குளக்கரை


[stextbox id=”info” caption=”கற்பனை என்றாலும்…”]

புரையோடிய லட்சிய உலகு (டிஸ்டோபியா) பற்றிய புனைகதைகள் மேற்கில் நிறைய உலவத் துவங்கி இருக்கின்றன. அறிவியல் நவீனங்களின் ‘உச்ச கட்டம்’ எனக் கருதப்பட்ட சில பத்தாண்டுகளில், அவற்றில், மனித குலத்தின் பெரும் அறிவுத் தாவல்கள், அண்ட சராசரங்களில் பயணம், பல ஆயிரம் கிரகங்களில் மனித குலம் குடியேறுதல், நிரந்தரச் செழிப்பில் மானுடர் தழைத்தோங்குதல், சாவு, பிணி ஆகியனவற்றை ஒழித்து மனிதர் சிரஞ்சீவிகளாக வாழ்தல் என்று என்னென்னவோ கற்பனைகள் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிந்தைய மேலை நாடுகளில் உலவின. யூரோப்பியம் பெரும் மமதையோடு உலகை ஆளத் துவங்கிய காலம் அது. ஆனால் அந்த வளப்பம் வெகு சீக்கிரமே கரைந்து போகத் துவங்கியது. தேக்கமும், வேலையில்லாமையும், பலவகைச் சமூக நோய்களும், உளைச்சல்களும் கிளப்பிய வெறுப்பு மேற்கில் பல பகுதிகளில் பதவிக்கு வரத் துவங்கியிருக்கிறது.

இன்று மேற்கு இன்னமும் வளம் நிறைந்த நிலப்பகுதியாக இருந்தாலும், இது கானல் நீர், சீக்கிரமே இல்லாமல் போகும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் எழத் துவங்கி விட்டது. ஆசிய ஆஃப்ரிக்க லத்தீன் அமெரிக்க மக்களைப் போல அன்றாடங்காய்ச்சி வாழ்வுக்கு அவர்கள் பழகாமல் போய்  நூறாண்டு கூட ஆகி விட்டது போலிருக்கிறது. எனவே இழப்பு குறித்த அச்சம் பெருமளவு ஊதிப் பெருக்கப் பட்டிருக்கிறது. அதன் விளைவாக இருள் கனவுலகு பற்றிய அடர் சித்திரங்கள் கேளிக்கை / ஊடக வெளியில் நிரம்பி விட்டன. அப்படிப்பட்ட புனைவுகளில் பெரும் அச்சுறுத்தலாக வருணிக்கப்படும் நிறுவனங்கள் எவை என்று ஒரு பட்டியலை ஒருவர் தயாரிக்கிறார். அந்தப் பட்டியலுக்கான சுட்டி கீழே உள்ளது.

அவற்றிலிருந்து ஓரு சாம்பிளை இங்கு கொடுக்கிறோம்.

காஸுவோ இஷிகுரோ இந்தியாவில் பல வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த எழுத்தாளராக இருப்பார். இவர் புக்கர் பரிசின் இறுதிக் கட்டம் வரை வந்திருக்கிறவர். ’நெவர் லெட் மீ கோ’ என்கிற இந்தப் புத்தகத்தில் நன்கொடையாளர்களும், அவர்களின் நலனைப் பராமரிப்பவர்களும் என்று இருவகை மனிதர்கள் வருகிறார்கள். கொடையாளர்களுக்கு வாழ்வில் விதிக்கப்பட்ட  இலக்கு உடல் உறுப்புகளைத் தானம் செய்து விட்டு இறப்பதுதான். இவர்களின் உடல் உறுப்புகள் அசல் மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்யப் பயன்படுவன. இந்தக் கொடையாளர்களைப் பராமரிக்க நண்பரகளாக உலவும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இதுதான் வேலை. கொடையாளர்கள் பலி ஆடுகள் என்பது கதையின் உள்கரு. முதல் உலக மக்களின் சுக வாழ்வுக்கு, மூன்றாம் உலக மக்களின் உடல்களும், நிலமும், ஏன் வாழ்வுமே தினமும் பலியிடப்படுகின்றன என்ற இன்றைய அன்றாட நிலவரத்தை நாம் பார்த்தால் இதன் குறியீட்டுத் தளத்தில் அப்படி ஒன்றும் இருண்ட புனைவுலகு என்று ஏதும் இல்லை. அந்த உலகில்தான் நாம் ஒரு நூறாண்டுக்கும் மேலாகவே வாழ்ந்து வருகிறோம் என்பது புலனாகும். அவர் செய்திருப்பது ஒரு சாதாரணத் தந்திரம்- புனைவாசிரியர்களின் உரிமையைப் பயன்படுத்தி, மறைவாகவும், கருணையோ, மனிதாபிமானமோ ஈரப்படுத்தாத, உலர்ந்த எதார்த்தத்தை எடுத்துச் சிறிதே உருமாற்றி மேலையரிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

நவீனத்துவமும், முதலியமும் ஏன் இதர செமிதியக் கருத்தியல்களுமே கூட தனி மனித உடலையேதான் தம் போர்க்களமாக அல்லது விளையாட்டுத் தடலாக வைத்திருக்கின்றன. மேற்கு அனேகமாக எந்தக் கருத்தியலையும் தனிமனித உடலை மையமாகக் கொண்டுதான் முன்வைக்கிறது. இஷிகுரோ அந்த மரபை அதற்கு எதிராகத் திருப்பி, பல கோடி வெள்ளையரல்லாத மக்களின் உடல் உழைப்பை மேற்கு தினம் அள்ளிப் போகிறது என்பதைப் பேசாமல், அவர்கள் நடுவே கூட பாட்டாளிகளின் உலகம் கொடுமையானது என்பதைச் சுட்டாமல், அந்த ஓரம் கட்டப்பட்ட மக்களின் உடல்களை அறுவடைக் களமாகக் காட்டிப் பேசுகிறார்.

இந்த உடலுறுப்பு தானம் என்பதை நாம் ஒரு குறியீட்டுக் கதை என்று கூட எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எத்தனையோ ஆயிரம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை அவர்களுக்குத் தெரியாமலே அவர்களிடமிருந்து அகற்றி வெளிநாடுகளிலோ, அல்லது உள்நாட்டிலேயே பெரும் விலைக்கோ விற்கும் குற்றக் கும்பல்கள் இந்தியாவெங்கும் உலவுகின்றன. இவற்றில் பல மருத்துவ மனைகள், கெடுமதியாளராகி இருக்கிற மருத்துவர்கள், உள்ளூர் குற்றக் கும்பல்களிலிருந்து அடியாட்கள், தரகர்கள் என்று ஒரு ஆழ்ந்த குற்ற வலை இந்தியாவில் இருக்கிறது. இஷிகுரோவுக்குத் தான் எழுதியது கற்பனை என்ற நினைப்பு இருக்கலாம். இந்தியருக்கு இது நிதர்சன நடப்பு.

https://electricliterature.com/the-12-creepiest-companies-in-literature-3c0b0f32ccb8

உலக முதலியத்திற்கும், மேலை வளத்திற்கும் மூன்றாம் உலக உழைக்கும் மக்கள் பலியாவது பற்றி வருடம் பூராவும் நமக்குச் செய்திகள் கிட்டுகின்றன. சமீபத்துக் கார்டியன் பத்திரிகைச் செய்தி ஒன்று இது. சீனாவில் ஆப்பிள் ஃபோன்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் என்னவொரு கடின உழைப்பு சுமத்தப்படுகிறது, அந்தத் தொழிலாளிகள் ஏன் தற்கொலை செய்து கொள்ளத் துவங்கினார்கள் என்று செய்தி ஆராய்கிறது.

https://www.theguardian.com/technology/2017/jun/18/foxconn-life-death-forbidden-city-longhua-suicide-apple-iphone-brian-merchant-one-device-extract
[/stextbox]


[stextbox id=”info” caption=”ரகசியம்”]

 பெரும் வெட்டுக்கிளி மேகத்தை ஒத்த எழுச்சியோடு கிளம்பிப் பரந்த நிலப்பகுதியை சவக்காடாக மாற்றி இருக்கிற கொலைகாரக் கூட்டமான ஐஸிஸ் என்பது எப்படி அத்தனை சுலபமாக இராக்கின் பெரும்பகுதியைப் பிடித்து விட முடிந்தது என்பது நமக்கு அன்றும் இன்றும் இருந்த/ இருக்கும் கேள்வி.

இந்தப் பழம் செய்தியில் என்ன கிட்டுகிறது என்று பார்த்தோமானால், அந்தப் பிராந்தியங்களில் எங்கும் இருந்த பன்னெடுங்காலக் குழு விரோதங்களினால்தான் இந்த அசுர வளர்ச்சி சாத்தியமாகியது என்பது புலனாகும்.
சமீபத்து மேலை நாட்டுத் தலையீட்டால் திடீரென்று அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்த இராக்கிய மக்கள் குழுக்கள் இன்னமும் அதிகாரத்தைப் பயன்படுத்தப் போதுமான பயிற்சியும், ஒருமித்த மனோபாவமும் இல்லாததால், நிறைய குளறுபடிகளில் சிக்கி இருந்திருக்கின்றனர். நாடும்,பொருளாதாரமும், சமூக உறவுகளும், அன்றாட நிர்வாகமும், உள்நாட்டுச் சந்தையும் என்று எதை எடுத்தாலும் நடப்பு சாதாரண நிலையைக் கூட அடையவில்லை, பிறகுதானே வளர்ச்சி, சீரான முன்னெடுப்பு என்பதெல்லாம் நடக்கும்.

முன்னாளில் பல பத்தாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி ஒன்றுக்குப் பக்க பலமாக இருந்த இராக்கிய ராணுவத்தினர் (அனேகமாக சுன்னி குழுக்கள்) புது அரசால் தாம் ஒதுக்கி வைக்கப்பட்டு இத்தனை காலம் அடிமைகள் போல நடத்தப்பட்ட ஷியாக்கள் இன்று ஆட்சியைக் கைப்பற்றி விட்டதை ஏற்க முடியாமல் இன்னமும் இருப்பதால், புது ஆட்சியில் எங்கும் காணப்படும் செடுக்குகள், தோல்விகள், திசை மயக்கம் ஆகியனவற்றைப் பயன்படுத்திக் கொண்டு நிறைய வேலையும், வாழ்வில் திக்கில்லாத இளைஞர்களின் ஆதரவைப் பெருக்கிக் கொண்டு, ஐஸிஸ்ஸுடன் ஒத்துழைத்து நாட்டைப் பிடிக்க முயன்றதே இராக்கின் பற்பல நகரங்கள் வீழக் காரணம். இந்த அறிக்கை சொல்வது போல பாதிஸ்டுகள் எனப்படும் முன்னாள் சுன்னி ஆட்சிக் குழுக்கள் (சுதந்திர இந்தியாவின் பல பத்தாண்டுப் பித்தலாட்டமான ‘செகுலரியம்’ போல) மதத்தை அரசியலிலிருந்து விலக்கி வைத்ததான ஒரு பொய் நாடகத்தை அரங்கேற்றியவர்கள்.

அவர்கள் கொள்கை அளவிலும், அரசியல் நடத்தை அளவிலும், தனி நபர் வாழ்வு அளவிலும், இஸ்லாமியத் தூய்மையை உயர்த்தப் போவதாகப் பாசாங்கு செய்யும் கொலைகாரர்களின் கூட்டணியான ஐஸிஸ்ஸை ஒத்தவர்களே ஆனாலும், ஐஸிஸ் குழுவிற்குத் தாம் புனிதர்கள் என்ற கருத்து ஒரு போர்ப் பிரச்சாரக் கருவி.

பாதிஸ்டுகளுக்கோ பல பத்தாண்டுகளாகத் தெளிவாகத் தெரிந்திருக்கிற ஒரு விஷயம் தம் செகுலரியமோ, முற்போக்கு முகமூடியோ எல்லாம் மக்களை மதி மயக்கத் தாம் பயன்படுத்திய உத்திகள். அதைத் தாமும் நம்பத் தேவை இல்லை. அதுவும், அதிகார மமதையில் அந்த முகமூடியைக் கழற்றி விட்டுப் பொதுவில் எதார்த்தமாக தம் அதிகாரத்தைத் தெரிவித்தபடி உலவ அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறவர்கள். ஆனால் ஐஸிஸ்ஸுக்கோ நடைமுறையில் என்ன கேவலத்தையும் கைக் கொண்டிருந்தாலும், உலகளவில் தொடர்ந்து புதுப் புது மூடர்களைப் படையில் சேர்க்கும் அவசியத்தை முன்னிட்டாவது தாம் புனிதர், தம் இயக்கம் புனித இயக்கம் என்றெல்லாம் பாவனை செய்யத் தேவை இருக்கிறது. இந்த வேறுபாட்டால், பாதிஸ்டுகளும்,  ஐஸிஸ்ஸினரும் பாம்பும் கீரியுமாகவே இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால்,  சந்தர்ப்பவாதமே இரு தரப்பிலும் நடப்புக் கொள்கையாக இருப்பதால், ஒரு பொது எதிரியாக இரு குழுக்களும் கருதும் ஷியாக்களை அழிக்க, இந்த இரு குழுக்களும் ஒத்துழைத்து இராக்கிய மக்களை இன்னொரு தடவை பெரும் வன்முறையில் ஆழ்த்தி இருக்கின்றனர்.

அந்தத் தகவல்களை ஐஸிஸ் இயக்கத்தின் உள்ளிருந்து ஒரு குழு ட்விட்டரில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பதிவுகளைப் போட்டதன் மூலம் பொதுவில் போட்டு உடைத்திருக்கிறது.

இன்னும் என்னவெல்லாம் கிட்டின என்பதை 2014 ஆம் வருடத்துச் செய்தி அறிக்கையான இது வெளிப்படுத்துகிறது. இன்று இவற்றுக்கு வேறொரு பரிமாணம் கிட்டுகிறது. ஐஸிஸ்ஸின் சமீபத்தியப் பெரும் தோல்வி என்ன காரணத்தால் நேர்ந்தது என்று நாம் யோசிப்போமானால், உள்குழுப் போராட்டங்கள் ஒரு காரணமாக இருக்கும் என்று செய்தி அறிக்கை முன்பே ஊகித்துச் சொல்லி இருப்பதை நாம் உடனே காண்போம்.

http://www.thedailybeast.com/someone-is-spilling-isiss-secrets-on-twitter?source=dictionary
[/stextbox]


[stextbox id=”info” caption=”மனித உரிமையை மதியோம்”]

இந்தியாவுக்கு ‘காலிஸ்தானியர்’, மிஜோ, நாகா, காஷ்மிரிஸ்தானியர், நாக்ஸலைட்கள் ஆகியோரை எப்படி நடத்த வேண்டும், மனிதாபிமானத்தோடு சட்டப்படி மட்டுமே அணுக வேண்டும் என்று 40 வருடங்களாகப் பாடம் எடுத்தனர் யூரோப்பியர், அமெரிக்கர், குறிப்பாக பிரிட்டிஷ்/ கனெடியர்.

இன்று ட்ரம்பிய அமெரிக்காவில் முஸ்லிமாக இருந்தாலே உள்ளே விடாமல் தடுக்கலாம் என்று அதிபர் முழங்குகிறார். பாதி அமெரிக்கா ஆதரிக்கிறது. கனடாவில் இதே போலக் குரல்கள் ஓங்கி வருகின்றன. யூரோப்பில் முனைந்து ஆஃப்ரிக்க/ முஸ்லிம் அகதிகளை கடலிலிருந்து கரை இறங்க விடாமல் தடுக்க முயல்கிறார்கள். பல நாடுகள் அகதிகள் உள்ளே விடப்படக் கூடாது, எங்களால் தாங்கவியலாது, பண்பாடும் வாழ்வின் வளங்களும் அழியும் என்று புலம்பலோடு, அகதிகள் கரையிறங்காமல் தடுக்கக் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. யூரோப்பில் இன்னும் பிரிட்டன் அளவோ, அமெரிக்கா அளவோ முயற்சிகள் இல்லை என்றாலும் அங்கும் கண்காணிப்பு விரிவாக, ஆழமாகத்தான் உள்ளது.

பிரிட்டிஷ் பிரதம மந்தி(ரி) இன்று பூனைகளைச் சாக்குக்குள்ளிருந்து அவிழ்த்து விட்டு விட்டார். என்ன அது? அவர் அறிவித்திருக்கிறார்:

May: I’ll rip up human rights laws that impede new terror legislation

ஆனால் நாளையே யு.கே/ யு.எஸ்/ யூரோப்பிய ஆலோசகர்கள் இந்தியாவை சகிப்பின்மை பரவி விட்ட நாடு என்று சொல்லி, அதற்குக் கண்டனத் தீர்மானம் ஒன்றை இயற்றி, ஐ.நாவில் மேடையேற்றக் கூடத் தயங்க மாட்டார்கள்.

வெள்ளை உயிர் என்றால் சும்மாவா? வெல்லத்துக்கும் மேல் மதிப்புள்ளது. அதற்காக எத்தனை கருப்பு உயிர்களைக் கூடக் காவு வாங்கலாம். கறுப்பர்களுக்குத் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஏதும் நடவடிக்கை எடுக்கும் உரிமை உண்டா என்றால் அது எப்படி? சாவதும், நாடில்லாமல் உடைவதும், பெரும் எண்ணிக்கையில் ஒருவரை ஒருவர் கொல்வதும்தான் கருப்பருக்கு உள்ள  ‘உரிமைகள்’. தடுப்பு நடவடிக்கையா? ராணுவம் கொண்டு பிரிவினை வாதத்தை ஒடுக்குவதா? அந்த உரிமைகள் கருப்பருக்கு எதற்கு?

இதில் மேற்படி வெள்ளை நாகரீகங்களின் பொய்மைக்குத் துணை போக இந்தியாவில்தான் எத்தனை கைக்கூலிகள் உலவுகிறார்கள் என்று பார்த்தால் ஊடகங்கள் பூராவும் அந்தக் கூட்டம்தான் நிரம்பி வழிகிறது. என்ன தவம் செய்தனரோ இந்திய மக்கள் இப்படி ஒரு ‘அறிவு’களைத் தம் செய்தியாளர்களாகப் பெற?

www.msn.com/en-us/news/world/may-i’ll-rip-up-human-rights-laws-that-impede-new-terror-legislation/ar-BBCaRyG?li=BBnb7Kz
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.