திருத்தத் துறை

“மிஸ்டர். ஸ்மித்? உங்கள் பாதுகாக்கப் பட்ட அறை தயார்“ – வரவேற்பறையில் காத்திருக்கும் என்னிடம் நர்ஸ் சொல்கிறாள். பின்தொடருமாறு கையசைத்துவிட்டு முன் செல்கிறாள். நான் படித்துக்கொண்டிருந்த பத்திரிக்கையை சஞ்சிகை அடுக்கில் வீசிவிட்டு, இருக்கையிலிருந்து விசுக்கென்று எழுந்து என் கைப்பெட்டியை எடுத்துக் கொள்கிறேன். அறைகளாகத் தடுக்கப் பட்டிருந்த கூடத்தின் நடைப்பகுதியில் பணிவான புன்னகையை முகத்தில் படரவிட்டபடி அவள் முன்னால் செல்கிறாள், அதை ரசித்தவாறு அவள் பின் செல்கிறேன். தடுப்பறையின் ஒலி புகா அடைப்புகளையும் மீறி மெலிதாக வெளிப்படும் யாரோ ஒருவனின் கதறல் என்னைத் திடுக்கிடச் செய்கிறது.

“இப்போதுதான் முதல் தடவையாக வருகிறீர்களா இங்கே?”

“ஆம். முன்னதாக நான் அறிந்திருக்க வேண்டியவை ஏதேனும் உண்டா ?”

“மிஸ்டர். ஸ்மித், கவலைப் படாதீர்கள். எங்களின் தொழில் திறமை கொண்ட ஊழியர்கள், உங்கள் அமர்வு நன்றாகவும் அமைதியாகவும் நிறைவு பெற உதவுவார்கள்.”

என் அமர்வுக்கான அறைக்கதவை நாங்கள் நெருங்கும்போது நடைப் பகுதியின் மறு கோடியில் நிகழும் தள்ளுமுள்ளு என் கவனத்தை ஈர்க்கிறது. அங்கே மிகையுணர்ச்சியுடன் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண் மனநோயாளி பாதுகாக்கப்பட்ட அறையில் இருந்து வெளியேற்றப் படுவது தெரிகிறது. எனக்கு பயத்தில் இதயம் தொண்டைக்கு வந்து விடுகிறது.

“தொடர் குற்றவாளி; பல்வேறு அதிக பட்ச தண்டனைகள்“ – என் அறைக்கதவைத் திறந்து கொண்டிருக்கும் நர்ஸ் குறிப்புரைக்கிறாள்.

“வலிக்குமா?” – நான் கேட்கிறேன்.

“அது குற்றத்தைச் சார்ந்திருக்கும் “ என்கிறாள், ஒலித்தடுப்புக்காக வெண்ணிற அடைப்புப் பலகைகள் பொருத்தப்பட்ட அறையினுள் இட்டுச் சென்றவாறே.

“மிஸ்டர் ஸ்மித், உங்கள் மேலங்கியை கழற்றி விடலாமே?”

கழற்றி அவளிடம் கொடுத்தேன் .மடித்து முன் கையில் ஏந்தியவாறு செயலரின் வருகைக்காக காத்திருக்கிறாள் . சற்று நேரத்தில் அறைக்குள் நுழைந்த ,செயலர் என் பார்வையைத் தவிர்த்தபடி ,என் மண்டையில் கவச உணர்வியைப் பொறுத்துகிறார் பரிதவிப்பில் என் வயிறு முறுக்கிக் கொள்கிறது .

“கவசம் அதிக இறுக்கமாக இருந்தால் சொல்லுங்கள் “ என்கிறார் தலைக்கு கவச பட்டைகளை சரி செய்தவாறு

அவர் மார்பில் அணிந்திருந்த பெயர் பட்டையில் ஒரு நொடி பார்வையை ஓட்டுகிறேன் , “ நன்றாக இருக்கிறது ;நன்றி எரிக் “ என்கிறேன் . (பெயர் சொல்லி அழைத்ததால்) ஆச்சரியம் அடைந்து என் கண்களை நோக்குகிறார் .. அங்கு வருகை தரும் பலர் ,அவர் பெயரை கவனிப்பதில்லை போலும் .

“சரி , மிஸ்டர் ஸ்மித் இப்போது .நாங்கள் வெளியில் சென்று அறைக் கதவை மூடிவிடுவோம். 30 செகண்ட் கடந்த பிறகு அமர்வு தானாக ஆரம்பமாகும் “என்கிறார் செயலர் .

“புரிகிறது “ என்கிறேன்

நர்ஸ் ,செயலர் அறைக்கு வெளியே சென்றதும் கதவு தானாக பூட்டிக்கொள்கிறது. என் வாழ்வின் மிகவும் நீளமான 30 நொடிப் பொழுது துவக்கம் கொள்கிறது

30 நொடிகள் கடந்தபின் ,தலைக் கவச உணர்வி உயிர் பெறுகிறது . நான் அறையில் இல்லாமல் ,ஏதோ ஒரு Brooklyn தெருவில் நின்றுகொண்டிருப்பதாக உணர்கிறேன் . .இரவு நேரம்.முன்-பிற்பகல் மழைநீர் நடை பாதையில் ஆங்காங்கே சில குறுவட்ட வட்டங்களாக தேங்கியிருக்கிறது . மிக அருகில் , காது கிழிக்கும் அலறலுடன் ,ஒரு ஆம்புலன்ஸ் பாய்ந்து செல்கிறது . நனைந்த சிமெண்ட் , நனைந்த குப்பைகளின் சகிக்க முடியாத நாற்றம் தொண்டைக் குழியை தாக்குகிறது. திடீரென வீசிய பலமான காற்று நடுங்க வைக்கிறது. காலரை உயர்த்திக் காதுகளை மூடிக் கொள்கிறே ன் .

நடந்து, தெரு முனையைக் கடந்து ,பழைய பழுப்புக்கல் கட்டிடத்து படிகளில் ஏறுகிறேன் .ஏறும்போதே, வீட்டின் சாவியைத் தேடி எடுத்துக் கொள்கிறேன் .வீட்டின் உட்புறம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது . பொன்னிறக் கூந்தல் கொண்ட ,வளர்த்தியான நீல உடையணிந்த இளம் பெண் மாடிப்படிகளில் ஓசையில்லாமல் இறங்கி வருகிறாள். அவளைக் கண்டதும் மனதில் எழுந்த நேச அலைகளால் இதயம் சூடேறுகிறது .

“ராபர்ட், வந்து விட்டாயா ? இன்றிரவும் தாமதமாக வருவாய் என்று நினைத்தேன் “

“அதெப்படி முடியும் ?அதுவும் நம் திருமண நாளில்.”

பேசுவது நான். ஆனால் என் காதில் விழுவது என் குரல் அல்ல.. அது ராபர்ட் -ன் குரல் .

கொண்டு வந்திருந்த மலர்க்கொத்தை அவளிடம் தருகிறேன்

“ஓ ராபர்ட் டார்லிங்”

மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டு தன மெல்லிதழ்களை என் இதழ்களில் பதிக்கிறாள்.

அப்போது வாயிலில் இருந்து அழைப்பு மணி சப்தம் கேட்கிறது .

“யாராயிருக்கும் இந்த நேரத்தில் ?”-அவள் கேட்கிறாள்

கதவைத் திறக்கிறேன் .திகைப்பும் சஞ்சலமும் அடைகிறேன் . நெஞ்சு இருகுகிறது . .

ஏனெனில் அங்கே வாசல் படிக்கட்டில் நின்று கொண்டிருப்பது நானேதான் -அதாவது சைமன் ஸ்மித்

“மிஸ்டர். ஸ்மித்தா? என் வீட்டில் இப்போது என்ன வேலை உனக்கு ? எல்லாம் முன்பே பேசி முடித்து விட்டோமே ?” என்று கேட்கிறேன்

சைமன் ஸ்மித் எதுவும் பேசவில்லை .பாதியளவு மட்டுமே தெளிவாகத் தெரிந்த அவன் முகத்தில், அமைதியற்ற கண்களின் ரத்த சிவப்பு தெரிகிறது ..அவன் மேலங்கியின் பாக்கெட்டினுள் கைவிரல்கள் இறுக்கமாக முட்டியிட்டு இருக்கின்றன.

கலவரமடைந்து வாயடைத்துப் போகிறேன் .

“ராபர்ட் , வந்திருப்பவர் யார் ?” என் பின்னல் நிற்கும் அவள் கேட்கிறாள் .

அவள் பக்கம் திரும்பி, “எல்லாம் சரி. வனெஸா, நான் பார்த்துக் கொள்கிறேன் “ என்கிறேன்

அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிகின்றன. அதே சமயம் , என் அடி வயிறு கிழிபடுவது போன்ற வலி என்னை நிலைகுலையச் செய்கிறது. குனிந்து வயிற்றில் செருகப்பட்ட கத்தியைப் பார்க்கிறேன். பீச்சி அடிக்கும் ரத்தத்தில் ,சட்டை தொப்பலாக நனைகிறது.தரையில் குப்புற விழுகிறேன் .vanessa -வின் அலறல் ,என்னுள் பீதி அலைகளை எழுப்புகிறது. பயம்,குழப்பம் ,வெறுப்பு நிறைந்த அதீத மனநிலையில் ,என் கண்கள் கொலைகாரனான சைமன் ஸ்மித் தின் மீது நிலை பெறுகின்றன .வலி பன் மடங்காகிறது . மூடிய கண்களுக்குள் வெண் ஒளிக்கதிர்கள் சொற்ப நேரம் மின்னலிட்டு அடங்கியபின் முற்றிலும் இருள்கிறது .

நினைவு வந்த போது,நான் மூச்சுத்திணறலுடன் அவதிப்பட்டுக்கொண்டு தரையில் விழுந்து கிடக்கிறேன் . அறைக்கதவின் பூட்டு திறக்கப் படும் சப்தம் கேட்கிறது. செயலரும் நர்ஸும் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் நுழைகிறார்கள். செயலர் என்னருகே மண்டியிட்டு தலைக் கவசத்தை அகற்றுகிறார் . இதயப் படபடப்பு தொடர்கிறது .இரு கைகளால் போர்த்தி நடுங்கும் உடலைக் கட்டுப்படுத்த முயல்கிறேன்.

“உங்கள் முதல் அமர்வு நிறைவு பெறுகிறது, மிஸ்டர் ஸ்மித் எடுத்துக்கொண்ட நேரம் 3 நிமிடம் 17செகண்ட் “”என்கிறார் செயலர் . கைகளைப் பிடித்து தரையில் இருந்து தூக்கி நிறுத்துகிறார் என் .சட்டை வியர்வையில் நனைந்திருக்கிறது .

“முதல் அமர்வு கடினமாகத்தான் இருக்கும். கவலைப்பட வேண்டாம் . உங்கள் நரம்பு மண்டலம் படிப்படியாக இந்த நிகழ்ச்சி நிரலுக்குப் பழகிக் கொள்ளும்.”

நர்ஸ் என் கைப்பெட்டியை எடுத்துக் கொள்கிறாள். என் கையோடு கைகோர்த்து மெதுவாக நடக்க வைத்து முகப்பு அறைக்கு அழைத்துச் செல்கிறாள்.

அங்கு அமர்ந்திருக்கும் வரவேற்பாளினி அமர்வுக்கான கட்டணச் சீட்டை என் கையில் திணிக்கிறாள்.

“மிஸ்டர். ஸ்மித், சட்டப்படி ஒவ்வொரு அமர்வின் போதும் நீங்கள் ஏன் இங்கே அழைக்கப் பட்டுள்ளீர்கள் என்ற தகவலை உங்களுக்கு நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளேன் . 2051ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி, ராபர்ட் கிளமெண்ட் என்பவரைக் கொலை செய்த குற்றவாளி நீங்கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது .அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் கொலையுண்டவரின் மனநிலையில் அந்த கொடூர நிமிடங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே உங்களுக்கு அளிக்கப்பட தண்டனை . இன்னும் 1299 அமர்வுகள் முடிக்க வேண்டும் “

வரவேற்பாளினி பேசுவதைக் கேட்கும் நர்ஸ், புன்னகை மாறாமல் என் பின்னே நின்றுகொண்டிருக்கிறாள்.

“மிஸ்டர் ஸ்மித் , கிளாரியான் குற்றச் சீர்திருத்த மைய வசதிகளை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி .அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம் தயவு செய்து .எங்கள் வாடிக்கையாளர் மன நிறைவு அட்டையை நிரப்பித் தர மறந்து விடாதீர்கள் .அதன் பலனாக உங்களுக்கு இதே செலவில், எங்களது உயர்தர பாதுகாப்பு அறையில் அமர்வு மேற்கொள்ளும் வசதியை வென்றெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்றைய நாளின் எஞ்சிய பகுதி நன்னாளாய் இருக்கட்டும் .” -என்று சொல்லி முடிக்கிறாள்.

ஆங்கில மூலம்: The Department of Correction : Nature : Nature Research

மூல ஆசிரியர்: நீனன் டேன்

One Reply to “திருத்தத் துறை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.