தமிழில் சாதாரணமாக நாம் காணுவது எழுத்தாளர்களுக்கு இருக்கும் அதீதமான தன் முக்கிய உணர்வு. சிறு திருத்தங்களையோ, அல்லது எழுத்தில் காணப்படும் குறைகளையோ சுட்டினால் ஒன்று காட்டமாகப் பதில் எழுதுவார்கள், இல்லையெனில் பிறகு எழுதிக் கொடுக்க முன் வரமாட்டார்கள். தமிழில் பதிப்பிக்கப்படும் பெருவாரி புத்தகங்களைச் சரிவர பதிப்பு வேலைக்கு உட்படுத்திப் பிரசுரிப்பது கூட நடப்பதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் நன்கு பிரபல்யம் கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் மீள் பிரசுரம் ஆன பிறகும், அப் புத்தகங்களைப் பார்த்தால் நிறையப் பிழைகளோடு காணப்படுகின்றன.
மேற்கிலுமே சமீப காலத்தில் புத்தகங்களில் பிழைகள் மலியத் துவங்கி இருக்கிறதை நாம் காணலாம், இது உலகளாவிய சீர் கெடுதல் போலத் தெரிகிறது என்றாலும், அங்கு இன்னமும் பெருமளவு தரம் குறையாமல் இருக்கிறது. ஒரு காரணம் புத்தகப் பிரசுரம் இன்னமும் அங்கு பெரும் தொழில்துறை போல நடத்தப்படுகிறது என்பதும், எழுத்தாளர்/ பிரசுரகர்த்தர்/ பதிப்பாளர் ஆகியோரெல்லாம் தொழில் நுட்பமும், தொழில் திறனும் அவசியம் என்ற கருத்தோடு செயல்படுவதும் எனலாம். தவிர புத்தக விற்பனையும் பெரும் தொழில் துறையாக இருக்கிறது.
இந்தியாவிலோ, தமிழகத்திலோ இந்தத் துறை இன்னமுமே ஒரு சிறுதொழில் துறை போலவோ, குடிசைத் தொழில் போலவோதான் நடக்கிறது. பயன்படுத்தும் உபகரணங்கள் நிறைய மேம்பட்டு விட்டன. கணினிகளும் அச்சுப் பொறிகளும் இதர தொழில் நுட்பங்களும் – ஓவியமோ, கிராஃபிக்ஸோ, அட்டைகள் தயாரிப்பதோ, புத்தகத்தைக் கட்டி ஒட்டுவதோ ஓரளவு நல்ல முன்னேற்றம் பெற்றிருக்கின்றன எனலாம். மேலைப் புத்தகங்கள் அளவு பெருவாரிப் புத்தகங்கள் இன்னமும் மேம்படவில்லை. ஆனால் தரமான தயாரிப்பைக் கொடுக்கும் சில பிரசுரகர்த்தர்களாவது இந்திய அளவிலும், தமிழிலும் காணப்படுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மை.
இங்கு கொடுக்கப்படும் சுட்டியில் ஒரு இத்தாலிய எழுத்தாளர் தன் புத்தகத்தை இங்கிலிஷில் மொழிபெயர்க்கத் தாமே முன் வருகிற காதை பேசப்படுகிறது. அவரே மொழி பெயர்க்க முன்வருவதற்கு ஒரு காரணமாக, அவர் சொல்வது, இத்தாலிய மொழிப் புத்தகம் வெளி வந்து சில வருடங்கள் ஆகி விட்டதால் அவர் மூலப் புத்தகத்திலிருந்து போதுமான அளவு மன இடைவெளியைப் பெற்று விட்டாராம். அதனால் அதில் இருந்த குறைகள் இப்போது நன்கு தெரிய வருவதால், புத்தகத்தை மாற்றி எழுதியே மொழி பெயர்க்கிறார். நமக்கு இருக்கும் கேள்வி, இப்போது அது மூலப் புத்தகத்தின் மொழி பெயர்ப்பா, அல்லது தழுவி எழுதப்பட்ட இங்கிலிஷ் ஒரிஜினல் புத்தகமா?
அவரும், பேட்டியாளரும் அதை மொழிபெயர்ப்பு என்றுதான் கருதுகிறார்கள் என்பதால் ஒரு வேளை மாறுதல்கள் தரம் கருதிச் செய்யப்படும் நகாசு வேலைகளாக இருக்கும் என்பது நம் ஊகம். ஆனால் இப்படி ஓர் எழுத்தாளர் தம் மூலப் புத்தகத்தின் குறைகளை உணர்ந்து செப்பனிட முன்வருகிறார் என்பதும், அதை அவர் வெளியில் ஒத்துக் கொள்கிறார் என்பதும்தான் கவனிக்கப்பட வேண்டியன.
தமிழிலும் அசோக மித்திரன் தன் புத்தகங்களில் சில குறைகளோடு வெளி வந்தன என்பதைப் பற்றிக் குறைப்பட்டு எழுதி இருக்கிறார். நேர்ப்பேச்சிலும் சொல்லி இருக்கிறார். இதே போல தி.ஜானகிராமனுக்கும் சிறிது மனத் தாங்கல் இருந்ததாகத் தகவல் கிட்டியது. அது எத்தனை நிஜம் என்பது தெரியவில்லை.
இத்தாலிய எழுத்தாளர் பெயர்: ஃப்ரான்ஸெஸ்கோ பச்சீஃபிகோ (Francesco Pacifico)
நூலின் பெயர்: க்ளாஸ் (Class)
http://blogs.bookforum.com/paper/2017/05/31/
சரி இந்தப் புத்தகம் அப்படி என்ன பெரிய புத்தகம் என்பீர்களே ஆயின் ஒரு சாம்பிள் கொடுக்கிறோம். படித்துத்தான் பாருங்களேன். இது n+1 என்கிற காலாந்திரப் பத்திரிகையின் உபயம். என்னது அது காலாந்திரப் பத்திரிகை? வருடத்தில் மூன்று இதழ்கள்தான். வசந்தம், கோடை, குளிர்காலம் ஆகியன இதழ் வெளியிடப்படும் காலங்கள் என்று நினைவு. (இதழ் பற்றிப் பார்க்க இங்கே: https://nplusonemag.com/about/ )
பச்சீஃபிகோவின் நாவலிலிருந்து சில பக்கங்களை இங்கிலிஷ் வடிவில் படிக்க இங்கே செல்லவும்: https://nplusonemag.com/online-only/online-only/la-sposina/
*** *** ***
இந்த இதழில் ஒரு கட்டுரையில் அமெரிக்க மேடைகளில் இந்திய/ தெற்காசிய/ ஆசிய நகைச்சுவையாளர்கள் எப்படி முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் முன்னெப்போதையும் விடக் கூடுதல் கவனிப்பைப் பெறுகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார் ஒரு எழுத்தாளர். ஹாஸன் மினாஜ், அஸீஸ் அன்சாரி, மிண்டி கலிங் போன்ற இந்திய மூலாதாரம் கொண்ட அமெரிக்கர்கள் இந்தக் கட்டுரையில் கவனிக்கப் படுகிறார்கள். கட்டுரை இவர்களிடையே என்னென்ன தலைமுறை வேறுபாடுகள் இருக்கின்றன, அது ஏன், அந்த வேறுபாடுகளினால் இவர்களின் அணுகல், நகைச்சுவையின் கரு எல்லாமே எப்படி வேறுபட்டுத் தெரிகின்றன என்றும் அலச முற்படுகிறது. அதைப் படித்துக் கொண்டிருக்கையிலேயே, இந்திய எழுத்தாளர்கள் எப்படிக் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக மேலெழும்பி அமெரிக்க இலக்கிய அலமாரிகளில் இப்போது தவிர்க்க முடியாத நபர்களாக ஆகி விட்டார்கள் என்பதையும் நான் நினைத்துப் பார்த்தேன்.
முன்பு பாரதி முகர்ஜி, கீதா மேத்தா, த்ரிட்டி உம்ரீகர், வேத் மேத்தா, என்று சில பெயர்களில் சில புத்தகங்கள் மட்டுமே காணப்படும். இன்று இங்கிலிஷ் எழுத்து வரிசையில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு இந்திய எழுத்தாளர் காணப்படுவார் என்று தோன்றுகிறது. நூலகங்களில் மாதா மாதம் பார்க்கும்போது கண்ணில் பட ஒரு இந்திய மூலாதாரம் கொண்ட எழுத்தாளரின் நூலாவது தெரியும்- புது வருகை என்று குறிப்பிடப்பட்டு. சிறந்த அமெரிக்க எழுத்தாளர்கள், சமகாலத்தில் மிக்க கவனம் பெற்றவர்கள் என்று ஒரு சுருக்கப் பட்டியல் தயாரித்தால் அதில் தவிர்க்கவியலாத படிக்கு ஓரிரு இந்திய வம்சாவளி எழுத்தாளர்களாவது இருப்பார்கள். ஒரு உதாரணம்: ஜும்பா லாஹிரி.
அதே போல அடுத்த வரிசையிலும் பலர் எழுந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு உதாரணமாக இவரைச் சொல்கிறேன். சாந்தி சேகரன் என்ற எழுத்தாளர் காலத்திற்கேற்ற புத்தகமாக ஒன்றை எழுதித் தேச அளவில் (அமெரிக்காவில்தான்) கவனம் பெறத் துவங்கி இருக்கிறார். புத்தகத்தின் பெயர், ‘லக்கி பாய்’. (Lucky Boy ) இவரது வானொலிப் பேட்டி ஒன்றின் எழுத்துப் பிரதி இங்கே கிட்டும்.
இந்தக் குறிப்பு எழுதவாரம்பித்த போது கவனத்தில் இருந்த இன்னொரு எழுத்தாளர் துர்க்கா சியு- போஸ். இவர் தன்னைப் பற்றி ஐயங்களோடே எழுத ஆரம்பித்து இலக்கியாளர்கள் நடுவே கவனம் பெறத் துவங்கி இருக்கிறார். தான் ஒரு கதாசிரியர் ஆனால் கதையில்லாத கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தோன்றுவதாகச் சொல்கிறார். பேட்டி காண்பவரோ இவர் ஒரு கவிஞர் என்று நினைப்பதாகத் தெரிகிறது. இவருடைய முக்கியச் சிறப்பு, இவர் எதை எடுத்தாலும் சந்தேகப்பட்டுக் கேள்விகளாகக் கேட்டுத் துளைக்கிறதுதான்.
இவரைப் பற்றி எழுத நிறைய இருக்கும் என்று இவருடைய ஒரு பேட்டியைப் படித்தால் தெரிகிறது. அப்படி ஒரு குறிப்பைப் பிறகு எழுதுவோம். இப்போதைக்கு இந்தப் பேட்டியைப் படியுங்கள்.
http://bookforum.com/interview/17729
***