கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்

மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ
ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே

என்ற பட்டினத்தடிகளின் பாடலிலிருந்து கடைசி வரியைத் தன் சுயசரிதையின் ஆரம்பத்தில் எழுதியிருந்தார் பாரதி. அந்த ஒரே வரி நினைவுகூரலை வலியும் இன்பமும் துயரமும் படிந்த ஒன்றாகக் காட்டியது. பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக ஆரம்ப காலங்களில் இருந்து செயலாற்றிய பா. விசாலம்,  சுய சரிதையின் கூறுகளையுடையத் தன் நாவலுக்குப் பாடலின் கடைசி வரியைச் சற்றே மாற்றி, மெல்லக் கனவாய், பழங்கதையாய் என்று தலைப்பிடுகிறார். காரணம், அவர் நாவலில் கூற முற்படுவது    எழுதப்பட்ட எந்தச் சரித்திரத்திலும் இல்லாதது. சிலரின் நினைவடுக்குகளில் அது இருக்கலாம் ஆனால் மற்றபடி அது  எல்லோரும் மறந்த ஒரு சரித்திரம்தான். மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட தந்தை ஒருவரின் மகளான பா. விசாலம் இந்த நாவலை எழுதியிருப்பது சரித்திரத்தை ஆவணப்படுத்த மட்டுமல்ல தன் வாழ்க்கைக் கதையைக் கூறவும் மார்க்சியக் கோட்பாடு அவர் வாழ்க்கையில் நுழைந்ததும் அவர் வாழ்க்கையின் நோக்கம் எவ்வாறு உருப்பெற்றது என்பதைக்  கூறவும்தான்.

கதையின் நாயகியின் குழந்தைப் பருவ நினைவுகளில் பல பெண்கள். பசுமஞ்சளும் பூக்களுமாய்  மணந்தபடி காலையில் உட்கார்ந்து ஏகப்பட்டக் காய்கறிகளை நறுக்கும் அம்மா; குழந்தை பிறக்கவில்லை என்று கன்யாகுமரி பகவதி கோவிலுக்குப் போய் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு குனிந்து மண்சோறு தின்ற  ரவிக்கை போடாத பாட்டி; முறுக்கு இட்லி சுட்டு வாழும் பெண்கள் இப்படி அநேகப் பெண்கள். பல வயதுப் பெண்கள். புகையிலை வாசத்துடன்  பல கதைகளைச் சொல்லும் எண்ணெய் விற்கும் பெண்மணி; உடலின் மேல் பாகத்தை சிறு துணியால் மட்டுமே மறைத்து, வேலை முடிந்ததும் கொல்லைபுறக் கிணற்றடியில் நின்றுகொண்டு தன் வேர்வை பெருகும் முலைகளைத் துடைத்துக்கொள்ளும் வேலை செய்யும் பெண்; கள்ள ஆட்டம் ஆடுகிறாள் என்று அம்மா முணுமுணுத்தாலும் அவளுடன் தாயம் ஆட வரும் பக்கத்து வீட்டுப் பெண் ஒரு நாள் திடீரென்று மரிப்பது; தன் பெண்களுக்குப் பிரசவம் பார்த்த அம்மா ஒருத்தி கிலோ கணக்கில் உள்ளிப்பூண்டை நசுக்கிச் செய்யும் பிரசவ லேகியம்; கணவனிடம்  அடிபடும் பெண்; மலடிப் பெண்; நடத்தை கெட்டவள் என்று எல்லோரும் வம்பு பேசும் பெண்; வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் திருமணம் குழந்தைப் பிறப்பு எல்லாவற்றையும் அறிந்த, அம்மாஅப்பா விளையாட்டின்போது    செங்கல்லைப் பெற்றுப்போடும், கதை கூறும் சிறுமியுடன் விளையாடும் முறுக்குச் சுட்டு விற்கும் விதவை அம்மாவின் சிறு பெண் இவ்வாறு பல பிம்பங்கள். ஆனால் அந்தச் சிறு வயதிலேயே  கதை சொல்லும் சிறுமிக்குத் தெரிகிறது இத்தனை வகைப்பட்ட பெண்களும் வேறு யாரோ இடும் சட்டங்கள் மற்றும் மதிப்பீடுகளுக்குள் வாழ்வது.

சீமையைப் பற்றித் தெரியாமலே, குத்துவிளக்கு முன்னால் உடகார்ந்து, “தங்கையே பார், தங்கையே பார்; சைக்கிள் வண்டி இதுவே பார்; சிங்காரமான வண்டி; சீமையிலே செய்த வண்டிஎன்று பாடம் படிக்கும் சிறுமியின் அந்தப் பருவஹீரோக்கள்   புராணக் கதைகளில் வரும் பிரகலாதனும் துருவனும்தான். அவள் மனத்தை முதன் முதல் உறுத்திய கேள்விமகன் பரசுராமனைத் தன் தாயின் தலையை வெட்டச் சொல்லும் ஜமதக்னி, மகனை ஏன் வெட்டச் சொல்கிறார், தானே வெட்டக் கூடாதா என்ன? அம்மாவின் தலையை எப்படி வெட்ட முடியும் யாராலும்? ராமாயணத்தில் பூமிக்குள் போய்விடும் பிடிவாதக்காரி சீதையை அவளுக்குப் பிடிக்கிறது. வெளியே கிளம்பும்போது பட்டுப் பாவாடை அணிந்துகொண்டு அவள் கிளம்ப, அவர்கள் போகப்போகும் வீடு ஏழ்மைப் பட்டவர்கள் வீடு, அதனால் அவள் பட்டுப்பாவாடை அணிந்துகொண்டு போனால் அந்த வீட்டுக் குழந்தைகள் மனம் புண்படலாம் என்று அப்பா கூற, சிறுமி  நினைக்கிறாள்: அவர்களைப் பார்க்கக் காரில் போவது மட்டும் சரியா என்ன? அது அவர்களைப் புண்படுத்தாதா என்ன?

குழந்தைப் பருவப் பள்ளிப் பாடல்கள், ”செந்தமிழ் நாடெனும் போதினிலேபோன்ற பாரதியார் பாடல்கள், ”நீயன்றி வேரில்லை துணை; தேடி வந்தேன் மலரடி இணை  என்று பாடினால் பயத்தைப் போக்கும் லக்ஷ்மணம்பிள்ளை பாடல்கள், அப்பா சொல்லும் கஸபிளாங்கா, ஸின்ட்ரெல்லா கதைகள், கோவில்களுக்கும் அருவிகளுக்கும் செல்லும் உல்லாசப் பயணங்கள், ரூபாய்க்கும் திருவிதாங்கூரின் சக்கரத்துக்குமாக உள்ள குழப்பத்தில் வர மறுக்கும் கணக்குப் பாடம், பர்மாவிலிருந்து வந்த அகதிகள் கூறும் சோகக் கதைகள், “ஐயோ காணப் பரிதாபம் சிங்கப்பூர் குண்டுப் பிரயோகம்என்று பாடியபடி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் இத்தகைய பிம்பங்களும் இசை ஒலியும் பின்னணியாய்க் கூடிய வீட்டில் அந்தச் சிறுமி வளர்கிறாள்.

இந்தப் பிம்பங்களுடன் இணைந்துவரும் அந்த அப்பாவின் பிம்பம் மனத்தை நெகிழ்த்துவது. சும்மா இருக்கும்போதெல்லாம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு மீசையை மேல் நோக்கி முறுக்கி விட்டுக்கொண்டிருக்கும் அப்பா. நாஞ்சில் நாட்டிலேயே அதுபோல் மீசை யாருக்கும் கிடையாது என்று அம்மா பெருமைப்படும் மீசை அது. தன் இளைய மகளை அணைத்துக்கொள்ளும்போது கிச்சுகிச்சு மூட்டும் மீசை.     அன்பான, நேர்மையான அன்பொழுகும் குரல் கொண்ட அப்பா.  யார் மனத்தையும் புண்படுத்தக் கூடாது என்று சொல்லும் அப்பா. யாராவது உன் மனத்தைப் புண்படுத்தினால் அடுத்த நாள் போய் அந்த நபருக்கு மிட்டாய் கொடுத்துவிட வேண்டும் என்று அன்பை போதிக்கும் அப்பா. சிறுமி மிக நேசிக்கும், அவள் வாழ்க்கையின் ஆதாரமாய் நினைக்கும் அப்பா. அவர் அவளுக்குத் தரும் முதல் அன்பளிப்பு பாரதியாரின் கவிதைகள். அவருடைய அனைத்துப் பாடல்களையும் அவள் பாடப் பயில வேண்டும் என்கிறார் அப்பா. அக்காவுடன் போய் பாட்டு வாத்தியார் லட்சுமணம்பிள்ளையிடம் அவள் பயிலும் முதல் பாடலும் அன்பு குறித்ததுதான்:

அன்பு செய்தலே வாழ்வினால் பயன்
ஆய்ந்தோர் கண்டறிந்த முடிவிதுவே
துன்பு செய்தல் நீக்கித் துன்பம் செய்தியார்க்கும்
இன்பமெய்துவித்தல் எம்  கடன்   பொல்லார்க்கும்

தானே பாட்டியற்றி, பாட்டு பயிற்றுவிக்கும் லட்சுமணம்பிள்ளையின் பாடலில் உள்ள அன்பு பற்றிச் சொல்லித் தருவது அப்பாதான். அன்பும் லட்சியங்களும் நிறைந்த இந்த அப்பாவின் வீழ்ச்சி, முன்னுரையில் இந்திரா பார்த்தசாரதி கூறியிருப்பதுபோல் ஒரு கிரேக்கக் காவிய சோகம்தான். அது அவருடைய தனிப்பட்டச் சோகம் மட்டுமல்ல. அவர் காலத்தின் சோகம்.   அவரைப் போன்ற பலரின் சோகம். கதைசொல்லி தன் தந்தையின் மனிதநேயம், லட்சியவாதம் இவற்றின் வாரிசாகி அவர் கற்றுத் தந்த பாதையில் நடக்க ஆரம்பித்தால் அவள் எதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் சூசகமாய் வருகிறது அப்பாவின் வீழ்ச்சி. ஆனால் அந்தப் பாதையில் அவள் மேற்கொள்ளும் பயணம் சரித்திரம் தீர்மானித்தத் தவிர்க்கமுடியாத பயணம். அப்பாவின் மறைவுக்குப் பின் அவள் குடும்பப் பொறுப்பை ஏற்க நேரும்போது அவள் வாழ்க்கையை அர்த்தப்படுத்த அவள் மேற்கொள்ள வேண்டிய பயணம்.

அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மாவும் பெண்ணும் தங்கள் பாட்டைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது வரை தன் குடும்பம் எல்லா வகையிலும் வித்தியாசமானது என்று பெருமைப்பட்ட அம்மா நாலு பேர்களின் விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படுவளாகிப்போகிறாள். முடிவில் ஊரை விட்டுப்போய்விட்ட        அண்ணா கொண்டுவரும் மார்க்ஸிய புத்தகங்களைப் படிக்கிறாள் பெண்.  ஒரு கட்டதில் நிலப் பிரச்சினை ஒன்றைத் தீர்க்க நிலம் உள்ள கிராமத்துக்கு அவள் செல்ல நேர்கிறது. அவள் தனியாகப் போனால் நாலுபேர் என்ன சொல்வார்கள் என்கிறாள் அம்மா. ”இப்போ அந்த நாலு பேர்ல ஒருத்தராவது வந்து நாம ஏன் பட்டினி கிடக்கணம்னு கேட்கப்போறாளா? இல்ல, என்ன செய்வோம்னாவது எட்டிப் பார்க்கிறானுகளா?” என்று பதிலுக்குக் கேட்கிறாள் பெண். அப்படித்  தான் போவது கவலையாக இருக்கிறது என்றால் அம்மாவும் தன்னுடன் வர வேண்டும் என்கிறாள். விதவைகள் வெளியே வரக்கூடாது என்பதால் தயங்குகிறாள் அம்மா. கடைசியில் அவளுடன் செல்ல முன்வருகிறாள் அம்மா. அப்படித்தான் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. போலீஸை எதிர்கொண்ட, தங்கள் கணவர்மார் மற்றும் மகன்களுக்குப் பொதுவுடமைக் கோட்பாட்டில் உள்ள அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்ட பெண்களைச் சந்திக்கிறார்கள். தங்கள் குடிசைகளுக்கு அம்மாவையும் பெண்ணையும் அழைத்துச் சென்ற அந்தப் பெண்கள் உணவளிக்கிறார்கள். அம்மா தயங்குகிறாள் ஒரு நிமிடம். பெண்ணிடம் அவர்கள் என்ன சாதி என்று ரகசியமாகக் கேட்கிறாள். மகள் அம்மாவின் கண்களை ஏறிட்டுப் பார்க்கிறாள். அம்மா உடனே சும்மாத்தான் கேட்டதாகவும், அவள் சாதி   எல்லாம் பார்ப்பதில்லை என்றும் கூறுகிறாள். பொதுவுடமைக் கட்சிக்காக வேலை செய்பவர்கள் இவர்களின் குடும்பமாகி இவர்களின் அன்புக்குரியவர்களாகிறார்கள்.

பொதுவுடமைக் கட்சியின் ஒரே பெண் உறுப்பினர் மகள்.  கோப்புகளை பிரதியெடுக்கும் வேலை அவளுடையது. மேடைகளிலும் பேசுகிறாள். அவர்கள் வீடு பலமுறை  அந்தப் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களுக்குப் புகலிடமாகிறது. அம்மா அவர்களுக்கு உணவிடுகிறாள், புகலிடம் தருகிறாள் ஆனாலும் மகள் இவ்வளவுத் தீவிரமாகச் செயல்பட வேண்டுமா என்று கவலையும் படுகிறாள். ஜான்சிராணிக் கதையைச் சொன்னது நீதானே, நானும் அவ்வளவு தைரியமாகச் செயல்பட நினைக்கும்போது அதே அம்மா தயங்கலாமா என்கிறாள் மகள். அம்மா விட்டுக்கொடுக்கிறாள். மகளிடமிருந்து பூர்ஜுவா, தொழிலாளி வர்க்கம் போன்ற சொற்களைக் கற்கிறாள். அவள் எதிர்காலம், திருமணம் போன்ற பேச்சை அம்மா அடிக்கடி எடுத்ததும் மகள் சொல்கிறாள் வானத்தில் வட்டமிட்டுப் பறக்கும் அன்னப் பறவை தான் என்று. என்னதான் தாகமெடுத்தாலும் தாமரைக்குளம் கண்ணுக்குத் தெரியும் வரை பறந்துகொண்டேயிருக்கும் அன்னப் பறவை. சாதாரண குளத்தில் இறங்காத பறவை. அதுபோல் தன் கண்ணுக்குத் தாமரைத் தடாகம் தெரியும் வரை அன்னப்பறவைபோல் பறந்துகொண்டேயிருப்பேன் என்கிறாள்.

ஐயங்களும் சோர்வுகளும் இல்லாமல் இல்லை பொதுவுடமைக் கட்சியின் வேலையில். அவளுக்கிருக்கும் பயங்களையும் பாரபட்சங்களையும் மீறி வரவேண்டியிருக்கிறது. சிறு வயதில் சிங்கப்பூரில் குண்டு விழுந்தபோது தன்னைச் சிங்கப்பூரில் இருந்த வீராங்கனையாக, எல்லோருக்கும் உதவுபவளாக, தன் தலையில் குண்டு விழுவது குறித்து அஞ்சாத ஒருத்தியாக   தன்னைப் பாவித்துக்கொண்டவள் அவள். “அச்சமில்லை, யச்சமில்லை அச்சமென்ப தில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பதில்லையேஎன்று பாரதியார் பாடலைப் பாடியவாறு வீர சாகசம் புரிவதாகக் கற்பனை செய்தவள். ஆனால் ஓர் இளம் வயதுப்பெண்ணாக இருக்கும்போது பலமுறை  அவளுக்கு அச்சம் வருகிறது; ஐயங்களும். சுகாதாரத் தொழிலாளிகளை ஒன்றுகூட்டும்போது பாட்டிலுக்குள் ஒரு விரலை உள்ளே நுழைத்துக் கொண்டு வரும் சோடாவைக் குடிக்கத் தயக்கமாக இருக்கிறது. வம்பு பேசும் அக்கம்பக்கதாரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் சகாக்களை ஏற்றுக்கொண்டாலும் அவளைக் குறித்துக் கவலை கொள்ளும் அம்மாவையும் அவள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மறைந்த கொள்கைத் தியாகி சகாவு கிருஷ்ணப்பிள்ளையின் போட்டோவை அவள் சுவரில் மாட்டும்போது விமர்சனங்கள் எழ, அவள் சிட்டகாங் வீராங்கனை கல்பனா தத்தின் புகைபடத்தையும், லெனின் ஸ்டாலின் இவர்களின் புகைப்படங்களையும் சுவரெல்லாம் மாட்டுகிறாள். பொதுவுடமைக் கட்சியில் காலை நன்றாக ஊன்றிக்கொண்டு தமிழ் அடையாளத்துக்கான போராட்டக் காற்றில் விழாமல் நிற்க வேண்டியிருக்கிறது. முதன் முதலில் சிவப்புக் கொடியைப் பார்த்ததும் ஏற்பட்ட உற்சாகக் கணத்தில் தொடங்கி, தலைமறைவு இயக்க வேலைகளிலிருந்து கட்சி வெளிப்படும் வரை கட்சியுடன் வெகு தூரம் வருகிறாள் அவள். ஆனால் தேர்தல் களத்தில் கட்சி இறங்கியதும் அவளும் அவளுடன் இருந்த பலரும் அரசியல் ரீதியாகச் செயல்படுவதில் பேராவல் உடையவர்களால் ஒதுக்கப்படுகிறார்கள்.

பொதுவுடமைக் கட்சியில் அவள் வேலை எளிதாக இருப்பதில்லை. உடனடியாக எதையும் தருவதாகவும் இல்லை.  எப்போதும் படைப்பு ரீதியில் மனத்தை உவகை கொள்ளச் செய்வதாகவும் இல்லை. சுற்றறிக்கைகளைப் பிரதியெடுக்கும் வேலையையே பெரும்பாலும் செய்கிறாள். ஒரு முறை ஓர் இடத்தில் தோற்பது நிச்சயம் என்று தெரிந்தும் சோதித்துப் பார்க்கும் முயற்சியில் அவள் தேர்தலில் நிற்க வைக்கப்படுகிறாள். உன்னை ஏன் பலிகடாவாக்குகிறார்கள் என்று கேட்கிறாள் அம்மா. ஒரு முறை ஒரு தோழர் அவளிடம் தவறாக நடக்கும்போது அதை அவள் சமாளித்துவிட்டாலும்  அந்த நிகழ்வு மனத்தைக் குடைய கட்சியிலுள்ள நெருங்கிய தோழருக்கு இது குறித்து எழுதி ஆணாதிக்க உலகில் செயலாற்ற அவள் முற்றிலும் தன்னைத் தயார் செய்துகொள்ளாத நிலையில் இருப்பதைக் கூறுகிறாள். அவள் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் தோழர் ஏதோ சாதாரணமாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வதைப்போல். ஆனால் வீட்டிலும் இயக்கத்திலும் நிலைமை கை மீறிப்போவதுபோல் தோன்றியதும் அதே நெருங்கிய தோழரை மணக்கிறாள். ஒரு பழம் புடவை உடுத்து, இரண்டொரு இயக்கத் தோழர்கள் உடனிருக்க, பதிவுத் திருமணம் நடக்கிறது. அவள் மனத்தில் தோன்றுகிறது: ”உறவு சொல்லத்தான் எத்தனை பேர்? அவர்கள் எல்லாம் எங்கே? ஏன் நான் தனியானேன்? என் கட்சித் தோழர்கள்தான் எங்கே? ஏன் அவர்கள் என்னை இப்படித் தண்டித்தனர்?” பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாள்: ”ஆனாலும் என்ன? நாங்கள் நியாயமானவர்கள். கம்யூனிஸ்ட்கள். மார்க்ஸிஸ்டுகள். இந்த உறுதியும் திடமும் கூட இருக்கும்போது வேறு எதுவும் எனக்குப் பொருட்டேயில்லை.” அவள் கணவன் அவளை முதல் முறையாகப் பெயர் சொல்லி அழைக்கிறான். அமிர்த வர்ஷிப்பாய் இருக்கிறது அது. அவன் கையில் இருப்பது முதன் முதலாக அவளுக்காக வாங்கிய பூவா, பழமா, இனிப்பா என்று மனம் நினைக்கிறது. அவன் கையில் ஒரு பத்திரிகை. பொதுவுடமைக் கட்சி இரண்டாகப் பிளந்து விட்டதைக் கூறும் பத்திரிகை. இனி தொடங்கும்  புது அத்தியாயம் என்று முடிகிறது நாவல்.

இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பது வரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின்  கனத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பெயரில்லா இந்தக் கதையின் நாயகியை நான் விசாலம் என்றே படித்தேன். அந்த அன்னம் வானில் பறப்பதையும் அது தாமரைக்குளத்தில் இறங்குவதையும் உணர முடிகிறது. அத்துடன் அதன் சோர்வையும்  தனிமையையும் கூட.

இந்த முன்னுரை எழுதியதும் தோன்றியது இந்த நாவலுக்கு முன்னுரை தேவையா என்று. விசாலத்தை அணைத்துக்கொண்டு, வாத நோயால் சற்றே விறைத்துப்போன அவர் கைகளைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு, இந்த நாவல் மூலம் ஒரு காலகட்டத்தின் சரித்திரத்தையும் ஓர் இயக்கத்தில் பங்குபெற்ற ஒரு பெண்ணின் நோக்கில் அந்த இயக்கத்தின் சரித்திரத்தையும் எழுதிய அவர் நலிந்த விரல்களின் மேல் ஒரு முத்தம் தந்தால் போதாதா? ஆனால் நான் ஒரு கதையில் கூறியுள்ளதைப்போல் சொற்களைப் பிடித்துக்கொண்டு தொங்குபவர்கள்தாமே நாம்? அதனால் முத்தத்தையும் அணைப்பையும் சொற்களாக்கி இந்த முன்னுரை. பெண்கள் வாழ்க்கையில் விடுபட்டுப்போன  முத்தங்களும் அணைப்புகளும் எத்தனையோ, அத்தனையும் பெண்கள் சரித்திரத்தின் கண்ணிகள்தாம். விடுபட்டுப்போகாமல் இருப்பதற்கான ஒரு கண்ணிதான் இந்த முன்னுரை.

அம்பை, மும்பாய், 8 டிசம்பர் 2016

One Reply to “கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்”

  1. நான் மதிக்கும் பெண் எழுத்தாளர்களுள் ஒருவர் அம்பை. சிங்கப்பூரில் வாழும் எனக்கு, அவர் நன்கு பரிச்சயமானவர். அவர் ‘கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்’ என்னும் தலைப்பில் பா.விசாலம் அவர்கள் எழுதிய ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’ என்னும் நாவலுக்கு எழுதிய முன்னுரையைப் படித்தேன்.அற்புதம் என்று கூறாமல் இருக்கமுடியவில்லை. அந்த முன்னுரை பா.விசாலம் அவர்களின் நாவலைப்படித்துவிடவேண்டும், அந்த அம்மையாரை இயன்றால் சந்திக்கவேண்டும் என்னும் தவிப்புகளை என்னுள் ஏற்படுத்தியது. ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் உறைந்து கிடக்கும் நினைவு அடுக்குகளை வெளிக்கொணர்ந்தால் பா.விசாலம் அம்மையார் போலப் பல நாவலாசிரியர்கள் தமிழ்மொழிக்குக் கிடைப்பார்கள். பொன்னீலன் அவர்களின் தாயார் எழுதிய ‘கவலை’ என்னும் சுயசரிதை/ நாவலுக்குப்பிறகு பா.விசாலம் அம்மையாரின் படைப்பு திகழ்கிறது என்பதை அம்பை அவர்களின் முன்னுரை எனக்கு உணர்த்தியது. சொல்வனத்துக்கு ஒரு சபாஷ்!
    முனைவர். ஸ்ரீ லக்ஷ்மி
    சிங்கப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.