நாம் ஏன் போரிடுகிறோம்


போரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்போ நகரம்

“போர்கள் அதீதமான அளவில் செய்யப்படுகின்ற மதுபானக்கடைச் சண்டைகள் அல்ல’ என்று எழுதுகிறார் பார்பரா ஏரென்ரிக். ஃபாரின் அஃபைர்ஸ் மாகஸீன் என்ற இதழில், ஃப்ரான்ஸிஸ் புகுயாமா போர்களுக்கு ஆண்களே முக்கியக் காரணம் என்றும் “ஆக்கிரமிப்பு, வன்முறை, போர், சமூக அடுக்குகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான கடும் போட்டி ஆகியவை பெண்களை விட ஆண்களிடமே அதிகமாகக் காணப்படுகிறது” என்றும், “புள்ளிவிவரப்படி ஆண்களே ஆக்கிரமிப்பு செய்வதில் உள்ள இன்பத்தை அதிகமாக விரும்புகின்றனர்” என்றும் தெரிவித்திருந்ததற்கு அவர் இவ்வாறு எதிர்வினையாற்றியிருந்தார். இதழியலுக்கும் அரசியலுக்கும் வரும் முன்பு செல்லுலார் இம்யூனாலஜியில் பிஹெச்டி படித்தவரான ஏரென்ரிக், ஆண்களின் போர்தொடர்பான பழக்கங்கள் அவர்கள் “உயிரியல் சம்பந்தப்பட்டது”, இரத்தத்தில் கலந்தது”, “ஜீன்களால் தீர்மானிக்கப்பட்டது” அல்லது “எலும்புகளில் ஊடுருவியிருக்கின்றது” என்ற புகுயாமாவின் நம்பிக்கைகளைப் புறந்தள்ளுகிறார். புகுயாமாவின் கட்டுரைக்கு வலுச் சேர்த்த சிம்பன்ஸிகளின் வன்முறைச் சண்டைகள் போல் அல்லாமல், போர்கள் வடிவமைக்கப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட, சமூக அங்கீகாரம் பெற்ற வன்முறையாக உள்ளன. அதை விளக்க முற்படும்போது, பாலின ரீதியான அணுகுமுறை மட்டுமல்லாது, பரிணாம உயிரியல் துறையும் கூட நாம் கருத்தில் கொள்ளவேண்டிய இடமல்ல.

இரண்டு புதிய புத்தகங்கள், அவற்றில் ஒன்று இனரீதியான வன்முறையை மையக்கருத்தாகக் கொண்டது, உணர்ச்சித்தூண்டலால் செய்யப்படும் போர்களுக்கு மாற்றுக்களை முன்வைக்க முனைகின்றன, ஆனால் அதில் இரண்டும் தோல்வியடைகின்றன. ‘வார் : அன் என்கொயரி (யேல் யூனிவர்சிட்டி ப்ரஸ்)’ என்ற நூலில் ஏ.சி.க்ரேலிங் உலகத்தின் வன்முறை வரலாற்றையும் தற்போதைய நிலையையும் தொகுத்தளிக்கிறார். ஆனால் அவற்றிலிருந்து சான்றுகளைச் சாறுபிழிந்து ஒரு முடிவை எட்டும் முயற்சியில் கைவிரித்து விடுகிறார். ‘கில்லிங் அதர்ஸ் : எ நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் எத்னிக் வயலென்ஸ் (கார்னெல் யூனிவர்சிட்டி ப்ரஸ்) என்ற நூலில் மாத்யூ லாஞ்ச் இனப்போராட்டங்களுக்கு தேசியவாத, மதவாதக் குட்டைகளைக் குழப்பும் வேலையில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உருவாகி வரும் அரசுகள் ஈடுபட்டு வருவதைக் காரணமாகக் காட்டுகிறார். இரண்டு புத்தகங்களும் தர்க்கரீதியாக சீரற்ற வகையில் உள்ளன, உயிரியல் ரீதியான விவாதங்களுக்குள் உள்ளிழுக்கப்படுவதை அவற்றால் தடுக்க இயலவில்லை, அதன் அடிப்படைக் கருத்துகள் இரு நூல்களிலும் விரவிக்கிடக்கின்றன. இவற்றைத் தவிர இரண்டு எழுத்தாளர்களும் வெளிப்படைச் சான்றுகளை, அதாவது பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடல், சுயநலமிக்க வெளி மனிதர்களின் குறுக்கீடு ஆகியவற்றோடு புதிய முற்போக்காளர்களின்

சிக்கனத்திட்டங்களும் சேர்ந்து கொண்டு கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான போர்களுக்குக் காரணமாக இருந்ததை, முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள்.

சிரியாவில் நடைபெறும் போர், ‘போர் என்றால் என்ன, மற்ற வன்முறை கலந்த சண்டைகளுக்கும் அதற்கும் என்ன வேறுபாடு ?’ என்ற கேள்விக்கு விடையளிக்க முன்வரும் க்ரேலிங்கின் முயற்சியைத் தடுத்துவிடுகிறது. சிரியாவைப் பற்றிப் பேசும்போது, முன்பு தாம் மறுத்த அதே மதுபானச் சண்டை உதாரணத்தைக் கையிலெடுக்கிறார் க்ரேலிங். கில்லிங் அதர்ஸ் நூலில் லாஞ்ச், சிரியாவை ஒரு ‘உள்நாட்டு இனப்போராகச்’ சித்தரிக்கிறார். இவ்விரு எழுத்தாளர்களும் – ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான், துருக்கி, கட்டார் போன்ற முக்கிய வெளிநாட்டுச் சக்திகளின் பங்களிப்பைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்களுடைய போர் தளவாடங்கள், பயிற்சி, நேரடித் தலையீடு ஆகியவையே இந்தச் சண்டையை உருவாக்கி, நீடிக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் கூறவில்லை.

கூறப்பட்ட நோக்கங்களும், புத்தகங்களின் தலைப்புகளும் மாறுபட்டு இருந்தாலும் – க்ரேலிங் ஒரு விரிவான பார்வையை அளிக்கிறார், லாஞ்ச் ஒரு குறுகிய வட்டத்தில் கவனம் செலுத்துகிறார் – எழுத்தாளர்களின் பாடுபொருள் என்னவோ ஒன்றுதான். ஆக்கிரமிப்புகளுக்கு மரபியல் சார்ந்த காரணங்களை ஆராய்வதோடு, உளவியலாளர்களின் உள்-குழுக்கள், வெளி-குழுக்கள் ஆகியவற்றுக்கான மாறுபாடுகளைப் பற்றியும் இருவரும் பேசுகிறார்கள். வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய மனிதர்கள் நவீனர்களை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போர்க்குணம் கொண்டிருந்தார்களா என்பதைப் பற்றி தொல்பொருள் பதிவுகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஸ்டீவன் பிங்கர், டக்ளஸ் ஃப்ரை இருவரும் செய்த விவாதங்களை இவ்விரு எழுத்தாளர்களும் கருத்தில் கொள்கிறார்கள். க்ரேலிங் இரு அத்தியாயங்களிலும், லாஞ்ச் புத்தகம் முழுவதும் விரவியுள்ள உதாரணங்களின் மூலமும் போர் வரலாற்றின் பரந்த காலகட்டத்தை இருவரும் விரிவாகப் பேசுகிறார்கள். முடிவில், போர்களுக்கான காரணங்களைப் பற்றி திருப்திகரமான விடைகளை அளிக்க இருவரும் தவறிவிடுகின்றனர்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தத்துவவியல் நிபுணரான க்ரேலிங், நேரடியாகவே இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “அதிகமான அளவில் உள்ளதும், வளர்ந்துவருவதுமான போர்களின் காரணங்களைப் பற்றிய பதிவுகள் தொகுத்தளிப்பதைச் சிக்கலாக்கி, முடிவுகளுக்கு வருவதை கடினமாக்கி விட்டன.” மெக்கில் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள லாஞ்ச், இன வன்முறைகளுக்கான ஒரு பொது விளக்கத்தை கண்டறிந்துவிட்டதாக நம்புகிறார். அது ‘அறிவாற்றலின் வளர்ச்சியால் மனிதர்களை உள்-குழுக்கள், வெளி-குழுக்கள் என்று தரம்பிரிப்பதில்’ ஆரம்பித்து, “இனப் போர்களை ஊக்குவிக்கும் காரணிகளான உணர்ச்சிகளின் உந்துதலில் எழுந்த பாரபட்சம், தன் இனத்திற்கு

ஆற்றவேண்டிய கடமைகள்” போன்ற நவீன காலத்தின் விளைவுகளை சார்ந்திருக்கிறது.

புகுயாமா-ஏரென்ரிக் விவாதம் நடைபெற்று இரு தசாப்தங்களுக்குப் பிறகு, ‘மரபியல் நியதியை’ போர்களுக்கான காரணமாகக் கூறுவதை க்ரேலிங் நிராகரிக்கிறார். ஆனால் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ள கருத்துகளை 20 பக்கங்களுக்கு தொகுத்தளித்த பின்னரே அதைச் செய்கிறார். “நாகரிகம் போலியோ நோயை ஒழித்ததுபோல் போர்களையும் ஒழிக்கும் திறன் படைத்தது, அதற்குத் தேவையான உறுதியும் வழிமுறைகளும் அதனிடம் இருந்தால்” என்று வலியுறுத்துகிறார் அவர். ஆக, மரபணுக்களால் தீர்மானிக்கப்படாவிட்டாலும் கூட போர் என்பது நோய் போன்றது என்கிறாரா அவர் ?

லாஞ்சின் வாதம் புகுயாமாவின் மரபியல் நியதியைப் பின்பற்றவில்லையென்றாலும் “எப்படி ஒரு பொது உயிரியல் மரபு மனித குலத்தை இனப்போர்களை நோக்கித் தள்ளும் அபாயத்தை அதிகரிக்கிறது” என்பதை அவர் சுட்டுகிறார். மரபியல் தன்மைகள் மற்றும் சூழலின் தாக்கங்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த விளைவுகளை விளக்க சிம்பன்ஸிகளைத் தவிர்த்துவிட்டு சிவாவா, பார்டர் கூலி போன்ற நாய்களின் உதாரணங்களை அவர் எடுத்துக்கொள்கிறார். புகுயாமாவின் ‘ஹார்ட் வயரிங்’ என்ற கருத்தாக்கத்தைத் தவிர்த்துவிட்டு, ‘ப்ரீ வயரிங்’ (உளவியல் ஆராய்ச்சியாளரான கேரி எஃப் மார்க்கஸ் இடம் இருந்து பெறப்பட்ட) என்ற கருத்துக்கு அவர் முன்னுரிமை அளிக்கிறார். இதற்கான காரணமாக “உள்-குழுக்கள், வெளி-குழுக்கள் என்று தரம்பிரிப்பது சமூகச் சூழலைச் சார்ந்தே இருக்கிறது” என்பதை அவர் கூறுகிறார். குழுப் பிரிவினை என்ற வாதத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு குழு முன்னேற்றம் என்ற வாதத்தை அவர் முன் வைக்கிறார். இது புகுயாமாவின் நேரடி வாதம் அல்ல என்றாலும், அதைப் போன்றது என்று கூறலாம்.

லாஞ்சைப் பொருத்தவரை, உள்-குழுக்கள், வெளி-குழுக்கள் என்று வேறுபடுத்தி அதனைக் கொண்டு இன வன்முறைகளைத் தூண்டும் மனித குலத்தின் தன்மை நவீன காலத்தின் ஒரு விளைவாகும். எனவே அவர் விளக்க விழையும் இந்த விளைவு கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உள்ளது. லாஞ்சின் நவீன காலம் என்பது பரந்து விரிந்த ஒன்று. அது ப்ரஷ்யாவின் அரசைக் கட்டமைத்தலையும், ப்ரான்ஸின் ‘குடியானவர்களிலிருந்து ப்ரஞ்சுக்காரர்களாக’ மாறும் நிகழ்வையும் கருத்தில் கொண்டு மேலும் காலனியின் மிஷனரிகள் பர்மாவின் ‘கரென்’ இனத்தவரின் மொழிக்கு ஒரு வரிவடிவம் அளித்து அதன்மூலம் பைபிளை வாசிக்கச்செய்து அவர்களுக்கு ஒரு இன அடையாளம் அளித்ததையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. பக்கத்து நாடான தாய்லாந்திலோ, ப்ரொட்டஸ்டண்ட் மிஷனரிகள் கரேன் இனத்தவரைத் தாய்லாந்து நாட்டுடன் அடையாளப்படுத்தி அவர்களுக்கு ஒரு பொதுமொழி மூலமான கல்வி அளிக்காததையும் லாஞ்ச் சுட்டுகிறார். பர்மாவில் நடைபெற்ற கரென் இனத்தவருக்கு எதிரான

வன்முறையைப் பொருத்தவரை, மிஷனரிகளின் ஒரு குழு மற்றொன்றைவிட நவீனமயமானது என்று ஆசிரியர் கருதுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒட்டுமொத்தத்தில், நவீனகால விளைவுகள் இன அடையாளத்திற்கும் வன்முறைக்கும் காரணமாக இருப்பது பற்றிய கலப்புச் சான்றுகளே லாஞ்சிற்குக் கிடைத்துள்ளன. நாஜி ஜெர்மனியைப் பற்றிய அவரது கருத்தை எடுத்துக்கொள்வோம். அவரைப் பொருத்தவரை, ‘ஜெர்மனியின் தேசிய உணர்வு, ஜெர்மன் நாட்டு நலனைப் பற்றிய அதீதக் கவலையை உருவாக்கியது”, அதைக் “காக்கும்படி மக்களை நிர்பந்தித்தது”. அரசு ஒரு “இன அடையாளக் குழப்பத்தை” உருவாக்கி, யூதர்களுக்கு எதிரான உணர்வைத் தட்டி எழுப்பியது, அது “தேசிய அளவில் ஏற்பட்ட தீவிரமான இன்னல்களோடு’ இணைந்த போது, பொதுமக்களிடையே வீரியமான தேசிய உணர்வுகளை உருவாக்கி யூதர்களைக் குறிவைத்து, அவர்களால் ஏற்பட்ட தொல்லைகளை இனப்படுகொலைகள் மூலமாக தீர்ப்பது என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியது. டேனியல் ஜோனா கோல்ட்ஹாஜனின் (அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும்) யூத இனப்படுகொலையைப் பற்றிய குறிப்பை நினைவுபடுத்தும் இக்கருத்து, பல ஓட்டைகளைக் கொண்டது. ஜெர்மனியின் தேசியக் கொள்கையினாலோ, நாடுபிடிக்கும் திட்டத்தினாலோ பாதிப்படையாத போலந்து, உக்ரைன் போன்ற இடங்களில் நடந்த தீவிரமான யூத இனக்கொலைகளுக்கு என்ன காரணம்? யூதர்கள் அல்லாத கோடிக்கணக்கானவர்கள் ஜெர்மனியில் கொல்லப்பட்டது ஏன்? யூதர்களைக் கொல்லும் இந்தக் “கட்டாயத்தை” எதிர்த்த ஜெர்மனியர்களை எப்படிக் கருதுவது?

அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய லாஞ்சின் புரிதலிலும் சிக்கல்கள் உள்ளன. ருவாண்டாவில் 1994ல் ஏற்பட்ட இனப்படுகொலைக்கான அவரது விளக்கமும் சீராக இல்லை. ஒரு பக்கம், ஜெர்மனி, பெல்ஜியம் காலனி அதிகாரிகள் அவர்கள் நிர்வாக வசதிக்காக ஹுட்டு, டுட்ஸி என்ற பிரிவுகளை உருவாக்கியதை அவர் காரணமாகக் கூறுகிறார். அதேசமயம் “இனப்படுகொலைகளுக்கு முந்தைய தசாப்தங்களில் ருவாண்டாவில் இனங்களுக்கு இடையேயான எல்லைகள் மறைந்துகொண்டே வந்தன, டுட்ஸீக்களும் ஹூட்டுக்களும் ஒரே கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக, ஒரே மதத்தைப் பின்பற்றியவர்களாக, ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்ந்தவர்களாக, அடிக்கடி கலப்பு மணம் புரிந்துகொண்டவர்களாக இருந்தனர், இதனால், இன வேறுபாட்டைப் பற்றி ஹுட்டுக்கள் அதிகம் கவலை கொள்ளவில்லை” என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். இருந்தும் “எப்படி இன உணர்வு ஹுட்டுக்களுக்கு தங்களுடைய இனத்தின் நலனைப் பேணவேண்டிய கவலையை உருவாக்கியது என்பது பற்றியும், ஹுட்டுக்களை ஆக்கிரமிப்பாளர்களான டுட்ஸிக்கள் எப்படிச் சுரண்டினார்கள் அதன்மூலம் ‘ருவாண்டா’ என்ற நாட்டின் நலனை அபாயத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பது பற்றியும்” அவர் விளக்குகிறார். ஆக மொத்தம் நடந்தது என்ன? அமைதியாகக்

கூடிவாழ்வதா இல்லை விஷமப் பிரசாரத்தின் விளைவா? இரண்டாவது காரணம் கூட ஏன் ஹுட்டுக்கள் 100 நாட்களுக்குள் 800,000 டுட்ஸிக்களை கொன்று குவித்தார்கள் என்று தேவையான அளவு விளக்கமளிக்கவில்லை.

யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற வன்முறைகளோடு கூடிய பிரிவினையை ஒரு இனத்தின் நன்மைக்காக நடைபெற்ற இனப்படுகொலை என்று அவர் விவரிக்கிறார். அவர் கூறுவது “இரும்புத் திரையின்” வீழ்ச்சி, யூகோஸ்லோவியா நாட்டை “இனரீதியாக உடைத்தது”, “அரசியல்வாதிகளை இனங்களின் அடிப்படையில் அரசியல் சிக்கல்களை வடிவமைக்க வைத்து, அவர்களுடய சொந்த இனங்களின் நலனுக்காக மக்களை ஒன்று திரட்டிப் போராட வைத்தது”. இருந்தாலும், யூகோஸ்லோவியாவின் கடுமையான உள்நாட்டுப் போர்கள் போஸ்னியாவில் நடைபெற்றன. அங்கு இனரீதியாக மக்களை தனித்து அடையாளப்படுத்தும் காரணிகள் அதிகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் தோற்றத்தில் பெரிய மாறுபாடு ஏதுமில்லை, உள்ளூர் வட்டார மொழியான செர்போ-க்ரோஷியனைத் தான் அவர்கள் பேசினார்கள். (இது ஸாக்ரபில் உள்ள க்ரோட்ஸ்களும் பெல்கிரேடில் உள்ள செர்புகளும் பேசும் மொழியிலிருந்து வேறுபட்டது), அவர்கள் ஒரே மாதிரியான உணவையே உண்டனர், ஒரே “துருக்கிய” காபி, ரகிஜா (பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பிராந்தி), ஸ்லிவோவிகா (ப்ளம் ப்ராந்தி) ஆகியவற்றைக் குடித்தனர். மதம் தான் போஸ்னியாவின் மக்களைப் பிரிக்கக்கூடிய ஒரே அடையாளமாக விளங்கியது. அவர்களில் பலர் தங்களை யூகோஸ்லாவ்களாக எண்ணுவதிலிருந்து மாறி முஸ்லீம்களாகவும், செர்ப்களாகவும் (பழமைவாத கிறித்துவர்கள்), க்ரோட்ஸ்களாகவும் (ரோமன் கத்தோலிகர்கள்) அடையாளப்படுத்திக்கொண்டனர்.

ஆனால் இங்கும் தெளிவு கிடைக்கவில்லை. போஸ்னியாவில் 1990ம் ஆண்டு இன வகைகள், அவர்கள் பின்பற்றும் மதங்கள் பற்றிய சர்வே அறிவிக்கும் தகவல்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. அந்த நேரத்தில் முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 43.7 சதவிகிதமாக இருந்தனர்; செர்ப்கள் 31 சதவிகிதமாகவும், க்ரோட்கள் 17.3 சதவிகிதமாகவும் இருந்தனர். அவர்கள் பின்பற்றும் மதங்களைப் பற்றிக் கேட்டபோது இஸ்லாம், பழமைவாத கிறித்துவம், ரோமன் கத்தோலிக்க கிறித்துவம் என்று பதிலளித்தவர்கள் முறையே 16.5, 20, 15 சதவிகிதமாக மட்டுமே இருந்தனர். மக்கள்தொகையில் 46 சதவிகிதம் பேர் எந்த மதத்தையும் பின்பற்றுபவர்களாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே போஸ்னியாவில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு இனப்பிரிவினையைக் காரணமாகக் கொள்வதை ஏதோ தடுக்கிறது. செர்ப் தேசிய நலனை முன்னிறுத்த உணர்வு ரீதியாகத் தூண்டப்பட்டு, தலைமையால் திட்டமிடப்பட்டு, செர்ப் ராணுவத்தால் நிறைவேற்றப்பட்ட முஸ்லீம் பெண்களின் பாலியல் வன்முறையும் அடிமைத்தனமும் அதற்கான காரணமாக இருந்திருக்கக்கூடுமா?

ஆச்சரியப்படும் விதத்தில், தன்னுடைய வாதங்களைத் தொகுத்தளிக்கும்போது,

அந்தப் பிராந்திய நிபுணரான வி.பி.காக்னன் ஜூனியர் என்பவரின் புத்தகத்தையே அடிப்படையாக எடுத்துக்கொண்டதாகக் கூறும் லாஞ்ச், அந்தப் புத்தகத்தின் தலைப்பான ‘தி மித் ஆஃப் எத்னிக் வார்’ என்பதையோ அதில் கூறப்பட்ட வாதங்களையோ கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. காக்னன் யூகோஸ்லோவியாவைப் பிரித்த வன்முறைக்கு இனவாதத் தலைவர்கள் தத்தம் இனங்களின் அடிப்படையில் மக்களைத் திரட்டியது காரணமல்ல என்று கூறுகிறார். மாறாக, இந்தப் போரைத் தூண்டியவர்கள் முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்றும், இனரீதியாக மக்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டதாகவும் அவர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டதாகவும் கூறி, மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்ததைப் போல இங்கும் ஜனநாயகம் கோரி நடைபெற்ற அமைதிப் புரட்சியைக் கம்யூனிஸ்டுகள் குலைத்துவிட்டார்கள் என்றும் குறிக்கிறார். இனரீதியாக அதிகம் நெருக்கமாக இருந்த பகுதிகளான போஸ்னியாவிலும் அதன் தலைநகரான சரயேவாவிலும் அக்கம்பக்கத்துப் பகுதிகளை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப கடுமையான வன்முறை தேவையாக இருந்தது. இதைச் செய்தவர்கள் வெளியாட்களே.

இதைப் போலவே ஈராக்கை அமெரிக்கா 2003ல் ஆக்கிரமித்த போதும் நடந்ததை ஒருவர் கவனிக்கலாம். அந்த நிகழ்வுகளை ஊன்றிப்பார்க்கும்போது, சதாம் ஹுசைனின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததும், பிரிவினை வாதம் தலைதூக்குவதையும், ஷியா மற்றும் சுன்னி இனங்கள் போரிடத்துவங்குவதையும் காணலாம். இருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் இவ்விரு இனங்களும் அமைதியாகவே அக்கம்பக்கத்தில் வாழ்ந்துவந்தன. குறிப்பாக நகர்ப்புறங்களில், அவர்களுக்குள் திருமண உறவு இருந்ததும், அதனால் அவர்கள் பிரிவினையைப் பேணாததும் வெளிப்படை. தி நியூயார்க் டைம்ஸ் 2006ம் ஆண்டு, பாக்தாதில் மேல்தட்டு மக்கள் வாழும் மன்ஸூர் பகுதியில், இருபிரிவினரும் ஒரே மசூதியில் முறை வைத்துக்கொண்டு தொழுகை நடத்தியதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. வெளியிலிருந்து வந்த சுன்னி தீவிரவாதிகளின் கடும் வன்முறையால் – உள்ளூர் மக்களின் கூற்றுப்படி மதப்பற்றாளர்கள் போல் வந்த குற்றவாளிகள் அவர்கள்- இவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை குலைந்து ஷியாக்கள் துரத்தப்பட்டு அவர்களின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

யூகோஸ்லாவியா, ருவாண்டா, ஈராக், போன்ற இடங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள் இனப்படுகொலை நிகழ்த்தத் தூண்டவல்ல இன அடையாள உணர்வுகள் நவீனகாலத்தின் விளைவுகள் மட்டுமல்ல என்பதையே உணர்த்துகின்றன. மாறாக, வன்முறை கலந்த சண்டைகள் தலைமுறை தலைமுறையாக ஏற்பட்ட நகரமயமாதல், மதச்சார்பின்மை, இனங்களுக்கிடையே ஏற்பட்ட திருமண உறவுகள் ஆகியவற்றைக் குலைக்கின்றன.

போர்களையும் இனச்சண்டைகளையும் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல லாஞ்ச் கூறும் யோசனைகளில் ஏதோ ஒன்று விடுபடுகிறது. சில

இடங்களில் “கடிமனான பொருளாதாரச் சூழல்களையும்”, சமத்துவமின்மையையும் பற்றி அவர் குறிப்பிடுகிறார், ஆனால் பொருளாதாரப் பாதுகாப்பின்மையைப் பற்றி முறையான விளக்கங்களை அவர் அளிக்கவில்லை. அவர் கவனம் செலுத்தும் நிகழ்வுகளின் பின்புலம் குறிப்பாகச் சில விஷயங்களைக் கூறுகிறது. யூகோஸ்லாவியாவைப் போன்ற சோஷலிஸக் கூட்டமைப்பை “சூழ்ச்சி செய்யும் நிறுவனங்கள்” என்று வர்ணிக்கும் வாலரி ப்யூன்ஸ், அவருடைய ஆய்வில் நிதி ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகள் ஆகியவை தேசிய அடையாளத்தோடு இணைக்கப்படும் இடங்களில், பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடையும்போது, தோல்வியடைந்த தங்கள் பொருளாதாரக் கொள்கைகளை மறைப்பதற்காக சுயநலமிக்க தலைவர்கள் இனரீதியான உணர்வுகளைத் தூண்டுகிறார்கள் என்கிறார்.

பன்னாட்டு நிறுவனங்கள் இனங்களுக்கிடையேயான வன்முறையைத் தடுக்கின்றன என்ற லாஞ்சின் கூற்றுக்கு எதிராக, யூகோஸ்லாவியாவின் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய சூஸன் வுட்வார்டின் ஆய்வு, உள்நாட்டுத் தகராறுகளை அதிகரிப்பதில் இண்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்டின் பங்கினைப் பற்றி விளக்குகிறது. ஐ.எம்.எஃப் இன் வழிகாட்டுதலின் படி யூகஸ்லாவியாவின் பொருளாதாரம் சிக்கன நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் காரணமாக வேலைவாய்ப்பின்மை 15 சதவிகிதம் அதிகரித்து, பணவீக்கம் 50 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த அதீத பணவீக்கம் ஜூன் 1991ல் போர் தொடங்கியபோதும் தொடர்ந்தது. 1984ல் சராசரி வீட்டு வருமானம், நால்வர் அடங்கிய ஒரு குடும்பம் குறைந்த பட்ச வாழ்வாதாரத்தைத் தொடரத் தேவையான வருமானத்தைவிட 70 சதவிகிதம் குறைந்திருந்தது. 1991ல் பெல்கிரேடில் வேலையின்மையின் விகிதம் 20களில் இருந்த இளைஞர்கள் இடையே 50 சதவிகிதத்தை அடைந்திருந்தது. கூலிப்படைக் குழுக்களுக்கு ஆள்சேர்ப்பவர்கள் எதிர்பார்க்கும் சரியான வயது அது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் சோஸ்தோவஸ்கி விளக்குவதைப் போல ருவாண்டாவும் இதேபோன்ற அழுத்தத்தை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்கொண்டது. உலக வங்கி 1988ம் ஆண்டு நிர்பந்தித்த கட்டமைப்பு மாற்றத் திட்டம் வர்த்தகச் சீர்திருத்தங்கள், பணமதிப்பைக் குறைத்தல், விவசாய மானியங்களை அடியோடு ஒழித்தல், அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதல், அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. நவம்பர் 1990ல், உகாண்டாவிலிருந்து டுட்ஸிகளால் நடத்தப்பட்டு வந்த ருவாண்டன் பாட்ரியாட்டிக் ஃப்ரண்ட் தனது ஆக்கிரமிப்பைத் துவங்குவதற்கு ஆறுவாரங்களுக்கு முன், அரசு ருவாண்டன் ஃப்ராங்கின் மதிப்பை 50 சதவிகிதமாகக் குறைத்தது. உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில், 1992ல், ஐ.எம்.எஃப் பணமதிப்பை மேலும் குறைக்கச்சொல்லி வற்புறுத்தியது. எதிர்பார்க்கப்பட்டபடி, ருவாண்டாவின் காபி ஏற்றுமதியை அதிகரிப்பதற்குப் பதிலாக இந்த பணமதிப்புக் குறைத்தலால் விலைகள் வீழ்ச்சியடைந்து, காபி

உரிமையாளர்கள் 300,000 காபிச்செடிகளை பிடுங்கிவிட்டு, உணவுப் பயிர்களை வளர்க்க முயன்றனர். இந்த விவசாயச் சிக்கல்களும், வேலையில்லாத் திண்டாட்டமும் அரசில் இருந்த பலரை இனவாத உணர்ச்சித் தூண்டலில் ஈடுபடச்செய்தது. அவர்கள் தங்கள் மிதவாத ஹுட்டு எதிரிகளைக் கொன்றதுமட்டுமல்லாமல், டுட்ஸிக்களின் இனப்படுகொலையையும் முன்னின்று நடத்தினர்.

லார்ஸ்-எரிக் செடர்மானும் அவரது சக பணியாளர்களும் மேற்கொண்ட ஆய்வுகள் நாடுகளைக் குறித்த நிபுணத்துவம் பெற்றவர்களின் கருத்துகளோடு ஒத்துப்போகின்றது. அதன்படி இன-தேசியவாதக் குழுக்களின் குறைகள் பொருளாதாரச் சிக்கல்களின் விளைவுகள் சீரற்ற முறையில் பகிர்ந்துகொள்ளப்படும்போது இனப்போர்களாக மாற்றமடைகின்றன. சில குழுக்கள் இதனால் பாதிப்படைகின்றன. மாறாக, நிகழ்வுகளைப் பற்றிய தன்னுடைய ஆய்வுகளின் விளக்கங்களிலிருந்து இனப் போர்களைப் பற்றிய போக்குகளைப் பற்றிக்கூற முற்படும்போது, லாஞ்ச் தன்னுடைய கருத்துகளை வலியுறுத்த முனைவதில்லை. இதன்காரணமாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவற்றைப் பற்றிய போக்குகளை அவதானிக்கும்போது தனது முக்கிய கருத்துகளை அவர் மாற்றியமைக்கிறாரோ என்ற எண்ணம் வருவது தவிர்க்க இயலாதது. “வரலாற்றின் விரிவான போக்கு, 1800ம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து 2000ம் ஆண்டுவரை இனப்போர்கள் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இது ஒவ்வொரு வருடமும், இனப்போர்கள் கோடிக்கணக்கான மக்களை பாதித்துக்கொண்டே இருப்பதைச் சுட்டுகிறது. முடிவில், இனப்போர்கள் இதே அளவில் அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும் என்றும் அதன்பின் அது சற்றே குறையலாம் என்றும் நான் கணிக்கிறேன். இதற்கான காரணம் தற்போது நவீனமயமானவர்கள் இடையே வன்முறை குறைந்துவருவதுதான்” என்கிறார் அவர்.

அவருடைய ஒட்டுமொத்த ஆய்வும் குறைகளோடு இருப்பதால், அவருடைய கணிப்பை சரியானது என்று நாம் சொல்ல இயலாது. ஆனால், அவை அதீத நன்னம்பிக்கை கொண்டவை என்று நான் அஞ்சுகிறேன். அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சியும், சமத்துவமின்மையும் வெள்ளை தேசியத்தையும் , இனரீதியான தாழ்வுமனப்பான்மையையும் ஓரளவுக்கு உருவாக்கி, டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு அடிகோலியிருக்கின்றன. லாஞ்ச் கூறுவதுபோல் நவீனகால நிறுவனங்கள் இன அமைதியை – “உரிமையின் அடிப்படையில் அமைந்த ஜனநாயகம், திறமையான அரசுகள், பொருளாதார வளம்” பேணக்கூடியவை என்பதை நாம் நம்பலாமா?

ஃபாரின் அஃபையர்ஸ் இல், தன்னுடைய வாதங்களைத் தொகுத்தளிக்கும் புகுயாமா, “பன்னாட்டு உறவுகளை ஒருவர் உயிரியல், பாலியல் நோக்கோடு அணுகும்போது, அவை முற்றிலும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

போஸ்னியாவில் முஸ்லீம்களையும் செர்ப்களையும், ருவாண்டாவில் ஹுட்டுக்களையும் டுட்ஸிகளையும், லைபீரியாவில் தொடங்கி சியரா லியோன், ஜார்ஜியா, அஜர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் உள்ள கூலிப்படையினரையும் அவை தங்களுக்குள் பிரிந்து ஒருவரையொருவர் வெட்டிச்சாய்க்கும் ஆண்களால் நிறைந்த குழுக்களாகக் காணுவது கடினமானது. கோம்பேயில் நடந்த சிம்பன்ஸிப் போர்களை மறக்க முயல்வதைப் போன்றது அது.”

என்னுடைய யோசனை கடுமையாக முயலுங்கள் என்பதே. சிம்பன்ஸிகளைப் பற்றி நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக ஐ.எம்.எஃப்பின் சிக்கனத்திட்டங்களைப் பற்றி யோசியுங்கள்; புதிய முற்போக்காளர்கள் வளரும் நாடுகளில் உள்ள சிறு/குறு விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கும் மானியங்களை ஒழிக்க முயல்வதைப் பற்றி யோசியுங்கள்; உலகின் மக்கள்தொகையில் செல்வம் மிக்க 1 சதவிகிதம் உலகம் முழுவதிலுமுள்ள செல்வத்தின் பாதியை தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளதைப் பற்றி யோசியுங்கள். அவர்களில் ஒருவர், மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்களையும், முஸ்லீம்களையும், பெண்களையும் மற்றும் பலரையும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது அவமதித்த போதிலும், 63 மில்லியன் மக்களின் ஓட்டுக்களைப் பெற்று அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

க்ரேலிங் எழுதுவதைப் போல, மனிதகுலம் போர் என்பதையே ஒரு நாள் ஒழித்துவிடக்கூடும். ஆனால் அதை உயிரியல் ரீதியாக, ஒரு நோய் என்று கருதுவதால் மட்டுமல்ல. சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட போர்களை அடிமைமுறை, சித்தரவதைகள், கட்டாய குழந்தைத் திருமணம் போன்றவற்றை ஒழித்தது போல் அழிக்கவேண்டுமானால், மக்கள் இயக்கங்களைத் திரட்டவேண்டும். தனது சிறந்த நூலான “அமங் தி டெட் சிட்டீஸ்” என்ற புத்தகத்தில் க்ரேலிங், இரண்டாம் உலகப் போரில் குடிமக்களின் மீது குண்டுவீசப்பட்டதை எதிர்த்தவர்களின் வாதங்களை அளிக்கிறார். அவர்தான், இதுபோன்ற இயக்கத்தார்களின் நடவடிக்கைகளை, அவை அந்தச் சமயத்தில் வெற்றிபெற முடியாமல் போனாலும், அங்கீகரித்தவர். இதுபோன்ற இயக்கத்தாரல் போர்களை ஒதுக்கி, ஒழிப்பதில் வெற்றி பெற முடிந்தாலும், அவர்களுடைய வாரிசுகள் தொடர்ந்த கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். நாம் “தீவிரவாதத்திற்கு எதிரான போரில்” பார்த்ததுபோல, சித்தரவதை, சாதாரணக் குடிமக்களை குறிவைத்துத் தாக்குவது போன்ற கொடிய செயல்கள் நேர்மையற்ற தலைவர்கள் அழுத்தத்திற்குட்பட்ட சமூகங்களை ஆளும்போது மீண்டும் எழக்கூடும்.

மாத்யூ எவாஞ்சலிஸ்டா, கார்னெல் பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் ஆவார். அவர் எழுதிய புத்தகங்கள் “லா, எதிக்ஸ், அண்ட் தி வார் ஆன் டெரர் (பாலிட்டி புக்ஸ் 2008), மற்றும் “டூ தி ஜெனிவா கன்வென்ஷன் மேட்டர்?” (ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி ப்ரஸ் 2017) இணை ஆசிரியர் நினா டனென்வால்ட்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.