முன்பெல்லாம் புறாக்களின் வழியே தூது அனுப்பினார்கள். இன்று அவ்வளவு நேரம் எல்லாம் நம்மிடம் இல்லை. வேகம். மேலும் வேகம். அதிவேகம் என்பதுதான் இன்றைய தத்துவம். கைபேசியில் சில எண்களை அமுக்கி விட்டின் அடுத்த அறையிலிந்து புவியின் கடைசி கண்டம் வரை பேசுகிறோம். கோடிக்கணக்கான மின்காந்தப் புறாக்கள் ஜிவ்வென்று எழுந்து சிறகுகள் விரித்து வானில் அனைத்து திசைகளிலும் பறக்கின்றன. ‘முத்தம் தாயேன்!’ என்பதிலிருந்து ‘நமது அடுத்த குறிக்கோள் இந்தியா’ என்பது வரை அனைவரின் சேதியையும் எடுத்துச்செல்கின்றன. கைபேசி சினுங்காத நேரம் உண்டா பூமியில்? சதா சினுங்கும் பிரம்மாண்டமான தகவல்தொடர்பு வலை. மனிதன் வடிவமைத்தது.
இன்னொரு வகை தொடர்பு வலை உள்ளது. ஆனால் இதை எந்த மனிதனும் வடிவமைக்கவில்லை. ஏனெனில் இது மனிதனின் கற்பனைக்கு எட்டாத அளவில் விரிந்த வலை. இதில் ஒருவர் இன்னொருவரிடம் தமிழில் பேசுவதில்லை. ஆனால் தொடர்பு மட்டும் இருக்கிறது. இதன் மாந்தர்கள் சூரியனும் பூமியும். சூரியன் ‘ஹலோ’ என்று கோடிக்கணக்கான கதிர்கைகளை விரிக்கிறது. எட்டு நிமிடத்தற்குப் பிறகு பூமியில் கோழி கூவுகிறது. பூ மலர்கிறது. பனி உருகுகிறது. விலங்கும் மனிதனும் கண்விழித்து ‘குட் மார்னிங்’ என்கிறார்கள். இதுவும் ஒருவகை செய்திதான். செய்தியைக் கொண்டுவருவது ஒளி.
ஒளியினால் ஆன இந்த தூதுவலை சூரியனையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை. இந்த வலை நமது பிரபஞ்சம் முழுவதையும் இணைத்துள்ளது. நம் பூமி பால்வழித்திரளில் குடியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஆத்தூருக்கு ஐ.எஸ்.டி வருவது போல பல கோடி மைல்கள் அப்பால் உள்ள அடுத்த கேலக்ஸியில் இருந்து புவிக்கு தூதைச் சுமந்து வருகிறது ஒளி. அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கப்பால் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் வருகிறது.
‘ஹலோ’ என்று சொல்லும்போதே நம்மிடம் பேசுவது யார் என்று பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுகிறோம். ஏனெனில் ஒவ்வொரு குரலுக்கும் ஒரு பிரத்யேகத் தன்மை இருக்கிறது. ஒவ்வொருவரின் கையெழுத்து போல.
ஆனால் ஒரு நட்சத்திரம் என்ன செய்தியை அனுப்ப முடியும்? எந்த மொழியில்? கண்டிப்பாக தமிழில் இல்லை. ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், மேண்டரின் என மனிதன் பேசிக்கொண்டிருக்கும் 6500 மொழிகளில் எதிலும் இல்லை. இதை இயற்கையின் மொழி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
மனிதன் கூர்மதியாளன். இயற்கையின் மொழியை, செய்தியை அவனால் சிறிதளவேனும் அறிய முடியும். சரியாகச் சொல்வது என்றால் நாம் காணும் ஒளி மட்டும் தொடர்புவலையை ஏற்படுத்தவில்லை. பிற மின்காந்த அலைகள் அனைத்தும் தொடர்பை ஏற்படுத்துகின்றன. ரேடியோ அலைகள், புற ஊதா, அகச்சிவப்பு, எக்ஸ் ரே, காமாக் கதிர்கள் என.
அப்பாலுக்குப்பால் உள்ள அனைத்தையும் இவ்வாறு நம்மை வந்து அடைந்து மின்காந்த அலைகளின் வழியாகத்தான் அறிகிறோம். அதற்காக சிறப்புவகை கருவிகளும் முறைகளும் வடிவமைக்கிறோம். ‘சிக்னல்’ சரியாக கிடைக்கவில்லை என்றால் விண்ணில் கலங்களை ஏவி உற்று நோக்குகிறோம். ஏனெனில் புறஊதா, எக்ஸ்ரே போன்ற அலைகளை காற்றுமண்டலம் தடுத்துவிடுகிறது.
இதுபோல ஒளியையும் பிற துகள்களையும் ஆராய்ந்து அவை எங்கிருந்து வந்தன என்று அறிந்து கொள்ளமுடியும். இதில் ஒரு சிக்கல் உள்ளது. ஒளிராத பொருட்களை எப்படி அறிவது? சரி வேறு துகள்கள் வழியாக அறியலாம். அதுவும் இல்லையென்றால்? ஏனெனில் நம் பிரபஞ்சத்தில் ஒளிரும் பொருட்கள் மட்டும் இல்லை.
உதாரணமாக கருத்துளை. கருத்துளை ஒரு சிறப்புவகை வெளி. இந்த வெளி ஒளியையும் பொருண்மையையும் உமிழ்வதில்லை. இதுபோன்ற ஆர்வமூட்டும் நிகழ்வுகளை பின் எப்படி கண்டறிவது?
சூரியன் பூமி போன்ற நிறைகள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன. பொதுவாக இரு நிறைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பின் காரணம் என்ன என்பது அடிப்படை வினா. அனைத்து நிறைகளையும் ஆளும் ஈர்ப்பு ஒரு விசை என்றார் நியூட்டன்.
பொதுசார்பியல் கோட்பாடு நியூட்டனின் இந்தப் பார்வையை மாற்றி அமைத்த்து. ஈர்ப்பு என்பது விசை அல்ல. அது காலவெளியில் ஏற்படும் குலைவு என்றார் ஐன்ஸ்டீன். அதாவது ராட்சச நிறைகள் அதைச் சுற்றியுள்ள காலவெளியையே குலைக்கின்றன. அது அதைச்சுற்றி அமைந்துள்ள மற்ற நிறைகள் எப்படி சுழலவேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. நிறைகளைச் சார்ந்த ஒரு வடிவியல் விளக்கத்தை ஐன்ஸ்டீன் அளித்தார்.
பொதுசார்பியல் கோட்பாட்டின் இன்னொரு தர்க்க ரீதியான கணிப்பு ஈர்ப்புடன் சம்பந்தப்பட்ட அலைகள். ஐன்ஸ்டீன் 1916-ல் ஈர்ப்பு அலைகள் என்ற சிறப்புவகை அலைகள் இருக்கவேண்டும் என்பதையும் கணித்தார். அதைப் போல பின்பு கருத்துளைகளையும் கணித்தனர். இது பொது சார்பியல் கோட்பாட்டின் தீர்வுகளில் ஒன்று.
ஈர்ப்பு அலைகள் உண்மையில் காலவெளியில் ஏற்படும் அலைகள். கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம் போன்றவை ராட்சச நிறைகள் கொண்டவை. அவை ஒன்றை ஒன்று சுழலும் நிகழ்வு அதைச் சுற்றியுள்ள காலவெளியையே உருக்குலைக்கின்றன. இந்த உருக்குலைவு குளத்தில் எறியப்பட்ட கல் எழுப்பும் நீரலைகளைப் போல காலவெளியில் அலைகளாக அனைத்து திசைகளிலும் விரிகின்றன.
அதாவது இந்தியப் பெருங்கடலில் ஐ என் எஸ் விக்ரமாதித்யா போன்ற இரு பெரும் கப்பல்கள் மின்னல் வேகத்தில் ஒன்றை ஒன்றை வட்டமடித்து அதைச் சுற்றியுள்ள நீரை கிழித்து சிதறடிப்பது போன்றது. ஆனால் அதைவிட பன்மடங்கு சக்தி கொப்பளிக்கும் நிகழ்வு கருத்துளைகள் சுழலும் நிகழ்வு. இந்த நிகழ்வு காலத்தையும் வெளியையும் கிழித்து சிதைக்கிறது. ஆனால் தொலை தூரத்தில் நிகழ்வதால் இந்த அலைகள் பூமியை வந்தடைவதற்குள் சாந்தரூபம் கொள்கின்றன.
ஈர்ப்பு அலைகளைக் கண்டறிய இன்டெர்ஃபெராமீட்டர் (Interferometer) என்ற சிறப்புவகை கருவி தேவை. இது லேசர் ஒளியை அடிப்படையாகக் கொண்டது. ஈர்ப்பு அலைகளால் வெளியில் ஏற்படும் சிறு குலைவை இது பதிவுசெய்யமுடியும்.
முதலில் 1970-களில் ஈர்ப்பு அலைகள் சோதனையின் மூலம் உறுதிச்செய்யப்பட்டது. சமீபத்தில் அதாவது 2016-ல் இந்த ஈர்ப்புஅலைகளை நேரடியாக கண்டறிந்தனர். ஏறக்குறைய 1.3 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன் இரு கருத்துளைகள் ஒன்றை ஒன்று விழுங்கின. ஒன்றை ஒன்று சுழலும் இரு கருத்துளைகள் காலபோக்கில் ஒன்றாக இணையும். சிறுபயல்கள் ஊதும் இரு சோப்பு குமிழிகள் காற்றில் இணைந்து ஒன்றாவது போல.
கருத்துளைகள் ஒன்றுடன் ஒன்று ஐக்கியமாகிய நிகழ்வு வெளியில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. 1.3 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் அந்த அதிர்வுகள் பூமியை வந்தடைந்தன. இன்டெர்ஃபெராமீட்டர் கருவிகள் அதை கண்டறிந்தன. கருவியின் தகவல் பின் மனிதசெவி உணரும் ஒலி அலைகளாக மாற்றப்பட்டது. தொலைதூரப் பிரபஞ்சத்தை பார்ப்பதுடன் அல்லாமல் இனி கேட்கவும் இயலும்.
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு முனையில் இயற்கை ஒரு பெரும்முரசத்தை முழங்குகிறது. பலகோடி ஆண்டுகளுக்குப் பின் தொலைதூரம் கடந்து அந்த இசையின் ஒலி பூமியை வந்தடைகிறது. அத்தனை பொழுதுகளுக்கும் உரிய இசை இங்கு புவியில் உண்டு. ஆனால் தொலைதூர பிரபஞ்சத்தில் இருந்து வரும் இந்த ஒலி எந்தப் பொழுதின் இசை? காலாதீதத்தின் இசையோ.
நற்றமிழில் நலமாக சொல்லி இருக்கிறீர்கள். நானும் இது போன்று ஒரு கட்டுரை தொடர் வானவியல் பற்றி எழுத எண்ணம். தமிழில் வானவியல் எழுத முடியா இழி நிலையும் நேரமின்மையும் தள்ளி போட வைத்துள்ளன. அருமையாக சொல்லி இருக்கிறீர். புகை படங்கள் பரவலாக செய்தீர்கள் என்றால் பொது மக்களுக்கு ஈர்ப்பாக இருக்கும். நன்றி.