தணிக்கைமுறை எப்படி வேலை செய்கிறது

2014ஆம் ஆண்டில், ஒரே மாதத்தில் இரு முறை என் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. பீஜிங்கிலும் ஷாங்காயிலும் இரு வெவ்வேறு கலைக் கண்காட்சிகள் நடந்தன. அவற்றில் என் படைப்புகள் இடம்பெற்றன. ஆனால் ஓரிடத்தில் அரசு அதிகாரிகள் என் பெயரை இருட்டடிப்பு செய்தார்கள். இன்னோர் இடத்தில் கண்காட்சியை நடத்தியவர்களே அந்த வேலையைச் செய்தார்கள். பெரிதுபடுத்தப்பட வேண்டிய அளவு முக்கியமான விஷயம் அல்ல என்று சிலர் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் ஒரு கலைஞன் என்ற முறையில், என் படைப்பு என்னுடையது என்ற அடையாளத்தை நான் விரும்புகிறேன். அது என் படைப்புக்கு எவ்வளவு மதிப்பு அளிக்கப்படுகிறது என்பதைச் சொல்கிறது என்று நினைக்கிறேன் – கடந்த காலத்தின் வெள்ளங்கள் ஆற்றங்கரைகளில் விட்டுச் சென்ற கோடுகள் போன்ற தடங்கள் இவை. சிலர் இந்த இருட்டடிப்பை அலட்சியப்படுத்தக்கூடும், ஆனால் என்னால் முடியவில்லை. அதற்காக மற்றவர்களும் என்னைப் போல் கவலைப்படுவார்கள் என்ற மயக்கம் எதுவும் எனக்கு இல்லை.

சீனாவில் வாழ்க்கை போலித்தனங்கள் நிறைந்தது. மக்கள் ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடுகிறார்கள், எதையும் தெளிவாகப் சொல்லாமல் மழுப்பலாகப் பேசிக் கொள்கிறார்கள். சீனாவில் உள்ள எல்லாருக்கும் அங்கு தணிக்கை முறை உண்டு என்பது தெரியும். ஆனால் அது எதற்காக இருக்கிறது என்பதைப் பற்றி யாரும் அதிகம் பேசிக் கொள்வதில்லை.

முதற்பார்வையில், தணிக்கை முறை இல்லாதது போல் இருக்கிறது என்றாலும் அது எங்கும் நிறைந்திருக்கிறது. மக்கள் என்ன உணர்கிறார்கள், என்ன அறிகிறார்கள் என்பதை அது சலவை செய்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களுக்கு எந்தத்  தகவல்கள் கிடைக்கின்றன, அவர்கள் எதை கவனிக்கிறார்கள், எதை நம்புகிறார்கள் என்பதற்கு ஒரு கட்டுப்பாடு ஏற்படுகிறது. முதலில் அரசியல் தணிக்கையாளர்கள் பார்வைக்குப் போகிறது. அதன் பின்னரே, சீன அரசு ஊடகங்கள் மக்களுக்கு விஷயங்களைத் தெரிவிக்கின்றன. இவை சுதந்திரமான தகவல்கள் அல்ல. தேர்ந்தெடுத்து, வடிகட்டப்பட்டு, உரிய இடம் அளிக்கப்பட்ட தகவல்கள். வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களின் சுதந்திரமான, கட்டற்ற விருப்பங்களை தணிக்கை முறை நிச்சயம் குறுக்கவே செய்கிறது.

அறிவு சார்ந்த வாழ்க்கை முறையைப் பாலையாக்குகிறது என்பதுதான் தணிக்கை முறையால் ஏற்படும் தீங்கு. அது மட்டுமல்ல. யதார்த்த உலகம் எது ஆன்மீக உலகம் எது என்பதைப் பிரித்துப் புரிந்து கொள்ள உதவும் ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கிறது. அந்த அடிப்படையையே தணிக்கை முறை திரிக்கிறது. தன்னைப் புரிந்து கொள்ளும் மனிதனால்தான் சுதந்திரமாய் வாழ முடியும். தணிக்கை முறை அப்படிப்பட்ட அறிவை தனி மனிதனிடமிருந்து அபகரிக்கிறது. மனிதன் விடுதலை மற்றும் மகிழ்ச்சியை அடைவதற்குரிய சாத்தியங்களை அது துண்டிக்கிறது.

நாம் எதை ஏற்றுக் கொள்கிறோம், எதை வெளிப்படுத்துகிறோம் என்ற சுதந்திரம் பேச்சுத் சுதந்திரத்தைத் தணிக்கை செய்யும்போது பறி போகிறது. இதனால் வேறு வழியில்லாமல் மக்கள் மனதில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. எங்கெல்லாம் அச்சம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் உண்மையான மகிழ்ச்சி காணாமல் போகிறது. தனி மனிதனின் மன வலிமையும் வாடிப் போகிறது. நாம் எடுக்கும் முடிவுகள் கோணிப் போகின்றன. பகுத்தறிவும்கூட மறையத் துவங்குகிறது. ஒரு ஒழுங்கு இல்லாத, அசாதாரணமான, வன்முறைக் கும்பலாக நாம் நடந்து கொள்கிறோம்.

அரசாங்கம் எங்கெல்லாம் தகவல்களைக் கட்டுப்படுத்துகிறதோ, தடை விதிக்கிறதோ, அங்கெல்லாம் அது தன் முழு அதிகாரத்தை நிறுவுகிறது. அது மட்டுமல்ல, அது எந்த மக்களை ஆள்கிறதோ, அந்த மக்கள் அதன் அமைப்புக்கு தாமாகவே கட்டுப்படுகிறார்கள். அதன் அதிகாரத்தை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்கிறார்கள். இது வீணாய்ப் போனவர்களின் வாழ்க்கைத் தத்துவத்துக்கு வலிமை சேர்க்கிறது: அதிகாரத்தைச் சார்ந்திருப்பவர்களுக்குதான் நடைமுறை நன்மைகள் ஏற்படும். இதை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிறது.

தணிக்கை முறைக்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக் கொள்ள மிக அழகான ஒரு வழி இருக்கிறது. நம்மை நாமே தணிக்கை செய்து கொள்வதுதான் அது. அதிகாரத்துடன் கைகோர்த்துக் கொள்ள மிகச் சிறந்த வழி இது. தவிர, பரஸ்பர நன்மைகளை அடையவும் இது ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது. சின்னச் சின்ன சந்தோஷங்களுக்காக அதிகாரத்துக்கு பணிந்து போவது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று தோன்றலாம். ஆனால் இந்த அடிபணிதல் இல்லாமல், தணிக்கை முறையின் மூர்க்கத்தனமான தாக்குதல் சாத்தியமில்லை.

அதிகாரத்தின் முன் செயலற்று நிற்பது என்ற நிலையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு முன்னேறுவதுதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அவர்கள் சிரிக்கிறார்கள், வணக்கம் செலுத்துகிறார்கள், ஆமோதிக்கிறார்கள். இப்படியெல்லாம் நடந்து கொள்வது சுகமான, பிரச்சினை இல்லாத, வசதியான வாழ்க்கை முறைக்கும் கொண்டு செல்கிறது. இப்படி நடந்து கொள்பவர்கள் அடிப்படையில் தம்மைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எந்தப் பிரச்சினையிலும் ஒரு தரப்பு ஊமையாக்கப்பட்டால், மறு தரப்பின் பேச்சைக் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

அப்படித்தான் இங்கு சீனாவில் இருக்கிறது: பெரும்பான்மை மக்கள் தம்மைத் தாமாகவே ஊமையாக்கிக் கொண்டு விட்டார்கள். அவர்கள் சக்திவாய்ந்த அரசின் அடிப்பொடிகளாக இருக்கிறார்கள். வெளிப்படையாகப் பேசும் என்னைப் போன்றவர்களை வெறுக்கிறார்கள். தம்மைத் தாமே கீழ்மைப்படுத்திக் கொண்ட உண்மை தெரிந்திருப்பதால் இரட்டிப்புக் கசப்பு உள்ளவர்கள். தம்மைக் காப்பாற்றிக் கொள்வது என்பது, இப்படித்தான் தன் சுகத்தைப் பார்த்துக் கொள்வது என்றும் மாறுகிறது.

பொதுவாக தணிக்கை செய்யப்பட்டவர்கள் தணிக்கை முறைக்கு பலியாகும் அப்பாவிகள் என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், தணிக்கை முறை வெற்றி பெற மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். தணிக்கை செய்யப்பட்டவர்கள் வெளியே சொல்லப்படாத புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இதனால்தான் நான் அந்தப் பொதுக் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்.

எந்த எதிர்ப்பும் இல்லாமல் தம்மைத் தாமே தணிக்கை செய்து கொள்பவர்கள் பல வகைப்பட்ட அறச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்போதுமே எதற்கும் பலியானதில்லை. அவ்வப்போது கண்ணீரைக் துடைத்துக் கொள்வது போல் நாடகமாடினாலும் எப்போதும் பலியாகவும் மாட்டார்கள். அவர்கள் தம் அடிமைத்தனத்தை ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும்போதும் சர்வாதிகாரிகளின் இதயத்தைக் குளிர்விக்கிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீமை செய்கிறார்கள். முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொள்பவர்களின் நிலைப்பாடு காலப்போக்கில் மக்களிடையே பரவுகிறது. இதுவே நம் சமூகம் அற வீழ்ச்சி அடையவும் அடிப்படை காரணமாகிறது. பலி கொள்ளப்படுவதைத் தவிர்க்க ஒரே வழி ஒத்துழைப்பதுதான் என்று இவர்கள் நம்புகிறார்கள். அப்படியானால், மோசமான முடிவை நோக்கிய பயணத்தை இவர்கள் இருளில் மேற்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண மக்களின் ஒத்துழைப்புக்கு இயல்பாகவே இந்த அமைப்பு பரிசு வழங்குகிறது. அதன் கொடைகளுக்காக அவர்கள் யாரும் போட்டி போட வேண்டியதில்லை. கலைத்துறையில், கலாசார துறையில் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு அது போதாது. அரசு சொல்வதைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதை அவர்கள் செயல்களின் மூலம் காட்டியாக வேண்டும். சர்வாதிகாரிகளுக்கு பணிந்து போவதிலும் அவர்களின் பொதுப் பிம்பத்தைக் காப்பாற்றுவதிலும் தாமாக முன்வந்து ஆர்வம் காட்டியாக வேண்டும். மேலிடத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது அதிருப்தி ஏற்பட்டால், ஏதாவது ஒரு திட்டம், அல்லது ஒரு அமைப்பு மூடப்படும் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அமைப்பில் கலைப்படைப்புகளின் மதிப்பு உயர்வதும் வீழ்வதும் தங்கு தடையற்ற போட்டியால் அல்ல. ஊழல் மிகுந்த விழுமியங்களே அவற்றின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது. எனவேதான், உண்மையாகவே உயிர்ப்புடன் உள்ள எந்த ஒரு கலைஞனும் முட்டாள் போல் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது, வெளிப்படையாய்ச் சொல்லப்படாத நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது.

நான் எந்த ஒரு பொது மேடையிலும் பேச முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். பொது ஊடகங்களில் என் பெயர் சொல்லப்படுவதில்லை. நான் சீனாவில் எங்கும் பயணம் செய்ய முடியாது. அரசு ஊடகங்கள் என்னைத் தடை செய்து விட்டன. அங்கு என்னை விமர்சித்து தொடர்ந்து கண்டனம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அரசு ஊடகங்களில் கருத்து சொல்பவர்கள் நடுநிலையாளர்கள் போல் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் இருக்கிற இடத்தில், அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும்வரை, அது சாத்தியமில்லை. பேச்சுச் சுதந்திர உரிமை அல்லது பெரும்பாலான சீன மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றிய விஷயங்களை அவர்கள் பேச மாட்டார்கள். ஏற்கனவே ஒடுக்கப்பட்டுள்ள குரல்களை எந்த ஒரு அறவுணர்வும் இல்லாமல் தாக்குவதுதான் அவர்களின் தனிச்சிறப்பு.

நான் ஒரு மெய்நிகர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தம் விருப்பதால் என்னைப் பொருட்படுத்துபவர்கள் இடையில் மட்டுமே நான் வாழ்கிறேன். அவர்களும் இரு வகை என்பது தெளிவு. என் நடத்தை தம் வாழ்வுக்கு பொருள் சேர்க்கிறது என்று நினைப்பவர்கள் ஒரு தரப்பு. தமக்கு நலம் விளைவிக்கும் பாதைகளில் நான் தடையாய் நிற்கிறேன் என்று நினைப்பவர்கள் இன்னொரு தரப்பு. அந்தக் காரணத்தாலேயே அவர்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள்.

சீனாவில் பொதுக்கருத்துகள் வெளிப்பட நியாயமான, சம நீதி கொண்ட தளங்கள் தோன்ற வேண்டும். அப்போதுதான் நம் மனங்கள் சொற்களைப் பயன்படுத்தி சந்தித்துக் கொள்ளும் வழிகள் தோன்றும். அப்படிப்பட்ட தளங்கள் உருவாவதை நான் வரவேற்கிறேன். சமூக நீதி இதன் அடிப்படையில்தான் நிலவ முடியும். ஆனால் கடைசி முடி வரை எல்லாமே போலியாய் உள்ள இடத்தில் உண்மையைப் பற்றி கேள்விகள் கேட்கும் யாருமே பேதைகளாக, குழந்தைத்தனமானவர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள். கடைசியில் பார்த்தால், எனக்கு பேதையாக இருப்பதுதான் ஒரே வழி என்று தோன்றுகிறது. “குறுகிய மனம்” கொண்டவர்கள் என்று சொல்லப்படும் உய்குர்கள், திபெத்தியர்கள் போல் நானும் குறுகிய மனம் கொண்டவனாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

கலைஞன் என்பவன் ஒரு நகர்வை ஏற்படுத்துபவன், அரசியலில் ஈடுபடுபவன். அதிலும் வரலாற்று மாற்றங்கள் ஏற்படும் காலகட்டங்களில் அழகியல் விழுமியங்களுக்கு எப்போதுமே ஒரு உயர்ந்த இடம் இருக்கும். தனி மனித உரிமைகளை வலியுறுத்துபவர்கள் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அரசு நாகரீகமற்ற அரசு. அதற்கு எதிர்காலம் கிடையாது.

ஒருவனின் மதிப்பீடுகள் பொதுப்பார்வையில் வைக்கப்படும்போது அவனது தரம்,அறம் இரண்டும் கேள்விக்குட்படுத்தப்படலாம். அதே போலவே, அந்த சமூகம் முழுமையின் தரமும் அறமும்கூட கேள்விக்கிடமாகிறது. தனி மனித கருத்துச் சுதந்திரம் தனிச்சிறப்பு கொண்ட ஒரு உரையாடலைத் தூண்டலாம். இதன் பலனாக, இன்னும் பல்வகைகளில் தனிச்சிறப்பு கொண்ட கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படலாம். என் கலைத்தத்துவத்தின் அடிப்படை இந்தக் கோட்பாடுதான்.

சீனாவின் தணிக்கை முறை நம் அறிவையும் மதிப்பீடுகளையும் கட்டுப்படுத்துகிறது. கோட்பாட்டு அடிமைத்தனத்தை நிறுவ இது மிக முக்கியம். நுட்பமாகவும், அந்த அளவுக்கு நுட்பமாக இல்லாமலும் நிகழ்த்தப்படும் குரூரங்களைக் காட்ட என்னால் என்ன முடியுமோ அதைச் செய்கிறேன். இன்றுள்ள நிலையில், தனிப்பட்ட நபர்கள், சின்னஞ்சிறு செயல்களைக் கொண்டு மட்டுமே பகுத்தறிவுப் போராட்டத்தை நிகழ்த்த முடியும். நான் எங்கு தோற்கிறேனோ, அங்கு அதற்கான பொறுப்பு என்னையே சாரும். ஆனால் நான் பாதுகாக்க விரும்பும் உரிமைகள் எல்லாருக்கும் பொதுவானவை.

கோட்பாட்டு அடிமைகளும் கிளர்ந்து எழ முடியும். எப்போதும், இறுதியில் அவர்கள் அதைச் செய்யவே செய்கிறார்கள்.

*

மூலக் கட்டுரை: நியூயார்க் டைம்ஸில் 6 ஜூன் 2017 அன்று வெளியானது.
தமிழாக்கம்: அ.சதானந்தன்
மூலம்Ai Weiwei: How Censorship Works – The New York Times

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.