ஊசல்

கல்லூரி நூலக கடிகாரத்தின் ஊசல், சட்டியில் பயறை வறுக்கும் கரண்டியென இடவலமாக ஆடிக்கொண்டிருந்தது. அனைத்து நொடிகளும் ஒன்றேயான கால முடிவிலியின் சாட்சியென நினைத்த அமுதா சன்னலை ஒட்டியிருந்த வட்டமேசையில் புத்தகத்தை வைத்து இடது முழங்கையை ஊன்றி கன்னத்தில் கைவைத்து, வலதுகையால் பக்கங்களை புரட்டினாள் .

“ ‘இந்த அர்த்த ராத்திரியில் என்னடா தெருவில் நடை?’ …நாயைப்பார்த்த பாபு வாயை முடிக்கொண்டான்.” என்ற வரியைப் படித்துவிட்டு சன்னலுக்கு வெளியே பார்த்துப் புன்னகைத்தாள். புல்வெளியில் இருந்த மரம் மஞ்சளாய் கொழித்திருந்தது.பெயர் என்ன?…மஞ்சள் சரபுங்கை என வைத்துக்கொள்ளலாம்.

கையிலிருந்த காகிதக்குறிப்பில் இந்த மாதத்திற்குள் வாசிக்க வேண்டுமெனக் குறித்த புத்தகப்பட்டியலில் கால்பாகம் கூட முடிக்கப்படாததைக் கண்டு காகிதத்தை மேசையில் வீசினாள்.

கல்லூரியில் சேர்ந்து இந்த நான்குமாதங்களில் மனதினுள்ளே சிலாம்பாக அருவிக்கொண்டேயிருப்பது ‘எல்லாம் போச்சு’ என்ற ஏக்கம்.இந்தப் பாடம்… நுண்ணுயிரியல் என்ற பெயரே ஒட்டவில்லை.

மனதை எந்தக் காரணம் கொண்டும் தட்டிக் கொடுக்க முடியவில்லை.தனக்குப் பிடித்தப் பாடப்பிரிவின் வகுப்பறையைக் கடக்கையில் இன்னதென்று சொல்லமுடியாத உணர்வு. தன் வகுப்பறையில் இருக்கையில், “இந்த நாடகம் எதன் பொருட்டு?” என்று மனம் கேட்டுக் கொண்டே இருந்தது.

தோழிகள் அவர்களுக்குரிய ஏதோ ஒருபொழுதில் மனம் விடுபட்டிருக்கையில் தன்னை எப்போதுமே ஏதோ ஒரு சுமை அழுத்திக் கொண்டிருப்பதாகவே இருந்தது அவளுக்கு. இதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பள்ளியில் போல இதைத்தான் என்று படிக்கலாம். தடுப்பது எது? என்று நினைத்துக் கொண்டிருந்த அமுதா, ‘டங்டங்’ என்ற கடிகார அறிவிப்பு ஓசை கேட்டுத் திரும்பினாள்.

ஐந்து மணியைக் கண்டவுடன் வேகமாக எழுந்து, “ஷேக்ஸ்பியரின் நாயகி என்ன செய்யறாளோ?” என்று நினைத்துக் கொண்டவளாக புத்தகத்தை வைத்துவிட்டு கையெழுத்திடுகையில் நூலகர், “என்ன சீக்கிரமே?” என்றவருடன் பேசிவிட்டு கண்ணாடிக் கதவைத் திறந்து நடைப்பாதையைக் கடந்து படியேறுகையில், கல்லூரி அமைதியிலிருந்தது.

தண்ணிர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூச்சை இழுத்துவிட்டாள். முதல் தளத்திலிருந்த நுண்ணுயிரியல் ஆய்வகத்தினுள் நுழைந்து வெள்ளைஅங்கியை மாட்டித் திரும்புகையில், டெஸ்டிமோனா, “மெய்மறந்து நாவலில் இருப்பன்னு நெனச்சேன்,” என்று புன்னகைத்தாள்.

“நீ இந்தக்கண்ணாடிக் கூண்டுலயே கிடக்கறது மாதிரிதான். தெத்துப் பல்லுக்கேத்த எத்துப் பல்லுன்னு…இந்தப்பாடத்துக்கு உருகன்னு நீ ஒரு ஆளு,” என்றபடி அமுதா பேனாவையும்,கைக்குட்டையையும் பாக்கெட்டில் செருகிக்கொண்டு கழுவு தொட்டியிலிருந்த சோப்பைக் கையிலெடுத்தாள்.

“வால்யூ தெரியாம பேசற. கதை கத்திரிக்காயெல்லாம் படிச்சு என்ன? வேஸ்ட். யு.வி. ரூம்ல லாம்ப் ஐ இப்பதான் போட்டேன்,” என்றபடி நாற்காலியில் மோனா அமர்ந்தாள்.

“நாக்குக்கு நாக்கு போட்டாச்சு. நோ ஆர்க்யுமெண்ட்ஸ்,”என்று மோனா சொல்ல, சிரித்தபடி இருவரும் நகரும் நாற்காலியில்  நகர்ந்து போட்டி வைத்துக் கொண்டிருக்கையில் கண்ணாடிக் கதவில் நிழலாட அமைதியானார்கள்.

மூன்று வாரத்திற்கு முன்பு வளர்தளதட்டில் (petri plate) ஊட்டத் திரவத்தை (Nutrient broth) ஊற்றி கதிர் வீச்சறையில் சிறிதுநேரம் வைத்ததும் அது வடிகஞ்சி தயிரானால் இருப்பதைப்போன்று கெட்டியானது. வெளியில் கொண்டுவந்து காற்றில் நீட்டி சிறிது நேரத்தில் சீர்வெப்பப் பெட்டியில்(Incubator) வைத்து இரண்டுநாள் சென்று எடுக்கையில் பலவிதவண்ணங்களில் நுண்ணுயிர்கள் வளர்ந்திருந்தன. அதைக்கண்டு, “இத்தனையும் காற்றிலிருக்கு..ம்..ம்..,” என்று பிள்ளைகள் பேசிக்கொண்டார்கள்.

இரண்டு வாரத்திற்கு முன்பு இ.கோலை என்ற பேக்ட்டீரியத்தின் தூயஇனத்தை (Culture) சோதனைக்குழாயிலிருந்து கண்ணாடித் தட்டில் வளர்க்கும் முயற்சியில் வளர்ந்த நுண்ணுயிர்க்கூட்டங்களை பார்வையிட்ட முதுநிலை மாணவர்கள்,

“ஸ்டாஃபிலோகாக்கஸ் (Staphylococcus)…?”

“ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus…?!”

“ஃபங்கல் காலனிஸ் (Fungal colonies) கூட இருக்கு .”

“இதென்ன..?!” என்று விவாதிக்கும்படி ஆயிற்று.

“காத்துல இருந்ததெல்லாம் இதுலயும் இருக்கு?!” என்ற அமுதாவிடம்,

“ம்..உங்க கையில இருந்தது.  ஆல்கஹாலை வச்சு யூஸ் பண்ற எல்லாத்தையும் துடைக்கணும். மொதல்ல கையத் துடைக்கணும். ஸ்டெரிலைஸேஷன் பண்ணின பொருட்களை காற்றில வைக்கக் கூடாது…” என்று அடுக்கிக்கொண்டே போனார் விரிவுரையாளர்.

“இதென்ன குளிக்காதமாதிரி, கை கழுவாத மாதிரி பேசறாங்க. எங்கவீட்ல இல்ல எங்கத் தெருவிலயே நாந்தான் சுத்தக்காரி,“என்ற வித்யாவின் கண்ணாடித்தட்டில் அதிக வண்ணங்கள் இருந்ததைக் கண்டு சிரித்தார்கள்.

இந்தவாரம் “ஈ.கோலை (E.coli) யோட மோடிலிடி (motility) டெஸ்ட்…யாராவது ரிஸல்ட் காட்டறீங்களான்னு பார்ப்போம்,” என்ற விரிவுரையாளர் ஏமாந்துபோனார்.

“இந்த வருஷம் பாட்ச் சரியில்ல .. இதுங்கள வச்சு என்ன பண்ண?”என்று அவர் சென்றதும் பிள்ளைகள், “அப்பாடா .. முடிஞ்சது..”என்று கிளம்பினார்கள்.

“அது இடப்பெயர்ச்சி செய்யுந்தானே? நாளைக்கு சாயுங்காலம் ஃப்ரீ லாப் (free lab) . யாருவேணுன்னாலும் வரலாம்…நீ வரீயா?” என்றாள் மோனா.

“லைப்ரரிக்குப் போகணும்…ம்…சரி வர்றேன்,” என்று இன்று வந்திருக்கிறாள் அமுதா.

“நாமதான் சரியா செய்யலயோ..ரிஸல்ட்டே வரலை”என்றாள் மோனா.

“ரிஸல்ட்டுன்னு சொல்ல முடியாது. அது உயிருள்ளது தானே.?. அதனால கிருத்துவம் பிடிச்சதாக்கூட இருக்கலாம். சரியா அது இயல்பை பிடிக்க முடிஞ்சா பின்ன எப்பவும் தப்பாது…”

“என்ன…நாவல்ல படிச்சியா?”

“இல்ல மோனா…தோணுச்சு. ஸ்பெஸிஃபிக் காரக்டர் ஆஃப் அ மைக்ரோஆர்கனிஸம்னு (Specific character) கிளாஸ்ல அத்தன தடவ சொல்றாங்கல்ல? அதனால சொன்னேன். நம்ப நேச்சர் நொந்து பெத்து, அலைஞ்சு வளத்தவங்களுக்கேப் புரியல! இதுங்கள நம்ம புரிஞ்சி, கண்ணுக்குத் தெரியாத அதுகளத் தெரிஞ்சி, அதுக நடக்கறத ஓடறதக் கண்டுபிடிச்சு மார்க் வாங்கி…”

“ஓகே ஓகே உன் ஹீரோ என்ன பண்றார்?” என்றாள் மோனா.

“என்ன?!”

“கதையிலப்பா…”

“ஒரு நிமிசம் கும்பி கலங்கிருச்சு. எனக்கேத் தெரியாம யாரோடவாவது கோத்துவிட்டு கதை வசனம் பேசறீங்களோன்னு தோணிடுச்சு. பாபுவா? கதை கும்பகோணத்திலருந்து…சொந்த ஊருக்குப் போயிடுச்சு. குட்டிப்பையனா இருந்த கதை வருது..”என்று புன்னகைத்தாள்.

வெய்யில் இறங்கிக்கொண்டிருப்பது சன்னல்வழி தெரிந்தது. ஆல்கஹாலில் கைகளைத் துடைத்து கையுறைகளை மாட்டிக்கொண்டு கதிர் வீச்சறையின் விளக்கை அணைத்துக் காத்திருந்தார்கள்.

கதிர் வீச்சறைக்குள் சென்று குழிக் கண்ணாடிப்பட்டையில்(Cavity slide) நுண்ணுயிர்த் துளியை (broth culture) வைத்த கண்ணாடித் தாளை(cover slip) ஒட்டி வெளியே எடுத்துவந்தார்கள்.

உள்ளே வந்த ஆய்வகஉதவியாளர், ”யு.ஜி ஃபர்ஸ்ட் இயர்தானே?! எதுக்கு இப்படி துறுதுறுன்னு அலையறீங்க?சுத்தமா எடுத்து வச்சிட்டு ஆறுமணிக்கு கிளம்பிடணும். ஸீனியர்ஸ் வருவாங்க,”என்றபடி வெளியே சென்றார்.

கண்ணாடிப் பட்டையைத் தூக்கிப்பார்த்து,“தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் முடிவிலி உயிர்கள் கொண்ட  ஒற்றைத்துளி…அட நம்ம கையில பூமி..,” என்ற அமுதாவை முறைத்த மோனா,

“கடுப்பாயிருவேன். ரிஸல்ட் வரணும். சும்மா ஆடிக்கிட்டு இருக்காத. ஆட்டாம கையில வச்சிரு..” என்றபடி சென்று நுண்ணோக்கியை இரண்டு கைகளிலும் குழந்தையென எடுத்துவந்தாள்.

“பேருக்கேத்த சரியான நாடகக்காரி…சிரிக்கவும், முறைக்கவும், கண்ண உருட்டவும்…யம்மாடி..இவளோட..,”என்ற அமுதா, மோனாவின் பார்வையைக் கண்டு வாயை மூடிக் கொண்டாள்.

சூரிய ஒளி விழும் சன்னலின்புறம் நுண்ணோக்கியை வைத்து ஆல்கஹால் நனைத்த பஞ்சில் துடைத்து பொருளருகு ஆடிக்கு கீழே கண்ணாடிப் பட்டையைப் பொருத்தினாள் மோனா.

கண்ணருகு ஆடியை மீண்டும் ஆல்கஹால்பஞ்சில் துடைத்து ஒற்றைக்கண்ணால் உற்றுப் பார்த்தபடி வலது கையால் ஆடிகளை நகர்த்தும் திருகியை திருகிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் ஆடிகளைத் துடைத்தாள்.

“ஆவியாப் போகாதது எது? படிக்கறதிலருந்து இந்தப் பஞ்சில இருக்கிற சாராயம் வரை…,” என்ற அமுதாவை மோனா இடக்கையால் அடித்தாள்.

“வாய மூடுடி..ஒண்ணுமே தெரியல..”

அமுதா, “நாங்களும்  ஸ்டூடண்ட்தான்..தள்ளு அந்தப்பக்கம்” என்று நுண்ணோக்கியை நோக்கிக் குனிந்தாள். மீண்டும் துடைத்து ..அத்தனை பயிற்சியில்லாமல், இடது கையில் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு நுண்ணோக்கியோடு தொடுகையால் ஒரு ஆடலாடினாள்.

“ஐஐ…நகருது..,” என்று சற்றுநேரம் பார்த்துவிட்டு நிமிர்ந்து குதித்தாள் அமுதா.

“தள்ளுடி…”என்று குனிந்த மோனாவின் கைகளைப்பற்றி “ எந்தப் பொசிஷனையும் மாத்தாமப் பாரு,”என்றாள்.

“ஐ ஆம் த ஃபர்ஸ்ட், ஐ ஆம் த ஃபர்ஸ்ட்,” என்று கத்திக்கொண்டிருந்த அமுதாவிடம், மோனா, “யூ ஆர் நாட் ஆன் இன்வெண்டர், ஜஸ்ட் எ ஸ்டூடண்ட்..” என்றாள்.

“ஏதோ ஒண்ணு …என்னளவில இதுதான் முதல்முறை..,” மறுமுறை பார்த்த மோனா, ”ஐ கெட் இட்,” என்றாள்.

“வி ஆர் த ஃபர்ஸ்ட், வி ஆர் த ஃபர்ஸ்ட்,” என்ற அமுதாவைப் பார்த்துச் சிரித்தாள் மோனா.

மீண்டுமென தூய்மைப் பணிகளை முடித்து கைகளைக் கழுவுகையில் முதுநிலை மாணவர்கள் வரத்தொடங்கியிருந்தனர்.வெண்அங்கியை இடதுகையில் மடித்துத் தொங்கவிட்டு, குறிப்பேடுகளைக் கையில் பிடித்துப் படிகளில் இறங்குகையில் வலது கையை அமுதாவின் தோளில் போட்டபடி, “ நீ ஏன் ஆர்ட்ஸ் சப்ஜெக்ட்ஸை எடுக்கல?”என்றாள் மோனா.

“ஆர்ட்ஸூன்னா வீட்டில இருந்து கரஸ்பாண்டென்ஸ் மூலமா படிச்சாப் போதுன்னாங்க. அதான் இந்தக் கிணத்தில வந்து விழுந்துட்டேன்.”

“என்னது கிணறா?!”

“பின்ன…ஏற்கனவே ரெண்டு மாப்பிள்ளைகளைப் பத்தி பேச்சு வருது. புதைகுழியில விழறதுக்குக் கிணறு பரவாயில்ல, நாமளா நீச்சலடிச்சுக் கரையேறிக்கலாம்,” என்று சிரித்தாள்.

மோனா தோளில் அடித்தபடி, “நீ எப்படியாவது பேசிக் கொண்டாடிடற!.எனக்கு இப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..சொல்லத் தெரியல…” என்று சொல்லியபடி தரையில் வந்து நின்று “மண்டே இதேமாதிரி ரிஸல்ட் வருமா?” என்றாள்.

“வரலன்னா என்னைக் கூப்பிடு,”என்று சிரித்தாள் அமுதா. புன்னகையோடு முறைத்த மோனாவிடம்,“யூ ஆர் த ஃபர்ஸ்ட்,” என்று தோளில் தட்டிய அமுதா,

“மண்டே லாப் எப்ப? சாயுங்காலம் தானே?” என்றாள்.

“ம்,” என்றாள் மோனா.

“ச்..சரி,”என்று முகம் சுருக்கியபடி நூலகம் நோக்கித் திரும்பிய அமுதாவிடம், “டீ குடிக்க வரலயா?” என்றாள் மோனா.

“வேணாம். வெள்ளிக்கிழமைனால சாவகாசமா ஒன்பதுவரைப் படிக்கலாம்.அங்க வந்து டீ குடிக்க அரைமணி..பின்ன ஊருக்குப் போகக் கேட்டுப் பிள்ளைகள் நிக்கிறாங்க, நகரமுடியாது. ஒன்பதுக்குச் சாப்பிட தட்டு மட்டும் எடுத்திட்டு வாப்பா,” என்றாள் அமுதா.

“ம். நீ அந்தகூட்டத்திலதான் இருந்தன்னு சொல்ல நான் சாட்சி. நீ போ..”என்று அமுதாவின் தலையில் தட்டினாள்மோனா. நடைபாதையில் எட்டு வைக்க அமுதா நூலகத்தினுள் நுழைந்தாள். ஊசலின் டக்டக் ஒலி தெளிவாகக் கேட்டது. நூலகம் முழுவதும் பல கடிகாரங்களின் பல ஊசல் ஓசைகள் கேட்பதாகத் தோன்றிய மாயையை உதறிப் புத்தகத்தோடு மீண்டும் சன்னலோர மேசையில் அமர்ந்தாள்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.