கவிதைகள் நான்கு

ஒரு புல்லைக்கூட

மண் நீரூட்டும்
விதை கன்றாகும்
கன்று செடியாகி பூ பூக்கும்
வண்ணப்பூச்சி முத்தமிட
மலர் காயாகும்
காற்றால் கதிரால் முகிலால்
காய் கனியாகும்
பழம் பறவைக்கும்
விதை மண்ணுக்குமாகி
செடியும் மரமும் புதிதாய் பிறக்கும்.
விந்தணுவை கருமுட்டையை
சோதனைக்குழாயில்
குளிர்பதனப்பெட்டியில்
சேர்ந்திருக்கச் செய்யலாம்.
ஒட்டமுடியாதெங்களால்.
விந்தணு கருமுட்டையின்
விளிம்பைத் தானாய் பிளந்து கலவாமல்
விளையாதுயிரென்று கைவிரிக்கிறார் மருத்துவர்.
தன்னிச்சையாய் இயங்கும் படைப்பின் மர்ம்மஃ
சோதனைக்குழாயில் அடைபடவில்லை.
நினைத்துக்கொள்கிறேன்.
ஒரு புல்லைக்கூட மனிதனால் படைக்கமுடியாது

லாவண்யா

~oOo~

இலை மனசு

காலம் உறைந்த ஒரு தெருமுக்கில் கவ்வாலி
உயிரைத்திரளாக்கி ஊதும் ஓதல்
இலை மஞ்சள் சிவப்பாகி காற்றுக்கு அள்ளுப்படும் மனசு
ஒரு நிலையில் இல்லை நான்

குவிந்த சிறு மலையாய் குந்தியிருக்கும் வேலைகள்
குவியாத கவனத்தின் தலைதடவிச் சொன்னேன்
அது அலைந்து திரிகிறது…

வேண்டாம் என்பதையெல்லாம் வேண்டும் என்கிறது.
எங்கோ இழுக்கும் கயிற்றுக்கு
இங்கு ஆடித் தவிக்கிறது.

ஏழு பூட்டுக்கள் போட்ட அறைக்குள்
அடைந்திருந்த விஸ்டீரியாப் பூவிதழ்.
ஆயிரம் விரல்களாய் தென்றல் உள் நுழைந்து விட்டது.
சுவர்க்கத்தின் ஜவ்வாது நறுமணம் நழுவுகின்றது.

எப்படி நுழைந்தது என்று மீண்டும் மீண்டும்
கேட்கிறேன்.
அரைத்த சந்தனத்தை அள்ளி யாரோ
என் கன்னத்தில் தடவுகிறார்கள்.
பதிலில்லை

குளிர்கிறதென் கணுக்கால் பச்சை நரம்பு

ஷமீலா யூசுப் அலி

 

~oOo~

வெளிச்சம்

இரவின்
இருள் கசிவில்
எனை
தொலைத்திருந்தேன்

இருளின் கருமையில்
விழிகள் இறுகி
வெளிச்சத்தை
பொய்த்திருந்தன…

விடியல் நிகழா
நீள் இரவுகள்
நாட்களாக நகர்ந்தன.

பழகிய இருளில்
மெல்ல மெல்ல
கைகளும்
கால்களும்
துழாவிட
இயக்கம் எனை
இயக்கியது

மருவிய இருளென்
மறுபுற நிழலெனும்
பிம்பம்
கொண்டது

மௌனத்தின்
ஒர் கணத்தில்
மெய்யெனும்
இமை விரிய
மேனிக்குள்
பார்வையின்
ஜனனம்

வெளிச்சத்தின்
சிறு கீற்றாய்
விரியத் துவங்கியது
தொலைந்து போன
பிரபஞ்சம்
மீட்டெடுக்கிறேன்
மீண்டுமெனை
எனக்குள்

இறுதியில்
இருளென்பதும்
வெற்று
விழிகளால்
காணஇயலாத
வெளிச்சம் தானே.

நிலாரவி

~oOo~

கடைசி வழிப்போக்கன்

நெடுக வழி கூட வரும் வெயிலுக்கு
நிழலுக்குத்
தங்கிச் செல்லும் வழிப்போக்கர்கள்
பங்கு கொள்ளும்
காற்றில்
சல சலத்து உரையாடும் பனந் தோப்பின் இடத்தில்
தமக்குள்ளேயே கூடப் பேசிக் கொள்ளாது
தருக்கி
நிற்கும் நெடுங் கட்டிடங்களிடம்
நெருங்க அஞ்சி
என்ன பேச முடியுமென்று
ஊமையாகி
கடைசி வழிப்போக்கனாய்
இனி திரும்பி வரப் போவதில்லையென்று
ஒதுங்கி நிற்கும்
என்
கால் பற்றும்
பரிதி தகிக்கும் நிலத்தில்
புதைந்ததாய்க்
காணாமல் போன பனந் தோப்பின்
தொல் நிழலை
ஒரு கணம் உணர்வேன்
குளிர்ந்து.

கு.அழகர்சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.