மகரந்தம்

வலையில் சஞ்சாரம் செய்தால் என்னென்னவோ கிட்டும். உலகத்தின் அனைத்துக் குப்பைகளும் கிட்டும், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுப்பொருட்களும், கருதுகோள்களும், சிந்தனைகளும், இலக்கியமும் கூடக் கிட்டும்.

ஆனால் யாருக்கு அத்தனை நேரமிருக்கிறது வைக்கோல் போரில் ஊசியைத் தினம் தேட எங்கே முடியப் போகிறது. நாம் அனேகரும் வழக்கமான, பழக்கமான சில தளங்களை மட்டும் தேடிப் பார்த்து விட்டு- உலகம் இன்று காலை முடியப் போகிறதில்லை, வானம் இன்னும் உச்சி மீது இடிந்து வீழத் தயாராகி விடவில்லை, விண்கற்கள் மனித நாகரீகத்தை இன்று நாசம் செய்யப்போவதில்லை- என்றெல்லாம் ஊர்ஜிதம் செய்து கொண்டு, நம் பாட்டைப் பார்க்கப் போய் விடுகிறோம்.

சிலர் மட்டும் தொடர்ந்த உளைச்சல்களை விதைத்து, செந்நீர் ஊற்றி, கருக்கருவாள்களை அறுவடை செய்கிறார்கள். சிலர் கலாஷ்நிகாவ், க்ரனேட் லாஞ்சர்கள் போன்றனவற்றையோ, அல்லது உலகத்தின் அடுத்த உலகளாவிய  மனித இனப்படுகொலையில் எத்தனை நூறு மிலியன் பேரைக் கொல்ல முடியும் என்று சொல்லும் அற்புதக் கருத்தாக்கங்களையோ அறுவடை செய்கிறார்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு- கிண்டல். ஆனால் பல நூறாண்டுகள் முன்பு அது ஓரளவு உண்மையான நிலைமையையே வருணித்ததோ என்னவோ. அதே போல இன்று ஆயிரம் இல்லை பல்லாயிரம் பேரைக் கொல்லத் திட்டமிடும் ‘மேதைகள்’தான், வலையுலகின் நாயகர்கள். அவர்களே படிப்பதைத் தவிர மற்றெல்லாம் செய்யக் கல்லூரி வளாகங்களில் முகாமிடும் ‘இளைஞர்’களின் ஆதர்ச புருடர்களும். இந்த ஆதர்ச நாயகத்தனம் அனேகமாக எந்தப் பெண்ணுக்கும் ஏனோ கிட்டுவதில்லை. ஒருவேளை கொலை, கொள்ளை, ரத்தக் களரி எல்லாம் ஆண்களின் ஏகபோக உரிமைகளோ என்னவோ.

இத்தனை களேபரங்களுக்கிடையில் எங்கோ சிலர் அடங்கிய குரலிலோ, பிடிவாதப் பாங்கோடோ தம் உலகப் பார்வையை விரித்துப் பரப்பி அளித்த வண்ணம் இருக்கின்றனர். யாரோ ஒரு ‘புரட்சியாளர்’ சொன்னாராமே, ‘த மீக் ஷல் இன்ஹெரிட் த எர்த்’ என்று. அதைக் குறித்து யோசித்திருக்கிறவர்களுக்குத் தோன்றி இருக்கலாம். இந்த வாக்கியம்தான் என்னவொரு கனமான அர்த்தங்களை உள்ளே மறைத்திருக்கக் கூடும் என்று.

த போல்ட் (சாகசம் நிகழ்த்த சொல்லொணா உந்துதல் கொண்ட நாயகப் பிராணிகள்) ஷல் கோ டு த ஃப்ரண்ட். அதாவது எல்லாப் போர்களிலும், நெஞ்சு நிமிர்த்தித் தீரனாகச்  செல்லும் அப்பிராணிகள் முதல் கட்டக் கொலை வீச்சில் அனேகமாகக் கொல்லப்பட்டு விடுவார்கள். த மீக், அதாவது தயங்கித் தயங்கிச் செல்லும் மிச்சப் பிராணிகள் கடைசியில் என்ன எஞ்சுகிறதோ அதைத் தம்முடையதாகக் காணலாம் என்று ஓர் அர்த்தம் இதில் கொள்ள முடியும். இறுதிக் கணக்கில் திமிங்கிலம் கடலை ஆள்வது போலத் தோன்றினாலும், அதன் இருப்பே ப்ளாங்டன் போன்ற நுண்ணுயிர் பல்கிப் பெருகுவதில்தான் இருக்கிறது. ஒரு நோக்கில் ப்ளாங்டன் தான் மொத்தக் கடல் பரப்பையும் தன்னுடையதாகக் கொள்கிறது என்று கூட நாம் கருத முடியும். நண்பர் இன்று பேச்சு வாக்கில் சொன்னார், உலகைப் பூச்சிகள்தான் அடுத்த கட்டத்தில் ஆளப் போகின்றன என்றார். இன்றே கூட மனிதருக்கு எஞ்சி இருக்கப் போகிற உணவு பூச்சிகளாகத்தான் இருக்கும் என்றும் சொன்னார்.  அப்படிச் சொல்ல ஒரு காரணம், சமீபத்தில் மான்கள் மீது வாழ்கிற ஒட்டுண்ணிப் பூச்சிகள் (டிக் என்று இங்கிலிஷில் சொல்கிறார்கள்) ஒரு புது வைரஸோடு உலவுகின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறார்களாம். இந்த வைரஸ் நம்மைத் தாக்கினால் நமக்கு நிச்சய கபால மோட்சம் கிட்டும். அதாவது மூளையில் வீக்கம் ஏற்பட்டு, மரண பலன் கிட்டும். இந்த வைரஸ்ஸின் பெயர் பொவஸ்ஸான். [ஒட்டுண்ணிகளில் கூட ஆஸானுக்குத்தான் கடும் பலன் உண்டு போல் இருக்கிறது. ]

அவருடைய கருத்தில் இந்த வைரஸுக்கு எதிர்ப்பு சக்தி நம்மிடம் இல்லை, சிகிச்சையும் இல்லை, தடுப்பூசிகளும் இல்லை என்றால் இந்த வைரஸ் பரவ முடிந்தால் எக்கச்சக்கமான எண்ணிக்கையில் மனிதர்களைக் கொல்லப் போகிறது. காடுகளை அழித்து நாம் அங்கிருந்து ஏராளமான வியாதிகளை இறக்குமதி செய்யப் போகிறோம். காட்டில் ஒளிந்து கொண்டு இருந்த பூச்சிகள் இனி போக்கிடமின்றி மனிதரை வேட்டையாடப் போகின்றன. அவற்றோடு போர் புரிய நம்மால் ஆகாதென்றால், ஒரு எளிய வழி அவற்றையே உண்பதுதான் என்கிறார் நண்பர். நாம் ஏற்கனவே தேள், பூரான், கரப்பு, சிகாடா (சிள் வண்டு), ஈசல், எறும்பு, மண்புழு என்று ஏராளமான வகைப் பூச்சிகளை உண்பவர்கள்தாமே என்றேன். ஒட்டுண்ணிகளையும் உண்ண முடியுமா என்று பார்க்க வேண்டும் என்றார். அரைத்துக் கூழாக்கி பஜ்ஜி போட்டுச் சாப்பிடலாமோ?

அந்தச் செய்திக்கான சுட்டி இங்கே:

https://medicalxpress.com/news/2017-05-summer-deadly-tick-borne-disease.html

வலைச் சஞ்சாரத்தைப் பற்றி மேலே யோசித்தால் கிட்டுவது வேறு சில கருத்துகள். ஏராளமான தளங்கள் சுய வெளிப்பாட்டு உந்துதலையே மையமாகக் கொண்டிருக்கின்றன. உலகில் அத்தனை பிலியன் மக்களுக்கும் வலையில் இடம் கிட்டினால் உலகம் என்ன மாதிரித் தெரியவரும் என்று யோசித்தால், பண்டை நாகரீகத்தில் ஆதி மனிதர் ஒரு மாபெரும் கட்டடத்தைக் கட்டினார்களாம் என்று ஒரு எதிர்ப்பு எதையும் பொறுக்காத நூலில் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை பேபல்லின் கோபுரம் என்று அழைத்தனர். வான் என்பதைக் கடவுளின் இருப்பிடம் என்று மனிதரில் சிலர் கருதிய காலத்துக் கதை. பேபல்லின் கோபுரம் கடவுளரின் உலகு வரை உயர்ந்தால் தாம் தம் அந்தஸ்தை இழந்து விடுவோம் என்று கருதிய எல்லாம் வல்ல,அனைத்தும் தெரிந்த கடவுள் (காட்!!)  மனிதரின் புத்தியில் கோளாறுகளை நுழைக்கிறார். அதாவது ஒருவரொருவர் பேச்சைப் புரிந்து கொள்ளும் திறமையை மனிதர் இழந்து தம்மிடையே வேலைப் பாகுபாட்டை சுமுகமாகச் செய்து கொண்டு பகிர்ந்து உழைப்பதை இயலாததாகக் காண்கின்றனர்.

கோபுரக் கட்டுமானப் பணி நிற்கிறது. கோபுரம் சரிகிறதோடு, மனிதர் பேச்சுக்குழுக்களாகப் பிரிந்து உலகெங்கும் சிதறுகின்றனர். என்னே இந்த எல்லாம் வல்ல காட்டின் மாண்பு, அவர்தம் பெருமைதான் என்ன என்ன!

இன்று பேச்சுக் குழுக்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாகக் கூடக் கருதும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மொழிதேசியப் புரட்சியாளர்கள் வலைத் தளங்களில் உலவி இன்னும் எத்தனை மிலியன் மக்களை என்னென்ன விதங்களில் கொல்லலாம் என்று திட்டமிட வலையும் உதவுகிறது, பேபல்லின் கதையைச் சொல்லும் நூல்களும் உதவுகின்றன. மனித மனதின் விசித்திரங்களை எப்படி நாம் புரிந்து கொள்ளப் போகிறோம்.

ஆனால் பேபல்லிய உலகின் ஒரு விசித்திரம், என்னென்னவோ மொழிகளில் எல்லாம் அபாரமான இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை இன்று குன்ஸாக மொழி பெயர்த்து நமக்குப் புரிகிற ஏதோ ஒரு மொழியில் கொடுக்கும் மென்பொருட்களும் கூட உருவாகி வருகின்றன. இன்றளவில் இந்தியாவில் ‘படிப்பு’ கொஞ்சமாவது கிட்டியுள்ள மேல்தட்டு மக்களிடையே பிரபலமாக உள்ள இங்கிலிஷ் என்னும் காலனியத்தின் எச்ச சொச்சம், நமக்கு ஏராளமான இலக்கிய வாசிப்பை அண்டக் கொடுக்கிறது. அந்த வகை வாசிப்புக்கு இன்னொரு வாய்ப்பு கீழே உள்ள சுட்டியில் உள்ள தளம். இது ஒரு இலக்கியத் தளம். அதன் பெயர் கொஞ்சம் அச்சுறுத்துவதாக இருந்தாலும், அந்த அச்சமும் மேற்கண்ட பேபல்லியத்தின் நாயகரின் நஞ்சு தோய்ந்த கொடை. நாம் அந்த நாயகரை விலக்கிய மதியொளி யுகத்தின் விளைவுகளாக இருப்பதால், அதை விலக்கி, இந்தத் தளத்தில் அருஞ்சுவை ஏதும் உண்டா என்று தேடப் புகலாம் என்று அழைக்கிறோம். படித்துக் கருத்து சொல்லுங்கள்.

http://www.thewhitereview.org/fiction/

இந்தத் தளம் யாரால் நடத்தப்படுகிறது, யாரெல்லாம் எழுதுகிறார், என்ன இதன் குறிக்கோள் இதெதுவும் தெரியாமல்தான் இந்தத் தளத்தை முன்வைக்கிறோம். கிட்டியது குறித்து மறுவினை தெரிவியுங்கள். 🙂

One Reply to “மகரந்தம்”

  1. மிக சுவாரசியமான சிறுபத்திரிகைத் தளம் (thewhitereview). நுண்கலைகளுக்கான பகுதி சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. கலைகள் பற்றிய எழுத்து நம் இந்தியப் பத்திரிகைகளில் அத்தகைய உடனடித் தன்மையோடு இருக்கலாமே என்று எண்ண வைக்கிறது. பரிந்துரைக்கு மிக்க நன்றி! பரிந்துரைகளைக் கோர்த்துள்ள நடையும் மிகவும் ரசிக்கும் படியாக புத்துணர்வுடன் அமைந்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.