வன்னி

பஞ்ச பூதங்கள் என்பர். பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பன அவை. நாம் ஐம்பெரும் பூதங்கள் என்போம். நிலம், நீர், வளி, வெளி என்பன அவை. வளி எனில் காற்று, கால். வெளி எனில் வானம், space. ‘ஐந்தறு பூதம் சித்திப்போய் ஒன்றாக’ என்பார் பாரதி.

பூதங்கள் அற்றுப் பொறி அற்றுச் சார் ஐம்புலன்கள் அற்றுப்

பேதம் குணம் அற்றுப் பேராசைதான் அற்றுப் பின்முன் அற்றுக்

காதம் தரணங்களும் அற்ற அனந்தக் காட்சியிலே

ஏதம் களைந்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!

என்கிறார் பட்டினத்தார், ஏகம்ப மாலையில்.

இறைவா! காஞ்சிபுரத்து ஏகம்பனே! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பெரும் பூதங்கள் அற்று, ஐம்பொறிகளும் அற்று, அவ்வையம் பொறிகள் சார்ந்த சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன்களும் அற்று, வேறுபாடுகள் அற்று, இராசதம், தாமசம், சாத்வீகம் ஆகிய முக்குணங்களும் அற்று, பேராசை அற்று, உயிரின் இரு நிலைகளாகிய முந்தைய நிலையும் இப்போது உள்ள நிலையும் அற்று, அதாவது இருள் நிலை, மருள் நிலை அற்று, வஞ்சனை செய்யும் கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனும் நான்கும் அற்று, ஆனந்தக் காட்சியில் குற்றம் களைந்திருப்பேன்!

பஞ்ச பூதங்களுக்கு என சிவத்தலங்கள் உண்டு. முறையே காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் என்பார்கள். என்னவென்று தெரியாமலேயே அனைத்துத் தலங்களுக்கும் நான் போனதுண்டு. பம்பாயில் நான் பணிபுரிந்தபோது, நூற்பாலை இயந்திரங்கள் விற்பனைக்கு, தனிப் பிரதிநிதியாக, எங்கள் தலைமை அலுவலகம் என்னை காளஹஸ்தி அனுப்பியது இப்போது நினைவுக்கு வருகிறது.

எக்காரணம் பற்றியும் இஃதோர் ஆன்மீகப் பயணக்கட்டுரை அல்ல. நாம் இங்கு தீ பற்றிப் பேசப்போகிறோம். ஐம்பெரும் பூதங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது தி. ஆகவே தான் முக்கண்ணனின் மூன்றாவது கண்ணில் தீ என்றார் போலும். கிரேக்க இதிகாசங்களில் எவ்வினைக்கும் ஒரு கடவுள் உண்டு. எடுத்துக்காட்டுக்கு Morpheus. தமிழில் மார்ஃபீயஸ் என்று எழுதுவோமா? இருபுறமும் இறகுடைய கடவுள். கனவுகளின் கடவுள். அப்பெயரில் ஒரு Blended Premium Brandy இருக்கிறதே என்று கேட்கலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

நம்மிடம் தீக்கு ஒரு கடவுள் உண்டு. அக்னி என்பார்கள். அக்கினி என்றும் எழுதலாம். அக்கினி தேவன் என்பார் நெருப்புக் கடவுளை அனலன் என்றொரு சொல்லுண்டு அக்கினி தேவனைக் குறிக்க. பரிபாடலில் செவ்வேள் கடுவன் இளவெயினனார் பாடல், தீக்கடவுளைக் குறிக்க அனலம் எனும் சொல்லை ஆள்கிறது. ஆக, அனல், அனலம், அனலன் எனில் நெருப்பு என்று அறியலாம். சூரியனின் இன்னொரு பெயர் அனலி. அனலி எனில் நெருப்புமாம். சிவபெருமானை அனலாடி என்கிறது தேவாரம். அக்கினி என்பவன் The God of Fire. அக்கினி தேவன் என்பவன் வேறு. அக்கினி குமாரன் என்பவன் வேறு. அவன் ஸ்கந்தன். அதாவது முருகன். முருகனை அக்கினிப் பூ என்பார்கள்.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பன நான்கு திசைகள். இதை நான் சொல்லவேண்டியதில்லை. திருமாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார்,

குட திசை முடியை வைத்துக்

    குணதிசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டித்

   தென்திசை இலங்கை நோக்கி

கடல் நிறக் கடவுள் எந்தை

   அரவனத் துயிலுமா கண்டு

உடல் எனக்கு உருகுமாலோ!

   என் செய்வேன் உலகத்தீரே!

என்று நாற்றிசையும் பேசுகிறார். குணதிசை எனில் கிழக்கு, குட திசை எனில் மேற்கு. திசைக்கோணங்கள் என்று நான்கும் சேர்த்து எட்டு திசைகள் என்பர். கிழக்கு, தென்கிழக்கு, வட கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு என்பன அட்ட திக்குகள். மேல் திசையும் கீழ்த்திசையும் சேர்த்து திசைகள் பத்து என்பார் முப்பரிமாணத்தில்.

இவற்றுள் தென்கிழக்குத் திசையின் ஆட்சியர் அக்கினி. சுந்தர காண்டத்தில், பிணி வீட்டுப் படலத்தில், கம்பன், ‘திசை நின்று ஆட்சியர் என்று இசைக்கின்றவர்’, என்கிறார். ஜில்லா கலக்டர் என்று அழைக்கப்பட்டவர், மாவட்ட ஆட்சியர் என்று அழைக்கப்பட்டத் தொடங்கியது கம்பன் சொல்லைக் கடன் வாங்கித்தான். ஆனால் அவர்களே தம் முற்பிறப்பில் கம்பராமாயணத்தை எரிக்கச் சொன்னார்கள். உண்ணீரில் குறியை விட்டு ஆழம் பார்ப்பவர்கள்.

எட்டுத் திக்குகளுக்கும் காவலர் எனக் கடவுள்கள். நாம் தென்கிழக்குத் திசையின் அதிபதியான அக்கினி குறித்துப் பேசினோம். எட்டுத் திசைகளையும் எட்டுக் களிறுகள் தாங்குவதாயும், எட்டு மா நாகங்கள் தாங்குவதாயும் நம் மரபில் தொன்மங்கள் உண்டு. தென் கிழக்குத் திசையின் திக்கயம் புண்டரீகம் எனும் களிறு. அதன் பிடியானை கபிலம். களிறு என்றால் ஆண்யானை என்றும் பிடி என்றால் பெண்யானை என்றும் தெரியும் தானே! தென்கிழக்கு மூலையை அக்கினி மூலை என்பார்கள்.

அக்கினி என்ற சொல்லுக்கு, யாகத் தீ என்றும் பொருள். அக்கினி கும்பம் என்பர் ஓமாக்கினி வளர்க்கும் குழியை. கொங்கு நாட்டில் குண்டம் என்றாலே தீ மிதிக்கும் குண்டம். மக்களின் அன்றாட வழக்கில் அக்கினிப் பரீட்சை என்றால் very riskly and dangerous job என்று பொருள்.

பண்டைய இந்திய மரபில், சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்றொரு வழக்கம் இருந்தது. ராஜாராம் மோகன் ராயின் அமைப்பு தொடர்ந்த போராட்டங்களினால் சதி சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டதாக அறிகிறோம். இன்றும் வட இந்திய உட்பகுதிக் கிராமங்களில் சில சமயம் சதி நடைமுறையில் இருக்கிறது எனச் செய்திகள் உண்டு. நமது பெண் தெய்வங்களில் பலரும் கணவரின் இறப்பின் போது உடன்கட்டை ஏறியவர்தாம். உடன்கட்டை ஏறுதலுக்கு தீப்பாய்தல் என்றொரு சொல்லும் உண்டு. சதியின் கொடுமையைக் காட்சி வடிவத்தில் நீங்கள் உணர வேண்டுமானால், ‘அத்தர் கலீ காத்ரா’ என்ற கெளதம் கோஷ் திரைப்படம் பார்க்க வேண்டும். சத்ருகன் சின்ஹா, வெட்டியானாக நடித்த படம். உடன் கட்டை ஏறுதலை அக்கினிப் பிரவேசம் என்றார்கள். இராமாயணத்து சீதையின் அக்கினிப் பிரவேசம் வேறு வகையானது. ஜெயகாந்தனின் ஆரம்பகாலச் சிறுகதையொன்றின் தலைப்பு அக்கினிப் பிரவேசம். ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கதை அது.

சீதை எரிபுகல், கம்பன் காட்டாத காட்சி. ஆனால் குறித்த நாளில் இராமன் வரத் தாமதம் ஆனதால், பரதன் சத்துருக்கனனைப் பார்த்து, ‘எரி போய் அமைக்க’ என்கிறான். செய்தி அறிந்த கோசலையும் ‘எரி அமைத்த மயானத்தை’ எய்த்கின்றாள். பரதனைப் பார்த்துச் சொல்கிறாள்.

‘நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி

பாயும், மன்னரும் சேனையும் பாயுமால்;

தாயர் எம் அளவு அன்று; தனி அறம்

தீயின் விழும்; உலகம் திரியுமால்’

என்று. மகனே, பரதா! நீ எரியில் விழுந்து உயிர் துறக்க எண்ணினால், இந்த நாட்டில் உள்ள அனைவரும் தீப்பாய்வர். மன்னர்களும் அரிய சேனைகளும் எரி பாய்வர். தாயார்களாகிய நாங்கள் மட்டுமன்றி, ஒப்பற்ற அறமே தீயில் விழும். உலகமும் நிலை கெட்டுச் சுழலும்.

அக்கினியில் பிரவேசித்திருப்பான் பரதனும், தக்க தருணத்தில் அனுமன் வந்து சேர்ந்திருக்கவில்லை எனில். கம்பன் பேசுகின்றான்,

‘ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;

மெய்யின் மெய் அன்ன தின்னுயிர் வீடினால்,

உய்யுமே, அவன்?’ என்று உரைத்து, உள் புகா

கையினால் எரியைக் கரி ஆக்கினான்.’

என்று. பரதன் தீப்பாய்தலைத் தடுக்கும் முகத்தான், அனுமன் அவசர உரையாடல் அது. ‘தலைவனான இராமன் வந்தான், மேலானவன் வந்தான். உண்மையின் உடல் போன்ற உன்னுயிர் அழிந்தால் அவன் உயிர் தரிப்பானா?’ என்று உரைத்து, உள்ளே நுழைந்து கையினால் எரியும் நெருப்பைக் கரி ஆக்கினான் அனுமன். நாம் காசைத்தான் கரி ஆக்கினோம்.

ஊழித்தீ என்பார்கள், ஊழிக்காலத்தில் கடலில் எழும் பெரு நெருப்பை. வடமொழியில் அதனை வடவாக்கினி என்பார்கள். காலாக்கினை என்பதும் உண்டு. கம்பன் அதனைக் காலச் செந்தீ என்பான். ஆண்டுதோறும் நாம் கேட்கும் வேனிற்காலச் சொற்றொடர், ‘அக்கினி நட்சத்திரம்’ என்பது. Dog Day என்பார்கள் ஆங்கிலத்தில். சித்திரை – வைகாசி மாதங்களின் வெப்பம் உச்சியில் இருக்கும் நாட்கள் அவை. பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் முதல், ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம் வரை சூரியன் நிற்கும் காலம் என்கிறது வான சாத்திரம்.

கனிந்த நெருப்பைத் தணல் என்கிறார்கள். அடுப்பில் கிடக்கும் தீக்கங்குகளை அடுப்புத் தணல் என்பர். ‘தணல் முழுகு பொடியாகும் செக்கர் மேனி’ என்று சிவனைக் குறிக்கும் தேவாரம். அடுத்த வெயில் காய்ச்சும்போது ‘அனலடிக்குது’ அல்லது ‘அனல் வீசுது’ அல்லது ‘அனல் பறக்குது’ என்போம். அனல் காற்று என்போம் வெப்பக் காற்றினை. அனல் எனில் வெப்பம் எனும் பொருளில் கம்பர் பயன்படுத்துகிறார். மேலும் வடவாக்கினியை வடவைச் செந்தீ என்றவன், வேறொரு பாடலில் ‘வேலை வட அனல்’ என்பான். வேலை எனில் கடல். அனல் எனில் அக்கினி. தீப்பொறியை அனல்பொறி என்போம். பெரு நெருப்பை அனற்குவை என்பார்கள்.

தீக்கடை கல் அல்லது சிக்கிமுக்கிக் கல்லுக்கு அனற்கல் என்றொரு மாற்றுச் சொல்லுண்டு. அனலுதல் என்ற சொல்லுக்கு, Tamil lexicon, To burn, glow, blaze, to be hot, to cause heat as the sun, as fire, as fever என்று பொருள் தருகிறது.

அழல் என்றாலும் நெருப்புத்தான். ‘நெருப்பு அழல் சேர்த்தக்கால் நெய்போல்வதூவும்’ என்று உவமை சொல்கிறது நாலடியார். நெருப்பிலிட்ட நெய் போல என்று பொருள். அழல்தல் என்றால் எரிதல். ‘விளக்கு அழலும் பாயலுள்’ என்கிறான் கம்பன் கடிமணப் படலத்தில். அழலுதல் என்றால் பிரகாசித்தல் என்றும் பொருள் கொள்ளலாம். அழல் எனில் காந்துதல் என்றொரு பொருள் இருக்கிறது. அழலை என்பதோர் வெப்ப நோய். தீவண்ணன் என்று சிவனைப் பேசும் தேவாரம், ‘அழல் வண்ணன்’ என்றும் குறிக்கிறது. ஆண்டாள் ‘நெருப்பென்ன நின்ற நெடுமாலே!’ என்கிறாள். அழலாடி, அழல் ஏந்தி, அழற்கண்ணன், அழல் நிறக்கடவுள், அழல் காத்தோன் என்பார் சிவனை. எரியூட்டுதல் அல்லது நெருப்பூட்டுதலை அழலூட்டுதல் என்கிறது தேவாரம். இளங்கோவடிகள், ‘பொன் தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே நல் தேரான் கூடல் நகர்’ என்கிறார், கண்ணகி மதுரையை எரியூட்டும்போது. சங்க இலக்கியங்கள் பலவும் அழல் எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றன.

அழலி எனில் நெருப்பு. அழற் கதிர் என்றால் சூரியன். வீரபத்திரனை அழற்கண் வந்தோன் என்பர். அழலவன் அல்லது அழலோன் என்றாலும் சூரியன் தான். அதே சொற்களால் அக்கினி தேவனையும் செவ்வாய் கிரகத்தையும் குறிப்பார்கள். கோபத்துடன் பார்ப்பது அழல் விழித்தல் என்றும், அழல் எழ விழித்தல் என்றும் இலக்கியம் பேசும். எல்லாம் சரி!ஆனால் அழன், அழனம் என்றால் அவை பிணத்துக்கு மாற்றுச் சொற்கள். அழல் உண்ணப் போவதால் அழன், அழனம் போலும்.

கனல் எனினும் தீ தான். ஐங்குறுநூறு சூரியனைக் குறிக்க கனலி என்ற சொல்லை பயன்படுத்தும். கம்பன் சீதையைக் கற்பின் கனலி என்பார். ‘புவி அளாய கற்றை வெங் கனலிஎன்றும்  சூரியனைப் பேசுவான். கண்ணகி மதுரையை எரித்த போது, ‘கரவையும் கன்றும் கனல் எரி சேராஎன்கிறார் இளங்கோ. பரிபாடல் திருமாலைப் பாடும் போதுஎரிமலர் சினை இய கண்ணைஎன்கிறது. எரிமலரை ஒத்த கண்களை உடையவன் என்று பொருள். எரிமலர் என்றால் செந்தாமரை. எரி என்றாலும் தீ தான்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்பிழைத்துஒழுகுவார்.’

என்கிறது திருக்குறள். நெருப்பில் அகப்பட்டவர் பிழைத்தாலும் பிழைக்கலாம் ஆனால் பெரியாரை இகழ்ந்தவர்கள் உய்ய மாட்டார்கள் என்பது பொருள். இந்தக் குறளைத் திராவிடக் கழகத்தவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.’

என்பதும் திருக்குறளே. வைத்தூறு என்றால் வைக்கோல்.எரிமுன்னர் எனில் நெருப்பின் முன்னால் என்று பொருள். மற்றுமோர் சுவையான குறள்.

நெய்யால் எரி நுதுப்போம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்போம் எனல்.’

என்பது. நுதுப்போம்அணைப்போம், கௌவைபழிச்சொல்.

நெய்யை ஊற்றி நெருப்பை அணைப்போம் என்பது போல் இருக்கிறது பழிச்சொல் பரப்பி, அலர் தூற்றி, காதல் தீயை அணைக்கலாம் என்று சொல்வது என்று பொருள்.

எரிதல் எனில் பிரகாசித்தல் – to flame, to ignite. எரித்தல் எனில் நெருப்பு வைத்துக் கொளுத்துதல். எங்களுரில் எரிப்பு என்றால் காரம் என்றும் பொருள். ‘தீயல் ரொம்ப எரிக்குஎன்பார்கள். தீயல் என்றால் ஒரு வகைக் காரக்குழம்பு. அழல் படு காதையில் இளங்கோ,

ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது

காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன

என்கிறார்.

    பிரம்மாத்திரத்தால் கட்டப்பட்டு வாலில் பந்தம் சுற்றி, நெருப்பு மூட்டப்பட்டு துரத்தப்பட்ட அனுமனுக்காக அக்னி தேவனிடம் சீதை வேண்டுகிறாள்.

நீயே உலகுக்கு ஒரு சான்று, நிற்கே தெரியும் கற்புஅதனில்

தூயேன் என்னின், தொழுகின்றேன்எரியே அவனைச் சுடல் என்றாள்

என்பது பாடலின் இறுதி வரிகள். அக்கினி தேவனே! நீயே உலகுக்கு ஒரு சான்று. உனக்கே தெரியும் என் கற்பு. எனவே நான் தூயவன் என்றால், உன்னை தொழுது வேண்டுகிறேன். எரியே! அனுமனைச் சுடாதே! எரியே என்றால் நெருப்பே என்று பொருள்.

பரிபாடலில், வைகையைப் பாடும் நல்லந்துவனார், ‘எரி, சடை, எழில் வேழம்என்கிறார். இங்கு எரி எனில் கார்த்திகை, சடை என்றால் திருவாதிரை, எழில் வேழம் என்றால் பரணி ஆகிய நட்சத்திரங்கள். எரியின் பிறப்பாக அருமையான சொற்களைத் தருகின்றன தமிழ் இலக்கியங்கள். எரிக்கொடி என்றால் தீக்கொழுந்து. ஐங்குறுநூற்றில் பாலைத்திணை பாடிய ஓதலாந்தையார், வரவு உரைத்த பத்து எனும் பகுதியில் தோழியின் கூற்றாகப் பாடுகிறார்.

எரிக்கொடிக் கவைஇய செவ்வரைப் போலச்

சுடர்பூண் விளங்கும்  ஏந்தெழில்  அகலம்

நீ இனிது முயங்க, வந்தனர்;

மாயிருஞ் சோலை மலை இறந்தோரே!’

என்று. தீக்க்கொழுந்து வரிசையாகச் சூழ்ந்த சிவந்த மலை போல, ஒளி வீசும் அணிகலன்கள் அணிந்த மார்புடன், நம் தலைவன் பெரிய கரிய சோலைகளைக் கடந்து வருகின்றான். நீ முயங்கிக் களிக்கலாம் என்பது பாடலின் பொருள்.

எரிகதிர் எனில் சூரியன், எரி நாள் என்றால் கார்த்திகை, எரி வளர்ப்போர் என்றால் பார்ப்பார், எரிவனம் எனில் சுடுகாடு, எரிசுடர் என்றால் சுடரும்  நெருப்பு, எரிகொள்ளி எனில் கடைக்கொள்ளி, எரிபந்தம் என்றால் தீப்பந்தம், எரிவிழித்தல் எனில் தீ எழ விழித்தல் என்று அகராதிகள் பொருள் தருகின்றன.

முன்பே சொன்னோம்அனலாடி, அழலாடி என்றால் சிவன் என்று. எரியாடி என்றாலும் சிவனே! பதினோராம் திருமுறையில் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதியில், ஒரு அற்புதமான வெண்பா நினைவுக்கு வருகிறது.

அவனே இரு சுடர் தீ  ஆகாச மாவான்

அவனே புவி புனல் காற்று ஆவான்

என்கிறார் அம்மை. இரு சுடர் என்றால் சூரியனும் சந்திரனும். தீ, ஆகாசம், புவி, புனல், காற்று என்பன ஐம்பூதங்கள்.

நூற்றியொரு பாடல்கள் கொண்ட அம்மையில் அற்புதத் திருவந்தாதியில் 98-வது பாடல்.

அழலாட அம்கை சிவந்ததோஅம்கை

அழகால் அழல் சிவந்தவாறோகழலாடப்

பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்

தீயாடுவாய் இதனைச் செப்பு!’

என்கிறது. கனலாடி, அழலாடிஅனலாடி,எரியாடி, தீயாடியும் அவனே! கால்களில் அணிந்த கழல்கள் ஒலிக்க, பேய்கள் ஆடும் மயானத்தில் ஒளிரும் அனல் ஏந்தித் தீயாடும் சிவனே, இதனை நீ சொல்லு! அழலைக் கையிலேந்தி இருப்பதால் உன் கை செம்மை நிறமாகி சிவந்ததோ? அல்லால் உன் அழகிய கையின் சிவந்த நிறத்தால் கையில் இருக்கும் அழல் செம்மை நிறம் பெற்றதா?

திருவிரட்டை மணிமாலை என்ற காரைக்காலம்மையாரின் இன்னொரு நூலில் பாடுகிறார்:

அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோறும்

முடித்தலமும் நீ முரித்த வாறென்முடித்தலத்தில்

ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்

நீறாடி நெய்யாடி நீ!’

என்று. இறைவா! சடையில் உனக்கு இன்னரு நீர்க் கங்கை ஆறு. எனவே நீ ஆறாடி எப்போதும் வெப்பம் குறையாத நெருப்பில் நடமாடுகிறவன். எனவே நீ அனலாடி நெருப்பில் தோன்றிய நீறு அணிந்தவன். ஆகவே நீ நீறாடி நெய்யிலே முழுக்காட்டப் பெற்றவன். ஆதலினால் நீ நெய்யாடி. ஆனால் அன்று கைலாய மலையை பெயர்க்க வந்த பத்துத் தலை இராவணணின் பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நீ முறித்த காரணம் என்ன? இது பாடலின் பொருள். தழல் என்றாலும் தீயே!

செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் 

சந்தனம் என்று யாரோ தடவினார்!

என்பது நந்திக் கலம்பகம்.

அனல், அழல், தழல், கனல், தணல், எரி போல தீயை குறிக்கும் மற்றொரு சொல் நெருப்பு.அங்கே எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டித் தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்என்பார் பாரதி,  ‘ஊழிக்கூத்து’ பாடலில். நெருப்பு எனில் பேரழிவும் ஆகும். கடுஞ்சீற்றம் கொள்பவனைக் குறிக்க ஆங்கிலத்தில் Fire Brand என்றொரு சொல்லுண்டு. அதற்கு இணையாக நெருப்பன் என்றொரு சொல்லுண்டு நம்மிடம். நெருப்பின் பெண்பால் பெயர் நெருப்பி என்கிறது Lexicon. சிவப்பன்சிவப்பி. கறுப்பன்கறுப்பி. மருப்பன்மருப்பி என்பது போல. மருப்பன் என்றால் என்ன என்று கேட்பீர்கள். மருப்பு என்றால் தந்தம்.

எரிமலை வெடித்துச் சிதறி பாயும் Lava எனப்படும் அக்னிக் குழம்பு நெருப்பாறு என்று பெயர்ப்படும். நெருப்புக்கண் என்றனர் நெற்றிக்கண்ணை. தீச்சட்டியை நெருப்பு இடு கலம் என்றோம், பெருந்தீயை நெருப்புக் காடு என்றோம். தீக் கொள்ளியை நெருப்புக் கொள்ளி என்றோம், நெருப்புக் கட்டை என்றோம். Ostrich என்ற பறவையை தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி என்றோம். கணப்புச் சட்டியை நெருப்புச் சட்டி என்றார்கள். அடர்ந்து, உயர்ந்து எரியும் தீப்பிழம்பை நெருப்புத்தூண் என்றார்கள். ஊழிக்காலத்தில் பெய்யும் அக்னி மழையை நெருப்பு மழை என்றார்கள்.

நெருப்பு என்னும் சொல்லை திருவள்ளுவர் ஒரேயொரு குறளில் ஆள்கிறார். நல்குரவு அதிகாரத்துக் குறள் அது. நல்குரவு என்றால் வறுமை என்று பொருள்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.’

சுட்டெரிக்கும் நெருப்பின் உள்ளே கூட நிம்மதியாக உறங்கிவிடலாம். ஆனால் வறுமையில் கண்களுக்கு உறக்கம் வராது என்பது குறளின் பொருள்.

நெருப்புப் போல அதிகமாக புழக்கத்தில் இருக்கும் சொல் தீ. தீக்கதிர் என்ற பெயரில் இடதுசாரி நாளிதழ் ஒன்றுண்டு. ‘தீபரவட்டும் என்றொரு நூலுண்டு தமிழில். அறிஞர், பேரறிஞர், கவிஞர், பெருங்கவிஞர் எனும் பட்டங்கள் கோமாளிகள் அணியும் சட்டை போல் ஆகிவிட்டது. பெரியவர் என்றாலே அது பெரிய சொல். அதன் மேல் பல்லடுக்குகளாக மகா என்ற பட்டம் ஏற்றி கனம் கூட்டுகிறார்கள். அது போன்றே அமிர்தம் மகாஅமிர்தம் ஆகிறது. பிரசாதம் மகாபிரசாதம் ஆகிறது. தகுதியினால் கனம் சேர்ப்பதை துறந்துவிட்டு, சொற்களால் கனம் ஏற்றுகிறார்கள். தீயை மகாத்தீ என்று எதற்காக சொல்ல வேண்டும்?

தீப்பந்தம், தீச்சட்டி, தீநாக்கு, தீக்கொழுந்து, தீமிதி, தீக்கனல், தீப்பிழம்பு, தீக்கொள்ளி, தீவட்டி, தீக்காயம் என்று எத்தனை எத்தனை சொற்கள்? தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலாஎன்றார் பாரதி. சற்று விரல்விட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

தீயுனுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;

வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ.

என்கிறது பரிபாடல். தெறல் எனில் ஆற்றல். தீயின் ஆற்றல் என்பது வெப்பம். எரிக்கும், பொசுக்கும், கரிக்கும், உருக்கும், சாம்பலாக்கும் தன்மை. இந்த இடத்தில் நெருப்பினுள் வெப்பம் நீ என்று பொருள் கொளல் தகும்.

தாம் நம்பும் தெய்வங்களைத் திருப்திப்படுத்த யாகங்கள் வேள்விகள் செய்து தீ வளர்ப்பார்கள்.நெய் பெய்ய பெய்ய தீ நாக்கு கொழுந்துவிட்டு எரியும். விண்ணின் மேகங்கள் ஓடம் போல, யானை போல, மரம் போல வடிவ மாயங்கள் செய்வது போல, தீ நாக்குகள் உயர்ந்து எழுந்து ஆடும் போது, மனது கற்பிக்கும் உருவங்கள் போலத் தோன்றும். வழிபாடு செய்பவர்கள், அக்கினியில் சத்திய நாராயணன் தோன்றினார், திருமால் தென்பட்டார், ஆதிசிவன் அவதரித்தார் என்று அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தனர். புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டனர். எவரும் தமது விருப்பத் தெய்வத்தை தழுவிக்கொள்ள முயன்றதில்லை. குதர்க்கமாக எனக்கு சில சமயம் தோன்றும், இப்படித்தான் அரசியல் தொழில் செய்யும் தரகர்களிடம், கொள்ளையரிடம், குற்றவாளிகளிடம், பொறுக்கிகளிடம் நாம் பெரியாத்மாக்களை காண்கிறோமா என்று.

திருக்குறளில் 18 பாடல்கள் தீ பற்றிப் பேசுகின்றன. சில குறள்கள் தீ என்றால் தீய எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளன. யாவரும் அறிந்த குறள்

தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப்படும்.

இன்னொன்று

‘தீயினால் சுட்ட புண்  உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.’

மற்றொரு குறள்:

‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார்

இன்பத்துப் பாலில் அற்புதமான குறள்:

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீ யாண்டுப் பெற்றாள் இவள்

விலக விலகச் சுடும். நெருங்க நெருங்கக் குளிரும். விநோதமான நெருப்பு. இப்படியானதோர் நெருப்பை இவள் எங்குப் பெற்றாள்? பதினெட்டுக் குறட்பாக்களையும் சொல்லிக் கொண்டு போகப் பிரியமில்லை எனக்கு.

கம்பன், குகனை, ‘சீற்றம் இன்றியும் தீயெழ நோக்குவான்என்று குணச்சித்திரம் காட்டுவான்.

அண்மையில் காலமான எனது நண்பர் விஜய குமார் குன்னிசேரி, மலையாளத்தின் விகடகவி, தமிழில் இருந்து மலையாளத்துக்கும், மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்ப்புகள் செய்தவர், மாத்ரு பூமி நாளிதழின் கோவைக்கிளை மேலாளர், சில மாதங்கள் முன்பு சொன்னார். அண்மையில் வெளியான மலையாள நூலொன்றின் தலைப்பு: ’தீக்கடல் கடைந்த திரு மதுரம்என்று. அத்தனையும் தமிழ்ச் சொற்களே! ஆனால் தமிழனுக்கு அர்த்தமாகாது. தமிழர் தலைவர்கள் பலருக்கும் அர்த்தமாகாது. பாற்கடல் கடைந்த போது ஆலகாலம் வந்தது, திருமகள் வந்தாள், ஐராவதம் வந்தது, கௌத்துவ மணி வந்தது, காமதேனு வந்தது, கடைசியாக அமுதமும் வந்தது என்பது தொன்மம். ஆனால் தீக்கடல் கடைந்தபோது வந்த திருமதுரம் எது?

பசியை வயிற்றுத் தீ என்கிறது புறநானூறு. அதுவே கும்பித் தீ. வயிற்றுக் காய்ச்சல் என்றால் பசி எனப் பொருள் தரும் யாழ் அகராதி.

தீ எனில் எரிப்பது என்பதறிவோம். ஆனால் தீ, தானே போய்த் தானாக எரிக்குமா? கண்ணகி கூடல் மாநகரை எரித்தாள். அசோக வனத்துச் சீதை, ‘எல்லாம் நீத்த உலகங்கள் யாவையும் ஒரே சொல்லினால் சுடுவேன்என்றாள். மகாகவி பாரதியோ,

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

என்கிறார்.

எனவே தீயை வைக்க வேண்டும். தீமைகள் பாலும் தீயவர் மேலும். வியப்பாக இருக்கிறது எனக்கு, இந்த மொழியின் சொல்லின் வீச்சை நினைத்து! எனினும் தோன்றுகிறது, தீ எனும் சொல் மட்டும் போதுமா? சிந்தையில் தீ வேண்டாமா? அண்மையில் ஏறு தழுவுதல் போராட்டத்தின் போது வெளிப்பட்டது ஒரு சிறு தீப்பொறி. டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கான எதிர்ப்பில் ஆங்காங்கே வெளிப்படுகிறது சிறு தீப்பொறிகள். சங்கப் புலவன் சொன்னான், ‘அடுதீ அல்லது சுடுதீ அறியாது.’ அந்த வியன் நகர் என்று. அதாவது சமையல் செய்யும் தீ மட்டுமே அறிவார்களாம் அம் மாநகர மக்கள்.

இன்றும் அப்படித்தான் கருதிக் கனவுலகில் வாழ்கிறார்கள். தமிழனுக்குச் சமைக்கும் தீ மட்டுமே தெரியும் என்று. நினைப்பைச் சொல்லியும் குற்றமில்லை. ஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், உலகம் தடை செய்த ரசாயனக் குண்டுகளாலும் எரிந்த போது நாம் சப்பாத்தி குருமாவும், ஆலு பரோட்டாவும் சுட்டுக் கொண்டிருந்தோம். அடுப்பில் தீ இருந்தது நமக்கு, உணர்வில் தீ அவிந்து போயிருந்தது.

எழுதுகிறார்கள் இன்றும் பத்தொன்பது பேர் இறப்பை வாசிக்கும்போது நெஞ்சு வெடித்தது என்றும், நாற்பத்து மூன்று பேர் கருகியபோது ஈரற்குலை துடித்தது என்றும். இரண்டு லட்சம் பேர் இனக்கொலை செய்யப்பட்டபோது எந்த அதிர்வும் துக்கமும் வருத்தமும் கண்ணீர்க்குளமும் இல்லை. துக்கமும் தோதுப்போலத்தான் வரும் போலும். இதைச் சொன்னால் நம்மை வெள்ளாள எழுத்து என்று வகைமை செய்வார்கள்.

திரும்பவும் சொல்கிறேன், சொல்லின் தீ போதாது. சிந்தையில் தீ வேண்டும். இருந்தால் நம்மை இரண்டாந்தர இந்தியனாக, கறுப்பனாக, தமிழன் தானே என்று இளப்பமாக எவரும் கருத மாட்டார். நமது மொழியும், மரபும், பண்பும் இம்மாநிலத்து எவரும் நமக்கு இட்ட பிச்சையில்லை. உரிமை. காவலர் எனக் கருதும் எந்தக் கோவலரும் இதைக் காக்க மாட்டார்கள். மரபையும், பண்பையும், மொழியையும் காப்பதாகப் பேசுவார்கள். செயலில் வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்கும், பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பார்கள். கம்பன் பேசுவான், கும்பகர்ணன் கூற்றாக:

பேசுவது மானம், இடை பேணுவது காமம்

கூசுவது மானுடரை, நன்று நம் கொற்றம்!’

என்று. அதுபோல இருந்து பயனென்ன? இருந்தும் பயனென்ன? சிந்தையில் எரிய வேண்டும், கொழுந்து விட்டு, அறத்தீ!

சற்று வேறு தடத்தில் பயணப்பட்டு விட்டோம். எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன், மதிப்புற்குரிய திரு. D. பால சுந்தரம் அவர்களிடம். அவரைத் தொழிலதிபர் என்று அறிவார்கள் எளிதில். ஆனால் வடமொழி இலக்கியத்திலும் வைணவ இலக்கியத்திலும் தேர்ந்த புலமை உடையவர் என்று அறியார் பலரும். அவரிடம் கவி காளமேகத்தின் பாடல் ஒன்றைச் சொன்னேன். நிந்தாத் துதி வெண்பா அது.

தீத்தான் உன் கண்ணிலே, தீத்தான் உன் கையிலே,

தீத்தானும் உன்றன் சிரிப்பிலே–தீத்தானுன்

மெய்யெலாம்! புள்ளிருக்கும் வேளூரா! உன்னை இந்தத்

தையலாள் எப்படிச் சேர்ந்தாள்?”

என்பது நான் சொன்ன பாடல். உன் கண்ணிலே தீ. உன் கையிலே தீ. உன் சிரிப்பிலும் தீ. உன் மெய்யெலாம் தீ. புள்ளிருக்கும் வேளூரில் உறைபவனே! இந்தத் தையல், உமை, உன்னை எப்படிக் கூடினாள்? மிகவும் இடக்கான கேள்விதான்.

D.B. என்னிடம் கேட்டார், “அப்பைய தீட்சிதர் கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று. உண்மையில் கேள்விப்பட்டிருக்கவில்லை. பதின்மூன்றாம் நூற்றாணடைச் சேர்ந்த அப்பைய தீட்சிதர் வேலுரை அடுத்த விரிஞ்சிபுரம் ஊரினர். தீவிர சைவர். வடமொழியில் பாடல்கள் எழுதீயவர் என்ற தகவல்களைச் சொன்னவர், கவி காளமேகத்துடன் ஒப்பிடும்படியான, அப்பையர் தீட்சிதர் பாடல் ஒன்றைச் சொன்னார். சொன்னதுடன் நில்லாது, அந்த சமற்கிருத பாடலின் தமிழாக்கமும் எழுதித் தந்தார், அடுத்த சந்திப்பின் போது. தமிழாக்கம் மட்டும் கீழே தருகிறேன்.

ஹே! கனக சபா நாதனே! தலையிலோ கங்கையும் சந்திரனும். கை கால்களிலோ குளிர்ந்த பாம்புகள். இடப்பாகத்திலோ, தயையால் ஈரமான பனிமலையின் புத்ரி. உடல் முழுதும் சந்தனப் பூச்சு. இப்படிப் பட்ட அதீதக் குளிர்ச்சியைத் தாங்குவதற்கு உன்னால் எப்படி முடியும்? துன்பங்களால் வாட்டப்பட்ட என் மனத்தில்ல் நீ நித்யமாக வசிக்கவில்லை என்றால்?” இந்த வெப்பத்தில் வசிப்பதால்தான் அத்தனை குளிர்ச்சியையும் உன்னால் தாங்க முடிகிறது என்பது அப்பைய தீட்சிதரின் தீர்மானம்.

இனி நாம் கட்டுரைத் தலைப்புக்கு வரலாம்.

அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். கடல் தாவிய அனுமன் அவளைக் கண்டு கணையாழி காட்டி, சூடாமணி பெற்றுக் கொள்கிறான். திரும்பு காலில் இலங்கயின் பொழில் இறுத்து, கிங்கரர் வதைத்து, சம்புமாலி வதைத்து, பஞ்ச சேனாதிபதிகள் வதைத்து, இராவணன்மண்டோதரி ஆகியோரின் இரண்டாவது மகன், இந்திர சித்தனின் தம்பி, அக்க குமாரனை வதைத்து, பின்பு இந்திர சித்தனின் பிரம்மாத்திரத்தால் கட்டுண்டு, இராவணன் முன் நிறுத்தப்பட்டு, அனுமனின் வாலில் பந்தம் கட்டி, தீ வைத்துத் துரத்துகிறார்கள்.

செய்தி அறிந்த சீதை, ‘எரியே அவனைச் சுடல்என்கிறாள். சீதையின் தொழுகையும் வேண்டுதலும் ஏற்று அக்கினி குளிர்கின்றது. எந்தத் தீ எலாம் குளிர்ந்தன என்று கம்பன் பேசுவதன் மாதிரிக்கு ஒரு பாடல், கீழ் வருமாறு.

மற்று இனிப் பல என்? வேலை வட அனல், புவிஅளாய

கற்றை வெங் கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர் காக்கும்

முற்றுறு மும்மைச் செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட

கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும்,

குளிர்ந்த அன்றே.”

பாடலின் பொருள்: கடல் நடுவே எழும் வடவ முகாக்கினியும், பூமியில் பொருந்திய தொகை தொகையான வெப்பம் கொண்ட நெருப்பும், அவை அல்லாது வானத்தில் அமைந்த நெருப்பும், முனிவர்கள் காத்து ஓம்பும் மூன்று வகை அக்கினிகளும், அசுரர்களின் முப்புரங்களையும் சுட்டு எரித்து அழித்த முக்கணானின் நெற்றிக் கண்ணின் நெருப்பும் குளிர்ந்து போயின. இனிப் பலப்பல சொல்ல என்ன இருக்கிறது?

பாடலும், பாடலின் பொருளும், கம்பனின் அதீதக் கற்பனையும் எல்லாம் இருக்கட்டும். இந்தப் பாடலில் என்னைக் கவர்ந்த சொல் வன்னி. நெருப்பு, தீ, அக்கினி, கனல், அனல், அழல், தழல், தணல் யாவும் அறிந்த சொற்கள். எனினும் நாற்பதாண்டுகளாகக் கம்பன் பயிலும் எனக்கு, முதன் முறையாகப் புத்தியில் சென்று தாக்கிய சொல் வன்னி. அதன் காரணமாகவே இந்தக் கட்டுரையும்.

அக்கினி எனும் தமிழ்ச் சொல், அக்னி எனும் வட சொல்லின் பிறப்பு என்பார்கள். அது போல வஹ்னி எனும் வட சொல்லே, வன்னியின் மூலச் சொல் என்கிறார்கள். வஹ்னி எனும் சொல்லுக்கு நெருப்பு, அக்னி, ஜீரண சக்தி என்று பொருள் தருகிறார்கள். வன்னி எனில் நெருப்பு என்று பொருள் தருகிறது பிங்கல நிகண்டு. பிற அகராதிகள், வன்னி எனும் சொல்லுக்கு நெருப்பு என்று முதற்பொருள் தருகின்றன. பிற பொருள்கள்குதிரை, வன்னி மரம், கொடு வேலி, தணக்கு, வன்னியன், பிரம்மச்சாரி, கிளி என்பன.

வன்னம் எனில் தங்கம் என்கிறது சங்க அகராதி. ஆக எனக்குத் தங்கத்தைச் சொல்ல, பொன், சுவர்ணம், கனகம், பொலன், வன்னம், சொக்கம், இரணியம் என வேறு சொற்களும் உண்டு.

சற்றுத் தேடியும் பார்த்தேன். வன்னி எனும் சொல்லைத் திருக்குறள் கையாளவில்லை. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் பதிற்றுப் பத்தும் புறநானூறும் வன்னி எனும் சொல்லை ஆண்டுள்ளன. பதிற்றுப் பத்து வன்னி எனும் சொல்லை வன்னி மரம் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. புற நானூற்றில், மாங்குடி கிழார் பாடல், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது. ‘வன்னி அம் துடுப்பின்என்பது சொற்றொடர். வன்னிக் கம்பைக் காம்பாகக் கொண்ட அகப்பை என்று பொருள் சொல்கிறார்கள்.

சொல் சார்ந்த வேர்ச்சொல் ஐயங்களுக்கு, எப்போதும் என் கையேடு, பேராசிரியர் அருளியின் அயற்சொல் அகராதி. அருளி ஐயா தெளிவாகக் குறிப்பிடுகிறார், வன்னி<சமற்கிருதம், Vahni என்று. வன்னிக்கு அவர் தரும் பொருள்கள், நெருப்பு, குதிரை, கொடுவேலி, தணக்கு, மாணாக்கன், கிளி என்பன. தொடர்புடைய வேறு சில சொற்கள், அருளி பட்டியலிடுவது: வன்னி கர்ப்பம்மூங்கில், வன்னிகைஎழுதுகோல், வன்னி பூமுருகன், வன்னி போக்கியம்நெய், வன்னி மாரகம்நீர், வன்னி ரேதாசிவன், வன்னி வகன்காற்று, வன்னி வண்ணம்செந்தாமரை, செவ்வாம்பல்; வன்னி வீசம்பொன்.

எவ்வாறாயினும் வன்னி என்ற சொல்லை எனக்கு நெருப்பு என்ற பொருளில் முதலில் அறிமுகம் செய்தவன் கம்பன். சற்றுக் கால தாமதமாக. அது கம்பன் பிழை அன்று. அவரே சொல்வது போல, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை!’ வடமொழியில் இருந்து தற்பவம் அல்லது தற்சமம் என்று தொல்காப்பியம் வழி நடத்தும் இலக்கணங்களுக்கு உட்பட்டு, கம்பன் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த சொற்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. அதிலொன்று வன்னி.

இறுதியாக, நெஞ்சிருக்கும் வரை நினைவில் ஆடும் வன்னி எனும் சொல், ஈழத்து நிலப்பகுதி.

ஆம் வன்னி! நெருப்பு!

One Reply to “வன்னி”

  1. என்ன ஆய்வு? படித்து வியந்துபோனேன். இவரது படைப்புகளை படிக்கும் ஆவல் மேலும் கூடுகிறது.
    கோவைக்காரனாக இருந்தும் இதுகாலம் இவரைக் கண்டதில்லை, 35 ஆண்டுகள் வெளி நாட்டில் குப்பை கொட்டியதால். விரைவில் கண்டு அறிய, ஆசை கொழுந்து விட்டு தணியாத தீயாக எரிகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.