பேருரை (A Lecture Tour)

டிராமெனில்  நவீன இலக்கியம் குறித்த ஒரு பேருரையை ஆற்றவிருக்கிறேன். பணத் தட்டுப்பாடு. கொஞ்ச நாள் தாக்குப்பிடிக்க இது உதவும். உரையாற்றுவது கடின‌மானதொன்றுமில்லை. எனவே 1886 கோடையின் இறுதியில், ஒரு இனிய காலை நேரத்தில், அந்த அழகிய நகருக்குச் செல்லும் இரயில் வண்டியில் ஏறினேன்.

 

டிராமெனில் எனக்கு ஒருவரையும் தெரியாது, அங்கிருக்கும் எவருக்கும் என்னையும் தெரியாது. நான் எனது பேருரையைகுறித்து விளம்பரம் செய்யவுமில்லை. ஆனலும் அந்தக் கோடையின் துவக்கத்தில், ஒரு தாராள பொழுதில், நான் 500 விளம்பர அட்டைகளை அச்சடிக்கச் செய்தேன். அவற்றை விடுதிகளிலும், மதுக்கூடங்களிலும், பெரிய கடைகளிலும் வினியோகிக்கத் திட்டம். எனக்கு அந்த அட்டைகள்மேல் திருப்தியில்லை. என் பெயர் பிழையாக அச்சாகி இருந்தது. இருப்பினும் நான் டிராமனில் அறியப்படாதவனாதலால் அது ஒரு பொருட்டல்ல.

 

இரயிலில் அமர்ந்தபோது சில கணக்குகளை போட்டுப்பார்த்துக்கொண்டேன். பலன்கள் உறுதியாய் தெரிந்தன. என் வாழ்கையின் பல கஷ்டங்களை நான் குறைவான பணத்தைக்கொண்டோ அல்லது பணமே இல்லாமலோ சமாளித்துள்ளேன். என் அழகியல் தேடல்களுக்கு சமமான உயர்தரமான‌ வாழ்கையை வாழும் அளவுக்கு நான் பணக்காரன் இல்லை என்றாலும், பணத்தை சரியாக கையாண்டால் எல்லாம் சீராக அமையும் என்பதே என் பாடு. அரிய பெரிய செயல்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. சாப்பாட்டிற்கு , இருட்டியபின்பு, ஏதேனும் சாதாரணக் கடைக்குள் நுழைந்துவிடவேண்டும். தேசாந்திரிகள் தங்கும் விடுதி ஒன்றில் தங்கிவிடவும் முடியும்.  இவற்றை விட்டால் வேறென்ன செலவாகிவிடும்?

 

இரயிலில் இருந்து என் பேருரையை படித்துப் பார்த்தேன். அலெக்ஸாண்டர் கீலாண்ட் எனும் நாவலாசிரியரைப்பற்றி பேசவிருந்தேன். எனது சக இரயில்பயணிகள் உற்சாகமான ‘குடிமக்கள்’, கிறிஸ்ட்டியானியாவிலிருந்து ஊர்திரும்பிக்கொண்டிருந்த விவசாயிகளின் கூட்டம் அது. ஒரு புட்டியை ஒருவர் ஒருவராக கடத்திக்கொண்டிருந்தனர். எனக்கும் தந்தனர். நான் நன்றியுடன் மறுத்துவிட்டேன்.  சில நேரம் கழித்து, பாசம் வழிந்தோடும் குடிமக்களின் தன்மையுடன், திரும்பத் திரும்ப என்னை அணுகினர், நானும் திரும்பத் திரும்ப மறுத்தேன். பின்னர் என்னுடைய நன்னடத்தையையும் நான் அடிக்கடி எதையோ எழுதிக்கொண்டிருப்பதையும் கண்டு நான் பெரிய விஷயங்க‌ளில் ஈடுபட்டிருப்பதை உணர்ந்து அவர்கள் என்னை  அமைதியாக இருக்கவிட்டனர்.

 

டிராமெனில் இறங்கி என் சணல்பையை தூக்கி ஒரு இருக்கையில் வைத்தேன். இந்த சணல்பையுமே எனக்கு தேவையில்லாதது. பயணத்துக்கான இதுபோன்ற‌ பையை கொண்டு செல்வதால் விடுதிகளில் எளிதில் இடம் கிடைக்கும் எனக் கேள்விப்பட்டிருப்பதால் எடுத்து வந்தேன். அது ஒரு பாழடைந்த மஞ்சள் நிறப் பை. என் போன்ற எழுத்தாளன் கொண்டு திரியும் பொருள் அல்ல. ஒப்பிட்டால் எனது நீல நிற கோட்டும் ஆடைகளும் அதைவிட மரியதைக்குரியவை.

 

விடுதியிலிருந்து வந்திருந்த சுமைதூக்குபவன் ஓடிவந்து என் பையை தூக்க‌ விருப்பம் தெரிவித்தான்.

நான் இன்னும் எந்த விடுதியில் தங்குவதென்று முடிவுசெய்யவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன். முதலில் நான் சில பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்க வேண்டியிருந்தது. எப்படியும் எங்கேயேனும் தங்கியாக‌வேண்டும் இல்லையா? இந்த விடுதி ஒப்பீட்டளவில் மிக வசதியானது. மின்சார மணி, குளியல் தொட்டி, வாசிப்பறை எல்லாம் உண்டு. இங்கே அருகில்தான்  தெருமுனையில் இடதுபக்கமாக..

 

என் பையின் கைப்பிடியை அவன் தூக்கினான்.

நான் தடுத்தேன்.

நானேவா பையை விடுதிக்கு எடுத்துச் செல்லப்போகிறேன்?

ம்ம். நானும் பை போகிற திசையில்தான் போகவேண்டுமாகையால் அதை அப்படியே என் விரலிடுக்கில் போட்டுக்கொண்டால் இருவரும் ஒன்றாய்ப் போய்விடலாமில்லையா?

 

இப்போது அவன் என்னை கூர்ந்து பார்த்தான். நான் பணக்கார கனவான் இல்லை என்பதை உணர்ந்ததும் இரயில் நோக்கி நகர்ந்தான். ஆனால் வேறு எந்தப் பயணியும் அங்கே இறங்கவில்லை எனவே திரும்பி வந்து என்னிடம் வியாபாரம் பேசினான். அவன் எனக்காக‌வே இரயில் நிலையத்துக்கு வந்தான் என்றான்.

 

அப்படியானால் அது வேறு விஷயம். ஒருவேளை நான் இங்கு வருவதை காற்றுவழியாக அறிந்த ஏதாவது சங்கம் – உதாரணமாய் உழைப்பாளிகள் கல்விச் சங்கம் – இவனை அனுப்பியிருக்கலாம். டிராமன் உள்ளபடியே உயிரூட்டமுள்ள கலாச்சார வாழ்கையுடையதுதான், நல்ல பேருரைகளுக்கான அவசியத்தை உணர்ந்துள்ளது. இதில் தலைநகரான கிறிஸ்டியானியாவை மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

“பைபை தூக்கிக்கோ” என்று அவனிடம் சொன்னேன். “உங்க ஓட்டல்ல வைன் குடுப்பாங்கள்ல? சாப்பிடும்போது குடிக்க?”

“வைன் தானே. இருக்கதுலேயே பெஸ்ட் குடுப்பாங்க”

“அதான். இப்ப நீ போலாம். நான் அப்புறமா வந்துடுறேன். பத்திரிகை ஆபீஸ்வரைக்கும் போகணும்”

கொஞ்ச‌ம் விவம் தெரிந்த‌ ஆளாகத் தெரிந்தான் எனவே அவனிடம் விசாரித்தேன்: “எந்த பத்திரிகை ஆசிரியர்கிட்டப்  போகலாம்? எல்லாரையும் பாக்க முடியாதுல்ல?”

“ஆரென்ஸ்டெந்தான் பெஸ்ட். எல்லாரும் அவர்கிட்டத்தான் போவாங்க”.

 

பத்திரிகையாசிரியர் ஆரென்ஸ்டன்  அவர் அலுவலகத்தில் இல்லை வீட்டில்தான் சந்திக்க முடிந்தது.. எனது வேலையை, நான் இலக்கிய வேலைக்காக வந்திருக்கிறேன் என்று, அவரிடம் சொன்னேன்.

 

“இங்க அதுக்கெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லியே. ஸ்வீடன்லேர்ந்து ஒரு மாணவன் போன வருஷம் வந்தான் ‘நிரந்தரமான உலக அமைதி’ பத்தி பேசினான்.  காசு நஷ்டம்”

 

“நான் ‘இலக்கியம்’ பத்தி பேசப்போறேன்.” நான் மீண்டும் அழுத்திச் சொன்னேன்.

“ஆமா… புரியுது. ஒரு எச்சரிக்கைதான். நீங்களும் நஷ்டப்படப்போறீங்க”

 

நஷ்டமா? விலைமதிப்பில்லாதது. நான் ஒரு வியாபாரி என்று இவர் நினைக்கிறாரா. நான் நேராகச் சொன்னேன் “அந்த பெரிய ஹால், உழைப்பாளிகள் ஹால் அது வாடகைக்கு கிடைக்குமா?”

“இல்ல. அது ஒரு மேஜிக் ஷோவுக்கு புக் ஆகியிருக்கு. மனுசக் குரங்கு துவங்கி பலவிதமான விலங்கெல்லாம் அந்த ஷோவ்ல வருது. பார்க் பவிலியன் வேணும்னா முயற்சி செய்யுங்க”

 

“அது நல்லாயிருக்குமா?”

 

“பெருசுதான். நிறைய இடம் இருக்கும். வாடகை எவ்வளவுண்ணு தெரியல. ஆனா இதவிட கம்மிதான். கமிட்டிகிட்டதான் பேசணும்”

 

பார்க் பவிலியனே போதும் என்று முடிவுசெய்தேன். அதுவே சரியானதாகத் தோன்றியது. உழைப்பாளிகளின் மகால்கள் சிலநேரம் சின்னதாகவும் வசதியில்லாமலும் இருக்கும். இந்த கமிட்டியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

 

வழக்கறிஞர் கார்ல்சன், ஒரு தோல் வியாபாரி, ஒரு புத்தக வியாபாரி இன்னும் சிலர்.

 

கார்ல்சனின் வீட்டை நோக்கி நடந்தேன். அவர் நகருக்கு வெளியே தங்கியிருந்தார். நடந்தேன், நடந்தேன், சாலை முடியும் வரை நடந்தேன். அவரிடமும் எனது திட்டத்தைச் சொன்னேன். பார்க் பவிலியன் வாடகைக்குக் கிடைக்குமா என்றேன். அது இலக்கியப் பேருரைக்குச் சரியான இடம் என்று தோன்றியது.

 

வழக்கறிஞர் ஒரு கணம் சிந்தித்தார். பின்னர் அந்த இடம் சரியானதல்ல என்று சந்தேகத்துடன் சொன்னார்.

 

இல்லையா? அது அவ்வளவு சிறிய இடமா?  அவருக்கே தெரியும் அரங்கின் உள்ளே இடமில்லாமல் மக்களை வெளியே அனுப்புவது எவ்வளவு சங்கடமான விஷயம்..

 

எனது திட்டத்திற்கு எதிராக அவர் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். அங்கே இலக்கிய ஆர்வமெல்லாம் இல்லை என்றார். போன வருடம்தான் ஒரு ஸ்வீடன் மாணவன் ….

 

“ஆமா தெரியும். ஆனா அவன் உலகப் பேரமைதிபத்தில்ல பேசினான்” நான் இடைமறித்தேன் “நான் இலக்கியம் பத்தி பேசப்போறேன். தீவிர இலக்கியம்”

 

“எப்படின்னாலும் நீங்க வந்த நேரம் சரியில்ல. ஒரு மேஜிக்காரன் வந்து உழைப்பாளிகள் ஹால்ல ஒரு ஷோ பண்றான். அவன்கிட்ட குரங்கும், காட்டு விலங்குகளெல்லாம் இருக்குது”.

 

இரக்கம் நிறைந்த சிரிப்பொன்றை உதிர்த்தேன் ஆனால் அவர் சொல்லில் தீர்க்கமானவராய் இருந்தார எனவே நம்பிக்கையிழந்தேன்.

“பார்க் பவிலியனுக்கு வாடகை என்ன?” என்று நேரடியாகக் கேட்டேன். “எட்டு குரோனர். கமிட்டிகிட்ட பேசணும். ரெண்டு நாளுக்குள்ள உங்களுக்கு நான் உறுதியா சொல்லிட முடியும். பிரச்சனை இருக்கக்கூடாது.  உங்களுக்கு கிடைக்கும்”

 

சட்டென்று சில மனக்கணக்குகளையிட்டேன். இரண்டுநாட்கள் காத்திருந்தால் அதிகமக மூன்று குரோனர்கள் செலவாகும், பவிலியனுக்கு எட்டு குரோனர்கள் மொத்தம் 11. டிக்கெட் விற்பவருக்கு 12. சுமார் 25பேர் வந்தாலும் ஆளுக்கு 50ஓர்ர‌(பாதி குரோனர்) வைத்தாலே செலவுகளுக்குச் சரியாகிவிடும். மீதம் நூறுபேரோ இருநூறுபேரோ எத்தனைபேர் வந்தாலும் இலாபம்.

 

ஒப்புக்கொண்டேன்..

 

விடுதியில் பணிப்பெண் கேட்டாள்.

“முத‌ல் மாடியா கீழேயா எங்க வேணும்?”

நான் அமைதியாகவும்  கண்ணியத்துடனும்  “விலைகுறைந்த ரூம். இருக்கதிலேயே விலை குறைந்தது” என்றேன். நான் விளையாட்டுக்குத்தான் அப்படி கேட்பதாக நினைத்து என்னை மேலும் கீழும் பார்த்தாள், நான்தானே சாப்பாட்டுக்கு ஒயின் கிடைக்குமா என்று கேட்டவன்? அல்லது விடுதிக்கு கெட்ட பெயர் வராமலிருக்க நான் அப்படி கேட்கிறேனா? அவள் கதவைத் திறந்தாள். நான் மூச்சை பிடித்துக்கொண்டேன்.

 

“காலியாத்தான் இருக்குது. இதுதான் உங்க ரூம். உங்க பைகூட ஏற்கனவே இங்க இருக்குது பாருங்க.”

அங்கிருந்து வெளியே செல்ல வழி இல்லை என்பதால் உள்ளே சென்றேன்.  அந்த விடுதியிலேயே சிறந்த அறை அதுதான்.

 

“படுக்கை எங்க?”

“அங்க. அந்த சோபாதான். இங்க சாதாரண படுக்கை போட்டா நல்லாவா இருக்கும்? சோபாவ வெளிய இழுத்தா படுக்கையாகிடும்”

 

அவள் கிளம்பினாள்.

எனக்கு பைத்தியம் பிடிப்பதைப்போலிருந்தது. அந்தச் சூழலில் என் பை கந்தலைப்போல காட்சியளித்தது. நீண்ட நடைக்குப் பின் என் காலணியும் மோசமாகியிருந்தது. சத்தமாக ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னேன்.

 

உடனடியாக அந்தப் பணிப்பெண் கதவுழியாக தலையை நுழைத்தாள்.

“ஏதாச்சும் வேணுமா?”

இது எப்படி இருக்கிறது? வாயைத் திறந்தால்போதும் தொண்டரடிப்பரிவாரங்கள் வந்து சேவகம் செய்யும்.

“வேறெதுவும் வேண்டாம்” கண்டிப்பாகச் சொன்னேன் “எனக்கு சேண்ட்விச் மடும் வேணும்”

என்னை பார்த்தாள்.

“சூடா எதுவுமே வேண்டாமா?”

“வேண்டாம்”

அவளுக்குப் புரிந்தது. என் வயிறு. இயற்கைக்கு அது வசந்தகாலம். எனக்கு அது மோசமான காலம்.

அவள் சேண்ட்விச்சோடு திரும்பியபோது ஒயின் பட்டியலையும் கொண்டுவந்தாள்.  அளவுக்கதிகமாகவே பணிவான பணிப்பெண் அந்த இரவு முழுவதும் தூங்கவிடவில்லை. “போர்வையை சூடாக்கவா?” “குளியல் தொட்டி அங்கே இருக்கிறது.. குளிக்கலியா??”

 

காலையில் நான் தயக்கத்துடன் எழுந்தேன். ஆடைகளை அணிந்துகொண்டேன். கடும் குளிர். சோபா படுக்கை குட்டையாக இருந்ததால் என்னால் தூங்கமுடியவில்லை. மணியடித்தேன். யாரும் வரவில்லை. இன்னும் அதிகாலையாகத்தான் இருக்கவேண்டும். தெருவில் நடமாட்டமில்லை. நான் முழுவதும் விழிப்படைந்தபோது இன்னும் விடியவில்லை என்றுணர்ந்தேன்.

 

அந்த அறையை நோட்டமிட்டேன். நான் பார்த்த அறைகளிலேயே மிகச் சிறந்தது அது. ஏதோ கெட்டது நடக்கப்போகிறது எனும் ஆழமான உள்ளுணர்வோடு மீண்டும் மணியை அடித்தேன். காத்திருந்தேன். என்னிடமிருக்கும் கடைசி காசும் பறிபோகப்போகிறது. ஒருவேளை காசு கட்ட முடியாமல்கூடப் போகலாம். அவசர அவசரமாக இன்னொருமுறை என்னிடமிருந்த பணத்தை எண்ணினேன். என் கதவருகே காலடி சத்தம் கேட்டது. யாரும் வரவில்லை. என் கற்பனைதான் அது.

என்ன நடக்கப்போகிறதோ எனும் கவலையுடன் மீண்டும் எண்ண ஆரம்பித்தேன். எங்கே போனாள் இந்தப் பணிப்பெண். நேற்று எனக்கு சேவை செய்வதையே தலையாயக் கடமையாகக் காட்டிக்கொண்டவள். சோம்பேறி, இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாளோ? காலைதானே!

ஒருவழியாக அவள் வந்தாள். அரைகுறை ஆடைகளோடு, ஒரு போர்வையை போர்திக்கொண்டு.

“மணி அடிச்சீங்களா?”

“எனக்கு பில் வேணும்”. என்னால் முடிந்த அளவு கட்டுப்பாடுடன் கேட்டேன்.

“பில்லா?” அது அவ்வளவு எளிதானதாக இல்லை. விடுதி உரிமையாளப்பெண்மணி இன்னும் உறங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை மூன்றுமணிதான் ஆகியிருந்தத்து. பணிப்பெண் குழம்பிவிட்டாள். இப்படியா ஒருவனை முறைத்து பார்ப்பது? நான் அதிகாலையிலேயே கிளம்பினால் இவளுக்கென்ன?

“அதுக்கு நான் என்ன செய்ய? எனக்கு இப்ப பில் வேணும்” என்றேன்.

அவள் கிளம்பினாள்.

அவள் போய் யுகங்கள் ஆகியிருந்தன‌. அந்த அறைக்கான வாடகை மணிக்கணக்கில் இருக்குமோ என நான் பயந்ததால் நிலைமை இன்னும் மோசமானது. காத்திருந்தே கடனாளியாகப் போகிறேன்.  இதுபோன்ற வசதியான விடுதிகள் எப்படி வாடகை வசூலிக்கின்றன என்று எனக்குத் தெரியாது. மணிக்கணக்கில் இருக்க வாய்ப்பு அதிகம்.. கூடவே கைகழுவுமிடத்தில் இருந்த வாசகம்.. ஆறு மணிக்குள்  காலி செய்யவில்லை என்றால் முழு நாள் வாழடகையும் வசூலிக்கப்படும் என்றிருந்தது. எனது தீவிர இலக்கியத் தலைக்குள் குழப்பமும் பதட்டமும் நிறைந்தன.

ஒருவழியாக அவள் வந்து சேர்ந்தாள்.

ஒருநாளும்.. ஒருநாளும் நான் விதியின் அந்த கிண்டலை மறக்கப்போவதில்லை. 2குரோனரும் 70ஓர்ரக‌ளும்.. அவ்வளவுதான்… பயந்ததைப்போலில்லை. அவளுக்கு  ஒரு ‘டிப்’ தரவேண்டும். இரண்டு குரோனர்களைத் தள்ளினேன். இன்னொன்றையும் வைத்துவிட்டு “மீதிய நீயே வச்சுக்க தோழி” என்றேன்.

நாமும் கொஞ்சம் பெருமையுட‌ன் நடந்துகொள்ளவேண்டியுள்ளதே? அவள் ‘டிப்புக்குத்’ தகுதியானவளும்தான். விதியல்லவா அவளை இந்த விடுதியில் வருபவருக்கும் போவோருக்குமெல்லாம் சேவகியாக நியமித்துள்ளது. இவளைப்போன்றவர்கள் இக்காலங்களில் தயாரிக்கப்படுவதில்லை. அந்த இனம் மறைந்து வருகிறது.. அதுவும் ஒரு ‘பணக்கார கனவானை’ எப்படி நடத்தவேண்டும் என்று அவளுக்குத் தெரிந்துள்ளது.

“போர்ட்டரை வரச்சொல்றேன்”.

“வேணாம்! வேணாம்”. அவளை வேலைவாங்க மனமில்லாமல் தடுத்தேன் “இது ஒரு சின்ன  மூட்ட‌ , பழசுவேற‌. இலக்கிய சொற்பொழிவுக்கு இதக் கொண்டுபோவேன். அது எனக்கு ஒரு அடையாளம் போல”

ஆனால் அவள் என்னை கண்டுகொள்ளவில்லை. பையை தூக்க‌ வெளியே ஆள் தயாராக நின்றான். அவனை நோக்கிச் செல்லச் செல்ல அவன் என் பையையே பார்த்து உறைந்து நின்றான். சிலர் ஒரு பையை பார்க்கும் பார்வைதன் எத்தனை அதிசயமானது! தான் எரிந்துகொண்டிருப்பதைப்போல…

“இரு. எங்க போகிறதா உத்தேசம்” நான் அவனை நிறுத்திக் கேட்டேன்.

அவன் சிரித்தான்.

“அத நீங்கதான் சொல்லணும்”. பதில் வந்தது.

“சரிதான். நான்தான் சொல்லணும் நீ இல்ல.”.

ஏற்கனவே ஒரு சாதாரண விடுதியைத் தாண்டி வந்துவிட்டோம். அங்கே தங்கவே திட்டமிட்டிருந்தேன். இவனை சீக்கிரம் விட்டொழியவேண்டும்.. இல்லையென்றால் அந்த சாதாரண விடுதிக்கு நான் செல்வதை அவன் பார்த்துவிடுவான்.

50ஓர்ர‌ காசை அவனிடம் தந்தேன்.. இன்னும் கையை நீட்டிக்கொண்டிந்தான்.

“நேத்தும் நாந்தான் தூக்கிட்டு வந்தேன்”.

“நான் இப்ப தந்தது  நேத்தைக்குள்ளதுதான்” நான் சொன்னேன்.

“இப்பவுந்தான் கொண்டுவந்தேன்” அவன் சொன்னான்.

பகற்கொள்ளை. “இது இப்ப கொண்டுவந்ததுக்கு.” இன்னொரு 50ஓர்ர‌ காசைச் சுண்டியடித்தேன். “இப்ப என்ன‌ விட்டு ஓடிப் போயிரு”

அவன் விலகிச்சென்றான். ஆனால் தொலைவில் செல்லும் வரை என்னை நோட்டம் விட்டுக்கொண்டேயிருந்தான்.

ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்துகொண்டேன். குளிராய் இருந்தது, சூரியன் உதித்து வந்ததும் வெம்மை துலங்கியது. அப்படியே தூங்கிவிட்டேன். நீண்ட நேரம் தூங்கியிருப்பேன் போலும் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாயிருந்தது. அந்த மலிவான விடுதிக்குச் சென்றேன். அங்கிருந்தப் பெண்மணியுடன் ஏற்பாடுகளை செய்துகொண்டேன். தங்கவும் காலை உணவுக்கும் சேர்த்து ஒரு இரவுக்கு 50ஓர்ரகள்..

 

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வழக்கறிஞர் கார்ல்சனின் வீட்டுக்குச் சென்றேன்.. மீண்டும் அ வர் என்னை எச்சரித்தார். பேருரையை  நிகழ்த்தவேண்டாம் என்றார். ஆனால் நான் விடுவதாக இல்லை. இதற்கிடையில் அரென்ஸ்டெனின்  செய்தித்தாளில் ஒரு சிறிய விளம்பரம் செய்திருந்தேன். இடம், நாள் மற்றும் என்  பேருரையின் தலைப்பு அதில் இருந்தன.

அரங்குக்கான காசை நான் அளித்தபோது கார்ல்சன், அருமையான மனிதர், சொன்னார் “சொற்பொழிவு முடியுறவரைக்கும் தரவேண்டியதில்ல‌” காசைத் தந்திருந்தால் என்னிடம் ஒன்றும் மிஞ்சியிருக்காது. அவர் சொன்னதைத் தவறாக எடுத்துக்கொண்டு நான் மறுத்தேன் “எங்கிட்ட காசே இல்லைண்ணு நெனச்சீங்களோ?”

“அடக்கடவுளே.. அப்படியெல்லாம் இல்ல. அரங்கத்த‌ நீங்க பயன்படுத்துறதுக்கான அவசியம் இருக்காதுண்ணு தோணுது. அப்படி ஏதாச்சும் ஆச்சுணணா நீங்ல‌ காசு கட்ட வேண்டாம்ல”

“நான் விளம்பரமெல்லாம் குடுத்திருகேன்”

அவர் தலையாட்டினார்.

“பாத்தேன்” கொஞ்சம் கழித்து “அம்பது பேருக்கும் குறைவா வந்தா நீங்க உரையாற்றுவீங்களா?”

இந்தக் கேள்வி என்னை  உண்மையிலேயே புண்படுத்தியது. யோசித்தபிறகு ஐம்பது  குறைவான எண்ணிக்கை, ஆனாலும் நான் உரையாற்றுவேன் என்று சொன்னேன் .

“பத்துண்ணா பண்ணமாட்டீங்கல்ல?”

இதைக் கேட்டதும் நான் வெடித்துச் சிரித்தேன்.

“மன்னிக்கணும்.. ஒரு அளவிருக்குல்ல”அதைப்பற்றி மேலும் பேசவில்லை. அரங்கத்துக்கான காசையும் நான் தரவில்லை. கார்ல்சனும் நானும் இலக்கியம் குறித்து உரையாடினோம். அவர்மீதிருந்த மதிப்பு கூடியது. அவருடைய கருத்துக்களை என்னோடு ஒப்பிடக்கூட முடியாதென்றாலும்  வித்தியாசமான மனிதர்.

விடைபெறும்போது என்  பேருரைக்கு நிறைய ஆட்கள் வரவேண்டும் என்று வாழ்த்தினார்.

 

நான் என் மலிவான விடுதிக்கு  புத்துர்ப்புடன் வந்து சேர்ந்தேன். போர்க்களம் தயாராகிவிட்டது – முன்பே நான் ஒருவனிடம் 50 ஊர்ரகளைத் தந்து எனது விளம்பர அட்டையை விநியோகிக்கச்சொலியிருந்தேன். மொத்த நகரத்திற்கும் எனது பேருரை குறித்து தற்போது தெரிந்திருக்கும்.

 

என்  மனம்  இலகுவானது. எனது பேருரை எத்தனை பெரிய நிகழ்வு என நினைக்கையில் அந்த மலிவான விடுதியையும் அதில் தங்கியுள்ள சபிக்கப்பட்டவர்களையும்  நினைத்து வருந்தினேன்.  எல்லோருக்கும் நான் யாரென்றும், நான் ஏன் அங்கே தங்கியிருக்கிறேன் என்றும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது.  விடுதியின் உரிமையாளப் பெண்மணி என்னை ஒரு கற்றறிந்த மனிதர் என்றும்  நாள் முழுவதும் எழுதவும், படிக்கவும்  செய்கிறவன் என்றும் எனவே என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாதென்றும் கண்டிப்புடன் கூறிவந்தார். அவர் என் பார்வையில் மதிப்புமிக்கவராய் தெரிந்தார்.  அங்கிருந்த உணவுக்கூடத்திலிருந்தவர்கள் கடும் பசிகொண்ட உழைப்பாளிகள் மற்றும் சுமைதூக்குபவர்கள். சில நேரங்களில் அவர்கள் எரிச்சலுடன், முட்டை சின்னதாயிருக்கிறதென்றும் பதார்த்தம் நமத்துவிட்டதென்றும் அவளுடன் சண்டையிட்டனர். நான் பார்க் பவிலியனிலேயே பேருரையாற்றவிருக்கிறேன் எனத் தெரிந்ததும் நுழைவுச் சீட்டு என்ன விலை என்று கேட்டனர். சிலருக்கு என் உரையை கேட்பதில் விருப்பமிருந்தது.. 50ஊர்ரகள் மிக அதிகமாகப்பட்டது. விலை குறித்து என்னுடன் விவாதிக்க ஆரம்பித்தனர். என்னை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்.  அவர்களின் வளர்ப்பே சரியில்லை.

 

பக்கத்து அறையில் ஒருவன் தங்கியிருந்தான். பாதி ஸ்வீடிய மொழியும் பாதி நார்வேயின் மொழியும் பேசிக்கொண்டிருந்தான். விடுதி உரிமைப்பெண்மணி அவனை ‘இயக்குனர்’ என்றழைத்தார். உள்ளே வரும்போதும் வெளியேறும்போதும் ‘தூள் பறந்தது’ என்று சொல்லலாம்.  அவன் உட்காரும் முன்பு கைக்குட்டையால் நாற்காலியை தூசிதட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால்கூட இருக்கலாம்.  அதிக பகட்டானவன். அதிகம் செலவும் செய்தான். சான்ட்விச் கேட்கும்போதெல்லாம் அது புத்தம் புதிய‌ அப்பத்தில் மிகச்சிறந்த வெண்ணை தடவி செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

 

“நீர்தான் அந்த சொற்பொழிவாளரா?” அவன் கேட்டான்.

“ஆமா அவர்தான்” என்றாள் விடுதிப்பெண்,

“நீ பெரிய ரிஸ்க் எடுக்கிற. சரியா விளம்பரம்கூட குடுக்கல. என்னோட விளம்பரங்கள பார்த்திருக்கல்ல?”

அப்போதுதான் எனக்கு புலப்பட்டது. அவன்  அந்த வித்தைக்காரன்.  குரங்குகளுக்கும் கொடிய விலங்குகளுக்கும் சொந்தக்காரன்.

“நான் இவ்ளோ பெரிய போஸ்டர் போடுவேன்” பேசிக்கொண்டேயிருந்தான் “எல்லா இடத்துலயும் ஒட்டி வைப்பேன். எங்க எடமிருந்தாலும் ஒட்டிருவேன். பெரிய எழுத்துல எழுதியிருக்கும். நீ பாத்திருப்ப. அதுல விலங்கோட‌ படங்கள் எல்லாம் கூட வரஞ்சிருக்கும்”.

நான் அவனிடம்  என்னுடைய உரையானது இலக்கியம் குறித்தது என்று குறிப்பிட்டேன். ஒரே சொல்லில் சொல்லவேண்டுமென்றால் கலை. அறிவுள்ளவர்களுக்கான‌ விஷயம்.

 

“ஒரு மண்ணு வித்தியாசமும் கிடையாது” அவன் கிண்டலாய் சிரித்தான். மேலும் வன்மத்துடன் அவனுக்கு வேலை பார்த்தால்  என்ன என்றான்.  அவனது விலங்குகளைப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்ய ஆள் தேவை ப்படுகிறதென்றும் புதிய ஆள் என்றால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினான். இங்குள்ளவர்களுக்குத் தெரிந்தவனென்றால் பார்வையாளர்கள் “ஏ அங்கப்பாரு நம்ம பெட்டர்சன். பெட்டர்சனுக்கு  மிருகங்களப்ப‌த்தி என்ன தெரியும்” என்று கத்துவார்கள்.

நான் அவமதிப்புடன் அமைதியாகத் திரும்பினேன். பதில் சொல்லி அவனது வார்த்தைக்கு மதிப்பளிக்க எனக்கு விருப்பமில்லை.

“ஒரு நாளைக்கு ஐந்து குரோனர் குடுக்கிறேன். யோசிச்சுப்பாரு”. என்று சொல்லிவிட்டு எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.  தெளிவாகத் தெரிகிறது அவன் என்னுடன் போட்டி போட பயந்துவிட்டான். நான் அவனது பார்வையாளர்களைக் கவர்ந்துவிடுவேன் என்று என்னுடன் சமரசத்துக்கு வருகிறான். என்னை காசு கொடுத்து வாங்கிவிடலாம் என நினைக்கிறான். கலையுலகிற்கு துரோகம் செய்ய நான் என்னை அனுமதிக்க முடியாது. என்னுடைய வழி உன்னதங்களின் வழி.

 

ஏழுமணிக்கு நான் என் ஆடைகளை துடைத்து சுத்தம் செய்துகொண்டு பார்க் பவிலியனை நோக்கிச் சென்றேன். எனது பேருரை எனக்கு மிக நன்றாகப் பழக்கமாகியிருந்தது. என் தலை முழுக்க நான் பேசவிருந்த அழகிய சொற்றொடர்களும் மேன்மை பொருந்திய வாசகங்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. பேருரை சிறப்பாக நிகழும் எனும் உறுதி என்னுள் எழுந்தது. என் பேருரையின் வெற்றிச் செய்தி தந்தியில் அடிக்கப்படும் ஒலி என் மனதில் ஒலித்தது.

 

மழை பெய்தது. இயற்கைக்குக் கொஞ்சம் கருணை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் இலக்கியத்தாகம் கொண்ட மக்கள் ஒருபோதும் ஒருதுளி மழைக்குத் தயங்கமாட்டார்கள். தெருவெங்கும் மக்கள் கூட்டம். யுவனும் யுவதியுமாகக் கைகளைக் கோர்த்து குடைகளின் கீழ் நடந்துகொண்டிருந்தனர். திடீரென எனக்கு உறைத்தது அவர்கள் எதிர்ப்பக்க‌மாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள், அதாவது பார்க் பவிலியனுக்கு எதிர் பக்கமாக.  இவர்கள் எங்கேபோகிறதாக நினைத்துக்கொள்கிறார்கள்? ம்ம்ம் குரங்குகை பார்க்கச் செல்லும் கீழ்குடிகளாகத்தான் இருக்கவேண்டும்.

 

நுழைவுச்சீட்டு விற்பவர் வாசலில் நின்றிருந்தார்.

“யாரவது வந்தார்களா?” என்று கேட்டேன்

“இன்னும் இல்லை. இன்னும் அரைமணிநேரம் இருக்கே.” என்றான் அவன்.

நான் உள்ளே சென்று அந்தப் பெரிய அரங்கத்தை நோட்டமிட்டேன். எனது காலடிகள் குதிரைக் குளம்பொலியாய் எதிரொலித்தன.

கடவுளே இந்த அரங்கம் இப்போது நிரம்பியிருந்தால்? வரிசை வரிசையாக தலைகள், ஆணும் பெண்ணுமாக நெருங்கி அமர்ந்து எல்லோரும் பேருரைக்காக காத்திருந்தால்! ஒருவர்கூட இல்லை.

 

அந்த ‘அரைமணிநேரம்’ நீண்டுகொண்டே சென்றது. யாரும் வரவில்லை. வெளியே வந்து சீட்டு விற்பனையாளர் நிலைமை குறித்து என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். அவர் தயங்கினார் ஆனாலும் நம்பிக்கையுடனிருந்தார். அவர் கருத்தின்படி இது பேருரைக்கான வானிலை அல்ல. இப்படி கொட்டும் மழையில் மக்கள் வெளியே செல்ல விரும்புவதில்லை. ஆனாலும் அவர்கள் எல்லோருமே கடைசி நேரத்தில் வந்துவிட வாய்ப்புள்ளது.

 

நாங்கள் காத்திருந்தோம்.

 

ஒருவர்  மழையில் நனைந்தபடியே எங்களை நோக்கி வந்தார் 50 ஊர்ரவை செலுத்திவிட்டு உள்ளே சென்றார்.

 

“இந்தா வர ஆரம்பிச்சுட்டாங்க” சீட்டு விற்பவர் தலையை ஆட்டியபடியே சொன்னார்.”டிராமென் வாசிகள் எப்பவுமே  கடைசி நேரத்துல வர்றதையே வழக்கம் வச்சிருகாங்க.”

காத்திருந்தோம். வேறு யாரும் வரவில்லை. சற்று கழித்து அந்த ஒரே பார்வையாளரும்  வெளியே  எங்களுடன் வெளியே சேர்ந்துகொண்டார்.

“அசுரத்தனமான மழை” அவர் சொன்னார்.

வழக்கறிஞர் கார்ல்சனை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.

“வேறு யாரும் வர்றமாதிரி தெரியலியே. மழ‌வேற ஊத்துதே”. பின்பு எனது வாடிய முகத்தைக் கண்டு  “பரோமீட்டர‌ பாத்தப்பவே எனக்குத் தெரிஞ்சுபோச்சு. சட்டுன்னுல்ல‌ கீழ போயிடுச்சு. அதனாலத்தான் இந்த சொற்பொழிவு வேண்டாம்ணு சொன்னேன்” என்றார். சீட்டு விற்பவர் இன்னும் எனக்கு ஆதரவாக‌த்தான் இருந்தார்.

“இன்னும் ஒரு அர‌ மணி நேரம் காக்கலாம் ஒரு இருபது முப்பதுபேராவது வர வாய்ப்பிருக்கு. கடைஐஐஐசி நேரத்துல”.

“எனக்குத் தோணல” வழக்கறிஞர் சொன்னார், கோட்டை அணிந்துகொண்டே, “நியாபகமிருக்கும்போதே சொல்லிடுறேன் அரங்குக்கு வாடகை எதுவும் தரவேணாம்.”

தொப்பியைத் தொட்டு வணக்கம் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

 

நானும் சீட்டு விற்பவரும் மேலும் அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு நிலைமையை  விவாதித்தோம். வெட்கக்கேடான விஷயமாய் இருந்தது. நான் இதுவரை இப்படி சிறுமைப்படுத்தப்பட்டதில்லை. அதற்கும் மேல் இந்த வழக்கறிஞரும் நுழைவுக் கட்டணத்தை திரும்ப வாங்காமல் சென்றுவிட்டார். நான் அவர் பின்னால் ஓடிப்போக நினைத்தென். சீட்டு விற்ப‌வன் என்னைத் தடுத்தான்.

“நா வச்சுக்கிறேன்… அப்ப நீங்க எனக்கு இன்னொரு 50உர்ர தந்தா போதும்”.

ஆனால் அவனுக்கு நான் ஒரு குரோனர் கொடுத்தேன். அவன் கடைசிவரை வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்பினேன். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டான். கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றோம்..

அலைந்தபடியே அறையை நோக்கிச் சென்றேன், அடிபட்ட மனிதனாக. வெட்கத்தாலும் ஏமாற்றத்தாலும் உள்ளம் மரத்துப்போயிருந்தது. தெருக்களில் அலைந்தேன், என் கால்கள் என்னை எங்கே கூட்டிச்செல்கின்றன என்று தெரியாமலே நடந்தேன். கிரிஸ்டியானியாவுக்குத் திரும்பிச்செல்ல காசு இல்லை என்று நினைக்கையில் கவலை  கூடியது.

 

மழை கொட்டிக்கொண்டேயிருந்தது.

 

அப்போது ஒரு பெரிய கட்டிடத்தை கடந்தேன். தெருவுல் இருந்தே என்னால் அதன்  ஒளிவிளக்கு அலங்காரங்களைக் காண முடிந்தது. அது உழைப்பாளிகள் அரங்கம்.  தாமதமாக‌ வந்தவர்கள் இன்னும் சீட்டு வாங்கிக்கொண்டு முண்டியடித்துச் சென்றுகொண்டிருந்தனர். எத்தனைபேர் உள்ளே இருக்கிறார்கள் என்று சீட்டு விற்பவரிடம் கேட்டென். அரங்கம் நிரம்பியிருந்தது.

நாசமாய்ப் போன அந்த ‘வித்தைக்காரன்’. அவன் என்னை எளிதில் வென்றுவிட்டான்.

 

எனது அறைக்குள் மெல்ல நுழைந்து உண்ணவும், குடிக்கவும் எதுவுமின்றி அமைதியாக‌ உறங்கச்சென்றேன்.

 

நடு இரவில் என் அறைக்கதவு தட்டப்பட்டது. ஒருவன் மெழுகுத் திரியை ஏற்றிக்கொண்டு என் அறைக்குள் நுழைந்தான்.  அந்த இயக்குனர்தான்.

 

“பேருரை எப்டிபோச்சு?” என்றான்

 

வேறு ஒரு சமயத்தில் நான் அவனைப் பிடித்து வெளியில் தள்ளியிருப்பேன். இப்போதோ நான் பலமில்லாமல் நொறுங்கிப்போயிருந்தேன். பேருரையை இரத்து செய்யவேண்டியிருந்தது என்று மட்டும் சொன்னேன்.

 

அவன் சிரித்தான்.

“தீவிர இலக்கிய சொற்பொழிவுக்கு ஏத்த வானிலை இல்லைல‌. மழ‌.” நான் விளக்கினேன். அவனுக்கே அது தெரிந்திருக்கும் இருந்தாலும்  சிரித்துக்கொண்டேயிருந்தான் .

“பரோமீட்டர் அப்படியே சரிஞ்சிடுசு” என்றேன்

“என் ஷோல‌  நிக்க மட்டும்தான்   எடம் இருந்துச்சு” பதில் சொன்னான். சிரிப்பதை நிறுத்தி விட்டு தொந்தர‌வுக்கு வரருத்தம் சொன்னான் பின்பு தான் வந்த வேலையை சொல்ல ஆரம்பித்தான்.  மீண்டும் என்னை அவனிடம் வேலை செய்ய அழைத்தான். நான் மிகவும் வேதனை அடைந்தேன்.  அவனது விலங்குகளை நான் அறிமுகம் செய்து வைக்க வேண்டுமாம். என்னை அமைதியாய் உறங்கவிடும்படி அவனிடம் கண்டிப்பாகச் சொன்னேன். அவனோ என் படுக்கையின் விளிம்பில் கையில் மெழுகுதிரியோடு அமர்ந்து கொண்டான்.  “நம்ம இதப்பத்தி சும்மா பேசவாவது  செய்வோமே” என்றான்.  நினைத்தைப்போலவே  உள்ளூர் ஆளை மக்கள் அடயாளம் கண்டுகொண்டனர். இயக்குனரின் பகுதி சிறப்பாக இருந்தது ஆனால்  விலங்குகளை அறிமுகப்படுத்தும் பகுதி, அதுவும் அந்த உள்ளூர் ஆள் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டான். “அங்க பாரு நம்ம ஜான் பெடெர்சென்.” என்று  கத்த ஆரம்பித்தனர்.  ‘அந்த நாய எங்கெ பிடிச்ச பெடர்சென்?” என்று கத்தினர். ஜான் பெடெர்சென் முன்பே எழுதிவைத்திருந்ததை வாசித்தான் “இது நாய் அல்ல நரி. ஆப்ரிக்க புதர் நரி. ஏற்கனவே மூன்று மிஷனரிகளைக் கொன்று தின்ற நரி”  என்று சொன்னான். ஆனால் மக்கள் ஊளையிட ஆரம்பித்தனர், கிண்டல் செய்தனர். அவர்களை இவர்கள் முட்டாள்களாக்குவதாக நினைத்தனர்.  “எனக்குப் புரியல… அவன் முகத்துல கறுப்பு பெயின்ட்கூட‌ அடிச்சேன்.. தலைக்கு ஒரு விக்கும் போட்டேன் ஆனாலும் அவன கண்டுபிடிச்சிட்டாங்க”

அவன் சொல்வதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தோன்றியது. சுவற்றை நோக்கி திரும்பிக்கொண்டேன்.

“யோசிச்சுப்பாரு.” கிளம்பும் முன் அவன் சொன்னான் “என்னால ஆறு குரோனர்கூடத் தரமுடியும், நீ நல்லா பண்ணினா”.

இப்படியொரு  கீழ்த்தரமான வேலைக்கு நான் ஒருநாளும்  துணைபோக மாட்டேன். ‘மனுஷன்னா கொஞ்சமச்சும் கௌரவம் வேணும்’

 

அடுத்தநாள் அவன் மீண்டும் வந்து விலங்குகளை அறிமுகப்படுத்தும் உரையை பிழை திருத்தி, கொஞ்சம் ஆங்காங்கே மேம்படுத்தித்  தரமுடியுமா என்றான். இரண்டு குரோனர்கள் தருவதாகவும்  வாக்களித்தான்.

 

நான் ஒரு வழியாய் ஒப்புக்கொண்டேன். நான் அவனுக்கு உதவி செய்கிறேன் என்பதுதான் உண்மை. மேலும் எந்த எழுத்துப்பணியும் இலக்கியப்பணிதானே? அந்த இரண்டு குரோனார்கள் எனக்குத் தேவையிருந்தது. துவங்கும் முன் அவனிடம் நான் இதைச் செய்வது யாருக்கும் தெரியக்கூடாது மிகக் கண்டிப்பகச் சொல்லிவிட்டேன்.

 

அந்த நாள் முழுவதையும் அதில் செலவிட்டேன். முதலிலிருந்து கடைசிவரைக்கும் உரையை செப்பனிடேன். அதற்கு உயிரூட்டினேன். நகைச்சுவையும் புன்னகையும் கலந்தேன்.  கொடிய விலங்குகளை அத்தனை அழகிய மொழியில் அறிமுகம் செய்வதே ஒரு கலைதான் என்றுபட்டது. அன்று மாலை அதை அவனுக்கு வாசித்துக் காண்பிக்கையில் அவன் அதுபோல தன் வாழ்நாலிலேயே கேட்டதில்லை என்று மகிழந்தான். இரண்டுக்குப் பதில் மூன்று குரோனர்களை தந்தான்.

 

இது எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. ஓரு வழியில் என் இலக்கிய பயணத்தின்மீது எனக்கு நம்பிக்கை மீண்டு வந்தது.

 

“இந்த அருமையான எழுத்த பேசுற ஒரு திறமையான ஆள் மட்டும் எனக்கு இங்க கிடைச்சா எப்படி இருக்கும்? ஆனா இங்க, டிராமென்ல யார் கிடைப்பா?”

 

நான் யோசிக்க ஆரம்பித்தேன். இதுபோன்ற ஒரு உரையை ‘ஜான் பெடெர்சென்’ போல ஒரு  சாதாரண மனிதனின் கையில் தந்தால் சின்னாபின்னமாக்கிவிடுவான். அதை நினைக்கக்கூட கடினமாக இருந்தது.

 

“நான் வேணும்னா, ..சில  நிபந்தனைகளோட இந்த சொற்பொழிவுக்கு சம்மதிக்கிறேன்” என்றேன்.

 

அவன் எழுந்து அமர்ந்தான்.

“என்ன நிபந்தனை? உனக்கு ஏழு குரோனர் கொடுக்கிறேன்”

“அது பரவாயில்ல. என்னுடைய முக்கிய நிபந்தனை என்னண்ணா நாந்தான் பேச்சாளருங்கிற விஷயம் நமக்குள்ள மட்டும் இருக்கணும்”.

“சத்தியம் செய்யுறேன்..”

“உனக்கு புரியும்ணு நினைக்கிறேன் என்னப்போல ஒரு ஆளு  காட்டு மிருகம்பத்தியெல்லாம் பேசித்திரியுற‌து கேவலம் இல்லியா?”

அவனுக்குப் புரிந்தது.

“அப்புறம் இது இப்ப முழுக்க முழுக்க என்னோட எழுத்து.. இல்லைண்ணா நான் ஒத்துகிட்டிருக்க மாட்டேன்”.

அவனுக்கு அதுவும் புரிந்தது.

“அப்படீன்னா நான் உனக்கு உதவத் தயார்”.

அவன் எனக்கு நன்றி சொன்னான்.

விலங்குகளைக் காண்பதற்கும் அவற்றை கையாள வேண்டிய முறைகளைத் தெரிந்துகொள்வதற்குமாக ஏழு மணிக்கு அவனுடன் உழைப்பாளிகள் அரங்குக்குச் சென்றேன்.

இரண்டு மனிதக்குரங்குகளும், ஒரு ஆமையும், மானும், மயிலும், கரடியும், இரண்டு நரிக்குட்டிகளும் ஒரு புதர் நரியும் இருந்தன்.

 

என்னுடைய அறிமுக உரையில் நரி குறித்தோ கரடி குறித்தோ எதுவுமில்லை. ஆனால் ஆப்ரிக்க கழுதைப்புலி குறித்த தகவல் இருந்தது “பைபிளில் குறிப்பிட்டிருப்பதைப்போல” என்று விலங்குகளை அறிமுகப்படுத்தியிருந்தேன். ஒரு பெரிய கிரிஸ்லி கரடி குறித்த குறிப்பும் இருந்தது. அந்த ஆமை குறித்து ஒரு சிறப்பான பகடியை சேர்த்திருந்தேன்.  “அது உண்மையிலேயே ஒரு சிறந்த சீமாட்டியாக்கும், ஆமை சூப் மட்டுமே குடிக்கும் சீமாட்டி”.

 

“கழுதைப்புலி எங்கே?” என்றேன்

“இதோ” என்று நரிக்குட்டிகளை காண்பித்தான்.

எனக்குக் கோபம் வந்தது

“இது சரியில்லையே. இது ஏமாற்று வேல. உண்மைன்னு உளப்பூர்வமா நம்பினாத்தான் என்னால எதையும் சொல்ல முடியும்.”

“இதுக்கெல்லாம் போயி கோவிச்சுக்காத.. இதெல்லாம் பெரிய விஷயமா?”

ஒரு பிராந்தி புட்டியை எங்கிருந்தோ உருவி எடுத்தான்.  அவனுக்கும் எனக்கும் எந்த நேரடியாக மனத்தாங்கலும்  இல்லை கள்ளத்தனத்தை மட்டுமே நான் விரும்பவில்லை என்பதை நிரூபிக்க  நான் குடிக்க ஒப்புக்கொண்டேன். இருவரும் குடித்தோம்.

“என் பேரச் சொல்லாத‌. அருமையான உரை. நம்ம  மிருகமெல்லாம் மோசமானதொண்ணுமில்ல. இந்த கரடிய பாரு.. கம்பீரம்ல? நீ மேடையில பேசு.. எல்லாம் சரியாப்போகும்.”

 

பார்வையாளர்கள் வர ஆரம்பித்தனர். இயக்குனரின்  பதட்டம் அதிகமாகிக்கொண்டேயிருந்தது. அவன் விதி என் கையில் இருந்தது. நான் பொறுப்புடன் நடந்துகொள்வதே நல்லது. மேலும் கடைசி நேரத்தில் உரையை மாற்றி அமைப்பது ஆபத்தானது.  நரியை க்ழுதைப்புலி என அறிமுகம் செய்வதா? கழுதைப்புலியை எத்தனை கொடூரமாக சித்தரிநத்திருந்தேன்! இப்போது மாற்றினால் குழப்பம்தான் மிஞ்சும். அவனிடம் சொன்னேன்.

அவன் முற்றிலும் ஆமோதித்துவிட்டு இன்னொரு கோப்பை பிராண்டி ஊற்றினான்.

அரங்கு நிறைந்தது. காட்சி ஆரம்பமானது. இயக்குனர் அனைவரையும் வியக்கவைத்தான். அவனது மாயவித்தைகளை எல்லோரும் விரும்பினர். மூக்கிலிருந்து நீண்ட கைக்குட்டை ஒன்றை உருவி எடுத்தான், அரங்கின் பின்னால் இருந்த ஒரு பாட்டியின் பையிலிருந்து கிளாவர் ராஜாவை உருவி எடுத்தான். மேசை ஒன்றை கைதொடாமலேயே மேடையில் நடக்கச் செய்தான். இறுதியாக  மேடையின் கீழே இருந்த இரகசிய வாயில் வழியே மறைந்துபோனான். கூட்டம் கூச்சலிட்டது. இடிமுழக்கமென கைதட்டியது. இப்போது மிருகங்களைக் காண்பிக்க‌வேண்டும். அவனே ஒவ்வொன்றாகக் கொண்டுவந்தான். நான் மேடையில் அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். இயக்குனரின் அளவுக்கு என்னால் வெற்றி பெற முடியாது என்று உடனடியாகத் தோன்றியது. கூட்டத்தில் ஓரிரு சிந்தனையாளரேனும் என் அறிமுகத்தை பாராட்டக் கூடும். எனவே நான் கவலை கொள்வதில் அரத்தமில்லை.

 

ஆமை வந்துபோனபின் காட்டு விலங்குகளை மட்டுமே நான் அறிமுகம் செய்யவேண்டியிருந்தது. என் உரையில் நான் அவற்றையெல்லாம் பழைய‌ ஏற்பாட்டில் நோவாவின் பெட்டகத்தில் ஏறிய விலங்குகளோடு தொடர்பு வைத்து பேசினேன். ஆனால் சற்று அதிகமாகப் பேசிவிட்டேன் போலும். குதூகுலத்திலிருந்த பார்வையாளர்களுக்கு அது சென்று சேரவில்லை. மான்குறித்தும் மயில் குறித்தும் நான் பேசியதை அவர்கல் கண்டுகொள்ளவில்லை. ஷீபாவின் ராணி சாலமோன் மன்னனை சந்திக்கச் செல்கையில் மான் தோலில் மேலாடையும் மயில் பீலியும் அணிந்திருந்தாள் என்று நான் சொல்லியிருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலமை முன்னெறியது. பைபிள் கதையும் இரண்டு கோப்பை பிராண்டியும் உற்சாகமளித்ததில்  என் உரையின் வண்ணம் ஏறியது, செறிவானதாய் மாறியது, நான் எழுதியிருந்ததை கைவிட்டேன், மேடையிலேயே கதைகளை உருவாக்கிப் பேசினேன். நான் முடித்தபோது கூட்டம் மெய்மறந்து கைதட்டியது. சிலர் ‘அபாரம்’ என்று கத்தினர்.

 

“திரைக்குப் பின்னால் பிராண்டி இருக்குது” இயக்குனர் என் காதில்  இரகசியம்போலச் சொன்னான்.

நான் பின்னால் சென்று பிராண்டி கோப்பையை எடுத்தேன் புட்டி அதன் அருகேயே இருந்தது. அங்கிருந்த இருக்கையில் சற்று அமர்ந்தேன்.

 

அந்த நேரம் இயக்குனர் வேறொரு விலங்கை மேடையில் ஏற்றிவிட்டு எனக்காக காத்திருந்தான். நான் இன்னொரு கோப்பை பிராண்டி அருந்திவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தேன். தாமதமாவதை உணர்ந்து  இயக்குனரே அந்த விலங்கை அவனது பயங்கரமன கலப்படமான மொழியில் அறிமுகப்படுத்த ஆரம்பித்தான்.  அவன் கழுதைப்புலி குறித்து பேசுகிறான் எனக் கேட்டதும் நான் அதிர்ந்தேன். அவன் தவறுதலாய் நரி என்று கூட சொன்னான். நான் கோபத்துடன் எழுந்து மேடைக்குச் சென்றேன். தள்ளிப் போ’  என்று சைகை செய்தேன். கழுதைப்புலிதான் அன்றைய காட்சியின் கடைசி நிகழ்ச்சி. நான் முன்பைவிட சிறப்பாகப் பேசினால்தான் நிகழ்ச்சியை சரியாக முடிக்க முடியும். நான் இயக்குனரை நிராகரிப்பதைப்போல சிரித்தேன். ‘அவர் தன் வாழ்நாளில் கழுதைப்புலியை பார்த்ததே இல்லை’ என்று துவங்கினேன்.  அந்தக் கொடூர கழுதைப்புலியின் ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையைப் பற்றி அழுத்தமாகப் பேசினேன்.  பிராண்டி த‌ந்த‌போதையும், என் உற்சாகமும் உச்சமடைந்தன‌.

என் பேச்சில் தொனித்த தீவிர உணர்ச்சியும், தெறித்த தீப்பொறியும்  என்னையே வியப்பிலாழ்த்தின. அந்த ‘கழுதைப்புலி’ இயக்குனரின் கால்களின் கீழ் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தது. “கெட்டியா புடிச்சுக்கோ! அவன் என்நேரமும் பாயலாம்.. என் குடலுக்கு குறிவச்சிருக்கான் அவன்.  உன் துப்பாக்கிய தயாரா வச்சுக்க” நான் எச்சரித்தேன்.

 

இயக்குனரேகூட‌ ஒரு கணம் பயந்துவிட்டான். சட்டென அந்த மிருகத்தைத் தன் பக்கம் இழுத்தான். அதைக் கட்டியிருந்த கயிறு சட்டென அறுந்தது. முன்னால் நின்றுகொண்டிருந்த பெண்களும் குழந்தைகளும் அலறினர். அது அவன் கால்களினூடே நழுவிச் சென்றது. அரங்கில் பாதிபேர் இருக்கைகளிலிருந்து எழுந்துவிட்டனர். ஒரு கணம் அரங்கில் பதட்டம் நிறைந்தது. அது மெல்ல மேடையைக் கடந்து சென்று தன் கூண்டில்  படுத்துக்கொண்டது. இயக்குனர் கூட்டின் கதவை ஓங்கி சாத்தினான்.

 

ஆசுவாச மூச்செழுந்தது. நான் உரையை முடித்துவைத்தேன். “இந்தமுறை அதிர்ஷ்டம் நம் பக்கம் இருந்தது. இன்றே ஒரு இரும்புச் சங்கிலியை வாங்கி அந்தக் கோடூர மிருகத்தை கட்டிப்போடப்போகிறோம். நாம் தினம் தினம் விதியை ந்ம்பிக்கொண்டிருக்கமுடியாது,, அவ்வப்போது இரும்புச் சங்கிலியையும் நம்பவேண்டும்” தலை வணங்கி பின் சென்றேன்.

 

இடி முழக்கம் போல கைதட்டு எழுந்தது. ‘பேச்சாளரை கூப்பிடு’ என்று கூட்டம் கூச்சலிட்டது. நான் மீண்டும் மேடைக்கு வந்து இன்னொரு முறை வணங்கினேன். உண்மையில் எல்லாம் சிறப்பாக அமைந்துவிட்டது. பார்வையாளர்கள் வெளியே செல்லும்வரைக்கும் கைதட்டிக்கொண்டேயிருந்தார்கள். சிலர் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்.

இயக்குனர் மிகுந்த சந்தோஷப்பட்டான். எனக்கு நன்றி சொன்னான். இன்னும் பல அரங்கு நிறைந்த காட்சிகளை அவன் எதிர்பார்க்கலாம்.

 

நான் வெளியே போகும்போது ஒருவ‌ன் எனக்காக காத்திருந்தான். என்னுடைய இலக்கியப் பேருரைக்கு நுழைவுச்சீட்டு விற்க வந்தவன்.  அவன் அன்றைய காட்சியைக் கண்டிருந்தான். என் சொற்பொழிவை வாயாரப் புகழ்ந்தான். “நீ உண்மையிலேயே நல்ல பேச்சாளந்தான்” என்றான். இப்போது விளம்பரம் செய்தால் பேருரைக்கு மக்கள் கூட்டம் கூடும் என்று சொன்னான். குறிப்பாக அந்த கழுதைப்புலியை  பற்றிய உரை அபாரம் என்றான். அதை ஒட்டி பேசினால், அதுவும் அந்த விலங்கோடு நின்றுகொண்டே பேசினால் நல்ல வசூல் வரும் என்றான்.

 

ஆனால் அடுத்த நாள் இயக்குனர் எனக்கு  காசை தர மறுத்தான். நான் அன்றைக்கும்  நிகழ்ச்சிக்கு வருவேன் என்று கையெழுத்து போட்டால்தான் காசு தருவேன் என்றான். இல்லையென்றால் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து காசை வாங்கிக்கொள்ளலாம் என்றான். ஏமாற்றுக்காரன், பொறுக்கி. ஒரு வழியாக எனக்கு ஐந்து குரோனர்கள் தர ஒப்புக்கொண்டான். ஏற்கனவே அவன் தந்திருந்த மூன்றையும் ஐந்தையும் சேர்த்தால்  என்னால் ஊருக்குப் போய் சேர்ந்துவிடமுடியும். நான் எழுதிய உரையை அவனே வைத்துக்கொள்வான் என அடம் பிடித்தான். அது படுகொலை செயப்படப்போவதை உணர்ந்து நான் மறுத்தேன். அவன் விடவில்லை.  நான் ஒருவழியாக ஒப்புக்கொண்டேன். அவன் நன்றி சொன்னான், அளவுக்கதிகமாகவே சொன்னான்.

“இதப்போல ஒரு பேச்ச நான் கேட்டதே இல்ல. நேத்து நடந்தது எனக்கு நல்லா நினைவிருக்கு, வேறெந்த  பிரசங்கத்தையும்விட உன்னுடையது என்ன அப்படியே கட்டிப்போட்டிடுச்சு”.

 

“பாத்தியா?” நான் சொன்னேன் “அதுதான் இலக்கியத்தோட சக்தி, மனுஷனோட மனச அசைக்கக்கூடிய சக்தி”.

அதுதான் கடைசியாக நான் அவனிடம் பேசியது.

அன்று மாலையே கிரிஸ்டியானியாவுக்கு இரயிலை பிடித்தேன்.

 

-0-

 

நுட் ஹம்சன் (1859-1952): நோபல் பரிசு பெற்றுள்ள நார்வே நாட்டு எழுத்தாளர்கள் இருவரில் ஒருவர் ஆவார். ஹஙர் (பசி) எனும் நாவலுக்காக புகழ்பெற்றவர், அது எட்வர்ட் மன்ச்’ன் த ஸ்கிரீம் (அலறல்) எனும் புகழ்பெற்ற ஓவியத்தின் வார்த்தை வடிவம் எனலாம். பல நாவல்களும், கவிதைகளும், நாடகங்களும் சிறுகதைகளும் கட்டுரைகளும் வரைந்துள்ளார்.

 

*சில விலங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.