நந்தகுமார் கவிதைகள்

 

வீடு அல்லது கட்டம்

வெற்றிடம்
மட்டுமே பரந்த
கட்டங்கள்
தலைக்கு மேலும் கீழும்
உபரியாய்
கட்டங்களின் தலைகீழ்
தவிரவும்
முழுமையற்ற
வானவெளியெங்கும்
கட்டம் கட்டமாய் உருக்கள்
கட்டை விரலிலிருந்து
கிளர்ந்து
நிரம்பும் பெருக்கு
ஒளியும் இருளுமற்று
சாம்பல் பொதிகளாய்
கூடி ஒளிக்கிறது
அதில் எதையோ!
மறுபடியும் தூக்கமிழந்து
சொப்பனத்தில் பாதி நிழலில்
படிந்திருந்தது
மிச்சக் கட்டங்களும்.
நிரம்பிய கட்டங்களின்
ஒழுக்கு
நிரம்பக் காத்திருந்த
பிறிதொன்றிலும் சொட்டி
சமன் செய்ய முனைகிறது
வெற்றிடத்தை
அல்லது கட்டங்களை.
பாதுகாப்பாய் உணர்கிறேன்
என் கட்டத்திற்குள்
இன்னும் சமனப்படாத
அந்தத் திரவ ஒழுக்கைத்
தீண்டும் தோறும்
ஒளிக்க முயன்ற மிச்சங்கள்
மோப்பம் பிடித்து
கடந்து விரைகின்றன
எங்கேனும்
ம்! கட்டங்களில்லாத…

மலை – சொற்கள்

மௌனத்தின்
திமிர்ப்பில்
உறைந்து நிற்கின்றன
திக்கெல்லாம் நுழைந்து
சொற்கள் கூட்டி
ஒழுங்கமைத்து
வடிவம் தேடி அலைகிறேன்
பெயர்! பெயர்!
என்று கூவுகிறேன்
வார்த்தைகள் திகைத்து
ஓட்டம் பிடிக்கின்றன
மொழியின் கூனல் வலியில்
அயர்ந்து
நா வறண்டு மூர்ச்சையாயின
சொற்கள்
இனி எதைக் கொண்டு
வடிவமைக்க
இந்த வடிவை
இல்லை வடிவிலியை
நிராசையுடனும் வெறுப்புடனும்
நடைபயணத்தை தொடர்கிறேன்
எந்த அசைவுமின்றி
காத்திருக்கிறது
மௌனம்
வருகையை எதிர்நோக்கி…

தெரியவில்லை

இது
வலிக்காமல் கடிக்கிறது
இந்த மொழியும்
இதுவரை பிடிபடவில்லை
நாற்றமோ நறுமணமோ
எழவில்லை
கூக்குரலோ
இரைச்சலோ
இதுவரை இறைஞ்சி
கேட்டறியவில்லை
ருசி பேதங்களைக் கூட
மறந்து விட்டிருந்தது
கூச்சத்துடனேயே
எப்போதும் கதைக்கிறது
எந்த மொழிதலும்
வகுத்துக் கொள்ளவில்லை
அசைவுகள் வழி
உணர்த்த முயலும்பொழுதே
வழி தவறியிருந்தேன்
சங்கேதமோ
ரகசியமோ தெரியவில்லை
அப்படி ஒன்றும் விழித்து
என்னை சபிக்காது
நம்பிக்கையுண்டு
பிதுங்கிப்போன
காணாமல் போன
பொருட்களைப் பற்றித்தான்
புகார் செய்திருக்கக் கூடும் (வெறும் ஊகம் தான்)
ஏனோ
நிச்சயமாகத் தெரியவில்லை
இது ஒரு
கவிதையாக இருக்கக் கூடுமோ?

இரவு – பிரார்த்தனை

பிரார்த்தனைகளை
எங்கு
தொலைத்தேன்
அந்தரங்க நிழல்
பெரும் பிரவாகமாய்
தலைக்கு மேல்
ஓடக் கண்டேன்
ஒவ்வொரு குமிழியின்
அழுத்தமும் உடைந்து
வானம்
கண்ணாடிப்பரப்பாய்
பிரதிபலிக்கிறது
அடிவாரப் பொந்துகளில்
இரைச்சலின்
கீரிச்சிடல் பளபளத்து
முகங்களில்
அறைகின்றன
இனி இந்த இரவின்
தூய்மையை
விலக்க வழியில்லை
தனிமையின் அலகுகள்
கவ்விக் கொண்டு
விரிந்த சிறகுகளுடன்
அத்துவானத்தில்
படபடக்கின்றன
திரும்பத் திரும்ப
நினைவு படுத்த முயல்கிறேன்
கருமையின் கோடுகளில்
அது மெல்ல
கிசுகிசுத்திருக்கலாம்
எங்கோ
கற்பாறைகளுக்கடியிலோ
மணல் துகள்களுக்கிடையிலோ
சருகுகளின் அடிப்பரப்பிலோ
மினுமினுத்தலாம். தெரியவில்லை.
பூர்த்தி செய்யாத
தேவைகளின் தணுப்பு
அடிமண்டி உறைந்து கிடக்கிறது
மின்னல் வெட்டாய்
அந்த வெம்மை பாயாதோ!
மீட்டெடுத்து
காலாதீதமாய்ப் பிதற்ற
இனி நான்
எங்கு போய்த் தேட…

இரவு –கடல்

அங்கு வெளிச்சங்கள்
ருசி கெட்டிருந்தன
இருளைத் துழாவி
நீலம்
திட்டுத் திட்டாய்
படிந்திருந்தது
சாபங்களின் பெருங்கூச்சல்
கரைகளை
அடர்த்தியாய் பிய்த்தெறிந்தன
நிழல்களே இல்லை
ஒளியைத் துருவித் துருவி
அங்காங்கு
தூவ முயன்றது காற்று
பிணக்குவியல்கள் போல
அசைவின்மை அழுந்த
கண்ணாடிக்கண்களுடன்
விழித்தன
பாறைத்துண்டங்கள்
சுற்றிலும்
அன்யோன்யமின்றி
முழுக்க நிரம்பவோ
வெளித்தள்ளவோ
வழியின்றி
மீண்டும் மீண்டும்
அறைந்து கொண்டிருந்தது
காலி மதுக்குப்பி.
கவ்வியும் விடுவித்தும்
போக்கு காட்டியது
வெள்ளை நுரை
எப்பொழுது இங்கு வந்தேன்
இதுவரை
என்ன தேடிக்கிடைத்தது
என் கிழிந்த வெற்றுப்பைகளையெல்லாம்
கரைமணலிலேயே
தோண்டிப்புதைத்தேன்
இனி
பயமில்லையென்றும்
எச்சரிக்கை உணர்வோடும்
கரைவிட்டு நகர முயன்றேன்
ஒளி
தன் கூச்சம் மிகுந்த
சருமத்தைக் காட்டி
எங்கோ சிமிட்டியது
இருள்
தன் வலி துவளும்
ஏக்கத்துடன்
என் கால்களையே
ஸ்பரிசித்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.