அளறுதல்

பூஞ்சோலை

கேள்வி: யாரும் படிக்க வேண்டும் என்று நான் எழுதவில்லை. ஏதோ பகிர்ந்து வைப்போம் என்று எழுதுகிறேன். ஆனால் எப்படியோ யாருடைய கண்ணிலோ பட்டு, ஒருவரது தேவைக்கு உதவுகிறது. அதே சமயம், நாம நம்மால எதுவும் செய்ய முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படறோம்ன்னு நினைக்கறேன். அதான் இப்படி ஒரு குழப்ப நிலை. பணம் கிடைக்குது, பேர் கிடைக்குதுன்னு எழுதினா யாரோ என்னவோ பண்ணிட்டுப் போறாங்க நாம ஒவ்வொரு நாளும் கடமையைச் செய்வோம் அப்படின்னு இந்த வேலை எல்லாம் ஒழுங்கா செய்வோம். முழுக்க முழுக்க நம்மளோட செல்ப் மோடிவேஷன்ல வண்டி ஓடறதால, எந்த அறிவை நம்பி இதை எல்லாம் செய்யறோமோ, அந்த அறிவுக்கே இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை என்ற உண்மை உறைக்கும்போது என்ன செய்யறதுன்னு தெரியாம போயிடுது.

இதுக்கு என்ன தீர்வு சொல்றதுன்னே தெரியல. என்ன தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் எத்தனை நாட்கள் எழுதிக் கொண்டிருப்பது என்ற அலுப்பு எல்லாருக்கும் இருக்கும், இயல்பான ஒன்றுதான். அடுத்தடுத்து வளர்ச்சி என்று ஒன்று இருந்தால்தான் யாருக்குமே உற்சாகமாக இருக்கும்.

பதில்: ஒரு விதமான துறவு மனோபாவம் இருந்தால்தான் பத்திரிகை நடத்துவதை எல்லாம் செய்ய முடியும். பிரக்ஞையின் ஆண்டுச் சந்தா 8 ரூபாய்தான். ஆனால் அன்று ஒரு சாப்பாடு (நாதன்ஸ் கஃபே, உஸ்மான் ரோட், ரங்கநாதன் தெரு முனை) 1 ரூபாயோ, 1.50 ரூபாயோதான். காஃபி எல்லாம் 25, 30 பைசா. கோப்பையும் இன்று போல உழக்களவு இராது. வீட்டு டம்ளர் அளவு இருக்கும்.

இலக்கியமும் போர்னோவால் ஓரளவு காலியாக்கப் பட்டு விட்டது என்று தோன்றுகிறது. பார்க்க: Tour de Raunch – bookforum.com / A brief history of sex in American fiction: Christian Lorentzen

இந்த நபரின் (கிறிஸ்டியன் லொரென்சன்) கருத்து வினோதமாக இருக்கிறது. செக்ஸை வைத்து இலக்கியம் படைத்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாராம்? எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள்?

அதே போல மேலை இலக்கியர்களுக்கு இந்த செக்ஸ் பற்றி எழுதுவது என்பது ஒரு உளைச்சல். முயன்று முயன்று எழுதி அதில் என்ன சாதிப்பார்களாம்?

கட்டுரையில் காணப்படுவது எனக்குப் புரிகிற வரையில் ஆர்கஸம் என்பது பெரும் விடுதலை. எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு 30 வினாடிக் கிளர்ச்சி. அதற்கு முன் நடப்பவை எல்லாம் ஓவர்ச்சர் இசை போல. இதுவே அனைவருக்கும் எந்நேரமும் கிட்டும்படிச் செய்து விடலாம் என்று இப்போது ரோபாட்கள் மூலம் செக்ஸ் கிட்ட வழி செய்ய முயல்கிறார்கள்.

என்ன செய்தால் மனிதருக்குத் தொடர்ந்து மகிழ்ச்சி அல்லது மனநிறைவு கிட்டும் என்பது எனக்கும் தெரியவில்லை. இயற்கையோடியைந்த வாழ்வு என்று ஒரு மந்திரக் கோலைச் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் காடுகளில் நடந்திருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. கொசு, சுள்ளான், அட்டைகள், விஷப் பூச்சிகள், சிலந்தி/தேள்/ பூரான் கள், கடும் தாக்குதல் நடத்தக்கூடிய எறும்புகள், தவிர பெரும் கொல்லும் மிருகங்கள் என்று காட்டில் என்னென்னவோ இருக்கின்றன. அதைப் பல மைல் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு, என்ன பசுமை, என்ன குளிர்ச்சி, என்ன அழகு என்று சொல்லிக் கொண்டிருப்பது ரொமான்ஸ்.

இப்படி என்னென்னவோ கேள்விகள் என் புத்தியில் தினம் சுழல்கின்றன. இவை எதுவும் தமிழில் தொடர்ந்து பேசப்படாமல் ஆரிய/ திராவிட, பார்ப்பன சூழ்ச்சிக் கேள்விகளும், இந்துத்துவ ஃபாசிஸமும்தான் தினம் அங்கு புரள்கிறது.

இவற்றிலிருந்து விலகி நின்று தொடர்ந்து நல்ல இலக்கியத்தை நாம் முன்வைத்தபடி இருக்கலாம். அதற்கு ஒரு கேடும் இல்லை. முகப்புத்தகம், ட்விட்டர் என்று அலையும் இந்தத் தலைமுறையினருக்கு எத்தனை தூரம் தம் சக்தி விரயமாகிறது என்பது புரியவில்லை என்று தோன்றுகிறது. அது இளமையின் பார்வைக் குறைவு என்று தள்ள முடியுமா? எனக்கு உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உடனடிக் கிளர்ச்சி என்பது இளமையின் தவிர்க்க முடியாத ஒரு நிலை போலிருக்கிறது. அதே மக்கள் ஆழ்ந்த ஈடுபாடும் கிளர்ச்சியும் தேவை என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள்.

நாதசாரம்

அமெரிக்காவில் ஒபாமாகேர் வந்த போதே மருத்துவம் சீர் குலைந்து போகத் துவங்கி இருந்தது. எல்லாம் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் அட்டகாசம். தவிர மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ஏகமாகப் பெரிதாகிப் பணத்தையே துரத்தத் துவங்கியதும் ஒரு காரணம், மருத்துவர்கள்/ மனைகள் எல்லாமும் அப்படி பண வேட்டையில். கல்லூரிகள்/ பல்கலைகளும் அப்படியே. ஆக மாணவர்களாக மருத்துவப் பயிற்சியில் இருப்பவர்கள் தலையில் கடன் மூட்டை என்று ஒரு கோடியில் துவங்கும் சிறு பிரச்சினை ஒவ்வொரு திரியாகப் பிரச்சினையை வெடிமருந்து போலப் பூசிக் கொண்டு எல்லாமாகச் சுற்றிச் சுற்றி ஒரு திரி மூட்டையின் நடுவில் பணப் பைத்தியம் என்ற மருந்து இறுகி இருக்கிறது. எங்காவது சிறிது நெருப்பு கிட்டினால் நம் ஊர் அணுகுண்டுப் பட்டாசு போல உரு சிறுத்தாலும், ஓசையும், அழுத்தமும் பெரிதாகக் கொண்டு வெடிக்கிறது. நாசமாவது பல நூறு இளம் பெண்கள், சிறுவர்/ சிறுமிகள், முதியவர்களாக இருக்கலாம். ஆனால் சமீப காலங்களில் ஏராளமாக நடுவயது வெள்ளை ஆண்/ பெண்களும் இறக்கிறார்கள்.

இந்தக் கந்தரக் கோளத்தைக் கொஞ்சம் சரி செய்ய ஒபாமாகேர் என்னும் ஒட்டுப் பிளாஸ்திரி முயன்றது. அஸெப்டிக் பாண்டேஜ் என்று ஒன்று உண்டு. ஏதும் இல்லை. சும்மா கொதிநீரில் நனைத்துக் கை படாமல் பிழியப்பட்டு ஈரம் மிகக் குறைவாக உள்ள பாண்டேஜ் துணியை ஆறாத புண் மீது படர விடுவார்கள். வெளித் தூசி/ கிருமிகள் புகா வண்ணம் என்று வைத்துக் கொள்ளலாம். மீதி வேலையை உடல் கவனித்துக் கொள்ளும். தினம் கொஞ்சம் புதுத் தோலை வளர்த்து ஓரத்திலிருந்து வளர்ந்தும், நடுவில் பூத்தும், மஞ்சளாகவும், சீழ் போலவும் தோற்றமளித்துப் பின் புது இளரோஜா இதழ் நிறத்தில் தொட்டால் பிய்ந்து விடும் என்று அச்சுறுத்தும் அளவு மென்மையாக ஒரு தோல் படலம் கிட்டும். பிறகு என்ன மஜா தான். பழையபடி பழுப்பு, கொஞ்சம் கருப்புத் தோலாக மாறும். என்றாலும், வருடங்கள் எத்தனை ஆனாலும் அது பிறவித் தோல் போல இராது. யாரோ ஒட்டி வைத்த சிறு அன்னியத் தோல் துண்டு என்று பறை சாற்றியபடிதானிருக்கும். [என் மாமாவுக்கு நேர்ந்த விபத்து/ ஆபத்து இது. ஆனால் துவக்கம் ஒரு அம்மை நோய்க்கான தடுப்பூசி சிறுவயதில் போட்டது, காயமாகி ஆறிப் பொருக்காக மாறி பெரும் தழும்பாக இருந்த இடம். திடீரென்று தோல் உரிந்து புதுக் காயமாக மாறியது 40 வயதில். பயந்து போய் தோல் நிபுணர்களைக் கேட்டால் தலையைச் சொறிந்தார்கள். ஒரு பயோ கெமிஸ்ட்/ அறுவை சிகிச்சை (அலோபதி) நிபுணர், கிழவராக ஹோமியோபதி மருத்துவம் பார்க்கத் துவங்கி இருந்தார், அவர் இதை அஸெப்டிக் பிளாஸ்திரி மூலம் குணமாக்கினார்.
வருடங்களாக தோள் பட்டையில் வலியோடு இருந்த மாமா, இதற்குப் பிறகு அங்கே வலி போன நிலைக்கு வந்தார். ]

இந்தக் கதையைச் சொல்லக் காரணம், ஒபாமா கேர் என்பது இந்த வகை ஒட்டுப் பிளாஸ்திரி. மருத்துவர்களும், மருத்துவ மனைகளும், காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் எங்கோ ஒரு இடத்தில் தம் பண வேட்டையை நிறுத்திக் கொள்ள ஏதோ ஒரு வகையில் தூண்டிய அதிக பொறிநுட்பம்/ தொழில் நுட்பம் இல்லாத முயற்சி. துவக்கத்திலிருந்து அதைப் பிய்த்து எறிந்து விட பண வேட்டை ஒன்றே வாழ்க்கை என்று நம்பும் மூடர்கள் நிறைந்த குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியிலும் இருக்கும் பல பண வேட்டை நிறுவனங்களின் காவல் நாய்களும், முயன்று கொண்டிருந்தனர். அஸெப்டிக் ஆக இருக்க வேண்டிய ஒட்டுப் பிளாஸ்திரி கொஞ்சம் கிருமிகளோடு ஒட்டப் பட வேண்டிய நிலைக்கு வந்து அதன் மூல நோக்கத்தைப் படிப்படியாக இழந்து கொண்டு வந்தது. ஆனாலும் தோல் ஓரளவு ஆற அது இடம் கொடுத்தது என்பது மறுக்கப் பட முடியாதது.

அதைப் புதிதாக அதிகாரத்தைப் பெற்ற பெரும் குரங்கு அல்லது கிறுக்கு மிருகம் தினம் காலை எழுந்து ஒரு தடவை பிய்த்துக் கொண்டிருக்கிறது. ஆக மருத்துவர்கள் முன்னெப்போதையும் விடத் தொழிலையே இனி செய்ய வேண்டாம் என்று கருதும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமானவர்கள் சாதாரண முதல்நிலை மருத்துவர் என்ற தொழிலை விட ஆரம்பித்து விட்டார்கள். ப்ரைமரி கேர் ஃபிஸிஷியன் எனப்படும் குடும்ப மருத்துவர்கள் இப்போது மிகவும் குறைந்திருப்பதோடு, இருப்பவர்களுக்கு ஏராளமானவர்கள் போய்ச் சேர்கிறதால் தனியொரு நபருக்கு அவரால் கவனம் செலுத்த முடியாத நிலை. அதாவது அமெரிக்கா இந்தியாவாகிறது. இந்தியா அமெரிக்காவாகிறது. [இரண்டும் தம் நல்ல குணங்களை இழந்து மேன் மேலும் மோசமாகின்றன.]

நெஞ்சு எரிச்சலுக்கு பெப்டோ பிஸ்மல் என்ற திரவ மருந்து ஓரளவு உபாதையிலிருந்து விடுவிக்கும், ஆனால் அது போதாது என்று உணர்வீர்கள். அடுத்தது ப்ரைலோஸெக் அல்லது ஓமெப்ரஸோல் வகை மருந்துகளுக்கு நகர வேண்டும். அவை போதவில்லை என்றால் மைலாண்டா. அதை உட்கொண்டால் 15 வினாடிக்குள்ளேயே வயிற்றில் ஒரு நிதானம் வந்த மாதிரி இருக்கும். ஆனால் சில மணி கழித்து மறுபடி கலவரம் துவங்கும். சாப்பிட்ட பிறகு குறையலாம்.

அடுத்த கட்ட ப்ரைலோஸெக்/ ஓமெப்ரஸோல் மாத்திரிக்கு நகர வேண்டி இருக்கலாம். இதெல்லாம் போதவில்லை என்றால் கிருஷ்ணமாச்சார் யோக மந்திரத்தின் யோகா/ ப்ராணாயாம பயிற்சிகளை ஒழுங்காகத் துவங்கிச் செய்ய வேண்டி இருக்கும். பிறகு கொஞ்ச காலம் உலக நடப்பை எல்லாம் கவனிக்காமல் கதைகளைத் தவிர எதையும் படிக்காமல் இருக்கணும் என்றும் நினைக்கிறேன். வானப் பிரஸ்தம் போகலாம். இப்படி அதிக சொகுசற்ற, உடல் சிறிது வருத்தப்படும் வாழ்வை ஒரு வாரம் வெய்யிலில், சிறிது பனியில், சிறிது சுத்தக் காற்றில் மரங்களூடே கழித்து விட்டு ஊர் திரும்பினால் ஒரு வேளை நகர வாழ்க்கை அத்தனை பிரச்சினை உள்ளதாகத் தெரியாதோ என்னவோ.

இதெல்லாம் தெரிந்துதான் நம் ஊரில் கிரிவலம் என்பதை குடும்பஸ்தர்களுக்கு வருடாந்தர சிக்ஷையாக விதித்திருந்தனர் போலிருக்கிறது. அதையும் டொயோட்டா ஸியென்னா/ டாட்டா ஸூமோ என்று ஏதாவது வண்டியிலேயே போய்விடலாம் என்று மாறி விட்டார்கள் நம் மக்கள். 50களிலேயே திருப்பதி மலையை தகர டப்பா பஸ்களில்தான் ஏறிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் கவனிக்க வெண்டும்.

அதே கிரிவல முயற்சிதான் இந்த இலக்கியப் பத்திரிகைகள் நடத்துவதும், அவற்றில் எழுதுவதும், பிறகு அந்த உபாதை பற்றி மனம் நோவதும் என்றும் தோன்றுகிறது. எறும்பெல்லாம் சேர்ந்து சர்க்கரை மூட்டையை நகர்த்த முயல்வது போலவும் இருப்பதாகத் தோன்றுகிறது.

சதசத்து

அமைதி அத்தனை பயனுள்ளதாக இல்லை. தொடர்ந்த இயக்கம் சோர்வைக் கொடுக்குமென்றாலும், சிறிது ஓய்வுக்குப் பிறகு இயக்கமே வசீகரமாகத் தெரிகிறது.

நீள நீளமாகக் கடிதம் எழுதினால் படிக்க யாருக்கும் பொறுமை இல்லை என்பது மிலேனியல்களின் பண்பு. அதைச் சேமித்து விட்டுப் பின்னாடி படிக்கலாம் என்று விட்டு விடுவார்கள். அந்தப் பின்னாடி என்ற நேரம்தான் அனேகமாக வருவதில்லை, மேலை இலக்கியம்/ குறிப்பாக சினிமாவில் அடிக்கடி காட்டப்படும் ஒரு பிம்பம் வீட்டுச் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ஒரு எலிக் குடும்பப் பிராணி, அதன் உடல் நலம் கருதி, படிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்கரத்தில் தொடர்ந்து ஏற முயன்று கொண்டிருக்கும். அந்தச் சக்கரம் சுழன்றபடி இருக்கும் ஆனால் அந்தப் பிராணி சலிப்பின்றி ஏறும் முயற்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அதே போன்ற நிலை நம் வாழ்வில் ஒரு 60 ஆண்டுகளாவது நீடிக்கிறது. சில பிராணிகளுக்கு இது 80 ஆண்டுகள் கூட நீடிக்கிறது. பஃபெட், ட்ரம்ப், ஹிலரி, ப்ளேய்ர், சார்கோஸி, மோதி, மு.க இத்தியாதியினர் இந்த வகைப் பிராணிகள். பிராணி என்ற சொல் அஃறிணை அல்ல. ஜீவராசி என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது.

இந்த எலி வகைப் பிராணியின் பெயர் உடனே நினைவு வராததால் கூகிளில் தேடிய போது கிட்டிய தகவல்கள் கீழே. சுட்டிதான், முழுத் தகவல் அல்ல. வீட்டு வளர்ப்பு எலிகளுக்குக் கூட சக்கரத்தில் ஓடுவது பிடிக்குமாம். அப்படி அனேக மேலை வீடுகளில் ஓடும் பிராணியின் பெயர் ஹாம்ஸ்டர். என் ஒன்று விட்ட சகோதரியின் மகள், உயர்நிலைப்பள்ளி மாணவி, இப்படிச் சில மிருகங்களை வளர்க்கிறாள். அவர்கள் வீட்டுக்கு எப்போதோ ஒரு தடவைதான் போக முடிகிறது. அப்போது, உறவினர்களை விட அவை அவளுக்கு நெருங்கியவை என்று தோன்றும். வருடத்துக்கு ஒரு தடவை கூட வராத உறவினர்களை விடத் தினம் பார்க்கும் எலிகள் நெருங்கியவையாகத்தானே இருக்க முடியும். இனி இரண்டாவது லிங்கைப் பார்த்தால், (Even in the Wild, Mice Run on Wheels | Science | Proceedings of the Royal Society B) அதில் ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. வீட்டில் பொழுது போகாத எலிகள் சுற்றுவது அதிசயமில்லை. ஆனால், சுதந்திரமாக உலாவரும் எலி, மூஞ்சூறு… ஏன் தவளைகள் கூட காரணமே இல்லாமல், உருளைச் சக்கரத்தில் கடனேயென்று சுற்றோ சுற்று என்று வேலை மெனக்கிட்டு சுற்றிக் காலம் கழிக்கிறது.

ஆக சேமிக்கும் கடிதங்கள் படிக்கப்படாமல் போக வேலைப்பளு மட்டுமே காரணம் இல்லை. பொறுமையின்மையும் ஒரு காரணம் என்றாலும் அது மட்டுமே காரணமும் இல்லை. சக்கரத்தில் ஓடும் உற்சாகத் தேடலும், ஓடி ஓடி வாழ்வதில் உள்ள போதைப் பிடிப்பும் காரணங்கள் என்று சொல்ல முடியும். 18-24 வயது வரை அன்னிய தேசத் திரைப்படங்களை ஓடி ஓடிப் போய்ப் பார்த்த போதைப் பித்தனான எனக்கு இந்த ஓட்டத்தின் மீதான நாட்டம் புரிந்துதான் இருக்கிறது.

ஆனால் அடர்ந்து எதிரில் காடு இருக்கிறதென்றாலும், மேஜையில் இருக்கும் காகிதத்தில் கவிதை எழுதுவதை வேலை என்று சொன்ன கவிஞன் நினைவு இருக்கும் உங்களுக்கு. [அந்தக் கவிதை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று விளக்கும் ஒரு கட்டுரையைப் படித்திருக்கிறேன்.] அந்தக் கவிஞரின் கவிதைகள் உங்களுக்குப் பிடிக்குமென்றால், அவை எழுதப்படத் தேவையான உழைப்பு, அதைப் பதிப்பிக்கத் தேவையான உழைப்பு, அச்சடித்துப் புத்தகமாகக் கட்டி, கடைகளுக்கு அனுப்பி அதை நீங்கள் போய் வாங்கி வந்து உங்கள் படிப்பு அறை/ நாற்காலி/ மேஜை/ சோஃபா/ ஊர்தி ஆகியவற்றில் கொணர்ந்து சேர்த்ததோடு படிக்கவும் செய்யத் தேவையான உழைப்பு எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால் எஞ்சுவது உழைப்புதான். ஓட்டத்தின் போதையை நாடும் எலிகளே ஆரோக்கியமாக இருக்கின்றன.

நாங்கள் எலி இல்லை என்று வாதிடுவீராயின், சரி சிம்பன்ஸீயோ, கொரில்லாவோ, ஒராங் உடானோ, ரீஸஸ் குரங்கோ எதுவுமே (ரீஸஸ் என்பதை ஒன்றுக்கிருக்க கொடுக்கப்படும் இடைவேளை என்று நாங்கள் துவக்கப்பள்ளி காலத்தில் புரிந்து கொண்டோம். எனவே அந்த நினைப்பு எழாமல் இருக்க அனுமார் குரங்கு என்று சொல்ல வேண்டுமோ? இந்தியக் குரங்கு என்றும் சொல்லலாம். இந்தியாவில் உள்ளன அனேகமாக இந்த வகைக் குரங்குகள்தான்.] சும்மா இருக்கும் நேரம் மிகக் குறைவு. ஒரு அவசியமும் இல்லாமல் கிளைகளூடே தாவி ஊஞ்சலாடி அட்டகாசமான விளையாட்டு நிறைந்த வாழ்க்கையை அவை வாழ்கின்றன. இடையிடையே தின்னவும் தேடி அலைகின்றன என்பதை மறுக்கவில்லை. அப்படித்தான் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன். சங்கேதங்களின் பரிமாற்றம் என்பது அடுக்கடுக்காகக் கட்டப்பட்டு தொலைக்காட்சியாக, கணினித் திரை பிம்பங்களாக நம்மைப் பிடித்து வைத்தாலும், அவற்றின் மீதான நாட்டமும் இந்த கிளைதாவி ஊசலாடும் வெறி/ போதை நாட்டம்தான் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

நாம் நம்பிக்கைப் போதை பெற வேண்டும்.

ஒவ்வொருவருக்கு ஒரு போதைப் பொருள் தேவைப்படுகிறது. எனக்கு ஸீசன் தொல்லைகளே இல்லாத வருட முழுவதுமான புத்தகங்கள் மீதான போதை. [இடையில் ஒரு மாதம் மட்டும் முகாம், மலை, கடற்கரை என்று ஒரு சுற்றுலா நேர்கிறது. சமீபத்து இரண்டு வருடங்களில் சங்கீத ஸிசன் என்ற போதைப் பொருள் சேர்ந்திருக்கிறது. அது ஒரு 15 நாட்கள்தான்].

ஆனால் என் போதைப் பழக்கம் எனக்கு எழுதுவதற்கு உரமாகும் சிதைவுகளைக் கொடுக்கிறது. உங்கள் என் பி ஏ, என் எஃப் எல், (ஒலிம்பிக்ஸ், டெஸ்ட் மாட்ச் கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்தாட்டங்கள்) இத்தியாதிகளிலிருந்து உங்களுடைய ஒரு ஆதர்ச நடவடிக்கையான எழுத்துக்கு என்ன கிட்டுகிறது என்று பார்க்கக் கோருகிறேன்.

நீங்கள் அரசியலைத் தொடர்ந்து கவனிக்கலாம். ஆனால் உங்களுடைய சார்பு நிலை உங்களின் அலசல் அறிவை மங்கலடித்து, கூர்மை இழக்க வைக்கும். தானே கவனிக்கும் தகவலைப் பற்றி நேரான விளக்கத்தை கொடுக்க முடியாமல் போகும். 100 நாள்களில் நீதிபதியை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்துவதையும் +1 வகுப்பின் இறுதித் தேர்வையும் பொதுத் தேர்வாக்கியதையும் பெருமை தொனிக்க எழுதவைக்கலாம். அதை என்னென்ன மோசமான தந்திரங்களையும், விதி உடைப்புகளையும் கொண்டு குடியரசுக் கட்சி அல்லது அதிமுக சாதித்தது என்பது குறித்து ஒரு சிறு முனகல் இல்லாமல் கட்டுரை எழுதலாம். இதே விதி மீறலை ஜனநாயகக் கட்சி (அல்லது பா.ஜ.க.) செய்திருந்தால் ஓலமோ ஓலம் என்று எழுப்பி, வெள்ளை மாளிகைப் புற்றரை வெளியில் துப்பாக்கிகளோடு தேநீர் அருந்த வந்து நின்றிருப்பார்கள் காக் சகோதரர்களின் கூலிப் படைகள். அதைச் செய்யவும் செய்தார்கள் ஒரு நான்காண்டுகள்.

இதே எளிதாகவே அமெரிக்க அரசியலின் தன்மை, கட்சிகளின் அமைப்பு, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குலைவுகள், மேம்படுதல்கள், பணச் சந்தைப் புரட்டல்கள், இன அரசியல் உறவுகள்/ வெறிகள்/ போராட்டங்கள் என்று என்னென்னவோ தகவல்கள் கொண்டு எழுதலாம். அவற்றைக் குறித்து ஒவ்வொரு பக்கம் எழுதினால் கூட வருடம் பூரா கட்டுரைகள் எழுத முடியும். புத்தகங்களே கூட எழுத முடியும். ஆனால் செய்வாரா என்றால், அனேகர் மாட்டார்.

எழுதுவது அப்போதைய அரிப்பைத் தீர்க்க மட்டுமே என்றால் இப்படி ஒரு பக்கச் சாய்வு மட்டும் கொண்ட கட்டுரைகளை மட்டும்தான் எழுத முடியும்.

உங்கள் பந்தய விருப்பப் பொழுது போக்கு, போதை நாட்டத்தை உங்களால் சுலபமாகவே ஒரு விளைபொருளாக மாற்றி அல்லது உரமாக மாற்றிக் கொண்டு பற்பல விதமான கட்டுரைகளை நீங்கள் எழுத முடியும். உதாரணமாக அமெரிக்கக் கால்பந்தாட்டத்தில் ஏன் வெள்ளையரே அனேகமாக பந்து வீசும் ஆட்டக்காரராக இருக்கிறார் என்பதை நீங்கள் பேச முடியும். இன அரசியல் மட்டுமல்ல அதில், விளையாட்டுக் குழுக்களின் முதலாளிகள் யார் என்பதையும் பொறுத்தது அது. ஒரு கட்டத்தில் முழு வெள்ளையர் ஆட்டமாக இருந்த கூடைப் பந்தாட்டம் இன்று எப்படி கருப்பினத்தவர் அதிகமும் மையத்திலிருக்கும் ஆட்டமாயிற்று என்று யோசித்து ஒரு கட்டுரை எழுத முடியும். இதெல்லாமுமே க்ளீஷேக்கள்தான், இல்லை எனவில்லை. ஆனால் தமிழுக்கு இவை ஒரு துவக்கமாக இருக்கும்.

அங்கிருந்து இந்திய கிரிக்கெட் இன்று தொலைக்காட்சியின் தாக்கத்தால் கிராமம் கிராமமாகப் பரவிய விளையாட்டாக ஆகியபின், அதில் ஏராளமாக ஊதியம் உண்டு என்று இந்தியருக்குத் தெளிவான பின் இந்தியாவெங்கும் கிராமங்களிலெல்லாம் விளையாடப்படும் ஆட்டமாக ஆகி அதிலிருந்து பள்ளிகள் மூலமும், வேறு விதமாகவும் பல பொருளாதார நிலைகள், ஜாதிகள், ஊர்களிலிருந்து விளையாட்டுக்காரர்கள் தேர்வாகி இந்திய அணிகளில் விளையாடத் துவங்கியுள்ளார்கள். இந்த மாறுதல் நிகழ்ந்து ஒரு பதினைந்து இருபதாண்டுகள் ஆயின. இன்று தொடர்ந்து உலகக் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி முன்னணி வரிசையில் இருக்க இந்த மாற்றம் ஒரு காரணம் என்பதைப் பற்றி எழுத முடியும்.

இவற்றைத் தாண்டி உலக முதலியம் எப்படி கேளிக்கை என்பதை ஒரு விற்பனைப் பொருளாக ஆக்கி உலக உழைப்பாளர்களின் ஓய்வு நேரத்தைக் கபளீகரம் செய்து விட்டது. அதிலிருந்தும் பணத்தை உறிஞ்சிக் கொழுக்கிறது. தவிர அந்த நேரத்தில் அந்த உழைப்பாளர்கள் தம் வாழ்வின் அபத்தத்தைப் பற்றி யோசித்து ஏதும் அரசியல் ஞானத்தைப் பெற்று விட முடியாதபடிக்குத் தடைகளை உருவாக்கி வைக்கிறது என்று முற்றிலும் கருவி நோக்கத்தோடு, கருத்தியல் சார்போடு யோசித்து ஒரு கட்டுரை எழுத முடியும்.

இன்னும் என்னென்னவோ சாத்தியம்.

இவற்றை விளம்பர இடைவேளைகளின் போது மட்டுமே எழுதினால் கூட ஒவ்வொரு இணைய இதழுக்கும் உங்களிடமிருந்து ஒரு ஐந்து பக்கக் கட்டுரை தயாராகி விடும்.

விசிகை

நானே ஒரு பிரச்சினை நபர். எத்தனையோ படித்து, ஏதேதோ நீண்ட சிதறல் குறிப்புகளை எழுதுவதை நிறுத்தி விட்டு, ஒழுங்காகக் கட்டுரைகளை எழுதினால் நிறைய உருப்படியாகச் செய்ய முடியும். அதை விட்டு விட்டு இப்படி கடிதம் எழுதிப் பொழுதைப் போக்குகிறேன். ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியைப் பார்த்துப் பழி சொல்வது அயலூர் மொழிப்படி, கருப்புப்பானை கெட்டிலைப் பார்த்து நீ கரி என்று சொல்வதை ஒத்திருக்கும்.

Veteran Mexican journalist Javier Valdez is killed – LA Times: இந்தச் செய்தியைச் சற்று முன் படித்தேன். இந்தப் பத்திரிகைச் செய்தியாளர் எல் சாபோ என்கிற பெரும் மெக்ஸிக போதை மருந்துக் கடத்தல் அமைப்பின் தலைவனான குஸ்மான் பற்றி எழுதியவை அவனைக் கைப்பற்ற உதவியாகவும், உந்துதலையும் கொடுத்தனவாம். ஆனால் தன் சக்தி குறித்து அபரிமித நம்பிக்கை கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு நேர்வது இவருக்கும் நேர்ந்து நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்த குஸ்மானை பெருவின் பயங்கரவாத மின்னும் பாதைத் தலைவனான அபிமெயல் குஸ்மானோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. (Fugitive Leader of Maoist Rebels Is Captured by the Police in Peru – Abimael Guzman Reynoso)

பின்னவர் தத்துவப் பேராசிரியர்களுக்கு மமதை பிடித்தால் என்னவொரு கொலைகாரர்களாக மாறுவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். பெருவை அடியோடு குலைத்த பெருமான்களில் இவர் ஒருவர். இவரைப் பிடித்த அரசுக்குத் தலைவராக இருந்த ஃப்யுஜிமொரி, ஒரு ஜப்பானியக் குடியேறிக் குடும்பத்தின் பிரஜை. அவரும் பெரு நசிக்கக் காரணமானவர்களில் ஒருவர்தான். ஆனால் திரேதா யுகத்துப் பெருமுதலைக்கு, அந்த யுகத்து யானைதான் எதிரி என்பதைப் போல ஃப்யுஜிமொரியின் முதலிய அழிப்புக்கு குஸ்மானின் மார்க்சிய அழிப்புதான் பொருத்தமான எதிரி. வந்து காப்பாற்ற விஷ்ணுதான் இல்லை. இன்று வரை பெரு முன்னேற வழியில்லாமலே கிடக்கிறது.

பெருவின் பாதையிலேயே இன்று மெக்ஸிகோ போய்க் கொண்டிருக்கிறது. ராணுவம், போலிஸ், அரசியல்கட்சிகள், பல்கலைகள், மத அமைப்புகள், முதலியர்கள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், தொலைக் காட்சி/ செய்தி ஊடகங்கள் என்று எங்கும் ஊழல், வன்முறை, அராஜகம். அதே நேரம் இன்னொரு புறம் அன்றாட மெக்ஸிக வாழ்க்கை எப்படியோ நடக்கிறது. [தொடர்புள்ள கட்டுரை: சொல்வனம் ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும் – மைத்ரேயன்]

அப்படியே இதையும் படித்துவிடுங்கள்: Why We Fight Wars – The Chronicle of Higher Education

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.