இளமூதாக்களும் கழிவுநீரும்: சால் பெல்லோவின் கலை

அன்புள்ள திரு பெல்லோ அவர்களுக்கு,

நீங்கள் நேசிக்கும் நியூ இங்கிலாந்தை இப்போது குளிர்காலம் நெருங்கி விட்டது. “சென்ற வேனிலின் இலைகள்” அளிக்கும் கசப்பும் இனிப்பும் கூடிய அழகு ஒரு புறம் இருந்தாலும், இந்தக் குளிர்காலம் ஒளியற்றதாக இருக்கும் போலிருக்கிறது. இவ்வாண்டின் கோடையில் நான் ஒரு பெருந்தீனிக்காரி போல், நீங்கள் எழுதிய ஏறத்தாழ எல்லாவற்றையும் வாசித்தேன் (மீண்டும் மீண்டும் வாசித்தேன்). ராவல்ஸ்டீன் போலவே நானும் அவற்றின் நுண்மையான இசையில் “எண்ணங்கள் கரைந்து போக” என்னை இழந்தேன். சிந்தனைகள் சுள்ளிகளாய் முறித்துத் தெறித்துச் சுடர் விட்டுக் கனலாய்த் தகிக்கும் ஓர் உள்ளத்தின் வெம்மையில் குளிர் காய்வது போன்ற அனுபவமாய் என் வாசிப்பு இருந்தது. நான் உங்கள் தீவிர வாசகி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா!

நகர்ப்புற அமெரிக்கா குறித்த உங்கள் வர்ணனைகள் அற்புதம், ஒரு லேசர் போல் குவியும் உங்கள் பார்வையில் புலப்படும் புற விவரணைகள் அத்தனையும் (நவீன இலக்கியத்தில் இவற்றுக்கு இணையான வேறொன்று இல்லை) அந்த மடிசஞ்சி நபகோவ், டிக்கன்ஸ் போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தென்று வைத்திருந்த தண்டுவடச் சிலிர்ப்புக்குத் தக்கவை (மரக்கால் கெர்ஸ்பாக், “ஒரு பரிசல்காரன் போல் நளினமாய் வளைந்து நிமிர்கிறான்” என்பது நினைவுக்கு வருகிறது, ஆனால் அண்மையில் எனக்கு மூர்க்கம் மிகுந்த ஒரு “நிதர்சன-படிப்பினை” அனுபவம் ஏற்பட்டது.