திபெத் எப்படி நசுக்கப்படுகிறது- தலாய் லாமாவின் வாழ்நாளிலேயே

திபெத் ஆன் ஃபயர்: ஸெல்ஃப் இம்மொலேஷன்ஸ் எகைன்ஸ்ட் சைனீஸ் ரூல்
ட்ஸெரிங் ஓஸர். வெர்ஸோ, 114 பக்கங்கள்.
ஃப்ரெஞ்சு மூலத்தை மொழி பெயர்த்து இங்கிலிஷில் கொடுத்தவர் கெவின் காரிகோ

சைனா அண்ட் திபெத்: த பெரில்ஸ் ஆஃப் இன்ஸெக்யூரிட்டி
ட்ஸெரிங் டோப்க்யால்.  லண்டன்: ஹர்ஸ்ட், 309 பக்கங்கள்

~oOo~

2014 இல் ஓஸர், தன்னுடைய கணவர் வாங் லிக்ஸியாங்குடன் இணைந்து எழுதிய ‘வாய்ஸஸ் ஃப்ரம் திபெத்’ என்கிற நூலின் மூலம் மேற்குலகுக்குத் தெரிய வந்தார். இவர் சீன ராணுவத்தில் மூத்த அதிகாரியான ஒருவரின் மகள். இவர் லாஸாவில் 1966 இல் பிறந்ததும், குடும்பம் சீனாவுக்குள்ளே இருக்கிற திபெத்திய நகரங்களில் குடி பெயர்ந்தது. பள்ளியில் சீன மொழி ஒன்றைத்தான் கற்றார், ஏனெனில் அதுதான் நாகரீகமடைந்த மொழியாகக் கருதப்பட்டது. சீனாவில் ஒரு பல்கலையில் படித்த பின் இவர் லாஸாவுக்குத் திரும்பினார். சீன எழுத்தாளர் குழு ஒன்றில் பணியாற்றினார். அப்போது சீனர்களுக்குத் தம் பண்பாட்டின் மீதிருந்த பெருமிதத்தைப் பாராட்டி இவர் கவிதைகள் எழுதினார், ஆனாலும் அக்கவிதைகளில் திபெத்திய நிலப்பரபு, வரலாறு, மக்கள் குறித்த அக்கறையும் வெளிப்பட்டதாக, இவருடைய புத்தகத்துக்கு ராபர்ட் பார்னெட் எழுதிய முன்னுரை தெரிவிக்கிறது.ஓஸரின் புத்தகத்துடைய அனைத்துப் பக்கங்களையும், ட்ஸெரிங் டோப்க்யாலின் புத்தகத்தில் முதலாவதும், கடைசியுமான அத்தியாயங்களை விடுத்தும் படித்தோமானால், திபெத்தின் இப்போதைய நிலை பற்றி நமக்குக் கிட்டும் செய்தி ஒன்றேதான்.

ஓஸர் எழுதுவதன்படி, திபெத்தில் சீன ஆட்சி என்பது ஒரு இனத்தை நசுக்கும் செயல்தான், வேறில்லை. துவக்கத்திலிருந்தே திபெத்தில் கருத்தியல், ராணுவ, மேலும் அரசியல் இலக்குகளை அடைவதற்காகச் சீனா மேற்கொண்ட முறைகளே அங்கு நிலவும் கடும் கட்டுப்பாடுகளும், அச்சுறுத்தல்களும் என்று டோப்க்யால் எழுதுகிறார்.  திபெத்தில் அமைதி நிலவுவது சீனாவுடைய இலக்கு என்றால், அங்கு சீனர்களை ஆட்சியில் அமர்த்தாமல், திபெத்தின் கம்யூனிஸ்ட் கட்சியினரை அமர்த்துவதுதான் வழி என்று டோப்க்யால் அறிவுறுத்துகிறார்.

2004 ஆம் வருடம் வருகையில் தலாய் லாமா மீது இவருக்கிருந்த அபிமானம் புலப்படத் துவங்கியதால், இவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். லாஸாவிலிருந்து அகற்றப்பட்டு, சீனாவில் கடும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார். ஆனால் இவருடைய சமீபத்துப் புத்தகத்திலிருந்து, இவர் ஒவ்வொரு வருடமும் லாஸாவுக்குத் திரும்பிச் செல்ல முடிந்தது என்பது தெரிகிறது. திபெத்தில் எதிர்ப்பாளர்களை வெளி உலகில் அர்த்த புஷ்டியோடு ஆதரிக்கும் ஒரு குரலாக ஓஸரின் குரல் இருக்கிறது. அதே போல, தனக்கு மிக்க ஆபத்து வரும் என்ற போதும், சீனாவின் ஒரே நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான லியு ஷியாஓபோ வை சிலாகித்துப் பேசி இருக்கிறார். ஒருக்கால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார அடுக்கில் இவருக்கு இருக்கும் யாரோ சில சக்தி வாய்ந்த ஆதரவாளர்களால்தான் இவர் சிறையில் அடைக்கப்படாமல் தப்பி இருக்கிறாரோ என்னவோ.

இப்போதோ, இன்னுமே ஆபத்தான ஒரு பொருளைப் பற்றி எழுதி இருக்கிறார். ஃபிப்ரவரி 2009 இலிருந்து ஜூலை 2015 வரையான கால இடைவெளியில் 146 திபெத்தியர்கள் தம்மைக் கொளுத்திக் கொண்டு மாய்ந்திருக்கிறார்கள். அந்த நிகழ்வுகளில் பெரும் துன்பத்துக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டவர்கள், திபெத்திலும் வெளியில் நாடிழந்தவர்களாகவும் உள்ளவர்கள். இவர்கள் எல்லாருமே தலாய் லாமாவை மெச்சியும், திபெத்திய சுதந்திரத்தை வலியுறுத்தியும் பேசி இருப்பவர்கள்.  இப்படித் தீக்குளித்துத் தற்கொலை செய்வாரைத் தூண்டும்  ‘பிரிவினை வாதிக் குற்றவாளி’ என்று தலாய் லாமாவைச் சீனா கண்டித்திருக்கிறது. இறந்தவர்களில் 125 பேர்கள் பௌத்த பிக்குகளும், பிக்குணிகளும் ஆவர். 1963 ஆம் ஆண்டு வியத்நாமில் தீயிட்டுக் கொண்டு இறந்த ஏழு பௌத்த பிக்குகளை ஓஸர் நினைவு கூர்கிறார். வியத் நாமின் அன்றைய ஆட்சியாளரும் கத்தோலிக்கக் கிருஸ்தவருமான ங்கோ டின் டியெம் என்பாரின் சர்வாதிகார ஆட்சிக்கும், அவரைத் தேர்ந்தெடுத்து, ஆதரித்து அதிகாரத்தில் இருக்க உதவிய அமெரிக்காவையும் எதிர்த்துத்தான் அந்த பிக்குகள் தீக்குளித்தனர். வியத் நாமிய பிக்கு திச் க்வாங் ட்யூ  நெருப்பு ஜ்வாலையால் சூழப்பட்டு அமர்ந்திருப்பதைப் படமெடுத்தவர் மால்கம் ப்ரௌன் என்பார். அந்தப் படத்தைப் பற்றி அன்றைய அமெரிக்க அதிபரான ஜான் ஃபி. கென்னடி சொன்னது, ‘வரலாற்றில் வேறெந்தப் படமும் உலகெங்கும் உணர்ச்சிகளை இந்த அளவு எழுப்பி இராது.’அதே போன்ற படமொன்றை நான் திபெத்திலிருந்து கிட்டிப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்தப் படத்தைப் பற்றி உலகில் எங்குமே அப்படித் தட்டி எழுப்பப்பட்ட கூக்குரல் ஏதும் காணவில்லை என்பது ஏன் என்று நாம் யோசிக்கலாம். தெற்கு வியத்நாமியத் தீக்குளியல்கள் அமெரிக்கப் போருக்கு எதிரானவை. மாறாக அமெரிக்காவிலும், யூரோப்பிலும் சீனாவின் கொடுமைகள் பற்றி எந்த அதிர்ச்சியையும் நாம் காண்பதில்லை.

இந்தத் தீக்குளியல்கள் ஏன் நிகழ்ந்தன?  இக்கேள்வியை ஆராயும் ஓஸர், பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பு, சீனா எடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பிக்குகளையும், பிக்குணிகளையும் குறிவைத்திருந்ததுதான் காரணம் என்கிறார். சீனாவின் நோக்கம் இந்த ஒலிம்பிக் பந்தயம் எந்த எதிர்ப்புகளும் இல்லாது நடத்தப்பட வேண்டும் என்பதே. தலாய் லாமாவோடு இணைப்புள்ளதாகக் கருதப்படும் ஒரு மடாலயத்தில், பல்லாயிரக்கணக்கான பிக்குகளும், பிக்குணிகளும், சாதாரண மக்களும் சீன ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்; ராணுவ காவல் துறை வன்முறையைக் கையாண்டு இருபதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. அடுத்த வருடம் இப்படி இறந்தவர்களுக்கான இரங்கல் நிகழ்வை காவல் துறை முடக்கியது.

இது முதல் பிக்குவின் தீக்குளியலுக்கு இட்டுச் சென்றது. அந்த பிக்கு எரிந்து கொண்டிருக்கையில் அவர் மீது காவல் துறை தம் ஆயுதங்களால் சுட்டனர் என்று ஓஸர் எழுதுகிறார். ஏழு வருடங்களாகியும் அவரது உடலுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லையாம். அந்த சம்பவத்துக்குப் பிறகு, ‘நான் ஒவ்வொரு தீக்குளியல் சம்பவத்தையும் பதிவு செய்ததோடு, அவற்றை என் வலைப்பதிவில் உலகோடு பகிர்ந்து கொண்டுமிருக்கிறேன்.’ என்று எழுதுகிறார் ஓஸர்.  இந்தப் பக்கத்தில் ஓஸர் சீனாவிலும், திபெத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று அவர் கருதுகிற எல்லாவற்றையும் பற்றி தகவல்களைச் சேகரிக்கிறார். ஒவ்வொரு வருடமும் திபெத்துக்கு அவர் செல்வதால், தாம் கொடுக்கும் தகவல்கள் சரியானவையா என்று அவரால் உறுதி செய்து கொள்ளவும் முடிகிறது.

இறந்த 125 திபெத்தியர்களில் 74 பேர்கள் விவசாயிகள் அல்லது நாடோடிகள். 2011 இல் தீக்குளித்த ஒரு பிக்கு தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார், அதனால் அவரது உடலை, திபெத்திய சடங்கு முறைகளின்படி மலையில் கிடத்த எடுத்துப் போன சக பிக்குக்கள் அவருடைய உடலைக் கழுகுகள் உண்ண வராது என்று கருதி அதை எரித்துச் சடங்கு செய்தனர் என்று ஓஸர் எழுதுகிறார்.

எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில், திபெத்தின் வரலாற்றாளரான வாரன் ஸ்மித் எழுதுகிற உபயோகமான ஒரு தகவல்:

திபெத்தின் பண்பாடு, அடையாளம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டுதான் எதிர்ப்புகள் எழுந்தன, ஆனால் பன்னெடுங்காலமாக திபெத்துக்கும் சீனாவுக்குமிடையே உள்ள எதிரெதிர் எல்லைக் கோட்டை நோக்கித் துரிதமாகவே பரவி விட்டன. (திபெத்தோ சீனாவில் எப்போதோ கரைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றே சீனர்கள் கற்பனை செய்கிறார்கள்….) தீக்குளிப்பு மூலமாக எதிர்ப்பு தெரிவித்தல் என்பது அங்கு இன்னும் தொடர்கிறது, மாறாக லாஸாவிலோ, டிஏஆர் பகுதியிலோ (திபெத்திய தன்னாட்சிப் பகுதிகள்) இந்த எதிர்ப்பு அனேகமாக இல்லை.

ஓஸர் எழுதுகிறபடி, சீனர்கள் மீது திபெத்தியர் கொண்டுள்ள வெறுப்புக்குக் காரணம் தங்களுடைய மரபு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன என்று அவர்கள் கருதுவதேயாம். இது 1934 இலும், 1935 இலும் மாஒவின் படைகள், சியாங் காய் -ஷேக்கின் படைகளால் துரத்தப்பட்ட போது, சீனாவுக்குள் இருந்த திபெத்தியர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் வழியாக ஓடியபோது செய்த கொடுமைகளிலிருந்து துவங்கியது என்கிறார். எட்கர் ஸ்னோ எழுதிய ‘ரெட் ஸ்டார் ஓவர் சைனா’ (1935) இல் இந்தப் பயணம் சாகசம் போல வருணிக்கப்படுகிறது, ஆனால் அவர் மாஒ தன் கொரில்லாப் போர்ப் பயணம் பற்றிச் சொன்னதைத்தான் கேட்டிருந்திருக்கிறார் போலிருக்கிறது. ஓஸரோ, செம்படைகள் மடாலயங்களிலிருந்து உணவைக் கொள்ளை அடித்தனர் என்றும், பிக்குக்களையும், அங்கிருந்த இதர மக்களையும் கொன்று குவித்தனர் என்றும் எழுதுகிறார். (இது எனக்குப் புதியதாக உள்ள தகவல்.)

1950 இலிருந்து, கம்யூனிஸ்டுகள் திபெத்தின் மீது படையெடுத்த பிறகு, திபெத்தியப் பண்பாட்டின் மையமான சகல அம்சங்களையும் ஒழிக்கவே முனைந்திருப்பதாக ஓஸர் எழுதுகிறார். மதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது. 1981 இலும், 1982 இலும் நான் அங்கு பயணம் செய்த போது, சில கோவில்களும், பிக்குகளின் வசிப்பிடங்களான மடங்களும் செயலற்ற நிலையில் இருந்தன அல்லது கடும் கண்காணிப்பில் இருந்தன. காவலர்கள் பிக்குக்கள் போலக் கூட உடை அணிந்திருந்தனர். சீன சுற்றுலாப் பயணிகளும், படையாளிகளும், புனிதத்தலங்களில் அவமதிப்பதற்காக வேண்டுமென்றே எதிர் வழியே வலம் வந்ததைப் பார்த்தேன். காண்டனில் இருந்த பெரும் ஆலய வளாகம் அனேகமாக முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. 1955 இல் சீனர்கள், சிறு குழந்தையான பஞ்சன் லாமாவைக் கடத்திக் கொண்டு போனார்கள். இவர் திபெத்திய பௌத்தத்தில் இரண்டாவது ஸ்தானத்தில் இருக்கும் மனிதர். தலாய் லாமா இவரை அங்கீகரித்திருந்தார். அவருக்கு என்ன ஆயிற்றென்பது இன்றளவும் தெரியவில்லை. தமது ஆள் ஒருவரை, ‘அவதாரம்’ என்று அவருடைய இடத்தில் சீனர்கள் அமர்த்தி இருக்கிறார்கள்.

நாடோடி இடையர்களையும், அவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளிலிருந்து அகற்றி, அங்கு ஹான்களை- சீனக் குடிமக்கள் – அங்கு குடியேற்றி, செம்பு, வெள்ளி, மேலும் தங்கச் சுரங்கங்களைத் துவக்கி, அங்கிருந்த நதிகளைப் பாழடித்ததால் திபெத்தியப் பொருளாதாரம் எப்படி நசிவுற்றது என்று ஓஸர் விவரிக்கிறார். சீன மொழிதான் பள்ளிகளில் முக்கிய மொழியாக ஆகி இருக்கிறது, திபெத்திய மொழி இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரு வேளை அது போதிக்கப்படுகிறது என்றால்தான். ஏராளமான ஹான் சீனர்கள் திபெத்தில் குடியேறி விட்டனர், விவசாயம் செய்யவோ, வியாபாரம் செய்யவோ வந்திருக்கிறார்கள். லாஸாவில் திபெத்தியரை விட மிக அதிகமாகச் சீனர்களே உள்ளனர். எங்கும் பரவி இருக்கிற கண்காணிப்பு முறை, திபெத்தில் எங்கும் பயத்தை விதைத்திருக்கிறது என்று ஓஸர் எழுதுகிறார்.

தீக்குளிப்பு மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எதிராக தலாய் லாமா ஏன் குரலெழுப்பவில்லை என்பதை ஓஸர் எடுத்துப் பேசுகிறார். அவர் அதை எதிர்த்தோ, ஆதரித்தோ ஏதும் சொல்லவில்லை என்பதை அவர் நிறைய தடவை சுட்டிக் காட்டி இருக்கிறார் என்றாலும், தான் அப்படி இறப்பவர்களின் குடும்பங்களுக்காக ஆழமாக வருந்துவதாகவும் சொல்லி இருக்கிறார். தீக்குளித்து இறந்தவர்களின் பெயர்கள் உரக்கப் படிக்கப்படுகையில் அவர் கண்ணீர் சிந்தி இருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரிய மக்கள் குழுக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் எதிரான அடக்கு முறைக்கு, அமைதியான வழியில் எதிர்ப்பு தெரிவிக்க மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகவே ஓஸர் தீக்குளிப்புகளைப் பார்க்கிறார். ஆக்கிரமிப்பாளர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு தீக்குளிப்புக்குப் பிறகும், உள்ளூர் மக்கள் தங்களுடைய பாரம்பரிய வாள்களையும், ரைஃபிள் துப்பாக்கிகளையும் மடாலயங்களுக்குக் கொணர்ந்து கொடுத்துச் சென்றனர். இதை அவர்கள், தாம் சீனர்களைத் தாக்குவதாக இல்லை என்பதைச் சுட்டும் வண்ணம் செய்தனர் என்பதைச் சீன ஆக்கிரமிப்பாளர்கள் அங்கீகரித்தது இல்லை என்று ஓஸர் எழுதுகிறார்.

தீக்குளிப்பு பற்றிய செய்திகள் சீனாவின் வலையுலகில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அதே நேரம் அதிகார வட்டங்கள் தீக்குளிப்பவர்கள் அறிவிழந்தவர்கள், மனநோயாளிகள், சுயநலவாதிகள், தோற்றவர்கள், மேலும் குற்றச் செயல் புரிகிறவர்கள் என்று அதிகார பூர்வமான அறிக்கைகளை வெளியிடத் தவறுவதில்லை.  ஓஸரின் சொந்த முடிவு இது:

திபெத்தியருக்குத் தம் எதிர்ப்புகளைக் காட்ட வேறேதும் வழி இல்லாததாலும், தீக்குளியல் என்பதன் பயங்கரம் ஒன்றுதான் உலகின் கவனத்தை ஈர்க்கிறது என்பதாலும், திபெத்தின் துணிவு மிக்க எதிர்ப்பாளர்களுக்கு அது விரும்பப்பட்ட வழியாகிறது. கடந்த சில வருடங்களில், இப்படிப்பட்ட தனிநபர் வீரச் செயல்களும், தியாகங்களும் படிப்படியாக விரிவான எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்து இன்று வரை தொடர்கின்றன.

அவருடைய முந்தைய கட்டுரைத் தொகுப்பில், சிறிது அங்கதத்துடனும், உணர்ச்சிப் பெருக்கோடும் ஓஸர் குறிப்பிட்டிருந்தார்:

திபெத்தியரின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் பிரபலப்படுத்த ஒரு தந்திரமான வழியைப் பயன்படுத்தியதற்காக நம் அடக்குமுறை அரசாங்கத்திற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் போலிருக்கிறது. நம் பண்பாட்டு வழக்கங்களை நசுக்கி ஒழிக்க பெய்ஜிங் செய்யும் முயற்சிகளால், மிக அதிகமான திபெத்தியர், குறிப்பாக இளைய தலைமுறையினர், அந்த வழக்கங்களை மேலும் கவனித்து மேற்கொள்ளத் துவங்கி இருக்கின்றனர்.

~oOo~

[தமிழில் தழுவி எழுதியது: மைத்ரேயன்]
[பாகம் 1 முற்றுப் பெற்றது. இரண்டாம் பாகம் அடுத்த இதழில் வெளியாகும். ]

[இது ஒரு கட்டுரைச் சுருக்கம். நியுயார்க் ரெவ்யு ஆஃப் புக்ஸ் என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றின் சுருக்கம். ஜானதன் மிர்ஸ்கி ( டிஸம்பர்  22, 2016 இதழில்) எழுதிய கட்டுரை திபெத் பற்றிய இரண்டு புத்தகங்களின் மதிப்புரை. ]