கடந்து போனவர்கள்

காலை எங்கே வைப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.’என்ன குப்பை? அழுக்கு பாலிதீன் பைகள், கருகிய வாழைப்பழத் தோல், அழுகிய ஆரஞ்சு பழக் குவியல். காலி தண்ணீர் பாட்டில்கள், எச்சில் பிளாஸ்டிக் டீக் கோப்பைகள், சாப்பாடு சுற்றியிருந்த காகித,இலை கிழிசல்கள், கிழிந்த அழுக்குத் துணிகள்! கடவுளே! ஜனங்கள் எப்படித்தான் இதில் நடக்கிறார்களோ? என்னைத் தவிர இது யாருக்குமே அருவெறுப்பாக இல்லையே!எல்லாரும் எவ்வளவு இயல்பாக ,சந்தோஷமாக,இதன் பாதிப்பே இல்லாமல் இருக்கிறார்கள்? தி.ஜா. ஐம்பது வருஷத்துக்கு முந்திய கும்பகோணத்தையே அழுக்கு, குப்பை என்றாரே , இதைப் பார்த்து மாரடைத்துப் போயிருப்பார்என்று நினைத்துக் கொண்டே கொஞ்சம் மேலே பார்த்தாலாவது மாறுதலாக இருக்கும் என்று பார்த்தேன்.’அருள் இனிப்பகம். ஒரு கிலோ இனிப்பு நூறு ரூபாஎன்று பெயர் பலகை. இந்த குப்பையில், யாருக்கு இனிப்பு வாங்கத் தோன்றும்? ஒரு கிலோ ஸ்வீட்டுக்கு நூறு ரூபாதானா? எப்பிடி கட்டுபடியாகிறது?’

அப்போதுதான் அவனைப் பார்த்தேன்!

அவனேதான். பெரிய சீனு!!

முன்வழுக்கையும், கண்ணாடியும், இளந்தொந்தியும் அவனுக்குள்ளிருந்த, நான் பார்த்த சின்ன வயது சீனுவை மறைக்க முடிந்து தோற்றன.  கண்ணை சுருக்கி கொண்டு, ஈறு தெரிய சிரிக்கிற அந்த சிரிப்பும், தலையை ஆட்டிப் பேசும் விதமும் பனிரெண்டு வயது சீனுவை அவனுக்குள்ளிருந்து ரொம்ப சுலபமாக உருவிக் காட்டியது.

எங்கள் இருவருக்கும் இடையிலிருந்த இருபது அடி தூரத்தையும், நாற்பந்தைந்து வருடங்களையும் கடக்க அவனை நோக்கி நடந்தேன்.

அவனை நாங்கள் சந்தித்த அந்த அற்புதமான கோடை காலம், ஊஞ்சலின் கீரீச்சிடலாய், முற்றத்தில் வரைந்த கரிக் கோட்டு கிரிக்கெட் ஸ்டம்ப்பாய்,, நாடகத்தில் முதுகில் தொங்க விட்டுக் கொண்ட பழைய வேட்டியாய், ஆற்றங்கரையில் விளையாடிய எறி பந்தாய், கொல்லைக் கிணற்றின் பொந்திலிருந்து பறக்கும் , நீல வண்ண மீன் கொத்தியின் லாகவமான பறத்தலாய், உச்சி வெயில் வேளையின் கழுகின் கத்தலாய் விரிந்து பெருகியது.

  

எங்கள்  தாத்தா பாட்டி திருவாரூரிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருந்த ஒரு அழகான சிறிய கிராமத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு  கோடை விடு முறையின் பொழுதும் நாங்கள் அங்கு தவறாமல் போவது வழக்கம்.

ஒரு முறை போயிருந்த போது,அந்த வீட்டின் இரண்டாம் கட்டில் புதிதாக ஒரு குடும்பத்தை வாடகைக்கு வைத்திருந்தார்கள்.அந்த மாற்றம்  எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடித்ததற்கு காரணம் குடியிருந்தவர்களின் கடைசி பையன் சீனு.நாங்கள் அந்த முறை போய் சேர்ந்த அரை மணி நேரத்திலேயே , பின் கட்டிலிருந்து ஓடி வந்து,

! நீங்க எல்லாம் வந்துட்டேளா? மாமி சொல்லிண்டிருந்தா? எப்ப வந்தேள்?” என்று முற்றத்து தூணை பிடித்துக் கொண்டே, முகம் முழுக்க சிரிப்பும், உற்சாகமாகமுமாக சொன்ன கணத்திலேயே அவனை எல்லாருக்கும் பிடித்து விட்டது.

பாட்டிஇப்பத்தான் வந்தா. கொஞ்சம் சாப்பிட்டு, கீப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கட்டும், அப்புறம் பேசலாம்என்றாள்,

ஆமா, பாவம், பஸ்ஸில வெயில்ல வந்தது, டயர்டாதான் இருக்கும். என்ன ஒரு ஆறு, ஏழு மணி நேரம் ஆகுமா, மதுரையிலேந்து இங்க வரதுக்கு?” என்றான்.

அப்புறம் வான்னு சொல்றேனோல்லியோ

அந்த முழுமையான சிரிப்பு துளிக் கூட குறையாமல்கரெக்ட் மாமி! அப்புறம் வரேன்! ஏதாவது வாங்கிண்டு வரணுமா மாமி?”

இல்ல இப்போ ஒண்ணும் வாங்க வேண்டாம், குழந்தைகள் வந்துட்டான்னு சொல்லி கோபாலை வரச் சொல்லு, படுக்கை, தலைகாணியெல்லாம் தட்டிப் போடணும், கொசு வலை கட்டணும்

உற்சாகமாக தலையை ஆட்டிவிட்டு, கைகளினால், ஸ்டியரிங்க் வீலை சுற்றுவது போல பாவனை செய்தபடிபப் பாம்! பப் பாம் டுர் டுர்!” என்று சொல்லியபடியே

வரேன், பாக்கலாம், “ஓடினான்.

அவன் அப்பா, ஏதோ  பக்கத்து கிராமத்து பஞ்சாயத்து பள்ளிக் கூடத்தில் வாத்தியார் வேலை பார்த்ததாக சொன்னார்களே தவிர, அந்த மாமா எப்பவும், பாட்டி பாஷையில் சொல்வதானால், இரண்டாம் கட்டு குதிருக்கு காவலாக அதனடியிலேயே படுத்துக் கொண்டிருப்பார், “அம்மா, அப்பா என்று முனகியபடி. அவருக்கு எப்பொழுதும் வயிற்றில் வலி, ஏதொ வியாதி, வெக்கை!

அவன் அம்மா ரொம்ப சாது மூஞ்சியாய், குரலே எழும்பாமல், மெதுவாக கனிவாக பேசுவாள். அக்கம் பக்கம் மாமிகளுக்கு கூப்பிட்ட குரலுக்கு ஒத்தாசையாக இருப்பாள், குறிப்பாக எங்கள் பாட்டிக்கு.

நான்கு பிள்ளைகள்! “நல்ல வேளை! பகவான், பொண்ணைக் குடுக்கலை, இந்த பிராமணன் இருக்கற சமத்துக்கு, அதை எப்படி கரை சேக்கறது,” என்பாள் பாட்டி.

கமலத்து மாமிவாஸ்தவம்தான் மாமிஎன்பாள், அந்த மாறாத பரிதாப சிரிப்போடு.

இரண்டாமவன் எஸ்.எஸ். எல்.ஸி முடித்து விட்டு, யாரிடமோ மட்ராசில் வேலை பார்ப்பதாக பாட்டி சொன்னாள். பெரியவன் வேலை தேடிக் கொண்டிருந்தான், கிராமத்தில் இருந்து கொண்டே. சீனுவும், அவன் அண்ணாவும், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.  என் தம்பி பெயரும் சீனு என்பதால் இந்த பையனை  நாங்கள் எல்லாம் பெரிய சீனு என்று அழைப்போம்.   

சீனுஎப்போதும்சிரித்தமுகத்தோடரொம்பசாதுவாகதோழமையுடன்இருந்தான்.அவனுடைய அண்ணன்கள் எல்லாம் எங்களை எல்லாம் காட்டிலும் பெரியவர்களென்பதால் அவ்வளவாக பேச மாட்டார்கள். மூன்றாவது அண்ணன் நாராயணன் மட்டும், எப்போதாவது நான் புத்தகம் படிக்கும் பொழுது, “என்ன படிக்கறே?” என்று கேட்டுவிட்டு தான் படித்த புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும்,நல்ல ரசனையோடு பேசிக் கொண்டிருப்பான். அப்பறம் தான் அப்படி பேசியதே ஜாஸ்தி என்பது போல பல நாட்களுக்கு பேச மாட்டான். பெரும்பாலான நேரங்களில் இரண்டாம் கட்டிலிருந்து, நாங்கள் புழங்கும் முன் கட்டு முற்றம் வழியாக வாசலுக்கு போகும் பொழுது கூட தலையை குனிந்து கொண்டே யாரையும் பார்க்காமல் போய் விடுவான்.

முற்றத்தில் ஒரு பக்கத்து சுவரில், கரிக் கோடுகளை கிழித்து, ஸ்டம்பாக வைத்து விளையாடுகிற கிரிக்கெட் விளையாட்டு விளையாடுகிற சீசன் வந்தது. தெருவில் வீட்டுக்கு வீடு கிரிகெட் குழு வித விதமான பேர்களில் வலம் வந்தது. ஒரு குழுவில் அவ்வளவாக பாட்டிங்க்  வாய்ப்பு கிடைக்காதவர்கள், அரசியல் கட்சி மாதிரி மற்றொரு குழுவுக்கு தாவிக் கொண்டிருப்பார்கள். எங்கள் குழுவில் என் அண்ணா, தம்பி இருவரும் நன்றாக மட்டை அடிப்பவர்கள் என்பதால் கடைசி வரை அவுட் ஆகாமல், அடுத்தவர்க்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அவரவர் பூர்வ ஜன்ம புண்ணியம் என்றானது, கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. அப்பவும் நம்ம பெரிய சீனு முகத்தில் அதே சிரிப்புதான். நிறைய பேர் எங்கள் குழுவிலிருந்து கட்சி மாறியும் இவன் மட்டும் மாறவில்லை. இத்தனைக்கும் அவனுக்கு எப்போதாவது பாட்டிங்க் கிடைத்து ஆடப் போகிற நேரத்தில், இருட்டிவிடும். இரண்டு, மூன்று பந்துதான் எதிர் கொண்டிருப்பான்.

பாட்டிங்க்காக நம்ம டீமை நாமே விட்டுக் கொடுக்க முடியுமா? என்னிக்கு இருந்தாலும், நான் ரகு டீம்தான், அவன் என்னோட ஃப்ரண்ட் ஆச்சே!” என்றான்.

அதாவது மித்ர துரோஹம் பண்ண மாட்டேங்கிற! அதானேநாராயணன் சொல்லிக் கொண்டே வாசலோடு போனான்.

அதான்! அதேதான்! கரெக்ட்!” தன் வழக்கமான சிரிப்போடு தலையை ஆட்டினான்.

பொதுவாக  வெயில் பட்டை வாங்குகிற மத்தியான வேளைகளில்,வெளியில் விளையாட எங்களுக்கு  அனுமதி இல்லை என்பதால், நாங்கள் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். பெரிய சீனு எந்த படத்தைப் பற்றிப்பேசினாலும் ! நான் அந்த படத்தைப் பாத்திருக்கேனே: என்பான். நாங்கள் ஓரளவு நல்ல படங்கள் என்று சிலாகிக்கப் பட்ட படங்களைப் பார்த்திருப்போம் .என் அண்ணாவும், தம்பியும் ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கிற அதிகப்படி சுதந்திரத்தினால், எல்லா எம்ஜி ஆர் படங்கள், மற்றும் டூரிங்க் கொட்டகையில் வருகிற பழைய படங்கள் என்று நிறைய பார்த்திருந்தார்கள்.

ஆனால் இந்த பெரிய சீனு பார்த்ததாக சொல்லுகிற படங்களோ அவர்கள் பார்த்திருக்கிற படங்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது, ஆச்சரியமாக இருந்தது.  அண்ணாவுக்கு சில நாட்கள் கழித்து சந்தேகம் வந்தது. இவன் நிஜமாகவே பார்த்திருக்கிறானா இல்லை பொய் சொல்லுகிறானா என்று. ஆனால் பொய்யெல்லாம் சொல்லுகிற பையனாக அந்த கள்ளமற்ற சிரிப்பைப் பார்க்கும் பொழுது தெரியவில்லை,ஆனாலும் ஊர்ஜித படுத்திக் கொள்ள விரும்பினான்.

பெரிய சீனு! நீ காதலிக்க நேரமில்லை படம் பாத்துருக்கியாடா?

ஓ பாத்திருக்கேனே! முத்துராமன் கிழவன் வேஷத்தில வருவான், அப்புறம் ரவிசந்திரன் , நாகேஷ், பாலையா எல்லாரும் இருப்பாளே!

ம்பாத்திருக்கான் போல இருக்கே

சரி! கலாட்டா கல்யாணம்?

சிவாஜியும் , நாகேஷும்தானே?

சர்வர் சுந்தரம்?

ம்ம்ம் .. நாகேஷ் டம்ளர் , டவராவையெல்லாம் அடுக்கி வச்சுண்டு வருவானே?

என்னடா இது? எதை எடுத்தாலும் டாண் டாண்ணு அடிக்கறானே

எம்ஜியாரோட படகோட்டி?

ம். பாத்திருக்கேன்!வேடிக்கையான தொப்பி எல்லாம் வச்சுண்டு.தமாஷா இருக்கும்.

சட்டென்று ஏதோ தோன்றி நான் கேட்டேன் காதலிக்க நேரமில்லைல நாகேஷ் பாலையாக்கு கதை சொல்ற சீன்  எவ்வளவு நன்னா இருக்கும்?

அப்படின்னா? பெரிய சீனு புருவத்தை நெரித்தபடி கேட்டான்.

நீதான் பாத்திருக்கயேடா! தம்பி சீனு சொன்னான்.

இல்ல! தெரியல!

என்னடா எவ்வளவு முக்கியமான சீன்? நீ தியேட்டர்ல படம் பாக்கும் போது தூங்கிப் போயிட்டயா?

வேற எந்த சீன் உனக்கு பிடிச்சுது? தம்பி கேட்டான்.

அதான் முத்துராமன் கிழவன் வேஷம்!

கிழவன் வேஷத்தில பாடற பாட்டு ஜோரா இருக்கும் இல்ல இது தங்கை.

என்ன பாட்டு?

ஏய்! நீ சினிமா தியேட்டர்ல படம் பாத்தியா இல்லயா?

சினிமா தியேட்டர்னா என்னடா?”

எங்களுக்கு எல்லாம் தூக்கி வாரி போட்டது.

பின்ன எதுலடா சினிமா பாத்த?

இல்லடி, இவாள்ளாம் முன்னாடி குடியிருந்த ஊர் , இந்த கிராமத்தைக் காட்டிலும் குக்கிராமம்!  இங்கயே டூரிங்க் கொட்டகைதான இருக்கு! அங்கய்யும் அதுதான் இருந்திருக்கும் .அதுனால டெண்ட் கொட்டகையிலதான் பாத்திருப்பான். இல்லடா? என்றான் அண்ணா.

பெரிய சீனு பேசவில்லை.

சொல்லுடா! பின்ன எங்க இந்த சினிமால்லாம் பாத்த?

இல்ல , ரோடுல இருக்குமே,அதுலதான்

ரோடுல என்ன இருக்கும்?

கலர் கலரா ஒட்டியிருப்பானே!

அடப் பாவி போஸ்டரைப் பாத்துட்டா இத்தனை நாளா சினிமா பாத்தேன்ன?

அது சினிமா இல்லையா?

வாழ்க்கையில் சில சமயம் நமக்கு  எளிதாக கிடைக்க கூடிய விஷயங்களை, நாம் எவ்வளவு சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம்? அவை மறுக்கப் பட்டவர்களைப் பார்க்கும் போது ஒரு குற்ற உணர்ச்சி ! அவை மறுக்கப் பட்டவை என்று அவர்களுக்குத் தெரியாத போது நம் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகமாகி, நாம் தண்டனைக்கு உரியவர்கள் என்றே தோன்றி விடுகிறது.

எங்களுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது.பாட்டியிடம் கெஞ்சி கூத்தாடி அன்றைக்கு அவனை சினிமாவிற்கு கூட்டிக் கொண்டு போனோம், எங்கள் ஊர் டூரிங்க் டாக்கீஸுக்கு.  இதய கமலம் படம். எங்கள் அண்ணா ,தம்பிக்கு அந்த படம் போவதற்கு அவ்வளவு சுவாரசியப்படவில்லை,ஆனால் பெரிய சீனுவுக்கு சினிமா அனுபவம் கொடுப்பதற்காக பரவாயில்லை என்று வந்தனர். பெஞ்சு டிக்கட் எடுத்துக் கொண்டு படம் பார்த்தோம், படம் பார்த்ததை விட அந்த படத்தை பெரிய சீனு பார்த்ததை  நாங்கள் பார்த்தோம் என்பதுதான் சரி. அந்த கண்களிலும் , முகத்திலும் நாங்கள் கண்ட எல்லையில்லா சந்தோஷம்படம் முடிகிற வரை ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவைஇது தான் சினிமாவாடா? சினிமான்னா இப்படியடா இருக்கும்? ஜோரா இருக்குடா!” என்று சொல்லிக்கொண்டே இருந்தான், முகமெல்லாம் சிரிப்பாக.
விண்ணிலிருந்து பூமியையைப் பார்த்த  முதல் மனிதன் இப்படித்தான் சந்தோஷப் பட்டிருப்பான் என்று தோன்றியது.

அடுத்த கோடை விடுமுறையின் போது அவர்கள் வீட்டை காலி செய்து கொண்டு போயிருந்தார்கள்.

அவன் கை பேசியில் யாருடனோ பேசி முடித்துவிட்டு, என்னை தற்செயலாக பார்த்தான். முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கையில் வைத்திருந்த கனமான பையை கை மாற்றிக் கொண்டான்.

நீ வந்து பெரிய சீனுஅதாவது…. ஸாரி! உங்க பேரு சீனுவா?”

ஆமா?”

நீங்க நாப்பது, நாப்பந்தைந்து வருஷத்துக்கு முன்னாடி நல்லமாங்குடியிலே குடி இருந்தேளா?”

முகவாயை சொரிந்து கொண்டும்….. நல்ல மாங்குடியா? ஆங், இருந்தோம்என்றான்.

அங்க பட்டாமணியம் கிச்சாவையர் ஆத்து இரண்டாம் கட்டிலே குடி இருந்தேள் இல்லையா?”

லேசாக சிரித்துக் கொண்டேஹாங்! ஞாபகம் இருக்குஎன்றான் தயங்கினாற்போல்.

நாங்க அவரோட பேரன், பேத்திகள் மதுரையிலிருந்து லீவுக்கு ஊருக்கு வந்தோமே ஞாபகம் இருக்கா? எங்க அண்ணா ரகு, நான், தம்பி சீனு, உன் பேரேதான், அதுனால அவனை சின்ன சீனு, உன்னை பெரிய சீனும்போமே, அப்புறம் என் தங்கை மீனா,நினைவிருக்கா?”

ம்.. தெரியறது, சொல்லுங்கோ! சௌக்யமா?” என்றான்.

ம்.. எல்லாரும் நன்னா இருக்கோம், உங்க பெரிய அண்ணா அப்பவே மட்ராஸில வேலை பாத்துண்டிருந்தாரே? அவர் எப்பிடி இருக்கார்? அப்புறம் உன் சின்ன அண்ணா, தி. ஜா, ஜெயகாந்தன், கதையெல்லாம் படிச்சுட்டு என்னோட ரொம்ப நன்னா, ரசனையொட பேசிண்டிருப்பான்,ஸாரிபேசிண்டிருப்பாரே, அவர் எப்பிடி இருக்கார்?”

நன்னா இருக்கா!”

அம்மா, அப்பா?”

ப்ச்! அவா காலமெல்லாம் ஆயிடுத்து!” உதட்டைப் பிதுக்கினான்.

ஸாரி! கஷ்டமா இருக்கு கேக்கறதுக்கு! அப்புறம்?”

ம்……”

அப்புறம்…….நாம எத்தனை விளையாட்டு விளையாடிருக்கோம், முற்றத்தில விளையாடின கிரிக்கெட் , எவ்வளவு ஜாலி, எவ்வளவு சண்டை! அப்புறம் நாச்சாமி மாமாவாத்திலே காரியஸ்தரா இருந்தாரே சாம்பு மாமா அவர் புள்ளை சங்கரன், நாம்ப எல்லாம் நாடகம் போட்டு, தெருவே திரண்டு வந்து பாத்தது, மறக்கவே மறக்காது

ஆமா, ஆமா

நீ இப்பொ என்ன பண்றே?”

திருவாரூர்ல எலெக்ட்ரிசிடி போர்ட்ல ஒர்க் பண்றேன், ஆச்சு, இன்னும் இரண்டு வருஷத்தில ரிடையர் ஆறேன்

உன்னை பாத்ததுலே ரொம்ப சந்தோஷம், அப்புறம், நாம எல்லாம் சேர்ந்து இதய கமலம் படம் பாத்தோமே ஞாபகம் இருக்கா?”

சரியா தெரியலை! எத்தனையோ படம் பாக்கறோம் இல்லையா? பாத்திருப்போம்!”

அது இல்லைப்பா! நீ கூட அதுக்கு முன்னாடி வந்து அவ்வளவா, அதாவது…”

அவன் காலடியில் வைத்திருந்த பையை முகர்ந்த நாயை விரட்டி விட்டுஇருக்கும்! பாத்திருப்போம்! சரி !கிளம்பட்டுமா! இப்பொ பஸ் பிடிச்சாதான் ஊருக்கு கரெக்ட் டயத்துக்கு போக முடியும்! வரட்டுமா! உங்களைப் பாத்ததிலே சந்தோஷம்! வரேன்!” என்றான்.

வேகமாக நடந்து பஸ் பிடிக்கும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டான்.

நான் பார்த்தது பெரிய சீனு இல்லையோ என்று ஒரு கணம் நினைத்தேன். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.