என் அப்பாவோடு ஓர் உரையாடல்

என் அப்பா எண்பத்தி ஆறு வயதானவர், படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருடைய இதயம், அந்தப் பாழாய்ப் போகிற எந்திரம், அவரைப் போலவே வயதானது, சில வேலைகளை இனிமேல் செய்யாது. அது அவருடைய தலையில் இன்னமும் மூளையின் ஒளி வெள்ளத்தைப் பெருகி ஓடச் செய்கிறது. ஆனால் அவரது உடலை வீட்டைச் சுற்றிச் சுமந்து திரிய அவருடைய கால்களுக்கு உதவாது.  என் இந்த உருவகங்களை எல்லாம் விடுங்கள், இந்தத் தசையின் இயலாமை அவரது பழைய இதயத்தினால் இல்லை என்கிறார் அவர், ஆனால் பொடாசியம் குறைந்திருப்பதாலாம். ஒரு தலையணையில் அமர்ந்து, மூன்றில் சாய்ந்து கொண்டு, கடைசி நிமிடப் புத்திமதியைத் தருகிறார், கூடவே ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார்.

ஒரே ஒரு தடவையாவது நீ ஒரு எளிமையான கதையை எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்னும் அவர், “த மோப்பஸான் எழுதியதைப் போல, அல்லது செகாவ், அல்லது முன்பு நீ எழுதிக் கொண்டிருந்தாயே அவை போல. வெறுமனே நாம் அறியக் கூடிய ஜனங்கள் பற்றி, பிறகு அவர்களுக்கு அடுத்து என்ன நடந்தது என்பதை எழுதி விடு.”

நான் சொல்கிறேன், “சரிதான். ஏன் எழுதக் கூடாது? அது செய்யக் கூடியதுதான்.” அவரைத் திருப்திப்படுத்த நான் விரும்புகிறேன். அந்த மாதிரி நான் எழுதியதாக எனக்கு நினைவில்லை. அப்படி ஒரு கதையைச் சொல்லிப் பார்க்கலாமென்று எனக்கு விருப்பமுண்டு, அது இப்படித் துவங்க வேண்டுமென்றுதான் அவர் சொல்கிறாரென்றால்: “அங்கே ஒரு பெண் இருந்தாள்…” அதற்குப் பிறகு கதைத் திட்டம், அப்படி ஒரு கனகச்சிதமான நேர்கோடு இரண்டு புள்ளிகளுக்கு இடையே, அதை நான் எப்போதும் மிகவுமே வெறுத்திருக்கிறேன். இலக்கியக் காரணங்களுக்காக அல்ல, மாறாக, அது எல்லா நம்பிக்கையையும் ஒழித்துக் கட்டி விடுகிறது என்பதால். நிஜமானவரோ, இட்டுக் கட்டப்பட்டவரோ, எவருக்கும் அவர் வாழ்வில் விதி என்பது திறந்ததாகவே இருக்கத் தகுதி உண்டு.

இறுதியாக தெருவில் நேர் எதிரே சில வருடங்களாக நடந்து கொண்டிருந்த ஒரு கதையை நான் யோசித்தேன். அதை எழுதி வைத்தேன், பிறகு உரக்கப் படித்துக் காட்டினேன். “ப்பா.,” நான் அழைத்தேன், “இது எப்படி இருக்கு? இந்த மாதிரிதான் வேணும்னு சொல்றீங்களா?”

என் காலத்தில் அங்கு ஒரு பெண் இருந்தாள், அவளுக்கு ஒரு மகன் இருந்தான். மான்ஹாட்டனில் ஒரு சிறு அடுக்ககத்தில், அவர்கள் நல்லபடியாக வாழ்ந்தார்கள். அந்தப் பையன் பதினைந்து வயதாகிற போது போதையடிமை ஆனான், அதொன்றும் எங்கள் பேட்டையில் புதிதில்லை. அவனோடு தன் நெருக்கத்தைத் தொடர வைத்துக் கொள்வதற்காக, அவளும் ஒரு போதையடிமை ஆனாள். அது இளைஞரின் பண்பாட்டில் ஒரு பகுதி என்றும், அதில் தான் முழுதுமே இயல்பாக உணர்வதாகவும் அவள் சொன்னாள். சில காலம் கழிந்த பின், பல காரணங்களால், அந்தப் பையன் போதைப் பொருட்களை முழுதுமாகக் கை விட்டு விட்டு, நகரத்தையும், அம்மாவையும் விட்டு விட்டு அருவருப்போடு போய் விட்டான். நம்பிக்கையற்றுப் போய், தனியளாக அவள் சோகத்தில் ஆழ்ந்தாள். நாங்களெல்லாம் அவளைப் போய்ப் பார்த்து வருகிறோம்.

சரி, அப்பா, அவ்வளவுதான் அது,” நான் சொன்னேன், “அலங்காரமேதும் இல்லாத, பரிதாபமான கதை.

ஆனா, நான் கேட்டதுக்கு அதொண்ணும் அர்த்தமில்லை,” என்றார் அப்பா. “நீ வேணுமுன்னே நான் சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுகிட்டிருக்கே.  அதுல வேற எவ்வளவோ நிறைய இருக்குன்னு உனக்குத் தெரியும். உனக்கே தெரியும். நீ எல்லாத்தையும் எழுதாம விட்டிருக்கே. துர்கேனெவ் இப்படிச் செய்திருக்க மாட்டார். செகாவ் இப்படிச் செய்திருக்க மாட்டார். சொல்லப் போனால், நீ கேள்விப்பட்டிராத ரஷ்ய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது, வேறெவருக்கும் ஈடான திறமைசாலிகள், ஒரு எளிமையான சாதாரணமான கதையை எழுத வல்லவர்கள், அவர்கள் யாரும் நீ விட்டிருக்கிறதை எல்லாம் விட்டிருக்க மாட்டார்கள். நான் எதிர்ப்பு தெரிவிப்பது நிஜத் தகவல்களுக்கு அல்ல, ஆனால் மரங்களில் உட்கார்ந்திருக்கிற நபர்கள் அர்த்தம் புரியாதபடி பேசறத்துக்கும், எங்கேருந்து வருதுங்கறதே புரியாதபடிக்கு கேக்கற குரல்களுக்கும்தான்.”

அந்த ஒரு கதையை விடுங்கப்பா, இதில நான் என்ன விட்டிருக்கிறேனாம்? இந்தக் கதையில?”

அவள் பார்க்க எப்படி இருக்கிறாள் என்பதை, உதாரணமா.”

. ரொம்ப நல்லாவே இருப்பா, அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆமா.”

அவளோட தலைமுடி?”

கருப்பு, கனமா இருக்கற பின்னல்களோட இருக்கும், ஏதோ அவள் ஒரு இளம்பெண் மாதிரியோ இல்லை, அயல் நாட்டுக்காரி போலவோ.”

அவளோட அப்பா அம்மால்லாம் எப்படி இருந்தாங்க, அவளோட குடும்பமெல்லாம்? அவ எப்படி இந்த மாதிரி நபரா ஆனாள். உனக்குத் தெரியுமில்லியா, அதெல்லாமே சுவாரசியமானது.”

வெளியூரிலேர்ந்து வந்தாங்க. சொந்தமா வேலை பார்க்கிற, பெரிய படிப்புத்தகுதி உள்ளவங்க. இந்த மாவட்டத்திலெயெ முதல்லெ விவாகரத்து செய்தவங்க. இதெல்லாம் எப்படி? போதுமா?” நான் கேட்டேன்.

உனக்கு எல்லாமே ஒரு ஜோக்கா இருக்கு,” என்றார் அவர். “அந்தப் பையனின் அப்பாவைப் பத்தி என்ன? அவரைப் பத்தி நீ ஏன் பேசவே இல்லை? அவர் யாரு? இல்லே, அந்தப் பையன் திருமணம் நடக்காமலே பிறந்தவனா?”

ஆமா,” என்றேன்.  அவன் திருமணம் நடக்காமப் பிறந்தவன் தான்.”

கடவுளே, கடவுளே, உன் கதைகள்லெ யாருமே திருமணம் செஞ்சுக்க மாட்டாங்களா? படுக்கைல விழறத்துக்கு முன்னாடி நகரத்தோட ஆஃபிசுக்குப் போய் ஒரு பதிவு செய்துக்க அவங்க யாருக்குமே நேரம் கெடைக்காதா?”

இல்லை.” என்றேன். “நெச வாழ்க்கைல இருக்கலாம். என்னோட கதைகள்லெ கிடையாது.”

“எனக்கு நீ ஏன்  இப்படி ஒரு பதிலைச் சொல்றே?”

, அப்பா, இது நியுயார்க் நகரத்துக்கு கிளர்ச்சியோடவும், காதலோடவும், நம்பிக்கையோடவும் வந்து, இப்போதைய நடப்பைப் பத்தி எல்லாமே தெரிஞ்சுகிட்டிருக்கிற ஒரு புத்திசாலிப் பெண்ணைப் பத்தின ஒரு எளிமையான கதை, அப்றம் அவளோட மகனைப் பத்தியும், இந்த உலகத்திலெ அவளுக்கு எத்தனை கஷ்டமெல்லாம் வந்ததுங்கிறதையும் பத்தினது. திருமணமாச்சா இல்லியா, அதுக்கெல்லாம் கொஞ்சம் கூட இதில பாதிப்பு கிடையாது.”

அதுக்கு பெரிய பாதிப்பு உண்டு,” என்றார் அவர்.

.கே.,” என்றேன்.

.கே., .கே.ன்னு உனக்கே சொல்லிட்டிரு,” என்றார் அவர், “ஆனா, கேளு. அவள் பார்க்க நல்லா இருப்பான்னு நீ சொல்றப்ப அதை நான் நம்பறேன், ஆனா அவ அப்படி எல்லாம் புத்திசாலிங்கறத்தை நான் நம்பல்ல.”

அது உண்மைதான்,” என்றேன் நான். “பார்க்கப் போனா, கதைகளுக்கு இருக்கற தொல்லையே அதுதான். துவங்கும்போது மக்கள் பிரமாதமானவங்களாத்தான் இருக்காங்க. நாம நெனைப்போம், அவங்க ரொம்ப அதிசயமானவங்கன்னுட்டு, ஆனா மேலமேல வேலை நடக்க ஆரம்பிச்சப்புறம், படிப்பு இருந்தாலும், அவங்க சராசரி மனுசங்களாக மாறிடறாங்க. சில சமயம் அது மறு திசைலயும் நடக்கும், ஒரு நபர் கொஞ்சம் முட்டாளாகவும், வெகுளியாவும் ஆரம்பிப்பாங்க, ஆனா சீக்கிரமே உங்களையுமே தாண்டிப்புடுவாங்க, அப்ப போதுமான அளவு நல்ல முடிவு ஒண்ணை நம்மால யோசிக்கக் கூட முடியாது.”

நீ அப்ப என்ன செய்யறே?” அவர் கேட்டார். அவர் ஒரு மருத்துவராக இருபது ஆண்டுகள் வேலை பார்த்தவர், பிறகு ஒரு ஓவியராக சில பத்தாண்டுகள் இருந்தார், இன்னமும் விவரங்கள், தொழில் நுணுக்கம், நேர்த்தி இதிலெல்லாம் அவருக்கு ஈடுபாடு இருந்தது.

சரி, அந்தக் கதையை நீங்க கொஞ்ச நாள் கெடப்பில போட்டு வைச்சு, உங்களுக்கும் அந்தப் பிடிவாதம் பிடிக்கிற நாயகனுக்கும் இடையே ஏதாவது உடன்படிக்கை வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.”

இப்ப நீ சொல்றது புத்தி கெட்டத்தனமா இல்லியா?” அவர் கேட்டார். “மறுபடி ஆரம்பி,” அவர் சொன்னார். “இன்னக்கின்னு பாரு, நான் வெளிலெ எங்கியும் போகத் தேவை இல்ல. அந்தக் கதையை எனக்கு மறுபடி சொல்லு. இந்தத் தடவை உன்னால என்ன செய்ய முடியறதுன்னு பாரு.”

.கே.,” என்றேன். “ஆனா, அது ஒண்ணும் அஞ்சு நிமிஷ வேலை இல்லை.”  இரண்டாவது முயற்சி:

ஒரு சமயம், தெருவில் எங்களுக்கு எதிர் சாரியில், அண்டை வீட்டுக்காரியாக, ஒரு அழகான பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான், அவனை அவள் மிகவும் நேசித்தாள் ஏனெனில் அவன் பிறந்ததிலிருந்து அவனை அவளுக்குத் தெரியும் (கொழுமொழுவென்று கைக்குழந்தையாக இருந்த போதும், கட்டிக் கொள்ளும், புரண்டு மல்யுத்தம் செய்யும் வயதிலும், ஏழிலிருந்து பத்து வயது வரையும், அதற்கு முன்னும் பின்னும்). இந்தப் பையன், வாலிபத்தின் பிடியில் சிக்கத் துவங்கும் இளம்பிராயத்தில், போதையடிமையாகி விட்டான். நம்பிக்கை இழக்குமளவு அல்ல. நிஜத்தில் அவனிடம் நிறைய நம்பிக்கை எஞ்சி இருந்தது, அவன் ஒரு கருத்தியல்வாதி, பிறரை புத்திமாற்றம் செய்வதில் அவன் வெற்றி கண்டவன். அவனுடைய சுறுசுறுப்பான புத்தி சாதுரியத்தைக் கொண்டு, தன் உயர்நிலைப் பள்ளியின் பத்திரிகைக்கு அவன் பலரையும் தூண்டக் கூடிய கட்டுரைகளை எழுதினான். இன்னும் பரவலான வாசகக் கூட்டத்தையும், முக்கியமான தொடர்புகளையும் நாடிய அவன், விடா முயற்சியால் கீழ் மான்ஹாட்டன் பகுதியில் செய்திப் பத்திரிகைகளை விநியோகிக்கும் கடைகளில்! தங்கக் குதிரையே!’ என்ற ஒரு பத்திரிகையைப் புகுத்தி விட்டிருந்தான்.

அவன் குற்ற உணர்வுள்ளவனாக உணர்வதைத் தவிர்க்கவும், (ஏனெனில் அமெரிக்காவில் மருத்துவர்களால் கண்டு பிடிக்கப்பட்ட புற்று நோய்க்காரர்களில் பத்தில் ஒன்பது பேர்களின் மனதுகளில் கல்லாக இருப்பதாகக் குற்ற உணர்வுதான் சுட்டப்படுகிறது என்று அவள் சொன்னாள்), கெட்ட பழக்கங்களோடு புழங்க வீட்டிலேயே இடத்தைக் கொடுத்தால்தான் அவற்றின் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள முடியும் என்று அவள் எப்போதுமே நம்பியிருந்ததாலும், அவளும் ஒரு போதையடிமை ஆனாள். சிறிது நாட்களுக்கு அவளுடைய சமையலறை பிரசித்தமானதாக இருந்ததுதாம் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்து வைத்திருந்த அறிவுஜீவிப் போதையடிமைகளுக்கு அது ஒரு மையமாக இருந்தது.  ஒரு சிலர் கோல்ரிட்ஜைப் போல தாம் கலைஞர்கள் என்று உணர்ந்தார்கள், மற்றவர்கள் லியரியைப் போலத் தாம் அறிவியலாளர்களென்றும், புரட்சிவாதிகளென்றும் உணர்ந்தார்கள். அவளே அனேக நேரம் போதையின் பிடியில் இருந்த போதும், தாயாக இருக்கச் செய்யும் சில உந்துதல்கள் எஞ்சி இருந்ததால், அவள்  எப்போதும் ஆரஞ்சுச்சாறும், தேனும், பாலும், வைடமின் மாத்திரைகளும் இருக்குமாறு பார்த்துக் கொண்டாள். ஆனாலும், அவள் ஒருபோதும் சில்லியைத் தவிர வேறெதையும் சமைத்ததில்லை, அது கூட வாரம் ஒரு தடவைக்கு மேல் இல்லை. நாங்கள் அண்டை வீட்டுக்காரக் கரிசனத்தோடு அவளிடம் பேசியபோது, அவள் இதை விளக்கினாள், அது இளைஞர் பண்பாட்டில் அவளுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டும் பங்கெடுப்பு, மேலும் அவள் தன் தலைமுறையினரோடு இருப்பதை விட, இளைஞர்களோடு இருப்பதையே மேலாகக் கருதினாள் ஏனெனில் அது கௌரவமான ஒரு செயல்.

ஒரு வாரம், அந்தோனியானியின் திரைப்படம் ஒன்றை அரைத்தூக்கத்தில் கடந்து கொண்டிருந்த போது, இந்தப் பையன் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த, கண்டிப்பு மிக்க, மன மாற்றத்தை வேண்டிக் கொள்கைப் பிரச்சாரம் செய்ய வல்ல ஒரு பெண்ணின் முழங்கையால் பலமாக இடிக்கப்பட்டான். அவள் உடனடியாக ஏப்ரிகாட் பழங்களையும், பருப்புகளையும் அவனுக்குப் போதுமான சர்க்கரை அளவு கிட்டுவதற்காகத் தர முன்வந்தாள், அவனிடம் கூர்மையான சொற்களோடு பேசினாள், அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனாள்.

அவனையும், அவனுடைய வேலைகளையும் பற்றி அவள் கேட்டிருந்தாள், மேலும் அவளே பதிப்பாசிரியராக இருந்து, எழுதவும் செய்து ஒரு போட்டிச் சஞ்சிகையைப் பிரசுரித்து வந்தாள், அதன் பெயர்மான் டஸ் லிவ் பை ப்ரெட் அலோன்’ *. அவளுடைய தொடர்ந்த சகவாசத்தில் கிட்டிய அங்க உஷ்ணத்தால் அவனுக்குத் தன் தசைகள், ரத்த நாளங்கள், மேலும் நரம்புத் தொடர்புகள் ஆகியனவற்றின் மீது கவனம் கூடுவதைத் தவிர்க்கவியலவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் அவற்றை விரும்பத் துவங்கினான், பெரிதும் மதிக்கவாரம்பித்தான், மான் டஸ் லிவ்..வில் சிரிப்பூட்டும் சிறு பாடல்கள் மூலம் அவற்றைப் புகழவும் துவங்கினான்.

உன்னதமான என் ஆன்மாவையும் கடந்து

போகின்றன என் தசையின் விரல்கள்

என் தோள்களின் இறுக்கம் தீர்ந்து

என்னை முழுமையாக்குகின்றன என் பற்கள்.

தன் தலையிலிருந்த வாய்க்கு (அந்த மனோபலத்தின், தீர்மானத்தின் மகிமைதான் என்ன) அவன் கடினமான ஆப்பிள்களையும், பருப்புகளையும், கோதுமையின் முளைகளையும், சோயா பருப்பின் எண்ணெயையும் கொணர்ந்தான். தன் முன்னாள் நண்பர்களிடம் சொன்னான், இனிமேல், நான் என் புத்தியைக் கட்டிக் காக்கப் போகிறேன், நான் இயற்கையோடு போகிறேன். ஆழ்ந்து மூச்சுவிடும் ஆன்மீகப் பயணத்தைத் துவங்கப் போவதாகச் சொன்னான். நீங்களும் வரலாமே அம்மா? அவன் அன்புடன் கேட்டான்.

அவனுடைய மாறுதல் அப்படி ஒளி வீசுவதாக, அற்புதமாக இருந்ததால், வட்டாரத்திலிருந்த அவன் வயது இளைஞர்கள் அவன் ஒரு போதும் போதை அடிமையாக இருந்ததே இல்லை என்றும், அந்தக் கதையை மோப்பம் பிடித்துத் தெரிந்து கொள்ள முயன்ற பத்திரிகையாளனாகத்தான் இருந்தான் என்றும் சொல்லவாரம்பித்தனர். அந்த அம்மா பழக்கத்தை விட்டு விடப் பல முறை முயன்றாள், துணை கொடுக்க  மகனும் அவன் நண்பர்களும் இல்லாமல், அது ஒரு தனிமையைக் கூட்டும் பழக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அப்படி முயன்றது கட்டுப்படியாகுமளவுக்கு அந்தப் பழக்கத்தைக் கொண்டு வந்தது. அந்தப் பெண்ணும், மகனும், தங்கள் பிரதி எடுக்கும் மிமியோ எந்திரத்தை எடுத்துக் கொண்டு, இன்னொரு வட்டாரத்தின் செடிகொடிகள் அடர்ந்த பகுதிக்குக் குடி போனார்கள். அவர்கள் மிகக் கண்டிப்பாக இருந்தனர். அவள் போதை மருந்துகள் இல்லாமல் குறைந்தது அறுபது நாட்களாவது இருந்தால்தான் அவளைத் தாம் வந்து பார்ப்போம் என்று சொல்லி விட்டனர்.

மாலையில் வீட்டில் தனியாக இருந்தபடி, அழுதுகொண்டு, அந்த அம்மா! தங்கக் குதிரையே!’ பத்திரிகையின் ஏழு இதழ்களை மறுபடி மறுபடி படித்த வண்ணம் இருந்தாள். அவை எப்போதும்போலவே உண்மையானவையாகவே இருந்ததாக அவளுக்குப் பட்டது. நாங்கள் அவ்வப்போது தெருவைக் குறுக்கே கடந்து அவளைப் பார்க்கப் போனோம், தேற்ற முயன்றோம். ஆனால் நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த, அல்லது மருத்துவ மனையில் இருந்த அல்லது ஏதும் செய்ய மனமில்லாமல் வீட்டோடு வந்து விட்ட எங்கள் குழந்தைகளைப் பற்றி ஏதாவது சொன்னால், அவள்என் குழந்தையே! என் குழந்தையே!’ என்று குரலெழுப்புவாள், முகமெல்லாம் தழும்பாக்கும், நேரத்தை எல்லாம் சாப்பிட்டு விடும் மோசமான கண்ணீரைப் பெருக்க ஆரம்பிப்பாள். அதுதான் முடிவு.

முதலில் என் அப்பா மௌனமாக இருந்தார், பிறகு அவர் சொன்னார், ‘முதலாவது: உனக்கு அருமையான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. இரண்டாவது: உன்னால் ஒரு எளிமையான கதை சொல்ல முடிகிறது என்பதை நான் பார்க்கிறேன். ஆகவே, நேரத்தை வீணடிக்காதே.” பிறகு அவர் சோகத்தோடு சொன்னார், “மூன்றாவது: இப்ப நான் என்ன நினைக்கணும்னா, அவனோட அம்மா, அவள் தனியாவே கிடக்கிறாள், அவள் அப்படியே விடப்பட்டு விட்டாள். தனியாவே. ஒருவேளை நோயாளியாகவுமா?”

நான் சொன்னேன், “ஆமாம்.”

பாவமான ஸ்த்ரீ. பாவமான பொண்ணாக முட்டாள்களின் காலத்தில் பிறந்து, முட்டாள்கள் நடுவே வாழ நேர்ந்து போச்சு அவளுக்கு. அது முடிவு. அதுதான் முடிவு. அதை நீ எழுதினது சரிதான். முடிஞ்சு போச்சு.”

நான் வாதம் செய்ய விரும்பவில்லை, ஆனால் எனக்கு இதைச் சொல்ல வேண்டி இருந்தது, “சரிதான், ஆனா அவசியமா அதான் முடிவா இருக்கணும்னு ஏதும் இல்லைப்பா.”

ஆமாம்,” அவர் சொன்னார், “என்னவொரு சோகக் கதை. ஒரு நபரின் முடிவு.”

இல்லே, அப்பா,” நான் இறைஞ்சினேன். “அப்படி ஆக வேண்டியதில்லை. அவளுக்கு நாப்பதுதான் வயசு. நாளாக ஆக, இந்த உலகத்தில அவ இன்னும் பலவேறு, நூறு விதமானவளாக ஆக முடியும். ஒரு ஆசிரியராகவோ, சமூக சேவை செய்கிறவளாகவோ (ஆகலாம்). ஒரு முன்னாள் போதையடிமை! அப்படிங்கறது படிச்சு வாங்கற முதுகலைப் பட்டத்தை விட மேலான தகுதி.”

ஜோக்குகள்,” அவர் சொன்னார். “ஒரு எழுத்தாளரா அதுதான் உன்னோட முக்கியமான பிரச்சினை. அதை நீ ஒத்துக்கத் தயாரா இல்லெ. சோகக்கதை! எளிமையான சோகக்கதை! வரலாற்றுச் சோகக் கதை! நம்பிக்கையே இல்லை. அது முடிவு.”

, அப்பா,” நான் சொன்னேன், “அவள் மாறலாமே.”

உன்னோட வாழ்க்கைல கூட, நீ அதோட முகத்தை நேராகப் பார்க்கணும்.” அவர் இரண்டு மூன்று நைட்ரோக்ளிசரைன் மாத்திரைகளைச் சாப்பிட்டார்.  ஐந்துக்குத் திருப்பு,” ஆக்சிஜன் டாங்கின் டயலைக் காட்டிச் சொன்னார். அந்தக் குழாய்களை மூக்குக்குள் நுழைத்துக் கொண்டு ஆழமாக மூச்சு இழுத்து விட்டார். தன் கண்களை மூடிக் கொண்டபடி சொன்னார், “முடியாது.”

நான் குடும்பத்தினருக்கு உறுதி கொடுத்திருந்தேன், வாக்குவாதத்தில் அவரையே கடைசியில் முடிக்க விடுவேன் என்று, ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வேறு விதமான பொறுப்பு இருந்தது. அந்தப் பெண்மணி தெருவில் நேரெதிரே வசிப்பவள். அவள் எனக்குத் தெரிந்தவள், மேலும் என் கற்பனை வடிவு. அவளுக்காக நான் வருத்தப்பட்டேன். அந்த வீட்டில் அவளை அழுது கொண்டிருக்க நான் விடப் போவதில்லை. (சொல்லப் போனால், வாழ்க்கையும் அப்படி விடாது, என்னைப் போல அல்லாமல் அதற்குச் சிறிதும் கருணை கிடையாது.)

ஆகவே: அவள் மாறவே செய்தாள். (நாம்) நினைத்தபடியே அவளுடைய மகன் வீட்டுக்குத் திரும்ப வரவே இல்லைதான். ஆனால் இப்போதைக்கு, அவள் ஈஸ்ட் வில்லேஜில் உள்ள ஒரு சமுதாய மருத்துவமனையின் கடை முகப்பில் வரவேற்பாளராக இருக்கிறாள். அங்கே வருகிற வாடிக்கைக்காரர்களில் அனேகர் இளம்பிராயத்தினர், சிலர் முன்னாள் நண்பர்கள். தலைமை மருத்துவர் அவளிடம் சொல்லி இருக்கிறார், “உங்களை மாதிரி அனுபவசாலிங்க இன்னும் மூணு பேர் எப்படியாவது நம்ம க்ளினிக்குக் கிடைச்சா….”

அந்த டாக்டர் அப்படிச் சொன்னாரா?” என் அப்பா ஆக்சிஜன் குழாய்களை மூக்கிலிருந்து எடுத்து விட்டார், அப்புறம் சொன்னார், “ஜோக்குகள். மறுபடியும் ஜோக்குகள்.”

இல்லை, அப்பா, அது நிசம்மாவே நடக்கலாமில்லியா, இப்பல்லாம் உலகம் ரொம்ப கிறுக்காத்தான் இருக்கு.”

கிடையாது,” அவர் சொன்னார். “முதல்ல உண்மை. அவள் மறுபடி பழைய பழக்கத்துலேயே சரிந்து விழுவாள். ஒரு நபர்னு சொன்னா, குணம் இருக்கணும். அவளுக்குக் கிடையாது.”

இல்லைப்பா.” நான் சொன்னேன். “அதேதான் இருக்கணும். அவளுக்கு ஒரு வேலை கிடச்சிருக்கு, அந்தக் கடை முகப்பிலெ அவள் வேலை செய்கிறாள்.”

எத்தனை நாள் அது தாங்கும்?” அவர் கேட்டார். “சோகக்கதை! நீயும்தான். எப்பத்தான் அதோட முகத்தை நேராப் பார்க்கப் போறே?”

***

*மனிதன் உணவால் மட்டுமே வாழ்கிறான்.

###            ###

[இங்கிலிஷ் மூலம்: Grace Paley: ‘A Conversation with my Father’. [ அவருடைய சிறுகதைத் தொகுப்பிலிருந்து. தொகுப்பின் பெயர்: Enormous Changes At The Last Minute. ] இந்தக் கதை மேற்படி புத்தகத்தின் பதினைந்தாம் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. முதலில் பிரசுரமான வருடம் 1960. இந்தப் பதிப்பு வருடம் 1986. பிரசுரகர்த்தர்:Farrar, Straus, Giroux, New York.

இந்தக் கதையின் சிறிது மாறுபட்ட வடிவம் முதலில் பிரசுரமானது ஒரு பத்திரிகையில். அது நியு அமெரிக்கன் ரெவ்யு என்கிற பத்திரிகை. ]

தமிழாக்கம்: மைத்ரேயன்/ 30 மே, 2017.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.