ஓர் இளங்காலையில்

சில நாட்கள் காரில் அவர்கள் அமைதியாக இருப்பார்கள், சிலநாட்களில் பேசுவார்கள்.

“அம்மா.”

“ம்ஹூம்.”

“ஒரு நாள்ல ஒரு தடவை மட்டும் நான் வையலாமா? யாரையும் பார்த்து வையாம வெறுமனே வையலாமா?”

“எதுக்கு?”

“காலம்பற. நீ வந்து என்னை எழுப்பறப்ப, ’நாசமாப் போச்சு’-ன்னு சொல்லலாமா?”

“கூடாது.”

உலகத்திலேயே இவன் ஒருத்தன் தான் நான் சொல்றதைக் கேக்கறவன், அதைச் செய்யவும் செய்யறவன், ஜோயீ நினைத்தாள். அன்று காலையில் அவள் போய் எழுப்பியபோது, இன்னும் விழிப்பு வராமல், தன்னியல்பாக, அவன் முனகினான் – ‘அதுக்குள்ளயா?’ பிறகு தலையணையிலிருந்து தன் வலுவான, தூக்கம் நிறைந்த கைகளை அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டான்.

அவள் வாழ்வில் இந்த வருடங்களில், உறங்கும் நேரத்தை விட்டு விட்டுக் கணக்கிட்டால், தன் கணவனுடன் செலவழிக்கும் நேரத்தை விட நிச்சயமாக அதிகமாக, முப்பது மடங்கு கூட அதிகமாக, காரில் அருகருகே அமர்ந்தபடி, வேறெவரையும் விடக் கூடுதலான நேரம், தனியாகத் தன் மகனுடன் அவள் கழித்துக் கொண்டிருக்கிறாள். வேறெவருக்கும் இல்லாமல், அவனுக்கு மட்டும் தன்னை வெளிப்படுத்தும் அந்தத் தினசரி நிகழ்வுகள்; உரக்க யோசிப்பது, நீச்சலுக்குத் தேவையான பொருட்கள், கார் சாவிகள், கணிதப் புத்தகங்கள் என்று பலவற்றையும் வேட்டையாடும் வேலையில் ஒருவரை ஒருவர் தூண்டுவது, பூனைகளைப் போலக் கொட்டாவி விடுவது, ஏனெனில் பள்ளிக்கு நேரத்தில் போய்ச் சேருவதற்கு அவர்கள் ஏழு மணி ஆன உடனே வீட்டை விட்டுப் போய் விட வேண்டும். ஃப்ரீடாவின் வீட்டுக்குப் போகும் வழியில் முதல் இருபத்தி ஐந்து நிமிடங்களுக்கு அவர்கள் இருவரும் தம் கனவுகளின் சொச்சங்களைப் பற்றி சொல்லிக் கொள்ளலாம், அல்லது சௌகரியமான மௌனத்தில் அமர்ந்திருக்கலாம், அல்லது சில நேரம் இருவரும் பேசிக் கொள்வதும் உண்டு.

இன்று காலை சூரியன் கிழக்கே எழுந்து காரின் முன்கண்ணாடியில் அடித்து, வீசிய மின்னலான ஒளியால் அவர்களைக் கண நேரம் குருடாக்கியதைச் சுட்டியபோது, அவளுடைய ஒன்பது வயது மகன் அவளை ஏளனம் செய்தான் – பூமி தன் அச்சில் சுழல்கிறது, சூரியனைச் சுற்றி வருகிறது, அவள், அவனுடைய அம்மா, எப்படி பண்டைக்கால எகிப்தியர்களைப் போலவே மோசமான கருத்துகளைக் கொண்டிருக்கிறாள், அவர்கள் எப்படி சூரியன் மறையும்போது ரா என்ற தெய்வத்துக்கு யாரையாவது பலி இட்டார்கள், கிரஹண நாட்களில் எல்லாரையும் கொன்று குவித்தார்கள் என்றான். இது ஓடியே போய் விடும், இந்த ஒளிவான காலம் (என்று ஜோயீ நினைத்தாள்.) பதினோரு வயதானாலே உன்னை நீயேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இப்போதைய போக்குவரத்து நிர்வகிப்பின் எழுதப்படாத அணுகுமுறை, ஆனால் அதுவரை உனக்கு ஒரு பாதுகாவலர் தேவை. இரண்டு வருடங்கள் கூட இல்லை மிச்சம்.

“நான் பள்ளிக்கூடத்தில் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது,” என்று கேட்மன் குன்றுப் பகுதியில் போக்குவரத்து விளக்கு மாறுவதற்காக அவர்கள் காத்திருந்தபோது அவள் சொல்லி இருந்தாள். “அது முடிவே வராது என்பது போலப் போய்க் கொண்டே இருந்தது. பள்ளிக்கூடத்தில் காலம் மெதுவாகவே போகும். மெள்ள, மெள்ள. அப்புறம், உனக்கு முப்பது வயது ஆகையில், அது வேகம் வேகமாகப் போகும்.”

“ஏன்?” ஜ்யார்ஜ் கேட்டான்.

“எனக்குத் தெரியாது,” அவள் சொன்னாள். “ஒருவேளை அதற்குப் பிறகு உனக்கு எப்படியோ தெரிகிறது போலிருக்கிறது, இனிமேல் ஒரு கணம் வரும், அது முடிந்த பின்னால், அப்புறம் உனக்கு ஏதும் இராது என்று.”

“ஓ..ஓ-ஆ!”

அப்போது அவன் கடந்து போன ஒரு சைக்கிள்காரரைப் பார்த்தான், சொன்னான், “பெரிய சூத்து.”

அதிர்ச்சியோடு அவள் சொன்னாள், “ஜ்யார்ஜ்!”

“அது என்னை மீறி வந்து விட்டது,” ஒரு வளர்ந்தவனைப் போல, அவன் மன்னிப்புக் கேட்டான். “உங்களுக்குத் தெரியுமே, அந்த வெள்ளை வான் வண்டியில் இருந்த ஆள், உங்களை நுழைய விடாத போது,”நாய்ப்பயல்” -னு நீங்க சொன்னீங்களே அது போலத்தான்.”

இப்படி தினமும் புகை மூட்டமான காற்றூடாக அடியடியாக முன்னேறியபடி, விருப்பப்படி விரைய முடியாததால் ஆத்திரத்திலிருக்கும் பத்தாயிரம் காரோட்டிகளோடு நடக்கும் தினசரிப் போராட்டம், அவளுக்கு, ஜோயீக்கு, தயக்கத்தை வரவழைத்தது. ஜ்யார்ஜின் பள்ளிக்கூடம் (புனித இதயர் பள்ளி, ஜ்யார்ஜின் அப்பாவிற்கு நம்பிக்கை புதிதாகத் துளிர்த்திருந்ததன் பலன், அரை மைல் தூரமே இருந்த ‘ஹியர்வேர்ட் த வேக்’ பள்ளிக்குப் பதிலாக) இரண்டே முக்கால் மைல் தூரமே இருந்தது, ஆனால் அதற்குச் செல்ல 45 நிமிடங்கள் பயணம், காலியாக இருந்த காரில் தனியாக வீடு திரும்ப இன்னொரு 45 நிமிடங்கள் தேவைப்பட்டது. மாலை நேரங்களில் இதேதான், ஆனால் நேர்மாறாக, இரண்டரை மணிக்குக் கிளம்பிப் போய், நான்கு மணிக்கு அப்புறம் நிறைய நேரம் கழித்துத்தான் வீடு திரும்ப முடிந்தது. அதற்கு ரயில் இல்லை. பஸ்ஸில் போவதானால், அவர்கள் 63ஏ வைப் பிடிக்க வேண்டும், பிறகு 119 ஆம் எண் பஸ்ஸிற்கு ஸாலெர்ஸ் சந்திப்பில் காத்திருக்க வேண்டும். இதை அவர்கள் முயன்று பார்த்திருந்தனர். அது பயண நேரத்தை இரட்டிப்பாக்கியது. ஒவ்வொருத்தருக்கும் பள்ளிக்கூட பஸ் விட்டால் என்ன, அமெரிக்காவில் இருக்கிற மாதிரி, அம்மாக்கள் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக் கொண்டார்கள். யாருக்கும் இது ஏனில்லை என்பது தெரியவில்லை, ஆனால் அது நடக்காது என்றுதான் தோன்றியது. காரில் செலவழிக்கும் நேரத்தில் நடந்தே போய்ச் சேர்ந்து விடலாம் என்று தோன்றி, இருவரும் அதையும் செய்து பார்த்தார்கள், வீட்டுப்பாடங்கள், மதிய உணவுப் பெட்டி, விளையாட்டுக் கருவிகள் எல்லாம் கொண்ட மூட்டைகளோடு, ஆமை வேகத்தில் ஊர்ந்து போகும் கார்களிலிருந்து வீசும் புகைமூட்டத்தூடே நடந்து… இதில் மழையையும், காற்றையும் சேர்த்துக் கொண்டால், நடைபாதையில் போவது என்ற எண்ணமே பித்துக்குளித்தனமாகத் தெரிந்தது.

“நான் எடுக்கறேன் மா,” ஜ்யார்ஜ் சொன்னான், அவளுடைய செல்பேசியில் ஒரு செய்தி வந்ததற்கான கீச்சொலி கேட்டதும்.

அது அவளுடைய தோழி ஏமியிடமிருந்து வந்தது, அவளுடைய கணவன் அவளை விட்டு விட்டு, தன் மாணவி ஒருத்தியோடு போய் விட்டான்.

  • நான் ஏதாவது சொன்னால், அவன் ரொம்ப ஆத்திரப்படறான் [ஏமி முந்தைய தொலைபேசி அழைப்பில் சொல்லி இருந்தாள்]; நான் கோபப்படறதை அவன் ஏற்பதில்லை.
  • ஆனால் அவன் தானே உன்னை விட்டு விட்டுப் போனான்.
  • ஆமாம். ஆனால் அவன் இப்ப என் கிட்ட ஒரே ஆத்திரமாய் இருக்கான். என்னை வெறுக்கறான்.
  • நீ அவனை இன்னும் காதலிக்கிறியா?
  • நான் அவனைப் பொருட்படுத்தறதில்லை. பதினைந்து வருஷமா என்னோட சாப்பிட்டு, என் கிட்டே படுத்துத் தூங்கினவன் இத்தனை விட்டேத்தியா இருக்கான், இத்தனை கொடூரமா இருக்காங்கிறதைத்தான் தாங்கிக்க முடியல்ல.

பெண்களால் துக்கத்தைத் துக்கமாக மட்டுமே வைத்துக் கையாள முடியும், (ஜோயீ நினைத்தாள்), ஆனால் ஆண்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள், அதைக் கையாள்வதற்காக அதை டீஸலாக மாற்றி, அத்தனை இழப்பையும், வலியையும் ஆங்காரமாக மாற்றுகிறார்கள், என்பதுதான் உண்மையோ?

அவளுடைய கணவன் சுற்றியும் பார்த்து விட்டுத்தான் கேட்டான், ஸாலியையோ, சித்ராவையோ அல்லது மோவையோ போல, ஒரு தாதியை ஏற்பாடு செய்து, அவசியமானால் சில நாட்கள் காரோட்டும் பயிற்சிக்குச் செலவழித்து, இந்த வேலையை சந்தோஷமாகச் செய்யத் தயாராய் உள்ள ஒருத்தரிடம் இந்த வேலையை ஏன் கொடுக்கக் கூடாது? அவள், ஜோயீ, இதை முன்னாடியே யோசித்திருந்தாள், ஆனால் அதை எல்லாம், ஜோவுக்கும் தெரிஸாவுக்கும் வேண்டி, முன்பே ஒரு தடவை செய்து பார்த்து விட்டாள், இரண்டு பேரும் இப்போது உயர்நிலைப் பள்ளியில் இருந்தார்கள். அவள் கணக்குகளைப் போட்டுப் பார்த்து விட்டாள், கற்பனையில் சில பேட்டிகளை நடத்தி இருந்தாள், ஏதும் விபத்தில் சிக்காமல் இருந்தால் போனஸ் கொடுப்பதைப் பற்றி யோசித்திருந்தாள்; தன் வேலை பாதி நேர வேலையாகக் குறைக்கப்படும் வருடங்களில் ஏற்படவிருக்கும் இழப்பைக் கணக்கிட்டிருந்தாள், வருமானத்தில் கிட்டக் கூடிய அதிகரிப்பை, குழந்தைப் பராமரிப்புச் செலவுகளில் ஏற்படக் கூடிய அதிகரிப்போடு ஒப்பிட்டுப் பார்த்திருந்தாள், கடைசியில் கசப்பை விழுங்கிக் கொள்ளத் தயாராகி விட்டிருந்தாள். “இது உன்னோட தேர்வுதான்.” என்றான் பாட்ரிக். ஆமாம், அது அவளுடையதாகத்தான் இருந்தது.

“நீங்க தோத்துப் போனவங்க அம்மா,” அவள் ஒரு தொழில் வாழ்வுக் கூட்டத்துக்குப் போய் வந்த போது, அவள் மகள், தெரீஸா, அவளிடம் சொன்னாள். ஆனால் அவள் தோற்றவளில்லை. அவள் எல்லாவற்றையும் செய்து முடித்திருக்கிறாள் – தன் முன்னாளைய சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் எல்லாவற்றையும் கடந்திருக்கிறாள், துண்டுகளாகக் காலத்தைச் செதுக்கி வைத்துக் கொண்டு, தன் வேலை எதையும் கை விடாமல், பிறகு குழந்தைகளோடு இருப்பதற்காகக் கொஞ்சம் விடுவித்துக் கொண்டு. கணவனின் வேலை தன் வேலைக்கு மேலாகி முக்கியமுள்ள இடத்தைப் பிடித்துக் கொண்டது என்றால் தாய் தந்தை இருவரும் பிரியாமல் ஒன்றாக இருக்கிற குடும்பங்களில் எல்லாம் அப்படித்தான் ஆகிறது, மனைவி கணவனை விட அதிகம் சம்பாதிப்பவளாக இருந்தாலொழிய, அதுவோ வேறு வகை மோசமான பிரச்சினைகளைக் கிளப்பும். நீண்ட நாட்களாக மறக்கப்பட்டு விட்ட அன்றைய மணிகளும், நாட்களும், இப்போது வேர்களைச் சூழ்ந்து உயிர்ச்சத்தாக ஆகி விடும் மக்கிய இலைகள் போல ஆகி இருக்கின்றன. ’லெட் த பாஸ்ட் கோ’ (ஜோயீ சன்னக் குரலில் பாடினாள்), முன்னே போக வேண்டும்; தன்னுள்ளேயே இருக்கும் தேய்மானம் துயரம் தராமல் அவளைத் துடிப்புள்ளவளாக ஆக்கலாம். ஒரு வேளை வாழ்வின் வடிவமைப்பு ஒரு காலக் கண்ணாடிக் குடுவை போன்றதோ, தெளிந்தும், அகலமாகவும் ஆரம்பித்து, நடுவயதில் குறுகிய சுரங்கமாகி, மண் முழுதும் கீழே கொட்டுமுன்னர் மறுபடி அகலமாகி விடுமோ என்னவோ.

“அம்மா, வார்த்தையெல்லாம் எனக்குத் தெரியறதான்னு ஒரு தடவை சோதிக்கிறியா?” ஜ்யார்ஜ் கேட்டான். அவன் ஃப்ரெஞ்சு மொழியில் ’ருசி பார்க்கும்’ வகுப்பு ஒன்றை இந்த முறை எடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய நண்பன் மிக் அவனை விட கணக்கில் மேலாக இருந்ததால், மிக்கைத் தாண்டி விடும் நோக்கத்தில் இந்த வகுப்பில் தீவிரமாக இருந்தான்.

“பார், நான் அப்படிச் செய்யக் கூடாதுன்னு இருக்கு.” ஜோயீ சொன்னாள். “ஆனால் நாம நகரவே இல்லை. இங்கே, என்னோட மடியில புத்தகத்தை வை, கண்ணை நல்லாத் திறந்து வச்சுக்க, முன்னாடி இருக்கிற கார் எப்போ நகர்றதுன்னு பார்த்துகிட்டு இரு.”

நான் துவங்கும்போது, முப்பது வயது வரை குழந்தைகளைப் பெறாமல் இருப்பது ரொம்ப தாமதமாக்கி விட்டதாகப் பார்க்கப்பட்டது (ஜோயீ நினைத்தாள்).  முப்பதுக்கு அப்புறம் பெண்கள் தேயத் துவங்கி விடுவார்கள், புத்திளமை போய்விடும் என்றெல்லாம் நினைப்பிருந்தது. இப்போது நாற்பத்தி இரண்டு வரையும் ஒரு பெண் இன்னமும் இளம் பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கு- ஒல்லியாக, நல்ல துடிதுடிப்போடு, எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென்று. நான் அதைச் செய்யலை, ஜோ வை இருபத்தாறு வயசுலயும், தெரீஸாவை இருபத்தி எட்டுலயும் பெத்துகிட்டேன், அதே நேரம் வேலையை விடாமலே அதெல்லாம் செஞ்சேன், நல்ல தாதிகளயும், நர்ஸரி பள்ளிக்கூடங்களையும், வீட்டோடு இருக்கிற குழந்தைப் பராமரிப்புக்காரிகளையும், எந்தத் தேர்வையும் விடல்லை, தேடி என்ன சிரமப்பட்டிருக்கேன். கடைசீல ஐந்து வருஷம் கழிச்சு ஜ்யார்ஜ் வந்து சேர்ந்தான், இப்பத்தான் கொஞ்சம் நிதானமாகி இருக்கேன், இப்ப ஏன் இத்தனை பெண்கள் ஏதேதோ மாதிரி இருக்காங்கங்கறது தெரியல்லை. ஏதோ ஓரிடத்திலே தேங்கியும்; வேற இடங்கள்லே வாயடைச்சுப் போயும். முடக்கப்பட்டிருக்காங்க. இல்லெ, வெறுமனே தாமதமாகி இருக்காங்களா?

“இதெல்லாம் யார், எப்போது, எங்கே, எப்படி அந்த மாதிரி விஷயங்கள்தான்.” என்றான் ஜ்யார்ஜ். “கான் (quand) -ங்கறதை நான் எப்படி நினைவு வச்சுக்கிறேன்னு சொல்றேன். சூனியக்காரனின் சீடன் -ங்கிறதை நெனவு வச்சுப்பேன். அவன் கிட்டெ மந்திரக் கோல் இருக்கும்னு நமக்குத் தெரியும் (வாண்ட்- wand ), அது கான் (Quand) மாதிரியே ஒலிக்கிறது, இல்லையா? அவன் நிறைய வாளியிலெ தண்ணியோட போறான், அப்புறம் அவன் எப்ப (WHEN) திரும்பி வர்றானோ… புரியறதா? எப்ப அவன் திரும்பி வரானோ!  அப்படித்தான் அந்த வார்த்தை என் மனசுல தங்கறது. அப்புறம், கீ (Qui) ங்கறது கதவுல இருக்கற சாவி, அதுக்கு நாம பதில் சொல்லணும். யாரங்கே? ஹூ (WHO)! இதெல்லாம் நானே யோசிச்சேன், ஆமா. பின்னே? இங்க, ஊ(0u) ன்னா மழைக்காடுகள்ல இருக்கற குரங்குகள். ஊ ஊ ஊ. பாரு, பாரு, எல்லாம் நகர்றது.”

அவர்கள் முக்கி முக்கி சிறிது முன்னே நகர்ந்தார்கள், சில வினாடிகள் இரண்டாவது கியருக்குக் கூடப் போக முடிந்தது, மறுபடி ஸ்தம்பித்து நின்றார்கள்.

“மழைக்காட்டை எதுக்குக் கொண்டு வந்தே?” ஜோயீ கேட்டாள். “மழைக்காட்டுக் குரங்குகள்னு எதுக்கு?”

“ஏன்னாக்க, அதுங்கள்லாம் எங்கே இருக்கு?” அவன் கேட்டான். “மழைக்காட்டுல இருக்கற மரங்கள்லாம் எங்கே? அதைத்தான் அந்தக் குரங்குகள்லாம் கேக்கறது. ஊ ஊ ஊ? ஏன்னா அதெல்லாம் அங்கே இல்லியே இப்ப, மழைக்காட்டுல இருந்த மரங்கள்லாம்.”

“பள்ளிக் கூடத்துல சொல்லிக் கொடுக்கறது எல்லாத்தையும் நீ நெனவு வச்சுக்கறெ, அப்படித்தானே?” வியப்பு தொனிக்க ஜோயீ கேட்டாள்.

“கிட்டத் தட்ட,” திருப்தியைக் காட்டும் புன்னகையோடு ஜ்யார்ஜ் சொன்னான். “ம்மா, நான் பெரியவனா வளர்ற வரைக்கும் நீ செத்துப் போகக் கூடாதுன்னு எனக்கு இருக்கு.”

அங்கே கொஞ்சம் இடைவெளி இருந்தது.

“ஆனா, உனக்கு முன்னாடி நானும் செத்துப் போகக் கூடாதுன்னும் இருக்கு,” அவன் அதைச் சேர்த்துக் கொண்டான்.

“கூடாதுதான். நானும் அது நடக்கக் கூடாதுன்னுதான் நெனைக்கிறேன்,” ஜோயீ சொன்னாள்.

குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒவ்வொரு நாளையும் கூட இந்தப் பையன் ஞாபகம் வைத்துக் கொள்கிறான் (ஜோயீ நினைத்தாள்), இவன் இன்னும் அத்தனை வருஷம் கூட வாழவில்லை, அவனுடைய நினைவு வங்கியில் ஏராளமான ஏக்கர்களுக்கு அழகான காலியிடம் இருக்கிறது. நானோ கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்தாயிற்று, இப்ப ஒரு கட்டம் வந்திருக்கு, என் புத்தியே எங்கிட்ட சொல்றது தன்னோட அடுக்குகள்லெ ஏகப்பட்டது சேர்ந்தாச்சு, இனிமே, எதுவும் நிசம்மாவே சேமிக்கப் படற அளவு மதிப்புள்ளதா இருந்தாலொழிய, புதுசா எதையும் சேர்க்கறத்துக்கு தனக்கு விருப்பமில்லே.

மாடிப் படிகளில் ஏறுகிறேன், அப்புறம் என்ன தேடி வந்தேன் என்பதை மறந்து விடுகிறேன். சென்ற வாரம் நடாஷாவைக் கூட்டி வருவதாக அவள் அம்மாவிடம் வாக்கு கொடுத்து விட்டு அவளை அழைத்து வர மறந்து போனேன், ஐவன்ஹோ நிழல்சாலையில் இடையிலேயே மூன்று விதத் திருப்பங்கள் செய்து திரும்பிப் போய் ஏற்றிக் கொண்டு வர வேண்டி இருந்தது. காரில் ஏற்கனவே இருந்த மூன்று குழந்தைகளும் என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருப்பார்கள் என்று நம்பிக்கை வைக்க நேர்ந்தது. ஆனால் அதெல்லாம் ஒன்றும் புதிதில்லை. போன பத்தாண்டு காலம் போல, அதுல எதுவும் எனக்கு ஒன்றுமே நினைவில்லை, என அவள் பிற அம்மாக்களிடம் சொல்லி இருந்தாள். அவர்களெல்லாமும் உடன்பட்டார்கள். அதெல்லாம் வெறும் மசமசப்பு, ஒரு வெற்றிடம், என்ன நடந்தது என்று உறுதி செய்ய அவர்களிடம் ஒளிப்படங்கள் இருந்தன, ஆனால் அவர்களுக்கு எதுவும் நினைவில்லை. அவள், ஜோயீ, விரும்பி வரவேற்கப்படும் மழையைப் போன்ற தூக்கம் இல்லாமல் அவளுடைய நினைவு வங்கிகள் எல்லாம் வாடி வதங்கிப் போயிருப்பதைப் பார்த்திருந்தாள்; புத்துணர்ச்சியூட்டும் அந்த மாரிப் பெருக்குகள் திரும்ப வரப் போவதையும், அதனால் நீரூற்றப்பட்டு மலர்ந்து விரியப்போகும் கோப்பை நூடில் கட்டுகளான நினைவுகளையும் பற்றி அவள் ஏக்கத்துடன் காத்திருந்தாள். (ஒரு நாள்) எப்படிக் கடந்த காலம் தீர யோசித்தபின் செயலுக்குத் தாவி எழும், முக்கியமானவற்றால் நிரம்பிப் பெருகி இருக்கும், புதிதாக உயிரூட்டத்துடன் இயங்கும் என்று எதிர்பார்த்தாள். அவள் முதியவளான பின், சுதந்திரம் பெற்று, தன் இரண்டாவது பதின்ம காலத்தை அடைந்து, அவள் ராணியைப் போல நேரம் கடந்து, நண்பகல் வரையோ அல்லது பிற்பகல் ஒரு மணி வரையோ தூங்குவாள். ஆனால் வயதானவர்கள் அந்த நாட்டுக்கு மறுபடி போக முடிவதில்லை என்றுதான் செய்தி கொடுக்கிறார்கள்; அவர்களுக்கு விழிப்பு வந்து விடுகிறது, மிக இலேசான உறக்கத்தில் நான்கைந்து மணிகள் கழித்த பின்னர் விடிகாலைக் கூவல் கூட்டொலிகளைக் கேட்டபடி கிடக்க வேண்டி வருகிறது, இளமைப் பருவத்தின் அடர்ந்த, மிருதுவான உறக்கத்துக்காக, இளமையைக் கொடுக்கும் உறக்கத்துக்காக அவர்கள் ஏங்குகிறார்கள்.

அவர்கள் ஃப்ரீடாவின் வீட்டை அடைந்தார்கள், ஜோயீ காரை நிறுத்தி, ஜ்யார்ஜ் இறங்க வகை செய்தாள். அவன் போய் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, ஃப்ரீடாவும், இந்த சவாரிப் பகிர்வில் சேர்ந்திருக்கிற ஹாரியும், தங்கள் பைகளையும், மேலங்கிகளையும், காலணிகளையும் சேகரித்துக் கொண்டிருக்கையில், காத்திருந்தான். அந்தத் தெரு குறுகியதாக இருந்ததால், அல்லது அந்த இடத்திலேயே காத்திருந்தால் பின்னால் நிறைய பேர் வரிசையாக நிற்கும்படி ஆகும் எனவே அதைச் செய்ய ஜோயீக்கு துணிவில்லை. இன்று காலை அவள் முன்னூறு கஜம் தள்ளி இருந்த சிறு இடைவெளியில் துளிப் போல இருந்த இடத்தில் காரை நெருக்கி நிறுத்தியபோது, அத்தனை சிறு இடத்தில் நிறுத்தியது குறித்து அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

உண்மையில் புரட்சிகரமானது இப்போது எதுவென்றால் (காத்துக் கொண்டிருக்கையில், ஏமியிடமிருந்து வந்த செய்தியை மறுபடி படித்தபோது ஜோயீ நினைத்தாள்) ஒரு ஆணும், ஒரு பெண்ணும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, பிறகு சந்தோஷமாகச் சேர்ந்து வாழ்வதும், நீதியும், அன்பும் நீடித்திருப்பதும், சுயமரியாதை இரு தரப்பிலும் இருப்பதும், ஒவ்வொருவரும் மற்றவரும், குழந்தைகளும் தழைத்து ஓங்குவதில் நாட்டம் கொண்டிருப்பதும் தான். மழை பெய்யத் துவங்கியதால், காரின் முன்கண்ணாடியில் காட்சி மங்கியது. எப்போதும் இல்லாவிடினும், முறை வைத்துக் கொண்டாவது அப்படி இருக்கலாம், அவள் தன் யோசனையைக் கொஞ்சம் திருத்திக் கொண்டாள். இந்தப் பசங்களெல்லாம் எங்கே இருக்காங்க?

ஆனால் அலையாக எழும் இந்த விவாக முறிவுகள் (அவள் யோசித்தாள்), பத்துப் பதினைந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த ஜோடிகளுடையவை, எல்லாமே ஏமியினுடையதைப் போல மலினமானதாக இராது – இளமைத் துணையை நாடுவதால், விட்டுச் செல்கிற வகை அது என்பது அவள் நினைப்பு. அவள், ஜோயீ, நுணுகிப் பார்க்கையில் கவனித்தபடி அதெல்லாம் ஒவ்வொரு மணவாழ்விலும் இருக்கக் கூடிய கோபதாபங்களின் பாதரசம் போன்ற ஈவு, உஷ்ணமானியின் உச்சத்துக்குக் கிளர்ந்தெழுந்ததால்தான் நடந்திருக்கிறது. இத்தனை காலம் கடந்து விட்டபிறகு அந்த மணவாழ்வு எப்படி அமைந்திருக்கிறது என்பதோடுதான் சம்பந்தப்பட்டதாக இருந்தது. ஜோடியில் ஒருவர் மேம்பட்டுக் கொண்டும், திருப்தியோடும் வாழ்கையில், இன்னொருவர் நிம்மதியற்றும், வழிதொலைந்த தத்தளிப்பிலும் இருந்தாரா? அல்லது பல வருடங்களில் மணவாழ்வில் இருண்மை சூழ்ந்து விட்டதா, ஒரு நபர் மற்றவரை, முடிவில்லாத சோகத்திலோ அல்லது சிடுமூஞ்சித்தனத்தாலோ அல்லது தொடர்ந்து கண்டித்துக் கொண்டிருப்பதாலோ கீழிறக்கிக் கொண்டும், அதோடு நிற்காமல் தம் துன்பநிலைக்கு மற்றவரையே காரணமாகக் கருதுவதாலும், என்ன செய்தாலும் அமைதி கொள்ளாமலும், அதுவும் ஒரு போதும் மாறாமலும் இருப்பதால்தான் இப்படி எல்லாம் நேர்கிறதோ.

முதல் இரண்டுமூன்று வருடங்களில் குழந்தைகள் பெற்றதாலும் சில நொறுங்கல்கள் இருந்தன, அவை உதிரிகள், ஆனால் பின்னர் ஓரளவு அமைதி நிலவியது. இப்போது இரண்டாவது அலை, பத்தாண்டுகள் கழிந்த பின்னர், ஒரு சூனாமி போல விவாகரத்துகள் எழுகின்றன, குழந்தைகள் பதின்ம வயதிற்கு நகர்ந்த பின், பெற்றோர்கள் தம் இளமையைக் கடக்க நேர்ந்தபின். மூன்றாவது பேரலை வரவிருக்கிறது, குழந்தைகள் வளர்ந்து தம் வாழ்வைத் தொடர வீட்டை விட்டு வெளியேறியபின். ஜோயீ, மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதிலிருந்தே, இந்த நடப்புகள் பற்றி நல்ல பரிச்சயத்தை அடைந்திருந்தாள். முதலில் அதிர்ச்சியும், மனத் தொய்வும், காயம்பட்ட உணர்வும் எழும்; பிறகு பகையுணர்வுடன் (குறிப்பாக பணம் குறித்த வெறுப்பு) குழப்பமும், அவநம்பிக்கையும் எழும்; பிறகு இன்னும் கீழிறங்கி முன்பு சந்தேகித்திராத அளவு சதி செய்வதற்கும், மர்மமாக ஒதுங்குவதற்கும் உள்ள திறமைகள் இருப்பதான ஐயங்களும், இரட்டை முகங்கொண்ட பொய்மைகளும் கண்டுபிடிக்கப்படும்; கடைசியாகப் பிடிவாதமான வெறுப்புக்குள் வீழும் நிலையையோ, பொசுக்கும் துக்கத்தையோ வந்தடைவர். சென்ற வாரம்தான் அவளுடைய அண்டை வீட்டுக்காரி, தன் வீட்டை விற்பனைக்கு என்று சந்தையில் முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவள், வேலியைத் தாண்டி இவளிடம் சீறினாள், “அவன் புற்று நோய் வந்து சாகப் போறான், எனக்கு அதுதான் வேணும்.” ஆனால் வீட்டை வாங்குவதற்குப் பார்க்க வருவோரிடம் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் ‘சுமுகமான பிரிவுதான்’ என்று தாழ்குரலில் சொல்லி நம்பிக்கை ஊட்டினார்கள்; வாங்குபவர்கள் சுமுகமான பிரிவு என்பதையே கேட்க விரும்பினார்கள், கசப்பும் விரோதமுமுள்ள பிரிவு என்பதை அல்ல.

அவள் பின்நோக்கும் கண்ணாடியில் பார்த்தாள், அவர்கள் வழக்கமான பள்ளிக்கூட மூட்டைகளோடு அவளை நோக்கித் தளர்வாக வந்து கொண்டிருந்தார்கள்.  மணி எட்டாக இன்னும் நிறைய நேரம் இருந்தது, தான் வழக்கத்தை விடவும் வெளுத்துப் போயும், சொற சொறப்பாகவும் இருப்பதாக உணர்ந்ததால், அவர்கள் காரை வந்தடையும்போது கொஞ்சம் நிறத்தைச் சேர்த்துக் கொண்டாள்.

‘ஹேய், லிப்ஸ்டிக்,” என்றான் ஜ்யார்ஜ், முன்புற இருக்கையில் அமர்ந்தபடி. மற்ற இருவரும் தாமாகவே பைகளயும் தம்மையும் பிரித்துக் கொண்டு பின்னிருக்கையில் அமர்ந்தனர்.

“முன்னெல்லாம் நான் மேக்அப் போட்டுக்கிட்டுதான் இருந்தேன்,” என்றாள் ஜோயீ. “ஆனா கொஞ்சமாத்தான். எனக்கு இன்னும் இளமை இருக்கறச்செ போட்டது. எனக்கு அது பிடிச்சுத்தான் இருந்தது.”

“நீங்க இப்ப ஏன் போட்டுக்கக் கூடாது?” ஃப்ரீடா கேட்டாள். ஃபீரீடாவின் அம்மா போட்டுக் கொள்வாள், வேறென்ன. அவள் அம்மா முப்பத்தி எட்டு வயசுக்காரி, நாற்பத்தி இரண்டு இல்லையே. அதில் நிச்சயமாக வித்தியாசம் வருகிறது, இப்படி மறுபக்கத்துக்கு சரிந்து வந்து சேர்வதில், ஜோயீ யோசித்தாள், அதோடு நாம் களைப்படைவதும் கூடுகிறது.

“பாருங்க, இப்பவும் எனக்கு வேணும்னா நான் போட்டுக்கிறேனே,” அவள் சொன்னாள், காரைக் கிளப்பி, சிக்னலையும் காட்டியபடி. ஒரு சரக்கு சுமக்கும் வேன் மெதுவாகக் கடந்து, மிக நெருக்கி அடித்துத் தன்னைக் கடக்கக் காத்திருந்தாள். “ஆனாக்க, பல்லைத் தேய்க்கிறமாதிரி தினமும் அதைச் செய்றதில்லே. அது எப்பவாவது செய்யற ஒண்ணு, அவ்வளவுதான்.” தவிர, உங்களைத் தவிர வேற யாரு என்னை வந்து பார்க்கப் போறாங்க, அப்பறம் நான் ஏன் அதைச் செய்யணும், என்று எரிச்சலோடு, மௌனமாக மனதுக்குள் சேர்த்துக் கொண்டாள்.

அவளுக்கு அந்தக் குழந்தைகள் யோசிப்பது தெரிந்திருந்தது, என்னது, ஏன் கூடாது? பெண்கள் கட்டாயமா மேக் அப் போட்டுக்கத்தான் வேணும். அதுவும் ஃப்ரீடா பகட்டாக இருப்பதையே விரும்புவாள், மேலும் ஒருத்தர் எந்த நேரத்திலயும் தங்களோட சிறப்பான தோற்றத்தையே காட்டணும்னும் நினைப்பாள்.

“ஒரு தடவை எங்களோட ஒரு மெக்ஸிகன் மாணவி தங்கி இருந்தார்,” பிரதான சாலையினுள் ஒடுங்கி நுழைந்தபடி அவள் சொன்னாள். “முதல்லெ எல்லாம் அவளோட மின்னற, நீளமான தலைமுடியை மணிக்கணக்கா சீவிச் சிங்காரிப்பா. கண்ணிமை மேலெ எல்லாம் மேக் அப்பைத் தடவிக்கிடவும், அவளோட உதட்டில எல்லாம் பிரமிக்க வைக்கிற மாதிரி பளபளக்கிற உதட்டுப் பூச்சைப் பூசிக்கவும் இன்னும் எத்தனையோ நேரம் ஆகும். ஆனால் கொஞ்ச நாள்லேயே அதை அவ நிறுத்திட்டா, பார்க்க எங்களை மாதிரியே ஆயிட்டா- அவ எங்கிட்ட சொன்னா, மெக்ஸிகோ நகரத்தை விட்டு வந்தப்புறம், இது ரொம்ப உல்லாசமான விடுமுறை, அங்கென்னா முழு அலங்காரம் இல்லாம எங்கேயும் வெளியிலே போக முடியாது, எல்லாரும் அவளை உத்து உத்துப் பார்ப்பாங்களாம். அதனாலெ, அதுக்கப்புறம் அவ இந்த அலங்காரத்தை எல்லாம் பார்ட்டிகளுக்கும், அவளுக்கு எப்ப தோணித்தோ அப்ப மட்டும்னு வச்சுகிட்டா.”

“மேக் அப் இல்லாதப்ப பொண்ணுங்க பார்க்க நல்லா இருக்காங்க,” பின்னாலிருந்த ஹாரி சொன்னான். ஹாரியுடைய வீட்டுச் செவிலி, அவனை செவ்வாய், வியாழன் காலைகளில் ஃப்ரீடாவின் வீட்டில் கொண்டு விட்டு விடுவாள், பள்ளிக்கூட வாழ்வின் நலன் என்பது அதிகம் திராணியில்லாதது, அதைக் காப்பாற்றக் கழுகுப் பார்வையோடு நிறுவப்பட்ட பரஸ்பர உதவி என்னும் முறை தேவை, அதற்குத் தேவையான நல்லெண்ணத்தோடு ஜோயீ, திங்கள், புதன் கிழமைகளில் ஹாரியின் வீட்டிலிருந்து ஜ்யார்ஜைச் சேகரிப்பாள், இது மொத்தப் பயணத்தைப் பாதியாகக் குறைத்தது.

“சரிதான், ஆனா நான் வளர்ந்தப்பறம் மேக் அப் போட்டுக்கத்தான் போறேன்,” என்றாள் ஃப்ரீடா.

“முன்னெல்லாம் பெண்கள் தங்களோட கடிகார அலாரத்தை ஒரு மணி முன்னதாக வைத்துக் கொள்வார்கள். செயற்கை கண்ணிமை முடிகளையும், இமையில் மைக் கோட்டையும், இன்னும் பலதையும் அணிய வேண்டுமே அதற்காகத்தான்.” என்றாள் ஜோயீ. “உன் கணவன் உன் வெறும் முகத்தைப் பார்த்து விடுவான் என்று பயப்படுவதைக் கற்பனை செய்ய முடிகிறதா?”

இதை அவர்கள் யோசித்துப் பார்க்கையில் மௌனம் நிலவியது; அரைமனதாக ஒப்புதல் கூட இருந்தது; விருப்பமில்லாத ஒப்புதல், அதுவும். ஜோயீ கவனித்தாள், முந்நாளைய புத்திமதி இன்னும் புழக்கத்தில் இருந்தது என்பதை, அதாவது பெண்கள் ஆண்களைப் பாராட்டுகிற மாதிரி ரசிப்போடு கேட்டிருக்க வேண்டும், தங்களில் ஒருவரை அவர்கள் கவர்ந்து செல்ல முயன்றால் அவர்களை ஏளனம் செய்யக் கூடாது என்பன. தம்மை விடப் பிறப்பிலேயே மேல் நிலை உள்ளவர், கூடுதலான சுதந்திரம் உள்ளவர், மேலும் சக்தியுள்ளவர் என்பதால் ஓர் ஆணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மேலும் ஆண்கள், அவர்கள் வேண்டுவனதான் என்ன? அவர்களுக்கு சூன்யம் (ஆன பெண்) தான் வேண்டும் என்பது உண்மையா என்ன? உடல் அழகாயிருப்பது அல்லது சுயநலமே இல்லாமை அதெல்லாம் தவிர வேறெதற்கும் ஒரு பெண் ஆணிடம் இருந்து பாராட்டை, ரசிப்பை எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் உண்மையா என்ன? நிச்சயம் இல்லை. அப்படியானால், நம் வாழ்வாதாரத்தை நாமே அடித்துப் புரண்டு பெற்று விட முடிகிறதென்றால், எதற்காக ஒரு உபயோகமில்லாத ஆணோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?

“உங்களுக்கு அலெக்ஸைப் பிடிக்கிறதா?” ஹாரி கேட்டான். “எனக்குப் பிடிக்காது. நான் அலெக்ஸை வெறுக்கிறேன், அவன் சிணுங்கிக் கொண்டே இருக்கிறான், கஞ்சன், அழுகிறான், எப்பவும் சிடுசிடுன்னு இருக்கான். ஆனா அவனைப் பிடிக்கும்ங்கற மாதிரி நான் நடிக்கிறேன், ஏன்னு கேட்டா அவனுக்கு என்னைப் பிடிக்கணும்னு நான் விரும்பறேன்.”

மற்ற மூவரிடமிருந்து ஏதும் பதில் இல்லை. முன் காலை மயக்கத்தில் அவர்கள் மூழ்கி இருந்தார்கள், சுற்றிலும் அசையாமல் நிற்கிற போக்குவரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நான் அவனை இழவாக் கருதறேன்.” என்றான் ஹாரி.

“அப்படிச் சொல்ல முடியாது.” என்றாள் ஃப்ரீடா. “அது இழிவாக் கருதறேன்னு வரும்.”

“அதான் நானும் சொன்னேன்.” என்றான் ஹாரி.

ஜ்யார்ஜின் மூக்குக்குள்ளிருந்து கேலியைப் போல ஒரு வினோத ஒலி சீறியது.

உங்களுக்குச் சம்பளம் குறைவாகத்தான் கிடைக்கிறது என்பதற்காக வேலைக்குப் போகாமல் இருப்பதும், (ஜோயீ யோசித்தாள்) திருமண வாழ்வில் இருள் சூழாமல் இருப்பதற்காக, எல்லா வீட்டு வேலைகளையும், எல்லா உணர்வு நிர்வாக வேலைகளையும் நீங்களே செய்வதும் தேவை என்று நினைப்பது ஆபத்தை நாடுவதையும், தவறான பாதையிலேயே செல்வதையும் ஒத்ததே ஆகும். இல்லையென்றால் நீங்கள் நியாயம் வேண்டிக் குரல் உயர்த்தினால், அது உங்களைப் பராமரிக்கும் கையையே சுட்டது போலாகும். ஆமாம், நீங்கள் எப்போதும் கிட்டவே இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் (ஜோயீ யோசித்தாள்), எல்லாவற்றையும் போட்டு வைக்கும் பீரோ மாதிரி இருக்க முயன்றீர்கள், அவர்களுக்கு வீட்டை ஒத்த பாதுகாப்பைக் கொடுக்க முயன்றீர்கள். ஆனால் உங்களுடைய சுதந்திரத்தை ரொம்ப காலம் விட்டுக் கொடுப்பதும், எதிர்காலத்தில் விடுவிப்பு என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிட்டாமலே தன்னை அடக்கி வைத்துக் கொள்வதும், அதெல்லாம் ஆரோக்கியத்துக்கு வழிகள் இல்லை.

“விளையாட்டு மைதானத்தில் நான் யாரையாவது அதட்டி உருட்டும்போது அவங்க அழ ஆரம்பிச்சா அப்ப எனக்கு வர உணர்ச்சி எனக்குப் பிடிக்கறதில்லே.” என்று வெகுளித்தனத்தோடு ஹாரி சொன்னான்.

“நான் ஏதோ சொன்னதற்காக ஒருத்தர் அழ ஆரம்பிச்சா அது எனக்குப் பிடிக்கறதில்லே.” என்றாள் ஃப்ரீடா.

“கூட்டமாச் சில பேர் சேர்ந்து யாரையாவது அழ வைச்சா அது எனக்குப் பிடிக்கறதில்லே,” என்று ஜ்யார்ஜ் தன் தோளுக்குப் பின்புறம் பார்த்துச் சொன்னான். “அது என்னை மோசமா உணர வைக்கிறது.”

“ஓ, எனக்கு அது பத்திக் கவலை இல்லை,” என்றான் ஹாரி. “அவங்களை அழ வைச்சது நான் இல்லைன்னா சரி. அது வேற யாரெல்லாமோன்னா, அது என்னோட சம்பந்தப்பட்டதில்லை.”

“இல்லை, ஆனா அந்த மாதிரி ஒருத்தருக்கு ஆச்சுங்கறது உன்னை மோசமா உணர வைக்காதா,” ஜ்யார்ஜ் பதிலளித்தான், “அதுவும் எல்லாருமா சேர்ந்து ஒருத்தரையே மடக்கும்போது, நீ வந்து, அதுபத்தி, எதுவும் சொல்லாம இருந்தாலுமா?”

“இல்லை,” என்றான் ஹாரி. “அதில எனக்கு அக்கறை இல்லை. அங்க மோசமா நடந்துக்கறது நானில்லைங்கறபோது, அங்கே என்ன நடக்கிறதோ அதைப் பத்தி நான் கேவலமா உணர்றதில்லை.”

“ஓ,” என்றான் ஜ்யார்ஜ், அதை யோசித்தபடி, “நான் உணர்வேன்.”

“அந்தக் காரோட நம்பர் தகட்டைப் பாரேன்,” என்றால் ஃப்ரீடா. “அந்த எழுத்துகள் சொல்றது, எக்ஸன். எக்ஸ் ஏ என்! எக்ஸன்!”

“எஃப் டபுள்யுஎம் எம் எம்!” ஹாரி சேர்ந்து கொண்டான். “ஃப்வம்ம்ம்ஃப்வம்ம்ம்! ஃப்வம்ம்ம்! எஃப் டபுள்யு எம் எம் எம்! ஃப்வ்ம்ம்ம்!”

“பிஜிஏ,” ஜ்யார்ஜ் உறுமினான். “பிஜிஏ. உன்னால நாக்கால மூக்கைத் தொட முடியுமா?”

அசையாமல் நிற்கிற காருக்குள்ளிருந்து, ஜோயீ வெளியே பஸ் நிறுத்தத்தில் மழையில் நின்று கொண்டிருந்தவர்களை வெறித்துப் பார்த்தாள், அவர்களின் முகங்களை ஆராய்ந்து பார்த்தாள். காலம் சதைக்குள் புதைகிறது (அவள் யோசித்தாள்), படிப்படியாக அதை (சதையை)ப் புதைக்கிறது. தூரத்தில் பார்க்கையில் காயம்பட்டவரைப் போன்ற தோற்றம் வருகிறது, மேலும் ஏதோ காரணத்தால் ஒத்த அமைப்பு குலைவதும் நேர்கிறது. ஒரு கண் இன்னொரு கண்ணை விட மேலே இருப்பது போலவும், வாய் கோணலானதும் போலத் தெரிகின்றன. நாம் நம்முடைய கேலிச்சித்திரங்களைப் போலத் தோன்றவாரம்பிக்கிறோம். இந்த மாதிரி குளிர் அதிகமான நாட்களில், அதன் தாக்கத்தால் தோற்றம் மிகவே பூதாகாரமாக மாறுகிறது.

“மலை முகட்டிலிருந்து தள்ளலாம் என்று யாரைப் பொறுக்குவீர்கள், சிறைக்கு அனுப்பவோ அல்லது இறுகக் கட்டியணைக்கவோ யார் யாரை?” ஜ்யார்ஜ் பின்னேயிருந்தவர்களிடம் கேள்வியைத் தூக்கிப் போட்டான். “மூன்றில் – பீடர் வால்லிங்ஸ்-”

“ஐயோ, பீடர் வாலிங்ஸ் வேண்டாம்!” அருவருப்பு கொடுத்த மிகைக் கிளர்ச்சியோடு ஃப்ரீடா கிறீச்சிட்டாள்.

“மிஸர்ஸ் காம்ப்பெல். அப்புறம்- மிஸ்டர். ஸ்டார்லிங்!”

“மிஸ்டர். ஸ்டார்லிங், ஓ மை காட், மிஸ்டர். ஸ்டார்லிங்!” அருவருப்பும், குதூகலமும் மாறி மாறி எழ மூச்சுத் திணறுவது போல உணர்ந்த ஹாரி சொன்னான். “நேற்று அவர் இந்தச் சட்டையைப் போட்டுருந்தார் பார், ஆமா, அவருக்கு எத்தனை மார்புக் காம்புகள் உண்டுங்கறதை நமக்குக் காட்டறார்.”

நம்மோட தோல் முன்னால இருந்த மாதிரி சதையோட சேர்ந்திருக்கிறதில்லை (ஜோயீ யோசித்துக் கொண்டிருந்தாள்), முன்னை மாதிரி தசையோட சேர்ந்து அசைந்து அதோடே போகிறதில்லை. நாம திரும்பினால், நாம எத்தனை நேர்த்தியாக இருந்தாலும் மடிப்புகள் விசிறி போலத் தெரிகின்றன; இத்தனைக்கும் அந்த பஸ் ஸ்டாப்பில இருக்கற, பதினோரு வயசைத் தாண்டின செகண்டரி பள்ளிக்கூடத்து இளம் கன்றுகள் போல, நாமும்தான் ஒரு கட்டத்தில இருந்தோம். அவ்வளவா இன்னும் பூர்த்தியடையாமல், கரடு முரடாக இருக்கற இளம் பையன்களைப் பார்த்தால் நாம் ஏன் புன்னகைக்கிறோம் (அவள் வியந்தாள்), ஆனால் இத்தனை துவக்கநிலை அழகோடு இருக்கிற, அதன் உதவியால் மின்னுகிற, அவர்களின் முடி கண்ணாடியைப் போல வழவழப்பாகவும், சுருள்களின் செழிப்போடும் இருக்கிற, பெரிய சிரிப்புகளை வீசுகிற இளம் பெண்களால் குலைந்து போகிறோம், அவர்கள் குரலுயர்த்தி எதிர்த்துப் பேசுகிறார்கள், இந்த நாட்களில் யாரும், “நீ யாருன்னு நெனச்சுகிட்டிருக்கிறே?” என்றோ, “நீ ஒரு வேசியைப் போல இருக்கே” என்றோ அவர்களிடம் சொல்வதில்லை. (வளர்ச்சியில்) பையன்களோ அப்படி ஒன்றும் வெகு தொலைவில் பின் தங்கி இருக்கப் போவதில்லை.

“எனக்கு என்னோட நாயை ரொம்பப் பிடிக்கும்,” என்றான் ஹாரி உத்வேகத்தோடு.

“ஆமாம், அது ஒரு அருமையான நாய்,” என்று ஒத்துக் கொண்டால் ஃப்ரீடா.

“என்னோட நாயை நான் எவ்வளவு விரும்பறேன் தெரியுமா,” ஹாரி தொடர்ந்தான், “என்னோட நாய் செத்துப் போறதைப் பார்க்கறதை விட நானே செத்துப் போகலாம்னு நினைப்பேன்.”

“உன் நாய் செத்துப் போறதை விட நீயே செத்துப் போவியா?” என்று அவநம்பிக்கையோடு ஜ்யார்ஜ் கேட்டான்.

“ஆமா! நான் என்னோட நாயை ரொம்ப நேசிக்கிறேன். நீ உன் நாயை நேசிக்கிறதில்லையா?”

“ஆமா. ஆனா…”

“நீ உன் நாயை நெசம்மா நேசிக்கல்லை. அதுக்குப் பதிலா நீ சாக மாட்டேன்னு சொன்னா.”

ஜோயீ தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள். அவளோட தீர்மானப்படி, அவள்  ஒருபோதும் இதிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டாள். இந்நாளில் அவளுக்குப் பிடித்துப் போயிருக்கிறவையான, தனக்குள் நடத்தும் உரையாடல்களெல்லாம் அவளுக்குச் சாத்தியமாகக் காரணம் இப்படி ஓரளவு வளர்ந்திருக்கிற இளம்பிராயத்தினர் நடுவே அவள் இருப்பதுதான், அவர்களுக்கு வேண்டுவன செய்ய அவள் இருந்தாள், ஆனால் மௌனம் காத்தபடி. ஒரு பறவையின் சுதந்திரத்தோடு தன் யோசனைகளுக்குள் அவ்வப்போது முங்கி எழ அவளுக்கு இந்நாளில் முடிந்தது. ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் நடுவே இப்படி நம் யோசனைகளில் முக்குளித்து எழுவது சாத்தியமில்லை என்பது நிஜமாக இருக்கலாம்; அவர்களுடைய தேவைகள் தொடர்ந்து எழுபவை, நுட்பமானவை, மிக்க கவனிப்பைக் கேட்பவை, அவர்களுக்கு நாம் அறைக்குள்ளேயே இருக்க வேண்டும், அதே நேரம் நமக்கோ அறையை விட்டு வெளியே போனால்தான் எதையும் யோசிக்க முடியும்.

ஜ்யார்ஜ் அவளோடு நடக்கையில் அவளுடைய முழங்கை ஊளைச்சதையை, அது அவன் அதற்கு இட்ட பெயர், பிடித்தபடியே நடப்பான். அவன் அதைக் கிள்ளிப் பிடித்ததால் அதற்குத் தனி உருவமே கிட்டி இருந்தது. அவன் உயரமானவனாக ஆகவிருக்கிறான். என் நெஞ்சளவு வந்து விடுவான், என்று போன வருடம் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள், ஆனால் அவன் அதற்கு மேலும் வளர்ந்திருக்கிறான்; ஒன்பது வயதுப் பையன், அவளுடைய தோளுக்கு வந்து விட்டான்.

“டீன் ஏஜேர்ஸ்!” என்று அவன் வியந்து அத்தனை நாட்கள் ஆகி விடவில்லை. “எனக்குப் பதின்மூன்று வயசாற போது ஒரே ராத்திரியில் நான் பயங்கரமானவனாக மாறிப் போய்டுவேன். எங்கே பார்த்தாலும் பருப்பருவா ஆகி, உங்க கிட்ட மரியாதை இல்லாமப் பேச ஆரம்பிச்சு, இல்லைன்னா பேச முடியாதுன்னு விலகி..வெறுமனே உறுமிக்கிட்டு.”

இதை எல்லாம் அவன் எங்கேயிருந்து கற்றுக் கொள்கிறான்? இளம்பெண்கள் அடங்காமல் போய்த் துன்பம் தருகிற வயது பதினான்கு, என்று இப்போது வளர்ப்பு நிபுணர்கள் சொல்கிறார்கள்; ஆனால் பையன்களுக்கு அது பத்தொன்பது வயதில்தான். அதற்கு இன்னும் பத்து வருடங்கள் இருக்கின்றன. நல்ல விஷயம்.

“உனக்கு உசரமா இருக்கணும்னு ஆசையா?” அவள் அந்தச் சமயம் அவனிடம் கேட்டாள்.

“அப்படி ஒண்ணும் இல்லை.” என்று உறுதியாக அவன் சொன்னான். “ஆனால் அஞ்சடி எட்டங்குலமோ அதற்குக் கிட்டயோ இருக்க எனக்குப் பிடிக்காது. என்னோட மனைவியை விட நான் உயரமா இருக்கணும்.”

அவனோட மனைவியாமே! வரவிருக்கும் வருடங்களின் நடைபாதையில் நிறைய தூரம் தாண்டி, தேய்ந்து கொண்டிருக்கும் சூரியன் பின்புலத்திலிருக்க, முகம் நிழலில் இருக்கிற அவனுடைய மனைவியை, அவள் பார்த்தாள். அவள், ஜோயீ, அவனைச் சந்திக்கும்போது அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டால் அவனுடைய மனைவி அதைச் சகிப்பாளா? ஏற்கலாம், ஏன், நன்றாகவே ஏற்கலாம். தந்தை ஒருவர் தன் பெண்ணைத் திருமணத்தில் கொடுத்து விடுவதை விட, தாய் தன் மகனைக் கை மாற்றிக் கொடுப்பதே மிக அவசியம். ஒருவேளை அவனுடைய மனைவி அவர்களைக் கை குலுக்கத்தான் அனுமதிப்பாளோ என்னவோ. அவன் சிறுபையனாக இருக்கையில் அவனுடைய கைகள் முட்டிகளோ, நரம்புகளோ தெரியாமல், வெல்வெட் போல இருந்தன; அவன் எதையாவது அவளிடமிருந்து கொஞ்சலாகக் கேட்டு வாங்க முயலும்போது, அவளுடைய கார்டிகன் கம்பளி ஸ்வெட்டரின் கைகளுக்குள் தன் சிறிய கதகதப்பான கைகளை மேல் நோக்கி நுழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அவர்கள் மார்ட்ரெட் குன்றிலிருந்து அங்குலம் அங்குலமாகக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர், ஒரு பெரும் வண்டி அதன் அளவுக்கு மிகக் குறுகலான பதினெட்டாம் நூற்றாண்டின் சந்து ஒன்றுக்குள் பின்னோக்கி நுழைந்து விட முயன்று கொண்டிருந்ததால் அந்தக் கால தாமதம் ஏற்பட்டிருந்தது. ஜோயீ அதை நம்பவே முடியாமல் பெருமூச்சு விட்டாள், பிறகு தன்னுடைய ஆழ மூச்சு விடும் பயிற்சியைச் செய்தாள். அதைப் பத்தி நம்மால் எதுவும் செய்ய முடியாது, ரோட்ல சீற்றம் அடையறதுல அர்த்தமே இல்லை, நாடு என்னவென்றால் திணறர வரைக்கும் கார்களால திணிக்கப்பட்டு இருக்கு, அவ்வளவுதான், அதுக்கு மேல என்ன சொல்ல இருக்கு. கல்லூரி முடிந்ததும் அவள் சிவில் சர்வீஸ் பரீட்சைகளை எழுதி இருந்தாள், அதில் கேள்விகளில் ஒன்று இப்படி இருந்தது, இந்த நாட்டின் போக்குவரத்து அமைப்பை நீ எப்படி அமைப்பாய்? க்ளியோமெட்ரிக்ஸிலும், டெண்ட்ரோ க்ரோனாலஜியிலும் முழுவதும் இறங்கி இருந்ததால் அவளால் அந்தக் கேள்விக்குச் சரியாகப் பதிலெழுத முடியவில்லை; ஆனால் இப்போது, சில பத்தாண்டுகள் கடந்த பிறகு, அவள் அந்தத் தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையாக இல்லாவிட்டாலும், பல ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு பதிலெழுத முழுதும் தகுதி உள்ளவளாக இருப்பதாக உணர்ந்தாள்.

மனைவிகளையும், நிலை மாறாத தன்மையையும், ஒரே துணை மண வாழ்வின் பெருமையையும் நம்புகிறவராக இருந்தால் (ஜோயீ மேலும் யோசித்தாள், அந்த ட்ரக் இடத்தைக் காலி செய்தது, போக்கு வரவு மறுபடியும் ஓடத் துவங்கியது) மாறுதலை நீங்கள் எப்படி ஏற்க முடியும்? அவளுடைய சகோதரி வாலெரி அவள் எப்படி தன் கணவனை படுக்கையில் இருக்கையில் தினமும் ‘ஹௌ டு ரெஸ்க்யூ எ ரிலேஷன்ஷிப்’ என்பதிலிருந்து உரக்கப் படிக்கும்படி செய்கிறாள் என்பதை வருணித்திருந்தாள். அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அது ஒரு திருமண வாழ்வு நல ஆலோசகரிடம் போவதற்கு ஒத்தது என்பதைச் சுட்டினாளாம். வாழ வேண்டுமென்று நினைப்பவர் ஒவ்வொருவரும் மறக்க வேண்டும் என்று வாலெரி மரத்த குரலில் சொல்லி இருந்தாள்; அதுதான் சாரம். அவள், ஜோயீயும்தான் திருமண நலனுக்கு ஆலோசனை பெறுவதை அத்தனை மதித்து நடந்து கொண்டிருப்பாளென்று அவள் நினைக்கவில்லை, அதற்குக் காரணம், பள்ளிக்கூடத்துக்குக் காரை ஓட்டிக் கொண்டு போகும் வேலைகளை எல்லாம்  இனிமேல் செய்ய அவசியமில்லாத பெண்களால்தான் பெரும்பாலும் நடத்தப்படுவது என்று அவள் நினைத்ததுதான்.  அது எல்லாமே பெண்கள் தேவைப்பட்டவர்களாகவும், விரும்பப்பட்டவர்களாகவும் இருந்த பிறகு தேவைப்படாத, விரும்பப்படாத நிலைக்கு வந்தது பற்றியவைதான் என்று தோன்றியது. அவள் இரண்டாம் கியருக்கு மாறி ஓட்டினாள்.

காலை 8.40க்கு அம்மாக்கள் இத்தனை பேர் கூட்டமாக, பால் நிறைந்த லாட்டே காஃபியோடு, இந்த இடத்தில் அமர்ந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முதலிரண்டு கியர்களிலேயே வண்டியை ஓட்டியதிலிருந்து மீண்டு இளைப்பாறுகிறார்கள்; பள்ளிக்கூட நேரக் கெடுவை நிறைவேற்றிய பிறகு, இப்போது வீடு திரும்ப வண்டியைத் திரும்ப ஓட்டவேண்டிய சுமைக்கு முன், சற்றாவது மகிழ்வைத் தேடுகிறார்கள். காலையில் இந்த நேரத்தில் ஜோயீக்குத் தான் மட்டுமாக இருப்பதுதான் ஏற்றதாக இருந்தது, இந்தக் குழுக்களோடு உரையாட அவளுக்குச் சிறிதும் விருப்பமில்லை, அவை அனேகமாக குற்றம் காணும் முனைப்பிலேயே மூழ்கியவையாக இருந்தன, மிஸ்.ஸ்காண்ட்டில்பரி எப்படி நெடு முறையில் வகுப்பதைச் சொல்லிக் கொடுத்தார், அல்லது வகுப்பறையில் எப்படி அநியாயங்கள் நடக்கின்றன என்பது குறித்து காலங்கடந்த விசாரணைகள், நியாயம் கோரும் கோபங்கள் கொப்பளித்து எழுதல், தலையிட விரும்பும் ஆர்வம், இன்னும் கூடத் தம் மகவுகளின் வாழ்வில் தாமே முக்கிய சக்தியாக இருக்க விரும்பும் வேகம்.  அவளுக்கு ஒரு காஃபி என்னவோ தேவையாகத்தான் இருந்தது- ஒரு இரட்டை மாச்சியாடோ, குறித்துச் சொல்வதானால்-  சுற்றிலும் பலர் கூட இருந்தாலும் நடுவில் தனியாக இருப்பதும், சுற்றிலும் ஒவ்வொரு மேஜையும் மற்றவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு இருந்தாலும், பல மேஜைகளில் ஆங்காங்கே நெருங்கி அமர்ந்து நட்போடு பகிரும் துண்டுப் பேச்சுகள் காற்றில் மிதந்து கொண்டிருக்க, ஒரு கஃபேயில் கிட்டும் உணர்வும் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு இப்போது நினைவு வந்தது, நேற்று அவளுக்கருகிலிருந்த மேஜையில் அமர்ந்திருந்தவர்கள், மிகத் தளர்வாகத் தைக்கப்பட்டிருந்த கால் சராய்களணிந்த இரு பெண்கள், அத்தனை கடுகடுப்பாக இருந்தனர்.

“அவனைப் பாதுகாக்கணும்னு இருக்கு எனக்கு. பெண்களெல்லாம் இப்போது ரொம்பத் தூண்டற மாதிரி உடுத்தறாங்க. அவனுக்குப் பதிமூணுதான் வயசு.”

“அதுவும் சுத்தி எங்க பார்த்தாலும் இந்தப் படங்கள். எங்கே நாம் போனாலும்.”

“இது ஒரு நல்ல பண்பாடே இல்லை.”

“ஆமா. அது சரியே இல்லை.”

சுற்றி எங்கும் உட்கார்ந்திருந்த பெண்கள் ஒருவரிடம் ஒருவர் தம்மைப் பற்றித் தமக்கிருந்த தற்போதைய கற்பித உருக்களையும், தம் வாழ்வுகளையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அவ்வப்போது ஒழுக்க அளவையில் இன்னொரு உயரிய நிலையில் தம்மை இருத்திக் கொண்டு குறைகளைப் பற்றி சீற்றக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அது ஒரு நிஜமான பலவீனம், (அதை ஏற்க முடியாத மாதிரி தலையை அசைத்தபடி அவள் யோசித்தாள்) எதிரியும் கூட, எதற்கென்றால்-  எதற்கு, நாம் அடைய முயல்வது எதுவோ அதற்கு. நல்லுறவை அடைதல், என்று அதைச் சொல்லலாமா?

“போன வருஷம் நாங்க கார்ன்வால்லெ இருந்த போது, நாங்க எல்லாம் ஒரு படகில போனோமா, அப்ப சுறாக்களைப் பார்த்தோம்,” ஹாரி சொன்னான்.

“சுறாவா!” அவநம்பிக்கை தொனிக்க ஜ்யார்ஜ் சொன்னான், “ஆஹா, கார்ன்வால்லெ.”

“இல்லை, நிஜம்மாத்தான்,” ஹாரி வலியுறுத்தினான்.

“அதோட ஈல்களையும் சேர்த்துக்க,” ஃப்ரீடா சொன்னாள், “அதுங்களையும் எனக்குப் பிடிக்காது.”

“ஊஊ, ஆமா,” ஒத்துப் பாடினான் ஹாரி, பாவனையாக நடுங்கியபடி.

“கடல் பாம்புங்களை என்ன சொல்றது?” ஜ்யார்ஜ் கேட்டான். “அதுங்க நம்ம உடம்புல எந்த ஓட்டை இருந்தாலும் அதுல நுழைஞ்சுடும்.”

இந்தத் தகவலை உள்வாங்கிக் கொள்ள அவர்கள் முயற்சித்ததில், கார் மௌனமாகி இருந்தது.

“இதை நீ எங்க கேட்டே?” ஜோயி சந்தேகத்தோடு கேட்டாள்; மிஸ்டர். ஸ்டார்லிங்கைப் பற்றி அவளுக்கு தனிப்பட்ட ஐயங்கள் இருந்தன.

“மிஸ்டர் ஸ்டார்லிங் எங்க கிட்டே சொன்னார்,” ஜ்யார்ஜ் ஏளனமாகச் சிரித்தான். “அது உங்களோட காதுக்குள்ள போச்சுன்னா, நீங்க செத்துத்தான் போகணும், ஏன்னா அது உங்களோட மூளைக்குள்ள பதுங்கிடும். அது உங்களுக்குள்ளே மேலே நோக்கிப் போக…”

“அது அங்கே மேலே போனா என்ன ஆகும்?” ஹாரி கேட்டான்.

“அது அங்கே போனா, அது மேலேறி உனக்குள்ளே போயுடும்,” ஜ்யார்ஜ் சொன்னான், “நீ செத்துப் போக மாட்டே, ஆனாக்க அவங்க உன்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி இருக்கும், அவங்க உன்னை வெட்டித் திறந்துதான் அதை வெளியிலெ இழுக்க முடியும்.”

அங்கேயிருந்து அந்தப் பேச்சு இயல்பாகவே நாடாப் புழுவிற்கு முன்னேறியது.

“அதுங்க கொக்கிங்களாலே பிடிச்சுகிட்டு நமக்குள்ளே முழுக்க கீழே கடைசி வரைக்கும் தொங்கும்,” ஹாரி சொன்னான். “நாம்ப அதை விஷம் வச்சுத்தான் தாக்கணும், அந்த மனுசனுக்கு நாடாப்புழுவைக் கொல்ற அளவுக்கு, ஆனா மனுசனைக் கொல்லாத அளவுக்கு விஷம் கொடுக்கணும். அப்ப அந்தப் புழு செத்துப் போயிடும், கொக்கி எல்லாம் தளர்ந்து போயிடும், புழு வெளில வந்துடும். உங்களோடு அடிப்பக்கத்தாலேயோ, இல்லை எப்படியோ உங்க வாய் வழியாட்டியோ அவங்க அதை வெளியில இழுத்துடுவாங்க.”

“அத்தோட நிறுத்துங்க இதை எல்லாம்,” கடைசியில் ஜோயீ சொன்னாள், “காலங்கார்த்தாலெ இதெல்லாம் கேட்கச் சகிக்கல்லை.”

பள்ளிக்கூடம் இருந்த தெருவை அவர்கள் அடையும்போது இன்னும் ஐந்து நிமிடம் பாக்கி இருந்தது. ஜோயீ கொஞ்ச தூரம் தள்ளி நடையோரமாகக் காரை நிறுத்தினாள், அவர்கள் தங்கள் பைகளையும், காலணிகளையும் கீழிறக்கினார்கள், காலைநேரத்துத் தங்களையும்தான். ஜ்யார்ஜ் அவளுக்கு ஒரு முத்தம் கொடுப்பானா? அவனுடைய வகுப்பு மாணவர்கள் வேறு யாரும் அவர்கள் வந்து சேரும்போது இல்லையென்றால்தான் அவளுக்கு ஒரு முத்தம் கிட்டும். அவள் ஒரு முத்தத்தை விரும்புவாள் என்று அவனுக்குத் தெரியும், அவளுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பும் பார்வையைச் செலுத்தினான். இல்லை, அங்கே ஷான் மக்ல்ராய் இருந்தான்; இன்றைக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

அவர்கள் போய் விட்டார்கள். கார் திடீரென்று வெறிச்சென்று இருந்தது, அவள் முத்தம் கொடுக்கப்படாமல், கழித்துக் கட்டப்பட்டு, தூக்கி எறியப்பட்டு விட்டப் பழைய காலணி போல இருந்தாள். அழணுமா, அவள் முணங்கினாள், கண்களில் பார்வை மங்குமளவு நீர் கசிந்தது, ஏதாவது செய்ய வேண்டுமென்பதற்காக காரின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை சற்று மாற்றிப் பொருத்தினாள்.

அப்போது ஜ்யார்ஜ் மறுபடி தோன்றினான், ஜன்னலில் தட்டினான், பார்வைக்கு இறுகலாகவும், கள்ளத் தனத்தோடும் இருந்தான்.

“நான் என்னோட கணக்குப் புத்தகத்தை மறந்துட்டேன்னு சொல்லி இருக்கேன்,” அவள் கார்க் கதவைத் திறந்த போது அவன் பொருபொருத்தான், அவளுக்கருகில் இருந்த இருக்கையில் எதையோ எடுப்பது போல உள்ளே சாய்ந்து, அவளுடைய கன்னத்தில் அவசரமாக ஒற்றினான் – ஆனால் (ஜோயீ நினைத்தாள்) நிகரற்ற- முத்தம் ஒன்றால்.

***

இங்கிலிஷ் மூலம்: ஹெலன் சிம்ப்ஸன் ; ‘எர்லி ஒன் மார்னிங்’ கதைத் தலைப்பு.

தமிழாக்கம்: மைத்ரேயன்

[ஹெலன் சிம்ப்ஸன் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘கெட்டிங் அ லைஃப்’  ‘ஃபோர் பேர் லெக்ஸ் இன் எ பெட்’ மற்றும் ‘டியர் ஜ்யார்ஜ்’  என்ற மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் வேறு பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கிறார். இந்தக் கதை இவருடைய ‘இன் த ட்ரைவர்ஸ் ஸீட்’ என்கிற சிறுகதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. ]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.