திபெத் எப்படி நசுக்கப்படுகிறது?

[சென்ற இதழ் திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றிய கட்டுரையின் முதல் பாகத்தைப் படித்தோம். இந்த இதழில் இரண்டாம் பாகம். இதுவும் மூலக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது. ஆனால் மூலக் கட்டுரையில் இல்லாத கருத்து எதுவும் சேர்க்கப்படவில்லை. வாசக வசதி கருதி இளகலான முறையில் மூலக் கட்டுரை கொடுக்கப்படுகிறது.]

மிர்ஸ்கி மதிப்புரை எழுதிய புத்தகம் இது:

China and Tibet: The perils of Insecurity/ by Tsering Topgyal/London/Hurst/309 pages (paperback)

ட்ஸெடிங் டொப்க்யால், பர்மிங்ஹாம் பல்கலையின் பன்னாட்டு உறவுத் துறையில் போதனையாளராக இருப்பவர். குழந்தையாக இருக்கையிலெயே திபெத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டு, இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்து, யுனைடட் கிங்டமிற்கு வந்த பிறகு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேதான் அவர் அரசியல் அறிவியல் துறையின் சிறப்புச் சொற்களில் ஊறினார் போலிருக்கிறது. அந்த நடை படிந்திருக்கிறது. சில உதாரணங்கள்:

மறு கருத்துருவாக்கத்துக்கு உட்பட்ட பாதுகாப்பின்மை குறித்த சங்கடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இரு நாடுகளில் பரவிய மேலும் பன்னாடுகளில் உள்ள சக்திகளின் அவசியம் இருக்கிறது. திபெத்தியரின் முன்னெடுப்பாலும், திபெத் பிரச்சினையைத் தாண்டிய வரைமுறை, கருத்தியல் மேலும் உலக அரசியல் காரணங்களாலும், இந்த மோதல் பன்னாட்டு மேலும் நாடுகளிடையேயான பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது.

டொப்க்யால் ஓரளவு தெளிவாகவும் இதர இடங்களில் எழுதுகிறார்.

திபெத்தியருக்கும் சீனருக்குமிடையேயான மோதலில் இரு பக்கங்களும் வன்முறை, மேலும் நுட்பமான இதயத்துக்கும் புத்திக்கும் ஒரே நேரம் சேரக் கூடிய வழிமுறைகள், தவிர உரையாடல், ராஜதந்திரம் என்று பலதையும் பயன்படுத்தியுள்ளார்கள்…. மாவோவுக்குப் பிந்தைய காலத்தில், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு உடன்படிக்கைக்கு வந்து சேர்வதற்கான காரணக் கூறுகள் இருந்திருக்கின்றன என்ற நிஜம் இருந்த போதிலும் இப்படி ஆகியிருக்கிறது…  தற்போதைய தலாய் லாமாவின் வாழ்வுக் காலத்தில்.

டொப்க்யால் இரு தரப்பினரிடமும் மேலும் பரஸ்பர நல்லெண்ணம் தேவை என்று கருதுகிறார்.

சீனாவுக்கும் திபெத்திற்குமான உறவு பற்றித் தற்போது நிலுவையிலிருக்கும் கருத்துகளை (இலக்கியத்தை) டொப்க்யால் விமர்சிக்கிறார். ஏனெனில் அவை திபெத்திலும், வெளிஉலகிலும் கிட்டுகிற ‘திபெத்தியரின் ராஜரீக நிலைபாடுகளை’ பொருட்படுத்துவதில்லை, குறிப்பாக சீனாவுடன் அருகருகே வாழ உடன்பாட்டைக் காட்டும் திபெத்திய மனோநிலையை அலட்சியம் செய்கின்றன என்பது விமர்சனம். ஆனாலும், தன் பிறந்த மண்ணின் மோசமான எதார்த்தத்தைப் பார்ப்பதற்கு, அவர் பழக்கத்திலிருக்கும் எழுத்து மூலங்களையே நாடுகிறார். அதாவது, ஓஸர், ட்ஸெரிங் ஷாக்யா, வாரன் ஸ்மித், ராபர்ட் பார்னெட், மேலும் மெல்வின் கோல்ட்ஷ்டைன் ஆகிய வரலாற்றாளர்கள் மேலும் சிந்தனையாளர்களின் நூல்களைப் பயன்படுத்துகிறார். சீனாவின் இறுதி இலக்கைப் பற்றி ஸ்மித் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்: “திபெத்திய அடையாளத்தைச் சீன அடையாளமாக மாற்றுவது, தலாய் லாமாவுக்குத் திபெத்தியர் காட்டும் அபிமானத்தை அழிப்பது, மாறாக திபெத்தியரைச் சீனாவுக்குக் கடமைப்பட்டவர்களாக மாற்றுவது.” இம்மாதிரிப் பத்திகளில், டொப்க்யால்  பல்கலையாளர்களின் (சிக்கலான) நடையை முற்றிலும் கை விட்டு விட்டு, தெளிவான முடிவுக்கு இட்டுச் செல்லும் மொழியைப் பயன்படுத்துகிறார்.

திபெத்திய தேச அடையாளத்திற்கு மையமாக இருக்கும் மொழி மற்றும் பௌத்தம் ஆகியன, சீனாவின் பாதுகாப்பு, மேலும் அரசு முன்னின்று செலுத்தும் தேசியத்துக்கும், பரவலாக ஏற்கப்பட்டுள்ள ஹான் இன உயர்வு சார்ந்த தேசியத்துக்கும் சிறிதும் ஏற்க முடியாததாக உள்ளதால், மாநில மற்றும் நாட்டு அதிகாரிகள் நடுவேயும், சாதாரணச் சீனரிடையேயும் இவற்றுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகமாக உள்ளது.

டொப்க்யால் தன் புத்தகத்தில் இரு பெரும் எதார்த்த நிலைகளை வலியுறுத்துகிறார்: திபெத்தியரின் தேசிய மற்றும் பண்பாட்டு அடையாள உணர்வு, சீன ஆட்சியாளர்கள் பல நூறாண்டுகளாகத் திபெத்திற்குள் மறுபடி மறுபடி ஊடுருவிக் கொண்டிருப்பது ஆகியன இவை. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர் சீனாவை முற்றிலும் வென்றபோது, திபெத் சீனாவின் கீழிருந்தது என்றாலும் தன்னைத் தானே ஆள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார். இது திபெத் எப்போதும் சீனாவின் கீழ்தான் இருந்தது என்று பெய்ஜிங் இன்று வலியுறுத்துவதை மறுப்பது ஆகும். இதே போன்ற பரஸ்பரம் மதிப்பு காட்டும் உறவுகள் மஞ்சு பரம்பரையினர் சீனாவை ஆண்ட காலத்தின் முதல் பாதி வரை நிலவின. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரை, ஹான் அல்லாத மஞ்சு இனத்து ஆட்சியாளர்கள் திபெத்தியரின் பால் ‘மரியாதையும், ஆதரவும், பாதுகாப்பளிப்பதையும்’ காட்டி வந்திருக்கின்றனர். திபெத்தியரை வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தனர்.

சீன ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ‘கரைத்து விடுதல்’ என்ற அணுகல் முறைப்படி, 1950 இலிருந்து திபெத்தின் மீது சுமத்தப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியும், அதிலும் 1989க்குப் பிறகு வந்த கால கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கடும் ஒடுக்கு முறைகளும் பண்டை நாளில் இருந்த நல்லுறவை நொறுக்கி விட்டன. அவர் என்னென்ன காரணிகள் சீனாவின் இந்த அணுகுமுறையை உருவாக்கின என்று பட்டியலிடுகிறார். “இறையாண்மை, எல்லைகளை உறுதி செய்தல், நியாயப்படுத்தல், தொகுக்கும் கருத்தியல், லெனினிய அரசியலமைப்பு, அரசு அமைப்புகள், தேசிய அடையாளம், மேலும் ஆட்சியின் பிம்பத்தையும், இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளுதல்” என்பன அவை. சீனர்களின் அட்டூழியங்களைப் பட்டியலிடுகிறார், அவை நிறையவே உள்ளன: மிக வேகமாக அதிகரித்து வரும் ஹான் ஜனத்தொகைக்கு (திபெத்தில் நடப்பது இது) பிரதானமாக உதவும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும், பெரும் திட்டங்களுக்கும் என ஏராளமான நிதி ஒதுக்கீடும், உதவித் தொகைகளும் கொடுப்பது, இதனால் சீனத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிட்டுவதோடு, சீனக் கட்டுமான நிறுவனங்களுக்கு ஏராளமான முதலீட்டுத் தொகை கிட்டுகிறது. இவை இறுதியில் சீனாவில் உள்ள தலைமை நிறுவனங்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் முதலீடுகள். இதைத் தவிர ‘கலாசாரப் புரட்சி’யை ஒத்த அழிப்பை திபெத்தில் எங்கும் நடத்தி, திபெத்தியரை ‘நாகரீகப்படுத்துதல்’ என்ற சொற்றொடரைத் தொடர்ந்து பயன்படுத்தித் தம் அழிப்பு வேலைகளை நியாயப்படுத்துதல் ஆகியன இதில் அடங்கும். இந்த வகைச் சொற்றொடரை ஃப்ரெஞ்சு காலனியம்தான் 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனா (எனப்பட்ட வியத்நாம் பகுதி நாடுகள்) நிலப்பகுதியில் தன் அழிப்பு முயற்சிகளுக்கு வருணனையாகப் பயன்படுத்தியது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

டொப்க்யால் கவனிப்பதன்படி, ஹான் மக்களின் உள்நுழைப்பு, திபெத்தியருக்குத் தம் அடையாளம் எத்தனை நொய்வானது என்பதை மறுபடி நினைவுபடுத்துகிறது. கடைகளின் பெயர்/ அறிவிப்புப் பலகைகளில் சீன மொழி மட்டுமே நிலவுதல், லாஸா பகுதியில் திபெத்தியக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு சீனாவின் பெரு நகரங்களில் காணப்படுவதைப் போன்று கடூரமாகத் தோற்றமளிக்கும் சீனப் பாணிக் கட்டடங்கள் எழுப்பப்படுதல் (இங்கு அவர் ஓஸரின் வருணனையைப் பயன்படுத்துகிறார்), மேலும் திபெத்தியப் புதுவருடக் கொண்டாட்டங்களின்போது சீனரின் வழக்கமான சிவப்பு விளக்குகளை லாஸாவின் தெருக்களில் தொங்க விடுதல் போன்ற பழக்கங்களையும் சுட்டுகிறார். இதை ஓஸர் வெறுக்கிறார்.

திபெத்திய பௌத்தத்தின் பால் தற்போது காட்டப்படும் சிறிதே ‘தாராளமான’ போக்கு கூட சீனாவின் நெடுநாள் நோக்குப்படி ‘மூட நம்பிக்கைகள்’ அமைதியாக உதிர்ந்து போய் விடும் என்ற எதிர்பார்ப்பையே சார்ந்த சாதுரிய நடவடிக்கைகள் என்று டொப்க்யால் கருதுகிறார். எப்படியும் பெய்ஜிங்கின் ஆணை எண் 5, 2007 ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளபோது இந்தத் தாராளம் காட்டுதல் எல்லாம் மறுதலிக்கப்பட்டு விடுகின்றது என்கிறார். அந்த ஆணை, ‘திபெத்திய லாமாக்கள் சீனாவின் அரசுடைய அங்கீகாரம் இல்லாதபோது, மறுபிறவி எடுப்பதாகச் சொல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது.’ இந்த ஆணை திபெத்தியருக்கு மிகவே ஆச்சரியம் கொடுப்பதாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் நம்பிக்கைகளின்படி மறுபிறவி எடுப்பது என்பது மனித எத்தனம், கட்டுப்பாடு ஆகியனவற்றுக்கு அப்பாற்பட்டது, தவிர எடுக்கும் அடுத்த பிறவி மனித வடிவில்தான் இருக்க வேண்டும் என்று ஒரு நிச்சயமும் இல்லை என்பதும் இருக்கிறது. டொப்க்யால் இன்னொன்றையும் தெளிவாக்குகிறார், திபெத்திய மொழி கீழிறக்கப்பட்டு சீனமொழியின் ஆதிக்கம் மேலோங்கும்படி ஆக்கப்பட்டிருப்பது அது.

அதிகாரபூர்வமான அணுகல் ஏன் வேலை செய்யவில்லை என்பதை விளக்க முற்படும் டொப்க்யால் சொல்வது இது, சீனர்களிலேயே அனேகர் மதத்தை நம்புகிறவர்கள்தான். இதில் (கட்டுரையாளர் சொல்வது இது) எனக்கு ஐயமே இல்லை. ஆனால் அவர் லோடி க்யாரி என்பவரிடமிருந்து பெற்றதாகச் சொல்லும் விவரணை அத்தனை வலுவானதாக இல்லை.  லோடி க்யாரி, தலாய் லாமாவின் சிறப்பு தூதுவர். முன்னாள் பிரதமரும், (சீன கம்யூனிஸ்ட்) கட்சியின் பொதுக் காரியதரிசியுமான ஜாவ் ஜியாங், 2005 ஆம் ஆண்டு, பதினைந்தாண்டுகள் வீட்டோடு சிறை வைக்கப்பட்ட பின் இறக்கும் தருவாயில் , தலாய் லாமா ’தனக்காக பௌத்தச் சடங்குகளை நடத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதாகச் சொன்னாராம் லோடி.

டொப்க்யால், தீக்குளியல்களைப் பற்றிப் பேசுகையில் எச்சரிக்கையாக இருக்கிறார். ஓஸர் கொடுக்கும் தகவல்களை ஓரளவு ஒத்திருக்கும் தகவல்களை அளிக்கிறார், இவை தீக்குளித்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள், யார் என்பன. 2008 இல் ‘மிருகத்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பும்’ இருந்தன. இந்த கடும் நடவடிக்கைகளுக்கு திபெத்தியர் அனேகமாக வன்முறையைத் தவிர்த்த எதிர்வினைகளையே காட்டினர் என்றாலும், அதிகார பூர்வமான பிரச்சாரத்தின் ‘கோர்ப்பு அற்ற சிதறலான விளக்கங்களும்’, மேற்படி கடும் நடவடிக்கைகளுமே தீக்குளியல் தற்கொலைகளைத் தூண்டின என்கிறார். இந்த சிதறலான விளக்கங்கள் என்று அவர் சொல்வதற்கு என்ன பொருள் என்பதை நாமேதான் ஊகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இறுதியாக, டொப்க்யால் சீனர்களும், திபெத்தியர்களும் ‘பாதுகாப்பு குறித்த தத்தளிப்பு’ என்பதிலிருந்து விடுபட ஒரு வழியை முன்வைக்கிறார். அது இருதரப்பினரிடையேயும் உள்ள அச்சங்களுக்கு வழி சொல்லும் என்கிறார். திபெத்திற்கு சுயாட்சி கொடுக்கப்பட வேண்டும்- இதைத்தான் தலாய் லாமா வெகு காலமாக முன்மொழிந்து வருகிறார். ஆனால்- பலர் இதை அவரது எதிர்பார்ப்புகளுக்கு வேட்டு வைக்கும் என்று கருதுகிறார்கள்- எந்த விடையும் ‘திபெத்தின் மீது சீனாவுக்கு உள்ள இறையாண்மை அல்லது திபெத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் ஆகிய இரண்டையும் குறித்து ஐயப்பாட்டைக் கொணரும்’ என்றால் அவற்றிற்கு எந்த கவனமும் கிட்டாது என்கிறார். ஆக, திபெத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளூர் நிர்வாகத்தில் பங்கெடுக்க வழி செய்ய வேண்டும் என்கிறார். இந்த வழிமுறையும், ‘கட்சி’யால் ஏற்கப்படாது என்பது டொப்க்யாலால் சொல்லப்படுவதில்லை; இந்த வகை திபெத்தியர்கள் சீனாவுக்குத் திபெத்தின் பண்பாட்டின் மீது உள்ள இகழ்வுணர்வைத் தப்பாமல் ஏற்க வேண்டி இருக்கும், அதோடு தலாய் லாமா மீதும் இகழ்வை ஏற்க வேண்டி இருக்கும். இப்போதைய நிலைப்படி, டொப்க்யாலாகட்டும், வேறெவராகவும் இருக்கட்டும், பெய்ஜிங்கின் நிலைப்பாடுகளை திபெத்திய மக்களின் நலன்களோடு பொருத்தி உடன்பாடு ஒன்றைக் காணக்கூடிய திபெத்திய ‘கட்சி’ உறுப்பினர்கள் யாரையும் அடையாளம் காட்ட முடியாது.

தலாய் லாமா, பொது மக்களிடமும், என்னிடமும் சொல்லி இருக்கிறார், அமெரிக்க மருத்துவ ஆலோசகர்கள் அவருக்கு இன்னும் இருபதாண்டுகள் ஆயுள் உண்டு என்று சொல்லி இருப்பதாக. அது அவரை நூறாவது பிறந்த நாளைத் தாண்டி இட்டுச் செல்லும். இது, அவருடைய சொற்களில், ’சீனர்களின் துர்க்கனா’. இந்த கெட்ட கனவை எப்படி எதிர்கொள்வது? இங்கு டொப்க்யாலின் ஆய்வு இரு பாகமாகப் பிரிகிறது. அவர் ஒரு புறம் தான் இன்றைய காலகட்டத்தை அலசும் அரசியல் அறிவியலாளராகத் தெரியப்பட விரும்புகிறார், அதே நேரம் தான் பிரசுரிக்கவிருக்கும் அடுத்த புத்தகத்தில், இது அவருடைய பல்கலை உரைநடையில் சொல்லப்படுகிறது, அவர் ‘பாதுகாப்பியல் மற்றும் மானுட இருப்புக்குப் பாதுகாப்பு’ ஆகியன குறித்த கோட்பாடுகளைக் கொண்டு, ‘திபெத்தியரைக் குறித்துச் சீனாவின் கொள்கைகளின் மையத்தில் இருக்கும் பாதுகாப்பு குறித்த நியாயப்படுத்தலை’ விண்டு விளக்கும் என்றும் சொல்கிறார்.

நிஜமாகப் பார்த்தால், டொப்க்யால் கொடுக்கும் விளக்கம் 1950 இலிருந்து திபெத்தில் உண்மையாக நடந்தது என்னவென்று விவரிக்கிறது. அதன்படி, அங்கு நடந்த பயங்கரமான சோகக் கதை நமக்குச் சொல்வது என்னவென்றால், ஆக்கிரமிப்பாளர்களின் நலன்களும், பலியானவர்களின் நலன்களும் உடன்பாட்டைக் காண முடியாது.

இது ட்ஸெரிங் டொப்க்யாலின் இதயம் தப்பாமல் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

~oOo~

திபெத் ஆன் ஃபயர்: ஸெல்ஃப் இம்மொலேஷன்ஸ் எகைன்ஸ்ட் சைனீஸ் ரூல்
ட்ஸெரிங் ஓஸர். வெர்ஸோ, 114 பக்கங்கள்.
ஃப்ரெஞ்சு மூலத்தை மொழி பெயர்த்து இங்கிலிஷில் கொடுத்தவர் கெவின் காரிகோ

சைனா அண்ட் திபெத்: த பெரில்ஸ் ஆஃப் இன்ஸெக்யூரிட்டி
ட்ஸெரிங் டோப்க்யால். லண்டன்: ஹர்ஸ்ட், 309 பக்கங்கள்

[தமிழில் தழுவி எழுதியது: மைத்ரேயன்]
22 டிசம்பர் 2016 இதழில் நியுயார்க் ரெவ்யு ஆஃப் புக்ஸ் பத்திரிகையில் வெளியான மூலக் கட்டுரையைத் தழுவி மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.