நாடோடிகளுக்குக் குடியுரிமையா? கானலில் நீரூற்றா?

(இந்தக் கட்டுரை டைம்ஸ் லிடரரி சப்லிமெண்ட் எனும் பத்திரிகையில் வெளி வந்த ஒரு புத்தக மதிப்புரையை ஒட்டி எழுதப்படுகிறது. மூலக் கட்டுரையின் விவரங்களைக் கட்டுரை இறுதியில் காணலாம்.)

ரோமா என்னும் நாடோடிக் குழுவினர் யூரோப் முழுதும் பரவியுள்ளனர். பொதுவாகக் கிழக்கு யூரோப்பில்தான் அதிகமும் உள்ளவர்கள் என்றாலும், இதர பல நாடுகளிலும் இவர்கள் சிறு குழுக்களாக வாழ்கின்றனர். கூகிள் மூலம் தேடினால் நிறையத் தகவல்கள் கிட்டும். ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் வலைப் பக்கத் தகவல்கள் இங்கே: The Roma in Europe: 11 things you always wanted to know, but were afraid to ask | Amnesty International

இவர்கள் வடக்கிந்தியாவில் பல நூறாண்டுகள் முன்பு இருந்த மக்கள். அப்போது இந்தியாவில் நடந்த பெரும் படையெடுப்பால் அகதிகளாக்கப்பட்டு பல மேற்காசிய நாடுகள் வழியே யூரோப்பில் போய்த் தஞ்சம் புகுந்தனர் என்று சொல்லப்படுகிறது. யூரோப்பில் இவர்கள் தொகை சுமார் ஒரு கோடியிலிருந்து ஒரு கோடியே இருபது லட்சம் பேர் வரை இருக்கலாம் என்று ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது. இவர்கள் 19ஆம் நூற்றாண்டில் பெரும்பகுதி வரை கூட யூரோப்பிய நாடுகளால் அடிமைகளாக வைத்திருக்கப்பட்டார்கள் என்றும் தெரிகிறது. இன்று வரை யூரோப்பில் இவர்களுக்கு குடியுரிமையோ, சம உரிமைகளோ கிட்டுவதில்லை, அல்லது கிட்டினாலும் பயன்படுத்துவது எளிதில்லாத வகையாகவே இருக்கின்றன.

உலகுக்கு மனித உரிமைகளைப் பராமரிப்பதைப் பற்றி உபதேசம் செய்யும் யூரோப்பிய நாடுகளில் ரோமாக்களின் நிலைமை என்ன கேவலமாக இருக்கிறது என்பதை இந்த டெர் ஷ்பீகல் என்னும் ஜெர்மன் பத்திரிகையின் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. இந்தியர்களைக் கிருஸ்தவர்களாக மாற்றினால் தேவனின் பரலோகம் இந்தியாவில் விடிந்து விடும் என்று பசப்புரை பேசும் மேலை அமைப்புகள், அதற்காக இந்தியாவில் பல பத்தாண்டுகளாக பல நூறு கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த மேற்கத்திய அமைப்புகள் முதலில் தம்முடைய புழக்கடையில் குவிந்திருக்கும் பெரும் அவலங்களைச் சுத்தம் செய்து கொள்ளக் கற்றுக் கொள்ளலாம். பிறருக்கு அப்புறம் உபதேசம் செய்யக் கிளம்பலாம் என்று நமக்குத் தோன்றினால் அது நியாயமாகவே இருக்கும்.

அந்த ஜெர்மன் பத்திரிகைக் கட்டுரையை இங்கே பார்க்கலாம்: Europe Failing to Protect Roma From Discrimination and Poverty – SPIEGEL ONLINE

த டெய்லி பீஸ்ட் என்னும் அமெரிக்க வலைப் பத்திரிகை ஒரு கட்டுரையை 2015 இல் பிரசுரித்தது: The Story Of The Roma, Europe’s Most Discriminated Group

இதில் கிருஸ்தவ மடாலயங்கள் எப்படி ரோமாக்களை அடிமைகளாக வைத்திருந்தன, எப்படி ஜெர்மனியில் ஒரு குடிமகன் ரோமாக்களைக் கொன்றால் அதற்கு எந்தத் தண்டனையும் கொடுக்கப்படாத நிலை சில காலம் இருந்தது என்பது போன்ற பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிட்டும். ஆனால் உலகமெங்கும் யூரோப்பியரின் ஏகாதிபத்தியங்கள் நடத்திய பெரும் கொடுமைகளைப் பற்றி விழிப்புணர்வும், வரலாற்று அறிவும் உள்ள எந்த இந்தியருக்கும் இது புதுத் தகவலாக இராது.

மேற்கு நாடுகளின் கருத்தியல்களுக்குத் தம் அறிவை முழுதுமாக அடகு வைத்துள்ள இந்தியர்களுக்கும், இந்தியாவை உடைப்பதையே தம் முழு நேரக் கடமையாகக் கொண்டுள்ள முழு மூடர்களுக்கும்தான் இது உறுத்தலான தகவலாக இருக்கலாம். ஆனால் எதுவும் தைக்காத, முற்றும் மூடிய அறிவு கொண்ட அவர்களுக்கு இதை உதற அதிக நேரம் பிடிக்காது.
உலகுக்கு ‘அதிகாரத்திடம் எதிர்ப்பு தெரிவி’ என்று போதனை செய்தவராக இந்திய முற்போக்குகள் கோவில் கட்டி வழிபடும் ஃபூகோவும், ஒவ்வொரு தனிமனிதனும் உலகக் கொடுமைகளுக்குச் சாட்சியம் சொல்லவும், அறப்பொறுப்பேற்கவும் வேண்டும் என்று அறிவுறுத்திய நாயகராக அறியப்படும் சார்த்தரும் அதிகாரம் செலுத்திய பல்கலைகளைக் கொண்ட அதே ஃப்ரான்ஸ்தான் சென்ற பத்தாண்டுகளில் ஃப்ரான்ஸில் இருந்த ரோமாக்களை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றியது: Roma expulsions by France overshadow EU summit opening | World news | The Guardian

அது குறித்து வழக்கம்போல பிரிட்டிஷ் முற்போக்குகளின் நம்பிக்கை நட்சத்திரமான த கார்டியன் வழக்கம்போல சென்ற செப்டம்பரில் கூட செயலற்ற நிலையில் கையைப் பிசைந்து கொண்டு ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. அதில் உள்ள யூரோப்பிய பார்லிமெண்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு அழகாக ரோமாக்களுக்கு முழு உரிமை கோரும் சுவரொட்டி ஒன்றைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் பாருங்கள். யூரோப்பியர்கள் இப்படி ‘ஃபில்ம்’ காட்டுவதில் வல்லவர்கள். கள நிலையைப் பார்த்தால் மேன்மேலும் மோசமாகும் நிலைமைதான் பார்க்கக் கிட்டும். ஆனாலுமென்ன உலகுக்கு த கார்டியன் உபதேசம் செய்வதோ, யூரோப்பிய சர்ச்சுகள் மனித உரிமை குறித்து இந்தியாவுக்கு அறிவுறுத்திக் கண்டனங்கள் செய்வதோ நிற்குமா என்ன? சீனா மனித உரிமை குறித்து உலகுக்குப் போதிப்பதுதான் இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை. சீக்கிரமே அதுவும் நமக்குக் கிட்டும். இனி கார்டியன் செய்தி இங்கே: The Roma: Europe’s pariah people | World news | The Guardian

இப்படி யூரோப்பியரால் துரத்தித் துரத்தி அடிக்கப்படும் ரோமாக்கள் எனப்படும் பண்டை இந்தியாவின் சமூகக் குழுவினர், சமீபத்தில் போக்கிடம் இல்லாமல், அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கத் துவங்கி உள்ளனர். மெக்ஸிகோ போன்ற லத்தின் அமெரிக்க நாடு ஒன்றுக்குப் பயணித்து, அங்கிருந்து தென்னமெரிக்க மக்கள் பல பத்தாண்டுகளாகச் செய்வது போல நடைப்பயணமாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து அங்கு தஞ்சம் கோரி அதிகாரிகளிடம் தம்மை ஒப்புக் கொடுக்கின்றனராம் இந்த ரோமாக்கள். அவர்களுக்கு விடிவு காலம் அப்படி எல்லாம் சீக்கிரம் கிட்டுமா என்ன? சென்ற ஜனவரியிலிருந்து அமெரிக்காவிலோ ட்ரம்பிய உதயம். ஏற்கனவே மூடிய நெருப்பாகப் பல நூறாண்டுகளாக இருக்கும் இனவெறி இப்போது அதிகாரத்தில் முழுதுமாக இருக்கிற கட்டத்தில் இங்கு வந்து அகதி நிலை கோரி நிற்கும் ரோமாக்களுக்கு என்ன கிட்டப் போகிறது? அதைப் பற்றி அமெரிக்கப் பத்திரிகையான ப்ளூம்பர்க்.காம் எழுதுவதை இங்கே காணலாம்: Roma Migrants Flee to California as Europe Turns More Hostile – Bloomberg

~oOo~

இனி டானியல் ட்ரில்லிங் என்பார் எழுதிய ‘ப்ரைட் ஆஃப் ப்ளேஸ்’ என்கிற கட்டுரையின் இளகலான ஓர் வடிவு இங்கே.

ரோமாக்கள் மீதான வெறுப்பைக் குறித்துச் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளவர் எய்டன் மக் கேரி. அவர் இதுதான் இனவெறுப்பின் எச்ச சொச்ச வடிவு என்று எழுதுகிறார். மற்ற இனவெறுப்புகள் எல்லாம் ஒழிந்து விட்டன என்று சொல்லவில்லையாம், மாறாக மொத்த யூரோப்பிய சமூகங்களிலும் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ள ஒரு இன வெறுப்பு ரோமாக்கள் மீதான வெறுப்பு என்றும், அந்த வெறுப்பு எதார்த்தமாக ஏற்கப்படுகிறது என்றும் சொல்கிறாராம். இப்படி உரை எழுதுபவர் டானியல் ட்ரில்லிங். நாம் அதை இப்போதைக்கு ஏற்றுக் கொண்டு மேலே செல்வோம்.

துருக்கியின் ரிசெப் தய்யிப் எர்டோகன், 2005 இல் இஸ்தான்புல் பெருநகரிலிருந்து பெரும் அருவருப்பான ரோமாக்களின் பேட்டையை அழித்தொழிப்பேன் என்று முழங்கினாராம். ஃப்ரான்ஸின் ஸார்க்கோஸி ரோமாக்களால்தான் குற்றம் பெருகுகிறது என்று 2010 இல் அறிவித்து அவர்களை நாடு கடத்தினார். பிரிட்டனின் டேவிட் ப்ளங்கெட் தன் தொகுதியான ஷெஃபீல்டில் ரோமா மக்கள் தம் நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் பெரும் ரகளை ஏற்படும் என்று 2013 ஆம் ஆண்டில் எச்சரித்தார். இவர்களெல்லாம் அந்தந்த நாடுகளில் மிக்க உயர்பதவிகளை வகித்த அரசியல்வாதிகள். இன்னொரு புறம், அடித்தளத்தில் ரோமாக்கள் மீது கடும் வெறுப்பு தொடர்ந்து உமிழப்படுவதோடு, தலைமுறை தலைமுறையாக அது போதிக்கவும் படுகிறது. அவர்களைப் பற்றித் தொடர்ந்து எதிர்மறையான சித்திரமே கொடுக்கப்படுகிறது, அவர்கள் ‘திருடர்கள், பிச்சைக்காரர்கள், குற்றவாளிகள், ஒட்டுண்ணிகள்’ என்பன இந்த வருணிப்புகள் என்று மக் கேரி சொல்கிறாராம். 2016 இல் இனவெறி மேலும் சகிப்பின்மை குறித்து விசாரணை நடத்திய யூரோப்பிய விசாரணைக் குழு, யு.கே யின் (பிரிட்டனின்) பெரும் பத்திரிகைகளான டெய்லி மெயிலும், த சன் பத்திரிகையும்தான் இப்படி இனவெறியைக் கிளப்புவதில் பெரும் குற்றவாளிகள் என்றும், இந்தப் பத்திரிகைகளின் கருத்துகளுக்கு பிரிட்டனின் பெரும்பான்மை சமூகத்திடம் ஆதரவும் இருந்தது என்று கண்டது. அந்தப் பெரும்பான்மையினர் வெளிப்படையாகத் தம் வெறுப்பைக் காட்டா விட்டாலும், மறைமுகமாக அவர்களுக்கெதிரான ஒதுக்கல் நடவடிக்கைகளுக்கும், அவர்களின் நிலை மேம்படாமல் இருப்பதற்கும் தம் ஆதரவைத் தெரிவிக்கின்றனர் என்றும் சொன்னது.

இவற்றுடைய விளைவு என்ன? கடந்த முப்பதாண்டுகளில் யூரோப்பில் ரோமாக்களுக்கெதிரான சட்ட பூர்வமான எதிர்ப்புகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், ரோமாக்கள் முன்னெப்போதையும் விட ஒதுக்கப்பட்டும், பாரபட்சமாக நடத்தப்பட்டும் வருவது அதிகரித்துள்ளது. மேற்கு யூரோப்பில் அவர்கள் அடிக்கடித் தம் குடியிருப்புகள், தம் சமுதாய வசிப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்டு விடுகிறார்கள். கிழக்கு யூரோப்பில், தீவிர வலது சாரி இயக்கங்கள் ரோமாக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் அவை பிரிட்டன், ஃப்ரான்ஸ், மேலும் ஜெர்மனியின் இனமையக் குழுக்கள் முஸ்லிம்கள் மேலும் இதர குடியேறி மக்களின்பால் காட்டும் வெறுப்பு நடத்தையைப் பிரதிதான் செய்கின்றன.

ரோமாக்கள் குடியேறிகள் இல்லை. அவர்கள் யூரோப்பிற்குக் குடி பெயர்ந்து சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. அவர்கள் இந்தியாவிலிருந்து 14 ஆம் நூற்றாண்டில் வந்து சேர்ந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

[இது தவறு. அவர்கள் 1000 வருடங்கள் முன்பே, இந்தியாவில் இஸ்லாமியத் தாக்குதல்கள் நடக்கத் துவங்கியபோது வடமேற்கு இந்திய மாநிலங்களிலிருந்த இந்து ராஜ்யங்கள் வீழ்ந்த போது அங்கிருந்து மேற்காசியா வழியே யூரோப்பிற்கு இடம் பெயர்ந்தனர் என்று கருதப்படுவதே இன்று அதிகமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ரோமாக்கள் நடுவே பல வகைக் கருத்துகள் இவற்றைப் பற்றி நிலவுகின்றன என்பதையும் நாம் கருத வேண்டும். இந்திய மரபணுக்களோடு ரோமாக்களின் மரபணுக்கள் அதிகமும் ஒத்துப் போகின்றன என்று சொல்லும் ஒரு செய்தி அறிக்கையை இங்கு பார்க்கலாம். European Roma descended from Indian ‘untouchables’, genetic study shows – Telegraph

இது குறித்து ஒரு ரோமானி வரலாற்றாளர் எழுதும் கட்டுரையில் மேலதிகமான தகவல்கள் கிட்டுகின்றன. அவர் இம்மக்கள் குஜராத்திலிருந்தும் புகலிடம் தேடி ஓடிப் போக நேர்ந்தவர்கள் என்று சுட்டுகிறார். அந்தக் கட்டுரை இங்கே: “A New Look at Our Romani Origins and Diaspora” by Ronald Lee | Kopachi.com

இன்று யூரோப்பில் சுமார் ஒரு கோடியிலிருந்து ஒன்றேகால் கோடி வரை அம்மக்களின் தொகை உள்ளது. இவர்கள் ‘ரோமா, சிந்தி, கேல் மற்றும் பல குழுக்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். [இவற்றில் டாம், லாம் என்ற பெயர்களும் உள்ளன, இவை வட இந்தியாவில் இன்றும் உள்ள சில ஜாதிக் குழுக்கள்.] இவர்கள் எல்லா யூரோப்பிய நாடுகளிலும் இருக்கிற மக்கள். அதனால் யூரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பின நாடுகளிடையே இருந்த எல்லைத் தடைகளை அகற்றி மொத்தத்தையும் தடையின்றிச் செல்லக் கூடிய ஒரு பிரதேசமாக ஆக்கிய போது, அந்தப் பிரதேசத்தில் இருந்த அனைத்து மக்களுக்கும் உரிமைகளை வழங்க முன்வந்த போது, ரோமாக்களின் நிலைமை என்னவாயிற்று என்று மக்கேரி ஆராய்கிறார்.

மக்கேரி சிறுபான்மை மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் பற்றிய ஆய்வுகளில் தேர்ச்சியுள்ள, யு.கே நாட்டின் பல்கலையாளர். ரோமாக்கள் மீது தற்காலத்தில் உள்ள வெறுப்பு நவீன ஜனநாயகங்களில் வேரிலேயே உள்ளது என்று கருதுகிறார். வெறுப்புக்கு வரலாற்றில் பல நூறாண்டுகள் முன்பிருந்தே சான்றுகள் இருந்தாலும்- உதாரணமாக, 1548 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் ஆக்ஸ்பர்கில் இருந்த பேரரசின் ஆட்சியவை (imperial diet of augsburg) ஜிப்ஸிக்களைக் கொல்லுவோர் கொலைக் குற்றம் செய்தவர்களாக மாட்டார்கள், ஏனெனில் ஜிப்ஸிக்கள் ‘கொள்ளை லாபமடிப்பவர்கள், உளவு வேலை செய்பவர்கள், மேலும் துரோகிகள்’ என்று அறிவித்ததைச் சுட்டுகிறார். மக்கேரி நாடாளும் அரசு என்ற அமைப்பு எழுந்ததைக் கவனித்து, அத்தகைய அரசு மக்களைச் சட்ட பூர்வமானவர்களாக ஆக்க வேண்டி இருக்கிறது, அப்போதுதான் அவர்களை அது ஆள முடியும் என்கிறார். உலகம் முழுதும் மனித உரிமைகள் ஒருப்போல என்று நினைக்கும் யுகத்தில் நாம் வாழ்கிறவர்களாக இருக்கலாம், ஆனால், இத்தகைய உரிமைகள் அனேகமாக ஒரு நாட்டரசால்தான் உறுதி செய்யப்படுகின்றன. ஒரு அரசு செயல்பட வேண்டுமானால், அதன் குடிமக்கள் யாரென்பதும், யார் குடிமக்கள் இல்லை என்பதும் அதற்குத் தெளிவாகத் தெரியவேண்டும். இதன் பொருட்டே எல்லைக் கோடுகள்,கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்), அடையாள அட்டைகள், வாக்காளர் பதிவேடுகள், பள்ளிகளில் சேர்ப்பித்தல் போன்றன அவசியமாகின்றன. இவை எல்லாமே குடிமக்களை அரசுக்குத் தெரியும்படி ஆக்குகின்றன, இந்தக் கருவிகளை வைத்து அரசு தன் நாட்டை அடையாளம் கண்டு கொள்கிறது, வெளியாட்களை ஒதுக்க அதற்கு முடிகிறது மேலும் இருப்பவர்கள் நடுவே இது தம் நாடு என்ற உணர்வை வளர்க்க முடிகிறது.

ஆனால் ரோமாக்கள் இந்தக் கட்டுத்தளைகளுக்கு அப்பால் விழுந்திருக்கிறார்கள். அதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. பேரரசுகள் இருந்த காலத்தில், ரோமாக்களுக்கு அனேக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. யூரோப்பில் இருந்த கடைசி அடிமைக் குழுக்கள் அவர்களே. மோலாச்சியா, வால்டோவியா நாடுகளில் 19ஆம் நூற்றாண்டின் நடு ஆண்டுகளில்தான் அவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டது. அவர்கள் நாடோடிகளுக்கே உரிய உதிரி வேலைகளைச் செய்துதான் அத்தனை காலமும் பிழைத்து வந்தனர். குதிரை விற்பனை, கழிவு உலோகங்களைச் சேகரிப்பது, அல்லது தேவைப்படாதவை என்று கழிக்கப்பட்ட பொருட்களைச் சேகரிப்பது, செங்கல் தயாரிப்பது, மர வேலைகள் செய்வது, இசைப்பது, தவிர குறி பார்ப்பது போன்ற வேலைகளே அவர்கள் அனேகமாகச் செய்தவை. ஒரு இனம் அல்லது மொழியைப் பொதுவாகக் கொண்ட மக்களின் நாட்டரசு உருவான பிறகு, ரோமாக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள், புதுச் சமூகங்களில் அவர்களுக்கு உறுப்பினர் என்ற உரிமை மறுக்கப்பட்டது, அவர்கள் இருப்பது பொறுத்துக் கொள்ளப்பட்டதே தவிர ஏற்கப்படவில்லை.

தனிக் குழுவாக இருப்பதும், தங்கள் மொழிகளையும், பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்வதும் அழியாமல் பிழைத்திருக்க அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள்- உலக வரலாற்றில் அனேகக் குழுக்கள் இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்கின்றனர். ரோமாக்கள் மட்டுமா வேரில்லாத வெளியாட்கள் என்று நடத்தப்பட்டனர்? நாடு-அரசுகளின் காலத்தில் அவர்களின் வரலாறு ஓரளவு யூதச் சமூகங்களின் நிலையை ஒத்திருந்தது. இன்றோ, ரோமாக்களில் பலர் நாடோடிகளாக இல்லாமல், ஒரு நிலப்பரப்பில் தங்கி விட்டிருக்கின்றனர், அந்த நாட்டு அடையாளங்களை ஏற்றுத் தம்மை செக் மக்கள், ஃப்ரெஞ்சு மக்கள், இதாலியர் என்றோ அடையாளம் மேற்கொண்ட போதும், நாடு தடைகளின்றி நடத்தப்படுவதற்கு அவர்கள் ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது.

இது ரோமாக்களை இருதலைக் கொள்ளி நிலையில் தள்ளுகிறது: ஓரிடத்தில் நிலைத்துத் தங்கி விட அவர்கள் முயன்றால் அவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது, அவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள், நாட்டோடு ஒன்றிப் போக அவர்கள் மறுப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். பெரும்பான்மையான ரோமாக்கள் வாழ்கிற மத்திய மற்றும் கிழக்கு யூரோப்பில் இரு சமூகங்களை ஆய்வு செய்வதன் மூலம் மக்கேரி இதை உறுதி செய்திருக்கிறார். சூடோ ஓரிஸாரி, என்கிற மாஸிடோனியாவின் தலைநகரான ஸ்கோப்யேவில் ஒரு மாவட்டப் பகுதியான ஷூட்டோ ஓரிஸாரி என்ற இடத்தில் ரோமாக்கள் நிலைத்திருக்கிறார்கள், அங்கே அவர்களின் வணக்கத் தலங்கள் கட்டப்பட்டுள்ளன, அவர்களின் பிரதிநிதிகள் அரசாளும் அமைப்புகளில் பங்கெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். [தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் என்ன? அரசு விரும்பினால்தானே ஏதும் செய்ய முடியும். இவர்களின் நிலை என்ன இன்று? ஒரு சமீபத்திய செய்தி அறிக்கை சொல்வது இது: Election Brings No Hope to Macedonia’s Roma-run ‘Ghetto,’ say Voters]

மக்கேரி பேட்டி கண்டவர்கள், இந்த ஊரில் உள்ளவர்கள், சொல்வது என்ன? அவர்களுக்கு இது தம் இருப்பிடம், தாம் இங்கு குடிமக்கள் என்ற உணர்வு இருக்கிறது, ஆனால் இந்த உணர்வை உள்ளூர் அரசை நடத்துபவர்கள் சந்தேகப்படுகிறார்கள்,ரோமாக்களின் குரல் அரசியல் வலு உள்ள குரலாக உருவாவதை அவர்கள் விரும்பவில்லை என்கிறார்கள். அதே போல ஸ்லோவாகியாவில், கோஷிட்ஸ என்னும் நகரின் மையம் புதிதாக உயிர் பெற்று வளர்ச்சி அடைய ஆரம்பித்ததும், அங்கிருந்த ரோமாக்களை கோஷிட்ஸ நகரின் வெளிப்புறத்தில் இருந்த பாழாகிப் போன குடியிருப்புப் பகுதியில் கொண்டு அடைத்து விட்டார்கள். இந்தக் குடியிருப்புகளில் குழாய்த் தண்ணீர் கிடையாது, வீடுகளில் உஷ்ணப்படுத்தல் கிடையாது, மின்சாரம் கிடையாது. இந்தக் கேடு கெட்ட நிலைமையால் ரோமாக்கள் நடுவே சமூக உணர்வு என்பது சிதைந்து போயிருக்கிறது. அந்தச் சிதைவு அவர்களை வேறெங்கும் செல்ல விடாமல் தடுக்கிறது, ஏனெனில் நகரின் இதர மாந்தர்கள் அவர்களைச் சோம்பேறிகள் என்றும் படிப்பறிவில்லாதவர்கள் என்றுமே பார்க்கிறார்கள்.

மக்கேரி என்னென்ன விதங்களில் ரோமாக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைப் பட்டியலிடுவதில்லை; அதற்குப் பதில் அரசுகள் தம் நாட்டு எல்லைக்குள் ‘வெளியாட்கள்’ என்று சிலரை எப்படி அடையாளம் காண்கின்றன என்பதைச் சுட்டுகிறார். மற்ற நாடுகளில் தஞ்சம் புகுவோரையும், அரசுடைய உபகார நிதிகளைப் பெற்று வாழ்க்கை நடத்துவோரையும் எப்படி அந்த நாடுகள் இழிவாகக் கருதுகின்றனவோ, அதே முறையில் ரோமாக்கள் தேவையற்றவர்களாகவும், கழிவுப் பொருட்கள் போலவும் கருதப்படுகிறார்கள். இது ஒரு விதத்தில் எதார்த்த நிலையோடும் பொருந்தும்படி இருக்கிறது, ஏனெனில் அவர்களின் குடியிருப்புகள் அனேகமாக ஊர்களின் கழிவுப் பொருட்கள் கொட்டப்படும் இடங்கள், அல்லது அதே போல மாசுபட்ட இடங்களில்தான் உள்ளன. அவர்களின் வறுமை நிலை அவர்களை மேலும் மோசமாக நடத்த ஒரு சாக்கு போல ஆகி விடுகிறது: வெளியேற்றங்கள், நாடுகடத்தல்கள். அல்லது ரோமானியாவில் உள்ள பையா மாரா (Baia mare) எனும் ஊரின் நகரத் தலைவர் (மேயர்) செய்தது போலவும் நடக்கும்- ரோமாக்களின் இருப்பிடப் பகுதியைச் சுற்றி ஒரு சுவர் கட்டி விட்டார் அவர். அரசு பெரியதோர் தந்திர வேலையைப் பூர்த்தி செய்துவிட்டது, ரோமாக்களை அழிந்து வரும் நகர்ப்பகுதிகளுக்கு ஒதுக்கி விட்டு, அவர்கள் அங்கு வாழ்வதால் அவர்கள் மீது நிரந்தர அவதூறைச் சுமத்துவதைச் சாதித்திருக்கிறது, என்கிறார் மக்கேரி.

சரி, ரோமாக்கள் இந்த ஒதுக்குப் புறங்களை விட்டு நீங்கி வேறெங்கோ செல்ல முயன்றால் என்ன நடக்கிறது? யூரோப்பிய ஒன்றியம் விரிவாகிக் கிழக்கு யூரோப்பிலும் வளரத் துவங்கியபோது ரோமாக்களுக்குப் புது வாய்ப்புகள் கிட்டின. முந்நாள் கம்யூனிஸ்ட் நாடுகளில் கேவலமாக நடத்தப்பட்டு வந்த ரோமாக்களுக்கு, தமது மோசமான வீடுகள், வேலையில்லாமை, படிப்பில்லாமை ஆகிய இழி நிலைகளிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு கிட்டியது. செக் அரசு முன்பு ரோமாக்களின் குழந்தைகள் இதர செக் இனத்துக் குழந்தைகளோடு பழகத் தயாரான நிலையில் இல்லாதவர்கள் என்றும், அதனால் அவர்களை ஃபாசிஸ்டுகள் தாக்குவார்கள் என்றும் ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களுக்குத் தனிப்பள்ளிகளை அமைத்துக் கல்வி கொடுத்தது. ஆனால் அவர்கள் மேற்கு யூரோப்பின் நாடுகளுக்கு இடம் பெயர்ந்து போன போது, அவர்களின் தற்காலிக நிலைகளை மனதில் கொண்டு இதர மக்கள் அவர்களிடம் கடும் வெறுப்பைக் கொட்டினார்கள். வந்த புதிதில் அவர்கள் தெருக்களில் பிச்சை எடுத்ததும், கார்க் கண்ணாடிகளைக் கழுவுகிறோம் என்று சொல்லிக் காசு கேட்டு நின்றதும் எல்லாம் மக்களிடையே இவர்களைப் பற்றிய ஆபத்துணர்வைத் தூண்டி விடவும், யூரோப்பிய ஒன்றியத்தில் எல்லாரும் எங்கும் சகஜமாகப் போகலாம் என்ற உரிமைகளை இந்த ரோமாக்கள் கெட்ட வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலை எழுந்தது.

யூரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ரோமாக்கள் அடிக்கடி நாடுகடத்தப்படுகிறார்கள். ஃப்ரான்ஸின் உள்நாட்டு விவகாரங்களுக்கு மந்திரியான மானுவெல் வால்ஸ் என்பவர், 2013ஆம் ஆண்டு “உலகத்தில் உள்ள எல்லா அவலங்களையும் எம் நாட்டுக்கு வரவேற்பது ஒன்றும் எங்கள் வேலை இல்லை.” என்று அறிவித்தார். அப்போது அவர் நூற்றுக் கணக்கான ரோமாக்களைக் கோஸவோவுக்கு அனுப்புவதைச் செய்து முடித்திருந்தார். யூரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து மேற்கு யூரோப்புக்கு வருகிற ரோமாக்களும் கூட, திரும்ப கிழக்கு யூரோப்பிய நாடுகளுக்குத் திரும்பிப் போக விருப்பம் இல்லாதவர்களாகத்தான் உள்ளார்கள். ஃப்ரான்ஸிலோ, ஜெர்மனியிலோ தஞ்சம் புக விரும்பும் ரோமாக்களுக்கு ஹங்கரிக்குத் திரும்பிப் போகச் சிறிதும் விருப்பம் இல்லை. [இந்தியாவில் ஏழை பாழைகளின் பாதுகாவலர் என்று மார்தட்டி ஊர்வலம் போகும் கம்யூனிஸ்டுகளிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பது மேற்கு வங்கத்தை அவர்கள் நாற்பதாண்டு ஆட்சியில் சீரழித்து உருப்படாத மாநிலமாக ஆக்கியதைக் கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதை விட நாட்டையே அவர்களிடம் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு அழியாத சாட்சியமாகக் கிழக்கு யூரோப்பிய நாடுகள் உள்ளன. அங்கு ரோமாக்களின் நிலை பரிதாபமாகவே முழுதும் இருந்து வந்திருக்கிறது.]

கம்யூனிஸ்டு ஆட்சியின் போது அவர்கள் நாடோடிகளாக இருப்பது அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் ஓரிடத்தில் இருக்க வற்புறுத்தப்ப்பட்டனர்; இன்று அவர்கள் தம் வறுமை, தமக்கெதிராக நடத்தப்படும் புறக்கணிப்பு முயற்சிகள் இவற்றிலிருந்து தப்பவே முயல்கிறார்கள். அதோடு, சமீபத்திய முதலிய விரிவாக்கத்தின் கீழ் அவர்கள் வசித்த இடங்களுடைய நிலம் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படுவதால் அவர்களை இன்றைய ‘ஜனநாயக’ அரசு வெளியேற்றுகிறது. அந்த நிலங்கள் ஊகச் சந்தையில் பணத்தைப் புரட்டும் சூதாடிகளுக்கு உயர்ந்த விலைக்கு அரசால் விற்கப்பட்டு விடுகின்றன.

இது ஒரு முரணை உருவாக்குகிறது. யூரோப்பிய ஒன்றியம், ஒப்பீட்டில் ரோமாக்களுக்கு வாழ்க்கை நிலை மேம்பட ஒரு வாய்ப்பைத் திறக்கிறது என்றாலும், உடனடி விளைவாக அவர்கள் அடைவது என்னவென்றால், அந்தரத்தில் தொங்குவதுதான். அவர்களுக்கு சொந்த நாடுகளுடன் இருக்கும் உறவு நலிவடைகிற அதே நேரம், அவர்கள் போய்ச் சேரும் நாடுகளில் அவர்களுடைய இருப்பு சட்ட விரோதமானதாகவே பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு இன்னமும் உரிமைகள் உள்ளன, ஆனால் அவர்களுடைய நிலையை வருணிப்பதானால், அவர்கள் எங்கும் சேர்த்துக் கொள்ளப்படாத நிலையில் குடியுரிமை என்பதை மட்டும் அடைகிறார்கள், அவர்களுடைய தனிமைப்பட்ட நிலை மேன்மேலும் பெரும்பான்மையினரின் வெறுப்பாலும், சந்தேகங்களாலும் உருவாக்கப்பட்டு, வலுவடைகிறது. மக்கேரியோ, யூரோப்பில் எங்கும் ரோமாக்கள் தாம் யூரோப்பில் இருக்க உரிமையுள்ளவர்கள் என்பதைச் சாதிக்க ஓரியக்கத்தைக் கட்டி அமைக்க முயல்வதைக் கவனித்துச் சிறிது நம்பிக்கை கொள்கிறார். 2010 இல் ஃப்ரான்ஸ் அரசனுமதி பெறாத 200 குடியிருப்புகளை உடைத்து அகற்றத் தீர்மானித்த போது ரோமாக்களின் கூட்டங்கள் நாடெங்கும் பல இடங்களில் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டனர். அது தவிர லண்டன், ப்ரஸல்ஸ், மாட்ரிட், ரோம், பார்ஸலோனா, மேலும் செர்பியாவிலும் ஹங்கேரியிலும் பல பகுதிகள் என்று பற்பல இடங்களில் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். ‘நாங்களும் யூரோப்பியரே’ (je suis Europeen) என்று ஒரு போராட்ட முழக்கம் உயர்த்தப்பட்டிருந்ததை மக்கேரி கவனிக்கிறார். அதற்குப் பிறகு, “ரோமாக்களின் பெருமை” இயக்கம் வளர்ந்து வருகிறது. இது அரசியல் உரிமைகள் மீது கவனம் செலுத்துகிறது- நாஜி இன அழிப்பின்போது கொல்லப்பட்ட ஐந்து லட்சம் ரோமா பலிநபர்களை இது நினைவுறுத்துகிறது- தவிர பண்பாட்டு அடையாளத்தையும் முன்வைக்கிறது என்பதால் இந்த இயக்கத்தின் மூலம் தடுப்புச் சுவர்கள் உடைக்கப்படும் என்று மக்கேரி எதிர்பார்க்கிறார். புடாபெஸ்டில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பொதுவில் தம் இருப்பை நியாயப்படுத்த முயன்றார்கள், தாம் கல்வித்துறையில் அல்லது தொழில் நிபுணர்களாக இருப்பதை முன்வைத்துத் தாம் பொருட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை நிறுவ முயன்றார்கள். இதையெல்லாம் சொல்லும் புத்தகம் ஓரளவு நம்பிக்கை தெரிவிப்பதோடு முடிகிறது. ரோமாக்களின் உரிமை கோரும் இயக்கத்தை தற்பால் விழைவுள்ளவர்களின் இயக்கங்களோடு ஒப்பிட்டு, அவர்கள் சமீபத்துப் பத்தாண்டுகளில் எப்படி நிறைய உரிமைகளை வென்றிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதே வெற்றிகள் ரோமாக்களுக்கும் கிட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.

ரோமாக்கள் மீது வெறுப்பு என்ற இந்த நூல் முக்கியமாக பல்கலையாளர்கள், கொள்கை வகுப்பில் ஈடுபடுவோர், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் ஆகியோரை எண்ணி எழுதப்பட்டிருக்கிறது. வரலாறு குறித்த துவக்க நிலைப் புத்தகங்கள், புள்ளி விவரங்கள், வாழ்வுச் சித்திரங்கள் ஆகியனவற்றைத் தம் நடவடிக்கைகளுக்கு ஆதாரங்களாகத் தேடுவோர் வேறு புத்தகங்களை நாட வேண்டி இருக்கும். என்ன சக்திகள் இத்தகைய புறக்கணிப்பை உருவாக்க உதவுகின்றன என்பதில் கவனம் செலுத்துவதால் மக்கேரி ஒரு முக்கியமான பணியைச் செய்திருக்கிறார். இன்று பல நாடுகளில் பலபண்பாட்டியம் என்பது மிகவும் எல்லை தாண்டி வளர்ந்திருக்கிறது, அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிரது. இனவெறுப்பு என்பதை பெரும்பான்மை மக்கள் தம் நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளும் இயல்பான நடவடிக்கை என்றும் நாம் பார்க்கத் துவங்கியுள்ளோம். யூரோப்பின் ரோமாக்களின் வரலாறு இந்தப் பிளவுகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதைக் கவனிக்கச் சொல்கிறது. நம் அரசியல் அமைப்புகள் இவற்றை உருவாக்குகின்றன, அன்னியர்கள் இந்த உணர்வை நம்மிடம் தூண்டுவதில்லை என்று இப்புத்தகம் விளக்குகிறது. சமீபத்து அரசியல் நிகழ்வுகளான செலவுக் கட்டுப்பாடு, அகதிகள் பிரச்சினை, தவிர ப்ரெக்ஸிட் எனப்படும் பிரிட்டனின் வெளிநடப்பு ஆகியன யூரோப்பிய ஒருமைத் திட்டத்தில் எத்தனை அசமத்துவங்கள் நிலவுகின்றன என்பதை நன்கு வெளிச்சமிட்டுக் காட்டி விட்டது. இதை ஒத்ததுதான் யூரோப்பிய ரோமாக்களின் நிலையும். ஆனால் எய்டன் மக்கேரி ரோமாக்களின் நிலை இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு நல்ல வழியைக் காண்பது சாத்தியம் என்று சுட்டுவதாக நம்புகிறார். ரோமாக்கள் இத்தனை நூறாண்டுகளாக மோசமாக நடத்தப்பட்ட போதும், அவர்கள் யூரோப்பியர் நடுவே பிழைத்திருந்து அழியாமல் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதைச் சாதித்ததன் மூலம் தம் மன உறுதி, விடா முயற்சி ஆகியனவற்றை நிரூபித்திருந்த போதிலும் இந்த சாதனைக்கு யூரோப்பியர் நடுவே தக்க மதிப்பு கொடுக்கப்படவில்லை. ஆனாலும் ரோமாக்கள் எப்படியோ இந்தத் தடைகளைத் தாண்டி ஒரு மக்கள் குழுவாக இன்னும் இருக்கிறார்கள் என்பதில் நாம் மனிதக் குழுக்கள் மீதும், மனித எத்தனத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள நிறைய இடம் உண்டு என்பது அவர் கருத்து போலும்.

~oOo~

மூலக் கட்டுரையை  இங்கே காணலாம்: Pride of place: The ambiguous status of the Roma – Daniel Trilling
தமிழில்: சதுரன் / ஜுலை’17

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.