள்ளது. ஆனால் புதிய ஆய்வுகளும் முக்கியமாக, சிண்டாக்ஸ் எனும் ஆய்வு மதிப்பெண் சேர்ப்பதின் மூலம் சிக்கல் நிறைந்த ரத்த குழாய் அடைப்புள்ளவர்கள் 5 வருட கால முடிவில் இரமாசியின் மூலம் அதிக அளவில் லாபம் பெறுகிறார்கள் என்று அறிவித்துள்ளது. முக்கியமாக, சிக்கல் நிறைந்த 3-குழாயடைப்பு உள்ளவர்களின் வாழ்நாள் இரமாசியால் நீடிக்கப்படுவதால் அமெரிக்க இதய இணைவு (அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன்) இதற்கு இரமாசியையே முதற் சிகிச்சையாக பரிந்துரைத்துள்ளது. இடது இதய முதன்மை ரத்தக் குழாய் (லெஃப்ட் மெய்ன் கொரோனரி ஆர்ட்டரி )மட்டுமோ அல்லது அதனுடன் இன்னொரு ரத்தக்குழாயும் அடைபட்டிருந்தாலும் இரமாசியும் உட்குழாய்களும் சரிசமமாகவே வேலை செயகின்றன என்று அதே சின்டாக்ஸ் ஆய்வு கூறுகிறது.

சர்க்கரை வியாதியும் மாரடைப்பும்

சர்க்கரை வியாதி மாரடைப்பு வியாதிக்கு வழிகோலுகிறது. 3 குழாய் அடைப்புள்ள சர்க்கரை வியாதிக்காரர்களிடையே உட்குழாய்களை விட இரமாசியே ஆயுட்காலத்தை நீடிக்கிறது என்பதை மூன்று புதிய ஆய்வுகளின் மூலம் அறிகிறோம். அது மட்டுமல்லாமல் 5 வருடங்களுக்கு பிறகு அகால மரணம், புதிய மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய மூன்றும் சேர்ந்த கூட்டுமுடிவில் இரமாசியே சர்க்கரைவியாதிஉள்ளவர்களுக்கு அனுகூலமாயுள்ளது. பக்கவாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் இரமாசி பெற்றவர்களிடையே இதன் எண்ணிக்கை சிறிதளவு அதிகமாயுள்ளது இந்த மூன்று ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க இதய இணைவு சர்க்கரை வியாதியும் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இதய ரத்தக்குழாய் அடைப்பும் இணைந்திருப்பவர்களை இரமாசியை தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கிறது.

பல குழாயடைப்பும், மைட்ரல் வால்வ் வியாதியும், இதய செயலிழப்பும்

இம்மூன்றும் கூடியவர்களில் இரமாசி பெற்றவர்களை ஸ்டிச் எனும் ஆய்வு மூலம் பத்து வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், எக்காரண மரணம், இதய வியாதி மரணம், இதய வியாதிக்கான மருத்துவ மனை அனுமதி ஆகிய எல்லாமே மருந்து சிகிச்சை பெற்றவர்களை விட மிகக் குறைந்த அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், மைட்ரல் வால்வ் கசிவும் இதய செயலிழப்பும் இணைந்து இருப்பவர்களுக்கு வால்வை பழுது பார்க்காமலே இரமாசியை மட்டும் செய்வதின் மூலம் அதே பலனை தர முடியும் என்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதியாகிறது.

திடீர் மாரடைப்பு தாக்குதல்

பொதுவாக இரமாசி மாரடைப்பு நிலையாக உள்ளவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சையாகும். ஸ்டெமி என்று சொல்லப்படும் மாரடைப்பு தாக்கிற்கு சிறந்த வைத்தியம் குழாயடைப்பை அதி சீக்கிரமாக அகற்றுவதும் தேவைப்பட்டால் உட்குழாய்களை அதே சமயத்தில் அடைபட்ட குழாய்களுக்குள் இணைப்பதும்தான். இதன் மூலம் வெகு விரைவாக ரத்த ஓட்டத்தை மீட்பதினால் இதயம் சேதமாவதை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். இதை செய்ய முடியாமற் போனாலோ, மாரடைப்பினால் புதிய சிக்கல்கள் உண்டானாலோ இரமாசியை செய்ய வேண்டியதாயுள்ளது. தற்போது அறுபது சத விகிதளவு இரமாசி மாரடைப்பு தாக்குதலுக்காக மருத்துவ மனையில் இருப்பவர்களுக்குத்தான் செய்யப்படுகிறது.

இரமாசி இதய வலியை முழுவதுமாக போக்குமென்றாலும் ஆயுளை நீடிக்கும் காரணங்களுக்காகத்தான் செய்யப்படுகிறது என்பதை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உணர்த்த வேண்டும். மேற்கூறிய காரணங்கள் இரமாசிக்கு அத்தியாவசியமானவை. இரமாசிக்கு முன் செய்யும் மருத்துவ பரிசோதனைகள் இக்காரணங்களை கண்டறியவேயாகும். வலுவற்று இருப்பவர்களும் நடமாட்டம் இல்லாதவர்களும், பக்கவாதத்தால் தாக்கப்படும் அபாயம் உள்ளவர்களும் இதய அறுவை சிகிச்சைக்கு முன்னரே உட்படுத்தப்பட்டவர்களும் இரமாசியினால் அதிகப் பலனடைவதில்லை.

சிக்கல்கள் நிறைந்த இதயக்குழாய் அடைப்புள்ளவர்களுக்கு எவ்விதமான சிகிச்சை உகந்தது என்பதை நோயாளியுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும். இந்த முறையினால் நோயாளிகள் மிகுந்த அளவில் பயன் பெறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள்: நோயாளி, அவர் குடும்பம், பரிசோதனைகளை செய்த இதய மருத்துவர், இதய அறுவை சிகிச்சையாளர், நோயாளியின் இதய மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் ஆகியோராகும்.இந்த கலந்துரையாடல் மூலம் சிகிச்சை முறைகளின் இடர்களையும் பயன்களையும் நன்கறிந்த இதய மருத்துவர்களும் நோயாளியின் உடல் நிலையை நன்கறிந்த அவரது குடும்பமும் குடும்ப மருத்துவரும் இவ்விஷயங்களை பரிமாறிக் கொள்வதால் நோயாளி சரியான சிகிச்சை முறையை பெற்று லாபமடைகிறார். ரத்தக் குழாய் அடைப்புகளை பரிசோதிக்கும் இதய நிபுணரே உட்குழாய்களையும் பொருத்துபவராக இருந்தால் தனிப்பட்ட முறையில் அவரெடுக்கும் முடிவுகள் இரமாசியின் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகமாயிருக்கும் நோயாளிகள் கூட உட்குழாய்களையே அதிக அளவில் பெறுவார்கள் என்பது நிச்சயம், நோயாளிகளின் ஆயுட்காலத்தை இம்முறை குறைக்கின்றது என்பதை மருத்துவர்களும் நோயாளிகளும் அறிய வேண்டியது அத்தியாவசியமாகிறது.

நோயாளிகளும் சில மருத்துவர்களும் இரமாசி மாரடைப்பு நோயை குணப்படுத்தி விட்டது என்ற தவறான எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள். ரத்த குழாய்கள் மாற்று வழி குழாய்கள் உட்குழாய்கள் ஆகிவற்றில் அடைப்பு தொடர்வதை தவிர்க்க நோயாளிகள் செய்ய வேண்டியவை பலவாகும்: அவையாவன;

1. தினசரி 81 மில்லிகிராம் ஆஸ்பிரின் மாத்திரை விழுங்குவதை பழக்கிக் கொள்ள வேண்டும்.

2. குளோபிடோக்ரெல் போன்ற மாத்திரை வகையை சிகிச்சைக்கு முன்னரே எடுத்துக்கொண்டிருந்தால் அதை கட்டாயமாக தொடர வேண்டும். இரமாசிக்கு பின் 6 முதல் 12 மாதங்கள் தொடர வேண்டும்.இதனால் மாற்று வழி சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்பட்ட வெய்ன் அடைபடாமல் இருக்கிறது.

3. பீட்டா பிளாக்கர் எனும் மருந்து வகையை மாரடைப்பால் தாக்கப்பட்டவர்களும், இதய செயலிழப்புள்ளவர்களும் சரிப்படுத்தமுடியாத ரத்தக் குழாயடைப்புள்ளவர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4.கொழுப்புச் சத்தை குறைக்கும் ஸ்டாடின் மருந்து வகையை ரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பற்றி கவனியாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. ஏஸ் இன்ஹிபீட்டர் எனும் மருந்து வாடகையை சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இதய செயலிழப்பு உள்ளவர்களும் உட்கொள்ள வேண்டும்.

6.இம்மருந்துகளை மருத்துவ மனையிலேயே ஆரம்பிப்பதின் மூலம் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை மனதில் இருத்துவது நோயாளிகளுக்கு சுலபமாக உள்ளது.

7.குறுகிய கால ( 3மாதங்கள்)இதய மறுசீரமைப்பு பயிற்சியில் கலந்து கொள்வதின் மூலம் உடம்பும் இதயமும் சீக்கிரம் தேறுவதோடல்லாமல் வாழ்முறையை மாற்றியமைக்க உதவுகிறது. உணவில் கொழுப்புச்சத்தையும் மாவுச்சத்தையும் குறைத்தல், தேகப்பயிற்சியை விடாமல் கடைப்பிடித்தல்,புகை பிடிப்பதை நிறுத்தல் போன்ற இன்றியமையாத மாற்றங்களை கைப்பிடிக்க வழி வகுத்து கொடுக்கிறது இப்பயிற்சி..

ஆதாரம்: Coronary Artery Bypass Grafting; John H Alexander, M.D. M.H.S., Peter K. Smith,M.D.; N Eng J Med 374:20; May 19,2016.

One Reply to “இந்தியர்களுக்கு மாரடைப்பு அதிகம் வருகிறதா?”

  1. “இந்த அறுவை சிகிச்சையும் எல்லா நாடுகளிலும் சர்வ சகஜமாகி விட்டது” – நெருடலான வரிகள். “இதுவே சராசரி நிலைமை” எனும் நிலைப்பாடு வெகு சாதாரணமாக
    கையாளப்பட்டிருப்பது வேதனை. விளக்க கட்டுரையே ஆயினும் இந்தியர்களிடம் அதிகமாக வருவதற்கு வலுவான காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளையும் தந்திருக்கலாம்.

    வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.