வாக்காளர்

ரூஃபஸ் ஒக்கேகே, சுருக்கமாக ரூஃப், அவனது கிராமத்தில் அனைவரும் அறிந்திருந்த பிரபலமான இளைஞன். கிராமவாசிகள் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், ரூஃப்ஐ எல்லோருக்கும் பிடிந்திருந்ததிற்குக் காரணம், ரூஃப் அவன் வயதையொத்த இளைஞர்கள் போல் நகரங்களுக்கு வேலைக்கு போகாமல் கிராமத்திலேயே தங்கிவிட்டது தான். அதனால் ரூஃப் ஒரு கிராமத்துக் காட்டான் அல்லது உதவாக்கரை என்று எண்ணி விட வேண்டாம். பெரு நகரமான போர்ட் ஹார்கோர்ட்டில், இரண்டு வருடங்கள், மிதி்வண்டி பழுது பார்க்கும் கடையில் வேலை பாரத்தவன். தன் சுய விருப்பினால், தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல், இந்த கடினமான காலகட்டங்களில், தன் மக்களுக்கு வழிகாட்ட விரும்பித் தன் கிராமத்திற்கே திரும்பி விட்டவன். ஆனால் அப்படி ஒன்றும் உமோஃபியா மக்களுக்கு வழிகாட்டுதலுக்கான தேவை இருந்தது என்றும் கூறி விட முடியாது. அவர்கள் ஏற்கனவே ஒட்டு மொத்தமாக “மக்கள் கூட்டணி கட்சி” (ம.கூ.க) யோடு ஐக்கியமானவர்கள். அந்த கிராமத்தின் புதல்வன், மண்ணின் மைந்தன், மாண்புமிகு (இனக் குழு)  தலைவன் மார்க்கஸ் இபேயின் ஆதர்வாளர்கள். மார்க்கஸ் தற்போதைய அரசின் கலாச்சார துறை மந்திரியாக இருந்தார். இதே அரசு, தேர்தலுக்குப் பிறகும் ஆட்சி அமைக்கும் என்பதே பரவலான கணிப்பு. அமைச்சராக அவரும் தொடருவார். உமோஃபியா உள்ளடங்கிய தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் என்பதில் எவருக்கும் சிறு சந்தேகமும் இல்லை. அவரை பொறுத்தமட்டில் அங்கே எதிர்கட்சியின் போட்டி என்பதே சாணிக் குவியலை நகர்த்த முற்படும் ஒரு ஈ போலதான். அந்த யோசனையே அபத்தமானது. ஆனால் நிஜத்திலேயே ஒரு எதிர்க் கட்சி வேட்பாளர், அதுவும் யாருமே கேள்விப்பட்டிராத ஒருவர் போட்டியிடுவது அபத்தத்தின் உச்சம்.

எதிர்பார்த்தது போலவே ரூஃப் மாண்புமிகுக்கு ஆதரவாக, வரவிருந்த தேர்தலில் களப் பணியாற்றினான். நகரத்திலிருந்து திரும்பி வந்ததிலிருந்து, கிராம, வட்டார, மத்திய என்று அனைத்துத் தேர்தல் பணிகளிலும் நிபுணனாக தேர்ச்சி அடைந்திருந்தான். மக்களின் நாடியறிவதிலும், எந்தவொரு நொடியும் அலை எப்படி வீசுகிறது என்று கணிப்பதிலும் கில்லாடியாகி விட்டிருந்தான். இம்முறை தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே, உமோஃபியாவில் மையம் கொண்டு வளர ஆரம்பித்திருந்த சிந்தனை மாற்றத்தைப் பற்றி மாண்புமிகுவை எச்சரித்திருந்தான்.

கடந்த ஐந்தாண்டுகளாகக் கிராமவாசிகள், அள்ளிக் கொடுக்கும் அரசியலின் மகத்துவத்தை உணர ஆரம்பித்திருந்தார்கள். செல்வச் செழிப்பு, இனக் குழுத் தலைவர் பதவி, “டாக்டர்”, மற்றும் ஏனைய பட்டங்கள் என்று வந்த அதிவேகத்தை அவர்களுக்குப் புரியும்படியாக யாரும் விளக்கவும் முற்படவில்லை. வெகுளித்தனத்தில் “டாக்டர்” என்றால் நோயாளிகளைக் குணப்படுத்துபவர் மட்டுமே என்று நம்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பட்டம் இவருக்கு ஏன் என்று  குழப்பம் வேறு. எப்படியோ போகட்டும், ஐந்து வருடங்களுக்கு முன் தாங்கள் வெறுமனே வாக்களித்த ஒருவனுக்கு, இத்தனை பட்டங்களும், வசதிகளும் வாய்த்ததை கணக்கில் கொண்டு இம்முறை வித்தியாசமாக முயற்சிக்கத் தயாராக இருந்தார்கள்.

அவர்களின் எண்ண மாற்றத்தையும் குறை கூற முடியாதுதான். சில ஆண்டுகளுக்கு முன் மாரக்கஸ் இபே, ஒரு சாதாரண மிஷன் வாத்தி. அரசியல் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்த போது சுதாரிப்பாக அதனுள் தன்னை இணைத்துக் கொண்டவர் மார்க்கஸ்.  ஆனால் ஒரு ஆசிரியை கர்ப்பமானதால் வேலை நீக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளவே, அரசியலில் இணைந்தார் என்று சொல்லுபவரும் சிலர் இருந்தனர். ஆனால் இன்றோ அவர் மாண்புமிகு இனக் குழுத் தலைவர், இரண்டு நீளமான மகிழுந்து மற்றும் அந்த வட்டார மக்கள் பார்த்தே இருக்காத ஒரு மிக பெரும் வீட்டின் அதிபதி. இதெல்லாம் பெரிதாக மார்க்கஸின் தலைக்கு ஏறி விடவில்லை. இன்றும் தன் மக்களின் அபிமானமான தலைவராகதான் இருந்தார். முடிந்த போதெல்லாம், தலை நகரின் வசதிகளை விட்டுவிட்டு, தண்ணீர் வசதியும், மின்சாரமும் இல்லாத கிராமத்தில் தனது மக்களோடு இருப்பதையே விரும்பினார். ஆனாலும் சில நாட்கள் முன்னர் தனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் தரும் இயந்திரத்தை நிறுவியிருந்தார். கிடைத்ததைப்  பருகிவிட்டும், தின்று விட்டும், தன் முனைப்பாலேயே அவை கிடைத்தன என்ற இறுமாப்புடன் அலையும் பறவை போல் அல்லாமல், மார்க்கஸ் தன் வசதிகளின் காரண, காரியங்களை நன்றாகவே அறிந்திருந்தார். தன் கிராமத்தைப் பெருமை படுத்தும் விதமாக தன் வீட்டிற்கு, “உமோஃபியா மான்சன்ஸ்” என்றும் பெயர் வைத்திருந்தார். பேராயர் வீட்டைத் திறந்து வைத்த அன்று, ஐந்து காளைகள், எண்ணிக்கையில்லா ஆடுகள் என வெட்டி தடபுடலாக கிராமவாசிகள் அனைவருக்கும் ஒரு பெரிய விருந்தும் அளித்திருந்தார்.

அன்று    எல்லோரும் அவர் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு கிழ அப்பச்சி, “நம்ம தம்பி எம்புட்டு நல்ல தம்பி. உரல மாதிரி சோளமோ, கெளங்கோ கெடச்சா முதுகத் திருப்பிக்கிற தம்பியா, நல்ல கொணமான தம்பி”, என்று பாராட்டி விட்டு சென்றார். விருந்து முடிந்து அவரவர் வீட்டிற்கு திரும்பும் வழியில், போன முறை தங்கள் வாக்குச் சீட்டைக் குறைவாக மதிப்பிட்டு விட்டதாகவும், அடுத்த முறை அதே தவறைச் செய்து விடக் கூடாது என்றும் தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டே திரும்பினார்கள். மார்க்கஸும் இதை எதிர்பார்த்து, தேர்தல் அறிவிப்பு வந்ததும் ஐந்து மாதச் சம்பளத்தை முன் கூட்டியே எடுத்து, சில நூறு பௌண்டுகளை, பளபளக்கும் ஷில்லிங்குகளாக மாற்றி, தனது களச் சேவகர்களிடம் அழகான சிறிய சணல் பைகளில் பிரித்துக் கொடுத்திருந்தார். காலையில் மார்க்கஸின் மேடைப் பேச்சு, இரவில் அவரது களச் சேவகர்களின் காதோடு காதாக கிசு கிசுப் பேச்சு என்று பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் பிரதம களச் சேவகன் ரூஃப்தான்.

” அப்பச்சிகளா நல்லா கேட்டுங்க, நம்ம ஊரில் இருந்து ஒரு மந்திரி, நம்ம ஆளு” என்று ஓகுபூஃபி ஏஸன்வா வீட்டில் கூடியிருந்த பெருசுகளின் கூட்டத்தை பார்த்து ரூஃப் தனது இரவு கடமையை துவக்கினான். “இத விட நம்ம கிராமத்துக்கு வேற என்ன பெரும வேணும்? எப்பயாவது யோசிச்சிகளா, நம்ம கிராமத்துக்கு மட்டும் ஏன் இந்த மருவாதனு. ஏன்னா ம.கூ.க தலவருங்க நம்ம மேல அம்புட்டு பிரியம் வைச்சிருக்காக. மார்க்கஸ் அண்ணனுக்கு ஒட்டு குத்துரீகளோ இல்லையோ,   ம.கூ.க தான் அடுத்த ஆ(ட்)ச்சி. நம்ம கிராமத்துக்கு அவுக குழாய் வழியா தண்ணீ வேற கொண்டு வர்ரதா வாக்குறுதி கொடுத்திருகாக.”

ரூஃப், அவனது அடிப்பொடி, ஐந்து ஊர் பெருசுகள் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.  கரி படிந்த, ஹரிகேன் விளக்கின், கீறல்கள் விழுந்த குடுவை ஒன்று அவர்கள் மத்தியில் மஞ்சள் ஒளியை பரப்பி கொண்டிருந்தது. பெருசுகள், தரையிலிருந்து சிறிதளவே உயரத்திலிருந்த தாழ்வான முக்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் நேர் முன்னே தரையில் இரண்டு ஷில்லிங் காசுகள் இருந்தன. தாள் போட்ட கதவுக்கு வெளியே, சந்திரன் புன்முறுவலை அடக்கி நேர் முகத்தோடு ஒளி்வீசி கொண்டிருந்தான்.

“ஐயா சாமி நீ சொல்றுது எல்லாம் சரிதேன்,” என்றார் எஸன்வா. “நாங்க அம்புட்டு பேரும் மார்க்கஸூக்கு தான் குத்த போறோம். ஓஸோ விருந்த விட்டுப்புட்டு யாரு போய் கோயில் பந்தியில வெஞ்சனத்துக்கு  ஒக்கார போறா? நீ உங்க மார்க்கஸ் அண்ணேக்கிட்ட சொல்லு. எங்க ஒட்டு, எங்க பொண்டாட்டிங்க ஓட்டு எல்லாம் மார்க்கஸூக்குதான். ஆனா இரண்டு ஷில்லிங் கேவலம் தெரிஞ்சுக்க.”  விளக்கைத் தன் அருகி்ல் கொண்டு வந்து, அதை லேசாக காசுகளின் மேல் சாய்த்து, தரையில் இருக்கும் காசுகளின் மதிப்பை உறுதி செய்து கொண்டார்.

“இரண்டு ஷில்லிங் நிசமாவே கேவலம்தேன் அப்பு. மார்க்கஸ், ஏழை பாளைனா, நான்தேன் மொத ஆளா அவனுக்கு ஓட்டு போடுதேன். இன்னக்கி மார்க்கஸ் பெரிய ஆளு, எல்லாத்திலயும் ஒரு பெரிய மனுச தோரண வேற. நாங்க நேத்தைக்கி ஏதாவது கேட்டோமா?, நாளைக்கும் எதுவும் கேட்போமா? ஆனா இன்னைக்கி எங்களோடது. ” ‘இராக்கோ’ மரத்து மேல ஏறிப்புட்டோம், அகப்படுற வரைக்கும் விறக அள்ளாம இறங்கமாட்டோம்”.

அவர்கள் சொல்லுவது  ரூஃபுக்கு நன்றாகவே புரிந்தது. சமீப காலமாக அவன் நிறையவே “இராக்கோ” விறகை அள்ளிக் கொண்டிருந்தான். முந்தைய நாள் கூட மார்க்கஸிடம் அவரது ஆடம்பர நீளங்கி ஒன்றைக் கேட்டு அவரும் உடனே கொடுத்து விட்டார். சென்ற ஞாயிறன்று மார்க்கஸ் வீட்டு குளிர் பெட்டியில் இருந்து ஐந்தாவது பீர் போத்தலை எடுக்கும் பொழுது, மார்க்கஸின் மனைவி (அவர் அரசியலுக்கு வரும் முன் அவரை வம்பில் மாட்டி விட்ட அதே பெண்மணி), ரூஃபைத் தடுக்க; மாண்புமிகு அண்ணணோ அனைவர் முன் மனைவியைக் கடிந்து கொண்டார். இவை எல்லாவற்றையும் விட, சில நாட்களுக்கு முன், ஒரு நிலப் பிரச்சனை தீர்ப்பன்று, தகராறு உள்ள இடத்திற்கு, அவன் சீருடை அணிந்த காரோட்டியுடன் நீண்ட மகிழ்ந்துவில் சென்றதால் தீர்ப்பு இவன் பக்கம் சாதமாக அமைந்தது. பெருசுகள் சொல்வதை ஒத்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

“ஆல் ரைட்” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு இபோவிலேயே மறுபடியும் தொடர்ந்தான். “சரி, சரி சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்கு சண்ட பிடிச்சிக்கிட்டு” என்று எழுந்து அவனது புதிய நீளங்கிக்குள் துழாவினான். பிறகு உபயதாரர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் பூசாரி போல, அனைவருக்கும் இன்னுமொரு ஷில்லிங், ஆனால் அவர்களின் கைகளில் வைக்காமல், ஏற்கனவே அவர்கள் முன் தரையில் இருந்த காசுகளோடு வைத்தான். பெருசுகள் அவற்றை தொடக்கூட எத்தனிக்காமல் தலையை ஆட்டினர். ரூஃப் திரும்பவும் எழுந்து இன்னுமொரு ஷில்லிங்கை எடுத்தான் .

“அம்புட்டுதேன். வேணும்னா, எதிரிக்கு குத்துங்க வேற என்னத்த சொல்ல,”என்று போலி தெனாவட்டுடன் காசை அவர்கள் முன் வைத்துவிட்டு அமர்ந்தான். தங்களது மரியாதை கெடாமல் அவனை எவ்வளவு நெருக்க முடியும் என்று அறிந்திருந்த பெருசுகள், அவனை சமாதானப்படுத்த ஆளுக்கொறு சிறு உரையாற்றி, கடைசி உரை முடிந்தவுடன், அங்கிருந்த எவரின் மானத்திற்கும் பங்கமின்றி தரையில் இருந்தவற்றை அவர்களால் எடுத்துக் கொள்ள முடிந்தது…

எதிரி என்று ரூஃப் குறிப்பிட்டது முற்போக்கு அமைப்பு கட்சியினரை (மு.அ.க). கடலோரப் பகுதியிலிருந்த பழங்குடியினர் தங்கள் நலனை பாதுகாத்துக்கொள்ள அந்த கட்சியைத் தொடங்கியிருந்தனர். அரசியல், கலாச்சாரம், சமூகம், மதம் இவை அனைத்திலுமிருந்து அவர்களது இனம் ஓரங்கட்டப்படுவதைத் தடுப்பதே அந்தக் கட்சியின் முக்கிய நோக்கம். உமோஃபியாவில் ஜெயிப்பது கடினம் என்று தெரிந்தும், வடிகட்டிய முட்டாள்தனத்தோடு, மார்க்கஸுக்கு எதிராகப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். பிரச்சாரத்திற்கு மகிழ்ந்துகள், ஒலி பெருக்கிகள், குண்டர்கள் மற்றும் ரௌடிகள் என்று பணத்தை வாரி இறைத்திருந்தனர். எவ்வளவு என்று யாராலும் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால், தேர்தல் மூலம்,அந்த கட்சியின் பிரச்சார பீரங்கிகள், நன்றாகப் பணம் தேற்றிவிடுவார்கள் என்பது மட்டும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்திருந்தது.

தேர்தலுக்கு முந்தைய இரவு வரை அனைத்தும் திட்டமிட்டபடிதான் நடந்து கொண்டிருந்தது, அதாவது மு.அ.க பிராச்சார அணித் தலைவன், ரூஃப் வீட்டிற்கு வரும் வரை. இருவரும் ஒருவருக்கொருவர் நன்று அறிமுகமானவர்கள்தான். நண்பர்கள் என்று கூட சொல்லலாம். ஆனால் நலம் கூட விசாரிக்காமல், வியாபர தோரணையில், மு.அ.க ஆள், வார்த்தையை வீணடிக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். ஒரு ஐந்து பௌண்டு நோட்டை தரையில் வைத்து, “எங்களுக்கு ஒன் ஓட்டு வேணும்” என்றான். ரூஃப், அதிர்ச்சியுடன் நாற்காலியை விட்டு எழுந்து, வெளியறைக்கு சென்று, கதவை கவனமாக மூடிவிட்டு, திரும்பவும் நாற்காலியில் வந்து உட்கார்ந்தான். அந்த சிறு உடற் பயிற்சி, அவனுக்கு யோசிக்க தேவையான அவகாசத்தைக் கொடுத்தது. அவன் பேசும் பொழுது, சிவப்பு நோட்டை விட்டு அவன் கண் அகலவேயில்லை. கோக்கோ விவசாயி அறுவடை செய்யும் காட்சி, அவனை முற்றிலுமாக வசீகரித்துவிட்டது.

“நான் அங்கனக்குள்ள மார்க்கஸ் அண்ணணுக்கு வேல செய்றது தெரியுந்தானே” என்று பலகீனமாக சொன்னான். “இது கோக்கு மோக்கால்ல இருக்கு….”

“மார்க்கஸ் நீ குத்தும்போது அங்கனக்குள்ள குத்த வச்சுக்கிட்டு, நோட்டமா விட்டுக்கிட்டு இருக்க போறாரு. ராவையிலெ இரம்ப வேல கெடக்கு, வேணுமா, வேணாமா?”

“வெளிய தெரிஞ்சா அம்புட்டுதேன்.”

“எங்களுக்கு வோட்டு தான் வேணும், அக்கபோரு இல்ல.”

“ஆல் ரைட்,” என்றான் ரூஃப் ஆங்கிலத்தில்

வந்தவன் கூட்டாளியின் தோள் பட்டையை இடிக்க, கூட்டாளி ரூஃப் முன், மண் பானையை நீட்டி, அதன் மேல் மூடிநிருந்த சிவப்பு துணியை பிரித்தான், பயங்கரமாக பானையில் இருந்து ஏதோ துருத்திக் கொண்டிருப்பது தெரிந்தது, உருவாமல் விட்டுப் போன இறகுகள் வேறு இருந்தன.

“இந்த இயியி ம்பாண்டா செஞ்சது. இது மேல சத்தியம் பண்ணு, ஒன் ஓட்டு மடுக்காவுக்குதேன் அப்படினு, வோட்டு போடலனா இயியி பாத்துக்கும்.”

ரூஃபின் நெஞ்சு குளி சற்றே நின்று அதிர்ந்தது. ம்பாண்டாவின் இயியி வட்டார மக்களிடம் மிகவும் பிரபலம். ஆனால் ரூஃப் வேகமாக முடிவெடுப்பவன். யாருக்கும் தெரியாமல் அவன் போடும் ஒரு வோட்டால் மார்க்கஸின் வெற்றி வாய்ப்பு மாற வாய்ப்பு உள்ளதா என்ன? கண்டிப்பாக இல்லை.

“சரி நான் மடுக்காவுக்கே போடுதேன். போடலேன்னா இயியி பாத்துக்கட்டும்.”

“அம்புட்டுதேன்,”  என்று வந்தவன் அவன் கூட்டாளியுடன் கிளம்பினான்.

“மார்க்கஸ் அண்ணேதேன் ஜெயிக்க போறாரு, தெரியும்தானே, அப்புறம் ஏன்” என்று கதவு வரை வழி அனுப்ப வந்த ரூஃப் அவனிடம் கேட்டான்

“இப்பதைக்கு ஒன்னு, இரண்டு ஓட்டு கெடைச்சா போதும், அடுத்த தேர்தல்ல, மடுக்கா ஒட்டுக்கு ஷில்லிங் இல்ல பவுண்டு தர்ராறுனு தெரிஞ்சா, ஊருல எல்லாரு ஓட்டும் மடுக்காவுக்குதேன்.”

 

மறுநாள் தேர்தல் காலை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தங்கள் சக்தியை நிருபிக்கும் தினம். சுவர்களில், தந்தி கம்பங்களில், மரங்களில் என்று எங்கும் தேர்தல்  பிராச்சார சுவரொட்டிகள், காற்றால் முற்றிலுமாக இன்னமும்  குதறப்படாத சுவரொட்டிகள், அவற்றை படிக்கத் தெரிந்தவர்களுக்காக, தங்கள் பிரச்சார வாசகங்களைப் பறைச்சாற்றிக் கொண்டிருந்தன.

வழக்கம் போல மாண்புமிகு மார்க்கஸ் இபே அவருக்குரிய தோரணையோடு தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருந்தார். உமுரு நகரிலிருந்து பக்க வாத்திய கோஷ்டி ஒன்று வந்திருந்தது. சட்டப்படி வாக்கு மையத்தின் எவ்வளவு அருகே நிற்க முடியுமோ, அவ்வளவு அருகில் நின்று வாசித்துக் கொண்டிருந்தனர். கிராம மக்கள் பலர், ஆடிக் கொண்டும், வாக்குச்  சீட்டை தலையின் மேல் சுற்றிக் கொண்டும், வாக்களிக்கச் சென்றுக்கொண்டிருந்தனர். மாண்புமிகு, அவரது பச்சை மகிழ்ந்துவில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பெண் வந்து, “கங்கிராட்ஸ்” என்று மார்க்கஸின் கை குலுக்கிச் செல்ல, வோட்டு் போடச் செல்லும் முன் கிட்டதட்ட அனைவரும் மார்க்கஸின் கை குலுக்கி, வாழ்த்தி விட்டு சென்றனர்.

ரூஃப் மற்றும் இதர தேர்தல் சேவகர்கள் ஓடியாடி வேலை செய்து கொண்டும் வோட்டுப் போட வருபவர்களுக்கு விளக்கிக் கொண்டும் இருந்தனர்.

“மறக்காதீங்க. நம்ம சின்னம் பிளஷர்..”  என்று எழுதப் படிக்கத் தெரியாத சில வயதான பெண்களிடம் ரூஃப் விளக்கிக் கொண்டிருந்தான்

“அதுதான் மார்க்கஸ் தம்பி உக்காந்து இருக்குதுல. அது மாதிரிதானே, குத்திருவோம்.”

“ரொம்ப நல்லது ஆத்தா. ஆமா அதே பிளஷருதேன். மறக்காமா குத்திடுங்க. பிளஷர் இருக்கற கட்டம் நீங்க குத்துறதுக்கு. தலை இருக்குற கட்டம் தலைக்குள்ளாற களிமண் இருங்கரவங்க குத்தரதுக்கு.”

இதை கேட்டு ஒரே சிரிப்பலைகள், ரூஃப் திரும்பி பார்க்க மார்க்கஸ் ஆமோதித்து சிரித்துக் கொண்டிருந்தார்.

“பிளஷருக்கே ஓட்டு போடுங்க,” என்று ரூஃப்  கழுத்து நரம்பு புடைக்க கத்தினான் “பிளஷருக்கே ஒட்டு போடுங்க, சீக்கிரமே பிளஷர் வண்டில போவீங்க.”

மார்க்கஸ் வெளித் தோற்றத்திற்கு அமைதியாகவும் அதீத நம்பிக்கையுடனும் தோற்றமளித்தாலும், இராணுவ ஒழுங்கோடு அனைத்தும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர். செய்திதாள்கள் தலைப்பிடும் “வானாளவிய வெற்றி” உறுதி என்று அவருக்கு நன்றாக தெரியும், இருந்தாலும், ஒரு வோட்டைக் கூட வீணாக்க விரும்பவில்லை. வாக்கு மையத்தில் காலைக் கூட்டம் குறைந்ததும், தனது பொடியர்களை அழைத்து, ஒவ்வொருவராக வோட்டுப் போட சொன்னார்

“ரூஃப் மொதல்ல நீ போ,”

காலையில் இருந்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு,  உள்ளூர இருந்த பயத்தை மறைக்க மிகவும் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான். அவன் பயந்து கொண்டிருந்த நேரம் வந்தேவிட்டது. ஆனாலும், உற்சாகமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, துள்ளிக் குதித்து  வாக்கு மையத்தை அடைந்தான். காவல் இருந்த போலீஸ்காரர், கள்ள வாக்கு சீட்டுக்கள் வைத்திருக்கிறானா என்று சோதனை செய்து அவனை உள்ளே அனுப்பினார். தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டில் இருந்த கட்டங்களை விளக்கிக் கொண்டிருக்கும் பொழுதே, அவனது துள்ளலும், உற்சாகமும் முற்றிலும் வடிந்துவிட்டது. திரையை விலக்கி உள்ளே நுழைந்தவன், அவனது பாக்கெட்டில் இருந்து வாக்கு சீட்டை எடுக்க, மகிழுந்து சின்னமும், தலை சின்னமும் அவனை எதிர்கொண்டன. மாரக்கஸ் அண்ணனுக்கு எப்படி துரோகம் செய்ய முடியும்? யாருக்கும் தெரியாமல் என்றால் கூட? வாங்கினவனிடமே சென்று ஐந்து பௌண்டுகளைக் கொடுத்து விடலாமா?…. ஐந்து பௌண்டுகளையா? அது முடியாத காரியம் என்று நன்றாக புரிந்தது. இயியி மேல் சத்தியம் செய்து வாக்கு வேறு கொடுத்தாயிற்று. சிவப்பு நிற பௌண்டு தாள்களில், கோக்கோ விவசாயி வேறு சுறுசுப்பாக உழுது கொண்டிருந்தார்.

வெளியே போலீஸ்காரர் தேர்தல் அதிகாரியிடம் உள்ளே போனவன் எதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறான் என்று கேட்டது சன்னமாக இவன் காதிலும்  விழுந்தது.

மின்னல் என ஒரு எண்ணம் ருஃப்க்கு தோன்ற, வாக்கு சீட்டை இரண்டாக மடித்தான். பின் அதை திறந்து, மடித்த குறுக்குவாட்டில், அதை இரண்டாக கிழித்து, இரண்டு பாதிகளை, பெட்டிக்கு ஒன்றாக இரண்டு பெட்டியிலும் போட்டான். முன்னெச்சரிக்கையாக முதல் பாதியை மடுகாவின் பெட்டியில் போட்டுவிட்டு, “நான் மடுகாவுக்குதேன் ஓட்டு போட்டேன்” என்று சத்தமாகப் பிரகடனமும் செய்தான்.

வெளியே வந்தவன் கட்டை  விரலில் அழியா மையை அதிகாரிகள்  தடவி விட, உள்ளே நுழைந்த பழைய துள்ளலுடன் வாக்கு மையத்தை விட்டு ரூஃப் வெளியேறினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.