இளமூதாக்களும் கழிவுநீரும்: சால் பெல்லோவின் கலை

Lilacs…. Your great puffs of flowers
Are everywhere in New England.
– Amy Lowell

Lilacs out of the dead land, mixing
Memory and Desire, stirring
Dull roots with spring rain.
– T.S.Eliot

 

இங்கிலாந்தில் வாழ்ந்த தேவாலய ஊழியர் சிட்னி ஸ்மித்தின் வார்த்தைகளில், “Short-views for God’s sake, short views”, என்று கச்சிதப் பார்வைகளை வலியுறுத்துகிறார் திரு ஆர்தர் சாம்லர், பெல்லோவின் ‘Sammler’s Planet’ என்ற நாவலில். அந்த அறிவுரைக்குச் செவி சாய்த்து அவரது மிகப்பெரும் நாவல்கள் குறித்த நியாயமான ஆர்ப்பரிப்புகளை தற்காலிகமாக விலகி, பெல்லோவின் குறும்படைப்புகளைப் பேசலாம்.

“Zetland: By a Character Witness”, என்ற சிறுகதையையே முதலில் எடுத்துக் கொள்வோம்- அதற்கு முன், நாம் இந்தக் கதையின் நாயகன் குறித்த பின்புலத தகவல்களில்உருவம் பெறும் ஒரு நிழலாட்டத்தை கவனிக்கலாம் – மெய்யா பொய்யா என்பதற்கான ஆதாரமில்லாமல் பேசப்படும் இந்தச் செய்தி புனையப்பட்டதாகவும் இருக்கலாம்: 1976ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றபின் பெல்லோ, “இது ஐசாக்குக்குக் கிடைத்திருக்க வேண்டும்,” என்று சொன்னதாய்ப் பேசப்படுகிறது.

ஆம், பள்ளித் தோழனாகவும் சிகாகோ பல்கலைக்கழகத்திலும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலும் சக கல்லூரி மாணவனாகவும், குழந்தைப் பருவத்திலிருந்தே உடனிருந்த ஐசாக் ரோசென்ஃபெல்ட்தான் இந்த ஐசாக். பெல்லோவின் கல்வி நிறைவடைந்த பின்னர், அவர்களது நியூ யார்க் காலத்தில் பெல்லோவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்களில் ஐசாக்கும் ஒருவன்- “சிகாகோ தாஸ்தவெஸ்கியர்கள்” என்று இவர்கள் தங்களை அழைத்துக் கொண்டார்கள். அப்பாவித்தனமான, புஷ்டியான, கண்ணாடி அணிந்த, கனவுலக சஞ்சாரியான ஐசாக், காலமெல்லாம் குழந்தை மேதையாகவே இருந்தவன், எதிர்காலத்தில் ‘ரைச்சிய”(Reichian) குழந்தை வளர்ப்பு முறையை கைகொள்ளப்போகிறவன், தன்னை ஒரு “மேதை”யாக்க வேண்டும் என்று இரக்கமற்ற குறிக்கோளுடன் அதிகாரம் செலுத்திய அவனது தந்தையின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் வகையில் (ஷெல்லியின் ’வீழ்ந்த‘ மாமன்னன்  ‘ஒசிமாண்டியாஸ்’ என்று அவனால் பெயர் சூட்டப்பட்டவர் அவனது தந்தை),  “மேகங்களில் முகம் புதைத்துக் கொண்டவன்” என்ற ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்ட ஐசாக். பின்னர் அவன் மிகவும் புகழப்பெற்ற  “Passage from Home” என்ற முதல் நாவலை எழுதுவான் (அது இர்விங்க் ஹோவால் பாராட்டப்பட்டது), பின்னர் பார்ட்டிசன் ரிவ்யூ, கமெண்டரி, நியூ ரிபப்ளிக் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள், மதிப்புரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுவான் (காந்தியைப் பற்றியும்கூட அது போல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான், Self-Realization through Politics). ஐசாக் ரோசென்ஃபெல்ட் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றுக்கு, “Age of Enormity”, பெல்லோ முன்னுரை அளித்தியிருக்கிறார்.

ரோசென்ஃபெல்ட்டின் தனிவாழ்வு எப்படி என்று பார்த்தால், நியூ யார்க்கின் மேற்குப் பகுதியில் வசிலிகி சரன்டாகிசுடன் அவர் வாழ்ந்த ’களிவாழ்வு’ – சமையலறையில் குளியல்தொட்டி வைத்திருந்த பொருந்தாமை முதற்கொண்டு, டோஸ்டரிலிருந்து தாவிக் குதிக்கும் கரப்புகள் வரை பெல்லோவால் ‘Zetland’ல் கவனத்துடன் கச்சிதமாய் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இருவருக்குமிடையே நிலவிய, திருமணம் புரிந்து கொள்ளாமல் கூடி வாழ்வது என்ற ஏற்பாடு வலுவற்ற ஒன்றாகவே இருந்தது- வசிலிகி மற்றும் அவளது இரு குழந்தைகளும் அவனோடு இருப்பதும் வந்து போவதுமாக இருந்தார்கள். கடைசியில், பிரமாத சாத்தியங்கள் கொண்டும் ஒன்றுமே சாதிக்காத இலக்கிய மேதை பற்றிய வழக்கமான கதையில் நடப்பது போல், ரோசென்ஃபெல்ட்டின் வாழ்க்கை சிகாகோவில் அழுக்கான ஒரு வாடகையறையில் முடிவுக்கு வருகிறது- அதன் இருண்மை அவரது நண்பர்களில் ஒருவரால் மிகப் பொருத்தமாகவே கைப்பற்றப்பட்டிருக்கிறது: “ராஸ்கால்னிகோவ் தன் கோடரியை இங்கு கூர் தீட்டிக் கொள்வதாய் நினைத்துப் பார்ப்பதற்கு ஏற்ற அறை”.

சராசரிகளில் சிறந்த சாதாரண எழுத்தாளன் ஒருவனின் வாழ்வு குறித்த துயர் விவரணைகளில் நமக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? சால் பெல்லோவுக்கே உரிய கலையின் நேசமும் சீரான ஒழுங்கும் கூடிய உழவில் இவ்வாழ்வனுபவங்களின் சிரிப்புக்கிடமற்ற பாழ்நிலங்கள் சந்தேகத்துக்கிடமற்ற இலக்கிய அறுவடை அளிக்கின்றன- ஜெட்லாண்ட் போன்ற மிகச் சிறிய பாத்திரங்கள் முதல் ஹம்போல்ட் (டெல்மோர் ஷ்வார்ட்ஸ்), ராவல்ஸ்டீன் (ஆலன் ப்ளூம்) வரையான போற்றுதற்குரிய இலக்கிய நாயகர்களைக் கொண்ட செறிவான ஒரு அம்பாரம் நம் கண் முன் குவிந்து அவரது புனைவுலகை நிறைக்கிறது.

பெல்லோவின் மாபெரும் புனைவுலகில் சரிதையும் சுயசரிதையும் எவ்வளவு பெரிய பங்காற்றுகின்றன என்றால், தான் வாழும் காலத்தைப் புரிந்து கொள்வதற்கான யத்தனமாகவே அவரது புனைவு முயற்சி அத்தனையும் இருக்குமோ என்றும்கூட நாம் சிலபோது சந்தேகிக்கிறோம், அந்த யத்தனத்தில் எழுத்துக்கு என்றும் ஒரு தனி இடம் இருக்கலாம், அது மிக முக்கிய இடமென்றாலும் பெல்லோவுக்கு அது எத்தனையோ விஷயங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று நாம் நினைக்கத் தலைப்படுகிறோம். பெல்லோ எப்போதும் நிஜ மனிதர்களுக்கே திரும்புகிறார், தான் விரும்பிய, வெறுத்த மனிதர்கள்- அவர்களின் உடல் மற்றும் உள்ளத்தின் தனித்தன்மைகளை அவர் முழுமையாய் நினைவில் வைத்திருந்தார் என்பது மட்டுமல்ல, அவர்களை மறக்க முடியாத வகையில் மீளுருவாக்கமும் செய்தார்- நிஜ மனிதர்களே அவரது நாவல்களின் உயிர்ச்சுனை (பாத்திரங்களின் உடலமைப்பு குறித்த பெல்லோவின் வர்ணனைகளைத் தொகுத்தால், அது வளரும் எழுத்தாளர்களுக்கு விலைமதிக்க முடியாத ஒரு வழிகாட்டி நூலாக இருக்கும்). அவரது வாசகர்களில் சற்றே தீவிர வாசகர்களாகிய நாம் பெல்லோவின் புனைவுலகுக்கு ஒளியூட்டும் நிஜ வாழ்வுத் தகவல்களைத் துழாவி ஒரு மிகப்பெரிய குவியலினுள் நுழையும்போதுதான் மெய்வாழ்வை மேவும் புனைவின் சவ்வூட்டுப் பரவலையும், புனைவு ஒரு வகையில் வாழ்வுக்கு ‘கூடுதல் மெய்ம்மை’யளிப்பதையும் திகைப்புடன் உணர்கிறோம் (இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியுமாகிறது).

பெல்லோவின் நிஜ வாழ்வு குறித்த நம் துப்பறிதல், பெல்லோ “Humboldt’s gift” என்ற நாவலை எழுதும்போது சேகரித்த விஷயங்கள் சிலவற்றை வெட்டி ஒட்டிய கதைதான் Zetland என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது.

மோபி-டிக் வாசித்தபின் (“பிற விஷயங்களிலிருந்து உன்னைத் தனிமைப்படுத்தும் இந்த சமூக புனைவுகளிலிருந்தும் உளம் நோக்கு புனைவுகளிலிருந்தும் உனக்கு மெய்யான விடுதலையளிப்பது மற்றுமொரு புனைவே, அது கலையின் புனைவு. இக்கவிதையின்றி மானுட வாழ்வில்லை…”) தத்துவப் படிப்பைக் கைவிடும் ஜெட்லாண்டும் (“குறியீட்டு தர்க்கத்தைச் செரித்து பட்டினி கிடத்தல்”), கட்டற்று விரியும் ஒரு புத்தகம் பற்றி பெல்லோவுக்கு எழுதும் ஐசாக்கும் ஒன்றுதான் – “பிசாசால் சமைக்கப்பட்ட, மீயதார்த்த… மோபி டிக்குக்கும் லீவ்ஸ் ஆக்ப் கிராஸ்சுக்குமிடையே நமக்குக் கிட்டுவது எதுவோ அது … பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் அத்தனை தத்துவத்தையும் நகைப்புக்கிடமாக்கவல்லது”. இதை நான் குறிப்பாய்ச் சுட்டுவது ஏனென்றால், ஒவ்வொரு புனைவிலும் பெல்லோ இந்தப் புள்ளிக்குதான் இறுதியில் வந்து நிற்கிறார் (ஒரு வகையில் அவர் ஒருசில விஷயங்களைத்தான் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருந்தார், வெவ்வேறு “ஆளுமைகளின்” நிறப்பிரிகையினூடே அவரது அக்கறைகளைச் செலுத்தி வளைத்தறிந்தார்).

அலுப்பூட்டும் இந்த “மண்டைக் கலாசாரம்” (Head-Culture), அது நீட்சேவியமாகவோ ஃபிராய்டியமாவோ மார்க்சியமாகவோ எதுவாகவும் இருக்கட்டும், அது நம் உண்மையை பிரதிநிதிப்படுத்துவதாக பாவனை செய்து கொண்டிருக்கையில் நம்மை வெறும் கேலிச்சித்திரங்களாக்குகின்றது எனும்போது நம்மைப் பற்றிப் பேச அவற்றுக்கப்பால் இன்னும் நிறைய இருப்பதாய்ப் பொருள்படுகிறது, இந்த கவித்துவ உண்மையை ஒவ்வொரு மனிதனும் தன் இதயத்தின் அந்தரங்க உணர்வாய் எப்போதோ அறிந்திருக்கிறான். நோய்மைப்பட்டு படுக்கையில் கிடக்கும் ஜெட்லாண்ட் மோபி-டிக் வாசிக்கையில் எந்த உண்மையைக் கண்டடைகிறானோ அதுவே சாம்லரின் அமைதியான அறிவிப்பும் ஹெர்சாக்கின் சொல்லற்ற மௌனமுமாகிறது.

யாத்ரீகனாகிய ஜெட்லாண்ட் கதைப்போக்கில் கருத்து நிலைகளிலிருந்து பருண்ம மெய்ம்மைகளுக்கு நகரும்போதே கதைசொல்லியான பெல்லோ ஆகாசத்தில் வேர்கொண்ட அவனது அனுமானங்களை, நகர்ப்புற சிகாகோ அல்லது நியூ யார்க்கின் அன்றாட கசடுகளை, தன் கூர்மையான உரைநடையின் துல்லியமான விவரணைகளால் அடியறுக்கிறார் (‘The largo of the drain as you drank your coffee’)- ஜெட்லாண்ட் எந்த பரவச நிலைக்கு ஏங்குகிறானோ, அந்த உச்சத்திற்கு நம்மை இவ்விவரணைகள் கவித்துவ மாயத்தால் இட்டுச் செல்கின்றன. ஆனால் தான் காணும் அனைத்தையும் அழகுணர்வால் நிறைக்கும் கலையின் அகவயப் பார்வையின் பின் ஒரு ஆபத்தும் உள்ளது என்பதை இறந்து பிறந்த பூனைக்குட்டிகளுக்காக பரிதாபமாய் ஜெட்லாண்ட் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கையில் கதைசொல்லி அவற்றைத் தூக்கியெடுத்து கழிப்பிடத்தின் நீரோட்டத்தில் அலட்சியமாய் போக்கிடுவதன் கேலித்தனச் சித்தரிப்பில் காண்கிறோம்.

இவ்விரு உந்துதல்களுக்கிடையிலான இழுபறி, உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான இழுபறி, பெல்லோவின் வேறு பல கதைகளிலும் திரும்பத் திரும்ப காணப்படுகிறது. Seize the Dayவின் அவல நாயகன் டாம்மி வில்ஹெம் இருக்கிறான், அவன் வழக்கமாய்ச் சிக்கிக் கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றிலிருந்து விடுபடுவதற்குரிய அறிவின் மித அளவை மிகையுணர்ச்சி நிலைகள் மிகுந்து ஆள்கின்றன. தன்னைத் தானே பலி கொள்ளுதலின் உச்சம்தான் டாம்மி, தொடர்ந்து தன்னைப் படுவீழ்ச்சியில் தள்ளும் முடிவுகளை அவன் தேர்ந்தெடுப்பதால் எப்போதும் ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறான் (தோல்வியுறும் ஒரு தேடலில் நடிகனாகும் விழைவுடன் ஹாலிவுட் செல்கிறான், தனக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்பதால் விற்பனையாளன் பணி துறக்கிறான், இனியும் அவளோடு வாழ முடியாது என்ற ‘உணர்வு’ காரணமாக மனைவியைப் பிரிகிறான்…). தன் தந்தை டாக்டர். ஆட்லரிடமிருந்து ஒரு துளி கருணையைப் பிழிந்தெடுக்கும் முயற்சியில் தோற்றுப்போனவன், தன் சிக்கலிலிருந்து விடுபடும் கடைசி கட்ட முயற்சியில், ஏமாற்றுக்காரன் டாக்டர் டாம்கின் வலியுறுத்தும் வர்த்தக ஏற்பாட்டுக்குப் பலியாகி இன்னுமொரு தவறு செய்கிறான்- போலி-தத்துவம் கலந்த ஒரு உற்சாகமூட்டும் தொடர் தாக்குதல் உரையில், அவனை “இந்நாளே பொன் நாள்” என்று நம்பச் செய்து டாக்டர் டாம்கின்ஸ் அவன் தன் கடைசி காசையும் – எழுநூறு டாலர்கள்- பலசரக்குச் சந்தையில் கூட்டு-முதலீடு செய்விக்கச் செய்கிறான். சொல்லி வைத்தாற் போல் டாம்கினும் அவனை ஏமாற்றி விடுகிறான், டாம்மி முகமறியாத ஒருவனின் ஈமச்சடங்குக்கு வந்து நிற்கிறான்- அங்கு அவன் இறுதியில் உடைந்து போகிறான், கண்ணீர் ஆறாய்ப் பெருக தேம்பியழுகிறான்- பொருளிழப்பின் அண்மைய வலியைக் காட்டிலும் நொய்மை நிறைந்த, இருத்தல் சார்ந்த துயர் அவனைத் தன்னுள் ஆழ்த்திக் கொள்கிறது.

மேலே உள்ள குறைந்தபட்ச கதைச் சுருக்கத்தைவிட எது இந்தக் கதைக்கு கூடுதல் சுவையளிக்கிறது என்றால், அது இடம், காலம், ஏவல் ஆகியவற்றை நிர்ணயிக்கும் காரணிகளாக டாம்மியின் உள்ளம் மற்றும் உணர்வு நிலைகளைப் பயன்படுத்தி பெல்லோ நிகழ்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் இடையில் தன் கதைசொல்லலை இசைவிப்பதுதான். இந்த உத்தியும், கதையெங்கும் நிறைந்திருக்கும் நீர்ப்படிமமும் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதனை ஒரு மென் நகர்வுக் காட்சியில் காண்பது போன்ற உணர்வு அளிக்கின்றன (துவக்க காட்சியில் லிப்ட் ‘மூழ்குகிறது”, தரைவிரிப்பு “பொங்கிப் படபடக்கிறது”, சன்னல் விரிப்புகள் “சுக்கான்கள்” போலிருக்கின்றன, இறுதி காட்சியில், “கனத்த, கடல் போன்ற இசை அவன் செவிகளைத் தொடும்போது”  அடக்க மாட்டாதபடி “கண்ணீர்” நீர்ச்சுனையாய்ப் பெருகுகிறது). “தீர்ப்பு நாள்” அன்று டாம்மி மூழ்குவது, ஞானஸ்நானச் சுனையிலும்தான் (அதுவே ஒரு முரணுரையாய், நெருப்புக் குளியலுமாகிறது)- இதில்தான் டாம்மி, “இருத்தல் எனும் வித்தியாசமான ஒரு சுமையை” ஒப்புக்கொண்டு தன் “உண்மையான ஆன்மாவை” அறிமுகம் செய்து கொள்கிறான்.

வாழ்வின் அன்றாட அலுவல்களில் சிக்கிக்கொண்ட அவன் இறுதியில், “வாழ்வு எனும் தொழிலின்” உயர்வான நோக்கம் பற்றிய ஒரு உள்ளுணர்வு அடையப் பெறுகிறான். இந்த உயர்தொழில் என்பது, “தனக்கேயுரிய தனித்துவம் கொண்ட ஆன்மாவின் சுமையை” தாங்கிக் கொள்ளுதல் என்று புரிந்து கொள்கிறான், “இந்த எடையின் மதிப்பைக் கணக்கிடவோ அளவிடவோ முடியாது” என்றும் உணர்கிறான். டாம்மியின் க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தம் என்ற போக்கும் “உணர்வுகளுக்கு” தன்னை ஒப்புக்கொடுக்க அவன் எப்போதும் தயாராய் இருப்பதுவும்தான் அவனை அனாதரவான நிலையில் வைத்திருக்கிறது என்றால், அதுவே அவன் சக மனிதனோடு புரிந்துணர்வு கொண்டு பொது மானுடம் குறித்த உணர்வுநிலையை மீட்டுக்கொள்ளும் வகையில் அவன் உள்ளத்தைத் திறந்தும் வைக்கிறது- எனவேதான், சிறிதுகூட ஆறுதலின்றி தொடர்ந்து வீழ்ச்சியை விவரிக்கும் வடிவம் கொண்ட இந்த நாவலில் ஒரு காட்சியில், அவன் டைம்ஸ் சதுக்க சப்வேயினுள் இறங்கி, தான் “உலகை நேசிப்பவன்” என்று தன்னை அறியும் ஒரு பரவச நிலையினூடாய் ஆன்மீக எழுச்சி பெறுகிறான், அவனது இதயத்தின் அந்தரங்கத்தில் “திடீரென்று, வேண்டுதலின்றி, குறைபட்ட, அவலத் தோற்றம் கொண்ட இம்மக்கள் மீதொரு பொது நேசம்” பீறிட்டு எழுகிறது. இது போன்ற ஒரு மீட்சி அனுபவம் ஈரமற்ற அவனது தந்தை டாக்டர் ஆட்லருக்கு மறுக்கப்படுகிறது, இன்னொருவனின் ‘சிலுவையை’ சுமக்க அவர் கொள்ளும் பெரும்பீதியில் தன் மகனுக்கும்கூட அடையாள அளவிலேனும் அவர் புரிந்துணர்வு அளிப்பதில்லை, இதயமில்லாமல் அவனிடம், “என் முதுகை  விட்டுக் கீழே இறங்கு” என்றுதான் அவரால் சொல்ல முடிகிறது.

ஆனால் டாம்மியின் வீழ்ச்சி ஆசிர்வதிக்கப்பட்ட நிலைக்கு அவனைக் கொண்டு செல்வது (“அவனது இதயத்தின் அந்தரங்க தாபத்தின் நிறைவு”) நமக்கு வேறொரு பாதாளம் நோக்கிய பயணத்தை நினைவுபடுத்துகிறது: மிகவும் படித்த, தீர்க்கமான பார்வை கொண்ட மோஸ்பி (Mosby’s Memoirs), தகவல்கள் மற்றும் தர்க்கங்களின் உலகை உணர்ச்சி வசப்படாமல் சார்ந்திருக்கும் உறைநிலைச் சிந்தனையாளன், மிட்லாவின் இடிபாடுகளைப் பார்க்கச் செல்லும்போது நிலத்தடியில் இருக்கும் சமாதி ஒன்றைக் காண கீழிறங்குகிறான். அங்கு அவன் பூட்டப்பட்ட அறைக்குள் சிக்கிக் கொண்டது போன்ற ஒரு பெரும் பீதிவயப்படுகிறான், கல்லாலான அந்தச் சமாதியில் தான் இறந்து கிடப்பதாக அச்சம் ஏற்பட்ட நிலையில், தன்னையும் அறியாமல் வெளிச்சத்தைத் தேடி மண்டியிடுகிறான். டாம்மியின் சப்வே அனுபவம் போன்ற ஒரு தரிசன நிலை அவனுக்கும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது (“வெளிச்சம் இருந்தது. உயிர்க் கருணை இருந்தது”), ஆனால் டாம்மி போலல்லாமல் இவன் கருத்துகளின் பிரதிமை நிலையையும் அவற்றின் நிழலான ஐயங்களையும் கைவிட்டு உறுதிப்பாட்டின் வெளிச்சத்தை ஏற்கவோ கைவிடவோ முடியாமல் இரண்டிலும் தயங்கி நிற்கிறான்: “கருணை, அல்லது, காற்று”), எந்த தரிசனத்தையும் அடையாமல் வெளியேறிவிடுகிறான்.

பெல்லோவின் புனைவுகளில் பெரும்பாலானவை மோஸ்பி, டாம்மி போன்ற  துருவ நிலைகளுக்கு இடையில் ஊசலாடுகிறது, அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலுள்ள முரணியக்கத்தை விடுவிக்க அவரது புனைவுகள் முயற்சி செய்கின்றன- மண்டைக்குள் உள்ள நினைப்புப் பாறைகளை இதயத்தின் சிகரத்தை நோக்கித் தள்ளிச் செல்லும் ஒரு வகை சிசிபிய முயற்சியாய் அமைகின்றன.  “புரிதலுக்கு அப்பாற்பட்ட அமைதி” என்ற இதயத்தின் உள்ளுணர்வைக் கொண்டு மண்டையின் மிகைகளைக் கட்டுப்படுத்தவும், அதன் முரணாய் இதயத்தின் ‘பாசவுணர்வில் வெளிப்படும் வெண்டைக்காய்த்தன வழவழப்பை’ அறிவின் கூர்வாளால் வெட்டி அகற்றி, நம் அனைவருக்குள்ளும் புதைந்திருக்கும் மானுட உண்மையின் மையத்துக்கு வந்து சேரவும் அவரது புனைவுகள் முயற்சி செய்கின்றன.

பெல்லோவின் நாவல்களை வாசித்திருக்கக்கூடியவர்களுக்கு, அவரது சிறுகதைகளில் பெரும்பாலானவை பழக்கப்பட்ட பிரதேசமாக இருக்கும். உடல் உருவைச் சித்தரிப்பதில் தேர்ச்சி (புதர் போன்ற புருவங்கள் “அறிவுத்தருவில் பிறந்த கம்பளிப்பூச்சிகள் போலிருந்தன”, புஷ்டியான மீன்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போல் தோற்றமளிக்கும் வாய்கள், அட்மிரல் நெல்சனின் போர்த்தப்பட்ட பீரங்கி போல் நீளும் கட்டைக் கால்கள் … ), சரீர பிராப்தி பெற்ற உயிர்களாய் பாத்திரங்கள், தமக்குத் தக்க உடல்கள் கொள்ளும் வகையில் நீட்டிக்கப்பட்ட சாரங்கள் (பெல்லோவின் தொகுக்கப்பட்ட கதைகளின் அருமையான முன்னுரையில் ஜேம்ஸ் வுட் இதைத் துல்லியமாய்க் கைப்பற்றுகிறார், “அவர்களின் உடல்களே அவர்கள் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள், பிழைபட்டு, உதிர்ந்து கொண்டிருக்கும் அவர்களது அறப்பூச்சுகள்…”), கதைசொல்லலில் அதே மெருகு குறையாத வகையில் சிந்தனைகளின் ஊடுபாவு, நேற்றைய சிகாகோவையும் நியூ யார்க்கையும் உயிர்ப்புடன் மீளுருவாக்கம் செய்யும் சித்தரிப்புகள், உரையாடல்கள்… சிறுகதை வடிவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் நிற்கக்கூடியவையாக இவை தம்மளவிலேயே இருக்கின்றன, ஆனால் இவற்றை விட நீண்ட நாவல்களில் இதற்கு முன்னதாகவே திளைத்திருக்கக்கூடிய ஒருவருக்கு இச்சிறுகதைகள் இரண்டாம் முறை வாசிப்பது போன்ற உணர்வு அளிப்பதைத் தவிர்க்க இவை போதாது.

தனிப்பட்ட முறையில் நான் இந்தச் சிறுகதைகளில், பெல்லோ சிகாகோவில் வளர்ந்த நினைவுகளை அகழ்ந்தெடுக்கும் பகுதிகளை விரும்புகிறேன் (Zetland, Something to Remember me by போன்ற கதைகள்); பெல்லோவின் எழுத்தில் மிக வித்தியாசமான “Leaving the Yellow House” என்ற கதையையும் விரும்புகிறேன். எண்பது வயதான ஹாட்டி வாகனர், இக்கதையின் நாயகி (!), Utah பாலைவனப் பகுதியில், சீகோ குளக்கரையில் ஒரு மஞ்சள் நிற வீட்டில் வசிக்கும் குடிகாரி. உடல் வலுவும், அறிவாற்றலும் இல்லாத அவள், தன் விளிம்பு நிலை வாழ்வைத் தடுமாறித் தொடர்கிறாள்- கார் ஓட்டிக் கொண்டு செல்கையில் கட்டுப்பாடிழந்து ரயில் பாதையில் கையை உடைத்துக் கொள்கிறாள். அதன்பின் குணமடையும் காலம் அவளுக்கு ‘கணக்கு பார்க்கும்’ காலமாகிறது, ஆனால் அவளது கையிருப்பு மிக மோசமான நிலையில் இருக்கிறது. தன் மரண காலம் நெருங்கி விட்டதை உணரும் அவள், உயில் எழுதி வைக்க நினைக்கிறாள், ஆனால் தனது மஞ்சள் வீட்டை யார் பேரிலும் எழுதி வைக்கும் அளவு தனக்கு ‘நெருக்கமானவர்கள்’ யாரும் இல்லை என்பதை உணர்கிறாள். இறுதியாக, விதிக்கு பழிப்பு காட்டும் சமிக்ஞையாகவும் தன் கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் செயலாகவும் ஒரு உயில் எழுதுகிறாள்- அவள் வீட்டை தனக்கே எழுதி வைத்துக் கொள்கிறாள். குடிகார மனநிலையில், விதியை எதிர்த்து நிற்பது போல் அவள் தன் வாழ்வை ஒரு கணித தொடர் வரிசையாய் கண்டு, அதன் முதல் மற்றும் மத்திய பதங்களை வகுத்துக் கொள்கிறாள், ஆனால் இறுதி பதம் என்ன என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறாள் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தியபடி அவள் அதை இன்னும் சிறிது திருத்துகிறாள்: துவக்கம், முன்மையம், பின் மையம், மிகப் பிந்தைய மையம்… தான் வகுக்கும் கணிதத் தொடர் வரிசை தன்னை எங்கும் இட்டுச் செல்லப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளும் அவள், தன் நடப்பு அனுபவமான மையப் பதம் மட்டுமே தனக்குத் தெரியும், பிறவனைத்தும் நம்புவதற்கில்லாத ஊகம்தான் என்று முடிவு செய்கிறாள். தன் சிதைவுகளில் சாய்ந்து நிற்கும் அவள், “எல்லாம் புரிய வரும், அது நிச்சயம் நடக்கும்” என்ற ஒரு துளி நம்பிக்கையைக் கண்ணுறுகிறாள். கதையின் முடிவும் பெல்லோவின் மைய நம்பிக்கைகளில் ஒன்றைச் சாய்கோணத்தில் தொடுகிறது- மரணம் ஒரு முடிவல்ல, துண்டுகளால் ஆன, எண்ணிக்கைக்கு உட்பட்ட ஒரு தொடர் வரிசையின் இறுதிப் பதமல்ல, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட தொடர் வரிசையின் பல பதங்களுள் ஒன்றே- தனக்கு முன் வந்த பிறவற்றைப் போல், இதுவும் அடுத்த பதத்துக்கே கொண்டு செல்கிறது.

திரும்பிப் பார்க்கும்போது, பெல்லோ எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நோக்குகையில், அவர் எழுத்தின் மிகச் சிறந்த பக்கங்கள் இவை என்று சொல்ல முடியாதபோதும் பெல்லோயிய உலகின் மிக முக்கியமான கூறுகள் என்று இவற்றைச் சொல்ல முடியும். இவற்றில் சில மிக நுட்பமாகப் புனையப்பட்டிருக்கின்றன, தம் வெளிச்சத்தின் வெம்மையில் ஒளிர்கின்றன, இவை போக பிற கதைகள் தம்மைக் காட்டிலும் ஒளிமிகுந்த உடுக்களின் ஒளியை முறித்து நிழலோவியம் படைக்கின்றன. இவற்றைக் காட்டிலும் பிரகாசமான அச்\சுடர்களில் ஒளிர, நாம் இவற்றைக் காட்டிலும் பெரிய உடுக்களுக்குச் செல்ல வேண்டும்: அவரது நாவல்கள்.

நவீன உலகின் அத்தனை சக்திகளாலும் ‘அகம்’ தொடர்ந்து அன்னியப்படுத்தப்படுவதால் மிகுந்து வரும் அச்சுறுத்தலின் பெல்லோவிய வேதனை அவரது முதல் சில நாவல்களில் தெளிவாய் ஒரு முன்நிழலாய்ப் படர்கிறது. மிகையளவில் பொதுமைப்படுத்தல் நேரிடலாம் என்ற ஆபத்து இருந்தாலும் பெல்லோவின் பிற்கால நாவல்களில் முழுமையான உருவத்துடன் தோன்றும் பாத்திரங்கள், மானுட பிரக்ஞையின் இதயத்தில், அதிகரித்து வரும் யதார்த்தத்தின் ஒழுங்கின்மை காரணமாய், விரியும் பெருந்துளையின் ஊடாய் அர்த்தம் அழிவதை போராட்டமின்றி ஏற்றுக் கொள்ள மறுக்கும் ‘தேடல் நாயகர்கள்’ என்ற பார்வையை முன்வைக்கலாம். மாறாய், ‘மானுட அகம்’ தனக்குரிய சுயமரியாதையை மீண்டும் நிறுவவும், அண்டத்தின் பிற சக்திகளுடன் இணங்கிச் செல்லும் சாத்தியத்துக்கும் தேவைப்படும் செயல்திட்டங்களை நோக்கி தொடர்ந்து தேடிச் செல்கிறார்கள். முந்தைய நாயகர்கள் தம் வாழ்வின்  ‘அச்சுக் கோடுகள்” எவையோ அதில் ஏதோ ஒன்று “தடம் புரண்டிருக்கிறது” என்பதை உணர்ந்திருந்தாலும், அவற்றோடு மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவும் ஒழுங்கான உத்திகளை உருவாக்கிக் கொள்ளவோ செயல்படுத்தவோ இயலாதவர்களாய் இருந்தனர். அவர்கள் தம் தோல்வியுற்ற தேடல்களில் ‘தொங்கலில்’ விட்டுச் செல்லப்பட்ட ‘பலிகள்’ ஆனவர்கள்.

‘Dangling Man’ல் ஜோசப் (அவனது முழுப்பெயர் குறிப்பிடப்படுவதேயில்லை), ஒரு சாமானிய குமாஸ்தா. அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பணியில் இணைவதற்கான ஆணை பிறப்பிக்கப்படுவதையடுத்து அவன் இன்டர் அமெரிக்கன் ட்ரேட் பியூரோவில் உள்ள தன் வேலையை விட வேண்டியதாகிறது. ஆனால் அவன் பணியில் இணைவதை ராணுவத்தின் நிர்வாக இயந்திரம் தாமதம் செய்கிறது, அவன் கனடாவில் பிறந்தவன் என்ற காரணத்தால். வேலையின்மைக்கும் ராணுவப் பணி நியமன சாத்தியத்துக்கும் இடைப்பட்ட அடையாளமற்ற வெறுமையில் அவனுக்கு தன் வாழ்வைக் குறித்து உள்நோக்கிக் காண நேரம் வாய்க்கிறது- ஆனால், அவனுக்கே ஏமாற்றமளிக்கும் வகையில் அது குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லாது அர்த்தமற்றதாய் இருக்கிறது. புறவுலகம் (“விளம்பரப் பதாகைகள், வீதிகள், பாதைகள் மற்றும் வீடுகள்”), “அவலம் நிறைந்ததாகவும் பார்வையற்றதாகவும்” இருக்கிறது என்பதை உணர்கிறான், எத்தனை கற்பனை செய்தாலும் அவனுள் இருப்பதற்கு இணையான எதையும் (“மனிதர்கள் எதைப் படைக்கிறார்களோ, அவ்வாறே அவர்களும்”) அதில் காண முடியாது என்பதைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறான். “பொருட்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, ஏன், செயல்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில்கூட வேறுபாடு இருக்கிறது” என்பதையும் “அங்கு வாழும் மனிதர்கள்” உண்மையில் “அவர்கள் வாழ்பனவற்றின் மெய்ப் பிரதிபிம்பங்கள் அல்ல,” என்பதையும் முன்னிறுத்த விரும்புகிறான். “அக வேறுபாடுகளை”ப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தில், “புறத்திருந்து கிட்டிய, தன் முயற்சியால் அடையாத” ஆற்றல்களின் எளிய ஆறுதல்களை நிராகரிக்கிறான், ஆனால் இந்த உலகோ அவனது அகத்தைத் தன் எங்கும் நிறைந்த “துரோகங்களாலும்” நம்பிக்கை மோசடிகளாலும் அடியறுக்கிறது.

காம்யூவின் ‘அன்னியனுக்கும்’ ‘டாங்க்லிங் மேனுக்கும்’ இடையிலுள்ள ஒற்றுமைகளை விமரிசகர்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர். காம்யூவின் நாயகன் Meursault தன் ‘அபத்த’ தத்துவத்தை நாவலின் முடிவில் அடைகிறான் என்றால் அதுவே ஜோசப்பின் அடிப்படை நம்பிக்கை என்ற இடத்தில்தான் பெல்லோவின் நாவல் துவங்குகிறது. இந்த நம்பிக்கைக்கு ஏற்ப நிஜ வாழ்வில் இருப்பதன் விளைவுகளை எதிர்கொள்வதுதான் அவனது சவால். கற்பனையை அடித்தளமாய்க் கொண்ட வாழ்வில் விடுதலையடையும் சாத்தியம் உண்டு என்பதை அவன் தன் கலைநாட்டமுள்ள நண்பனைக் கொண்டு ஏற்றுக் கொள்கிறான் என்றால், “கலையும் சிந்தனையும்” நிறைந்த உலகின் இருப்பைத் தொடர்ந்து உறுதி செய்வதற்குத் தேவையான கலையாற்றல்களோ வேறு சாதனங்களோ தன்னிடம் கிடையாது என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். தனிமையும் துயரும் நிறைந்த அவன் தன் சிக்கலிலிருந்து தப்பும் வழி தற்கொலையாக இருக்கலாம் என்றுகூட நினைத்துப் பார்க்கிறான், ஆனால் மரணத்தின் தீர்மானமான முடிவு எதிர்பார்ப்புகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது என்பதால் அதை நிராகரிக்கிறான். தன் தேடலுக்கான உந்துவிசையை அவன் முழுமையாய் புரிந்து கொள்வதேயில்லை, ஆனால் தனி மனிதர்களின் சரித்திரம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் அந்த உந்துவிசை பொதுவான ஒன்றுதான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். “ஆன்மாவின் ஆழ்பள்ளங்களை” நோக்கிச் செலுத்தும் ஈர்ப்பு போன்ற ஒரு ஆற்றல் அதுவென்று அவன் வகுத்துக் கொள்கிறான், அது “நம் காரணத்தை அறியவும்” அருளை விழையவும் கட்டாயப்படுத்துகிறது. ஆனால் எந்தத் தேடலைச் சித்தரிப்பதாய்ச் சொல்லிக் கொள்கிறதோ, அதற்குப் பொருளுள்ள வகையில் தீர்வு காண்பதில் இந்த நாவல் தடுமாறுகிறது. இறுதியில் இந்த சிசிஃபிய நாயகன் ராணுவ வாழ்வின் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறைகள் தனக்கு மகிழ்ச்சியையொத்த ஒரு நிலையையும், “ஆன்மாவுக்கு நெறியாளுகையும்” அளிக்கும் என்று தன்னை ஏமாற்றிக் கொள்வது வாசகனுக்கு நிறைவளிப்பதாய் இல்லை.

‘டாங்க்லிங் மேன்’ நாவலின் ஜோசப், ‘அவிந்தடங்கிய- நிலை’யின் (Hardboiled-dom) விளைவுகள் மன உந்துதல்களுக்குத் தடையாய் இருப்பதைப் பேசுகிறான், ஆசா லீவன்தால், ‘விக்டிம்’ நாவலின் துவக்கப் பகுதிகளிலாவது (இதன் கதைப்போக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் ‘தி எடர்னல் ஹஸ்பண்ட்’ குறுநாவலின் தளர்வான பிரதிபிம்பமாய் இருக்கிறது), “குறிப்பிட்ட சில உணர்வு நிலைகளுக்கு” இடம் கொடுக்க மறுப்பதன் மூலம் ‘அவிந்தடங்கிய’ நிலையின் உருவமாய் இருக்கிறான். ஜோசப்பைப் போலவே ஆசாவும் உலகோடு ஒன்ற இயலாதவனாய் இருக்கிறான், அவன் தன் நகரம், பணி, குடும்பம் ஆகிய சுமைகளின் எடையை உணர்ந்திருக்கிறான், தன் சிக்கல்களுக்கு எல்லாரையும் குற்றம் சாட்டுகிறான், பிறரும் பதிலுக்குத் தன்மீது பழி சுமத்துவதாய் கற்பனை செய்து கொள்கிறான். ஆசா அழைக்கப்பட்டிருக்கும் கூடுகை ஒன்றுக்கு தலைமை தாங்கும் ஷ்லாஸ்பெர்க் என்ற சிறு பாத்திரத்தின் தொடர்ச்சியற்ற பேச்சுப் பிரவாகத்தைக் கொண்டு ஆசாவின் இயல்பில் உள்ள குறைகள் தீர்மானமான வகையில் எடுத்துரைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் அதன் எளிய அடிப்படைகளுக்குக் குறைத்துப் பேசும் தத்துவ மரபை  ஷ்லாஸ்பெர்க் விமரிசிக்கிறான், மனித வாழ்வின் “மகத்துவமும் அழகும்”, “கண்களால் அல்ல இதயத்தால்” உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும், வாழ்வில் கிட்டக்கூடிய பல்வகைப்பட்ட அனுபவங்களுக்கு மனிதன் தன்னைத் திறந்து வைத்துக் கொள்ள இதயமே மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறது. ஆசாவின் கற்பனை அச்சங்களுக்கான மருந்து இதுவேதான் என்று பரிந்துரைக்க முடியும் என்றாலும், நாவலின் இந்தக் கட்டத்தில் அவன் தானாகவே மாற்றத்துக்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் அளவுக்கு தன்னைத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதில்லை. அவனைக் காட்டிலும் அதிக அளவில் பெரும்பீதி வசப்படும் கிர்பி ஆல்பீயின் சதித்திட்டங்களுக்குப் பின்னரே அத்தகைய கொந்தளிப்பு சாத்தியமாகும்.

இந்த இடத்திலிருந்து ஆசாவின் வாழ்க்கை ஆல்பீயுடன் பிணைக்கப்படுகிறது, அவன் ஒரு குற்றச்சுமையாய் இருப்பது என்ற முன்தீர்மானத்துடன் ஆசாவின் தோள் மீது ஏறிக் கொள்கிறான் (சில ஆண்டுகளுக்கு முன் வேலை பறி போனதற்கும், அதன் விளைவாய் தான் வறுமைவாய்ப்பட்டு, மனைவி இறந்து இப்போது தன் வாழ்வு சிதில நிலையில் இருப்பதற்குமாய் எல்லாவற்றுக்கும் ஆசா தன் வேலைக்கு வேட்டு வைத்ததுதான் காரணம் என்று அவன் குற்றம் சாட்டுகிறான்). ஆல்பீயின் சிக்கல்களுக்கு தான் எந்த வகையிலும் பொறுப்பேற்கத் தேவையில்லை என்று ஆசா முடிவு செய்வதிலிருந்து, இறுதியில் அவனுக்கு உதவி செய்து, ஆல்பீயை விடுவித்து, இருவருக்கும் பொதுவான மானுடத்தை மீட்டெடுப்பதன் வாயிலாய் தாளவொண்ணாச் சுமையிலிருந்து விடுதலை பெறுவதை நாவல் விவரிக்கிறது. ஒரு இடத்தில், ஆல்பீயுடன் “அந்தரங்க நெருக்கம் நிறைந்த ஒரு உணர்வு” இருப்பதாய் ஆசா உணர்கிறான், “அவனது உடலின் கனத்தையும் அவனது ஆடைகளின் தொடுகைகளையும்”கூட அவனால் உணர முடிகிறது. தன்னை வெறுக்கும் ஒருவனுடன் முழுமையான புரிந்துணர்வு கொள்ளும் “இலக்கு நிலைப்பாட்டின்” உச்சம், பிற மனிதர்களுடன் தனக்கு எது பொதுவாய் இருக்கிறதோ அதை மீட்டுக்கொள்ள உதவுகிறது. இப்போது அவன், தன் குற்றச்சுமையை இறக்கி வைக்கும் சுதந்திரம் தனக்கு உள்ளது என்பதை மட்டுமல்ல, அதற்கு தான் பொறுப்பேற்றுக் கொண்டாக வேண்டும் என்பதையும் அறிகிறான். பிறரின் துயர்களை ஆற்றுவது ஒருவகைப்பட்ட  அற ஒருங்குறவால் அவனுள் உள்ள குற்றவுணர்ச்சியை ஆற்றுவதில் முடிகிறது. இறுதி அத்தியாயம் இன்னும் சிறிது முழுமை பெற்ற மனிதனாய் அவன் தந்தைமையின் சுகமான சுமைகளை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குவதாய்ச் சித்தரித்து முடிவுக்கு வருகிறது. அந்த வகையிலாவது அவன் தன் மூதாதையான ஜோசப்பைவிட சிறிது முன்னேறியிருக்கிறான்- அன்றாட வாழ்வின் எல்லைகளுக்குள் அருளப்பெறும் வாய்ப்புக்குத் தன்னை திறந்து கொண்டிருக்கிறான்.

ஓரளவுக்கு வெற்றி பெற்றவைதான் என்றாலும் பெல்லோவின் துவக்ககால நாவல்களான இவற்றில் அவரது சிறந்த நாவல்களின் முத்திரை என்று சொல்லத்தக்க எள்ளல் தீவிரத்தன்மையின் உயர்வகை நகைச்சுவை இருப்பதில்லை. இந்த இரண்டு நாவல்களிலும் இறுக்கமான ஒரு சூழலும் காஃப்கா அல்லது தஸ்தாயெவ்ஸ்கி பாணியில் இருத்தலியல் நீதிக்கதைகளைச் சொல்வதற்கான முயற்சியும் காணப்படுகின்றன (தனது ‘விக்டிம்’ நாவலின் நடைக்கு  ஃப்ளாபேர் ஒரு முன்னுதாரணமாய் இருந்தார் என்பதை பெல்லோவே குறிப்பிடுகிறார்). அன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நவீனத்துவ பாணியிலிருந்து பெல்லோ மெல்ல மெல்ல விலகி, இன்னும் சற்று நெகிழ்வுத்தன்மையும் நகைச்சுவையும் இலகுத்தன்மையும் கொண்ட ஒரு நடையை மேற்கொண்டு புனைவாசிரியனாய் தனக்கேற்ற பாணியைப் பின்னரே கண்டடைகிறார். ஆனால் அங்கு வந்து சேர்வதற்கு முன் அவர் முதலில் தன் மனத்தடைகளை உடைத்துக் கொண்டு ‘அனைத்தும் உட்கொள்ளும் நடை’ கொண்ட மகத்தான அந்த The Adventures of Augie March என்ற ஒரு picaresque நாவலை எழுதியாக வேண்டியிருந்தது.

தேடல் நாயகனுக்குரிய சர்வ லட்சணங்களும் பொருந்திய ஆகி, 1953ஆம் ஆண்டு இவ்வுலகில் தோன்றுகிறான்- “உற்ற வெகுமதியளிக்கும் ஒரு கதி” நிலையே அவன் தேடும் பாரிஜாதம், தன்னிடம் இயல்பாய் பொருந்தியிருக்கும் திறமைகளுக்கு ஏற்றதாய் இக்கதிநிலை இருக்க வேண்டும் என்று விழைகிறான்.  கதை ‘கனத்த நகரில், ட்ரைஸரிய (Dreiser) சிகாகோவில் (‘சாம்பலின் கனத்த மேலங்கி போர்த்தப்பட்டது’) துவங்குகிறது, விட்மானிய உற்சாகத்துடன்: “நான் ஒரு அமெரிக்கன், சிகாகோவோவில் பிறந்தவன்… வரம்பற்றவன் என்று என்னை வரித்துக் கொண்டவன், இந்த ஆவணத்தை என் போக்கில் பதிவு செய்யப் போகிறேன்: முதலில் தட்டியவன், முதலில் அனுமதிக்கப்பட்டவன்”.

அமெரிக்க இலக்கியத்தின் மகத்தான துவக்கங்களில் ஒன்றான இது அதன் நாயகனின் உயர்ந்தெழுந்து நிற்கும் தனித்தன்மையை நிறுவும்போதே நாவலின் பேச்சு நடைக்கும் கட்டியம் கூறுகிறது. 1930களின் மாபெரும் பொருளாதாரத் தேக்கத்துக்கு முற்பட்ட சிகாகோவில் துவங்கும் நாவல் (அப்போது ஆகியின் வயது எட்டு), அடுத்தடுத்த நிகழ்வுகளின் வழி நகர்ந்து இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிற்பட்ட ஐரோப்பாவில் முடிகிறது. கதைசொல்லியின் இயல்பான உற்சாகம் போதாதென்று ஆகி தன் பேர்பெற்ற ஆகிருதியை நிலைநாட்ட அடுத்தடுத்துப் பொருதும் வலுவான ஆளுமைகளின் தொடர்வரிசை, கதையின் நிகழ்வுகளுக்குக் கூடுதல் விசை தருகிறது.

லாஷ் பாட்டி, மார்ச்களால் தம் வீட்டில் ஒரு அறையில் வாடகைக்கு குடி வைக்கப்பட்டவர், ரஷ்யாவிலிருந்து புலம் பெயர்ந்தவர், “சிறு தெரு மற்றும் சுற்றுப்புற மக்கியவெல்லிகளில்” ஒருவர் (“Machiavellis of small street and neighborhood”). “தீரத்தின் பாடங்களை” புகட்டி ஆகியின்மீது துவக்க காலத்திலேயே குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தும் ஆளுமையாகிறார் (“மக்கியவெல்லியர்களிடையே வாழ்க்கை” என்றுதான் பெல்லோ முதலில் இந்த நாவலுக்கு தலைப்பு வைத்திருந்தார்).. கணவனால் கைவிடப்பட்ட தையல்காரியும் பணிந்து போகும் குணம் கொண்டவளுமான ஆகியின் அம்மாவை ஆட்டிப்படைப்பவர், இந்தப் பெண் தன் சூக்குமமான அறிவைக் கொண்டு அன்புக்கு பதில் “மரியாதை” கோரி மார்ச்சுகளுக்கு ஒரு எஜமானி போலிருக்கிறாள். அவன் கூர்மையாக கவனித்து பாட்டியின் ‘உலகாயத” நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளும்போதும் (அவரது போதனைகளில் “பறவைகளுக்கும் புழுக்களுக்கும் உரிய போர்க்குணத்தை” அவன் உள்வாங்கிக் கொள்கிறான், மனவளர்ச்சி குன்றிய அவனது சகோதரன் ஜார்ஜியை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்று ஈரமின்றி வாதிடச் செய்யும் அளவுக்கு வலிமையான போதனைகள்), ஆகியிடம் எதற்கும் இணக்கமாய்ப் போகாத ஒரு உறுதியான மையம் இருக்கிறது, அது தனது சுதந்திரத்தை அச்சுறுத்தும் விசுவாசங்களுக்குக் கட்டுப்பட தொடர்ந்து மறுக்கிறது. பாட்டி சொன்ன வேலைகளை எல்லாம் செய்யும்போதும் (பொதுச் சுகாதாரத் துறையில் பொய் சொல்லி தன் அம்மாவுக்கு கண்ணாடி வாங்கி வருகிறான்), உரிய உணர்வுகள் தூண்டப்பட்ட காரணத்தால்தான் தான் துணை போகிறான் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் அளவு எச்சரிக்கையாய் இருக்கிறான், ஜனாதிபதியாகும் தகுதிகள் தனக்கு இல்லை என்றாலும் “விருப்பமிருந்தால்” தான் ஒரு காட்டோவாகவோ லிங்கனாகவோ தன்னை மாற்றிக் கொண்டிருக்க முடியும் என்றும் சொல்லிக் கொள்கிறான்.

தேவைப்படும் இடத்தில் “மாட்டேன்” என்று சொல்லக்கூடிய பிடிவாதமான சண்டித்தனம் ஆகியின் குணவமைப்பின் மையத்தில் இருப்பதை முதலில் அவனது ஊனமுற்ற முதலாளி, சக்திவாய்ந்த, நிழல் சங்கதிகளில் புழங்கும் வில்லியம் ஐன்ஹார்ன்தான் கவனிக்கிறார்- ஒரு சில்லறை திருட்டு தொடர்பாக ஆகியை நேருக்கு நேர் விசாரிக்கும்போது அவர், “உன்னிடம் எதிர்ப்புக் குணம் இருக்கிறது, நீ எல்லாவற்றையும் மென்று முழுங்கிக் கடப்பதில்லை,” என்று சொல்கிறார். ஐன்ஹார்ன் அவனை ஒரு அடியாள் போல் பயன்படுத்திக் கொள்கிறார், “நிழல்தன்மை கொண்ட, குறிப்பிட்டுச்  சொல்லப்படாத பணிகளில்”. ஐன்ஹார்ன் உடை எடுக்க உதவுதல், அவரை முதுகில் சுமந்து செல்லுதல், எல்லாவற்றையும்விட முக்கியமாக, அவரது வாழ்க்கைக் கதையை காது கொடுத்துக் கேட்டல், காட்டாற்று வெள்ளமெனப் பெருகும் அவரது அறிவுரைககளுக்குப் பணிதல் என்பதெல்லாமும் குறிப்பிட்டுச் சொல்லப்படாத அவனது வேலைகளில் அடக்கம். தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்திய முதன்மை காரணத்தால் ஐன்ஹார்னை ஆகி நேசிக்கிறான். அடுத்து, அவரது “மூளை,  பல்வேறு திட்டங்கள், பிறரை ஆட்டுவிக்கும் நிஜமான ஆற்றல், தத்துவங்களை உள்வாங்கும் தன்மை” என்ற காரணங்கள்.

நாவல் அடுத்தடுத்து ஆகியின் உலகில் வேறு பல உண்மை விளம்பிகளையும், “மெய்ம்மைப் பயிற்சியாளர்களையும்” வரிசையாய்க் கொணர்ந்து தொடர்கிறது; புத்தகத் திருடன் படில்லா, தொழிற்சங்கவாதி கிராம்மிக், ட்ராட்ஸ்கியனான ஃபிரேஸர், ஐன்ஹார்னின் இருண்ட அச்சு என்று சொல்லத்தக்க கறுப்புச் சந்தை வியாபாரி மின்டூச்சியான், என்றிவர்கள் மட்டுமல்ல, அவனது கசின் அன்னா, மிசஸ் ரென்லிங், மிமி விளர்ஸ், மற்றும் கண்டங்களைக் கடந்து விரியும் அவனது காவியக் காதலி தியா ஃபெஞ்சேல் என்று பல பெண்களும் அவனுக்கு படிப்பினை புகட்டுகின்றனர். ஹக் ஃபின்னுக்கு அடுத்தபடி மிகவும் ”தத்தெடுத்து வளர்த்தத்தக்க” பாத்திரங்களில் ஒன்று என்று ஆகியை விமரிசகர்கள் அழைத்திருக்கின்றனர்.

ஆனால் தன் வாழ்வின் துவக்க நாட்களிலேயே ஆகிக்கு தன்னைத் தத்தம் கொடுப்பதன் உள்ளார்ந்த அச்சுறுத்தல்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. தன்னைத் தத்தம் கொடுத்தல் நிஜம் குறித்த பிறிதொருவரின் பார்வையை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது என்பதையும் அவன் அறிந்திருக்கிறான், அது நிச்சயம் “அவனுக்குத் தக்க கதியல்ல”. தனக்குரியதாய் அல்லாத ஒரு கோட்பாட்டின் நியாயமற்ற பொறியில் விழ மறுக்கும் விட்மானிய ஆகி, பல்லுருவம் கொள்ளும் பிடிகொடாமையை தப்பிச் செல்லும் ஒரு வழியாய்க் கையாள்கிறான். பாத்ரூம் பெயிண்ட் விற்பது, புலம் பெயர்ந்தவர்கள் கனடிய எல்லைக்கு அப்பால் கள்ளத்தனமாய் குடிபுக உதவுவது, புத்தகங்கள் திருடுவது (அவற்றை அவன் வாசிக்க விரும்புவதால்- அவை விற்பனைக்கல்ல!), தொழிற்சங்கத் தலைவனாய் செயல்படுவது என்று ஆகி நவீன இலக்கியத்தின் மகத்தான சில்லறைப் பணிகளின் நாயகனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். அவன், “தானாய் இருக்க முடியாத எந்த நீரோட்டமும் தன்னை” உள்ளிழுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டான், என்றாலும், “எப்போதும் ஏதேதோ விஷயங்களில்” தன்னையறியாமல் செலுத்தப்படுகிறான், ஆனால் (விமரிசகர் டோனி டான்னர் சொற்களில்), “இறுதியில் திடீரென்று குதிகால் மண்ணில் புதைய நின்று விடுகிறான், அல்லது திடீரென்று பற்றுதலிலிருந்து பிய்த்துக் கொண்டோடுகிறான்”.

புத்தகத்தில் பாதி கடந்த நிலையில், தன் அண்டை வீட்டில் இருக்கும் மீமீயின் விவகாரங்களுக்குள் ஆகி தன்னை இழுத்து விட்டுக் கொள்கிறான்- குழந்தை தனதாக இல்லாதபோதும் அவள் கருச்சிதைவு செய்து கொள்ள அவன் உதவுகிறான். இதன் விளைவாக அரசல் புரசலாகப் பல வதந்திகள் கிளம்புகின்றன, முடிவில் அவனது சகோதரன் சைமன் அவனை அதிர்ஷ்டமில்லாத முட்டாள் (schlemiel) என்று நிராகரிக்கிறான். நாகரிக வார்ப்புகள் இல்லாத மனநிலை கொண்ட மீமீ, “உயர்ந்த விழுமியங்கள் கொண்டவள், அதைப் பிறர் காணத் தவறுவதை விரும்பி ஏற்றுக் கொள்பவள்”.  மனிதர்களின் அறிவில் மிகப்பெரும் மதிப்பு வைத்திருக்கும் மீமீ, முயற்சியும் மேன்மையும் கூடிய துன்பக்காற்றை சுவாசிக்க மறுப்பவர்கள், “சிக்கல்களற்ற இருப்பு, அலுவலகச் சிறை, அமைதியான கிடங்கில் புரையோடிப் போதல், நம்பிக்கைக்கு இடமில்லாத திருமணத்தின் அங்கீகரிக்கப்படாத துயரம் என்ற பல்வகை நச்சுப் புகை கவியும் சாதாரண மரணம்” அடையட்டும் என்று விரும்புகிறாள். தன் காதலின் உச்சத்தில் மீமீ, “அதற்காகவே பாலைவனத்தில் திசைதெரியாமல் வாழ்ந்திருப்பாள், வெட்டுக்கிளிகளைத் தின்று.”

இங்குதான் ஆகி, தன் மகத்தான சுய தரிசனங்களில் ஒன்றை அடைகிறான்: எல்லாரும் (லாஷ் பாட்டி, ஐன்ஹார்ன், ரென்லிங்க்ஸ்) அவனது விதி பகிரப்படுவதை உறுதி செய்கிறார்கள், இந்த முயற்சியில் தங்கள் பிம்பத்தில் அவனுக்கென்று ஒரு ‘ஆதர்சத்தை’ கட்டமைத்துத் தருகிறார்கள். தன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு இத்தனைக்காலம் அதற்கு எதிராகவே தான் எச்சரிக்கையாக இருந்திருக்கிறோம் என்பதை ஆகி இப்போது உணர்ந்து கொள்கிறான். அவனது இத்தன்மை காரணமாகவே மக்கியவெல்லிகள் யாரும் அவனைத் தம் விருப்பப்படி ஆட்டுவிப்பதில் முழு வெற்றி பெறுவதில்லை.

ஆனால் சுயதேடலில் அவனது மகத்தான பயணம், பணக்காரியும் மர்மமானவளுமான தியா ஃபென்செலுடன் நிகழ்கிறது (தியா என்பது இறைவி என்று பொருள்படும் கிரேக்கச் சொல்)- சாகசங்கள் மிகுந்த தனது விதியின் விசையில் அவள் ஆகியை மெக்சிகோவுக்கு இழுத்துக் செல்கிறாள், அங்கு அவர்கள் ஒரு கழுகைக் கொண்டு Giant Iguanaக்களை வேட்டையாடுகின்றனர். காலிகுலா என்று ஆகி பெயர் சூட்டும் கழுகும் (கழுகு என்று பொருள்படும் ஸ்பானிஷ் சொல்லான ‘aguila’வை சிறுவர்கள் கூவியழைப்பதை அவன் தவறாகப் புரிந்து கொள்கிறான்) “அத்தனை சேதம் விளைவிக்கும்” பயங்கர எதேச்சாதிகாரம் மிகுந்த கண்களின் பார்வையும் ஆகிக்கு “தன் தேவைக்காகவே அவன் இங்கிருக்கிறான்” என்று அறிவிக்கும் குரூர கொள்கைப் பிரகடனமாய்த் தோன்றுகிறது. எந்த ராட்சத பல்லியை வேட்டையாடப் பயிற்சியளிக்கப்பட்டதோ அந்தப் பல்லி நிலைமையைத் தலைகீழாக்கும் வகையில் கழுகைக் கடிக்கும்போது மூர்க்க டார்வினியத்தின் உச்சம் சோடை போகிறது. மானுட அச்சங்களாலும் தயக்கங்களாலும் களங்கப்படாத “கூர்மையான” குரூர இயந்திரமான காலிகுலா அத்தனை புறத்தோற்றங்களுக்கும் உள்ளே வேறொரு உணர்வு கொண்டதாய் இருப்பது தியாவுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் தியாவின் டார்வினிய யதார்த்தத்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்காத ஆகி இதைப் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை. மாறாய், காலிகுலாவின் வழியே அவனுக்கு ஒரு பரவச நிலை தரிசனம் கிட்டுகிறது- “மிக எளிய கண் சிமிட்டல் முதல் உயர்நிலை பிரகாசம் கொண்ட நட்சத்திரங்கள் வரை அத்தனை அறிவும் அடிப்படையில் ஓரியல்பு கொண்டதே” என்று உணர்கிறான்.

Bizochoவிலிருந்து ஆகி கீழே விழுந்து அதனிடம் தலையில் உதை வாங்கும் நிகழ்ச்சிக்குப்பின் தியா காலிகுலாவையும் ஆகியையும் கைகழுவி விடுகிறாள் (“உன்னால் எனக்குப் பிரயோசனமில்லை”), தனக்கு ஒரு புதிய காதலனையும் தேடிக் கொள்கிறாள். இந்த நிராகரிப்பால் ஆகி “கொஞ்சம் சாகிறான்” என்றாலும், இந்த அனுபவம் முழுமையும் அவனுக்கு ஒரு கசப்பான படிப்பினையைக் கொடுத்து உதவுகிறது. இத்தனை நாட்களாய் அவன் உள்ளூர அறிந்திருந்த உண்மையை அது உறுதிப்படுத்துகிறது. தியா போன்றவர்கள் மெய்ம்மையை அதைக் காட்டிலும் உயர்ந்த, அதனை மேன்மைப்படுத்துவதாய்ச் சொல்லிக்கொள்ளும் ஒரு கருத்து நிலையினுள் கரைக்கின்றனர். ஆனால் நாம் என்னதான் புனைகதைகளை இட்டுக்கட்டிக் கொண்டாலும், “மெய் உலகம் ஏற்கனவே படைக்கப்பட்ட ஒன்றாகவே விடாப்பிடியாய் தொடர்கிறது. அதைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்திருப்பதால் எல்லாம் நல்லபடி நடந்தால் மிகவும் ஆச்சரியம் அளிப்பதாகவும், சோகமானதாகவும் துயரமானதாகவும் இருந்தால் நாம் புனையக்கூடியதைவிட மோசம் போகாததாயும் இருக்கிறது”

இறுதியில் ஆகி மெக்சிகோவை விட்டு வெளியேறுகிறான், அமெரிக்கா உலகப்போரில் நுழையவிருக்கும் தருணத்தில் ஊர் திரும்புகிறான்,  ஸ்டெல்லாவை திருமணம் செய்து கொள்கிறான் (அவளது முன்னாள் காதலனிடமிருந்து அவளை மீட்டிருப்பதாய்ச் சொல்லிக் கொள்கிறான்.) அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு இல்லம் அமைக்கலாம் என்ற எண்ணத்தில் அவன் சில காலம் தீவிரமாக இருக்கிறான். ஆனால் இரண்டாம் உலகப் போரின் சுழலில் உட்கொள்ளப்பட்டு, கடல் கடந்து செல்லும் ஒரு துருப்புக் கப்பலில் வந்து நிற்கிறான். அந்தக் கப்பல் ஒரு நீர்மூழ்கி ஏவுகணையால் தாக்கப்பட்டு லைஃப் போட்டில் சிக்கிக் கொள்கிறான்- ஆனால் அங்கே ஆச்சரியத்திலும் ஆச்சரியம், இந்த நீர் சூழ் அத்துவானக் காட்டிலும் அவனுக்காக மற்றுமொரு மக்கியவெல்லிய மெய்ம்மைப் போதகர் காத்திருக்கிறார். இம்முறை அவன் எதிர்கொள்வது மனநிலை பாதிப்புக்குள்ளான உயிரியலாளர் ஒருவரை, அவர் மெய்ம்மையை ஒரு சில அறிவியல் தேய்வழக்குகளில் எளிமைப்படுத்தி பொட்டலம் கட்டித் தருகிறார். மீண்டும், தான் பிறந்த “ஊழிய ராசிக்கு அஞ்சி”, ஆகி தன் நிலையில் உறுதியாய் நிற்கிறான் – ஏற்கனவே வாழ்க்கைப் பாடத்தைத் தான் கற்றுக்கொண்டு விட்டதாய்ச் சொல்லி, “மானுட இனம் மொத்தத்துக்கும் எதையாவது செய்து கொண்டிருப்பதை” தான் தீவிரமாக எதிர்ப்பதாகவும் சொல்கிறான்.

நாவலின் இறுதியில் ஆகி கறுப்புச் சந்தை வியாபாரி மின்டூச்சியனின் ஏஜெண்ட்டாக ஐரோப்பாவில் சரக்கு விற்றுக் கொண்டிருக்கிறான், அவனது மனைவி பாரிசில் ஒரு நடிகையாய்ப் தொழில் செய்து கொண்டிருக்கிறாள். நாம் இறுதியில் அவனைப் பிரியும்போது அவன் “ஓநாய்ச் சாம்பல்” நிற டன்கர்க் கப்பலில், நவீன உலக அழிவுகளின் அண்மையில் காலமின்மையே திறந்து கொண்டது போல், கடலின் வெண்ணிற அலைகள் அறைந்துச் சிதறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனுள் எப்போதுமே எழும்பிக் கொண்டிருக்கும் சிரிக்கும் மிருகமானது (Animal Ridens) முடிவில் இயற்கையையும் காலமின்மையையும் கண்டு உரத்துச் சிரிக்கிறது.- “நம்மையும் நம்பிக்கையின் ஆற்றலையும் வெற்றி கொள்ள முடியும்” என்ற அவற்றின் நம்பிக்கையைக் கண்டே அது நகைக்கிறது. (துவக்க வாக்கியங்களுக்கு இணையான சிறப்பு கொண்ட) இறுதி வாக்கியங்களுக்கு வரும்போது நாம் ஆகியுடன் முழுவதும் உடன்படுகிறோம்- “கைக்கெட்டும் தூரத்தில் உள்ளவர்களின் கொலம்பஸ்” என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் அவன், “இந்த முயற்சியில் தோற்றுப் போகலாம். கொலம்பஸேகூட சங்கிலிகளில் பிணைத்து ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது தன்னை தோற்றுப் போன ஒருவனாகவே நினைத்திருக்கலாம், ஆனால் அதனால் அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவில்லை என்றாகிவிடவில்லைதானே?”

~oOo~

தன் தேடலின் தெளிவாய் உரைக்கப்படாத இலக்கு நோக்கிய பயணத்தில் ஆகி இருப்புக் கொள்ளாமல் கண்டங்கள் கடந்து சென்றால் பெல்லோவின் மிகவும் புகழ்பெற்ற நாயகன் அதையே கிடந்த நிலையில் சாதிக்கிறான். ஆன்மீக உலகில் “உயர்ந்து” செல்ல முயற்சி செய்வதைச் சமன்படுத்துவது போல் அவன் எப்போதும் “கீழே” படுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதும் கனன்று கொண்டிருக்கும் அவனது மனதின் கூர்நோக்கை நவீன மானுட அனுபவத்தின் மையக் கூறுகளின் மீது செலுத்துகிறான். ‘ஹெர்ஸாக்’ கிட்டத்தட்ட அதன் முடிவில் துவங்குகிறது, பெர்க்-ஷைர்ஸில், ஆகியைப் போலவே மறக்கமுடியாதபடிக்கு: “நான் அறிவுகெட்டவன் என்றால், அதனால் எனக்கு ஒன்றுமில்லை” (“If I am out of my mind, it‘s all right with me.”). படுத்துக் கிடக்கும் இந்த உயர்ந்த பார்வையைக் கொண்டு நாவல் பெரும்பாலும் பின்னோக்கிப் பார்க்கும்- அவனை அந்த இடத்துக்குக் கொண்டு வந்த அவன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை நோக்கி, மனத்தால் தளர்ந்திருந்தாலும் வாதைக்குட்பட்ட அவன் உள்ளத்தின் குழப்பப் பாதைகளிலிருந்து வெளியேறும் வழியை இன்னமும் தேடிக் கொண்டிருப்பதையும் அது விவரிக்கும்

நாவலின் பெரும்பாலான விஷயங்கள் ஹெர்ஸாக்கின் மனதில் நடப்பதால் வழக்கமான வகையில் வளரும் கதையென்று ஒன்றும் இல்லை. மணவாழ்வு அலுத்துப் போய் விட்டது என்ற காரணத்தால் தன் முதல் மனைவி டெய்ஸியை விவாக ரத்து செய்தபின் அடுத்தடுத்து சில பெண்களுடன் நெருக்கமான உறவு கொண்டு இறுதியில் அவன் மாடலெய்னை மணம் செய்து கொள்கிறான். அவளோ அவன் மேற்கொண்டுள்ள ஆய்வை சீக்கிரம் முடித்துவிட்டு பெரிய ஆள் ஆகும்படி உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கிறாள் (, “மற்ற ஆய்வாளர்கள் நிற்கும் இடத்தை உலுக்கி எது எப்படி என்பதை அவர்களுக்கு உணர்த்தப் போகும் ஆய்வு”). இது போதாதென்று பெர்க்-ஷைர்ஸில் உள்ள லூடிவில்லில் சிதிலமடைந்து கொண்டிருக்கும் பெரிய ஒரு வீட்டையும் அவனை வாங்கச் செய்கிறாள். தன் நினைவுகளிலும் வீட்டின் சேதாரங்களைச் செப்பனிடுவதிலும் ஹெர்ஸாக் ஆழ்ந்திருக்கையில் மாடலெய்ன் அவனது நெருங்கிய நண்பன் வாலண்டைன் கெர்ஸ்பாக்குடன் கள்ள உறவு கொள்கிறாள். கீழ்த்தரமான இந்த துரோகம் இரட்டிக்கிறது – ஹெர்ஸாக்குகளும் கெர்ஸ்பாக்குகளும் மாடலெய்னின் கட்டாயத்தின் பேரில் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு சிகாகோ கிளம்புகிறார்கள் (ஊருக்கு வெளியே ஒரு குக்கிராமம் போன்ற இடத்தில் வசிப்பது அவளது அறிவுலக வாழ்வுக்குப் போதுமான வாய்ப்புகள் தருவதில்லை என்பதால்). இறுதியில் தனது நண்பனும் மனைவியும் புரிந்த இரட்டைத் துரோகத்தை ஹெர்ஸாக் உணரும்போது அவள் அவனை விவாகரத்து செய்து விடுகிறாள். தனது இரண்டாம் திருமணமும் தோல்வியடைவதன் கோபமும் இயலாமையும் அவனை கிட்டத்தட்ட பைத்தியமே ஆக்கி விடுகிறது (துயர்நகைத் தன்மை கொண்ட ஒரு பழிவாங்கும் முயற்சியாய் அவன் கெர்ஸ்பாக்கை கிட்டத்தட்ட சுட்டுக் கொல்லும் அளவுக்குப் போய் விடுகிறான்). அடுத்த சில நாட்களில் அவன் நியூ யார்க், மார்த்தா’ஸ் வின்யார்ட், சிகாகோ, லூடிவில் ஆகிய ஊர்களுக்கு முன்திட்டம் இல்லாத பயணங்கள் தொடர்ந்து மேற்கொள்கிறான். அந்தப் பயணங்களின் வெவ்வேறு விஷயங்கள் குறித்த நினைவுகளாய் ஹெர்ஸாக் நாவல் விரிகிறது.

கதையோட்டம் (அல்லது அதன் இல்லாமை) என்று பார்த்தால்  அது இவ்வளவுதான்- ஆனால் நமக்கு ஏற்கனவே தெரியும், பெல்லோ விஷயத்தில் ஆட்டம் அதுவல்ல. அவரது பிற நாவல்கள் போலவே ஹெர்ஸாக்கும் தனது “சுயமோகம் கொண்ட, சுயவாதை செய்யும், மைய ஒழுங்கற்ற ஆளுமைக்கு” பலியானவன் என்பது மட்டுமல்ல, ஆகியைப் போலவே அவனும் ஒரு “உணர்ச்சிவசப்படும் தே.பு” (“sentimental s.o.b’). இவை எல்லாவற்றையும் மேற்குலகின் அறிவுப்புல வரலாற்றில் ஊறிய ஒரு மிக நுண்மையான அறிவுடன் பொருத்திப் பார்க்கும்போது ஒரு மாயம் நிகழ்வது போல், கிளாசிக் பெல்லோவிய, “விளையாட்டாய் இயேசுவைச் சேர்தல்” (“kidding one’s way to  Jesus”), என்ற இடத்துக்கு வந்து விடுகிறோம்.

எத்தன்மையை “ஆதி மனிதன்” என்று பெல்லோ அழைக்கிறாரோ, அதை மீட்டெடுப்பதற்கு முன், அவன் பின்னர் எப்படிப்பட்டவனாக மாறக்கூடுமோ அதை எக்காளக் கீழ்மைப்படுத்துதல்களால் தண்டித்துக் சுத்திகரித்தாக வேண்டும் போல. பெல்லோவைப் பொறுத்தவரை இந்த ஆதி மனிதன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளவன், அவன் நம் அகங்களின் அந்தரங்க மையம், கலாசாரம் அல்லது வரலாற்று இயக்கத்தின் உடன் தோன்றிய துணைப் பொருளல்ல அவன், அவற்றுக்கும் முற்பட்டவன். இருத்தலியலாளர்களின் “சாரத்தின் முற்பட்டது இருப்பு” என்ற பழைய கோஷத்தை கவிழ்க்கிறார் பெல்லோ- சாரத்தின் தரப்பை தீர்மானமாய் ஆமோதிக்கிறார். இருப்பின் போக்கில், கலாசார மற்றும் வரலாற்று எச்சங்கள் (பெல்லோ “மண்டைக் கலாசாரம்” என்று ஊதித்தள்ளும் சேதாரங்கள்) பெரும்பனிச்சரிவாய் அழுத்தம் அளிக்கையில், மானுட அகத்தின் இந்த “சாரம்” மெல்ல மெல்ல அமிழ்ந்தடங்குவதே நவீன மனிதனின் பெருந்துயரம்.

எனவேதான் நாம் துவக்கப் பக்கத்திலேயே, ஹெர்ஸாக் இரவில் கண்விழித்து நட்சத்திரங்களை “ஆன்மீக உடலங்கள் போல் அருகிலிருக்க” காண்பதைப் பார்க்கிறோம். உடனே அறிவின் மட்டறுக்கும் குரல் குறுக்கிடுகிறது- “ஆமாம், நெருப்புகள்; வாயுக்கள்- கனிமங்கள், வெப்பம், அணுக்கள்”- இறுதியில், உணரப்படும் மானுட அனுபவம் குறித்து, “ஓவர்கோட்டுக்குள் அமிழ்ந்து ஊஞ்சற் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அதிகாலை ஐந்து மணியளவில் எத்தனையோ விஷயங்களைச் சொல்லக்கூடியது,” என்ற எளிய ஒரு தகவல் பிரகடனம்.

தத்துவவியலாளரும் கல்வித்துறையில் பணியாற்றுபவருமான ஹெர்ஸாக் அபத்தமான தன் மண வாழ்வு குறித்த தீவிரமும், நகைச்சுவையும் கலந்த நுண்விபரங்களை அளிப்பதிலிருந்து “நவீன நிலை குறித்த ஒரு புதிய கோணம்” நோக்கிய தேடல், “உலகளாவிய இணைப்புகளைப் புதுப்பித்து வாழ்வது சாத்தியம் என்று காட்டுதல்; அகத்தின் தனித்தன்மை குறித்து நிலவும் உயர்வுநவிற்சித்தன்மை பொருந்திய பிழைகளில் எஞ்சியுள்ளவற்றைப் புரட்டிப் போடுதல்,” என்று தொடர்ந்து சிந்திக்கிறார். அதே சமயம், நித்தியத்தன்மை கொண்ட மகோன்னதமான சத்தியங்களைக் கட்டமைப்பது போன்ற அறிவார்ந்த யோசனைகள் எதுவும் “இங்கே இப்போது” அவர் எதிர்கொள்ளும் மணவாழ்வின் சிக்கல்களுக்கு சிறிதும் உதவுவதில்லை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

அன்னியப்பட்டு, தானே தன் உலகம் என்றுள்ள சிந்தனையாளர் ஹெர்ஸாக் மேற்கத்திய சிந்தனைப் பாரம்பரியத்தின் அடர்வனத்துள் தொடர்ந்து புரிதலை நோக்கிப் போராடிச் செல்கிறார். (தனக்கு முன் வந்த ஹென்டர்சனின் ஆப்பிரிக்க பயணங்களை இது பிரதிபலிக்கிறது). இதன் விளைவாய் அவர் அமெரிக்க அதிபர் அட்லாய் ஸ்டீவென்சன், நேரு, ஹைடெக்கர், மார்டின் லூதர் கிங் என்று துவங்கி பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வில் உள்ள ஆளுமைகள் என்று பலருக்குமாக இருபத்து நான்கு கடிதங்கள் எழுதி- ஆம், சொல்லவே தேவையில்லை- அனுப்பாமல் வைத்திருக்கும் உயர் நகைச்சுவை நமக்குக் கிடைக்கிறது. இந்தக் கடிதங்கள் படிக்க சுவாரசியமாய் இருக்கின்றன (ஹைடெக்கரின் புகழ்பெற்ற “பொழுதின் போக்காட்டுள் வீழ்வதைக்” குறித்து (“Fall into the Quotidian”) அவரை நோக்கி கேள்விகள் எழுப்புகிறார், “இந்த வீழ்ச்சி எப்போது நேர்ந்தது? அப்போது நீங்கள் எங்கே நின்று கொண்டிருந்தீர்கள்?”), இவை மொழியைக் கொண்டு யதார்த்த உண்மையின் மையத்தை உணரும் முயற்சிகள். சிந்தனைகள் நமக்கு அளிக்கும் இன்பத்தின் மகத்தான சான்றுகள் இக்கடிதங்கள்- இங்கு பற்றியெரியும் ஒரு உள்ளத்தின் அண்மையில் இருக்கிறோம், ஆனால் இந்த கேலித்தனமான கடிதங்களின் முழுப் பொருளையும் துயரையும் நாம் நாவலின் இறுதியில்தான் உணர்கிறோம்- அங்கு ஹெர்ஸாக், அறிவின் அற்புத விளையாட்டுகளில் களைத்து ஓய்ந்து விட்டார், அவருக்கு “யாரிடமும் சொல்ல எந்தச் செய்திகளும் இல்லை”. இந்தச் சித்திரத்துடன் அவரைப் பிரிகிறோம்.

இது போன்ற உயர் இலக்கிய விளையாட்டுகளுடன் கூடவே மிகவும் சக்திவாய்ந்த சில அருமையான, உணர்ச்சிகரமான நாடகீய தருணங்களும் ஹெர்ஸாகில் இருக்கின்றன. அவர் நியூ யார்க் நகர நீதிமன்றம் செல்கிறார், மனிதம் இறப்பது குறித்து அவர் முன்பே உணர்ந்திருந்த உண்மைகளை மெய்ப்பிக்கும் வழக்கு விசாரணைகள் சிலவற்றை அவர் காண்கிறார். அப்படிப்பட்ட ஒரு வழக்கு, காதலன் படுக்கையில் புகை பிடித்துக் கொண்டிருக்கையில் குழந்தையை அடித்தே கொன்ற ஒரு பெண்ணைப் பற்றியது. அடுத்து வருவது தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகுக்கு உரியது. “குழந்தை வீறிட்டது, இறுக்கிப் பிடித்துக் கொண்டது, ஆனால் அந்தப் பெண் அதை இரு கைகளாலும் ஏந்தி சுவற்றை நோக்கி வீசினாள்… அவளது காதலன் படுக்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறான். கலவிக்குப் படுத்துக் கொள்ளுதல், கொலைக்கு எழுந்து நிற்றல். சிலர் கொல்கிறார்கள், சிலர் அழுகிறார்கள். பிறர், அதுவும் இல்லை”. பழி வாங்கத் துடிக்கும் வெற்று எண்ணங்களை இது விடுவிக்கிறது, அவருள் அமிழ்ந்திருந்த கொலைகார உந்துதல் அத்தனையும் கொப்பளித்து எழுகிறது. ஒரு காலத்தில் தன் அப்பா வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றைத் திருடுகிறார், கள்ளக் காதலர்களைக் கொன்று தன் மகள் ஜேனை மீட்பது என்ற நோக்கத்தில் அவர் தன் மனைவியின் வீட்டுக்குப் போகிறார். குளியலறை சன்னலில் எட்டிப் பார்க்கும்போது அவரது இரட்டை வேடதாரி நண்பன், கெர்ஸ்பாக் கண்ணில் படுகிறான், “ஆதூரத்துடன் அவன் அவளை (ஜேனை) குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறான்… விளையாட்டும் அன்பும் கலந்து அவன் அவள் மேல் நீரை வாரியிறைத்துக் கொண்டிருந்தான்”. இல்லற வாழ்வுக்கே உரிய இந்த மென்மையான அன்பைக் கண்டதும், கெர்ஸ்பாக்கைக் கொல்வது என்ற எண்ணம் வெறும் எண்ணம்தான் என்பதை ஹெர்ஸாக் புரிந்து கொள்கிறார்: “சுட்டுக் கொல்வது! அபத்த நினைப்பு. நிஜ மனிதன் நிஜக் குளியல் அளிப்பதை ஹெர்ஸாக் பார்த்தவுடன், அதன் நிதர்சனத்தைக் கண்டவுடன், இப்படிப்பட்ட ஒரு கோமாளி ஒரு குழந்தையிடம் எவ்வளவு மென்மையாக அன்பு செலுத்துகிறான் என்பதைப் பார்த்தவுடன், அவன் திட்டமிட்டிருந்த வன்முறை நாடகமாய் மாறுகிறது, நகைப்புக்கிடமான ஒன்றானது”. யதார்த்தம் எதுவோ அதில் தலை வரை மூழ்கும் ஹெர்ஸாக் மெல்ல மெல்ல தன் அகம் குறித்த ஒரு புரிதலை அடைகிறான், “தீவிர உணர்வுகளுக்கு இடமுள்ளவரை அகத்துக்கு அர்த்தம் தேவையில்லை. ஏனெனில் அப்போது அந்த அர்த்தம் வெளிப்படை: அந்த உணர்வே அதன் பொருள்”. அத்தனை சிந்திக்கப்பட்ட ‘யதார்த்த உலகில்” முதுகில் குத்தும் கள்ளக்காதலன் இந்த கெர்ஸ்பாக்கும் நேசத்துடன் நடந்து கொள்ள முடியும், பழி வாங்கத் துடிக்கும் ஹெர்ஸாக்கும் தன் எதிரியுடன் (அவனது மனைவி மாடலீன்) பெற்றுக்கொண்ட குழந்தையை ஏதோ ஒரு மர்மமான முறையில் நேசிக்க முடியும்”.

துவங்கியது போலவே இந்த நாவல் முடிவுக்கும் வருகிறது- ஹெர்ஸாக் படுத்திருக்கிறார், ஆனால் இப்போது ஒருவகை நிஷ்களங்க அமைதியில் அவர் ஆழ்ந்திருக்கிறார், “இருக்கிறேன் என்பதே திருப்தியாகத்தான் இருக்கிறது, விதித்தபடி இருக்கிறேன் என்பதே போதுமானது, இந்த இடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்ட காலம் வரை இருந்தால் போதும்”. “வாழ்வின் முட்களில் வீழ்தல்” என்று திரும்பத் திரும்ப தொடர்ந்து அத்தனை காயப்பட்டபின் இது, “அழகின் எதிர்பாராத அத்துமீறல்” ஒன்றில் முடிகிறது. அங்கு, அறிவு கெட்டுப் போகிறது என்றால் அதற்கு இடம் கொடுப்பதும் சரிதான் என்றாகிறது. இந்த இடத்தில் நாவல் ஆனந்தம் நிறைந்த ஒரு அமைதியில் அடங்குகிறது, இத்தனை நேரம் நம்மைத் தன் சொற் பொழிவுகளால் மகிழ்ச்சிப்படுத்திய மோசஸ் ஹெர்சாக், நாவடங்கிக் கிடக்கிறார், “ஒரு வார்த்தை”கூட அவரால் சொல்ல முடிவதில்லை.

~oOo~

 

‘சாம்லர்’ஸ் பிளானெட்’டின் நாயகன் ஆர்தர் சாம்லர் ஒரு போலீஷ் யூதர், நாஜி தொகுப்பு முகாம்களின் கல்லறைகளைத் தப்பிப் பிழைத்தவர். இந்த நாவலில் அவர் 1960களின் அப்பர் வெஸ்ட்சைட் நியூ யார்க்கின் சலிப்பை எதிர்கொள்ள இயலாமல் போராடிக் கொண்டிருக்கிறார். அதன் ஜனரஞ்சக   நிகிலிசம் ஆர்தர் சாம்லர் போன்ற சிலருக்கு நாகரீகம் மற்றும் லிபரல் ஜனநாயகத்தின் வேர்களையே அழித்துவிடக்கூடிய அச்சுறுத்தல் கொண்டதாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஆர்டுரும்கூட ஜாமொஷ்ட் காட்டில் ஒரு ஜெர்மானிய ராணுவ வீரனைக் கொன்றிருக்கிறார் (அப்போது அவருக்கு இருந்த ஆனந்தம் எதிர்காலத்தில் அது குறித்து அவரை வருந்தச் செய்கிறது), அதன் அறச்சுமையை அவர் வாழ்நாள் எல்லாம் சுமக்கிறார். ஏற்கனவே ஒரு முறை அவரறிந்த உலகைச் சிதைத்த கொடூர யுத்தத்தின் காட்டுமிராண்டித்தன இரக்கமின்மையை கண் முன் கண்டு, அதை நேருக்கு நேர் எதிர்கொண்ட அனுபவம் இருப்பதால் அவர் வாழும் உலகம் இன்னொரு முறை சிதைந்துவிடக்கூடும் என்ற சாத்தியத்தைத் தொடர்ந்து எண்ணிய வண்ணம் இருக்கிறார். மானுடம் புவியை விட்டு வெளியேறி நிலவில் கால் பதிக்கும் சாத்தியத்தை மெய்ப்பித்த அமெரிக்க விண்வெளி ஆய்வுகளின் உச்ச நாட்கள் அவரது கவலைகளின் பின்னணியில் பேசப்படுகின்றன (“மாபெரும் இந்த நீல, வெண்ணிற, பசிய கோளை விட்டுத் தள்ளு”)

ஹெர்ஸாக் நாவலைப் போலவே இதிலும் கதைக்கரு என்று எதுவும் பிரமாதமாக இல்லை. கதைச்சுருக்கம் என்று குத்துமதிப்பாய் இது போல் சொல்லலாம்: சாம்லரின் ஒன்றுவிட்ட சகோதரனும் அவரது புரவலருமாகிய எல்யா க்ரூனர் இறந்து கொண்டிருக்கிறார், மரணமடையும் முன் இறுதி முறை அவரை நேரில் சந்திக்க விரும்புகிறார் சாம்லர். இந்த மையச் சரட்டைச் சுற்றி உதிரிகளாய்ச் சில நிகழ்வுகள் பின்னலிடுகின்றன: கொலம்பியா பல்கலையில் அவர் ஆற்றும் உரையின் குறுக்கீடுகள், கறுப்பின பிக்பாக்கெட் ஒருவன் தொழில் செய்து கொண்டிருப்பதை அவர் கவனித்து விடவும், அவன் அவரைப் பின்தொடர்ந்து வந்து மிரட்டி, உள்ளுருப்பைக் காட்டி அவமானப்படுத்தவும் சாம்லர் குறுகிப் போவது; அவ்வளவாக மூளை வளர்ச்சியில்லாத அவரது மகள் சூளா ஒரு கைப்பிரதியின் திருத்தப்பட்ட வடிவத்தை எடுத்துப் போய் விடவும், சாம்லர் அதை உரியவரிடம் ஒப்படைக்கத் தேடுவதும் –  இது போன்ற பிற நிகழ்வுகள் சில கதையின் மையச் சரட்டைச்  சூழ்ந்திருக்கின்றன. சாம்லர் மருத்துவமனை செல்வதற்குள் எல்யா இறந்து விடுகிறார். ஒவ்வொரு நாவலிலும் பெல்லோ தொடர்ந்து விவாதித்து வந்த அவரது பிரதான அக்கறைகளை இந்த நாவலும் பிரதிபலிக்கிறது என்பதைக் கதைச் சுருக்கத்தைக் கொண்டே சொல்லி விடலாம்: வரலாறும் கலாச்சாரமும் அத்தனை திசைகளிலிருந்தும் குறுக்கிட்டுத் தாக்கி அகத்தை நிலைகுலையச் செய்கையில் மனிதன் அற ஒழுங்கமைவு அடைவது எப்படி என்ற கேள்வி பெல்லோவுக்கு எப்போதும் முக்கியமாகவே இருந்து வந்திருக்கிறது.

மானுட இருப்பை “விளக்கும்” சாம்லர், யதார்த்த உலகம் தன் முன் கையளிப்பவற்றை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஒரு “புறவயப்பட்ட” உயர்சார்பு நிலையைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார். “ஜீவன்கள் அத்தனையும் இழந்து, ஜீவன்களின் ஆறுதல்கள் அனைத்தையும் இழந்து”, “இறைவனின் மெய்யான ஆறுதலை” அடைய வேண்டும் என்று வலியுறுத்தும் ஜெர்மானிய மறைஞானி மெய்ஸ்டர் எக்ஹார்ட்டின் தீவிர மாணவரான சாம்லர், இந்த உலகை ஒரு எண்ணமாய் மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார். அதுவே ஹெர்ஸாக் கேலி செய்த “பொழுதின் போக்காட்டில்” வீழ்வதிலிருந்து அவரைக் காப்பாற்றும். ஆனால் உலகத்தில் நடப்பது ஒவ்வொன்றும் எதனோடும் ஒட்டி உறவாடாத கருத்துருவ பீடத்திலிருந்து அவரை ஏதோ ஒரு வகையில் கீழிறக்கி லோகாயதத்தின் சுட்டெரிக்கும் தரவுத்தன்மைக்கு உட்படுத்துகிறது.

வேறொரு விஷயம் தொடர்பாக ஹவார்ட் ஜின், “நகரும் ரயிலில் நீ நடுநிலை எடுக்க முடியாது,” என்று பிரகடனப்படுத்தினார். ஒரு காமிராவுக்காக லியனல் எஃப்பரும் பிக்பாக்கெட்டும் சண்டை போட்டுக் கொள்ளும் இடத்தில் இந்த உண்மையே வெளிப்படுகிறது. ஒரு பார்வையாளராக நடுநிலை வகிக்கும் சாம்லர், கூட்டத்தில் உள்ள பிறர் அனைவரும் “இருப்பின் சன்னதத்தில் ஒன்றுபட்டிருந்தனர்,” என்பதைக் காண்கிறார், “சாந்நித்தியம் கொண்ட அனைவரும் அருளப்பட்டவர்கள்,” என்றுணர்கிறார். ஆனால் ஒரு சோகம், அவர் “அருளப்பட்ட” இந்த மானுடக் கூட்டத்தில் இனியும் ஒருவரல்ல, தான் “கடந்த காலத்தவராய்” மாறி விட்டவர் என்பதையும் உணர்கிறார். இந்தத் தரிசனத் தருணத்தில், கடந்த காலத்துக்குரிய தனக்கு, நிகழ் தருண சாந்நித்தியம் இல்லை என்பதையும் கடந்த காலத்துக்குரிய அகம் தன் மெய்யியல்புகளை பிரதிபலிப்பதில்லை என்பதையும் உணர்கிறார். அவ்வகையில், அவர் “கடந்த காலத்தவர்”, அவரது ஆன்மா “வறியது”, ஆனால் அதுவல்ல “அவர்”. அக வறுமையைத் தன் இருப்பின்மையாய் உணரும் சாம்லரே, பருவுலகின் புறத்தன்மையில் பிறரின் இருப்பையும் ஒரு கருணையுணர்வுடன் கண்டு கொள்கிறார்- கருப்பினத்தைச் சேர்ந்தவன் முகத்தில் வழியும் கெட்டித்த சிவந்த ரத்தத்தின் பெருக்கு நிர்த்தாட்சண்யமான ஒரு உண்மையை அவருக்கு உணர்த்துகிறது: அமெரிக்காவில் எங்கு தவறு நிகழ்ந்திருக்கிறது என்பது குறித்த அவரது முன் அனுமானங்களின் மொத்த உருவான ஒரு “மாதிரிப் படிமம்” அல்ல அவன், “ரத்தமும் சதையும்” கொண்ட, பரிதாபத்துக்குரிய ஒரு நிஜ மனிதன் (“இரக்கமற்ற அத்தனை அடிகளையும் தவிர்க்க  என்னதான் செய்திருக்க மாட்டார் “).

நாவல் இறுதியில் சாம்லரை அவரது ஒன்றுவிட்ட சகோதரன் எல்யா க்ரூனருடன் விட்டுச் செல்கிறது. நெருங்கிய சொந்தங்கள் அவரது மரணத்தில் தாம் என்ன கொண்டு செல்லலாம் என்று சூழ்ச்சி செய்து கொண்டிருக்கையில், எல்யாவுக்காக கடவுளிடம் அவர் பரிந்துரைக்கிறார், “தன்  வாழ்வின் அத்தனை குழப்பங்களுக்கும் கீழ்மைப்படுத்தும் கோமாளித்தனங்களுக்கும் இடையில், அவன் நிச்சயம் நிறைவு செய்தான்… தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அவன் நிறைவு செய்யவே செய்தான்”.

ஒவ்வொரு மனிதனும் தன் இதயத்தின் அந்தரங்கத்தில், “நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை” உள்ளுணர்வால் அறிந்திருக்கிறான் என்றே பெல்லோ எப்போதும் வலியுறுத்தினார்- கலாசாரம், வரலாறு போன்ற பெரு அமைப்புகள் அளிக்கும் உபகரண உதவி எதுவும் அந்த உண்மையை உணரத் தேவையில்லை. நேர்முகம் ஒன்றில் அவர், “நம் நடுக்கண்ட நியாயங்களுக்கு அப்பால், இருப்புக்கு ஒரு மதிப்புண்டு, இருப்பு தன்னளவில் மதிப்பு-நிறைந்தது என்ற உள்ளார்ந்த ஊகத்தை” கொண்டு ஹெர்ஸாக்கில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் புரிந்து கொள்ளப்படலாம் என்று கூறுகிறார். அவரது மாற்று-அகமான சாம்லர் இதையே உறுதிப்படுத்துகிறார், மாலி ப்ளூமின் காமாந்தகார “ஊம்”களுக்கு இணையான ஆன்மீக நாமாவளியாக இருக்கக்கூடிய சொற்களில், அவர் உண்மை என்பது, “நாம் எல்லாரும் அறிந்தது, தெய்வமே, நாம் அறிந்தது, நாம் அறிந்தது, நாமறிந்தது, நாமறிந்தது” என்று உறுதி செய்கிறார்.

~oOo~

‘ஹம்போல்ட்’ஸ் கிஃப்ட்’ பெல்லோவின் மிகச் சிறந்த நகைச்சுவை நாவலாக இருக்கலாம் (அவரது மிகச் சிறந்த நாவல் என்று சொல்ல முடியாது, நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து அந்தச் சிறப்பு ஆகி அல்லது ஹெர்ஸாக்கைச் சேரும்). சரிதையைக் கலையாக்குவது குறித்து முன்னர் பேசினோம், இந்தக் கதையில் டெல்மோர் ஷ்வார்ட்ஸின் வாழ்க்கைக் குறிப்புகள், இளமையில் கவிஞர்களிடையே ஒரு காதல் இளவரசனாய் இருந்து மத்திம வயதில் பராதீத பேதைமைகளால் பீடிக்கப்பட்ட, போதை மருந்துகளாலும் குடிப்பழக்கத்தாலும் சித்தம் பேதலித்த, மிகைப்படுத்தப்பட்ட சதித்திட்டங்களை முன்னிறுத்தும் வோன் ஹம்போல்ட் ஃபிஷர் என்பவரின் புனைவு வாழ்வாய் உருமாற்றம் பெறுகின்றன. இந்த நாவல் நியூ யார்க்கில் அதன் கதைசொல்லியுடன் துவங்குகிறது, விஸ்கான்சினைச் சேர்ந்த துவக்க நிலை எழுத்தாளனாகிய அவன், வாழ்வைக் காட்டிலும் மகத்தான ஆளுமை கொண்ட அறிவுஜீவியாகிய ஹம்போல்ட்டால் வசீகரிக்கப்பட்டவன் (சிகாகோவில் அவர் வசிப்பிடத்துக்கு அருகில் இருந்த ஹம்போல்ட் பார்க் நினைவில் பெல்லோ அப்பெயரை சூட்டியிருக்கலாம்), ஹம்போல்ட் உலகத்தில் உள்ள எல்லாவற்றைப் பற்றியும் சுவாரசியமான, கிளை பிரிந்து செல்லும் தனியுரைகள் அளிப்பதைக் கண்டு கிறக்கம் கொள்கிறான் (ஃபிராய்ட், ஹைன், வாக்னர், கதே, லெனின், நியூ யார்க் ஜயண்ட்ஸ், ஸ்வின்பர்ன், ஜே.டி. ராக்ஃபெல்லர்… பட்டியல் தொடர்ந்து விரிந்து செல்கிறது).

நாம் முன்னர் பேசிய ஜெட்லாந்து கதையில் வரும் ரோசன்ஃபீல்ட் போலவே, டெல்மோர் தன் முதல் கதை, “இன் ட்ரீம்ஸ் பிகின் ரெஸ்பான்சிபிலிடிஸ்”, 1937ஆம் ஆண்டு பார்டிசன் ரிவ்யூவின் முதல் இதழில் (இந்த இதழுக்கு பங்களிப்பு செய்த மிகச் சிறந்த கலைஞர்களின் பட்டியலில் எட்மண்ட் வில்சன், லயனல் ட்ரில்லிங், பிகாசோ, வாலஸ் ஸ்டீவன்ஸ், ஜேம்ஸ் ஆகி முதலானவர்களும் அடங்குவர்)  பிரசுரமானவுடன் நியூ யார்க் இலக்கிய உலகைத் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கிறார் (நபகோவ் போன்ற ஒரு கறாரான விமரிசகரும்கூட கொண்டாடிய கதை இது). வசீகர இளைஞராக இருந்த டெல்மோரின் புகைப்படங்கள் வோக் இதழில் இடம் பெறும், அவற்றை முன்வைத்து மிகச் சிறந்த கவிஞரான ராபர்ட் லவல்கூட சானட்கள் எழுதுவார். நாற்பதுகளின் இறுதியில் டெல்மோரின் நட்பு பெல்லோவுக்குக் கிட்டியது, 1952ல் பிரின்சிடன் பல்கலையில் ஆசிரியப் பணியை இருவருக்கும் டெல்மோர் பெற்றுத் தருகிறார். பின்னர், ஆகி வெளியாகும்போது டெல்மோர், ஹக் ஃபின்னைவிடச் சிறந்த நாவல் இது என்று கொண்டாடுவார். ஆனால் 1957ஆம் ஆண்டுவாக்கில் பராதீத பேதைமை வசப்பட்ட ஒரு போதில் டெல்மோர், தன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருப்பதாய் தான் சந்தேகிக்கும் ஹில்டன் கிரேமருடன் இணைந்து பெல்லோ தனக்கு எதிராய் சதித் திட்டங்கள் தீட்டுவதாய்க் கற்பனை செய்து கொள்கிறார். அதன்பின் 1966ஆம் ஆண்டு டெல்மோர் மறையும்வரை இவர்களின் உறவு நாளுக்கு நாள் சீர்குலைந்தே வந்தது (குப்பைகளை வெளியே கொண்டு போகும்போது இதய வலி கண்டு டெல்மோர் இறந்தார்). ஒரு வகையில் ‘ஹம்போல்ட்’ஸ் கிஃப்ட்’, நண்பன் காலமானபின், அவனை நேசத்துடன் நினைவு கூர்ந்து, அவனுடனான உறவைச் சரி செய்து கொள்ளும் முயற்சி. அது மட்டுமல்ல, படைப்பூக்கம் மிக்க ஒரு மேதை, சித்தம் பேதலித்து பராதீத பேதைமையுள் வீழ்வதைச் சித்தரித்து புனைவிலேனும் அவனுக்கு மீட்சியளிக்கும் முயற்சியுமாகும்.

ஹெர்ஸாக்கைப் போலவே இதன் கதைசொல்லியான சார்லி சிட்ரைனும் படுத்திருக்கும் நிலையில் எல்லாவற்றையும் யோசித்துத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறான். வாதத்தால் பாதிக்கப்பட்ட தன் கழுத்து வலியைப் போக்க தலைகீழாய் நிற்கும் பழக்கமும் அவனுக்கு உண்டு, அது தவிர, இந்த அசாதாரண கோணத்தால் தன் பார்வையில் ஏற்படும் மாற்றம் உள்ளத்துக்கு அளிக்கும் ஆசுவாசமும் அவனுக்குத் தேவையாய் இருக்கிறது. புலிட்சர் பரிசு வென்றவன் (“பொன்னும் புகழும்”), பெல்லோவின் நாயகர்களின் இயல்புபடியே பல விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான்: அமெரிக்காவின் சிதைந்து கொண்டிருக்கும் நகரங்கள், இந்த நாவலின் நேசத்துக்குரிய கதைக்களமான சிகாகோவும் அதில் காணாமற் போய்க்கொண்டிருக்கும் இனவாரி  பிரதேசங்களும் (அவற்றில் “சாம்பல் நிறப் புலப்படாமையிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பனித்துளிகளும்”, “தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் துவண்ட, பட்டு, லிலாக் புத்துளிர்களும்”), போருக்குப் பிந்தைய அமெரிக்காவில் எழுத்தாளனின் இடம், ருடோல்ப் ஸ்டைனரின் மறைஞானத்தன்மை கொண்ட தத்துவங்கள், இப்படி பல. ஒரு பெருநகர நவீன வாழ்வின் அர்த்தமற்ற செயல்களில் சிக்கிக் கொண்ட அவன் (அதைச் சோம்பலுக்கு இணையாய்க் காண்கிறான்), “அற்புதமான ஆசுவாசம் அல்லது சமநிலை” தனக்குக் கிட்ட வேண்டுமென ஏங்குகிறான், அது இல்லாமல் கவிதையோ, கலையோ, சிந்தனையோ இருக்க முடியாது. ஹம்போல்ட் குறித்த அவனது பழைய நினைவுகள் டெல்மோரையும் அவரது குழப்பங்கள் அத்தனையையும் போதுமான புனைவுச் சுதந்திரத்துடன் கைப்பற்றுகின்றன, அவை பெருமளவில் மேற்குறிப்பிட்ட சரிதைத் தகவல்களைத் துல்லியமாகவே சலித்தெடுக்கவும் செய்கின்றன.

இதன் தனிவரலாற்றுச் சரட்டுடன் எதிர்ச்சரடு ஒன்றையும் இணைத்து பெல்லோ இந்த நாவலை ஒரு நகைச்சுவைக் களியாட்டமாய் மாற்றுகிறார். உலகாயதச் செல்வங்களே முதன்மையானவை என்றுள்ள உலகில் எந்நேரமும் வீழ்ந்துவிடக்கூடிய ஆன்மாவின் உறுதியும் அதன் தடுமாற்றமும் இந்த நாவலில் விவாதிக்கப்படுகின்றன என்று சொல்லலாம். பொன்னும் புகழும் வென்றவன் சிட்ரைன், ஆனால் நாவலின் முடிவில் அவன் தன்னிடமுள்ள பொன் அனைத்தையும் இழந்திருக்கிறான், புகழின் நிலை சந்தேகத்துக்கிடமாய் உள்ளது. ஆன்மாவின் அசாதாரண உச்சங்களுக்கு ஏங்கும் பகுதி ஒன்று சிட்ரைனுள் உள்ளது என்றால், “குட்டிச்சுவராகும்” பகுதியும் அவனுள் உள்ளது, அது அவனை வசீகரிக்கிறது.

குட்டிச்சுவராகும் பகுதிதான் இந்த நாவலின் சிறந்த பகுதி, இங்குதான் ரவுடித்தனம் செய்யும் ரினால்டோ காண்டாபிலே பிரதானமாய் இருக்கிறான் (ரக்லான் கோட், முதலைத்தோல் காலணிகள், எர்மைன் மீசை தரித்தவன்)- இவனே போக்கர் விளையாட்டு ஒன்றில் தோற்றுப்போன சிட்ரைன் நண்பன் ஜார்ஜ் ஷ்வைபல் வற்புறுத்தலால் கான்டாபிலேவிற்கு பணம் தர மறுக்கவும், அதனால் சிட்ரைனின் மெர்சிடஸ் காரைச் சேதப்படுத்துபவன். அந்த நிமிடத்திலிருந்து காண்டாபிலே சிட்ரைனிடம் ஒட்டிக் கொள்கிறான், “நிஜவுலக-படிப்பினை” அளிக்கும் முயற்சியில் அவன் கட்டுமான இடமொன்றில் நூற்றுக்கணக்கான அடி உயரத்துக்கு அவனைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான் (தமிழ்ப்பட வில்லன்களைப் போல்), ருஷ்ய குளியல் கடையொன்றின் கழிப்பறைக்கும் அழைத்துச் செல்கிறான், ஒரு கட்டத்தில் மும்முனைக் கலவிக்கும் அழைக்கிறான்.

கான்டாபிலேயின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்போதுதான், பிராட்வே ஹிட் ஒன்றையும் பல புத்தகங்களையும் எழுதியவன், வெள்ளை மாளிகை விருந்துக்கு அழைக்கப்படுபவன், பாபி கென்னடியுடன் தனி ஹெலிகாப்டரில் பறப்பவன், இந்த பெல்லோவிய அறிவுஜீவி சிட்ரைன், தான் ” அறிந்திருக்க வேண்டியதெல்லாம் அறிந்திருந்தும் அறிந்தாக வேண்டிய எதையும் அறிந்திருக்கவில்லை,” என்று தன்னைக் குறித்த உண்மையை உணர்ந்து கொள்கிறான். நமக்கு நன்றாகவே பழக்கப்பட்ட தர்க்கம் சார்ந்த அறிவுக்கும் உள்ளுணர்வு சார்ந்த அறிவுக்கும் இடையிலான பெல்லோவிய/ பாஸ்கலிய வேறுபாடுதான் இது. சிட்ரைன் அறிந்ததெல்லாம் பல ஆண்டு கால முயற்சியின் தொகையறிவு (Ratio), அதனால் கைப்பற்றப்பட முடியாத தொலைவில் அமர்ந்திருப்பது அறிவின் அற்புதச் சாரம், அந்த அறிவு தொகையல்ல, அறிவுக்கொடை (Intellectus).

கான்டாபிலேயின் படித்த மனைவியைக் கொண்டு (அவள் ஹம்போல்ட்டின் மனைவியைப் பேட்டி காண விரும்புகிறாள்) பெல்லோ இந்த இரு இழைகளையும் ஒன்று சேர்க்கிறார் (இது சிறிது செயற்கையாக இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்)- இது மட்டுமல்ல, சிட்ரைனுக்கு பொன் முட்டையாய் இருக்கக்கூடிய விசித்திர  திரைக்கதையொன்றின் உரிமைகளை ஹம்போல்ட் அவனுக்கு அளிப்பதன் மூலமும் பெல்லோ இந்த இரு இழைகளையும் இணைக்கிறார். ஹம்போல்ட் அளித்த பரிசின் சந்தை மதிப்பை தெருச்சண்டைகளில் தேர்ச்சி பெற்ற காண்டாபிலே உள்ளுணர்வைக் கொண்டே புரிந்து கொள்கிறான், அவன் சிட்ரைனிடம் தன்னை ஒரு ஏஜண்ட் போல் வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறான், திரைப்பட முயற்சியில் ஈடுபட விருப்பமில்லை என்று சிட்ரைன் சொன்னதும் அவன் ஆத்திரப்படுகிறான் (ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸ்டைனர் மையத்தில் பயிற்சி பெறும் திட்டத்தில் இருக்கிறான் சிட்ரைன், “இல்லை நான் வேறு வகைச் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கிறேன்,” என்கிறான் அவன்). கொடுக்கல் வாங்கலின் உலகமான “வர்த்தகத்தின் உயர்வு நவிற்சி” முழுதுமே, “தள்ளுமுள்ளு, வேகம், தடித்தனம்” என்று தோன்றுகிறது அவனுக்கு. “மலர்களை தியானிப்பது,” அல்லது, “மறைந்தவர்களுடன் தொடர்பு கொள்வது” இவற்றோடெல்லாம் ஒப்பிட்டால் இது எல்லாம் ஒன்றுமேயில்லை என்று அவன் உணர்ந்திருக்கிறான்.

இந்த நாவல் அவனது விருப்பத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இறுதியில் ஒரு சவ அடக்கத்துடனும் மலர்களுடனும் பொருத்தமான முடிவடையும். ஹம்போல்ட் தன் அன்னைக்கு அருகில் மீண்டும் புதைக்கப்படுகிறார், எத்தனை ஜ்வலிக்கும் தர்க்க அறிவும் எவ்வளவு புத்திசாலித்தனமான திறமையும் இருந்தாலும் அவற்றால் உலக வாழ்வின் இறுதி அங்கத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற உண்மையை சிட்ரைனுக்கு உணர்த்துவது இது. ஆனால், அனைத்தையும் உட்கொள்ளும் மரணத்தின் வசம் ‘தொழில்நுட்பம்‘ தோல்வியடைவதாய்த் தோற்றம் அளித்தாலும் அதை முழு முற்று என்று சிட்ரைன் நிச்சயம் ஏற்றுக் கொள்வதில்லை (அமானுட ஹம்போல்ட் “கல்லறைக்கு அப்பால் இருந்து செயல்படுவதாகவும்” தாக்கம் செலுத்துவதாகவும் அதற்குள் அவனது உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தத் தொடங்கி விடுகிறது).

இறுதியில் சிட்ரைனும் மெனாஷா கிளிங்கரும் ஹம்போல்ட்டின் கல்லறையை விட்டு நடந்து செல்லும் இடத்தில் நாவல் முடிகிறது, அவர்கள் “கடந்த  இலையுதிர் கால இலைகளுக்கு இடையே” வேனில் மலர் ஒன்றை கவனிக்கின்றனர். மெனாஷா பூ ஒன்றைப் பற்றி ஜோக்கடிக்கிறார் (ஒரு பூவைக் காட்டி அதன் பெயர் என்ன என்று ஒரு சிறுவன் கேட்கவும் சலித்துக் கொள்ளும் முதியவர், “எனக்கு எப்படி தெரியும்? நான் என்ன தையல்காரனா?” என்று கேட்கிறார் என்பதுதான் அந்த ஜோக்), அதன் பின் சிட்ரைனிடம் அந்த வேனில் மலரின் பெயர் என்ன என்று கேட்கிறார். அதற்கு பதிலாய் சிட்ரைன், “என்னைக் கேட்டால்? நானே நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். இவை க்ரோகஸ்களாக இருக்க வேண்டும்,” என்கிறான். இது ஒரு உண்மையைப் பட்டவர்த்தனமாய் போட்டு உடைப்பதாய் இருக்கலாம்… நாம், “மண்டைக் கலாசாரத்துக்கும்” இயந்திரமயமாக்கத்துக்கும் பலியான நாம், நம்முள் தேடுவோமானால், மரணத்தின் செவுள் பறையைக் கிழிக்கும் மௌனத்துக்கு அப்பால், புத்துயிர்ப்பின் மலர்களைக் காணக்கூடுமோ?

~oOo~

இறுதியில் ராவல்ஸ்டீன் நாவலைச் சிறிது சுருக்கமாய்ப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், மனித வாழ்வின் வரையறுக்கப்பட்ட எல்லை குறித்த கூசவைக்கும் வெளிச்சத்தின் கீழ் பெல்லோ எழுதிய கடைசி நாவல் இது- தன் வாழ்வின் இறுதி கட்ட நோய்மை உணர்வுடன் பெல்லோ இந்த நாவலை எழுதியிருக்கிறார் (இந்த உணர்வு புத்தகத்திலும் புனைவாக்கப்பட்டுள்ளது). இந்த நாவல் 2000ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது, அதன் பின் ஐந்தே ஆண்டுகளில் பெல்லோ மறைவார்.

நிஜ மனிதர்கள் வேற்றுப் பெயர்களில் தோன்றும், பெல்லோவின் நெருங்கிய நண்பரான ஆலன் ப்ளூம் பற்றி எழுதப்பட்ட, நேசம் நிறைந்த நாவல் இது. சர்ச்சைக்குரிய புத்தகமான, ‘க்ளோசிங் ஆஃப் தி அமெரிக்கன் மைண்ட்” என்ற புத்தகத்தை 1987ஆம் ஆண்டு எழுதியவர் ப்ளூம், அது பரபரப்பாக விற்று சாதனை படைத்தது. பெல்லோவின் தொடர்ந்த வலியுறுத்தலால் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை மிகவும் பாராட்டி பெல்லோ ஒரு முன்னுரையும் வழங்கினார்.

சிகாகோ தத்துவவியலாளரான லியோ ஸ்ட்ராஸின் சீடரான ப்ளூம் ஒரு பிளாடோனியர் (பிரான்சிஸ் ஃபுகயாமா மற்றொரு சீடர்), நம் காலத்தைக் கரைக்கும் அமில நச்சாய் அவர் அடையாளம் கண்ட சார்பியலுக்கு எதிரான, இரக்கமற்ற (சில சமயம் விறுவிறுப்பான) கண்டன நூல் இது. அமெரிக்க வலதுசாரிகளின் வழிபாட்டு நூல்களில் ஒன்றாய் பிற்காலத்தில் கையகப்படுத்தப்பட்டாலும்கூட, சுதந்திரம், மதிப்பீடுகள், கல்வியின் நோக்கங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை தீவிரமாய் விவாதிக்கும் புத்தகம். எதுவெல்லாம் “பல்கலையின்” அடித்தளங்களாய் இருந்தனவோ, அவற்றுக்கு எதிராய் அப்போது நிலவிய “அரசியல் சரிகள்” சார்ந்த ஆர்வங்களுக்கு கல்வித்துறை பலியாகி, லிபரல் ஜனநாயக மரபுகளைத் தலைகீழாக்கி, சுதந்திரச் சிந்தனையின் ஆன்மாவை அழித்தது என்று கல்வித்துறையின் அறத் தோல்வியை இந்த நூல் மிகக் கடுமையாக விமரிசித்தது. அகம் இறுக்கிப் பூட்டப்பட்ட வில்லாகவும் அது எதிர்நிலைத் துருவங்களுக்கு இடையே போராட வேண்டுமென்றும் கூறியவர் ப்ளூம். சமநிலைப்படுதலின் அமைதி உறுதியான நிலைப்பாடுகளைக் குலைப்பது என்று எண்ணிய அவரது நூல், நீர்த்துப் போன நிகிலிஸ்டுகளை “அமைதி விற்பன்னர்கள்”, “வில்லிருக்க்த்தை தளர்ப்பதில் திறம் வாய்ந்தோர்” என்று சாடி, அகம், “தன் ஏக்கத்திலிருந்து அம்புமாரி பொழிய வேண்டும்” என்ற நீட்ஷேய வலியுறுத்தலை சக்திகரமாய் முன்வைத்தது. ஆனாலும் இந்தப் புத்தகத்தில் சில மோசமான பகுதிகள் (ராக் இசை குறித்த தாக்குதல்கள், பாலுணர்வு, ஆப்பிரிக்கர்கள், பெண்கள் குறித்த அவரது கருத்துகள்), எதிர்பார்க்கக்கூடிய வகையிலேயே அமெரிக்க இடதுசாரிகளைக் கோபப்பட வைத்தன (“மூளையை கிறுகிறுக்கவைக்கும் முட்டாள்தனமான புத்தகம்” என்று நோம் சாம்ஸ்கி அதைப் பின்னர் மலினப்படுத்துவார்)

மிகுந்த நேசத்துடன் பெல்லோ ப்ளூமை வாழ்வைக் காட்டிலும் பெரிய ஒரு பாத்திரமாய், தற்பாலின விழைவு கொண்ட யூதராய், கல்வியாளராய், கோமாளித்தனமான மிகைகளுக்கு அஞ்சாத ஒரு ஆளுமையாய்ப் படைக்கிறார். ராவல்ஸ்டீன் எய்ட்ஸ் நோயால் இறந்து கொண்டிருக்கிறார், தன் வாழ்க்கைச் சரிதையை எழுத தன் மாணவன் சிக் என்பவனை (பெல்லோவின் ஆல்டர் ஈகோ) நாடுகிறார். ராவல்ஸ்டீன் படிப்பதற்கு முன் க்ளோசிங் படித்திருப்பவர்களுக்கு, சிந்தனைகளின் ஆற்றலையும் படைப்பூக்கத்தையும் புனைவுக் கருவிகளாகிய வசனம் மற்றும் கதையாடலாய் உருமாற்றும் பெல்லோவின் மகத்தான பலம் மிக அருமையாய் புலப்படும். மிர்ஷியா எலியேட், பால் வுல்ஃபோவிட்ஸ் போன்ற ப்ளூம், பெல்லோ இவர்களின் பல நண்பர்கள் புனைவுப் பாத்திரங்களாய் நாவலினூடே வந்து போகிறார்கள். அதே போல் தான் பெல்லோவின் முன்னாள் மனைவியும் (வேலாவாக), கடைசி மனைவியும் (ரோசாமுன்ட்) இந்த நாவலில் சிறு பாத்திரங்களாக இடம் பெறுகிறார்கள்.  செயின்ட் மார்டின் சென்றபோது கெட்டுப்போன மீனைச் சாப்பிட்டு கோமா நிலைக்குப் போய் உயிருக்கே ஆபத்தாய் வந்த பயணத்தையும் இந்தக் கதையினுள் அவர் சேர்த்து விடுகிறார். பெல்லோவுக்கே வழக்கமான மிக அருமையாக நிறைவு செய்யப்பட்ட புனைவுச் சரிதைதான், ஆனால் யூதத்தன்மை, மரணத்துக்குப் பிற்பட்ட வாழ்வு போன்ற தன் எண்ணங்களை ப்ளூமின் தலையில் கட்டுகிறார் பெல்லோ, இது போன்ற ஒன்றுக்கும் உதவாத கருத்துகளை ஏற்றுக் கொள்ள நிச்சயம் ப்ளூம் மிரண்டிருப்பார். தத்துவம் என்பது, “இயற்கைக்கு அப்பாற்பட்ட” கூறுகளின் உதவிகளைக் கோராமல், தமக்கே உரிய மதிப்பீடுகளின் சட்டகத்தை அமைத்துக் கொள்ளும் வலிமை கொண்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் மட்டுமே கையாளப்படக்கூடிய “உயர்ந்த” அழைப்பு என்பதில் ப்ளூம் தெளிவாக இருந்தார்.

“பண்டையுலகின் கழனிப்பானையில் கிடைத்த சம மதிப்பு கொண்ட புதையல்கள் போலும், பிளாட்டோவும் டால்முட்டும்,” என்று கண்டிக்கும் கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ், தத்துவவியலாளர்கள் ஏதன்சுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள், ஜெருசேலம் அவர்களின் நகரல்ல என்று பெல்லோ பிழையாய் சமன்படுத்துவதையும் சுருக்கமாய்ச் சாடுகிறார் (அது ப்ளூமுக்கும் ஹிட்சன்ஸ்சுக்கும் பொய்யாய்த் தோன்றுவது என்பதையும் சொல்ல வேண்டும்)

~oOo~

விளங்கிக் கொள்ளும் யத்தனத்தில் சாரத்தைத் தேடுகிறோம், விளக்கப் போகையில் முடிவற்று விரிந்து செல்கிறது: கச்சிதப் பார்வைகளுக்கு அவ்வளவுதான் மதிப்பு… சாக்குப்போக்காக பெல்லோவின் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பை இங்கு முன்வைக்கிறேன்,  – “யோசிப்பதற்கானால் எத்தனையோ இருக்கிறது” (“There is Simply Too Much to Think About”).

ஹெர்ஸாக் பாணியில் நானும் ஒரு இளம் பெண் கடிதம் எழுதுவதாய் பாவித்து இந்தச் சிறு முடிப்புரையுடன் கட்டுரையை நிறைவு செய்கிறேன் (இதுவாவது சிறியதாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்).

அன்புள்ள திரு பெல்லோ அவர்களுக்கு,

நீங்கள் நேசிக்கும் நியூ இங்கிலாந்தை இப்போது குளிர்காலம் நெருங்கி விட்டது. “சென்ற வேனிலின் இலைகள்” அளிக்கும் கசப்பும் இனிப்பும் கூடிய அழகு ஒரு புறம் இருந்தாலும், இந்தக் குளிர்காலம் ஒளியற்றதாக இருக்கும் போலிருக்கிறது. இவ்வாண்டின் கோடையில் நான் ஒரு பெருந்தீனிக்காரி போல், நீங்கள் எழுதிய ஏறத்தாழ எல்லாவற்றையும் வாசித்தேன் (மீண்டும் மீண்டும் வாசித்தேன்). ராவல்ஸ்டீன் போலவே நானும் அவற்றின் நுண்மையான இசையில் “எண்ணங்கள் கரைந்து போக” என்னை இழந்தேன். சிந்தனைகள் சுள்ளிகளாய் முறித்துத் தெறித்துச் சுடர் விட்டுக் கனலாய்த் தகிக்கும் ஓர் உள்ளத்தின் வெம்மையில் குளிர் காய்வது போன்ற அனுபவமாய் என் வாசிப்பு இருந்தது. நான் உங்கள் தீவிர வாசகி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா!

நகர்ப்புற அமெரிக்கா குறித்த உங்கள் வர்ணனைகள் அற்புதம், ஒரு லேசர் போல் குவியும் உங்கள் பார்வையில் புலப்படும் புற விவரணைகள் அத்தனையும் (நவீன இலக்கியத்தில் இவற்றுக்கு இணையான வேறொன்று இல்லை) அந்த மடிசஞ்சி நபகோவ், டிக்கன்ஸ் போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தென்று வைத்திருந்த தண்டுவடச் சிலிர்ப்புக்குத் தக்கவை (மரக்கால் கெர்ஸ்பாக், “ஒரு பரிசல்காரன் போல் நளினமாய் வளைந்து நிமிர்கிறான்” என்பது நினைவுக்கு வருகிறது, தமிழில் சொல்ல முடியாத இந்த வாக்கியம்கூட – “Cannibal in a bright yellow double knit jazzy suit and a large yellow cravat that lay on his shirt like a cheese omelet”)

ஆனால் அண்மையில் எனக்கு மூர்க்கம் மிகுந்த ஒரு “நிதர்சன-படிப்பினை” அனுபவம் ஏற்பட்டது. விரக்தியாய்க் கவிந்த அந்த மகிழ்வற்ற மனநிலையில், என் முந்தைய பேரார்வத்தில் நான் தவற விட்ட சில விஷயங்களின் பிடி கிடைத்தது. “வெறுமை”யின் விளிம்பில் அரங்கேற்றப்படும் அன்னியப்படுத்தல் எனும் நாடகம் அத்தனைக்கும் மாற்றாய் நீங்கள் அளிக்கும் தீர்வுகள் மிக எளிதாய் அடையப்பட்டவையோ, காத்திரமான ஆதாரங்கள் எதுவுமற்றவையோ என்று நான் சந்தேகிக்கத் துவங்கியிருக்கிறேன். இது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம், நீங்களும் “எந்தத் திசையில் பறப்பது என்பதை அறியாத ஒரு பாவப்பட்ட பறவை” யின் நிலையில் இருந்திருக்கலாம். கவனமாய் அமைக்கப்பட்ட வாக்கியங்களின் முத்தாய்ப்பான உலர்வுத்தன்மையில் நீங்கள் உங்களைப் பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள், மிக நன்றாக எழுதுகிறீர்கள் என்பதால் இதில் வெற்றியும் பெற்று விட்டீர்கள்.

ஆனால் உங்கள் கலை குறித்து நான் குறை சொல்லவில்லை, அந்தக் கலையைப் படைக்கும் “ஆதி மனிதன்”, அவனைத்தான் விசாரிக்க விரும்புகிறேன். இங்கு நான் கறுப்பர்களையும் பெண்களையும் நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பிடத்தக்க மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் (நீங்கள் நீக்ரோக்கள் என்று அழைப்பவர்கள்) வாழும் சிகாகோ, நியூ யார்க் ஆகிய மாபெரும் அமெரிக்க பெருநகரங்களில் வாழ்ந்திருக்கிறீர்கள். ஆனாலும்கூட பிக் பாக்கெட் அடிக்கும், ஆணுறுப்பைக் காட்டி தன் ஜீவத்துவத்தால் உங்களை மிரட்டும் அலங்கரிக்கப்பட்ட ஸ்டீரியோடைப்புக்கு அப்பால் உங்களால் போக முடிந்ததே இல்லை. இத்தனையும் நீங்கள் ரால்ப் எல்லிசனின் நண்பராக இருந்தும்கூட என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் (அது தவிர சிறிது கூட நுண்ணுணர்வற்ற ஒரு சீண்டல் கேள்வியையும் எழுப்பியிருக்கிறீர்கள், “ஜூலூக்களின் தால்ஸ்தாய் யார்” என்றும் “பாப்புவர்களின் ப்ரூஸ்ட்” யார் என்றும்). இருந்தாலும்கூட, ஹைட் பார்க்குக்கு அருகில் உள்ள அந்தச் சாலைக்கு உங்கள் பெயரைச் சூட்டியிருக்க வேண்டும் என்று நான் இன்னமும் நம்புகிறேன், உங்களிடம் எஞ்சியுள்ள இனவாத எச்சங்கள் உங்கள் கலையின் வீச்சில் காணாமல் போகிறது.

இதையும் உங்கள் தகவலுக்குச் சொல்கிறேன் (நீங்கள் அவ்வளவு பேசிய அந்த “அப்பாலில்” செய்திகள் கிடைக்குமோ இல்லையோ), அந்த நீக்ரோ ஆட்களில் ஒருவன் நம் தேசத்தின் ஜனாதிபதியும் ஆனான், ஒரு முறைக்கு  இரு முறை.

அப்புறம், தெய்வமே, இந்தப் பெண்கள்… உங்கள் நாவல்கள் கதைகள் அத்தனையிலும் புத்திசாலியாய் ஒரு பெண்ணாவது இருந்திருக்கிறாளா என்று நான் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசிக்கிறேன். மனைவிகளாய் அவர்கள், பழி வாங்கும் வெறியில் விவாக ரத்து செய்து உங்கள் பாக்கெட்டுகளைக் காலி செய்யத் துடிக்கும், இரக்கமில்லாமல் ஆத்திரப்படும் ராட்சசிகளாக இருக்கிறார்கள், அல்லது வசீகரமான, முட்டாள்தனமான, பேதைக் கூட்டமாக இருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு “பென்ணறிவு” வந்திருக்கலாம், அவளும் சாம்லரின் சொற்களில், “ரொம்பவும் கோபக்காரி, ரொம்பவும் குற்றம் சொல்பவள், ரொம்பவும் பாலினக் கோட்பாடு பேசுபவள், பாவப்பட்ட ஜென்மம்”. இந்தப் பாவப்பட்ட ஜென்மங்கள் எப்படியெல்லாம் தங்கள் அன்றாட வாழ்வை நிறுத்தி வைத்து விட்டு, தொலைதூர நகரங்களுக்கு ப்ளேன் பிடித்து, விக்டர் வல்பி போல் தன்னிரக்கத்தில் உழலும் அறிவுஜீவி பச்சாக்கூட்டத்துக்கு உற்சாகம் அளிக்கவும், தம் பெண்மையின் மணத்தால் உழைத்துக் களைத்த அந்த ஆன்மாக்களின் உடலுக்கு புத்துயிர்ச்சியளிக்கவும் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஃபொன்சைன் போன்ற ஒரு ஆண் எழுத்தாளனின் படைப்பூக்கத்தைத் தூண்ட இந்தப் பெண்கள் தொடை தெரிய தூக்கி வழித்துக் கொண்டு அவர்களது அழகிய பிருஷ்டங்களை தட்டச்சு யந்திரத்தில் பொருத்தினால் போதுமில்லையா. புனைவையும் மெய்ம்மையையும் கலந்தடிப்பது என்று சொல்கிறீர்கள், இதுதான் உங்கள் பலம் இல்லையா, உங்கள் கலையின் மகோன்னதங்களில் ஒன்றல்லவா?

இப்போதெல்லாம் கண்ணாடிக் கூரைகள் தகர்க்கப்படுவதை அடிக்கடி பேசக் கேட்கிறேன். ஆனால் கூரைகள் கண்ணாடிகளால் ஆனவையல்ல, வலுவூட்டப்பட்ட எஃகால் ஆனவை என்பதை இன்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். லாக்கர் அறைகளின் வஞ்சகமற்ற விளையாட்டுப் பேச்சென்று வேடங்கட்டும் முட்டாள்களின் ஆண் திமிர், அறிஸ்டோபேனிய பால்விழைவு தொன்மங்கள், ஆண்டிரோஜைனஸ் முழுமை, ஏக்கம், ஈராஸ் என்று கிரேக்க தத்துவார்த்த உச்சாடனத்தின் மறைவில் இயங்கும் உங்களைப் போன்ற உயர்ந்த சிந்தனைகளின் மிட்டாதார்த்தன பெருந்தன்மை, போன்ற ஆரங்களால் அவை தூக்கி நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் உணர்கிறேன்.

மிகக் கடுமையாய்ப் பேசுகிறேன் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு முறை, “உள்ளார்ந்து விசாரிக்கப்படாத வாழ்க்கை வாழத்தக்கதே அல்ல” என்ற சாக்ரடேய உபதேசத்திற்கு “உள்ளார்ந்து விசாரிக்கப்பட்ட வாழ்க்கை, செத்திருந்தால் பரவாயில்லை என்று நினைக்கத் தூண்டுகிறது“ என்ற பின் இணைப்பு ஒன்றைச் சேர்த்திருந்தீர்கள்: ஆனால், எப்போதும் கிட்டக்கூடிய “வெறுமையின் கட்டிடப் பரப்பை” ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே நீங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறீர்கள். இன்று அப்படிப்பட்ட ஒரு நாள், என்னால் உங்கள் “அப்பால்” குறித்து விருப்பத்துடன் நினைத்துப் பார்க்கவும் முடிகிறது (நீங்கள் நேசிக்கும் சிட்ரைனின் அறிவுரைப்படி தலைகீழாக நிற்கக்கூட முயற்சி செய்தேன், ஆனால் என்ன ஒரு சோகம், அப்போதும் “தலைகீழ்” உலகம் அப்படியேதான் இருக்கிறது).

“இங்கே” எதிர்பார்ப்புகள் அவ்வளவு மோசமாக இருக்கிறது என்றால், உங்கள் “அப்பாலில்” எதுவும் ஒரு பிரச்சினையாக இருக்க முடியாது. இங்கிருந்து உயர்ந்து செல்வதைத் தவிர வேறில்லை, “அப்பால்” என்பது தற்போதைய நரகத்துக்கு அப்பால் செல்வதாகவும் இருக்கலாம். வீழ்ந்திருக்கும் இலையுதிர்கால இலைகளில்தான் நாம் அனைவரும் அவரவருக்கான க்ரோகஸ்களை கண்டு கொண்டாக வேண்டுமில்லையா? நம் யாருக்கும் வேறு வழியில்லை, இதைச் செய்தாகத்தான் வேண்டும்… செய்யவும் செய்வோம்”.

~oOo~

Sources / மேலும் :

 • Saul Bellow Collected Stories – Penguin, 2002
 • Dangling Man, Saul Bellow,  Penguin Classics, 2006
 • The Victim, Saul Bellow, Penguin Classics, 2010
 • Seize the Day. Saul Bellow, Penguin, 1986
 • The Adventures of Augie March, Saul Bellow, Penguin Great books of  20th Century , 1999
 • Herzog, Saul Bellow, Penguin Modern Classics, 1996
 • Humboldt’s Gift, Saul Bellow, Penguin, 1996
 • Sammler’s Palnet, Saul Bellow, Penguin 2004
 • Ravelstein, Saul Bellow, Penguin Modern Classics, 2008
 • Bellow’s People, David Mikics, Norton, 2016
 • Saul Bellow, Against the Grain, Ellen Pifer, Upenn Press, 1991

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.