ஆதிகாலத்திலிருந்தே மருத்துவத்துறை சமூகத்தின் மிகப்பிரதானமான ஆணிவேராக இருந்து வந்துள்ளது. ஆரோக்கியமும் செழிப்பும் கொண்ட பரம்பரைகளின் உருவாக்கத்தில் மிகப் பாரிய பங்களிப்பை அது வழங்கியிருக்கிறது. மருத்துவத் தொழில் ஏனைய தொழில்களைப் போல அல்லாது சமூகத்தின் அதிக கவனயீர்ப்பைப் பெற்று வளர்ந்ததொரு துறை.
இதனால் தான் சின்ன மொட்டாய்த் துளிர்க்கும் வயதிலிருந்தே டொக்டராகும் கனவு விதைகள் பிள்ளைகளின் உள்ளத்தில் தூவப்படுகின்றன. அந்த விதைப்படுக்கைகளுக்கு பெற்றோரும் சுற்றியுள்ள மற்றோரும் நீரூற்றிப் போஷிக்கிறார்கள்.
மருத்துவம் ஒரு மனித உயிரினைக் காக்கும் அதியற்புதமான சேவை என்பதற்கப்பால் பின்னால் கிடைக்கக் கூடிய பொருளாதார வசதிகள், சமூக அந்தஸ்த்தைக் கொண்டு தான் அனேகமான பெற்றோர் பிள்ளைகளை இந்தத் துறைக்குத் தூண்டுகிறார்கள் என்கிற சுயநலத்தை ஒரு பக்கம் வைப்போம்.
ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாவதில் மிக முக்கியமான பங்கை மருத்துவத்துறை சார்ந்தவர்கள் வகிக்கிறார்கள் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. மருத்துவர்கள் வெறுமனே அரசிற்கு சொந்தமான மருத்துவமனைகளின் சம்பளத்திற்காக வேலைபார்க்கின்ற ஊழியப்படையினர் மட்டும் அல்லர். அவர்களின் பங்களிப்பு முழுக்க முழுக்க இந்த நாகரீகம் சுமந்திருக்கும் மனித சமூதாயத்தின் மீதான தார்மீகப் பொறுப்பு சார்ந்த ஒன்று. ஏனெனில் சுகாதாரத்துறை வளமும் நலமும் கொண்டிணைந்த ஆரோக்கியமான சமூகத்தைச் சுமந்திருக்கும் ஒரு கருவறை.
சமூக நீரோட்டத்தின் கட்டங் கட்டமான நகர்வில் ஒரு மருத்துவரின் பங்கு வெறுமனே ஒரு தொழிலாக மட்டுப்படுத்தப்பட முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை சம்பந்தமான வழிகாட்டல்,நோய்கள் சம்பந்தமான எச்சரிக்கை, மாசடைந்து வரும் சூழல் உருவாக்கும் புதிய நோய்களுக்கான மருந்துகளைக் கண்டு பிடித்தல், மக்கள் மத்தியில் பிரபலமாயிருக்கும் பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஆராய்தல், மருந்துகளின் பக்கவிளைவுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தல், வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்தல்,புதிய தொழிநுட்பத்தை பரவலாக்குதல், நோயாளியின் உளவியல் தேவைகளைப் புரிந்து சிகிச்சையளித்தல், மக்கள் நலனை முற்படுத்துகின்ற கொள்கைகளை வகுத்தல் என்று இடையறாது நீள்கின்ற பணிகள் அவர்களுக்கானது.
உலகத்தின் ஒரு பில்லியன் மக்கள் சுகாதார சேவைகளை அணுக முடியாதவர்களாக இருக்கின்றனர் என்கிறது உலக சுகாதார அமைப்பின் WHO ஆய்வறிக்கை ஒன்று.
80 களின் இறுதிப் பகுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அனேகமான நாடுகள் அமெரிக்க முதலாளித்துவத்தைத் திருமணம் செய்து கொண்டன. குறிப்பாக மூன்றாம் உலக ஆசிய நாடுகள் பல அந்தந்த தேசங்களுக்குரிய பிரத்தியேகமான தனிமங்களுடன் முதலாளித்துவப் பொருளாதாரத்தை தங்களுடையதாக்கிப் பெருமைப்பட்டன. பின்னாளில் அவற்றுக்கு ஆசிய விழுமியங்களுடன் கூடிய முதலாளித்துவம் (capitalism with Asian values) என்று நாமகரணம் செய்யப்பட்டது. முதலாளித்துவக் கொள்கைகளின் தாக்கம் பல்வேறு துறைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அதற்கு மருத்துவத்துறையும் விதிவிலக்கல்ல.
குறிப்பாக, சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சங்கங்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டது. அவற்றின் ஆதிக்க சக்தி மிகத் தந்திரமாக முடக்கப்பட்டது. யாரும் யாரையும் கேள்விக்குள்ளாக்க முடியாத ஒரு கட்டற்ற சூழல் மெதுவாக உருவாக்கம் பெற்றது. அதிகாரத்திற்கும் அநீதிக்கும் எதிராகக் குரல் எழுப்ப முடியாத ஒரு அபாக்கியமான யுகத்தை தேசங்கள் தழுவிக் கொண்டன.
இதே நேரத்தில் தான், சுகாதாரத்துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டும் மாற்றங்களை நோக்கி அரசைத் தூண்டிக் கொண்டும் இருந்த டொக்டர்கள் வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியப்படையினராக குறுக்கப்பட்ட அவலம் நேர்ந்தது. அவர்களுடைய அரசியல் தலையீடு இப்போது வெறும் சம்பள உயர்வுக்கான ஆர்பாட்டங்களாக அல்லது வேலை நிறுத்தங்களாக சுருங்க ஆரம்பித்தன. அவை அந்த தேசங்களின் நவ தாராளவாத அரசுகளுக்கு (Neo Liberal Nations) ஒரு புறத்தில் சுகாதாரத்துறையை தனி உடைமையாளர்களுக்கு விற்பதற்கும் மறுபுறத்தில் அரச மருத்துவ நிறுவனங்களின் ஆதிக்கக் கட்டுடைப்பைத் தீவிரப்படுத்தவும் வழி கோலின.
ஆரோக்கியமாக இருப்பதும் நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகள். அந்த உரிமம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.தன்னுடைய நிறுவனத்தின் தேவைக்காக அரசை இயக்கி சொந்த இலாபமீட்டலுக்காக முழுத் தேசத்தின் நலத்தையும் பணயம் வைக்கும் நவ தாராளவாதம் அல்லது பணமுதன்மை கலாச்சாரம் கல்வி,சுகாதாரம் இந்த இரண்டையும் இலவசமாக வழங்குவதை மிகப் பெரும் நஷ்டங்களாகப் பார்க்கிறது. இதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுகாதாரத்திற்கான காப்பீடு (Insurance) இல்லாத பெருந்தொகையினருக்கு சுகாதார சேவைகள் மறுக்கப்படுகின்றன.
மருத்துவத் தொழிலின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தரப்படுத்தப்பட்ட சுகாதார சேவையை (Standardized health service) இன,மத அல்லது பொருளாதார சமூக அந்தஸ்த்து வேறு பாடின்றி எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு சேவையாக மாற்றுவது. அந்த வகையில் சுகாதாரத்துறை தனியார்மயமாவதற்கு எதிராக எழுந்து நிற்பதும் போராடுவதும் மருத்துவர்களின் தார்மீகப் பொறுப்பு.
70 களின் இறுதிப்பகுதியில் புற்று நோயாய்ப் பரவிய நவ தாராளவாதம் (Neo Liberalism) இலவச சுகாதார சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு அரசுகளை உந்தித் தள்ளியது. நவதாராளவாதம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னால் சில தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களின் இலாபமீட்டுடதலுக்கு முழு அரச இயந்திரத்தையும் பொதுநலன்களை கருத்திற் கொள்ளாது பயன்படுத்துவதாகும்.
நவ தாராளவாதம் எழுச்சி பெறுவதோடு , சுகாதாரசேவைக்கான மானியங்கள் (Subsidies) குறைக்கபட்டன;அல்லது முற்றாக நிறுத்தப்பட்டன. இது இலவச சுகாதார சேவை மீது விழுந்த பாரிய அடியாகும். இலவச சுகாதார சேவையின் தரத்தைச் சிதைப்பதன் மூலம் மக்களை தனியார் மருத்துவமனைகளின் பால் நகர்த்துவதே இதன் பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரலாகும். இது இலவச சுகாதாரத்துறையில் உள்ள சில சேவைகள் மட்டுப்படுத்தப்படுவதற்கும் இலவச மருத்துவம் தொடர்பான அதிருப்தியான பதிவுகளை ஏற்படுத்துவதற்கும், பின்னால் சுகாதார சேவைகளை மத்தியதர வர்க்கத்தை பணம் செலுத்தி நுகர்வதற்குக் கட்டாயப்படுத்துவதற்கும் உடந்தையாக இருக்கிறது. ரொனால்ட் ரீகனும் மார்க்ரெட் தச்சரும் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த மாதிரி(Model), நேரடியாக நவ தாரளவாதத்தின் அடிப்படைகளிலிருந்தே எழுந்தது.
இந்தப் பேரழிவிலிருந்து இலங்கையும் தப்ப முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன் கட்டியெழுப்பப் பட்ட இலவச சுகாதார சேவை, நவ தாராளவாதத்தின் இரும்புப் பிடிகளுக்குள் சிக்கிய வரலாறு வேதனையாக எங்கள் முன் விரிகிறது. இதன் விளைவாக ஒரு புறம் அரச மருத்துவமனைகள் மந்த போசணைக்குள்ளாகியுள்ளன. இன்னொரு புறம் மக்களின் பணத்தை இரத்தக்காட்டேறியாய் உறிஞ்சுகின்ற தனியார் மருத்துவமனைகள். இலவச சுகாதார சேவையைப் பற்றி இவ்வளவு பெருமை பேசும் நாங்கள் ஏன் இந்த உயிர்காக்கும் அத்தியாவசிய சேவையை இலாபத்துக்காக இயங்குகின்ற தனியார் நிறுவனங்கள் வழங்குவதற்கு அனுமதித்தோம் என்பது மிகப் பெரிய கேள்வி. ஒரு மக்கள் நல அரசு சுகாதாரசேவை,கல்வி, போக்குவரத்து போன்ற சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தினதும் சுபீட்சத்தினதும் அச்சாணிகள் அவை.
தனியார் நிறுவனங்கள் டொக்டர்களுக்கும் தாதியருக்கும் அதியுயர்ந்த சம்பளம் இன்ன பிற வசதி வாய்ப்புக்களை வழங்குகின்றன. வலுவிழந்து வரும் அரச சுகாதாரச் சேவை அதன் வைத்தியர்களுக்கு சம்பள அதிகரிப்பினையோ முறையான விடுமுறைகளையோ வழங்க முடியாமலிருக்கிறது. இதனால் இயற்கையாகவே பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவ நிலையங்களை முதன்மைப்படுத்துவதனையும் அதனை நோக்கி நகர்வதையும் அவதானிக்கலாம். இப்படித்தான் இலவச மருத்துவ சேவையின் குரூரமான மரணம் மிக மெதுவாக நிகழ ஆரம்பித்தது.
இன்று மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் ,தாதியர்கள் போராட்டங்கள் அனேகமாக தங்களுடைய சம்பளம்,சலுகைகள் அல்லது பிரைவட் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரான போராட்டங்களாக மட்டுமே இருக்கிறன. அவர்களுக்கென்ற ஒரு பரந்த பார்வை இல்லாமலிருக்கிறது. அதனால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிக்கெதிராகப் போராடும் அதே மருத்துவர் நாளை தனியார் மருத்துவமனையொன்றுக்கு விலை போகிறார். கல்வி தனியார்மயமாகி வருவது மருத்துவத்துறையை மட்டுமல்ல ஏனைய துறைகளையும் பாதிக்கின்றது. பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறும் அனைவருக்கும் பட்டப்படிப்புக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை.இலங்கையில் மருத்துவம் என்ற துறைக்கும் ஏனைய துறைகளுக்கும் இருக்கும் பாரிய இடைவெளி வேறு மேற்கு நாடுகளில் இல்லை. ஒரு மருத்துவ நிபுணரும் ஒரு சாதாரணக் கூலித்தொழிலாளியும் ஒரே இடத்தில் இருந்து தேநீர் குடித்து அளவளாவக் கூடிய சூழலையும் அமைப்பினையும் இங்கிலாந்திலும் இன்னும் பல நாடுகளிலும் காண முடிகிறது. இது தான் இஸ்லாம் கூறுகின்ற உண்மையான சமத்துவம்.
இன்று மக்கள் மருத்துவர்கள் தமது வரிப்பணத்தில் படிப்பதாகவும் அதனால் அவர்கள் அதை ஒரு சேவையாகக் கருதி செய்ய வேண்டும் என்றும் பலர் கருதுகின்றனர்,பேசுகின்றனர். இது ஒரு அபத்தமான சிந்தனை. இலங்கையைப் பொறுத்தவரை எல்லா பல்கலைக்கழக பாடநெறிகளைப் பயில்பவர்களும் அரச சலுகையில் பயில்பவர்கள் தான். இந்த அதிருப்தி மருத்துவத் துறைக்கும் ஏனைய துறைகளுக்குமிடையிலான பாரிய இடைவெளி காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம்.
மருத்துவம் கற்க விரும்பும் தகுதியுள்ள எல்லா மாணவர்களுக்கும் அதற்கான அமைப்பு அரச பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்படும் போது வெளி நாட்டிக்குச் சென்று கற்பதற்கோ அல்லது தனியார் மருத்துவக் கல்லூரியின் படிப்பதற்கோ தேவை ஏற்படாது. அப்படி இல்லாத பட்சத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசின் கண்காணிப்பின் கீழ் இயங்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
ஏனென்றால் சுகாதாரம் அல்லது மருத்துவ அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் தனிப்பட்ட புலமைச் சொத்து அல்ல என்பது புரிதலுக்குரிய ஒரு அம்சம்.
தரப்படுத்தப்பட்ட சுகாதார சேவையும் கல்வியும் இலவசமாக எல்லோராலும் எட்ட முடிந்த கனவுகளாக இருக்கும் பட்சத்தில் அங்கு தனியார் கல்வியும் தனியார் சுகாதார நிலையங்களும் எங்களுக்குப் பூதாகரமான பிரச்சினையாகப் போவதில்லை.
தரப்படுத்தப்பட்ட சுகாதார சேவை, மக்களுக்கு இலவசமாக நவீன மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதோடு ,மருத்துவர்களுக்கும் தேவையான சலுகைகளையும் வழங்கும். தனியார் மருத்துவ நிலையங்கள் வழங்கும் அதே சம்பளம் அரச சேவையிலிருக்கும் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் போது அவர்கள் உண்மையான தன்முனைப்போடும் தியாகத்தோடும் இயங்குவார்கள்.
அப்போது தான் மருத்துவர்களின் தொழிற்சங்கம் அரசோடு இணைந்து சுகாதாரத்துறைக்கான தன்னிறைவு இலக்கினை நோக்கிப் பயணிக்க முடியும்.
தன்னிறைவை எடுத்துக் கொண்டால் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் தங்கள் பார்வையை இன்னும் அகலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அரச சுகாதார சேவையை நவீனமயப்படுத்தல்,நோயாளர்களை நம்பர்களாக அல்லாது உயிரும் உணர்வுகளுள்ள் மனிதர்களாகப் பார்த்தல். அரச மருத்துவத்துறையில் ஒரு மறுமலர்ச்சி கொண்டுவருதல் போன்ற அடிப்படைகளில் இருந்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
மருத்துவருக்கு நோயாளிக்குமான உளவியல் தொடர்பு நிலை என்ன?
ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை எந்த அமைப்புமுறை யூடாக அணுகுகிறார்?
இந்த அணுகுமுறை நோயாளிக்கு சாதகமானதா அல்லது அந்த வர்த்தகத்துக்கு சாதகமானதா?
மரபுரீதீயாக இலங்கையில் சுதேச மருத்துவத்துக்குள் இருந்த உளவியல் நாகரீகமும்
பொதுநலமும் என்ன?
இவ்வாறான எங்களைச் சிந்திக்க வைக்கின்ற கேள்விகளை அடிப்படையாக வைத்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
A Historical Relation of the Island of Ceylon என்ற நூலை ரொபர்ட் நொக்ஸ் என்ற இங்கிலாந்து 1680 களில் எழுதிய போது சுவையான ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். “Here are no professed physicians nor surgeons, but all in general have some skill that way, and are physicians and surgeons to themselves”. அந்தக் காலத்தில் இலங்கைக்கே உரிய பாரம்பரிய மருத்துவமுறைகள் புழக்கத்தில் இருந்தன. ஆங்கிலேயர் வருகையோடு ஆங்கில மருத்துவம் அல்லது அலோபதி (Western Medicine) பிரதான மருத்துவமாக மாற்றப்பட்டதோடு பல்கலைக்கழகத்திலும் ஆங்கில மருத்துவப் பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து இலங்கைக்கே உரிய சுதேச மருத்துவமுறை புறக்கணிப்புக்குள்ளானது. இன்று இலங்கையில் சிங்கள வெதகம, ஆயுர்வேதம், யூனானி, சித்தா, ஹொமியோபதி, அக்யூபஞ்சர், சீன மருத்துவம் என பல்வேறு வகையான மாற்று மருத்துவங்கள் காணப்படுகின்றன.இவற்றில் பலவற்றை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதில் சில மாற்று மருத்துவ பாடநெறிகளை பல்கலைக்கழகங்கள் பட்டப் படிப்புக்களாக வழங்குகின்றன. இங்கு சில முக்கிய கவனயீர்ப்பு அம்சங்கள் இருக்கின்றன.
- ஆங்கில மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள் மாற்று மருத்துவத்துறைகளின் முறைமைகளையும் நோய் தீர்க்கும் ஆற்றலையும் முற்றாக மறுதலிக்கிறார்கள்.
ஆங்கில மருத்துவப்பாடநெறிகளில் மாற்று மருத்துவம் பற்றிய சில பாடங்கள் வெளிநாடுகளின் பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையைப் பொருத்தவரை ஆங்கில மருத்துவம் மட்டும் தான் மிகச் சரியானது என்ற மனோபாவம் அனேகமான வைத்தியர்களிடம் காணப்படுகின்றது. அவர்களிடம் மாற்று மருத்துவம் பற்றிப் பேசவே முடியாது. இது ஒரு வரட்டுப் பிடிவாதம்.
- யூனானி போன்ற மாற்று மருத்துவத் துறைகளில் கற்பவர்கள் அவர்களது பாடநெறியில் உள்ளடக்கப்படும் ஆங்கில மருத்துவம் சம்பந்தமான பாடங்கள்,மேலதிகமாக அவர்கள் பயிலும் பார்மஸி கோர்ஸ்களை வைத்தும் யூனானி மருந்துகளைப் பெற்றுக் கொள்வதில் இருக்கும் சிரமங்களை மேற்கோள் காட்டியும் ஆங்கில மருந்துகளைக் கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். (இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு பிழையான அல்லது சிக்கலான அம்சம்)
- இன்னும் சில மாற்று மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தினை முற்றாக மறுக்கின்றனர். தங்களுடைய மருத்துவம் தான் முழுமையாக நோயைத்தீர்க்கும் என்ற மக்களை மூளைச் சலவை செய்கின்றனர், இவர்களுக்கு ஆங்கில மருத்துவம் சம்பந்தமான அடிப்படைகள் கூட அதிகம் தெரியாது.இதையும் முழுமையாக நம்பி ஏமாறுகின்ற மக்கள் இருக்கின்றனர்.
- ஆங்கில மருத்துவத்தில் இருக்கும் ஆராய்ச்சி மருந்துகள் சம்பந்தமான பக்கவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏனைய மருத்துவத் துறைகளில் ஒப்பீட்டு ரீதியில் குறைவு. அந்த வகையில் மற்றைய மருத்துவங்களிலும் பக்கவிளைவுகள் இருக்க முடியும் என்பதை அனேகர் புரிந்து கொள்வதில்லை.அதே நேரம் மாற்று மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்குவதில் பார்மசூட்டிகல் நிறுவனங்கள் பின்னிற்கின்றன.இதற்குப் பின்னாலிருக்கும் அரசியல் பற்றிப் பேசினால் நீளமாக கதைக்க வேண்டி வரும்.
மருத்துவத்துறை சார்ந்து பொதுமக்களிடம் அதிக விசனம் காணப்படுகிறது. நான் ஏலவே குறிப்பிட்ட மருத்துவத்துறைக்கும் ஏனைய துறைகளுக்கும் இடையிலான ஸ்டேடஸ் இடைவெளியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மருத்துவத்துறை சார்ந்தவர்களும் இந்த இடைவெளியை வைத்து பொதுமக்களிடமிருந்து விலகி ஒரு உயர்ந்த இடத்திலிருந்து (elite class) இயங்குகின்றார்கள்.
இலங்கையில் எங்களது நோய்கள் சம்பந்தமாக மருத்துவர்களிடம் குறுக்குக் கேள்விகள் கேட்பதை மருத்துவர்கள் வரவேற்பதில்லை.அப்படிக் கேட்கின்ற சந்தர்ப்பங்களில் ‘நீங்கள் டொக்டரா அல்லது நான் டொக்டரா’ என்று கேட்கக் கூடிய மருத்துவர்கள் தாராளமாக உள்ளனர். தன் நோய் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வதும் கேள்வி கேட்பதும் அல்லது அந்த சிகிச்சை முறையினை மறுப்பதும் ஒரு நோயாளியின் தனிப்பட்ட உரிமை என்பதை மருத்துவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை மறுதலிப்பதானது அந்த நோயாளியின் உடல் சார்ந்த சுதந்திரத்தின் மீதான ஒரு அத்து மீறல் என்பது புரிதலுக்குரியது.
ஒரு உடலைத் தொடும் முன்னர் கூட அனுமதி கேட்பது என்பது மருத்துவ நெறிமுறை (Medical ethics) சார்ந்த ஒரு விடயம்.இதனைப் பின்பற்றுவதில் மருத்துவர்கள் எந்தளவு தூரம் அக்கறை காட்டுகிறார்கள் என்பது கேள்விக்குரியது. நோயாளியின் கெளரவம் அல்லது தன்மானம் என்பதைப் புறக்கணித்து அவர்களை வெறும் இலக்கங்களாகப் பார்க்கின்ற மனோபாவம் இலங்கை அரச மருத்துவமனைகளில் தாராளமாகக் காணப்படுகிறது.
அனேகமான மேற்கு நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு நோயாளி மையப்படுத்திய ஸிஸ்டம் தான் இயங்குகின்றது. நோயாளி ஒரு மருந்தை தனக்கு வேண்டாம் என்று புறக்கணிக்கும் உரிமையும், தன் நோய் சம்பந்தமாகவும் அதற்கான சிகிச்சை சம்பந்தமாகவும் முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளும் சுதந்திரமும் இருக்கிறது.
உதாரணமாக இங்கிலாந்து அரச மருத்துவ சேவை NHS சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் முற்றிலும் இலவசமாகத் தான் இயங்குகின்றது. இங்கு நோயாளிகளுக்கான நவீன வசதிகளையும் மருத்துவர்கள் அவர்களை நடாத்தும் பண்பாடான முறைகளையும் பார்க்கும் போது இங்கிருக்கின்ற நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள் என்று தோன்றுகிறது.
வயிற்றில் இறந்திருக்கின்ற சிசுவைப் பிரசவிப்பதற்காக மட்டும் வைத்தியசாலையில் தனி அறை இருக்கிறது.மற்றக் குழந்தைகளின் அழுகுரல் கேட்பதால் தாய்க்கு ஏற்படும் மானசீகப் பாதிப்புக்களைக் குறைக்க அந்த அறை ஏனைய பிரசவ அறைகளிலிருந்து விலகித் தனியாக இருக்கின்றது. அங்கு அந்தப் பெண்ணின் துணைவருக்கும் தனியான ஒரு கட்டில் இருக்கிறது. இறந்த குழந்தையின் சடலத்தைக் கூட கெளரவமாகக் கையாள வேண்டும் என்ற விதி முறைகள் இருக்கின்றன. இப்படியாக இன்னும் இன்னும் ஏராளமாகச் சொல்லலாம்.
இவற்றைப்பார்க்கும் போது இலங்கை அரச மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளும் கடைநிலை ஊழியர் தொட்டு நோயாளிகளை அதிகாரம் பண்ணும் அடக்குமுறைகளும் மனசுக்கு வந்து போகின்றன.
இதெல்லாம் மேற்கு நாடுகளுக்கு மட்டும் தான் சாத்தியம் என்பவர்கள் கியூபாவினை சற்று எடுத்து நோக்க வேண்டும். ஒரு மூன்றாம் உலக நாடாக அடையாளப்படுத்தப்படும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரத்தடைக்குள் அகப்பட்டிருக்கின்றது. ஆனால் உலகில் மிக வெற்றிகரமாக இயங்கும் இலவச சுகாதார சேவையை கியூபா தேசத்தினால் அதன் மக்களுக்கு வழங்க முடிந்திருக்கிறது. அந்த இடத்திலிருந்து பார்க்கும் போது, இலங்கை போன்ற நாடுகளும் கொள்கை மாற்றங்களுக்குள்ளால் தரமான இலவச மருத்துவ சேவை என்ற இலக்கை கொஞ்சம் அர்பணிப்பும் நிறைய மாற்றுச்சிந்தனைகளும் கொண்டு நிச்சயமாக அடைய முடியும்.
அனேக மருத்துவர்கள் பண்ணாட்டு மருந்துக் கம்பனிகளூடாகப் பணம் சம்பாதிப்பவர்களாக இருக்கின்றனர். இன்று உலகை ஆட்டிப் படைக்கும் மாபியாக்களில் பார்மா மார்பியா முதன்மையான ஒன்று. மருத்துவர்கள் குறிப்பிட்ட வகை மருந்தை சிபாரிசு செய்வதன் மூலம் அல்லது சில நிறுவனங்களின் பேஸ்மேக்கர் போன்ற மருத்துவக் கருவிகளை நோயாளிகளுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் பணம் பண்ணுகிறார்கள். பிக் பார்மா(Big pharma) வின் மருத்துவர்களை வாங்குவதற்கான கொடுப்பனவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.
ஒரு மருத்துவரின் ஆன்மாவில் அல்லது மனிதத்தன்மையில் கை வைக்கும் வேலையை மருந்துக் கம்பனிகள் தங்களது முகவர்களூடாக செய்கின்றன. இதற்குப் பின்னால் மிகப் பெரும் பேசப்படாத அரசியல் இருக்கிறது. பேராசை மற்றும் அரச மருத்துவமனைகளின் சம்பளம் இவற்றினால் பாதிக்கப்படும் பல மருத்துவர்கள் இவர்களுக்கு விலை போகின்றனர். இதன் விளைவுகள் நோயாளிகளை மட்டுமல்லாது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது.
இந்த விடயங்களைப் பற்றி ஆராயவோ,உரையாடல்களை மேற்கொள்ளவோ கொள்கை வகுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவோ மருத்துவத்துறை சார்ந்த சிந்தனையாளர்கள் தேவை. இவர்கள் மருத்துவம்,மருத்துவ மானுடவியல் மற்றும் சமூகவியல் துறைகளிலிருந்து முன்வர வேண்டிய தேவை இருக்கிறது.
எமது கல்வி முறைமை சிந்தனையாளர்களை அல்லது ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதை விட தொழிற்படையினரை உருவாக்குவதிலேயே அதிகம் கரிசனை காட்டுகிறது. மருத்துவர்கள் வெறும் தொழில்ரீதியான கல்விக்கப்பால் சிந்தனைகளையும் கொள்கைகளையும் பேசுபவதற்காக முன்வரல் வேண்டும். விசேட வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் காட்டும் அதே அக்கறை வைத்தியத்துறை சார்ந்த சிந்தனையாளர்களைப் பிரசவிப்பதிலும் காட்டப்பட வேண்டும்.
இவையெல்லாம் சாத்தியமாக வேண்டுமென்றால் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் நாட்டின் சமூக அரசியல் பின்புலம் பற்றிய தெளிவோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். மற்றைய நாடுகள் இந்த சுகாதார ரீதியான தன்னிறைவை எப்படி அடைந்து கொண்டன என்பது சம்பந்தமான ஆராய்வும் அவசியம். இந்தப்பரந்த பார்வை மூலம் Alternative Imagination என்கின்ற மாற்றுக் கற்பனைகளை வளப்படுத்தலாம்.
ஒரு மருத்துவரின் பணி மனித சமுதாயத்தை நோய்களிலிருந்து காப்பாற்றுவதோடு முடிந்து விடுவதில்லை.
எல்லோருக்கும் சமனானதும் நீதியானதுமான உயர்ந்த சேவைகளை வழங்கக் கூடிய உலகளாவிய சுகாதாரத் திட்டம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக தங்கள் பங்களிப்பை வழங்குவது மருத்துவர்கள் சுமந்திருக்கும் மகத்தான பொறுப்பு.
அந்தப் பொறுப்பினை சரிவர நிறைவேற்றும் மருத்துவர்கள் தான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் உயிர்நாடிகள்.