பிரெஞ்சு இந்திய காலனி இலக்கியம் – பாகம் 2
“அறிவியலும் வரலாறும் இறந்தவற்றை ஆராய்வதன் மூலம் நம் மூதாதையர்களை நமக்கு அறிமுகம் செய்யலாம். ஆனால் கலை மட்டுமே அவர்களை உயிர்ப்போடுநமக்கு அறிமுகப்படுத்தமுடியும்”
ஹிலாரி மேண்டல்
கடந்த வாரம் ஹிலார் மேண்டல் பேசிய ரெயித் நீளுரை மேற்சொன்ன வாக்கியத்தோடு அமர்க்களமாகத் தொடங்கியது. வரலாற்றுநாவலாசியராக உருவான சித்திரத்தை அவர் பேசத்தொடங்கியபோது வரலாற்று நாவல்களைப் பற்றி சடங்காகக் கேட்கப்படும் அனைத்தும் நேர்கோட்டில்சேர்ந்துகொண்டன. “வரலாற்று நாவல் என்றால் நடந்த சரித்திர நிகழ்வுகள் மட்டுமா?”, “நாவலில் வரும் நிகழ்வுகளை வரலாற்று நூலில் தேடி அடைய முடியுமா?”, “வரலாற்று நாவல் உண்மையைத் தொகுக்கும் முயற்சியா?”, “உண்மை என்றால் என்ன”, என விதவிதமானக் கேள்விகளை வாசகர்கள் கேட்டிருந்த அனுபவத்திலிருந்துஇந்த உரையை நிகழ்த்தியுள்ளார். அதில் அவர் சொல்லும் ஒரு வரி இந்தக் கட்டுரைக்கு மட்டுமல்லாது வரலாற்றுப் புனைவைப் பற்றி எல்லாவிவாதத்தில் அடிப்படைவிதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். “வரலாற்று என்பது நம் பண்டையகதைகள் அல்ல. அது பழைய வாழ்வின் அறியாமையை நிரப்பும் ஒரு வழிமுறை மட்டுமே. நாம்அதை முழுவதுமாகப் பூர்த்தி செய்யும் சாத்தியமே இல்லை. செய்யும்தோறும் அறியாமையின் நிகழ்தகவு அதிகமாகிக்கொண்டே போகும்”. நாம் இதைஏற்றுக்கொண்டால் வரலாற்றுப் புனைவின் ஒரு அடிப்படையை அறிந்தவராகியிருப்போம்.
நாகரத்தினம் கிருஷ்ணாவின் “நீலக்கடல்” நாவலில் ஒரு நிகழ்வு. பிரெஞ்சு கும்பனியரின் மொர்ரீஸியஸ் தீவுப்பணிக்காக பல அடிமைகளை வாங்கி விற்கும் பழக்கம்கொண்டவர்கள் என்பது வரலாறு. காலனியவாழ்வின் அதிமுக்கியமான பணம் ஈட்டும் வழியாக இது இருந்துள்ளது. பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர்கள், ஜப்பானியர்கள்என அனைவரும் அடிமைகளை வாங்கிவிற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எந்த ஊரில் அடக்குமுறையை அவிழ்க்கிறார்களோ அந்த ஊர் மக்கள் அனைவரும்அடிமைகள் தான். சாவதைக் காட்டிலும் அடிமையாக அடிபட்டு வாழ்வதில் சில நூற்றாண்டுகள் கழிந்தன. அப்படி அடிமைகளை வாங்கிவிற்பதற்கு கும்பனியர்நேரடியாகத் தடைபோட்டபோதும் அவர்களது சம்மதத்தில் பேரில் மறைமுகமாக அது நடந்துதான் வந்துள்ளது. புதுச்சேரியில் அப்படி அடிமைகள் கிடைக்காத வறட்சிகாலத்தில் கடத்தல்கள் நடப்பதும் உண்டு. குழந்தை பெரியவர்கள் எனப்பார்க்காது தனியாக சுற்றுபவர்களைக் கடத்தி ஒரு இருண்ட வீட்டில் பதுக்கிவைத்து சமயம்கிடைக்கும்போது வெளிநாட்டுக்கப்பல்களில் ஏற்றிவிடுவதைத் தொழிலாகச் செய்துவந்த இந்தியர்களும் வணிகர்களும் உண்டு. துய்ப்பளே காலத்திலும் அவரதுமதாமுக்குத் தெரிந்தே இது நடந்துவந்தது என்பதைவிட பெருவணிகர்களான கனகசுப்புராயர், முதலியார், ஆனந்தரங்கப்பிள்ளை போன்றவர்கள் கூட இதை எதிர்த்துஒன்றும் செய்யவில்லை என்பதே வரலாறு. கிடைத்த நாட்குறிப்பிலும் அதைப் பற்றிய நிகழ்வுகள் எதுவும் பதிவாகவில்லை எனும்போது அவர்கள் கண்டித்தனர் என்பதைநம்பமுடியாது. ஆதாரம் இல்லாததால் ஆனந்தங்கப்பிள்ளை ஹிந்துக்களுக்கு ஆதரவு தரும்விதமாக கும்பனியாரிடம் இதை முறையிட்டார் என எழுதுவதுசரித்திரப்பிழை. அவர் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் விருப்பமிக்க துபாஷியாக வளம் வந்திருக்கிறார் எனும்பொழுது அவர்களது அட்டூழியங்களை எதிர்த்தார் எனநம்பமுடியாது. இதுவே ஒரு மறைமுகமான சாட்சிதான். ஆனால், இந்த நிகழ்வு தரும் இடைவெளி ஒன்று உண்டு. நாகரத்தினம் கிருஷ்ணா காலனிய ஆட்சியின்கீழ்மையாக இதைக் காண்கிறார். அடிமை வாழ்வின் நீண்ட வரலாற்றுக்குத் தன் இனம் படும் துயர் காணாமல் இருந்ததுபோலிருந்த மேலை ஹிந்துக்களின்பாராமுகத்தை நேரடியாகச் சாடுகிறார். அவரது கதையில் ஆள்பவர்கள் ஆளப்படுபவர்கள் எனும் பிரிவினர்கள் மட்டுமல்ல, மனித சுதந்திரத்தை தேடிச் செல்லும்மானுடர்களின் வாழ்வும் உள்ளது. உச்சகட்ட கட்டுப்பாடும் விலக்கலும் உள்ள சமூகத்தின் கைதிகள் அவர்கள். பிரெஞ்சுக்காரனான பெர்னார் குளோதனாகக் கூடஇருக்கலாம். இப்படிப்பட்ட எதிரெதிர் ஓட்டங்களைப் பதிவு செய்வதினால் ஹிலாரி குறிப்பிடும் அறியாத இடைவெளிகளின் மீது நமக்குக் கொஞ்சம் வெளிச்சம்விழுவதுபோலிருக்கிறது.
அடிமை வணிகத்தைப் பற்றி விரிவான வரலாற்றைத் தந்திருப்பதன் மூலம் இந்தியப்பெருங்கடல் நிலங்களின் வணிக மூலதனங்களையும், கரும்பு, வெல்லம், பனங்கட்டி, மலாட்டை போன்ற உற்பத்தி பொருட்களின் சந்தையும், உபரிகளின் மூலம் வணிக வளர்ச்சிக்குத் தேவையான நகர்ப்புற கட்டுமானப்பெருக்கங்களையும் ஒருகுறுக்குவெட்டுத் தோற்றத்தில் புனைவினூடாக நமக்குக் கிடைக்கிறது. இதன் ஊடாட்டம் மக்களின் வாழ்க்கையிலும், அவர்களது திரளான பயணம் மூலம்வளர்ச்சியடையும் நிலங்களின் வளமையிலும் நடத்தும் நாடகம் உயிர்ப்போடு காணப்படுகிறது. ஒரு கதவைத் திறந்து அடுத்த அறைக்குச் செல்லும் தூரத்தில் அந்த நிலம்இருக்கிறது. கற்பனை பாத்திரங்களும் வரலாற்று மாந்தர்களைப் போல ரத்தமும் சதையுமாக வளர்கிறார்கள், தேய்கிறார்கள், மறைகிறார்கள். இன்றைக்குத்தகவல்களும் சான்றுகளும் இல்லாமல் வரலாறு தடுமாறும் இடங்களில் எல்லாம் கற்பனைகொண்டு எழுதப்படும் புனைவு மிக இயல்பாக உட்கார்ந்துகொள்கிறது. கட்டற்ற கற்பனையாக அமையாமல் புனைவின் விதிகளுக்கு ஏற்ப கட்டுப்பாட்டுக்குள் வரும் கற்பனை வரலாற்றுப் புனைவின் சாத்தியங்களை உபயோகித்து நாம்அறியாத இடைவெளிகளை நிரப்புகிறது. உடல் வணிகம் மற்றும் காலனிய அடிமை முறை பற்றி தகவலாகக் கிடைக்கும் போது இல்லாத சமூக சித்திரம் புனைவாகவாசிக்கும் போது தொடுகையும் வாசனையும் இணைந்ததாகக் கிடைப்பதே அதை உயிர்ப்பாக மாற்றுகிறது. ‘வானம் வசப்படும்’ நாவலில் இதன் சாத்தியம் முழுவதுமாகநமக்குக் கிடைக்காததுக்குக் காரணம் அதில் ஆனந்தரங்கப்பிள்ளையின் வரலாற்றில் இருந்த இடைவெளிகளை நிரப்ப முற்படாததே எனத் தோன்றுகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு மொர்ரீஸியஸ் தமிழர் வரலாற்றைச் சொல்வதினால் கிடைக்கும் குறுக்குத் தகவல்களைக் கொண்டு இந்திய பிரெஞ்சுகாலனி காலத்தின் நிகழ்வுகளையும் அலச முடிந்திருக்கிறது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர்களின் நாட்குறிப்புகளும் பண்டைய விவரங்களும் அவருக்குத் தகவல்களைஅளித்திருப்பதாக நாவலில் அடிக்குறிப்புகள் சொன்னாலும் ஆசிய நிலப்பகுதியின் பதியப்படாத சமுக அசைவுகளை இருவித நாடுகளின் பொருளிய மாற்றங்களின்மூலம் கற்பனையால் இணைக்க முடிந்திருக்கிறது.
நவீன நாவலின் ஒரு இன்றியமையாத பண்பு என்பதை உலகளாவிய வரலாற்று நிகழ்வுகளால் உண்டாகும் இரண்டாம்கட்ட பாதிப்புகளைச் செரித்துக்கொள்ளும்பாங்கில் உள்ளது. எந்த ஒரு நிகழ்வும் தனித்து இயங்குவதில்லை. அதன் தொடக்கமும் முடிவும் பிறிதொரு நிகழ்வின் நிழலாட்டமாக அமைந்துவிடும். பா.சிங்காரம்எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ அதன் முழு சாத்தியங்களைப் பயன்படுத்திய முதல் வரலாற்றுப் புனைவு எனலாம். இரண்டாம் நூற்றாண்டு உலகப்போர் சமயத்தில்தெற்காசிய தீவுகளில் பிழைப்புக்காகச் சென்ற செட்டியார்களும் அவர்களிடமிருந்து தேசிய விடுதலை உணர்வு பெற்ற பாண்டியன் போன்றவர்கள் நேதாஜியின்படையில் சேர்ந்து செயல்படுவதன் பின்புலத்தைப் பற்றிய நூல். முதல் வரியிலிருந்தே நாம் அறிந்த தமிழ் மண்ணிலிருந்து மேலெழுந்து உலக அரசியலில் நிகழ்கிறது. அயல் மண்ணில் நடக்கும் இந்தியர்களின் வாழ்க்கை. அதே சமயம் பா.சிங்காரம் தமிழ்மொழியின் சங்கமொழியின் உருவகச் சாத்தியங்களைக் கொண்டு தனது புனைவுமொழியை உருவாக்கியுள்ளார். யதார்த்தபாணியிலும் சிறு துண்டுகளான வசனங்களுக்கு இடையே தமிழ் கற்பனாவாத அழகியல் சாத்தியங்களை ஏற்றிருப்பதால்அவரது நாவல் ஒரு செவ்வியல் தளத்தை எட்டிவிடுகிறது. நீலக்கடல் தனது மொழியின் யதார்த்தத்தளத்தை எங்கும் மீறவில்லை. அதன் அழகியல் சமநிலையானமொழியில் ஒரு வரலாற்றுக்காலத்தை நம் கண்முன்கொண்டு வந்து நிறுத்துவதில் அமைந்திருக்கிறது. அதற்கு உதவிய சுட்டுநூல்களை நாவலின் அடிக்குறிப்புகளாகக்கொடுத்திருப்பதினால் இது வரலாற்றின் ஆவணக்குறிப்புகளின் சாத்தியத்தையும் ஆசிரியரின் வரலாற்றுப்பார்வை கொடுக்கும் கற்பனையையும் இணைத்துவிடுகிறது. வானம் வசப்படும் இதில் ஆவணக்குறிப்புகளை மட்டும் கொண்டு எழுதப்பட்டிருப்பதையும், நீலக்கடல் எட்டிப்பிடித்திருக்கும் நவீன உலகவரலாற்றின் ஒரு துளியையும்ஒப்பிட்டுப்பார்த்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் இதுபோன்று இருகுதிரைச் சவாரி செய்திருப்பதையும் நாம்கல்லுக்குள் ஈரம் அல்லது மாலனின் ஜனகனமண போன்ற நாவல்களின் கற்பனையற்ற நடையோட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
—