முகப்பு » இலக்கியம், தொன்மம், புத்தகவிமர்சனம்

பருவம் – எஸ்.எல்.பைரப்பா

நம்மை முதலில் தடுமாறச் செய்வது பாத்திரங்களின் வயது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாத்திரங்களின் வயதைக் குறிப்பிட்டே துவங்குகிறார் பைரப்பா. போர் மேகங்கள் திரள்கின்றன, மாபெரும் யுத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன- இந்தக் கட்டத்தில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படுகிறான். அவனது வயது அறுபத்து ஐந்து!

நாமறிந்த மகாபாரதத்தை முழுமையாகப் புரட்டிப் போட்டு விடுகிறது இது. அமர் சித்ரா கதாவிலும் ராஜாஜியின் வியாசர் விருந்திலும் நாம் கண்ட கர்ணன் அல்ல இவன். நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் இளம்பருவ கர்ணன் அல்ல இவன், நாம் திகைப்புடன் கண்டு ரசித்த சிவாஜி கணேசனின் கோபக்கார கர்ணன் அல்ல இவன். போர்க்களம் புகத் தயாராகிக் கொண்டிருக்கும் அறுபத்து ஐந்து வயது கிழவர் இந்தக் கர்ணன்.

இது போலவே நாம் துரோணரையும் அறிகிறோம். அவர் தன் எண்பதுகளில் இருக்கிறார். பீஷ்மரின் வயது நூறு கடந்து விட்டது. வீமனின் வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆம், பைரப்பாவின் பர்வாவில் நாம் மகாபாரதத்தை முற்றிலும் புதிய கண்களால் காண்கிறோம்.

பெருங்கதைகள் நீக்கப்பட்ட ஒரு மகாபாரத கதையைச் சொல்கிறது பைரப்பாவின் பர்வா. பல வண்ண உணர்வுகள் நிறைந்த எளிய மானுடக் கதையை அது நம் கண்முன் விரிக்கிறது. இதன் பாத்திரங்கள் சாதாரண ஆண்கள், சாதாரண பெண்கள். இவர்களுக்கு மாய மந்திரம் எதுவும் தெரியாது, அசாதாரண சக்திகள் கிடையாது. இவர்களுக்குள்ள ஆற்றல்கள், கடும் உழைப்பால் அடையப்பட்டவை. கிருஷ்ணனும்கூட கடவுளின் அவதாரமில்லை. பிற அனைவரையும்விட மனிதர்களின் ஆசாபாசங்களை அறிந்து, தேர்ந்த முறையில் திட்டமிடக்கூடியவன் அவன், அவ்வளவுதான். ஒவ்வொரு பாத்திரமும் அதன் அடிப்படை சாராம்சம் வெளிப்படும் வகையில் அலங்காரங்கள் எதுவும் இன்றி படைக்கப்பட்டிருக்கின்றன. பைரப்பாவின் துளைக்கும் பார்வைக்குச் சிக்காமல் தப்பும் பாத்திரங்கள் வெகுச் சிலவே.

துவக்கத்தில் மாத்ராவையும் அதன் சுற்று வ்ட்டாரங்களையும் களமாய்க் கொண்டு நாவல் துவங்குகிறது. சால்ய மன்னன் ஆளும் பகுதி அது. அவனது வயது எண்பது தாண்டிவிட்டது, தன் பேத்தியின் திருமணம் குறித்து அவன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவள் இன்னும் கன்னி கழியாதவள், அவளது தந்தை, சால்யனின் மகனோ, குல வழக்கப்படி மணமகளுக்கு பரிசாய் வழங்கப்பட வேண்டிய செல்வங்களைப் பெற்றுக் கொண்டு அதற்காக என் மகளுக்கு திருமணம் செய்விக்க மாட்டேன், அவளே சுயம்வரம் மூலம் தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும், என்று பிடிவாதம் பிடிக்கிறான். அவன் கௌரவர்கள் மற்றும் பிற மன்னர்களின் சுயம்வரத் திருமண முறையைப் பின்பற்ற விரும்புகிறான். சால்யனின் மகன் தன் அரசின் அறங்களை நிராகரித்தவன். வளர்ச்சியடைந்த அரசுக்குரிய அறங்களைத் தழுவும் விருப்பம் கொண்டவன்.

பர்வா நெடுக முரண்படும் பல்வேறு அறங்களின் மோதல்கள் நீள்கின்றன. சில சமயம் சுயம்வரம், சில சமயம் நியோகம், அதனால் சில சமயம், தந்தையா தாயா, குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி. மாறுபடும் அற விழுமியங்களின் மோதல் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. அதில் நாம் மனித மனம் எப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கக்கூடும் என்ற சித்திரத்தைக் காண்கிறோம்- ஒவ்வொரு பூர்வ குடிக்கும் அரசுக்கும் அவரவருக்கு உரியதென்று வெவ்வேறு ஒழுக்க நியதிகள் விளங்கக்கூடிய நிலையில் அவை ஒன்றையொன்று எதிர்கொள்ளும்போது ஏறபடக்கூடிய சமன்பாடு எவ்வளவு சிக்கலான பாதையைக் கடக்கிறது என்பதை உணர்கிறோம். வெவ்வேறு மக்கள் சேர்ந்திருக்கும் நிலை ஏற்படும்போது இது ஒரு இறுக்கமான நிலைக்குக் காரணமாக அமையும். இந்த விரிசலை நாம் இன்றும் நம் அன்றாட வாழ்வில் தினமும் எதிர்கொள்கிறோம்.

தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் தன் இளமைப் பருவத்தில் ஒரு முறை இந்திய இலக்கிய பேராளுமைகளில் மிக முக்கியமான ஒருவரான சிவராம் கரந்த்தை அவரது ஊருக்குச் சென்று சந்தித்தார். இலக்கியத்தின் மைய அக்கறையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று ஜெயமோகன் சிவராம் கரந்த்திடம் கேள்வி எழுப்பினார். சிறிதும் தயங்காமல் சிவராம் கரந்த், “தர்மம். அதுதான் இலக்கியத்தின் மைய அக்கறை. கிருஷ்ண த்வைபாயனரே இதைக் கூறியிருக்கிறார் எனும்போது அதை மறுக்க நான் யார்?”, என்று பதில் அளித்திருக்கிறார். மகாபாரதம் எப்போது தர்மநூலாகவே வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது. தர்மத்தை எடுத்துரைப்பதாய் காலம்தோறும் போற்றப்பட்டு வரும் பகவத் கீதை மகாபாரதத்தின் இதயமாய் உள்ளது என்று சொல்லலாம். ‘பர்வா’வும் தர்மத்தைப் பேசுவதுதான். ஆனால் பைரப்பாவின் அணுகுமுறை ஒருதலைபட்சமானது அல்ல. நாமறிந்த பிற பாரதங்கள் குறித்து நாம் அப்படிச் சொல்ல முடியாது. ‘பர்வா’வில் உள்ள பாத்திரங்கள் அனைவரும் தம் செயல்களின் தர்மம் குறித்து எடுத்துரைக்கும் நியாயப்படுத்தல்கள் அடிப்படையில் உள்ளீடற்றவை, வெறுமையானவை என்பதை எந்தச் சலுகையும் அளிக்காமல் பைரப்பா அம்பலப்படுத்துகிறார். இதுவே இந்த நாவலைப் பிற பாரதக்கதைகளில் இருந்து வேறுபடுத்துகிறது.

துரியோதனன் தர்மம் குறித்து ஒரு முக்கியமான கேள்வி எழுப்புகிறான், அதுதான் பாரதப் போரின் மையத்தில் உள்ள கேள்வியாகவும் இருக்கிறது: “பாண்டவர்கள் எப்படி குரு வம்சத்தினராக முடியும்? நியோக முறைப்படி குந்திக்குப் பிறந்த அவர்கள் பாண்டுவுக்குப் பிறந்தவர்களல்ல”. நியோகம் என்பது பிள்ளைப் பேற்றை நோக்கமாய்க் கொண்டு கணவன் அனுமதியுடன் வேற்று மனிதனுடன் உடலுறவு கொண்டு கருத்தரித்தல். பாண்டு ஆண்மையற்றவன் என்பதால் தேவ குலத்தைச் சேர்ந்த வெவ்வேறு ஆண்களுடன் நியோகம் பயிலும்படி பாண்டு குந்தியிடம் கேட்டுக் கொள்கிறான். அந்நாளைய பண்டிதர்கள் நியோக முறைப்படி வம்ச விருத்தி செய்வதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் துரியோதனன் இப்போது அதைக் கேள்விக்குட்படுத்தி, நிராகரிக்கிறான். இது குந்தியை கள்ள உறவு பூண்ட நிலைக்குச் செலுத்துகிறது.

பீஷ்மர் துரியோதனனுக்கு ஆதரவாய்ப் போரிட ஒப்புக் கொள்கிறார். கௌரவர்கள் அவருக்கு தலைமைத் தளபதி பதவியும் அளிக்கின்றனர். ஆனால் அவருக்கும் தர்மம் குறித்து குழப்பம் இருக்கின்றது. துரியோதனனின் வாதங்கள் அவருக்குப் போதுமானவையாய் இல்லை. தன் கேள்விகளுக்கு விடை பெற்றுத் தெளிவடையும் நோக்கத்தில் அவர் வேத வியாசரைச் சந்திக்கப் பயணிக்கிறார். ஆனால் கிருஷ்ண த்வைபாயனருக்கும்கூட அதற்கு முழுமையான விடை சொல்ல முடியாத குழப்பம்தான். அவரது மகன் அப்போதுதான் உண்ணா நோன்பிருந்து தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறான். பிரம்மசரிய விரதத்தை மேற்கொள்பவன் உலகின் அனைத்து இன்பங்களையும் துறந்தாக வேண்டும் என்றால் இந்த உலகில் ஏன் வாழ வேண்டும் என்பது அவனது கேள்வி. மரண பயத்தின் காரணமாகவே மனிதர்கள் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்கின்றனர். பற்றே அச்சத்தின் கரணம். பற்றறவன் ஏன் மரணத்தை அஞ்ச வேண்டும்? இவ்வாறு வாதிடும் வியாசரின் மகனாகிய சுகர் உணவு உட்கொள்வதை நிறுத்தி மெல்ல மரணத்தைத் தழுவுகிறார். இதே நேரத்தில் நாத்திக தம்பதியினர் வேத வியாசரின் ஆசிரமம் வருகின்றனர். அவர்கள் வியாசரை விவாதத்துக்கு அழைக்கின்றனர். தன் மகன் மரணமடைந்தபின் வியாசர் மேற்கொண்ட கர்மங்கள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப விரும்புகின்றனர். இந்தக் கேள்விகள் ஆதார வேதங்களையே கேள்விக்குட்படுத்துகின்றன. மரணத்துக்குப் பிற்பட்ட வாழ்வையும் பூதங்களின் உலகையும் பேசும்போது அந்த இரு அந்நியர்களும் வியாசரின் சீடரான பைலாவிடம், “வேதங்களைப் பற்றி பேசியவர்கள் உண்மையில் வேதங்களை அறிந்திருந்தனர் என்பதற்கு என்ன ஆதாரம்? ஐந்து புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் எவ்வாறு நம்பிக்கை கொள்ள இயலும்?”, என்று கேள்விகள் கேட்கின்றனர். வியாசரின் பூரண நம்பிக்கைக்குரிய வேதங்களின் வேர்களையே இக்கேள்விகள் அசைத்து விடுகின்றன.

நியோகத்தை தர்மம் அனுமதிக்கிறதா என்ற பீஷ்மரின் கேள்விக்கு களைப்பு, சோகம், குழப்பம் இவற்றால் பீடிக்கப்பட்ட வியாசரால் பதிலளிக்க முடிவதில்லை. “இன்று காலை அவ்விரு அந்நியரும் விவாதிக்கத் துவங்கியது முதல் இந்த எண்ணத்தின் சுமை கூடிக்கொண்டே வருகிறது. அந்தக் கேள்விக்கு முன், நியோகம் தர்மத்தை மீறுகிறதா இல்லையா என்ற விஷயம் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது. முக்கியமான கேள்விக்கே பதில் இல்லாதபோது, அற்ப விபரங்களைக் குறித்து கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?” என்று கேட்கிறார் அவர். மேலும், “மரணத்துக்கு நாம் பொருள் காண முடியும் என்றால் வாழ்வுக்கும் நாம் பொருளளிக்க முடியும்,” என்கிறார் வியாசர். தன் கேள்விக்கு விடை காண முடியாத பீஷ்மர் போர் முனை திரும்புகிறார்.

தர்மத்தின் தாக்கம் ஆண்களைவிட பெண்களின் மீதுதான் அதிகம் உணரப்படுகிறது. இந்த நாவலிலும் நாம் அதன் தாக்கத்தின் இயல்பைக் காண்கிறோம். திரௌபதி அவையில் அனைவரின் முன்னும் துகிலுரியப்படுகிறாள், தர்மத்துக்குக் கட்டுப்பட்டு அவளது கணவர்கள் அனைவரும் மௌனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குந்தியின் குணம் சந்தேகிக்கப்படுகிறது, நியோகத்தின் தர்மம் குறித்து துரியோதனன் கேள்வி எழுப்பும்போது அவளது செயல்கள் அனைத்தும் ஒழுக்கமற்றவை என்று தீர்மானமாகிறது. சல்யனின் பேத்தி திருமணம் முடிவு காணப்பட முடியாத நிலையில் நிற்கிறது, பெரியவர்கள் திருமணத்துக்கு முந்தைய கலவி தர்மத்துக்கு உட்பட்டதா என்ற விவாதித்து முடிய அவள் காத்திருக்க வேண்டும். இந்த நாவலில் உள்ள பல பெண்களுக்கும் துயரமே விதியாக அமைகிறது, அனைத்தும் தர்மத்தால் விதிக்கப்பட்ட வகையில்.

எக்காலமும் எவருக்கும் பொருந்தக்கூடிய முழுமுதல் தர்மம் என்ற ஒன்றில்லை என்பதை நாம் இந்தக் காவியத்தின் படிப்பினையாய்க் கொள்ளக்கூடும். தர்மம் மக்கள் சார்ந்தது, அவர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதியின் மரபுகளையும் அங்கு அதிகாரத்தில் உள்ளவர்களையும் பாதுகாப்பது தர்மத்தில் கலந்து விட்டது. மீண்டும் மீண்டும் நாம் தர்மம் குறித்த கேள்விகளைப் பார்க்கிறோம், அதை எவ்வாறு வரையறை செய்வது என்ற நெறிமுறைகள் மாறுவதையும் காண்கிறோம். வேத வியாசரே தர்மம் குறித்து தீர்மானமாய் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார் என்றால் அங்கு தர்மம் என்ற கருத்தே எவ்வளவு நிச்சயமற்றது என்பது புரியும்.

மேலும் நாம் தர்மம் சுயநலனைப் பாதுகாக்கவும் பிறருக்கு உதவியாய்ச் செயல்படாமல் இருக்கப் பயன்படுவதையும் இந்நாவலில் பார்க்கிறோம். திரௌபதி சபைக்கு இழுத்து வரப்படும்போது, அவள் கிட்டத்தட்ட முழுமையாகவே துகிலுரியப்படும்போது, பீமன் போரிட விரும்புகிறான், ஆனால் அது தர்மமல்ல என்று அவனை அர்ச்சுனன் தடுத்து விடுகிறான். இந்த நாவலில் யுதிஷ்டிரன் எப்போதும் தர்மம் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறான், ஆனால் அவன் எதையும் செய்யாமல் இருக்க தர்மத்தை ஒரு கேடயமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறான். இந்தக் கோழைத்தனத்தை பீமனும் திரௌபதியும் வெறுக்கிறார்கள். திரௌபதி மதிப்பு கொண்டிருக்கும் ஒரே பாத்திரம் பீமன்தான் என்பதில் ஆச்சரியமில்லை. பீமனின் தர்மம் ஆதி காலத்துக்குரியது. சுருதிகளில் நெறிப்படுத்தப்பட்ட தர்மத்தை நிராகரித்து, செயலின் விளைவாய் துலக்கமாகும் தர்மத்தைக் கடைபிடித்தல் என்பது இந்த நாவலின் மிக முக்கியமான செய்திகளில் ஒன்றாகும். உண்மையில், இந்த நாவலின் முடிவில் சில பெண்கள் தர்மராஜனிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கிறான் தர்மராஜன்.

ஆம், இந்தப் புத்தகத்தின் மிக உறுத்தலான பகுதி திரௌபதி துகிலுரியப்படும் கட்டம்தான். தர்மம் என்ற ஒன்றே கிடையாதா, அதுவும் ஆளுக்கு ஆள் இடத்துக்கு இடம் மாறுமா? சத்திரியர்களுக்கு அனுகூலமாய் இருப்பதுதான் சத்திரிய தர்மம், பிராமணர்களுக்கு அனுகூலமாய் இருப்பது பிராமண தர்மம் என்றால் தர்மத்தின் தன்மைதான் என்ன? புத்தகத்தில் இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடையாது. ஆனால் ஒரு சிலர் தர்மத்தின் இரட்டை முகத்தை அறிந்திருக்கின்றனர். உதாரணமாக, ஏகலவ்யன் குருக்ஷேத்ரம் வருவது அவன் சத்திரியர்கள் மீது கொண்டுள்ள அபிமானத்தால் தன்னையும் சத்திரியனாய் மாற்றிக் கொண்டுதான். தன் குரு துரோணருக்கு சேவை செய்வதே தன் கடமை என்று அவன் நினைக்கிறான். எனவே சத்திரிய அரசனாக ஆயுதம் தரித்து அவன் தன்னையும் தன் படைகளையும் துரோணர் வசம் ஒப்படைக்கிறான். பின்னரே அவன் துரோணரிடமிருந்து தான் தன் பெருவிரலை இழக்க பீஷ்மர்தான் காரணம் என்பதை அறிந்து கொள்கிறான். அப்போதுதான் அவன் வனக்குலங்கள் சத்திரியர்களைவிட எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல என்பதை உணர்கிறான். உடனே அவன் தன் சத்திரிய அடையாளங்களை அகற்றி, வனவாசிகளுக்கு உரிய உடை பூண்டு, போர் துறந்து வனம் திரும்புகிறான்.

எது தர்மம் என்ற தொடர்ந்த தேடலும் அதன் வசப்படாத் தன்மையும், நம் வாழ்வும்கூட தர்மத்தின் இயல்பை அறிவதற்கான தேடல்தான் என்று நினைக்க வைக்கின்றன. இந்தத் தேடல் நம் செயல்களை நியாயப்படுத்த உதவலாம். நம்மைச் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் புரிந்து கொள்ள உதவலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த உண்மையை அறிய நாம் கடுமையாய் உழைக்க வேண்டும், நம் தேடல் ஆழமானதாய் இருக்க வேண்டும். நம் சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் நாம் தேட வேண்டும், மானுட நேயம் குறித்த முன்முடிவுகளை விலக்கி, நம் வர்க்க, சாதி பேதங்களை அகற்றி, தர்மம் குறித்த ஒரு பார்வையை வந்தடைய வேண்டும். இந்த நாவல் எல்லாவற்றையும் கேள்வி கேட்ட பின் எஞ்சி நிற்பது அக்கேள்விகள் மட்டுமே. அவற்றுக்கான பதிலை நாம்தான் காண வேண்டும். இதன் ஆசிரியர் அதற்கான எந்த உதவியும் அளிப்பதில்லை என்பதுதான் இந்த நாவலின் வெற்றி.

பைரப்பாவின் கதைகூறல் காலவரிசைப்படியல்ல. அவர் உண்மையாகவே ஒரு மகத்தான காவியத்தை மண்ணுக்கு கொண்டு வந்து விடுகிறார். இதன் கதைமாந்தர்களுக்கு வியர்க்கிறது, பெண்களுக்கு மாதவிடாய் காண்கிறது, மக்கள் மீது புழுதி படிகிறது, போர்க்களத்தில் மலம் மற்றும் சிறுநீரின் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. இதன் கதாநாயகர்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்கள், கொல்லர்கள் இறந்தவர்களின் இரும்பு தேடி போர்க்களம் வருகிறார்கள், முந்தைய நாள் களத்தில் வீழ்ந்தவர்களைப் புதைக்கவோ எரியூட்டவோ இயலாததால் ஒவ்வொரு நாளும் போர்க்களம் இடம் மாறிக் கொண்டே இருக்கிறது- அப்பிணங்களை கழுகுகளும் ஓநாய்களும் தின்கின்றன.

கதை பல திசைகளில் அலைந்தாலும் பைரப்பா ஒரு மையச் சரட்டில் அதை இறுக்கமாய்ப் பிணைத்திருப்பதை நாம் சீக்கிரமே உணர்கிறோம். அவரது நோக்கம் மகாபாரதத்தின் தொன்ம இயல்பை நீக்கி, இரு அரசுகளுக்கு இடையேயான வழக்கமான கதையைத் தருவது. இதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும் அதற்கேயுரிய பார்வையில் அணுகப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் நாவல் முழுவதுமே வெவ்வேறு தனிக்குரல்களில், தனியுரைகளாய் ஒலிக்கிறது. ஆனால் அதனால் நாவலின் சுவை கெடுவதில்லை. உண்மையில், ஒவ்வொரு பாத்திரமும் தன் பார்வையால் கதைக்கு கூடுதல் வண்ணம் சேர்க்கிறார்கள். இதனால் காவியத்தன்மை கொண்ட இந்தக் கதை பல பரிமாணங்களில், பல கோணங்கள், பல பார்வைகள் கொண்டு செறிவடைகிறது. ஒரு காவியத்தை மீளுருவாக்கம் செய்யும்போது அதன் காவியத்தன்மையை இழக்காமல் எழுதுவது எப்படி என்பதற்கு இந்த நாவல் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

மகாபாரதம் மிகவும் விரிவான களம் கொண்ட காவியம். அதன் அக்கறைகள் எண்ணற்றவை, எனவே அதன் வாசிப்புகளின் பன்முகத்தன்மைக்கும் முடிவில்லை. பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்ற சாத்திரத்தை இதில் காணலாம், அரசாட்சி குறித்த ஆவணமாய் இதை வாசிக்கலாம், நாகரீகங்களுக்கும் விழுமியங்களுக்கும் இடையிலான மோதலாகவும் இதை அணுகலாம். இவை ஒவ்வொன்றும் சரியான பார்வையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்வகைப்பட்ட ஒவ்வொரு வாசிப்புக்கும் இது இடம் தருகிறது. இந்திய இலக்கியத்தில் ‘பர்வா’ ஒரு மகத்தான சாதனை என்று சொன்னால், பன்முக வாசிப்புச் சாத்தியம் அதற்கான முக்கிய காரணமாக இருக்கும்.

இந்த நாவலை கன்னட மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருப்பவர் பாவண்ணன். தன்னளவிலேயே ஒரு சிறந்த புனைவெழுத்தாளரான அவரது தமிழாக்கம் சிறப்பாக அமைந்திருப்பதில் வியப்பில்லை.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.