கவிதைகள்: நெகிழன், ஆனந்த் பத்மநாபன், கு.அழகர்சாமி

விவசாயப் பரம்பரையில் ஜனித்த
தத்ரூப ஓவியன்
தன் பூர்வீக நிலத்திலிருந்து கொய்த
சதுர வடிவ மண்ணாங்கட்டியை
ஒரு குடுவை நீரிலிட்டுக் கரைத்து
தூரிகையை அதில் நனைத்து
வெண் துணியை வருடுகிறான்
மணக்கிறது ஒரு தத்ரூப நிலம்.

நெகிழன்

முழுதாய் களைதல்

எப்போதும் அலங்கார ஆடைகள்
அணிந்திருக்கிறேன்.
நிர்வாணமாயிருக்கத் தோன்றுகையில்
அணிய
ஒரு எளிய சட்டை வைத்திருக்கிறேன்.
ஒரே முறை
நம் நிர்வாண உடல்கள் தழுவியதை
ஓரம் நின்று பார்த்திருந்த அது
உன்னை என்னுள் மீட்டு
மற்றெல்லாவற்றையும் களைந்து விடுகிறது.

சிரிக்கும் காலம்

உறங்கும் முன் கொண்ட
எண்ணத்தின் தொடர்ச்சியாய் இல்லாத
கனவுகளின் தொடர்ச்சியாய்
எண்ணங்கள் கொண்டெழும் நாட்களில்
நியாயமில்லை.
உறங்காமல் எண்ணங்கள் கலைந்தாலும்
உறங்கியெழுந்து முற்றிலும் புதிதாய் ஒன்று வளர்ந்தாலும்
ஏற்றுக்கொள்வேன்.
இரவு நீள நீள
உறங்காமல் வளர்த்த பித்தை
நுண்ணொடி அயர்ந்தே மாந்து விழிக்கையில்
அழித்து சிரிக்கிற காலம்
காட்டும்
நனவை மட்டும்
எதிர்கொள்ளலாகாது பதறுகின்றது மனம்.

இருளின் ஒளி

இருளில் கண்பழகி
மெய் ஏகி
அடைந்த இடம்
தலைமேல் எட்டு திசைகளிலும் விளக்குகள்.
எட்டிற்கும் அதிகமாய்
பின்னிப் பிணைந்து விழுந்த
நிழல்களிலெல்லாம்
இருளில் துணை வந்த
ஒற்றை ஒளியின் பிரதிபலிப்புகள்.

அழுக்கேற்றம்

ஆன்மாவின் சுவற்றில் படிந்த
கறைகளை நீக்க
ஒரு சிறுதூர தனிமை நடை
வேண்டுமெனக் கிளம்பினேன்.

பூமியிலிருந்தே
ஆரம்பித்துவிட்டிருந்தது ஆகாயம்.

அவசர வேலையாய் வேகமாய்
நடைபாதையைக்
குறுக்காய் கடந்து மரமேறிவிட்ட
கருப்புநிறக் கொழுத்த அணில்
வந்த வேலை மறந்ததாய்
நின்று பார்த்தது.

புட்களும் தூண்டிவிடா ஆசை,
ஈர செம்மண்வெளி கண்டதும்
குளிரையும் பொருட்படுத்தாது
காலணியைக் கழற்றிக் கையில் எடுத்துக்கொண்டேன்.
செந்நிறமேறி தண்மை உள் பரவ
கறைகள் மெல்ல
கீழ்படிந்து நீங்கின.

வீடருகே வந்து உள் நுழையும் முன்
செந்நிறம் நீங்க நீங்கக் கண்டு
குழாயில் கால் கழுவியதும்
வீட்டின் கடைசி அறை வரை
காலணி ஏந்திய கையோடு சென்றது
எப்படி என்னையறியாமல் நேர்ந்ததோ
அப்படியே
மீண்டும் நான்
ஆன்மாவில் அழுக்கேற்றிக் கொண்டது.

ஆனந்த் பத்மநாபன்

துணைக்கல்ல

 

ஓர் எறும்பு ஊரும் வேகமாய் என்னை விட்டு முந்தி.
சூரியன்
கூடச் செல்கிறான்
அதோடு.
காத்திருக்கும் கண்ணுக்குத் தெரியும் ஓர் ஆலமரம் என்
ஆறுதலுக்கு.
காத்துக் கிடப்பேன் கால் கடுக்க எப்போது மருத்துவர் என் பெயரைக்
கூப்பிடுவாரென்று.
காத்துக் கிடக்கும் என் கூட என் நோயும்
கூட வரும் நாயாய்.
என் சிகிச்சை
முடியும்.
காலின் வலி தீர ஒரு காலி பெஞ்ச் பரிந்து கூப்பிடும் உட்காரென்று.
ஏனோ கால் கடுக்க என்னோடு கூட நின்றவர்களில்
யாரேனும் ஒருவரின் முகம் தேடுவேன்
தனியாய் உட்கார மனசில்லாமல்-
துணைக்கல்ல.
கு.அழகர்சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.