1
நத்தை! மேல் முதுகு புடைத்து, எடை தாளாமல் குனிந்து ஊர்ந்து வந்தாள் அந்தக் கிழவி. அழகான அதிகாலை பொழுது, சூரியன் மேகங்களில் கலந்து விட்டிருந்தான். நிலவு இன்னமும் கூட பூடகமாக ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. மயான அமைதியை பிளந்து கொண்டு அவள் தரையில் சரட்டிக்கொண்டுவந்த வாக்கரின் இழுவை அரவம் எழுந்தது. தலை கவிந்து, வெட்டவெளியை வெறித்தப்படி நெடிய வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வாத பண்டத்தை சோற்று தட்டில் வைத்தது போன்ற முக பாவனையுடன் அவளை அந்த கூட்டம் கவனிக்காமல் கடந்து சென்றது. அவள் மெல்லிய குரலில் எதையோ சொல்லிகொண்டிருந்தாள். நன்கு பரிச்சயமான வட்ட முகம். இத்தனை தொலைவிலிருந்து அவளுடைய சலவைக்கல் விழிமணியை துல்லியமாக காண முடிந்தது. ‘எரிப்பொருள் நிரப்பகத்தின்’ வாயிலில் நின்ற வரிசை மிக மெதுவாக நகர்ந்தது. அவள் இறுக பற்றியிருந்த வாக்கர் அவளுடைய உடல் அதிர்வுகளை வாங்கி மண்ணில் செலுத்திகொண்டிருந்தது. அவளை வேறு வேறு நிரப்பகங்களில் பார்த்தது போல் இருந்தது. கிழவியின் கையில் ஒரு சிறிய புகைப்படம், அதில் அவள் நீலநிற ஸ்வெட்டர் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருந்தாள். இப்போதிருக்கும் அளவுக்கு தளர்வும் சோர்வுமில்லை. அந்த புகைப்படத்தில் நிறம் உதிர்ந்த இத்துப்போன அந்த வாக்கர் அவளருகே இல்லை என்பதால் கூட அப்படி தோன்றி இருக்கலாம். மடியில் மண் நிறத்து சிவப்பு கழுத்து பட்டை அணிந்த நாய் ஒன்று சுருண்டு கண்மூடி சுகமாக கிடந்தது. அவள் முகத்திலும் கூட ஒரு பெருமித சிரிப்பு உறைந்திருந்தது. “கனவான்களே, இந்த புகைப்படத்தில் இருக்கும் எனது நாய்க்குட்டி, டாபி, என் செல்ல நாய்க்குட்டி, ஆருயிர் தோழன், அவனை இந்த இரண்டு நாட்களாக காணவில்லை, பாவம் அவன், நானில்லாமல் தவித்துவிடுவான், அவனை என்னிடம் சேர்ப்பியுங்கள், நான் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்” அவள் நுரையீரல் இரைவது வெளியே கேட்டது. சொற்கள் அவள் உதடுகளில் இருந்து தத்தி தத்தி உதடுகளை பலவந்தமாக தள்ளிப்பிளந்து வெளியே குதித்தன “போகட்டும் இத்தனை காலம் மனிதர்கள் வெறும் வீம்புக்கும் வெறுப்புக்கும் தானே மண்ணுக்குள் சென்றார்கள்..நான்… வேண்டுமானால் ..ஏதேனும் உயில் எழுதி தருகிறேன்..என் சடலம் உங்களுக்கு தான்.. எப்படியும் அது விரைவில் நிகழ்ந்துவிடும்..” மீண்டும் மூச்சிரைத்தாள்.”கனவான்களே, நான் கோருவதெல்லாம் எனது செல்ல டாபியை கண்டால் என்னை அதனிடம் ஒப்புடையுங்கள்..இன்னும் கொஞ்ச காலமேனும்..”
அவன் விழித்து கொண்டான். அக்குளிலும் முதுகிலும் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. சாய்வு நாற்காலியுடன் உடல் கட்டுண்டது போல் அசைய மறுத்தது. கையையும் காலையும் உதறி துள்ளி எழ வேண்டும் ஆனால் இயலவில்லை. அவனை எல்லோரும் ‘திமிங்கிலம்’ என்றே அழைத்தார்கள். அப்படி அழைக்கபடுவதற்கு முன்பிருந்த பெயர் வெறும் சடங்காக மட்டும் நீடித்து இருந்தது. அதுவும் இப்போது திடுமென மறந்து போனது. நினைவுகளில் துழாவிப் பார்த்தான். வேறு ஏதேதோ நினைவுகள் அகப்பட்டன. மணிக்கட்டில் கட்டியிருந்த தகவல் திரட்டியில் அவனைப் பற்றிய எல்லா தகவல்களும் இருக்கும். ஆனாலும் அதை பார்ப்பது இழிவு என எண்ணி, வீம்பாக நினைவுகளுடன் போராடினான்.
முதலாம் பெருநிகழ்வில் ஒரு சிறு செயற்கை தீவில் இருந்த அவனுடைய ஆய்வுக்கூடமும் அதில் பணிபுரிந்த 63 பேரையும் கடல் சூழ்ந்து கொண்டது. ஒரு உடல் கூட கரையொதுங்கவில்லை. உலகம் தழுவிய பேரழிவு எனும் பெரும் சோகத்தில் அவர்களுக்கென சிறு பங்கை ஒதுக்கிவிட்டு அவரவர் பணிகளுக்கு திரும்பியிருந்த போது, ஒருவாரம் கழித்து சிறு மிதவையை பற்றிக்கொண்டு உயிருடன் கரையடைந்தான். அப்போது திமிங்கிலம் என தலைப்பிட்டு பிரபல ப்ராக்ருதிஸ்தான் பத்திரிக்கை அவன் பிழைத்த நம்பவியலாத கதையை செய்தியாக்கியது. அந்தச் செய்தி கட்டுரை இப்படி துவங்கியது “திமிங்கிலம் பிரம்மாண்டமானது, அதனாலேயே தப்பவியலாதது, தின்று கொழித்து வளர்வது எனினும் இன்றியமையாதது”.
இந்தக் கனவு அல்லது உருவெளித்தோற்றம் அவனுக்கு நன்கு பரிச்சயம் தான். எத்தனையோ வருடங்களாக மீள மீள உறக்கம் உண்ணும் அதே கனவு. இந்த கனவின் செல்திசையை, அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அவன் நன்கறிவான். மரித்துப்போய் கல்லறைகளில் அறிதுயிலில் கிடக்கும் மூதாதைகளின் மட்கும் உடல்களை, எலும்புகளை, வளர்ப்பு மிருகங்களின் உயிரற்ற சடலங்களை எரிபொருளாக்க சக்கர வண்டிகளில் இழுத்துக்கொண்டு செல்லும் அந்த வரிசை. குடலை உளையும் அந்த அழுகிய பிண வாடை. என்ன, வரிசையில் நின்றிருக்கும் முகங்கள் மட்டும் அவ்வப்போது மாறும். ஜனாதிபதிகளும், தளபதிகளும், இவான் வஹ்லேறியும் பிற சகாக்களும், ஆசான்களும், தனது தந்தையும், மகன்களும், இன்னும் தானறிந்த வேறு வேறு முகங்கள் வரிசையை நிறைக்கும். அத்தனை முகங்களும் இரையை நுகர்ந்த பசித்த ஓநாயின் தவிப்பை நினைவூட்டின. பாய்ந்து பிராண்டும் சந்தர்ப்பத்திற்காக கோரைப் பற்கள் தெரிய காத்திருக்கும் பிராணிகள். தனது பங்கை கவனமாக காபந்து செய்யும், பிறர் பங்கை களவாட துடிக்கும் ஊனுண்ணிகள்.
அவர்கள் அஞ்சினர். கல்லறைகளை கட்டுக்குள் கொண்டுவந்து பிணங்களை கருப்பு சந்தையில் விற்ற ‘பிணப்பொறுக்கிகளை’ எண்ணியல்ல. முதல் மீறலுக்காக, அது தமதாக இருக்க கூடாதே என்பதற்காக. அந்த மீறலை பிறர் நிகழ்த்தவேண்டும் என அவர்களுள் சூல் கொண்டிருந்த சாத்தான்கள் காத்திருந்தன. அந்த கிழவியின் முகம் கூட அன்னையின் முகமாகவும், மனைவிகளின் முகமாகவும், எங்கிருக்கிறாள் என்றறியாத மகளின் முகமாகவும் உருகொள்ளும். அந்த வரிசையில் எப்போதும் அவனிருப்பான். கருப்பு தோல் மேற்சட்டை அணிந்த இளைஞன் வரிசையில் அவனுக்கு பின் நிற்பவன். அவன் தயங்கி தயங்கி வரிசையை விட்டு விலகி வருவான். நேராக அந்த கிழவியிடம் செல்வான். “மன்னிக்க வேண்டும் பாட்டியம்மா, உங்கள் டாபி என் வீட்டில் தான் உள்ளது, அழகிய நாய்க்குட்டி,..” என்பான் நிதானமாக.’என்னோடு வாருங்கள்’ என மெல்ல அந்த கிழவியின் கையை உறுதியாக பிடித்து அழுத்துவான். அந்த கிழவியின் கண்கள் சுருங்கும். கண்ணுக்கு கீழிருக்கும் தோல் பையில் நீர் ததும்பும். அவள் புரிந்துகொண்டாள். அந்த பார்வையில் அது தெரிந்துவிட்டது. மறுசொல் ஏதுமின்றி அவன் நடுங்கும் கரங்களால் அவனை பற்றிக்கொண்டு அங்கிருந்து செல்வாள். அங்கே நின்ற ஒவ்வொருவரும் அறிவார்கள். வெறுமே வேடிக்கைப் பார்த்தபடி அப்படியே நிற்பார்கள்.
அதற்குமேல் பொறுக்கவில்லை. முழு வலிமையோடு சாய்வு நாற்காலியிலிருந்து உந்தி எழுந்தான். அவனது நண்பன் இவான் வஹ்லேறி எப்போதோ கூறியது நினைவுக்கு வந்தது “நீ காண்பது கனவல்ல நண்பா. இத்தனை திட்டவட்டமாகவும் தீர்க்கமாகவும் கனவு காண முடியுமா என்ன? கனவு நினைவிருக்கிறது என்றாலே நீ அதை புனைகிறாய் என்றே பொருள். எப்போது தான் உன் ‘வதைவிரும்பித்தனத்தை’ விட்டு வர போகிறாயோ? இது ஸ்வப்ன ஸ்கலிதம் போல் உன் மூளை உன்னை மகிழ்வித்துகொள்ள செய்துகொள்ளும் ஒரு சிறிய ஏற்பாடு..” என சொல்லி நகைத்தான். இவானுக்கு எல்லாவற்றையும் பற்றி அப்பட்டமாக சொல்ல முடியும். மறுத்து மூர்க்கமாக வாதிட்டாலும் மனதின் மூலையில் அவன் சொற்கள் வேர்பிடித்து வளர்ந்து விடும். மூன்று நான்கு நாட்கள் வரை சண்டை முற்றி பேசாமல் கூட இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இவான் தான் முதலில் சமாதானத்திற்கு வருவான். “ஊடல் போதும் நண்பா..வா கூடலாம்” என சிரித்துக்கொண்டே சொல்வான்.
அவன் எழுந்து கண்ணாடி சாளரத்தை மறைத்திருக்கும் நீலத்திரைசீலையை மெல்ல விலக்கி வெளியே நோக்கினான். கட்டிடத்தை சுற்றி இருக்கும் சூரியக்கதிர் வடிகட்டியை கடந்து ஒளிக்கதிர்கள் அறைக்குள் ஊடுருவின. அதிகாலை சோதனையின் இறுதி கட்டத்தை முடித்துவிட்டு கண்ணயர்ந்தது, இப்போது நண்பகல் கடந்துவிட்டது. சட்டைக்குள் புதையாத அவனுடைய கைகள் மெல்ல பச்சையாக மினுங்க துவங்கின. பரவசத்தோடு அவன் சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு சூரிய கதிரில் காண்பித்தான். சரசரவென பச்சை மேவியது. கற்றாழையின் பச்சை. இதயம் அதிர துவங்கியது. அறையின் மூலையிலிருந்த சிறிய கண்காணிப்பு காமிராவை நோக்கி கரங்களை காண்பித்தான். வரியோடிய முதிர்ந்த முகத்தில் ஒரு சின்ன சுழிப்பு. “ மானுடர்களே..ஆம் நிலையான வாழ்வுக்கான முடிவற்ற தேடல் இன்றோடு முற்று பெறுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, மனிதன் தன்னை வேறுவிதமான குரங்காக உணரத் துவங்கியது முதல் தொடர்ந்து கொண்டிருக்கும் தேடல், நிலைத்த பாதுகாப்பான வாழ்வுக்கான தேடல், கோடிகணக்கான மனித உயிர்களை காவு வாங்கிய அந்த தேடல், நாளையை பற்றிய நிச்சயமற்ற அவனுடைய உறக்கமற்ற நடுங்கும் இரவுகள், போர்கள், சாகசங்கள் என எல்லாமும், ஒருகால் கலையை தவிர, பிற அனைத்தும் அவன் உண்பதற்காக, வாழ்வதற்காக முனைந்ததன் விளைவுகள் தான். சக மானுடர்களே, அந்த அச்சத்தை புதைத்து விடுங்கள், அது இன்றோடு முடிந்து போனது, இதோ இப்போது இங்கு புதிய மனிதன் எழுந்து வருகிறான். பூரண தற்சார்புடையவன். உங்களுக்கு இந்த அற்புத பரிசு..ஹோமோ ரீகாம்பினன்ட்” என புன்னகைத்தான்.
2
2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதலாம் பெரு நிகழ்வு உலகை நிலைகுலைய செய்தது. வெள்ளைக்குதிரையில் வாளேந்தி நீதி வழங்க எமது தேவன் இறங்கி வந்துவிட்டான் என்றார்கள். முதலாம் பெரு நிகழ்வில் அவனுடைய ஆசானும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர். ஹாப்கின்ஸ் மேற்கொண்ட ரகசிய ஆய்வுகளின் தரவுகள் அவரோடு சேர்ந்து அடித்து செல்லப்பட்டது. இவன் மட்டுமே எஞ்சியிருந்ததால் ஒருகாலும் அவை வெளியே கசிந்து விடகூடாது என்பதாலும், ஆய்வுகளை தொடர வேண்டும் என்பதாலும் அவனுடைய இருப்பு வெகு இரகசியமாக பாதுகாக்கப்பட்டது. சில காலம் கைவிடப்பட்ட விமான தளங்களில், செயற்கை தீவுகளில், பாலை பனிமலை சூழ் பள்ளத்தாக்குகளில் என கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் பதினான்கு முறை இடம் பெயர்ந்தான். பூமத்திய ரேகைக்கு வெகு அருகிலிருக்கும் இந்த தீவில் தான் ஆறு வருடங்களாக வாசம். கடும் மழையும், அடர் ஒளிபுகா காடுகளும், வெப்பமும் நிறைந்த தீவு. சாளரத்திற்கு அப்பால் மலை முகடுகள் வட்டமிட்டு நின்றன. முற்காலத்தில் எரிமலையாக இருந்தது. அதன் மத்தியிலுள்ள பள்ளத்தாக்கு ஆளரவமற்ற அடர் காடு. ஒருகாலத்தில் பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டு பேணப்பட்டது. விதவிதமான மரங்களும், செடி கொடிகளும், அதற்குகந்த விலங்கினங்களும் வாழ்ந்த காடு. இன்று அகன்று, தடித்த இலை கொண்ட புதர் செடி மட்டுமே அக்காட்டை முழுமையாக நிறைத்திருந்தது. ம்யுடன்ட் கார்டிஃபோலியா (Mutant cordifolia). செவ்வாய் கிரகத்தில் விண்வெளிபயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் வேளாண்மை செய்து வாழ்வதற்காக ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட புதர் செடி. இத்தாவரத்தை உருவாக்கிய டாக்டர். ரபேலின் கீழ் அவனும் பணியாற்றியிருக்கிறான். வெப்பத்திற்கு உகந்து தகவமைத்துக்கொண்டு, மிக குறைந்த அளவிலான நீரில், குறுகிய காலத்திற்குள் பழுக்கும். அதன் கனிகள் மனிதருக்கு தேவையான அனைத்து நுண்சத்துக்களையும் உள்ளடக்கியவை. சோதனை முயற்சியாக ப்ராக்ருதிஸ்தான் ராணுவம் முகாமிட்ட பாலை தேசங்களில் ராணுவ வீரர்களுக்கு உணவானது. ரபேல் ராணுவம் இதை பயன்படுத்துவதை கடுமையாக எதிர்த்தார். கள்ள சந்தையில் தீவிரவாத குழுக்களுக்கு உளவு அதிகாரிகளால் விற்கப்பட்டது. ரபேல் உண்மைகளை வெளியிட போவதாக அதிகாரிகளுக்கும் அதிபருக்கும் கடிதங்கள் எழுதினார். திடிரென்று அமைதியானார். ஏதேதோ காரணங்கள் கூறப்பட்டன. வெகு காலத்திற்கு பின்னர் டாக்டர். ரபேலின் பெயரை ‘ஹோமோ ரீகாம்பினன்ட்’ ஆய்வுக்கு ஒப்புக்கொண்ட தன்னார்வலர்களின் பெயர் பட்டியலில் கண்ட போது அதிர்ந்தான். எச்சில் ஒழுக நிலைகுத்திய வெறித்த விழிகளுடன் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தார். நினைவுகள் அழுக்கேறிய பளிங்குத்தரை போல் துலக்கமில்லாமல் மொந்தையாகியிருந்தன. பார்கின்சன் நோய் அவரை முற்றிலுமாக செயலிழக்க செய்திருந்தது. அவருடைய காப்பாளர் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான தகவல்களை அளித்துவிட்டு தப்பித்து சென்றார்.
மூன்றாம் பெருநிகழ்வுக்கு பின்பான காலகட்டத்தில் நிகழ்ந்த கடும் பஞ்சத்தை எதிர்கொள்ள, உலகெங்கிலும் இருந்த பாழ் நிலங்களில் வானிலிருந்து ம்யுடன்ட் கார்டிஃபோலியாவின் விதைகள் தூவப்பட்டன. காலபோக்கில் பிற செடிவகைகளை அழித்து உலகெங்கும் பரவி நிறைத்தது. நிலைமை சீரடைந்த பின்னர் அதை அழிக்க மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன. மேலும் மேலும் வீரியமிக்க புதிய வகைகள் தோன்றி ஆக்கிரமித்தன. ‘நாம் இந்த உலகை என்ன செய்து வைத்துள்ளோம்?’ என வெட்கிப் பதைத்து நின்றான்.
முன்பெப்போதோ தேடி சென்று கண்டடைந்த இந்திய துனைகண்டத்தின் தென்கோடி பகுதியில் செம்மண் சூடிய பூர்வீக கிராமம் அவன் நினைவில் எழுந்தது. நீருக்குள் அமிழ்ந்துவிட கூடாது என பிடிவாதமாக தலை தூக்கி நிற்கும் தாமரைக்குளம். எப்போதும் சுகமாக சோம்பி கிடக்கும் அழகிய அமைதி ததும்பும் ஊர். தனது மூதாதை நிலத்தை தேடி கண்டடைந்த போது ஏற்பட்ட பரவசம் அவனுள் அவ்வப்போது மீட்டுக்கொள்ள ஏதுவாக அடிநாக்கின் சுவையாக எஞ்சியிருந்தது.
அவனுடைய தாத்தா அந்த கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க கப்பலேறினார். கப்பல்கள் உடைந்து நொறுங்கின. மிகப்பெரிய பேரழிவுக்கு பின்னர் எஞ்சியவர்களால் உருவாக்கப்பட்ட புதிய தேசம் தான் ப்ராக்ருதிஸ்தான் எனும் பிராக். நவீன தொழில்நுட்பம் மனிதர்களை கொத்து கொத்தாக கொன்றொழித்தது ஆகவே நம்மை அடிமைபடுத்தும் தொழில்நுட்பங்கள் இல்லாத தற்சார்புடைய புதிய உலகை உருவாக்குவோம் என ப்ராக்கின் முன்னோர்கள் சூளுரைத்தார்கள். வெளியுலக தொடர்புகள் ஏதுமற்று, அத்தியாவசியமான தொழில்நுட்பங்களை மட்டும் வளர்த்தெடுத்து மனிதர்கள் நிகராக வாழும் ஒருலகை வன்முறையின்றி உருவாக்க முனைந்தார்கள். ஆனால் அங்கே சொகுசான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிழலுலகம் உருவானது. சிவப்பு சாயம் பூசிய வாழை நார்களைக் கொண்டு முகங்களை மூடிய அவர்கள் வாழையர்கள் என்று தங்களை அழைத்து கொண்டார்கள். அறிவியலே மானுட மீட்புக்கான சாதனம் என்பதே அவர்களின் பிரச்சாரமாக இருந்தது. புரட்சிக்கு பின்னால் பிராக்கில் அவர்கள் அரசை உருவாக்கினார்கள். முதலாம் பிராக்ருதிஸ்தான் எழுச்சியில் வாழையர்களை எதிர்த்து போராடி அவனுடைய தந்தை உயிர்நீத்தார்.
இருபது வருடங்களில் பிராக் அசுர வேகத்தில் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்தது. சிதிலமடைந்த வெளியுலகுடன் தொடர்பை ஏற்படுத்திகொன்டது. புத்தாயிரமாவது ஆண்டிற்குள் தொழில்நுட்ப வல்லரசாக தன்னை நிலைநிறுத்தி, புதிய அதிகார மையமாக ஆனது.
3
எத்தனையோ ஆண்டுகளுக்கு பின்னர் குமிழ் வடிகட்டியின்றி வெளியே வந்தான். குமிழ் வடிகட்டி இவானின் அற்புத கண்டுபிடிப்புகளில் ஒன்று. “மனிதன் தன்னளவில் ஒரு பிரபஞ்சம் என்றெல்லாம் சொன்னார்களே..என்ன ஒரு அற்புதம்..அவன் வாழ அருமையான மலகுழியை தயார் செய்து கொண்டிருக்கிறோம்..மலக்குழியில் வாழும் பிரபஞ்சம்” என்பான். ஆறாம் பெருநிகழ்வுக்கு பின்பான காலங்களில் புறஊதா கதிர்கள் உக்கிரமாக பூமியை தாக்கின. வெம்பி பழுத்த தோலுடன் பாதி எரிந்த பிணங்களைப் போல் மக்கள் நடமாடினார்கள். வளைகளிலும், பொந்துகளிலும் எலிகளைப் போல வாழ்ந்தார்கள். இடுக்குகளில் வாழ்ந்து இரவுகளில் மட்டும் வெளிவரும் கரப்பாம்பூச்சிகளானார்கள். அப்போதுதான் புறஊதா கதிர்களை உள்ளிழுத்து வாழும் வகையில் ஆபத்தற்ற சில நுண்ணுயிரிகளின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்படுத்தினான் இவான். புறஊதா கதிர்களை உண்டு வாழும் உயிருள்ள பாதுகாப்பு கவசமாக திகழும் சூர்யகதிர் குமிழ் வடிகட்டிகளின் முதல் வடிவத்தை அவன் தான் உருவாக்கினான்.
வெளியே வான் தூய நீலச்சுவர் என கிடந்தது, அண்மையில் கடந்து சென்ற விமானம், மங்கி மீண்டும் நீலத்தில் மறையும் வெண்ணுரை கோடொன்றால் நீலச்சுவரைப் பெயர்த்து சென்றிருந்தது. மணலில் கால் புதைய நடந்தான். நீலக்கடல் விளிம்புகளில் சிற்றலைகள் மோதிக் கொண்டிருந்தன. கடல் வானைக் கண்டு தானும் மூச்சை அடக்கி சுவராக சமைந்து நிற்க முயல்கிறது. பாவம். தசைகள் சற்றே தளர்ந்தன. முகம் பச்சையாக ஒளிர்ந்தது. நினைவிலிருந்து ஒளிந்திருந்த அவனுடைய பெயர் இயல்பாக அவன் உதடுகளில் அமர்ந்து எழுந்தது.
நினைவுகள் அவனை அலைகழித்தன. எட்டாவது பெருநிகழ்வுக்கு பின் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காலகட்டங்களில், பிரச்சனையை தீர்க்க வழிமுறைகள் ஏதும் இல்லாத போது, உலகம் போரின் விளிம்பில் சீறிக்கொண்டிருந்தது. புதுப்பிக்கவியலா எரிசக்தி காலாவதியானது. பெட்ரோலியமே தலையாய இயக்கு விசையாக இருந்து வந்தது. எரிசக்தி தற்சார்பு நிலையை எட்டிவிடவும் இல்லை.
ஏதாவது செய்தாக வேண்டும் என அரசு அவர்களை நிர்பந்தித்தது. தற்காலிகமாக பயன்படும் வகையில் மிகக் குறுகிய காலத்தில் நுண்ணுயிரிகள் மூலம் உயிரிக்கழிவுகளை ‘அதிவிரைவு மட்குதல்’ (RBD- rapid bio degradation) தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தி, உடனடியாக எரிபொருளை பிரித்தெடுக்கும் வழிமுறையை அவனும் அவனது குழுவும் உருவாக்கினார்கள். ‘கார்ப்சோ கார்பன்’ (corpso carbon) என அதற்கொரு பெயருமிட்டான். ஒரு சராசரி மனித சடலத்திலிருந்து நிமிடங்களில் 50 லிட்டர் அளவுக்கு அந்த தொழில்நுட்பத்தால் எரிபொருள் எடுக்க முடிந்தது. ‘நாங்கள் மதிப்பை கோருகிறோம்’ எனும் முழக்கத்துடன் நிகழ்ந்த போராட்டங்கள் இரண்டொரு நாட்கள் கூட தாக்குபிடிக்கவில்லை. உலகின் வேறு பகுதிகளை சார்ந்த விஞ்ஞானிகள் ‘இது அழிவுப்பாதை’, முட்டாள்தனமானது என எதிர்த்தனர். உயிரி கழிவுகள் சொற்ப அளவிலேயே உள்ளன, புதுபிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதே தீர்வாக இருக்க முடியும் என வாதிட்டனர். ஆனால் அதற்காக காலவகாசம் இப்போது இல்லை எனும் ப்ராக்ருதிஸ்தானின் வாதத்தை எவரும் மறுக்கவில்லை. எரிபொருள் பிரச்சனையை தீர்க்க இப்போதைக்கு வேறு வழியில்லை எனும் நிதர்சனம் போராட்டத்தையும் எதிர்ப்புகளையும் பிசுபிசுக்க செய்தது. அரசு அவசரகால எரிபொருள் நிரப்பகங்களை நிறுவியது. முதலில் உதிர்ந்த இலைகளை கூடை கூடையாக சுமந்து வந்தனர், பின்னர் காய்ந்த விறகுகளை, மரங்களை, எஞ்சியிருந்த பச்சை மரங்களை, செடிகொடிகளை வெட்டி வீழ்த்தினர். பின்னர் தள்ளுவண்டிகளில் பூனைகளின், எலிகளின், பன்றிகளின், நாய்களின் சடலங்களை தள்ளிக்கொண்டு பெரும் வரிசையில் நின்றார்கள். பின்னர் சடலங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வீட்டு விலங்குகள் காட்டு விலங்குகள் என பாகுபாடில்லாமல் திருடி கொல்லபட்டன, வேட்டையாடப்பட்டன, உரிமையாளர்களே வேறு வழியின்றி செல்லப் பிராணிகளுக்கு விஷம் வைத்து கொன்றனர். செல்லப் பிராணிகளை கொல்லும் சங்கடம் உங்களுக்கு வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் எனும் விளம்பரத்துடன் புதிய நிறுவனங்கள் முளைத்தன. வளர்ப்பு மிருகங்களை அவர்களிடம் ஒரு நன்னாளில் ஒப்படைக்க வேண்டும். அதை தூய்மையாக்கி, நல்ல உணவு வழங்கி, உரிமையாளருடன் புகைப்படம் எடுத்து, எதிர்பாலின பிராணியோடு கலவிக்கொள்ள ஓரிரவு வசதியளித்து, ஓய்வெடுக்கும் நேரமாக பார்த்து விஷ ஊசி செலுத்தப்பட்டு மதிப்புமிக்க மரணம் அளிக்கபட்டது.
சட்டென இருளில் கண்ணில் விளக்கொளி பாய்ந்தது போல் அந்த கிழவியின் முகம் தெளிவானது. ஆம் அவள் வெறும் கனவோ கற்பனையோ அல்ல. அந்த கருப்பு தோல் சட்டை அணிந்தவனையும், அந்தக் கிழவியையும் செய்திகளில் பார்த்திருக்க வேண்டும். அந்தக் கிழவி மிகப்பெரிய தொகைக்கு ‘பிணப் பொறுக்கிகளிடம்’ உயிரோடு விற்கப்பட்டிருந்தாள். மிக மோசமான மலைச்சரிவின் முதல் குழாங்கல் அவள். கைகால்கள் மரத்து குளிர்ந்தன. முகம் அடர் பச்சையாகி வியர்த்தது.
அந்த கிழவி தான் 42 நாட்கள் நீடித்த குருதி பெருக்கின் துவக்கம். வயோதிகர்கள் தற்கொலைக்கு நிர்பந்திக்கபட்டார்கள். போதைப் பொருட்கள் சந்தையில் சர்வ சாதரணமாக பெருகின. வலியில்லா மரணத்தை வயோதிகர்கள் வேறு வழியின்றி தேர்ந்தார்கள். மறுத்த முதியோர்கள் சிலர் கொல்லப்பட்டனர். கொஞ்சம் ஆற்றல் எஞ்சியிருந்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தப்பி வெளியேறி அரசிடம் உதவி கோரி தஞ்சமடைந்தனர். தற்காலிக பராமரிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஒப்புதல் படிவத்தில் ஒருவேளை தான் முகாமில் வசிக்கும் காலத்தில் மரித்தால், எனது உடல் அரசுக்கு உரியது என எழுதி வாங்கிக்கொண்ட பின்னரே முகாமில் அவர்கள் அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதும் அத்தனை எளிதாக இல்லை. முகாம்களை நோக்கி அவர்கள் வந்தவன்னமிருந்தார்கள். ‘பிணப்பொறுக்கிகள்’ முகாம்களை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். பராமரிப்பாளருக்கு கையூட்டு அளித்து இறக்கும் தருவாயில் உள்ளவர்களை கடத்தி சென்றார்கள். சில முகாம்களில் காவலர்களே பிணப்பொறுக்கிகளுக்கு தரகு வேலையும் பார்த்தார்கள்.
ஆயுதமேந்திய ‘பிணப் பொறுக்கிகள்’ சில எரிபொருள் நிரப்பகங்களை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வயோதிகர்களுக்கு பின், உழைக்க வக்கற்ற, பயனற்ற ஊனமுடையவர்கள் பிடித்துவரபட்டார்கள். மக்கள் சிறைச்சாலைகளின் வாயிலிலும் நீதிமன்றங்களின் வெளியேவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். “குற்றவாளிகளை கொல்லுங்கள்” என கோஷமெழுப்பினர்.
திடிரென்று ஓரிரவு மக்கள் திரள் ஒன்று சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு நுழைந்தது. ‘இந்த பாவிகளை காபந்து செய்து என்ன பயன்? இந்த உலகில் அவர்களுக்கு இடமில்லை’ என ஆவேசமாக கூவினார்கள். கையில் அகப்பட்டவைகளைக் கொண்டு கொன்று இழுத்து சென்றார்கள். கைவேறு கால்வேறாக கூருபோட்டு பிரித்து கொண்டார்கள்.
அதன் பின் பாலியல் விடுதிகள் சூறையாடப்பட்டன. ஓர்பால் சேர்க்கையாளர்களின் கூடுகைகளுக்குள் புகுந்தனர். இப்படிப் புகுந்த ஒரு கூட்டத்தை நோக்கி ஒரு பெண் பாலியல் தொழிலாளி ஏதோ ஒரு ஊரில் “ உம்மில் யோக்கியமானவர்கள் மட்டும் எம்மீது கல்லெறியும்” என. நொடிபொழுது நீடித்த மவுனம் “நான் நீயல்ல” எனும் தொடர் கோஷத்தால் குலைந்தது. அதன் பின் வன்புணர்வும் படுகொலையும் தொடர்ந்தது.
ஆயுதமேந்திய பிணப் பொறுக்கிகளை அல்ல, சாமானியர்கள் சாமானியர்களை அஞ்சினார்கள். தாங்கள் பிறருக்கு நிகழ்தியவைகள் தங்களுக்கு நிகழ்ந்துவிடுமோ எனும் மிதமிஞ்சிய அச்சம் அவர்களை மேலும் மூர்க்கமாக ஆக்கியது.
42 நாட்கள் நீடித்த அராஜகம் ‘ மேற்கு பிராகிருதிஸ்தான் பள்ளிக்கூட படுகொலை’ என்றறியப்படும் நிகழ்வோடு சட்டென முடிவுக்கு வந்தது. குற்ற உணர்வு மேலிட அழுது தீர்த்தார்கள், தாங்களும் மனிதர்கள் தான் என்பது அன்று அவர்களுக்கு திடிரென்று நினைவுக்கு வந்தது. மக்கள் ‘பிணப் பொறுக்கிகளுக்கு’ எதிராக பொங்கி எழுந்தார்கள். எரிப்பொருள் நிரப்பகங்களின் வாயிலில் கூடி ‘அவர்களை விட்டுவிடுங்கள்..என்னை எடுத்துகொள்ளுங்கள்’ என கோஷமிட்டு போராடினார்கள். எங்கும் அறவுணர்வும், நீதியுணர்வும், கருணையும் ஆற்றுவெள்ளமென பெருகி ஓடியது. மனம் அழுத்தத்தால் படுகொலை நிகழ்ந்த அடுத்த வாரத்தில் மட்டும் லட்சகணக்கானோர் தங்களை தாங்களே மாய்த்து கொண்டார்கள்.
கவனம் மொத்தமும் திமிங்கிலத்தின் மீது திரும்பியது. தங்களை முடிவற்ற இருளுக்கு இட்டுசென்ற சாத்தானின் வடிவமாக தூற்றபட்டான். மக்கள் ஒருவரையொருவர் கொன்று தின்றுகொண்டிருக்கும் போது ஆய்வுகூடத்தில் அடுத்த ஆய்வுகளை செய்துகொண்டிருக்கும் நீரோ என வசைபாடபட்டான். அவனை அவமதித்து வைத்த பதாகைகளை இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் துல்லியமாக நினைவில் துலங்கின. ‘திமிங்கிலத்தை கூண்டில் அடையுங்கள்’ எனும் வாசகத்தோடு கிளிகூண்டுக்குள் பிதுங்கி கிடக்கும் திமிங்கிலத்தின் பதாகைகளை கையிலேந்திகொண்டு ஊர்வலம் சென்றனர். வீதிகளில் கூர் பற்களுடன் பிரம்மாண்ட திமிங்கிலம் சிரித்து கொண்டிருந்தது. அதன் கரத்திலிருந்த முள் கரண்டியில் மனித தலைகள் குத்தியிருந்தன. நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டி, ரத்தம் உறிஞ்சும் டிராகுலா, மிதமிஞ்சி உண்டு அழிக்கும் திமிங்கிலம். ‘திமிங்கிலத்தை தூக்கிலிடுங்கள்’ என ஆவேசமாக கூவினார்கள். ஆனால் அவன் எங்கிருக்கிறான் என்பதை எவரும் அறியவில்லை. இதற்கிடையில் புதிய சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு ‘கார்ப்சோ கார்பன்’ பயன்பாடு முறைபடுத்தபட்டது. எரிபொருள் தேவையும் சற்று அடங்கி இயல்புநிலை திரும்பியது. ‘திமிங்கிலம்’ மெல்ல மெல்ல மறக்கபட்டான். ரத்தம் கசியும் சிறு உள்காயமாக, பாவத்தின் நினைவாக, வெட்கத்துற்குரிய ரகசியமாக அவர்களுள் மிக வேகமாக புதைந்தான்.
4
‘நான் மறக்கவில்லை’ மெல்ல சொல்லிக்கொண்டான். தான் வஞ்சிக்கப்பட்டதாக அவனுக்கு தோன்றியது. ‘நானா இவர்களை காட்டுமிராண்டிகளாக ஆக்கினேன்? நான் இவர்களை குருதி குடிக்க செய்தேன்? நான் அறிவியல் மட்டுமே அறிவேன். அரசு கேட்டுக்கொண்டதை செய்தேன். இக்கட்டுகளில் இருந்து மீட்க அவர்களுக்கொரு தொழில்நுட்பத்தை அளித்தேன்.’ இல்லை. பொய். இவானும், ரபேலும் விஞ்ஞானிகள் தான். அவர்கள் ஒருபோதும் இத்தனை கீழிரங்கியிருக்க மாட்டார்கள்.
அவன் உடைந்து போயிருந்த ஆரம்ப நாட்களில், இவான் முழுநிலவு ஒளியில் கையில் மதுகோப்பையுடன் கூறியவை அவன் குரலிலேயே ஒலித்தது. “நண்பா..இதோ இந்த ஏவுகணைகளை பார்க்கிறாய்..ப்பூப்..பீரங்கிகள் உருண்டு வருகின்றன..இதற்காக நெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடித்த நம் மூதாதையை தூக்கிலிட முடியுமா என்ன? நீ அறியாததா? நுண்நோக்கியை கண்டுபிடித்தவன் அறிவானா இன்று உயிரி போரின் சாத்தியத்தை? நண்பா..எது எவரிடத்தில் எப்படி ஆயுதமாகும் என்பது நாம் அறிய முடியாத, நமக்கப்பால் உள்ள விளையாட்டு..அறிவியல் சிக்கலானது தான், தொழில்நுட்பமும் சிடுக்குகள் நிறைந்தது தான், ஆனால் வேறுவழியில்லை நண்பா, அறிவியலின், தொழில்நுட்பத்தின் சிக்கல்களை மேலும் சிக்கலான அறிவியலை, தொழில்நுட்பத்தை கொண்டே தீர்க்க முடியும். முன்னேறு இல்லை மறைந்து போ..நீயில்லை என்றால் வேறொருவர் வழியாக நிகழ்ந்திருக்கும்..ஆகவே திருவாளர் ஹெர்குலஸ் அவர்களே தேமேயென கிடக்கும் உலக உருண்டையை தேவையில்லாமல் தோளில் சுமக்க வேண்டாம்”. இத்தனை பேசிய இவான் தான், மனித மூளையை நிலைகுலைய செய்யும் நுண்ணுயிரியை உருவாக்க பணிக்கபட்டபோது மறுத்து தூக்க மாத்திரைகளை உண்டு மரித்தான். இவான் தீவிரவாதிகளுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு அது கண்டறியப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான் என அறிவித்து அவனை பழிதீர்த்து கொண்டது அரசு. அவனுக்குரிய எல்லா அங்கீகாரமும் அரசால் மறுக்கப்பட்டது. அப்படியொருவன் இருந்ததற்கான தடையங்கள் ஏதுமின்றி வாழ்க்கை அவனை விட்டுவிட்டு நகர்ந்தது. அதுபோலொரு முடிவை தன்னால் ஏன் தேர்ந்தெடுக்க முடியவில்லை என யோசித்தான். ஆம். தானொரு திமிங்கிலம் என்பதைத்தவிர வேறெதுவும் அவனுக்கு பதிலாக தோன்றவில்லை. ஒருவேளை முதல் மனைவி ஜெமீமாவைக் கேட்கலாம். அவள் அவனை நன்கறிவாள்
அவள் பண்டைய பிராக்கின் மீது பற்று கொண்டவள். அதன் வழிமுறைகளை பின்பற்றியவள். தொழில்நுட்பங்கள் மீது தீரா ஐயம் கொண்டவள். அடிப்படை அறிவியலைக்கொண்டு வாழ்க்கை போக்கின் சிறு சிறு அசவுகரியங்களை எளிதாக்க தேவையான தொழில்நுட்பம் போதும் என நம்பியவள். மூளையின் பகுதிகளுக்கும் நினைவாற்றலுக்கும் பொருட்களின் வைப்புமுறைக்கும் உண்டான தொடர்பை அவள் ஆய்வு செய்தாள். அதன்படி சரியாக பொருட்களை அடுக்கி வைத்தாலே போதும். அதன் பயன்பாடு, விலை, அளவு என எல்லாமும் கணினி துணையில்லாமலேயே நினைவில் நிற்கும். மூளை ஒவ்வொன்றையும் எப்படி மற்றொன்றோடு தொடர்புறுத்துகிறது, அதில் பரிணாமத்தின் பங்களிப்பு என்ன, என எவ்வித கருவிகளின் உதவியும் இன்றி அவளால் காத்திரமான கோட்பாடுகளை உருவாக்க முடிந்தது. சில பேரங்காடிகளில் அவளுடைய முறை மிக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பண்டைய பிராக்கின் மீது பிரேமை கொண்ட சிலர் அவளுடைய முறைகளை பின்பற்றினார்கள்.
ஜெமீமாவும் அவனும் பள்ளி தோழர்கள். ஒரே கல்லூரியில் வேறு வேறு துறைகளில் பயின்றவர்கள். காதலித்த போதும் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். இயந்திரங்கள் பற்றி இவன் காணும் கனவுகளை அவள் எப்போதும் கேலி செய்வாள். கலவிக்கு பின்பான உரையாடலின் போது மழை தருவிக்கும் இயந்திரத்தைப் பற்றி ஆர்வமாக அவளிடம் விவரித்து கொண்டிருந்தான். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு “உனக்கு நானோ அல்லது எந்த பெண்ணோ தரவியலாத உச்சத்தை இயந்திரங்கள் தான் தருகிறது போலும்..உன் முகத்தை கண்ணாடியில் பார்” என கோணலாக சிரித்துக்கொண்டே சிறிய கைக்கன்னாடியை நீட்டினாள். முகம் சிவந்து, கன்னங்கள் பூரித்து, நெற்றி வியர்த்திருந்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் அவளுடைய கணிப்பு எத்தனை துல்லியம் என எண்ணிக்கொண்டான். அவர்களின் உறவு திருமணத்தில் முடியும் என ஒருபோதும் எண்ணியதில்லை. மானுடம் தழைக்க வேண்டும் என அவன் கூறினால் உலகம் வாழ வேண்டும் என்பாள். ஒரேயொரு கருத்தில் கூட அவர்களுக்குள் ஒற்றுமை இருந்ததில்லை. அவள் நிதானமாகவும் ஆணித்தரமாகவும் பெரும்பாலும் சரியாகவும் தனது தரப்புக்களை வைப்பாள். இவன் பொறுமை இழந்துவிடுவான், வார்த்தைகளை அள்ளி இரைத்து வசைபாடி முடிப்பான். அவன் அமைதியுறும் வரை காத்திரிப்பாள். மீண்டும் தனது கருத்து எவ்வளவு சரி என நிறுவுவாள். ஆனால் அத்தனைக்கும் அப்பால் இருவருக்கும் தனியா மோகம் தகித்தது. அவன் தேசிய அறிவியல் கழகத்தில் சேர்ந்தது அவளுக்கு பிடிக்கவில்லை. செலவற்ற சரியான தொழில்நுட்பத்தை பரவலாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவக்க வேண்டும் என்பதே அவளுடைய கனவு. ஓரிரவு கழிப்பறையில் இருந்து வெளியே வந்தவன், நேராக “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என கேட்டான். “விளையாடாதே..நன்றாக யோசித்து பார்” என்றாள். இழுத்து அனைத்து உதடுகளில் முத்தமிட்டான்.
“ஜெமீமா..என் பிரிய ஜெமீமா” அவன் அரற்றினான். திருமணத்திற்கான பின்பான நாட்கள் ஒவ்வொன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. மோகமும், ஊடலுமாய் கழிந்த இரவுகள். அவளை நிதானமிழக்க செய்ய வேண்டும். களிவெறி கொள்ள செய்ய வேண்டும் என அவன் புரிந்த கோமாளித்தனங்கள். அவளும் அதை விரும்பினாள். சீண்டிக்கொண்டே இருப்பாள். எங்கே என்னை நிதானமிழக்க செய் என மெலிதாக கேலிப் புன்னகை புரிவாள். அவனுடைய புரிதல்களை, நம்பிக்கைகளை மெல்ல ஒவ்வொரு தர்க்க ஊசிகளைக் கொண்டு தகர்ப்பாள். நீயும் உனது அறிவும் ஒன்றுமில்லை என காலடியில் போட்டு நசுக்குவாள். அவளளித்த ரணங்களை அவளே ஆற்றுவாள். அவன் குறுகிய காலத்தில் தேசிய அறிவியல் கழகத்தின் உயர் பொறுப்புக்களை அடைந்தான். ஒவ்வொரு நாளும் வளர்ந்தான், கவனிக்கபட்டான், மதிக்கபட்டான். ஆனால் அவையாவும் அவள் முன் பொருளிழந்து போயின. அவனுடைய வருமனாத்தில் ஒரு பகுதியை ஜெமீமாவின் தொண்டு நிறுவனத்துக்கு அளித்தான். அங்கு அவ்வப்போது சிறப்பு பேச்சாளாராக சென்று அறிவியல் பாடங்கள் எடுத்தான். முதலில் ஒரு மகன் பிறந்தான், அதற்கடுத்து ஒரு மகள். அப்போது தேசிய அறிவியல் கழகத்திலிருந்து ராணுவ அறிவியல் பிரிவுக்கு அவனை மாற்றினார்கள். அதை அவளால் ஏற்க முடியவில்லை. பதவி உயர்வு வேண்டாம் என மறுக்க சொன்னாள். அதிலுள்ள ஆபத்துக்களை தர்க்க ரீதியாக அடுக்கினாள். அவளுடைய பலகீனத்தை மோப்பம் பிடித்த மகிழ்ச்சியில் மனம் திளைத்தது. நிதானமிழக்காமல் பிடிவாதமாக தனது வாதங்களை வைத்தான். பிள்ளைகளின் நன்மை பொருட்டு என பசப்பினான். விவாதம் முற்றியது. ஓரிரவு குடித்துவிட்டு வந்து கத்தினாள். பதிலேதும் கூறவில்லை. அவளை முதன் முறையாக வெற்றிகொண்ட நிறைவு அவனை அடைந்தது. கொஞ்சம் விட்டு பிடிக்கலாம். சமாதனம் செய்துகொள்ளலாம் என நினைத்தான். மறுநாள் வேண்டுமென்றே “இப்போது என்ன நான் செய்தது தவறென்றே இருக்கட்டும்..உனக்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்றான். சைகையினால் போதும் என்று வெளியேறி சென்றாள். அன்றிரவு அவள் வீடு திரும்பவில்லை. ஒரேயொரு ஒற்றை வரி கடிதம் மட்டும் எழுதி இருந்தாள். “உன் கண்களில் நான் அதை கண்டுவிட்டேன். நீ விரும்பியது போலவே என்னை வெற்றிகொண்டு விட்டாய். இந்த நிறைவுடனே நாம் பிரிவோம்- என்றும் அன்புடன் – ஜெமீமா”. உடைந்து நொறுங்கினான். அப்போது தான் அவனுடைய விளையாட்டை உணர்ந்தான். பாறையென சிலைந்த அவள் இதையத்துடன் முட்டி மோதி மன்றாடி பார்த்தான். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஜெமீமா பிராக்கை விட்டு வெளியேறி சென்றாள். களியாட்டங்களிலும் போதையிலும் தன்னை புதைத்து கொண்டான். அதன் பின் இரண்டு திருமணங்கள், பிள்ளைகள். ஆனால் கசந்து உறவுகளை விட்டு வெளியேறினான். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என பெருநிகழ்வுக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் வழியாக பின் தொடர்ந்தான். இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும், கிழக்கு ஆப்ரிக்காவிலும் என உள்ளூர் அறிவியல் தொழில்நுட்பங்களை ஆவணபடுத்தும் பணியில் இருந்தாள். கடைசியாக தென் அமெரிக்க பழங்குடிகளின் மருத்துவமுறையை ஆராய சென்றாள். பிறகு அவளைப்பற்றிய தகவலேதும் இல்லை. ஜெமீமாவை நெருங்க அவன் செய்தவைகள் எல்லாம் அவனை மேலும் மேலும் அவளிடமிருந்து விளக்கின. “முட்டாள்..சுய மோகம் கொண்ட முட்டாள் நான்..ஜெமீமா என்னை மன்னித்துவிடு..இதுவும் கூட உனக்காகத்தான்..உன்னை நெருங்கத்தான்..நீ விழைந்த நம் விடுதலைக்காகத்தான் ஜெமீமா”. கைப்பிடி மணலை அள்ளி கடற்கரையில் நழுவ விட்டான்.
5
எல்லாவற்றையும் நேர் செய்ய தனக்கொரு வாய்ப்பிருப்பதாக நம்பினான். தானொரு அரக்கனாக வரலாற்றில் எஞ்சியிருக்க கூடாது என அவன் உறுதி கொண்டான். ஒரேயொரு மகத்தான தாவல், ஒரு துள்ளல், ஒரு சுழல் போதும். அழகிய நடனம் போல. எல்லாம் மீண்டும் அழகாகி விடும். அந்தத் தருணத்தை வெகு அருகில் தவறவிட்ட கணங்கள் அதிகம். இதோ அதோவென நழுவி சென்றது. சயனோ பாக்டீரியத்தின் மூலக்கூறுகளை மனித தோலில் இணைத்து ஒளிசேர்க்கை வழியாக தனக்கான ஆற்றலை உருவாக்கி கொள்ளும் தாவர மனிதனை உருவாக்க முயன்றான். பிற அத்தியாவசியமான சத்துக்கள் எல்லாவற்றையும் அடக்கிய மாத்திரையை அவன் முன்னரே உருவாக்கியிருந்தான். மேலும் சில அடுத்தகட்ட மேம்படுத்துதல்களுக்கான திட்டங்கள் அவனிடம் இருந்தன.
எவருக்கும் அடிமையாக இருக்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏதுமற்ற மனிதன். பூரண விடுதலை அடைந்தவன். தனக்காக வாழ்பவன். தான் வாழ எவரையும் அழிக்க வேண்டிய அவசியமில்லாதவன். ஆனால் ரீகாம்பினன்ட் தொழில்நுட்பம் அத்தனை எளிதாக கைவரவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றான். சோதனையில் சில மனித உயிர்கள் மடிந்தன. சில நேரங்களில் நோய் எதிர்ப்பு ஆற்றல் எதிர்வினை காரணமாயின, சில வேளைகளில் புற்று நோய், ஒவ்வாமை, பல சமயங்களில் எவ்வித மாற்றமும் நேரவில்லை. ஏறத்தாழ எல்லோரும் கைவிட்ட பிறகும் கூட பித்தனைப்போல் விடாமல் ஆய்வை தொடர்ந்தான். இறுதியாக தன்னையே சோதனைக்குள்ளாக்கி கொண்டான்.
வெகுதொலைவு நடந்து வந்துவிட்டது தெரிந்தது. தோல் சுவாசிப்பதை உணர முடிந்தது. வியர்வை துளிகள் மண்ணில் விழுந்தன. அருகில் ஹெலிகாப்டர் ஓசை கேட்டது. படைத்தளபதியும் அவருடைய ஆட்களும் வந்து கொண்டிருப்பார்கள். ஆய்வு வெற்றியடைந்ததை அடுத்து தேர்வு செய்யப்பட்ட இருபது பேரை ஹோமோ ரீகாம்பினன்ட்களாக மாற்ற சொல்லி ஆணை வந்திருந்தது. சப்பாத்துக்களை கழற்றினான். சுடுமணலில் வெறுங்காலை அழுத்தி வைத்தான். கால் பதிய மணலில் நடந்தான். மூக்கை அடைந்த கடும் நெடியை பின் தொடர்ந்து கரையோரம் நடந்தான். பிரம்மாண்டமான எலும்புகூடு கரையொரம் கிடந்தது. எலும்பில் ஒட்டியிருந்த சதை துணுக்குகளை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒலியை கேட்டான். வெறிகொண்டு மேற்சட்டையை கிழித்து வீசினான். காற்சட்டையை கழட்டி நீரில் தூர எறிந்தான். உள்ளாடைகளை அறுத்துபோட்டான். வெற்றுடலாக மண்ணில் ஓடினான். சில நூறு அடிகளில் மலையின் அடிவாரம் தென்பட்டது. மலைக்கப்பால் இருக்கும் காடு அவனை அழைத்தது. முதிய உடலில் புதிய ஆற்றல் பிறந்தது. ஓட ஓட ஆற்றல் பெருகியது. மலையடிவாரத்தை அடைந்தவுடன் சட்டென நின்றான். திரும்பி நோக்கினான். அவசர அவசரமாக காலடித்தடங்களை அழித்தபடி மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்தான். பின்னால் புதிய காலடி தடங்கள் உருவாகியிருந்தன. வாலை கவ்வ முயலும் நாயைப்போல வெறிபிடித்து காலடி தடங்களை மாறி மாறி அழித்து கொண்டிருந்தான். படை தளபதியும் அவருடைய ஆட்களும் அவனை சூழ்ந்து நின்றார்கள். கைகட்டி இறுக்கமாக அவனுடைய கிறுக்குத்தனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த எலும்புகூட்டை பார்த்தான். வேகவேகமாக அதன் வால்முனையை இழுத்துகொண்டு கடலுக்கு சென்றான். அப்போது வானத்தில் விமானம் கிழித்திருந்த கோடு முழுவதும் மறைந்துவிட்டிருந்தது. மேகமற்ற வெளிர்நீல வானம் மட்டுமே எஞ்சியிருந்தது. ‘திமிங்கிலங்கள் கடலுக்குரியவை’ எனும் சன்னமான முனகல் மட்டும் அவனிடமிருந்து எழுந்தது.