ஒற்றைமரம் (கொலுக்குமலை பயணம்)

போடி நாயக்கனூரில் வாழ்பவர்களுக்கு ஒரு பெரும் காட்சிக்கொடை எங்கிருந்து பார்த்தாலும் ஊரின் அநேக திசையினை சூழ்ந்திருக்கும் மேற்குதொடர்ச்சி மலைச்சிகரங்கள், இந்த மலைசூழ் நகரில் பிறந்த எனக்கு பள்ளி பருவம் முடியும்வரை மலையடிவாரப்பகுதிகள் வீட்டிலிருந்து சில மைல் தூரத்தில் சென்றடையக்கூடியதாய் இருப்பினும், சென்றுவர வாய்ப்பு அமையவில்லை. கல்லூரி சமயத்தில்தான் சில நண்பர்கள் சகவாசத்தில் அதன் மலை அடிவார கிராமமான குரங்கணி வரை செல்லும் வாய்ப்புகிட்டியது , அங்கிருந்து எத்திசை பார்ப்பினும் கண்களால் பருகி தீர்க்க முடியாதபடி பிரமாண்டமாக உருவெடுத்திருக்கும் மலைக்குன்றுகளும் சிகரங்களும். ஊருக்குள் இருந்த நாள் வரையில் ஒவ்வொரு நாளும் அக்குன்றுகளை சலிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன், பிழைப்புக்கு ஊர் மாறினாலும் எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நண்பரகள் உடன் குரங்கணி , கொட்டக்குடி மலை கிராம வழியாக சிறிதும் பெரிதுமான குன்றுகளுக்கு சென்று உலவுவதும் , அங்கிருக்கும் நீர்ச்சுனைகளில் குளிப்பதும் வழக்கமானது எங்களுக்கு.

ஒருநாள் டாப் ஸ்டேஷன் (முணாறுக்கும் தமிழ்நாடு எல்லைப்பகுதிக்கும் இடைப்பகுதி) வரை செல்ல திட்டமிட்ட மலையேற்ற பயணத்தில் நண்பர் ஒருவரை பாம்பு தீண்டியதால் பாதி வழியில் திரும்பினோம். சிறு பாம்பு என்றதால் அவருக்கு ஆபத்தில்லை. அந்த பயணத்தில் என் கவனமெல்லாம் அம்மலைக்குன்றுக்கு நேரெதிரே ஒரு பிரமாண்ட வசீகர சரிவுகளும் , சோலை , புல்வெளிகளும் கொண்ட சிகரத்தின் மீதிருந்து, அப்பொழுது மட்டுமல்ல பல நாட்கள் அதன் பிரமாண்டம் என் கண்களுக்குள் நிலை கொண்ட ஒன்று. அதன் சிகர உச்சி மட்டும் எப்போதும் காண முடியாதபடி மேகக்கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது,

“அதுதான்டா கொலுக்குமலை டீ எஸ்டேட் ஒருநாள் ஏறிடுவோம்” என்றான் நண்பன்.

கொலுக்குமலையின் ஏற்றுமதி தரம் வாய்ந்த தேயிலை தயாரிக்கப்படுவது பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன், உலகிலியேயே கடல் மட்டத்திலிருந்து 7000+ அடி உயரத்தில் தேயிலை விளைவிக்கப்படும் ஒரே மலைச்சிகரம் இதுதான்.சாகச விரும்பியான என்நண்பன்தலைமையில் ஏதாவது ஒரு விடுமுறை நாளை மையப்படுத்தி மலையேறிவிட அப்பொழுதே முடிவிடுத்தோம்,சில வாரங்களுக்கு முன் அப்படியொரு சந்தர்ப்பம் அமைய ஒரு குழுவாக தயாரானோம்.

வாகனத்தின் மூலம் (ஜீப்) கொழுக்குமலை செல்ல வேண்டுமாயின் கேரளாவின் சூரியநல்லி வழியாகத்தான் சென்றடைய முடியும்.

ஏறகனவே சிறு சிறு மலையேற்ற அனுபவமும் எங்களுக்கிருந்தால் போடியிலிருந்து மலைப்பாதை வழி நடந்து செல்ல முடிவாயிற்று. எழத்தாழ 5000 அடி உயரத்தை 20 + கிலோமீட்டரில் நடந்து கடப்பதில் , அசல் சவால் அதன் கடும் ஏற்றமும், சரிவும் கொண்ட பாதைதான். காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி பற்றிய பயமும் சுமந்து மலையேற உடல் மட்டுமல்ல கொஞ்சம் மன திடமும் தேவை. திடீரென பிளவுறும் பாதைகளில் சரியான பாதையை தெரிவு செய்வது முக்கியம். உயரம் கடக்க சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குளிரிலும் கால் துவள, நாவறலத் தொடங்கியது, ஆங்காங்கே பழம் , தண்ணீர் கொண்டு சக்தி மீட்டு எங்கள் நடை தொடர்ந்தது. இது போன்ற மலைப்பயணத்தில்தான் நம் உடலின் உண்மையான வலுநிலை நமக்கு தெரியும்.

இந்த கட்டுரையின் தலைப்பான ஒற்றைமரம் பற்றி இங்கு சொல்லியாக வேண்டும், கொழுக்குமலை வழித்தடத்தை மூன்று பிரிவாக பிரிக்கலாம் 1)அடிவார மலைக்குன்று , 2)புல்வெளிக்குன்று 3)சோலைக்காடு, கொலுக்கு மலை சிகரத்தை எவ்வளவு தூரத்திலிருந்து, எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் இரண்டாம் நிலையான புல்வெளி குன்றின் முகட்டில் தனித்த பெரிய ஒற்றை மரமொன்று தெரியும், எந்த மரமுமற்ற அக்குன்றில் அவ்வொற்றை மரம் மட்டும் வீம்பும் பிடிவாதமுமாக ஏன் உயிர் பிடித்திருக்கிறதென தெரியவில்லை. பயணம் துவங்கியதிலிருந்து அம்மரத்தை சென்றடைய ஒரு உத்வேகம் இருந்துகொண்டிருந்தது, நண்பகலில் அவ்வொற்றை மரத்தை சென்றடைந்தது அதன் நிழலில் விழுந்தேன், அம்மரத்தினடியில் உணவுண்டு சிறிது உறங்கி எழுந்ததும், மனம் எடையற்று, எதுவுமற்றுமிருந்தது. பின் மீண்டும் நண்பர்களுடன் வழக்கம்போல் சிரிப்பும் பேச்சுமாக மூன்றாம் நிலையான சோலைக்காடு நோக்கி மலையேற்றம் தொடந்து, வழியில் கரங்கள் கொம்பு , கிளைகளை பற்றி மேலேறுவது போல் என் மனம் அந்த மரத்தை பற்றித்தான் அடுத்த நிலைக்கு மேலேறியது.

“கொஞ்சம் வேகமா ஏறுங்கப்பா …” முன்னாள் சென்ற ஒரு நண்பன்.

“நண்பா இந்த மலைப்பயணம் உடம்பால மட்டுமில்ல மனசாலயும் கடக்கணும் …” இது நான்

“சொன்னது இலவு இவன் காதுல விழுந்துருச்சா?…. “என நினைத்திருப்பான் போல, அதன்பின் உச்சி சென்றடையும் வரை அவன் பிறரிடம் பேசியது என் காதில் விழாமல் பார்த்துக்கொண்டான்.

“கொழுக்குமலை எப்படி இந்த பேர் வந்துருக்கும்? ….”

“முந்தி குளிக்கட்டிமலைனு இருந்துச்சாம் அப்புறம் “குலுக்கட்டிமலை”யாகி இப்போ “கொழுக்குமலை” னு மாறிடுச்சு…” என்றான் ஒரு பொதுஅறிவு.

சமதள பயணத்திற்கும் , மலைவழி பயணத்திற்கும் பெரும் வித்தியாசம் ஒவ்வொரு நிலை கடக்கும்போதும் அது சிறு தூரமெனினும் மலைநிலம் நமக்களிக்கும் காட்சியின் அழகியல் தரிசனங்கள் மாறிக்கொண்டே இருக்கும், ஒருவேளை இதுதான் குறிச்சி நிலத்தின் மேல் எனக்கிருக்கும் மோகமோ?? இருக்கலாம். வழியில் ஒரு முள்ளம்பன்றியின் உதிர்ந்த உடல்முள் ஒன்றை கண்டெடுத்தேன் , அதுவரையில் அதன் முள்ளென்பது உறுதியான ரோமம் என நினைத்திருந்தேன், தவறு உறுதியான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட குத்தூசிபோல மிரட்டியது. நான் ஊன்றிநடக்கும் கழியில் குத்திச்சொருகி இந்த பயணத்தின் நினைவு பொருளாக வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணிக்கொண்டேன், சிறிது தூரத்திற்குள் அம்முள்ளை தவறவிட்டேன், வனத்தின் பொருள் வனமே மீட்டுக்கொண்டுவிட்டது. தூரமும் ஏற்றமும் எங்களின் சேமிப்பு குடிநீரை மொத்தமும் காலிசெய்தது , கடைசி இரண்டு மணிநேரம் எழத்தாழ நீரின்றி நடந்தோம், இறுதியாக இருந்த சில மிடறு நீரையும் எனக்கு கொடுத்தார்கள் நண்பர்கள். இதுபோன்ற மலையேற்றபயணத்தில் தன் சுமையை தானே தூக்க சோம்பலுறுபவர்களையும், நிழல் கண்ட இடத்திலெல்லாம் அமர்ந்து மதுஅருந்திவிட்டு பிளாஸ்டிக் குப்பைகளை வீசியெறிந்து வருபவர்களை தவிர்த்து விடுவது நலம்.

ஒருவழியாக 9 மணிநேர பயணத்திற்கு பின் கொழுக்குமலை உச்சி சென்றடைந்தோம், கடைசி திருப்பத்தில் நின்று திருப்பி, நடந்து கடந்துயர்ந்த பாதைதூரத்தை முழுமையாக பார்க்கும்போது எனக்கு உண்டானது ஒரு ராஜபோதை.

இதுபோல மலைப்பயணத்தின் போதை எனக்கு எதிலும் கிடைப்பதில்லை. இப்பொழுதுமட்டுமல்ல எந்த மலைப்பயணத்திலும் இறுதி நிலையில் ஒருமுறை கடந்து வந்த பாதையை பார்த்து எனக்குள் பதிந்து கொள்வேன், பின்னொருநாளில் முதுமைமுதிர்வில் ஒரு குவளை தண்ணீருக்கு கூட எழுந்த நடக்க முடியாத தருணங்களில் என் கால்கள் நடந்து கடந்த இந்த தொலைவு நினைவில் வந்து, இறுதியான ஒரு மகிழ்ந்த கண்ணீர்துளியை எனக்களிக்கலாம்.கொலுக்குமலையில் உணவுடன் ஒருநாள் தங்குவதற்கான ஏற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தேயிலை எஸ்டேட் நிர்வாகமே செய்து தருகிறது, , எங்களுக்கான ஏற்பாடுகளை நண்பன் முன்னரே பேசி ஏற்பாடு செய்து விட்டிருந்தான். அங்கிருந்த முழு நாளிள் அனுபவங்களை இங்கு சொல்லப்போவதில்லை, சொர்க்கத்தின் தெறித்து விழுந்த துண்டு நிலம் அது. சென்றுணரத்தான்வேண்டும்.

***

யா. பிலால் ராஜா
(படங்கள் : பாலகிருஷ்ணா குமார், தேனி )

One Reply to “ஒற்றைமரம் (கொலுக்குமலை பயணம்)”

  1. அன்பின் பிலால். மிக அருமையான கட்டுரை.மலைப்பயணத்தில் தரிசனங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். உண்மையான வார்த்தை.
    முதுமை முதிர்வில் நினைத்து அசைபோடக்கூடிய பொழுதுகளை நானும் சேமித்துக்கொண்டே வருகிறேன்.- கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர்கள் அனைவரிடமும் இந்த நற்செயல் தொடர்கிறது. கணிணிகளிடம் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டவர்களிடமிருந்து தனித்துத் தெரிபவர்கள் வார இறுதியில் பயணப்பையைத் தூக்கிக் கிளம்பியவர்கள் நம்மைப் போன்ற கிராமத்தாட்கள் தான்.

    மிக அழகான சொல்லாடல்கள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.