லோக மாயை!

 

அந்த இடம் பணப் புழக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஒரு இரண்டாம் தர வரிசை வட இந்திய நகரத்தின் தெருவைப் போல இருந்தது. நகைக் கடை, துணிக் கடை வாசல்களில்  விளம்பர துண்டு காகிதங்களை “ஆயியே பஹன்ஜி” என அன்பாக விளித்து  வினியோகிக்கும் சர்தார்ஜி அங்கிள்கள், நடை பாதை  தள்ளு வண்டியில் வாசனை திரவியங்கள், கண்ணாடி மற்றும் உலோகங்களிலான அழகுப் பொருட்கள், தொழுகைக்கான சிறிய அழகிய கம்பளங்கள் என பல பட்டறையாக விற்கிற, உருது, வங்காளம் பேசும்  தாடிக்கார முஸல்மான் கிழவர்கள், கடையின் வெளியிலேயே  அடுக்கி வைக்கப் பட்ட நல்ல புஷ்டியான, பளபள வென்ற குண்டு கத்திரிக்காய்கள், வளப்பமான வாழைக்காய்கள், ஆரோக்யமான தக்காளி, எலுமிச்சம் பழம்,என ஆரம்பித்து, மனிதன் சாப்பிட இத்தனை பொருட்கள் தேவையா என சந்தேகப்பட வைக்கிற அளவுக்கு பொருட்கள் இருக்கிற பெரும் பெரும் கடைகள், போட்டுக் கொண்டிருக்கும் நவீன உடைக்கு சம்பந்தமில்லாமல் ”ஒந்து சாரி நோடிக் கொண்டு ஹோகனா” என்கிற இளம் பெண், “யா!” என்று கையில் உள்ள ஐ ஃபோனை பார்த்துக் கொண்டே அசுவாரசியமாக  பதிலிறுக்கும் இளைஞன், “ஸுனியேஜி!” என்று மூச்சிறைக்க , கணவன்மார்கள் பின்னோடு நடக்கும் மார்வாரி மாமிகள்,கொஞ்சம் கவனமாக நடக்கக் கோரும் தெருவோரக் குப்பைகள்…..

கண்ணைக் கட்டி இங்கு யாரையாவது கொண்டு விட்டால்,

இந்த இடம் நியூயார்க் நகரத்தின் ஒரு தெரு என்று ஊகிக்க கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?’ நினைத்துக் கொண்டே நடந்தாள் மேகா.

கிட்டத்தட்ட எண்ணூறு மொழிகள் புழங்குகிற நகரம் என்று சிலாகிக்கப் படுகிற நகரம். குறைந்த பட்சம் பத்து மொழிகளாவது இன்று காதில் விழுந்திருக்கும்!

கண்ணாடி கதவுக்கு பின்னாலிருந்து ‘ராஜா சாட் ஹவுஸ்’ பங்களாதேஷி ஆன்டி, இந்த பதினைந்து நாட்கள் பழக்கத்திற்கே கையை ஆட்டி சிரித்தாள். ஒரு நிமிஷம் யோசித்தாள், “வெளிச்சம் இருந்தாலும் மணி என்னவோ எட்டு , இனிமே போய் சமைத்து…” அலுப்பாக இருந்தது.

பராட்டா, சப்ஜி கட்டுகிற வரைக்கும் மசாலா தேநீர். ஆன்டி “இன்னும் ஏதாவது வேண்டுமா குழந்தை!” என்று அன்பாக கேட்டாள் ஹிந்தியில். நன்றியுடன் புன்னகைத்து விட்டு கிளம்பினாள்.

கட்டிடத்தின் முன் கதவைத் திறந்து கொண்டு  நுழையும் பொழுது எலிவேட்டர் அருகில்,வயதான பெண்மணி. யாருமில்லாமலிருந்தால், நன்றாக இருந்திருக்கும் , என்ன பண்ண? இவள் போய் நின்று “ஹை” என்றதும், நிமிர்ந்து இவளை அளப்பது போல் ஒரு தீர்க்கமான பார்வை  பார்த்து விட்டு,” அற்புதமான வெதர்! இல்லையா? “ என்ற பின்

“இந்தியன்?” என்றார்

“ஆம்”.

உலகம் முழுக்க வயதானவர்கள் எவ்வளவு சுலபமாக சலுகை எடுத்துக் கொள்ளுகிறார்கள்!

அடர்ந்த அரக்கு வண்ண நிற நீள கவுன், தலையில் மெல்லிய வெண்ணிற தொப்பியில் சிறிய பூ வேலைப்பாடு, கழுத்தில் முத்து மாலையின் முடிவில் நெருப்பின் துளியாய் ஒரு மணி, பளீரென்ற சிவப்பு உதட்டு சாயம்,காலம் முகத்தில் அச்சடித்த சுருக்கங்களும், பழுப்பு நிற புள்ளிகளும், ஏதோ ஒரு கிழக்கு ஐரோப்பிய ஓவியன் வரைந்த “ருஷ்ய மூதாட்டி” என்ற ஓவியத்திலிருந்து நேராக கீழே இறங்கி வந்தவள் போல இருந்தார்.

“ஓல்கா” என்று கை நீட்டினார்.கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது. எப்படி ருஷ்ய பெண்மணி என நினைத்தேன்!

“மேகா”

எலிவேட்டர் டிங்க் என்று மணி அடித்து தான் வந்ததை அறிவுறுத்தியது.

உள்ளே நுழைந்ததும்,மேகா எந்த மாடி என்பது போல் பார்த்தாள்,பாட்டி   “ஆறு” என்றதும், ஐந்தையும் ஆறையும் முறையே அழுத்தினாள்.

ஒரு வேளை ராஜ் கபூர், நேரு என்று பேச ஆரம்பிப்பாளோ? அம்மா எப்போதோ சொன்னது இப்பொழுது நினைவுக்கு வந்தது. ஊடகங்கள் கட்டமைக்கிற பிம்பங்களிருந்து விடுபடுதல் கொஞ்சம் கஷ்டம்தான்!

“உனக்குத் தெரியுமா? இந்த கட்டிடம் 1938ல் கட்டப்பட்டது, நான் இங்கு வந்தது 1968ல்.நாற்பத்தெட்டு வருடங்கள் ஆயிற்று இங்கு வந்து!! இங்கு அனேகமாக இருப்பவர்கள்,இருந்தவர்கள் எல்லாரையும் நன்றாகத் தெரியும்! நீ இங்கு யாரைப் பார்க்க வந்திருக்கிறாய்”

“இல்ல! நாங்கள் இங்கு புதிதாக குடி வந்திருக்கிறோம்!பதினைந்து நாட்களாகிறது!”

“இங்கு ஐந்தாம் மாடியிலா? எங்கு?” கிழவிக்கு கண் நல்ல கூர்மைதான் என நினைத்துக் கொண்டே “ஐந்து, சி”என்றாள் மேகா.

“ஐந்து சி. ஆஞ்சலொ பிடிலு வீடா?”

நல்ல ஞாபக சக்தியும்தான்.

“ஆம்!”

“அங்கேயா?” கண்ணை சுருக்கிக் கொண்டு “ஏன்?”

இது என்ன கேள்வி?இதற்கு என்ன பதில் சொல்வது?

தலையை சோகமாக அசைத்தார்,” ஒரு பதினைந்து வருடம், இல்லை சரியாக சொல்லுவதானால்1998 ல் அங்கு ஒரு அற்புதமான குடும்பம் இருந்தது, கணவன், மனைவி , இரு குழந்தைகள். ரொம்ப மென்மையான , உண்மையான கனவான் அந்த மனிதன்.எப்போது பார்த்தாலும் ரொம்ப மரியாதையாக இரண்டு வார்த்தை பேசிவிட்டுதான் செல்வான். முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. .அப்புறம் அந்த கணவனுக்கு வேலை போனவுடன் ஆரம்பித்தது, வினை.அந்த வீட்டிலிருந்து சண்டை போடும் சத்தமும்,அழும் சத்தமும், சாமான்கள் விட்டெரியும் சத்தமும் கேட்க ஆரம்பித்தன. இந்த கட்டிட மேற்பார்வை குழு அவர்களை எச்சரித்தது, மற்றவர்களுக்கு இந்த மாதிரி தொந்தரவு கொடுக்கிற பட்சத்தில் அவர்களை காலி செய்யும்படி நிர்பந்திக்க நேரிடும் என்று. சில நாட்களில் அந்த கொடூரம் நடந்தது. விதி வசமாக அன்றைக்கு நான் எலிவேடர் வேலை செய்யவில்லை என்று என் தளத்திலிருந்து படி வழியாக இறங்கி வந்து கொண்டிருந்தேன். அவர்கள் வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் நாலைந்து முறை. ஓடினேன். இப்போது தோன்றுகிறது, அது எவ்வளவு ஆபத்து என்று! அப்போது தன்னிச்சையாக ஓடினேன், கதவைத் தொட்டேன், திறந்தது. அங்கே அவர்களின் ஆறு வயது பெண்குழந்தை நுழைகிற இடத்தின் கூடத்தில் ரத்த வெள்ளத்தில்.அங்கிருந்து ஓடி அனைவரையும் அழைத்து…. அப்புறம் மற்ற எல்லோரும் வந்து,காவல் துறை வந்து…… பின்னர் சொன்னார்கள், சமையலறையில் அந்த பெண்மணி, அப்புறம் படுக்கை அறையில் அவர்களின் இரண்டு வயது குழந்தை எல்லாரும் சுடப்பட்டிருந்தனர், அவர்கள் அனைவரையும் சுட்டு விட்டு தன்னைத்தானேயும் சுட்டுக் கொண்டு அந்த மனிதனும் செத்துப் போயிருந்தான். என்ன பயங்கரமான காட்சி! அப்புறம் ஆறு,ஏழு மாதம்  அந்த வீடு பூட்டிக் கிடந்தது!!”

கையும், காலும் சில்லிட்டது, கன்னங்களும் காதுகளும் எரிந்தன.என்ன சொல்லுகிறாள் இந்த கிழவி? இன்னும் ஏன் ஐந்தாம் தளம் வரவில்லை?

‘டிங்க்!’ மணி அடித்தது, திறந்த எலிவேடர் கதவு வழியாக ஏறத்தாழ ஓடி வெளியே வந்தாள். கதவு மூடுகிற நேரத்தில் கிழவியைப் பார்த்தாள், அவள் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்பு!!

உடலுக்குள் முற்றாக வெற்றிடம் உருவாகி, வெளி காற்று அழுத்தம் அவளை நெருக்கி, மூச்சு விடுவது பெரும் அவஸ்தையாகியது.

மஞ்சள் விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தில், குறுகிய அந்த காரிடாரின் இரண்டு பக்க சுவர்களும் அவளை நெருக்குவது போல இருந்தது.வீட்டுக்குப் போகாமல், பயத்தில் கனத்த கால்களை இழுத்துக் கொண்டு படிகளை நோக்கி ஓடினாள். ஐந்து மாடிகளையும் கிட்டத்தட்ட விழுந்தும் எழுந்தும் இறங்கி ஓடிக் கடந்தாள்.

கைப்பையில் இருந்த கைபேசி அவசரத்துக்கு சிக்க மறுத்தது.

‘இந்த கடங்காரன் வருண் எங்கே போய்த் தொலைந்தான்?கடவுளே! முக்கியமான நேரத்தில் கிடைக்காமல் போவதில் மன்னன்!!’

கட்டிடத்தின் முன்கூடத்தை நாலே எட்டில் கடந்து கதவில் கை வைத்த கணம், அவன் “ஹை! ஸ்வீட்டி!” என்றபடி வந்தான்.

“ஸ்வீட்டியாவது, மண்ணாங்கட்டியாவது!நான் உயிர் போகிற பயத்தில் இருக்கிறேன்!”பயத்தில் கத்தத் தொடங்கினாள்.

“என்னாச்சு?”

“வெளியில் வா! நடந்து கொண்டே சொல்கிறேன்”

சொன்னாள்.

“கமான் ஸ்வீட்டி! ஏதோ ஒரு வயதான, டிமென்ஷியா பெண்மணி என்னவோ உளறினால் , அதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறாய்?அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை! அந்த மாதிரி சந்தேகமாகக் கூட யாரும் சொல்லவில்லை!”

“அந்த கிழவி பேசியதை நீ கேட்டிருந்தால் என்னை விட நீதான் நம்பியிருப்பாய், எனக்கு இப்போ வீட்டுக்குள்ள போகவே பயமா இருக்கு.  கூடிய சீக்கிரம் நாம் வேற வீடு பாத்துண்டு போய்டலாம் ப்ளீஸ்! இங்க இருக்க வேண்டாம்”

“இதைப் பாரு! நாம இப்ப வீட்டை காலி பண்ணினா, வாடகை ஒப்பந்தப் படி, பதினோரு மாதம் முடியும் முன்ன காலி பண்றதால பெனால்டி ஆக ஒரு மாத வாடகை அதிகப்படி தரணும், தவிர நம்ம வீட்டைக் கண்டு பிடிச்சு குடுத்த ஏஜண்ட்டுக்கு குடுத்த பணம், மூவர்ஸ் அண்ட் பாக்கெர்ஸ்க்கு குடுத்த பணம் எல்லாம் ஐந்தாயிரம் டாலர் போல அப்பிடியே போயிடும்! இப்ப இருக்கற நம்ம நிலமைக்கு… உனக்குத் தெரியும் நம்ம பாங்க் பாலன்ஸ் ஜீரோ. வேற வீடு போறது, நடக்க முடியாத காரியம்!”

“நீயும், உன் கஞ்சத்தனமும், உன் தர்க்க புத்தியும் நாசமாப் போக!” என்றாள் மேகா.

அவன் சிரித்தான்.

“இப்ப என் பயத்துக்கு என்ன வழி?”

“நீயே சொன்னபடி அந்த கொலை நடந்த இடம் ஃபாயர், சமையலறை, படுக்கை அறை, எனவே லிவிங்க் ரூமில எதுவும் நடக்கல! நீ அங்கேயே இரு! வீட்டில எல்லா லைட்டையும் போடறேன், தூக்கம் வர வரைக்கும் நாம பாக்காத “கேம் ஆஃப் த்ரோன்” “ஹௌஸ் ஆஃப் கார்ட்” வீப்” எபிசோட் எல்லாம் பாக்கலாம்! ஒகே? அடுத்த பிரச்னை, இப்போ பசிக்கறது! சாப்பாட்டுக்கு என்ன வழி?”

“எல்லாம் வாங்கியாச்சு! எப்பவும் வயித்தைக் கட்டிண்டே அழு!! போய் சாப்பிடலாம், கவலையே படாதே! நல்ல வேளை, எனக்கு நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு நைட் டூட்டி! நீயே வீட்டுலே நன்னா கிடந்து பயந்து சாகு!”என்றாள்.

“எனக்கும் நாளையிலிருந்து இரண்டு நாள் நைட் டூட்டிதான்!” என்றான்.

“அடப்பாவி! இதிலும் உனக்கு அதிர்ஷ்டமா! உனக்கு அந்த கிழவி மாதிரி ஆளெல்லாம் சிக்கறதேயில்லை!”

வீட்டுக்குள் நுழையவே அவளுக்கு பயமாக இருந்தது.

“நீ என்ன சொன்னாலும் எனக்கு பயமா இருக்கு வருண்!”

“பயப்படாதே! நான் உள்ள போய் எல்லா லைட்டையும் போடறேன்! நாம சாப்டலாம், அப்புறம் டீ.வீ பாக்கலாம்! நாளைக்கு கார்த்தால முதல்ல ஷானைப் பார்க்கலாம்.அவன் இந்த கட்டிடத்தைப் பத்தி நன்னா தெரிஞ்சவன்! அவன் இந்தமாதிரி ஒண்ணும் நடக்கலைன்னு சொன்னா உனக்கு தைரியமா இருக்கும்னு நினைக்கறேன்”

 

 

ஷான் அந்த கட்டிடத்தின் மேற்பார்வையாளன்.அவன் அந்த கட்டிடத்தின்  பராமரிப்பிற்கும், மேற்பார்வைக்கும் பொறுப்பானவன். அந்த கட்டிடத்தின் கீழ் தளத்திலேயே அவனுக்கு வீடு கொடுத்திருந்தார்கள். நல்ல தோழமையானவன்,ஆனாலும் அலுவலக நேரத்தில் மட்டும்தான் அவன் குடியிருப்பவர்களை சந்திக்க விரும்புவான்.

இரவு முழுவதும், தூக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையில் அல்லாடி ஒரு வழியாக விடியும் வேளையில் தூங்கினாள்.

ஷான் இவர்களைப் பார்த்ததும் அவனின் ஆரோக்கியமான பற்களைக் காட்டி பளீரென்று சிரித்தான். இவர்களிருவரையும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். வருணுடன் கிரிக்கெட் பற்றி பேச முடியும் என்பது  அந்த பிடித்தத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.

அவன் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்தவன்.தன்னுடைய பள்ளிக்கூட நாட்களில், அங்கு வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றி ரொம்ப புளகாங்கிதமாகப் பேசுவான். சச்சின் தெண்டுல்கரை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

அன்றைக்கும் உலகின் எதோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருந்த  மாட்சைப் பற்றி இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டார்கள்.

இவளிடம் “உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்கு நான் சச்சின் என்று பெயரிடலாம் என் நினைக்கிறேன்! உங்களுக்கும் சச்சின் பிடிக்கும் இல்லையா?” என்றான் ஷான்.

“யா! சச்சினும் பிடிக்கும், ராஹுலும் பிடிக்கும்”என்றாள்

“ராஹுல் த வால்” சிரித்தான்.

சிரித்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்து விட்டு, பேச இடை வெளி விடாமல் சட்டென்று கேட்டாள், “ஏன் ஷான்! நாங்கள் இருக்கிற வீட்டில்  சில வருடங்களுக்கு முன் ஏதேனும் துரதிர்ஷட வசமாக நடந்திருக்கிறதா?”

“உதாரணமாக?”

“பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் குடும்பத்தின் தலைவராலேயே கொலை செய்யப்பட்டார்கள், அவரும் தற்கொலை செய்து கொண்டார் என்று இங்கு குடியிருக்கும் ஒருவர் சொன்னார். உண்மையா?”

“ அப்படியா? அது மாதிரி நான் எதுவும் கேள்விப் படவில்லையே? நான் இங்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன, ஆனாலும் அப்பிடி ஏதும் முன்னர் நடந்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள்!”

“அதை கேட்டதிலிருந்து கொஞ்சம் பயமாக இருக்கிறது!என்ன செய்வது என்று தெரியவில்லை”

“ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும், இந்த பத்து வருடங்களில் பல குடும்பங்கள் அந்த வீட்டில் இருந்திருக்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்து விட்டுதான் போனார்கள், அந்த வீட்டில் எதுவும் பிரச்னை இருந்ததாக சொல்லவில்லை! அதனால் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை என்றே சொல்லுவேன்!”

பார்த்தாயா என்பது போல் வருண் அவளை பார்த்தான்.

“நீங்கள் தப்பாக நினைக்கவில்லை என்றால் யாரென்று சொல்ல முடியுமா?” ஷான் கேட்டான்.

“ஆறாம் தளத்தில் வசிக்கும் வயதான ரஷ்ய  பெண்மணி ஓல்கா, இங்கு நாற்பது வருடங்களாக குடி இருக்கிறேன் என்றார்”

“ஆறாம் தளத்திலா?” கொஞ்சம் யோசித்தான்.

“ஆறு ஏ ல் ஓவியர் மிகலும் அவர் சினேகிதரும், ஆறு பி யில் ஐரிஷ் பெண்மணி மெரில் லின்ஞ்சில் வேலை பார்ப்பவர், ஆறு சியில் சர்வகலாசாலையில் உயர் படிப்பு படிக்கும் ஜெர்மனிய இளைஞனும்,அவரது ஆசிய பெண் சினேகிதியும், ஆறு டியில் பங்களாதேஷி குடும்பம் அவரது மூன்று குழந்தைகளுடன், ஆறு ஈயில் இரானிய குடும்பம் ,கல்லூரியில் படிக்கும் இரண்டு பெண்களுடன்…. நீங்கள் குறிப்பிடும் நபர் யாரும் அந்த தளத்திலேயே , ஏன் இந்த கட்டிடத்திலேயே அந்த விவரணைக்கு பொருந்தும்படி யாரும் இல்லையே!”என்றான்.

கொஞ்சம் யோசித்து விட்டு

“என்னைக் கேட்டால் நீங்கள்கவலைப் பட வேண்டாம் என்றே சொல்லுவேன்! அங்கு குடியிருந்த யாருக்கும் எந்த பிரச்னையும் இருந்ததில்லை” என்றான்.

“ஒ கே ஷான்! நன்றி!”

“பார்த்தாயா?அந்த வீட்டில் அந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை என்கிறான்!”

“முட்டாள்! அதை மட்டும்தான் கவனித்தாயா? இந்த கட்டிடத்திலேயே  அந்த ரஷ்ய பெண்மணி யாரும் இல்லை என்கிறானே? கவனிக்கவில்லையா? பின்னே நான் பார்த்தது யார்?”

“ஓ! அதுவா?, நான் நினைக்கிறேன், அந்த மூதாட்டி வேற ஏதாவது பில்டிங்கிலிருந்து இங்கு வந்திருக்கலாம்”

“இங்கேயே நாற்பது வருடங்களாக இருக்கிறேன் என்றாளே”

“பொய் சொல்லியிருக்கலாம்!”

“நீயே அவளைப் பார்த்தால் ஒழிய நம்பப் போவதில்லை”

“எதுவாக இருந்தாலும், இங்கு இருந்தவர்களுக்கு எந்த பிரச்னையும் இருந்ததில்லை என்கிறானே! குறைந்த பட்சம் அதை நம்பலாம்!”

கொஞ்சம் யோசனைக்குப் பிறகு மெதுவாக கேட்டாள்,

“அப்புறம், முதல் தளத்தில் இருந்து , ஐந்தாம் தளத்திற்கு எலிவேடர் போக எத்தனை நேரம் பிடிக்கும்?”

“அதிக பட்சம் பத்து செகண்ட், இந்த எலெவேடர் ரொம்ப பழையது அதனால் அவ்வளவு நேரம் ஆகும் என நினைக்கிறேன்.”

“அந்த பத்து செகண்டில் அவ்வளவு விஷயம் சொல்லியிருக்க முடியுமா?”

“பார்த்தாயா, உனக்கே சந்தேகம் வருகிறது பார்”

அவனை கூர்மையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “பின்னே ? இது எல்லாம் என் கற்பனை என்கிறாயா?”என்றாள்.

“நோ! நோ! அப்படி சொல்லவில்லை”

“ஏன் சொல்லித்தான் பாரேன்!, நிச்சயம் ஒரு நாள் உனக்கு அவளைக் காட்டத்தான் போகிறேன், அப்பொ பாக்கலாம் உன் வீரத்தை!” என்றாள்.

எத்தனை பயம் தரக் கூடிய விஷயமாக இருந்தாலும் அது நாட்கள் செல்ல செல்ல நீர்த்துப் போவது, மனித குலத்திற்கு ரொம்ப பெரிய வரம் என்று தோன்றியது.அந்த வாரம் முழுக்க இருந்த மூச்சு விடக் கூட அவகாசம் தராத இரவு நேரப் பணிக்கு நன்றி எனச் சொல்லிக் கொண்டாள்.

 

 

பத்து, பதினைந்து நாட்கள் கழித்து அவளுக்கு மீண்டும் இரவு நேரப் பணி, அவன் பகல் நேர வேலைக்குப் போயிருந்தான்.

எலிவேடரிலிருந்து வெளியில் வரும் பொழுது பார்த்தாள், அந்த ரஷ்ய மூதாட்டி, கட்டிடத்தின் முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்க் கொண்டிருந்தாள்.மேகா ஓட்டமும் நடையுமாக முன் கதவை அடைந்தாள்.

மிகச் சரியாக அதே நேரத்தில் கீழ் தளத்தைச் சேர்ந்த ஏதொ வீட்டிலிருந்து ஒரு இளம் தாய், தன் இரண்டு வயது குழந்தையுடனும், அதன் மூன்று சக்கர வண்டியுடனும்,அந்த கனமான கதவுடன் போராடிக் கொண்டிருந்தாள். இவள் கதவைப் பிடித்துக் கொண்டாள், பார்வை வெளியை விட்டு அகலவில்லை. அம்மா சைகிளுடன் வெளியே போனாள், நன்றியுடனும்,புன்னகையுடனும். அந்த குழந்தை உள்ளேயே நின்று கொண்டு வெளியே போக மறுத்தது. அம்மா,அதை  வெளியே வரச் சொல்லி மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த மூதாட்டி, கட்டிட முகப்பிற்கும், நுழைவாயிலுக்கும் இடையில் இருக்கும் இருபது அடி தூரத்தில் பாதியை கடந்து விட்டிருந்தாள்.

மேகாவிற்கு பொறுமை போய்க் கொண்டிருந்தது. இந்த ஊரில் அன்னியர்கள் அவர்கள் குழந்தையை தொடுவதை விரும்ப மாட்டார்கள் என்பதனால், அவள், பல்லைக் கடித்துக் கொண்டு புன்னகையுடன் காத்துக் கொண்டிருந்தாள்.அம்மா இன்னும் குழந்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சரியாக அந்த தருணத்தில் நுழை வாயில் உள்ளே வருண் வந்து கொண்டிருந்தான்.

அந்த அம்மா ஒரு வழியாக சைக்கிளை கீழே வைத்துவிட்டு குழந்தையை கையை பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு போனாள்.

அந்த மூதாட்டியும், வருணும் ஒருவரை ஒருவர் கிட்டத்தட்ட மோதிக் கொள்கிற இடைவெளியில்,ஆனால் கவனமாக மோதிக் கொள்ளமல் கடந்து சென்றனர்.

கதவுக்கு அருகில் இருந்து தாயும், குழந்தையும் சற்றே தள்ளிப் போன அந்த குறுகிய இடை வெளியில் , மேகா காலை எட்டி வைத்துப்  போனாள். கிழவி கொஞ்சம் வேகமாக நுழை வாயிலை விட்டு வெளியே போய் வலது கைப் பக்கம் திரும்பும் வேளையில், இவளைப் பார்த்து லேசாக சிரித்தாள்.

வருண்  இவள் அருகில் வந்து“ஹை ! ஸ்வீட்டி!” என்றான்.

“பார்த்தாயா?”

“யாரை?”

“உன்னைக் கடந்து போனாளே அந்த வயதான பெண்மணியை”

“இல்லயே! அந்த இளம் அம்மாவையும் , குழந்தையையும் தவிர யாரும் என் எதிரில் வரவில்லயே!”என்றான்.

 

 

“அம்மா!நினைத்த நேரத்தில் தூங்குவது, நினைத்தபோது எழுந்து கொள்வது,வேண்டிய புத்தகங்களை படிக்க நேரம் கிடைக்கிற ஆடம்பரத்தை அனுபவிப்பது, ஊஞ்சலை மெதுவாக ஆட்டிக் கொண்டே நீ குடுக்கிற, சூடான மொறு மொறு வெங்காய பக்கோடாவை சாப்பிடுவது, இதுக்கு பேர் தான் கிரேட் இண்டியன் ஹாலிடே!” என்றாள் மேகா.

“இந்த பங்களூரின் படு பயங்கர டிராஃபிக்ல வெளியிலே போகாத வரைக்கும்னு ஒரு பின் குறிப்பை கூட சேத்துக்கோ”என்றாள் அம்மா.

“இந்த லீவுலே இத்தனை நாள் கழித்து நீ வந்திருக்கும் போது, யார் தொந்தரவும் இல்லாம, ஜாலியா இருக்கணும்னு நினைப்பேன்னு தெரியும்! ஆனா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு ஆள் வரப் போறா! நீ அதை இடைஞ்சல்னு நினைக்க மாட்டேன்னு எதிர் பாக்கறேன்” எனத்தொடர்ந்தாள்

“என்னம்மா இவ்வளவு பெரிய பீடிகை? வர ஆளு போரா இல்லாத வரைக்கும் ஓகே தான்”

“சாரதா பாட்டி வந்துருக்காடி இங்க பங்களூருக்கு”என்றாள் அம்மா.

“யாரும்மா? திடீர்னு சொன்னா ஒண்ணும் புரியலே”

“ஏய்! நீ சின்னவளா இருக்கறச்ச மதுரையிலே மாமா தாத்தா வீட்டுக்கு கூட்டிண்டு போயிருக்கேன் இல்லயா? அங்க அவா வீட்டு பக்கத்திலே இருந்தாளே, சாரதா பாட்டி?”

“ஓ! ஓ அந்த பாட்டியா?”

கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் துலங்கி வருகிற ஒரு பழய காலத்து புகைப்படம் மாதிரி, மேகாவின் நினைவில் பாட்டி எழுந்தாள்.

“உன்னை கன்னத்தை திருஷ்டி வழிச்சு, தங்க கிளின்னு கொஞ்சுவாளே அந்த பாட்டியா? எங்கிட்டயும் எத்தனை ஆசையா இருப்பா? ரொம்ப சுவாரசியமான,உற்சாகமான பாட்டி!அந்த பாட்டியை பாக்கறது எனக்கு குஷிதான்! இங்க வந்திருக்காளா? நாம போய் பாக்காலாம்மா”

“நான் போய் பாத்துட்டு வந்தேன்.நீ வரப் போறத சொன்னவுடன் பாட்டி ரொம்ப சந்தோஷப் பட்டா.இன்னிக்கு இங்க வரேன்னுருக்கா!”

வாசலில் கார் வந்து நிற்கிற சத்தம் கேட்டதும் அம்மா சின்னப் பெண் மாதிரி உற்சாகமாக ஓடினாள்.

பாட்டி உள்ளே வந்தாள்.உயரமும்,அதற்கு தகுந்த ஆகிருதியுமா, பாட்டி பார்க்க ராஜ களையோடு இருப்பாள்,இத்தனை வருடங்களில் அது இன்னும் ஒரு பிடி கூடிய மாதிரிதான் இருந்தது. எண்பத்தைந்து வயதுக்கு நல்ல ஆரோக்யமாக இருந்தாள்.

மேகாவைப் பார்த்ததும் ”என் தங்கக் கிளியே! எப்பிடி இருக்கேடி என் தங்கம் !”என்று கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்.

‘ஒ இப்போ நான் தங்கக் கிளியா ப்ரோமோட் ஆயிட்டேன் போலிருக்கு’என்று மேகா நினைத்துக் கொண்டு அம்மாவைப் பார்த்து சிரித்தாள்.

“எத்தனை வருஷம் ஆச்சு பாட்டி உங்களைப் பாத்து!எப்பிடி இருக்கேள்?”

“நீதான் டாக்டர் ஆச்சே சொல்லேன் பாப்போம்” என்றாள்.

“ஜம்னு இருக்கேள் பாட்டி! உங்கள் அழகின் ரகசியம் என்ன?”

“உன்னை மாதிரி கெட்டிக்காரியான, அழகான பேத்தி இருப்பதுதான், என் அழகின் ரஹசியம்!” என்றாள் பாட்டி.

“ஆஹா!நீங்க கொஞ்சம் கூட மாறவேயில்லை!”என்றாள் அம்மா.

மூவரும் சிரித்தனர்.பாட்டியோடு ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டே மேகா கேட்டாள்,

“”வேற யாரும் வரலயா உங்க கூட?”

“இல்ல என்னை ட்ராப் பண்ணிட்டு ஷாப்பிங்க் போயிருக்கா! அப்புறம் வந்து பிக் அப் பண்ணிப்பா” என்றாள்.

எனனென்னவோ பழங்கதையும், புதுக் கதையுமாக பேசிக் கொண்டிருந்தார்கள்

“நாம எல்லாம் மதுரையிலே தமுக்கம் மைதானத்திலே நடந்த சித்திரை பொருட்காட்சிக்குப் போனோமே ஞாபகம் இருக்கா?”

“ஆமா பெரிய கூட்டமா போனோம் இல்ல!”

“ஆமா, உங்க அம்மா, உன் அண்ணா சூர்யா, நீ, நான், சதீஷ், உங்க மாமா தாத்தா, அப்புறம் லோகாம்பா பாட்டி…”

“அது யார் பாட்டி?சரியா நினைவில்லயே?”

“எங்காத்துக்கு இரண்டு ஆம் தள்ளி இருந்தாளே, அவாளுக்குக் கூட இரண்டு பேத்திகள், இரட்டை குழந்தைகள், ரஞ்சனா, வந்தனான்னு, கிட்டத்தட்ட அதுகளுக்கும் உன் வயசுதான்”

“ஆங்க்! ஞாபகம் வருது!நாங்கள் எல்லாரும் ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் அவாத்துக்கு கதை கேட்க ஓடிப் போவோம்,அந்த பாட்டி ஜோரா கதை சொல்லுவா”

“ஆமா! எல்லாம் பயங்கர கதைகள்தான்! ராத்திரி முழுக்க தூக்கத்தில பயந்து உளறிண்டு இருப்பா, ஆனாலும் கதை கேட்கறதை விட மாட்டா இப்போ அவா இல்லையில்லை? பாவம்! ”என்றாள் அம்மா.

“சரி அத்தை! நீங்க என்ன சாப்டறேள்?இவளுக்காக வெங்கய பக்கோடா பண்ணினேன், உங்களுக்கு வெங்காயம் வேண்டாமோன்னு வாழக்காயிலே இரண்டு பஜ்ஜி போட்டு வச்சுருக்கேன்!கொண்டு வரேன்” என்றாள்.

“இன்னிக்கு ஒண்ணும் விசேஷ நாள் இல்லையே! அமாவசை, பௌர்ணமி, ஏகாதசி எதுவும் இல்லையே!வெங்காயம் சாப்பிடுவேன் பாதகம் இல்லை, கொண்டு வா” என்றாள் பாட்டி.

அம்மா உள்ளே போனாள்.

பாட்டி மெதுவாக குரலைத் தணித்துக் கொண்டு ரகசியம் பேசுகிற குரலில் கேட்டாள் “ஏண்டி குட்டி! லோகாம்பா பாட்டி உன்னைப் பாக்க வந்தேன்னாளே! உன்னைப் பயமுறுத்தறதுதான் எப்பவும் அவ வேலை”

“இல்லயே பாட்டி! நானே நேத்துதான் இங்க பங்களூருக்கே வந்தேன்! யாரும் என்னைப் பாக்க வரலேயே. நீங்க சொல்றது ஒண்ணும் புரியலேயே”என்றாள் மேகா

“இல்லடி! உன்னைப் பாத்தேன், பேசினேன்னு சொன்னாளே!லோகா! லோகா!”

பாட்டியின் குரலும் கண்ணும் இவளை என்னவோ செய்தது. கழுத்திலும், முதுகிலும் ஏதோ ஊர்வது போல இருந்தது.

“என்னது” மேகாவின் குரல் பாதாளத்திலிருந்து மெதுவாக ஒலித்தது.

“ஸ்க்ராம்ப்ள் இட் !! ஓல்கா” என்றாள் பாட்டி.

 

2 Replies to “லோக மாயை!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.