ரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்

2014 லிருந்து 15 வரை பெங்களூரில் பணிபுரிந்தேன். குடும்பம் சென்னையில் வசித்து வந்தது. வார இறுதியில், நண்பர்களுடன், பெங்களூரில் இருந்து சென்னை வரை சாலைப் பயணம். வெள்ளி மாலை 5 மணிக்குப் புறப்படும் போதே எல்லோர் மனதிலும் ஒரு பிரார்த்தனை உண்டு. சாலை நெரிசலின்றி ஹோஸூரைக் கடந்து விட வேண்டும் இறைவா என்பதே அது. ஏனெனில், இரவு 8 லிருந்து 8:30 க்குள் இரவுணவுக்கு ஆம்பூரை அடைந்து விட வேண்டும் என்பதே அந்நாளின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி, யாமறிந்த பிரியாணி வகைகளிலே வகை பிரியாணி. ஆம்பூர் நகரைத் தாண்டும் போதே நாவின் சுவை மொட்டுக்கள் பீரிடத்துவங்கி விடும். மிகத் தீவிரமாகப் போக்குவரத்தை சமாளித்து, சாலையின் வலதுபுறம் உள்ள உணவகத்தை எட்டும் வரை மூளை மிகக் கூர்மையாக இருக்கும். நொடி தவறினால், விபத்து நேரிடக் கூடும் நெடுஞ்சாலை. உணவகத்தின் முதல் மாடிக் குளிரறையில் அமர்ந்தவுடன் புலன்கள் விழித்தெழுந்து மூளையை நிறுத்திவிடும். ஊனும் நெய்யும் மென் மசாலாக்களும் மகிழ்ந்து குலாவிக் கொண்டிருக்கும் மட்டன் பிரியாணியும், சிக்கன் வறுவலும் மேசையில் வந்தமர்ந்தவுடன் பெரும்பரவசம் மனதை ஆட்கொள்ளத் துவங்கும். பின்னர், கைப்பிசுக்கைக் கழுவிக் கொண்டிருக்கும் போதுதான் தன்ணுணர்வு திரும்பும். என் கடன் உண்பது மட்டுமே என்னும் நிலை.

கடந்த 8 ஆண்டுகளில், 6 ஆண்டுகள், பொருள் வயின், மனைவி மக்களைப் பிரிந்து வாழ்கிறேன். நோயின்றி உயிர்வாழும் வழிக்கு, விஜி எனக்கு, காதலையும், அடிப்படை சமையலையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சாம்பாரும், கோழிக்கறியும் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.  இதுவரை 500-600 நாட்கள் சமைத்திருப்பேன். சில பத்து முறைகள் உணவு ஆக்குதல் பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.. பெரும்பாலும் சனிக்கிழமை மாலைகள்.  உடற்பயிற்சி முடிந்து, கடற்கரை ஈரப்பதத்தில் உடல் வியர்வை மேலெழும்பி மணக்கும். பிண்ணணியில் ராஜா ஸாரின் பாடல்கள் ஒலிக்கும்.  காய்கறிகளும், இறைச்சியும் நறுக்கப்படும் போதே தெரிந்துவிடும் – இன்று நல்ல நாள் என. மசாலாக்களும், உப்பும் சரியாகச் சேரும் போது அவ்வெண்ணம் உறுதிப்படும். குளிர்பதனப் பெட்டியைத் திறந்த, பச்சை நிற ஹெனிக்கன் பியர் (இந்நிறத்துக்குப் பாட்டில் க்ரீன் என்றே பெயர் உண்டு), பனிக்கட்டிக் கூண்டுக்குள் போட்டுவிட்டு, குழம்பைக் கொதிக்க விட்டு, குளிக்கச் செல்வேன். குளித்து வந்து பனிக்கட்டிக் கூண்டைத் திறந்து, பியர் பாட்டிலை எடுத்து மேடையில் வைத்து விட்டு, அடுப்பை அணைத்து விட்டு, பிரார்த்தனைக்குச் செல்வேன். பாட்டிலின் மேற்பரப்பில், குளிர் நீர் மொட்டுக்கள் பூக்கத் துவங்கும். இந்த சாங்கியத்தில், ஒன்று முறை தவறினாலும், பிசிறிவிடும். அன்னையின் புகைப்படத்தின் முன் நின்று சில நிமிட அமைதிக்குப் பின் திருநீறு பூசிக் கொள்வேன். பாட்டில் திறக்கப்பட்டு, பியர் கிளாஸில் ஊற்றப்படும்; கறி, பீங்கான் கோப்பையில். பியரின் முதல் மடக்கு, கறியின் முதல் துண்டு என வார இறுதியின் மாலை, முடிவு அபாரமாகத் துவங்கும். இங்கு, சமைத்தல், உண்ணல் என இரண்டுமே பரவசம் தரும் நிகழ்வுகள்.

விஷால் பரத்வாஜின் படம் பார்க்கும் அனுபவங்கள் அவ்வாறே இருக்கின்றன. நம் கண் முன்னே அவர் படம் எடுத்து, நமக்குப் பார்க்கத் தருவது போன்ற ஒரு உணர்வு. நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமல்ல.. இந்தப் படக்காட்சிகளை உருவாக்குவதில் உடன் உழைக்கும் இணை மனிதர்கள் என்ற உணர்வு. இது ஒருவேளை உள மயக்கோ எனவும் ஐயம் வருகிறது.

இவர் தில்லிக்கருகில் உள்ள பிஜ்னோர் என்னும் சிறு நகரத்தில் பிறந்தவர். அடிப்படையில், ஒரு இசையமைப்பாளர். இதுவரை 44 படங்களில் பணிபுரிந்திருக்கிறார். 10 படங்களை இயக்கியிருக்கிறார். இவர் பணிபுரிந்த படங்கள் 7 தேசிய விருதுகள் வாங்கியுள்ளன.

2014 ஆம் ஆண்டு வந்த ஹைதர் இவரின் படைப்புக்களில் உச்சம் எனச் சொல்லலாம். இவரின் மூன்று படங்கள், ஷேக்ஸ்பியரின் படைப்புக்களைத் தழுவியவை.  ஓம்காரா (ஒத்தேல்லோ), மக்பூல் (மக்பெத்) மற்றும் ஹைதர் (ஹாம்லெட்).  இது தவிர, கமீனே, இஷ்க்கியா என்று குறிப்பிடத்தக்க படங்களும் உண்டு. பள்ளியில் ஷேக்ஸ்பியரை முறையாகப் பயின்ற மகள் மதுரா குறியீடுகளைச் சுட்டி விளக்க, குடும்பத்துடன் பார்த்த ஹைதரும், மக்பூலும் மறக்க முடியாதவை.

மக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம்.  வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள்.  அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்..  வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.

தாதாவின் இளம்மனைவிக்கும், அவளின் காதலனுக்கும் நெருக்கம் பெரிதாகத் துவங்கும் கணம் ஒலிக்கத் துவங்கும் ஒரு சூஃபி பாடல் ஒரு அருமையான பிண்ணனி.

பின்னர் மக்பூல் பைத்தியம் பிடித்து மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் பின்னிரவில்,

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம்

எனப் படைப்பினுள் கணியன் பூங்குன்றனைக் கண்டுகொண்டேன்

ஹைதர் அவரின் அடுத்த முக்கியமான படம். ஹாம்லெட்டின் அடிப்படையில், கஷ்மீரப் பிரச்சினைகளின் அனைத்துத் தரப்பின் குரலையும் ஒலிக்க வைத்த மிக நேர்மையான முயற்சி.  கஷ்மீரி பண்டிதர்கள், நடுநிலையாளர்கள், பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள், ஊழல் மிகு ஆட்சியர்கள், ராணுவம், அதனின் மக்கட்தன்மையற்ற முகம், அரசியல் வாதி, தகாத உறவு, மகன் தாயின் மேல் கொள்ளும் மோகம், அவன் காதல் எனப் பலவற்றையும் ஊடும் பாவுமாக நெய்த அற்புதமான திரைக்கதை (தேசிய விருது பெற்றது).

தனது தந்தையைத் தேடி, அவன் மேற்கொள்ளும் பயணத்தின் இறுதியில், தந்தையின் மரணத்துக்குத் தாயின் காதலன் காரணம் என அறிந்து, கொஞ்சம் மனநிலை தடுமாறிக் குழம்பி நிற்கும் கஷ்மீர் இளைஞனாக, மிக அற்புதமாக நடித்திருப்பார் ஷாஹித் கபூர். தனது நிலைக்குக் காரணம் என்ன எனகுழம்பி, ஸ்ரீநகரின் லால் சௌக்கில் நின்று அவர் பேசும்காட்சி  அந்தப் படத்தின் உச்சக்காட்சி எனப் பலராலும் சொல்லப்படுகிறது.

பலவிதமான குறியீடுகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட படத்தின் இறுதி பெரும் வன்முறையில் முடிகிறது. கஷ்மீரின் உண்மை நிலை இது. யார் சரி, யார் தவறு என்பதை விட, அதில் பணயமாக மக்கள் வைக்கப்பட்டு நடக்கும் அழிவை மிகவும் அழுத்தமாகச் சொன்னது.

அவரது தற்போதைய படம் – ரங்கூன். இரண்டாம் உலகப்போரின் இறுதிக்காலத்தில் வடகிழக்கில் நடந்த நேதாஜியின் ஐ,என்.ஏ உடனான யுத்தம் இதன் பேக்ட்ராப். இப்படத்தினை, பரத்வாஜ், நேத்தாஜிக்கு சமர்ப்பித்திருக்கிறார்.

இதில் நடித்த நால்வரைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதலில் படத்தின் நாயகர் – கங்கனா ரணாவத். மூன்று தேசிய விருதுகள் பெற்ற மிகப் பெரும் கலைஞர். பாலிவுட்டில் நடக்கும் பல பிரச்சினைகளினூடே வெளிப்படும் மிக அற்புதமான ஆளுமை. ராட்ஸசி.

ஒரு நாடோடிக் குழுவில், கழைக்கூத்தாடும் பெண்ணாக இருந்து, ருஸி பில்லிமோரியா என்னும் பார்ஸி திரைக்கதை நாயகனால் (சைஃப் அலி கான்), 1000 ரூபாய்க்கு விலைக்கும்வாங்கப்பட்டு,  ஜூலியா என்று பெயரிடப்பட்டு, அந்தக் கால மிகப்பெரும் ஆக்‌ஷன் நாயகி ஜூலியாக வலம் வருகிறார். (அசோகமித்திரனின் மின்னல் கொடி பற்றிய குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன)

இரண்டாவது, சைஃப் அலி கான். ருஸி என்னும் இந்தி சினிமா நடிகன். ஜூலியா மீது அளவற்ற காதல் கொண்டு தன் மனைவியை விட்டு விலகி வருபவன். தந்தை பெரும் தயாரிப்பாளர்.  தன் காதலி, இன்னொருவனோடு உறவு கொள்கிறாள் எனத் தெரிந்து பொருமும் மனிதன். பெரும் வியாபாரி.

மூன்றாவது, ஷாகித் கபூர். நவாப் மல்லீக் என்னும் குறு ராணுவ அதிகாரி. பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிபவர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ரகசிய ஒற்றர். ஒரு ஆபத்தில் இருந்து ஜூலியாவைக் காப்பாற்றும் இவருக்கும், ஜூலியாவுக்கும் மலரும் காதலும், இந்திய தேசிய ராணுவக் கடமையும் மோதும் நிகழ் களம் தான் படம்.

நான்காவது, ரிச்சர்ட் மெக்பே என்னும் ஆங்கில நடிகர். படத்தில் ராணுவ ஜெனரல். இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியதில் தான் விஷால் என்னும் பெரும் கலைஞர் வெளிப்படுகிறார். மேஜர் ஜெனரல் டேவிட் ஹார்டிங் – உருதுக் கவிதைகள் சொல்லும், மிக நன்றாக இந்துஸ்தானி பேசும், தேவைப்படும் போது – ஒயிட் இஸ் ரைட் என உண்மை முகம் காண்பிக்கும் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல். வழக்கமாக, நமது படங்களுக்கு வெள்ளைக்காரர்கள் தேவைப்படும் போது, நம்மூர் செட் ப்ராப்பர்ட்டி ஒருவர் இருக்கிறார்.. டாம் ஆல்டர்.. வெகு சாதாரண வெள்ளைத்தோல் நடிகர்.. அவரும் வந்து, “டொரே.. டாமீல் பேஸ்து” என்னும் அளவுக்கு இந்திய மொழி பேசிச் செல்வார்.. ஆனால், இந்தியர்களை மேலாதிக்கம் செய்ய அவர்கள் மொழியை ஒருவன் கவிதைகள் சொல்லும் அளவுக்கு பயின்ற ஒரு தொழில்முறை ராணுவ அதிகாரி என்பது மிக நல்ல உருவாக்கம். ரிச்சர்ட் மெக்பே, ராயல் அக்காடமி ஆஃப் ட்ராமா அண்ட் ஆர்ட்ஸ் ல் பயின்றவர். ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் இணைக் கலைஞர். ப்ராட்வே நாடகங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர்.

விஷால் பரத்வாஜின் படங்களின் மிக முக்கியமான பாகமாக நான் கருதுவது, அவரின் கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் மற்றும் மாபெரும் நாடகீயத் தருணங்கள். கிட்டத்தட்ட ஒரு மியுசிக்கல் ஓபெரா எனச் சொல்லலாம். மேற்கத்திய களாசிக்கல் இசை போல,  மிகப் பெரும் உச்சங்கள் கொண்ட காட்சிகள் இருக்கும் – grandeur / splendor எனச் சொல்லக் கூடிய காட்சிகள்.. அதைத் தொடர்ந்து மிக அமைதியான, உடல் மொழி வெளிப்படும் நுட்பமான காட்சிகள் வரும். பாலு மகேந்திரா போன்ற பெரும் ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்களான போது, அது படங்களின் காட்சியமைப்பில் நவீனத்தைக் கொண்டு வந்தது. விஷால் என்னும் இசையமைப்பாளர், இயக்குநரான போது, காட்சிகளில் இசையைக் கொண்டு வந்திருக்கிறார் எனத் தோன்றுகிறது.

சில காட்சிகளைச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. காதல் வயப்படும் நவாப் மல்லிக்கும், ஜூலியாவும், ஒரு தொங்கு பாலத்தைக் கடக்கும் காட்சியில் ப்ரம்மபுத்ரா வெளிர் பச்சை நிறத்தில், காடுகள் பச்சையில், மலரும் இசையின் பிண்ணனியில் வருகிறது.  சில நாட்களுக்குப் பின்னால், அவர்கள் ப்ரம்ம புத்ராவின் நதிக்கரை மணலில் கலவியில் இருக்கும் போது, ப்ரம்மபுத்திரா கருமையாக, அமைதியாக, வெளியில் தெரியாத வேகத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது. மல்லிக்கின் மார்பில் புதைந்து, புடைத்தெழும் ஜுலியாவின் முலைகள்.. கலவியின் சூட்டில் கொதித்து உடலெங்கும் வேர்வைத் துளிகள் துளிர்த்த ஜூலியாவின் உடல்.. மல்லிக்கின் மீசை கொண்ட மேலுதட்டைக் கவ்வும் ஜூலியாவின் உதடுகள்.. ஜுலியாவின் கழுத்து மருவில் முத்தமிடும் மல்லிக் – மயிரிழையில் நூற்றிலொரு பாகம் தவறினாலும், விரசமாகி விடும் காட்சி, ஒரு கம்பி மேல் நடக்கும் வித்தை போலப் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியில், கங்கனாவும் ஷாஹித்தும் காட்சியில் மணலைப் போல், நதியைப் போல் இருக்கிறார்கள்.

இன்னொரு காட்சியில், ஜூலியாவைக் காப்பாற்றியதற்காக, மேஜர் ஜெனரல் முன்பு, நவாப் மல்லிக் அழைக்கப்படுகிறார். அவருக்கு ருஸி நன்றி சொல்லிக் கைகொடுக்க, அருகில் இருக்கும் ஜூலியாவும் கை கொடுக்கிறார். அவர்களின் கைகள் இணைவதைக் காமிரா கூர்மையாகப் படம்பிடிக்கிறது. பிண்ணனியில், மங்கலாக ருஸி. ஆனால், அவர்கள் கைகள் தேவைக்கதிகமாகச் சில விநாடிகள் இணைந்திருக்கின்றன. அதைக் கவனிக்கும் ருஸியின் கண்கள் சுருங்கத் துவங்கும் தருணம், காமிரா பின்னகர்ந்து, ருஸியின் கண்கள் சுருங்குவதைத் தெளிவாகக் காட்டுகிறது. மின்னலைப் பிடித்து, சீஸாவில் அடைக்கும் வித்தை.

பிறிதொரு காட்சியில், ருஸி. மேஜர் ஜெனரல் ஹார்டிங், ஜூலியா மற்றும் நவாப் மல்லிக் தங்கியிருக்கும் ராணுவ முகாம் தாக்கப்படப் போவதாகச் செய்தி வருகிறது. அனைவ்ரும், பாதுகாப்புக் கட்டுப்பாடு அறைக்குள் குழுமுகின்றனர். ருஸியும். ஆனால், ஜூலியாவும், நவாப் மல்லிக்கும் இல்லை. கடைசியில் ஓடி வரும் இருவரையும் கவனிக்கிறார் ருஸி. இருவரின் உடலிலும் – சேறு. இதுவரை அவர் சந்தேகப்பட்ட அவர்களின் உறவு ஊர்ஜிதமாகிறது. வெளியே யுத்தம் துவங்குகிறது. உள்ளேயும் தான். நிஜத்தைச் சீரணிக்க முடியாமல் முகம் இறுகி. கண்கள் வேதனையில் வேகின்றன. சைஃப் அலிகான் இவ்வளவு அற்புதமான நடிகர் என நேற்றுதான் கண்டு கொண்டேன். போர்க்கால ஆணைகள், உணர்வுகள் என ஒரு புறம் நெருக்கடி. தனது காதலியின் இன்னொரு உறவைப் பொறுக்க முடியாமல் இன்னொரு புறம் ஒரு தனிமனிதனின் மன நெருக்கடி. சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ராமானுஜன் அதற்கு, “poems of Love and War” எனப் பெயரிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அந்தக் காட்சி ஒரு சங்கப்பாடலேதான்.  உணர்வுகள் மேலெழும் காட்சியின் இறுதியில், எதிரி விமானம் சுட்டு வீழ்த்தப்பட, ஆங்கிலேயருக்கு வெற்றி; ருஸிக்குத் தோல்வி. பெரும் நாடகீயத் தருணம்.

படத்தின் இன்னொரு பரிமாணம் இசை. விஷால் ஒரு இசையமைப்பாளர். அவரது இசை, பாரம்பரியமான மும்பை பாலிவுட் இசை என என் அறிவுக்குத் தோன்றவில்லை. அவரின் இசைக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. இசையையும், கதைக்கேற்ப அவர் சமைக்கிறார் என்றே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, வலுக்கட்டாயமாக, ரயிலில் பயணம் செய்விக்க நிர்ப்பந்திக்கப் படும், ஜூலியாவின் மனநிலையை மாற்ற அவரின் தோழர்களின், ரயிலின் தாளக்கட்டோடு இணைந்து ஒரு பாடலைப் பாடத் துவங்குகிறார்கள்.

இந்தப் பாடலைக் கேட்டவுடன், எனக்குக் கோபுர வாசலிலே படத்தின் டைட்டில் இசை நினைவுக்கு வந்தது.  ஆம்.. ராஜா ஸாரேதான்..

அடுத்த பாடல் – ஜூலியா – fearless nadia ஆக அறிமுகமாகும் தருணம் (அசோகமித்திரனின் மின்னல் கொடி)..

கங்கனாவின் உடல் மொழியைப் பாருங்கள்.. அவர் ஜெயமோகன் சொன்ன தமிழ்ச் சினிமாவின் ச்ச்சுட்டிப்ப்ப்பெண் அல்ல..  போடா மயிராண்டி எனச் சொல்லும் ஜிப்ஸி..

இளையராஜா இசையமைப்பதை வர்ணிக்கும் ஜெயமோகன் ஒரு நாள் சொன்னார் – ஒரு பொற்கொல்லன் சிறு சிறு நகாசு வேலைகள் செய்வது போல, அவர் பாடலைச் செதுக்கிறார்.  நுட்பங்களை இசையில் சேர்க்கிறார். அந்தச் சிறு சிறு நுட்பங்கள் இணைந்து ஒரு பிரமாண்டமான ஒரு கலைப்படைப்பென உருவாகிறது என..

ரங்கூனிலும் இது போன்ற நுட்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பார்ப்பவரின் ரசனைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த நுட்பங்கள் அனைத்தும் இணைந்து, பெரும் காவியம் உருவாகியிருக்கிறதா எனில் – எனக்குத் தெரியவில்லை. ஹைதரிலும், மக்பூலிலும் கைகூடிய பெரும் கனவு இப்படத்தில் கூடவில்லையோ என்னும் சந்தேகம் ஒரு பாமர ரசிகனான எனக்கு இருக்கின்றது. இன்னும் சில பத்து முறைகள் கண்ட பின் ஒரு வேளை எனக்குப் புரியக்கூடும். அதற்கு முன், ஒரு பெரும் படைப்பை, நுண் உழைப்பை குறைத்து மதிப்பிட்டு  விடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறேன்.

விஷால் பரத்வாஜின் மிக முக்கியமான பங்களிப்பு – ஷேக்ஸ்பியரின் படைப்புக்களின் பிண்ணனியில் இந்தியக் கதைகளைச் சொன்ன அந்த மூன்று படைப்புகள். ஓம்காரா, மக்பூல் மற்றும் ஹைதர்.  அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படைப்புகள்.

விஷால் பரத்வாஜ் – உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.