யாருமற்ற சாலையில்
என் வாகனம் நிதானித்தது
ஓசைகளும் ஓட்டங்களும்
அறுபட ஒதுங்கினேன்
புறப்பசுமை எனை
போர்த்திக்கொண்டது
சற்றுத் தொலைவில்
பறவை ஒன்று நடந்தபடியே
சாலையைக் கடந்தது
அது பூமியில் தன் மெல்லிய
கால்தடம் பதித்து நடந்ததை
அந்த பச்சை பிரபஞ்சம்
பார்த்துக்கொண்டிருந்தது
சிறகுகளை சிறைவைத்து
கால்களை விடுவித்த
அதன் நடை
சிறுநடனம் போலிருந்தது
அது க்ஷணமேனும் வானம்
துறக்க நினைத்திருக்கலாம்
காற்றுநிறை தனிமைப்பெருவெளி
கொஞ்சம் கசந்து
போயிருக்கலாம்
அது நெடுநேரம்
நிலமிருக்க
நினைத்திருக்கலாம்
அது கூடுகளின் காலத்தை
நினைவு கொண்டிருக்கலாம்
அது தொலைத்துவிட்ட
தன் குழாம் தேடிக்களைத்திருக்கலாம்
இரை தேடி இறங்கியிருக்கலாம்
இணை கண்டு இறங்கியிருக்கலாம்
இளைப்பாறவும்
இறங்கியிருக்கலாம்
உயரங்களிலேயே எப்போதும்
உலவிக்கொண்டிருப்பதில்
உடன்பாடில்லாமிருக்கலாம்
அன்றேல்
எப்போதும் பறக்கநினைக்கும்
என்கனவுகளை கலைக்க
நினைத்திருக்கலாம்.