ஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம்

ஐபிஎல் (Indian Premier League)-க்கு வயது பத்தாகிவிட்டது. நேற்றுதான் பிறந்ததுபோல் இருக்கிறது. பெண்பிள்ளையைப்போல் வேகமாக வளர்ந்து பெரிசாகிவிட்டது; சந்தேகமில்லை!

இந்த வருட ஐபிஎல் க்ரிக்கெட் ரசிகர்களிடையே வழக்கமான குதூகலத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஆரம்பித்தாலும், துவக்கத்திலேயே பல முக்கிய வீரர்களைக் காயங்களால் இழந்துவிட்டிருந்தது. விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், அஷ்வின், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, டி வில்லியர்ஸ், மிட்ச்செல் மார்ஷ் (Mitchel Marsh) என நீண்டு ரசிகர்களை சோர்வுக்குள்ளாக்கிய பட்டியலது. சில மேட்ச்சுகளுக்குப்பின் கோஹ்லி,  ஜடேஜா, டி வில்லியர்ஸ் போன்றோர் மைதானத்துக்குத் திரும்பிவிட்டனர். மற்றவர்களுக்கு இந்த யோகமில்லை. ப்ரதான ஸ்பின்னரான அஷ்வினை இழந்த புனே அணி, ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத, தென்னாப்பிரிக்காவின் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரை சேர்த்துக்கொண்டது. இதேபோல் காயத்தால் விலகிய மிட்ச்செல் மார்ஷுக்கு பதிலாக, 17-வயதான தமிழ்நாடு ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது. இந்த சாதுர்ய முடிவுகள் புனேயின் ஐபிஎல்-10 பயணத்தில்தான் எவ்வளவு வசதியாக அமைந்தன!

விராட் கோஹ்லி இல்லாத நிலையில், துவக்கப் போட்டிகளில் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் பெங்களூர் அணிக்குத் தலைமை தாங்கினார். முரளி விஜய்யை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, க்ளென் மேக்ஸ்வெல்லைக்(Glenn Maxwell) கேப்டனாக்கியது. புனே அணி ஸ்டீவ் ஸ்மித்தை இந்த ஆண்டு தன் புதிய கேப்டனாக நியமித்தது.

சிறப்பான வேக, சுழல் பந்துவீச்சு அவ்வப்போது காணக்கிடைத்தாலும், போட்டிகளின் துவக்கத்திலிருந்தே பேட்ஸ்மன்கள் தங்கள் அதிரடி அலைகளைப் பரப்பி நின்றார்கள். ஹைதராபாதில் ஆரம்பித்த முதல் போட்டி (5-4-17) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையே விளையாடப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 207 ரன்கள் குவித்து உற்சாகப் பட்டாசைக் கொளுத்திப்போட்டது. ஷிகர் தவன் 77, யுவராஜ் சிங் 62 ரன்கள் விளாசினர்.  கோஹ்லி, டி வில்லியர்ஸ் இல்லாத பெங்களூரு அணி, கிறிஸ் கேல்(Chris Gayle) விளையாடியும் இலக்கை எட்டமுடியாமல் தோற்றது. இந்தப் போட்டி தவிர இந்த வருட ஐபிஎல்-இல் 200-க்கும் அதிகமான ஸ்கோர்கள் மேலும் 7 போட்டிகளில் நிகழ்ந்தன; அதிகபட்ச ரன்கள் குவித்து ரசிகர்களைக் குதூகலிக்கவைத்த இப்போட்டிகளின் சாராம்சம் இப்படி இருந்தது:

ஏப்ரல் 11-ல் நடந்த போட்டியில் புனே அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் 205 ரன்களை எடுத்தது. துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்ஸன் சதமெடுத்துக் கலக்கினார். பதில்கொடுக்க முயன்ற புனே, திக்கித் திணறி 108-ல் காலியானது. டெல்லியின் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,    குஜராத் லயன்ஸை ஏப்ரல் 18-ஆம் தேதிச் சந்தித்தது. 38 பந்தில் 77 ரன்னெடுத்து சீறிய க்றிஸ் கேலின்  (Chris Gayle) துணையுடன்205 ரன் குவித்து அதிரவைத்தது பெங்களூர். குஜராத் 192-வரை வந்து தோற்றது. பெங்களூரின் சுழல்வீரர் யஜுவேந்திர சாஹலுக்கு 3 விக்கெட்டுகள்.

200-க்கு மேலான ரன் வேட்டையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன் பேட்டிங் வலிமையை மீண்டும் நிரூபித்துக் காட்டியது. ஏப்ரல் 28-ல் நடந்த போட்டியில் பஞ்சாபிற்கெதிராக 207 எடுத்தது. நல்ல துவக்கம் தந்த ஷிகர் தவண் 77 ரன்கள். பஞ்சாபின் கதையோ 181-லிலேயே முடிந்துபோனது. ஹைதராபாதின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கௌல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

30 ஏப்ரலில் நிகழ்ந்த கொல்கத்தாவிற்கெதிரான போட்டியில் 209 ரன்னெடுத்து அசத்தியது முதலில் ஆடிய ஹைதராபாத் அணி. கேப்டன் டேவிட் வார்னரின் அதிரடி சதம் (126) ரசிகர்களைக் சீட்டிலிருந்து எகிறவைத்தது. பதில்கொடுக்கவந்த கொல்கத்தா முடியாமல், 161-ல் ஆட்டம் இழந்தது. ஹைதராபாதின் புதியவேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நன்றாக வீசினார்; 2 விக்கெட்டுகள் அவருக்கு.

போனவருட சோகக்கதையைத் தொடராமல், இந்த வருடம் எப்படியாவது சாதிக்கவேண்டும் என்கிற முனைப்பிலிருந்த குஜராத் லயன்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸுக்கெதிரான போட்டியில் (4-5-17) 208 ரன்னெடுத்து ரசிகர்களைக் கவர்ந்தது. சுரேஷ் ரெய்னா 77 எடுத்து சிறப்பான தலைமை கொடுத்தார். ஆனால் சவாலை எதிர்கொண்ட டெல்லி அணி 214 ரன் என எகிறிப் பட்டாசு கொளுத்தியது! டெல்லியின் இளம் பேட்டிங் புயல் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 97 ரன் எனத் தூள்கிளப்பினார்.

டெல்லி அணிக்கெதிரான இன்னொரு போட்டியில் (6-5-17), மும்பை அணி 212 என ஸ்கோரில்  காட்டியது. துவக்க ஆட்டக்காரர் லெண்டல் சிம்மன்ஸ் 43 பந்துகளில் 66 எடுத்தார். எதிர்த்தாடிய டெல்லியின் நிலையோ அந்தோ பரிதாபம். மும்பையின் கரன் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, வெறும் 66 ரன்களில் டெல்லி மூட்டையைக் கட்டியது. டெல்லி ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல்-இல் வாழ்க்கை வெறுத்துப்போனது இந்த மேட்ச்சில்தான்.

போனவருடம் கடைசிவரிசையில் களைத்து நின்றிருந்த பஞ்சாப், இந்தவருடம் தன்னாலும் 200-ஐத் தாண்டமுடியும் என்று காண்பித்தது. மே 11-ல் நடந்த போட்டியில், வலுவான மும்பை அணிக்கெதிராய் 230 ரன்னெடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தியது பஞ்சாப். அதன் விக்கெட்கீப்பர் வ்ருத்திமான் சாஹா 55 பந்துகளில் 93 ரன் என பேட்டிங் ஜாலம் காட்டினார். மும்பையும்  விடாது இலக்கைத் துரத்தித் தன் ரசிகர்களை மகிழ்வித்தும், கடைசியில் 5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் தோற்றது. High-scoring thriller.

200, 230 என்றெல்லாம் அணிகளின் ஸ்கோர்கள் தவ்விய கதைகளைப் பார்த்தால் போதுமா? நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா? போனவருடம் கீழ்வரிசையில் இருந்த பஞ்சாப் இந்தவருடம் முதல் நாலுக்குள் வரக் கடும் முயற்சி செய்தது. மும்பைக்கெதிராய் 230 போட்டுக் கலக்கிய இந்த அணி, டெல்லியையும் ஒருகை பார்த்தது. ஏப்ரல் கடைசிநாளில் நடந்த ஆட்டத்தில் சூப்பர் பௌலிங், ஃபீல்டிங் என ஆவேசம் காட்டி டெல்லி டேர்டெவில்ஸை 67 ரன்களில் சுருட்டி எறிந்தது. பஞ்சாபின் சந்தீப் ஷர்மா ஸ்விங் வித்தை காட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லிக்கு இந்த அவமானம் போதாதென்று விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அசத்தியது பஞ்சாப். மார்ட்டின் கப்ட்டில் அணி எடுத்த 68-ல் 50 ரன்களை தானே எடுத்து நாட்-அவுட்டாக நின்றார்.

ஆனால் கிங்ஸ் லெவன், பஞ்சாப் அணியின் யோகம் மே 14-ல் புனே அணிக்கெதிராக நடந்த போட்டியில் தலைகீழானது. முதலில் ஆடிய பஞ்சாப் தடுமாறி 73 ரன்களில் சுருண்டது. புனேயின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் டாக்குருக்கு 3 விக்கெட்டுகள் என இதில் பங்கு. புனே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து எளிதாக வென்றது..

மேற்சொன்னதைவிடவும் படுபாடாவதியான, ஐபிஎல் சரித்திரத்தின் மிகமோசமான பேட்டிங் ஒன்று ஆரம்பநிலைப் போட்டி ஒன்றில் நிகழ்ந்தது. கோஹ்லி தலைமையிலான பெங்களூர், கௌதம் கம்பீர் தலைமை வகிக்கும் கொல்கத்தா அணிக்கெதிராக மோதும்போதெல்லாம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகம்தான். சிலவருடங்கள் முன்பு ரஞ்சிக் கோப்பை போட்டியொன்றில், கோலியும் கம்பீரும் ஒருவரை ஒருவர் அடிக்கப்போகும் அளவுக்கு ரோஷம் காட்டியது ரசிகர்களின் நினைவுக்கு அடிக்கடி வருவதே இதற்கு மூலகாரணம் – என்ன செய்வது, பழைய கதைகளை மனம் மறக்கமாட்டேன் என்கிறதே! கொல்கத்தாவில் 23 ஏப்ரலில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூருக்கெதிராக கொல்கத்தா தட்டுத்தடுமாறி 131 ரன்னெடுத்தது. சுழல்சிங்கம் யஜுவேந்திர சாஹலுக்கு விக்கெட்டுகள் மூன்று. கோஹ்லி & கோ. குஷியில் இருந்தனர். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்கையில் என்ன நடந்தது? கொல்கத்தாவின் வேக, சுழல்வீரர்களை பெங்களூரினால் சமாளிக்க முடியவில்லை. 49 என்கிற கேவலமான ஸ்கோரில் வீழ்ந்தது பெங்களூர். பத்து ஓவருக்குள் முடிந்தது அதன் கதை! வேகப்பந்து வீச்சாளர் காலின் டி க்ராண்ட்ஹோம் (Colin de Grandhomme) 1.4 ஓவர்களில் நாலே ரன் கொடுத்து மூன்று விக்கெட்டைச் சாய்த்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்னதான் பெங்களூர் இந்த வருடம் சரியாக ஆடவில்லை என்றாலும் இது அதலபாதாளம். யாரும் எதிர்பார்க்காதது. என்ன செய்வது கண்ணு,  இது ஐபிஎல் !

Play off matches – Qualifier-1: மே 16-ல் நடந்த முதல் ப்ளே-ஆஃப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்டைச் சந்தித்தது. முதலில் ஆடிய புனே அணி 4 விக்கெட்டிற்கு 162 எடுத்தது. அஜின்க்யா ரஹானே 56, மனோஜ் திவாரி 58 என எடுத்தனர் எனினும் தோனி தூள்கிளப்பிய 40 ரன்கள் (26 பந்து, 5 சிக்ஸர்) இல்லாமல் புனே 150-ஐயே நெருங்கியிருக்க வாய்ப்பில்லை. பதில் கொடுக்க இறங்கிய மும்பையின் பேட்டிங்கில் ‘தம்’ இல்லை. பார்த்தீவ் பட்டேலின் 52-ஐத் தவிர, ரோஹித் ஷர்மா, நிதிஷ் ரானா, போலார்ட் என்று செல்லும் அணியில் ஒருவரும் எடுபடாத நாளில் மும்பைக்குத் தோற்பதைத் தவிர வேறு வழி? 142 மட்டுமே எடுத்துத் தோற்றது. புனேயின் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போனவருடம் தடுமாறித் தடம்புரண்ட புனே,  இந்த வருடம் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையில் தன் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக ஆடியது.  ஐபிஎல் இறுதியில் நுழைந்து புனே ரசிகர்களுக்குப் போதையூட்டியது.

டேவிட் வார்னர், ஷிகர் தவன் ஆகியோரின் பேட்டிங், புவனேஷ்வர் குமார், முஹமது சிராஜ் ஆகியோரின் சாதுர்ய பௌலிங் என இதுவரைக் களைகட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இன்னொரு ப்ளே-ஆஃப் போட்டியில் (eliminator match) கொல்கத்தாவைச் சந்தித்தது. இடையில் புகுந்து தன் ஆட்டத்தைக் காண்பித்த மழை, கடந்த வருட சேம்பியனான ஹைதராபாத் அணியின் விதியையே மாற்றிப்போட்டது. கம்மி ஸ்கோர் மேட்ச்சில் 50-ஓவர் விளையாடியும் ஹைதராபாத் அணியால் 128-தான் எடுக்க முடிந்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் நேத்தன் கோல்ட்டர்-நைல்(Nathan Coulter-Nile) மற்றும் உமேஷ் யாதவ் சிறப்பாக வீசி முறையே 3, 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். கொல்கத்தா அணி ஆடுமுன் வந்த மழை, கணக்கை வேகமாக மாற்றியது. நீண்ட மழை-இடைவெளிக்குப்பின் திரும்பிய கொல்கத்தாவிற்கு 6 ஓவர்களில் 48 என நிர்ணயிக்கப்பட்டது; டிஎல்எஸ்(Duckworth-Lewis-Stern)-முறையின் கைங்கர்யம். வெற்றிக்குப் பாடுபடவேண்டிய அவசியமில்லாமலே கொல்கத்தாவின் தட்டில் வந்து விழுந்தது பழம். ஐபிஎல் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிய ஹைதராபாத் அணி, மழைத்தேவனின் சூழ்ச்சியால் இந்த வருட ஐபிஎல்-ஐ விட்டுப் பரிதாபமாக வெளியேற நேர்ந்தது.

Qualifier-2: மேற்சொன்ன எலிமினேட்டர் போட்டியில் வென்றதால் கொல்கத்தா, மும்பை அணியை க்வாலிஃபையர்-2 போட்டியில் சந்தித்தது. இதுவரை அபாரமாக ஆடிவந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு இந்தப் போட்டியில் என்ன வந்தது? மும்பையின் பந்துவீச்சாளர்களுக்குமுன், கொல்கத்தாவிற்கு விழிபிதுங்கியது. ரன்கள் வருமுன்னாலேயே க்றிஸ் லின், கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா என்று  வரிசையாக நடையைக் கட்டினர். சூரியகுமார் யாதவின் 31-தான் டாப்-ஸ்கோர். வேகப்பந்துவீரர் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) 3 ஓவரில் 3 விக்கெட், ஸ்பின்னர் கரன் ஷர்மா 4 ஓவரில் 4 விக்கெட் என மிரட்டி, கொல்கத்தா வீரர்களைப் புரட்டி எடுத்தனர். கொல்கத்தா 107 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஐபிஎல்-10-ன் இறுதிக்குச் செல்ல, 108 என்கிற இலக்கைத் துரத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இத்தகைய முக்கியமான போட்டியில் லெண்டல் சிம்மன்ஸ், பார்த்தீவ் பட்டேல், அம்பத்தி ராயுடு ஆகிய  மும்பைப்புலிகள் தடுமாறி வீழ்ந்தனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 26 எடுத்தார். இறுதியில், க்ருனால் பாண்ட்யா 30 பந்துகளில் 45 ரன்கள் எனக்காட்டிய அதிரடி கைகொடுக்க, மும்பை வென்றது; ஐபிஎல்-10 ஃபைனலுக்குள் ப்ரவேசித்தது.

புனே-மும்பை மோதிய ஐபிஎல் இறுதிப்போட்டி: மே 21-ஆம் தேதி ஹைதராபாதில் நடந்தது ஐபிஎல்-10-ன் இறுதிப்போட்டி. டெண்டுல்கர் ஆட்ட ஆரம்பத்தில் மைதானம்பற்றிச் சொல்கையில்,  அதிகபட்ச ஸ்கோர் தரும் மைதானம் என்றார். ஆனால் அப்படி நடக்கவில்லை. முதலில் ஆடிய மும்பை அணி சரியான துவக்கம் பெறவில்லை. ஆரம்பநிலை ஆட்டங்களில் வழக்கமாக நன்றாக ஆடிய நிதிஷ் ரானாவுக்கு பதிலாக அம்பத்தி ராயுடு ஆடவந்தார். புனேயின் பௌலிங்கை ஜெயதேவ் உனாத்கட்டும், ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் ஆரம்பித்துவைத்தனர். அதிசிக்கனமாக வீசிய சுந்தர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். படேல், சிம்மன்ஸ், ராயுடு வந்தனர்; சென்றனர். உனாத்கட் துவக்க ஆட்டக்காரர்களை அனாயாசமாகத் தூக்கிவிட, ஆடம் ஜாம்பா(Adam Zamapa), டேனியல் க்றிஸ்டியன்  (Daniel Christian) தலா 2 விக்கெட் என சாய்க்க, புனேயின் திறமையான பந்துவீச்சில் மும்பை விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தது. ரோஹித் ஷர்மா 24, க்ருனால் பாண்ட்யா 47 – முக்கிய ஸ்கோர்கள். 129 ரன்னில் ஆட்டமிழந்து தவித்தது மும்பை.

புனே அணிக்கு ஐபிஎல் கப் தன் கைக்குவந்துவிட்டது என்கிற நினைப்பு வந்துவிட்டதோ! மும்பைக்கு சிறப்பாகத் துவக்கம் தரும் ராஹுல் த்ரிப்பாட்டி (Rahul Tripathi) இந்தமுறை ஏமாற்ற, அஜின்க்யா ரஹானே 44 ரன் எடுத்து ஆரம்பித்துவைத்தார். மும்பை மிட்ச்செல் ஜான்சன், பும்ரா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களைக்கொண்டு கடுமையாகத் தாக்க, ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் புனே தடுமாறியது. ’ஃபீல்டிங்கிற்கேற்றபடி நான் பந்துவீசுவதில்லை; மூளையில்லாத பௌலர் நான்!’ என்று ஒரு நேர்காணலில் சொன்ன ஜான்சன் இந்தமுறை என்ன செய்தார்?  ஸ்மித் வேகப்பந்துகளைப் பாய்ந்து பாய்ந்து தட்டிவிட, ரோஹித் ஜான்சனைக் கூப்பிட்டு ‘இவனுக்கு வேகத்தைக் குறைச்சுப்போடப்பா!’ என்றிருக்கிறார். சொன்னபடி கேட்ட ஜான்சனுக்கு ஸ்மித்தின் விக்கெட் கிடைத்தது. தோனியை பும்ரா தீர்த்துக்கட்ட, பின் வந்த மனோஜ் திவாரியை வீட்டுக்கு அனுப்பினார் ஜான்சன். இருந்தும் இலக்கை நோக்கி இன்ச், இன்ச்சாக நகர்ந்தது புனே.

ஐபிஎல் 10-ன் கடைசிப் பந்தை வீசினார் ஜான்சன். புனே 126/6. வெற்றிக்குத் தேவை 4 ரன்கள். முழு லென்த்தில் நேராக வந்த பந்தை ஸ்கொயர்லெக் திசையில் அடித்தார் க்றிஸ்டியன். பௌண்டரி? இல்லை. தடுமாறிய ஃபீல்டர் சுஜித் பந்தை பௌண்டரி ஆகாமல் எப்படியோ தடுத்து பட்டேலுக்கு திருப்பி வீசினார். இதற்குள் 2 ரன்கள் எடுக்கப்பட்டு மூன்றாவது ரன்னுக்காகப் பாய்ந்துகொண்டிருந்தார் வாஷிங்டன் சுந்தர். ஆனால் அவரை முந்திக்கொண்டு விக்கெட்கீப்பரின் கையில் பந்துவந்துவிட பெயிலைத் (bails) தட்டிவிட்டு  புனேயின் கதையை முடித்தார் பார்த்தீவ் படேல். அப்பாடி! ஐபிஎல்-10 கோப்பை மும்பையின் கையில் வந்து உட்கார்ந்தது ! மைதானம் குதூகலத்தில் எகிறிக் குதித்தது.

சிறப்பாக விளையாடிய ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட், இறுதியில் ஒரே ரன்னில் தனக்குக் கிடைத்திருக்கவேண்டிய முதல் ஐபிஎல் கோப்பையைத் தவறவிட்டது புனே ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் பொதுவாக க்ரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த இறுதிப்போட்டி ஒரு edge of the seat excitement. அடுத்த ஐபிஎல் வரும்வரை இதைப் பேசிக்கொண்டிருக்கலாம். 2018 ஐபிஎல்-இல் கதையும் மாறும்; காட்சியும் மாறும்!

ஐபிஎல் 10,  தொடரினூடே, இன்னும் என்னென்னவற்றையெல்லாமோ நிகழ்த்திக்காட்டியது சூப்பர்-ஓவர் மேட்ச் ஒன்றையும் ரசிகர்களுக்குத் தந்து களிப்பூட்டியது அது. ஏப்ரல் 29-ல் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் குஜராத் அணி 153 ரன்கள் எடுத்தது. பதில் கொடுக்கமுயன்ற மும்பை அணி 153-ல் ஆல்=அவுட் ஆகி, போட்டியை சூப்பர்-ஓவருக்குத்தள்ளிச் சென்றது.  ஜேம்ஸ் ஃபாக்னர் வீசிய சூப்பர் ஓவரில் 11 ரன் எடுத்தது மும்பை. ஜஸ்ப்ரித் பும்ராவின் அபார பந்துவீச்சினால் குஜராத் 6 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.

ராஜ்கோட்டில், ஏப்ரல் 7 அன்று குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன்  மோதிய இந்த வருடத்தின் மூன்றாவது போட்டியில், கேப்டன் சுரேஷ் ரெய்னா 68 நாட்-அவுட், தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 47 என எடுக்க, குஜராத் நன்றாகத்தான் ஆடியது. 183 என்கிற கௌரவஸ்கோரை அடித்த குஜராத்தை, கொல்கத்தா விக்கெட் ஏதும் இழக்காமலேயே வென்று கொக்கரித்தது குஜராத் ரசிகர்களைக் கடுப்பேற்றியது!  கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர் க்றிஸ் லின் 41 பந்துகளில் 93 ரன்கள் என ஆவேசம்காட்டி பார்ப்போரைக் கிறுகிறுக்கவைத்தார். கௌதம் கம்பீர் 76.

ஐபிஎல்-10 இதோடு விடவில்லை. ஒரே நாளில் நடந்த இருபோட்டிகளில் இரண்டு பௌலர்கள் ஹாட்ரிக் விளாசிய அதிசயத்தையும் காண்பித்தது! ஏப்ரல் 14-ல் நடந்த பெங்களூர்-மும்பை போட்டியில் பெங்களூர் அணியின் சுழல்பந்து வீரர் சாமுவேல் பத்ரீ முதல் ஹாட்ரிக்கை எடுக்க, அடுத்த மேட்ச்சில் குஜராத்தின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை (Andrew Tye), புனே அணிக்கெதிராக ஹாட்ரிக் எடுத்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

இந்தவருடத் தொடரில் ஐந்து சதங்கள் விளாசப்பட்டன. டெல்லியின் சஞ்சு சாம்ஸன், ஹைதராபாதின் டேவிட் வார்னர், புனே அணியின் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பஞ்சாப் அணியின் ஹஷீம் ஆம்லா ஆகியோர் சதமடித்த ஜாம்பவான்கள். ஆம்லா ஒருபடி மேலேபோய் இரண்டு சதங்களை விளாசி ரசிகர்களைக் கிளுகிளுக்கவைத்தார்.

ஐபிஎல்-10, டி-20 மேட்ச்சுகளில் ஸ்பின் பௌலர்களைப் பொதுவாகக் கேப்டன்கள் எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்தது. குறிப்பாக கம்பீரின் கொல்கத்தா அணி. என்னதான் கம்பீர், உத்தப்பா, லின் (Chris Lynn) ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், குல்தீப் யாதவ், சுனில் நரைன், பியுஷ் சாவ்லா ஆகிய ஸ்பின்னர்களின் தாக்கம் கொல்கத்தாவின் வெற்றிகளில் நன்றாகத் தெரிந்தது. புனே அணியில் ஆரம்பத்திலிருந்தே இம்ரான் தாஹிரும், இறுதிப் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தரும் முக்கிய பௌலர்களாகத் திகழ்ந்தனர். அதேபோல் ஹைதராபாத் அணியில் ரஷீத் கான். பெங்களூர் அணியில் யஜுவேந்திர சாஹல், சாமுவேல் பத்ரீ(Samuel Badree), பவன் நேகி ஆகியோரும். மும்பை அணியில் க்ருனால் பாண்ட்யா, கரன் ஷர்மா, டெல்லிக்கு அமித் மிஷ்ரா – ஆகியோரும் அவரவர்களின் அணிக்கு பயனுள்ள பங்களிப்பை செய்திருக்கின்றனர்.

முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் என சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் புவனேஷ்வர் குமார் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்டின் ஜெயதேவ் உனாத்கட்டை (Jayadev Unadkat) முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். அபாரமான ஸ்விங் பௌலிங் திறமையை வெளிப்படுத்தி எதிரிகளின் விக்கெட்டுகளை சூறையாடியவர்கள்.

ஐபிஎல் 10-ன் சிறந்த புதுமுகங்கள் யார்? இவர்களைச் சொல்லலாம்: மும்பையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் நிதிஷ் ரானா, புனேயின் துவக்க ஆட்டக்காரர் ராஹுல் த்ரிப்பாட்டி மற்றும் ஆஃப்-ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், டெல்லியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் ரிஷப் பந்த் (Rishab Pant), ஹைதராபாதின் சுழல்வீரர் ரஷித் கான் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், குஜராத்தின் பாஸில் தம்பி (Basil Thampi) – பந்தை 143-145 கி.மீ. எனப் பறக்கவிட்ட வேகப்பந்துவீச்சாளர்.

Sensations of IPL 10 என ரஷீத் கானையும், ரிஷப் பந்தையும் குறிப்பிடலாம். இந்த ஐபிஎல்-இன் இன்னுமொரு ‘முதல்’, ஆஃப்கானிஸ்தானின் வீரர்கள்  பங்கேற்றது. தன்மீது நம்பிக்கை வைத்து ஏலமெடுத்த ஹைதராபாத் அணிக்கு சிறப்பான பங்களிப்பைச்  செய்தார் ஆஃப்கன் பதின்மவயது சுழல்பந்துவீரர் ரஷீத் கான். அபாரம். (ஐபிஎல்-இல் பங்கேற்ற இன்னுமொரு வீரர் முகமது நபி). சமீபத்தில் முடிந்த விண்டீஸ் (வெஸ்ட் இண்டீஸ்)-க்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் விளையாடிய ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்து விண்டீஸை கதி கலங்கவைத்ததோடு, உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இந்த ரஷீத்,  ஐபிஎல் சாதனை கொடுத்த உத்வேகம் அவரில் வேலை செய்கிறது – சந்தேகமில்லை.

வாஷிங்டன் சுந்தரைப் போலவே, ரிஷப் பந்த்  இந்தியாவின் 2016-ஆம் வருட Under-19 உலகக்கோப்பை அணியைச் சேர்ந்தவர். அதிரடி மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன். ஐபிஎல்-10-இல் மிகச் சிறப்பான ஆட்டத்திறனைக் காண்பித்திருக்கிறார் பந்த்.  ’இவர் விளையாடுவதைப் பார்க்கையில் யுவராஜ், ரெய்னாவின் கலவையோ எனத் தோன்றுகிறது’ என்கிறார் டெண்டுல்கர். ஒரு-நாள், டி-20 ஆட்டங்களில், இந்தியாவின் எதிர்கால அதிரடிவீரராக இவர் மலர்வாரா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.