கவிதைகள்: ராமலக்ஷ்மி, ஆதி கேசவன், சரவணன் அபி

வினா வினா

புரிபடாத விடயங்கள்
குறித்த வினாக்கள்
புரிந்து செய்த செயல்கள்
குறித்த மனக்கிலேசங்கள்
ஆகாயத்தின் பிரமாண்டத்துடன்
அச்சுறுத்தின பெரிதாக

பெரிய வினாக்களுக்கு
தயாராக இருந்தன
ஒரு நட்சத்திர அளவில்
எப்போதும் என்னிடத்தில்
சிறிய விடைகள்

காலைப் பனித்துளி அளவிலான
சிறிய வினாக்களுக்கோ
விடாது பெய்யும் அடைமழையாக
சரளமாக அளிக்க இயன்றது
விரிவான விடைகளை

சிறிய வினாக்களுக்கான
என் பெரிய விடைகளில்
தைரியம் தன்னம்பிக்கையோடு
கலந்தே இருந்தன சற்று
அலட்சியமும் அகந்தையும்.
தம்மை ஒப்புக் கொள்ளச் சொல்லி
நம்பச் சொல்லி
அதிகாரத்துடன் அதட்டின

பெரிய வினாக்களுக்கான
சிறிய விடைகளில்
குழப்பமும் தயக்கமும் இருந்தாலும்
பணிவுடனும் பயத்துடனும்
வெளிப்பட்டு அவை என்
ஆன்மாவுக்கு நெருக்கமாயின

சிறிது பெரிதாகி
பெரிது சிறிதாகி
உயர்வெது தாழ்வெது
எழுந்த வினா
பெரிதா சிறிதா
நான் தீர்மானிக்கக் காத்திருக்கின்றன
எனது விடைகள்

சிறு பனித்துளிக்குள்
பிரபஞ்சமே அடங்கி இருப்பதையும்
முழு இரவுக்குப் போதுமான போரொளியை
சிறு நட்சத்திரங்கள் கொண்டிருப்பதையும்
முழுமையாக நான் உணரும் வரை
என்னை விடப் போவதில்லை..
பெரிய வினாக்களுக்கான சிறிய விடைகளும்
சிறிய வினாக்களுக்கான பெரிய விடைகளும்.

ராமலக்ஷ்மி

~oOo~

ஈரம்

எழுதும்போதே வாசிக்கப்பட்டது
ஒரு கவிதை.

எத்தனை கவிதைகள்
புற்கொம்பில்
எத்தனை கவிதைகள்
இலைநாவில்

அத்தனையும் கொடுத்து
அள்ளியள்ளி பச்சையுண்டு
எஞ்சியதையும் வீசி
வானம் போதையேறி வீழ்ந்தபோது
வனமே நனைந்திருந்தது
நதியை தவிர.

ஆதி கேசவன்

~oOo~

புலன்மயக்கம்

பட்டென்று போய்விடுவதெனவே
முடிவெடுத்திருந்தேன்
முடிவுதான் பட்டென
முகத்தைக்கூட பார்த்துவிட
முடியவில்லை
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
இமைத்துவிட்டாலும் கசங்கிப்போமோ
எனும் அச்சம் தரும் ஓருணர்வு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
சொல்லொன்றாவது
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாக ஏதேனும் நிகழும்
எனக் காத்திருக்கிறேன்
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்
எங்கிருந்து வருகிறது
இந்த குளிர்காற்றின்
இதம் குலைக்கும்
உறுமல்
மேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது

காத்திருக்கிறாய்
எப்படி முடிப்பேன்

சரவணன் அபி