உப்பும் உடல் நீரும்

உப்பும், நீரும் நம் உணவில் மிகவும் இன்றியமையாததது என்பது எல்லோரும் அறிந்ததே. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்புள்ள பண்டம் தொப்பையிலே என்ற கொச்சையான பழமொழி நாம் உணவில் உப்பிற்குக் கொடுக்கும் மதிப்பை காட்டுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் விஷமாகும் என்பது போல் நமது உணவில் உப்பின் அளவு அதிகரித்து விட்டதால் நோய்களும் அதிகரித்து விட்டன என்று நவீன மருத்துவம் கூறுகிறது. ரத்தத்தில் உப்பின் அளவு பொதுவாக உடல் நீரின் அளவை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. உதாரணமாக, சோடியம் அளவு வரம்புக்கு மீறி இருந்தால் உடல் நீர் வற்றியுள்ளது என்று அறிகிறோம். சோடியம் அளவு குறைந்தால் உடலில் சேர்ந்துள்ள நீர் அதிகரித்துள்ளது என்பது விளங்கும்.

மருத்துவர்கள் ரத்த அழுத்தத்திற்கு உப்பையே முக்கியக்  காரணமாகச்  சொல்கின்றனர். மேலும் இருதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளினால் ஏற்படும் நீர் வீக்கத்திற்கு மருத்துவ நிவாரணம், உப்பைக் குறைப்பதும், உப்பைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றும் மருந்துகளை உட்கொள்ளுவதுமேயாகும். ரத்த அழுத்தம் உள்ள எனது மருத்துவ நண்பர் ஒருவர் திடீரென்று ரத்த அழுத்தம் அதிகமாகி, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தம் மூலமாக உப்பை வெளியேற்றும் மருந்தைச் செலுத்திய பின்னரே ரத்த அழுத்தம் குறைந்தது. இதற்குக் காரணம், வீட்டில் வெள்ளையடித்துக் கொண்டிருந்ததால், வீட்டுச் சமையலில்லாமல் 3 நாட்கள் வெளி உணவகத்தில் உண்டதேயாகும். வீட்டில் உபயோகிக்கப்படும் உப்பின் அளவு பத்து சதவீதமே. மீதி உப்பு பக்குவப்படுத்தப்பட்ட உணவின் மூலமும் வெளி உணவகங்களில் உண்ணுவதின் மூலமே நம் உடம்பில் சேர்கிறது என்று ஒரு குறிப்பு அறிவிக்கிறது. மேற்கூறியவற்றிலிருந்து உப்பும் நீரும் இணைந்தே உடலில் வேலை செய்வது தெரிகிறது.

இக்கட்டுரையை மேலெழுந்தவாரியாக படித்தால் ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்குக் கூட  தலை சுற்றலாம். ஆதலால், இது நிதானமாக, கவனத்துடன் படிக்க வேண்டிய கட்டுரை. மருத்துவர்களும் மருத்துவர்களல்லாதவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பல புதிய விஷயங்களை இக்கட்டுரைக்கு ஆதரமாயுள்ள இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் கண்டறிந்துள்ளன. உணவில் உப்பு அதிகரித்தால் தாகம் அதிகரிக்கும். அதனால் அருந்தும் நீரின் அளவு அதிகரிக்கும். அதிகப்படியான தண்ணீரும், உப்பும் சிறுநீரகத்தால் சேர்ந்தே வெளியேற்றப்படும் எனபதே 200 வருடங்களாக மருத்துவம் சொல்லித்தரும் பாடம்.  உப்பும், நீரும் உடல் நலத்திலும், உடல்நலக் குறைவிலும் ஒருங்கிணைந்தே வேலை செய்கின்றன.

இவ்வாறிருக்க, அண்மையில்   வெளியான இந்த இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் உப்பும், நீரும் நாம் நினைப்பது போல் நம் உடலில் இணை பிரியாத் தோழர்கள் அல்ல என்று கூறுகிறது. 200 வருடங்களாக மருத்துவர்களுக்கு போதிக்கப்பட்டு வருவதற்கு எதிமாறாக உள்ளன இந்த ஆராய்ச்சியின் முடிவுகள். ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு இந்த முடிவிற்குவந்தார்கள் என்பதை இனி பார்ப்போம்.

இந்த ஆராய்ச்சியில் முக்கியமான நபர், ஜென் டிட்ஸ் எனும் மருத்துவர். தற்போது அமெரிக்காவில் வாண்டர்பில்ட் பல்கலைக் கழகத்தில் சிறுநீரக மருத்துவ நிபுணராகவும், ஜெர்மானிய ஆராய்ச்சி மையம் ஒன்றிலும் பணி புரிகிறார். 1991ல் இவர் இரண்டாவது வருட மருத்துவ மாணாக்கராக இருந்த சமயம் உயிரியல் வகுப்பில் “தீவிரமான  சூழ்நிலையில் நமது  உடலியக்கம் ” என்ற தலைப்பில் விண்வெளிப் பயணிகள் முற்றும் விண்வெளிச் சூழலாய் அமைந்த பரிசோதனைக் கூடத்தில் 28 நாட்கள் கழிப்பதனால் ஏற்படும்  விளைவுகளை பற்றிக்  கற்றறிந்தார். அதற்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்களில் அப்பயணிகளின் சிறுநீர் அளவு ஒரே சீராக இல்லாமல் ஒரு வாரம் உயர்ந்தும், மறு  வாரம் குறைவதுமாக மாறி மாறி இருந்தது.  இது உயிரியல் புத்தகத்தில் படித்ததற்கு முரண்பாடாக இருந்ததால அவரிடம் குழப்பத்தையும், ஆர்வத்தையும் உண்டு பண்ணியதோடல்லாமல், ஒரு கேள்விக் குறியாகவும்  மாறியது. இதுதான் அவருடைய 10 வருட ஆராய்ச்சியின் தொடக்கம்.

மூன்று வருடங்களுக்கு பின்னர், ரஷ்ய நாட்டு விண்வெளி வீரர்கள் 105 நாட்கள் மிர் விண்வெளிக்கூடத்தில் 135 நாட்கள் தங்கப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன் அவர்களது சிறுநீர் போக்கையும், உப்பு சேர்க்கையினால் சிறுநீர் ஓட்டம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதையும் பரிசீலனைசெய்வதற்கு அனுமதி பெற்று தானும் அவர்களுடன் உடனிருந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். உப்பின் அளவு 28 நாட்களுக்கொரு முறை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. ஆனால் சிறுநீரின் அளவு, உப்பின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதே மையத்தில் விண்வெளி வீரர்கள் 105 நாட்களும், 205 நாட்களும் உள்ளிருப்பார்கள் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன், ஜென் டிட்ஸ் மேற்கூறிய பரிசோதனையைச் சில மாற்றங்களுடனும் சீர்திருத்தங்களுடனும் திரும்ப மேற்கொண்டார். உணவில் 12 கிராம், 9 கிராம், 6 கிராம், 12கிராம் உப்பை 28 நாட்கள் சேர்ப்பதனால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்ததில் கண்ட முடிவுகள் முந்தைய பரிசோதனையுடன் ஒத்தே இருந்தன. உப்பின் அளவு 6 கிராமிலிருந்து 12 கிராமாக அதிகரிக்கப்பட்டபோது, சிறுநீரகங்கள் வடிகட்டும் நீரின் அளவு அதிகரித்ததினால், உட்கொள்ளும் நீரின் அளவும் சிறுநீரின் அளவும் குறைந்திருந்தது. ஆனால், சிறுநீரில் வெளியேறிய உப்பின் அளவு அதிகமாயிருந்தது. ஒரு வாரம் கழிந்த பின் உப்பின் அளவும், அருந்தும் நீரின் அளவும் மாறாமலிருந்தும், சிறுநீரின் அளவும், யூரியா எனும் உப்பின் அளவும் அதிகரித்திருந்தது. இந்த அமைப்பு வாரத்திற்கொரு முறை மாறி மாறி வந்தது தெளிவாகத் தெரிந்தது.

முதல் வாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணம், ஆல்டக்டோன் எனும் ஹார்மோன் என்றும், இரண்டாவது வார மாற்றங்களுக்குக் காரணம், கார்டிசோன் என்று சொல்லப்படும் குளுகோகார்டிகாய்ட் ஹார்மோன் என்பதும் இவைகளின் அளவு மாற்றங்களிருந்து தெரிந்தது. மேலும் விண்வெளி வீரர்கள் 12 கிராம் உப்புள்ள உணவை உண்ட நான்கு வாரங்களிலும் அதிகப் பசியுடன் இருந்தார்கள்.. உணவின் அளவு பசிக்கேற்றவாறு அதிகரிக்கப்படாததால், அவர்களின் எடையும் குறைந்திருந்தது.

இந்த மாற்றங்களுக்கு இப்பரிசோதனையின் மூலம் விடை காண முடியாததால், சுண்டெலிகள் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்தச் சுண்டெலிகளுக்கு முதல் இரண்டு வாரங்கள் உப்பு குறைவாயுள்ள உணவும், தண்ணீரும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு உப்பு அதிகமாயுள்ள உணவும், உப்புத் தண்ணீரும் கொடுக்கப்பட்டன. விண்வெளி வீரர்களுடைய பரிசோதனை முடிவுகளையே, சுண்டெலிகளின் பரிசோதனை முடிவுகளும் ஒத்திருந்தன. உப்பின் அளவு அதிகரித்தபோதிலும் சிறுநீரின் அளவு ஏறவில்லை. ஆனால் சிறுநீரில் உப்பின் அளவு அதிகரித்திருந்தது. ஒரு வாரம் கழிந்த பின்னர் உப்பின் அளவும் அருந்திய தண்ணீரின் அளவும் மாறாவிடினும், சிறுநீரின் அளவு அதிகமாயிருந்தது. உப்பின் அளவு உணவில் அதிகரிக்கப்பட்டவுடன், உண்ட உணவின் அளவும் அதிகமாகியது. இந்த மாற்றங்களுக்கு முக்கியமான காரணம் யூரியா உப்பு என்பதும் நிச்சயமானது.

முதல் வாரத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும்போது யூரியாவின் அளவு சிறுநீரில் குறைவாய் இருந்தது. இதற்கு காரணம் சிறுநீரகங்கள் யூரியா உப்பை உள்ளிழுத்துக் கொள்வதன் மூலம் உட்கொண்ட நீரையும் உடலில் தங்க வைத்து கொள்கிறது என்பது தெளிவாயிற்று. இதனால்தான் உப்பின் அளவு உணவில் அதிகரிக்கும்போது உப்பு வெளியேறும் அளவுக்கு நீர் வெளியேறுவதில்லை. இரண்டாவது வாரம், சிறுநீரின் அளவு அதிகமாவதற்கு காரணம் கார்டிசோன் தசையிலிருந்தும் கொழுப்பிலிருந்தும் வெளிக்கொணர்ந்த யூரியாவை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு தேவையான நீராகும்.

இந்த நீரும் கொழுப்பிலிருந்தும் சதையிலிருந்துமே வெளிக் கொணரப்பட்டது. யூரியாவையம், நீரையும் வெளிக்கொண்டு வருவதற்குக்  கூடுதலான சக்தி தேவைப்படுகிறது. இதுவே உப்பின் அளவு கூட்டப்பட்டபோது விண்வெளி வீரர்களின் பசி அதிகரித்ததற்கும்,  எடை குறைந்ததற்கும்  சுண்டெலிகளின் உணவு அளவு கூடியதற்கும் காரணமாகும்.

இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின்  முடிவுகள் சிறுநீரக மருத்துவத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சநதேகமேயில்லை. மருத்துவரல்லாதவர்களும் அறிய வேண்டிய பல விஷயங்கள் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளன.

  1. உணவில் உப்பு அதிகமானால் அருந்தும் நீரளவும் அதிகமாகும். ஆனால், அந்த நீரும் உப்பும் சேர்ந்து வெளியேறும் என்பது சரியல்ல என்று இந்த ஆராய்சசி அறிவிக்கிறது.
  2. உப்பு நாக்கில் உள்ள உணர்விகளைத்  தூண்டி, தாகத்தையும் உண்ணும் நீரையும்  அதிகரித்தாலும், சிறுநீரகங்கள் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் அதே சமயத்தில், அதிகப்படியான நீரை உடலில் தேக்குவதால் நீர் வீக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  3. உணவில் உப்பு அதிகரித்தால் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பது உண்மையானாலும், இது அருந்திய நீரின் அளவு உடலில் அதிகரித்தலாலும்   இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் நினைவிற் கொண்டால் ரத்த அழுத்த மாத்திரையை அதிகரிப்பதற்கு பதிலாக இந்த நீரை சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றும் மாத்திரையை அதிகரிக்க இயலும். மேற்சொன்ன எனது மருத்துவ நண்பரின் ரத்த அழுத்தத்தைக் குறைத்தது நீரையும் உப்பையும் சேர்த்து வெளியேற்றும் மருந்தேயாகும் என்பதை இங்கே  நினைவில் கொள்ள வேண்டும்.
  4. நீர் வீக்கத்தை தடுக்க வைத்தியர்கள் பிணியாளர்களின் தினசரி எடை அதிகரிப்பு, ஒரு கிலோவிற்கு மேல் சென்றால் நீரை வெளியேற்றும் மருந்தை அதிகரிக்கச் சொல்வது வழக்கமாய் உள்ளது. இது சிறந்த நிவாரணம். ஏனென்றால் அதிக அளவு உப்பு உணவில் சேர்ப்பது தொடர்ந்து நீடித்தால், இரண்டாவது வாரத்தில் எடை குறைய வாய்ப்பு இருப்பதால் அது நீர் வீக்கம் அதிகரித்திருப்பதை மறைத்து விடலாம்.
  5. இந்த ஆராய்ச்சியின் முக்கியமான அம்சம் அதிக அளவு உப்பை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் மீது நம் கவனம் குவிக்கப்படுவதே ஆகும். அவைகளில் முக்கியமானது கார்டிஸோன் சுரப்பு அதிகமாவதும் அதன் மூலம் கொழுப்பிலிருந்தும் சதையிலிருந்தும் நீர் வெளியேற்றப்படுவதும் ஆகும். கார்டிசோன் அளவு அதிகரிப்பதால், சர்க்கரை வியாதி, எலும்புத்தேய்வு போன்ற வியாதிகள் ஏற்படும். மேலும் பசி அதிகரிப்பதால், உண்ணும் உணவு அளவு மீறினால் எடையேற்றமும் உணவு பற்றாமலிருந்தால் எடையிறக்கமும் ஏற்படக்கூடும்

ஆதாரங்கள்:  Why Everything We Know About Salt May Be Wrong – The New York Times: மே 8 2017

JCI – Increased salt consumption induces body water conservation and decreases fluid intake, Jens Titze et al: Journal of Clinical Investigation: April 17, 2017

JCI – High salt intake reprioritizes osmolyte and energy metabolism for body fluid conservation: Kento Kitada, Jens Titze et al: Journal of Clinical Investigation: April 17, 2017.

~oOo~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.