அறிவு இருக்கா?
இந்தச் சொற்களைத் தமிழர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஒன்று.
இருக்கே..
இந்தப் பதிலைப் பெரும்பாலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால் முதலில் சொன்னவருக்கும் அதற்கு மறுமொழி அளித்தவருக்கும் பெரும்பாலும் அறிவு என்றால் என்னவென்று சொல்வது கடினம். மேலும், சில சமயம், நாம் ‘மூளை இருக்கா?” என்றும் சொல்வதுண்டு, அறிவுக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டு என்று நாமறிவோம். ஆனால், இந்தச் சம்பந்தத்தைத் தெளிவாகச் சொல்ல பெரும்பாலும் தடுமாறுவோம்.
மனித மூளை மிகவும் சிக்கலானது – மனித அறிவு என்பதும் அதைவிடச் சிக்கலானது. மனித மூளை, பல்வேறு விஷயங்களைச் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு. ஆனால், மனித மூளையைப் பற்றிய உடலியலுக்கு இங்கு இடமில்லை. இந்தப் பகுதியில், மனித அறிவின் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தப் புரிதலே தானோட்டிக் கார்களின் மென்பொருளைப் புரிந்து கொள்ள உதவும்.
மனித மூளைப் பல்வேறு செயல்களை ஆற்றினாலும், இங்கு நமக்கு மிகவும் ஆர்வமான பகுதிகள் சில உண்டு;
- எப்படி மனிதர்களால் (விலங்குகளால்) பொருட்களைப் பார்த்து அடையாளம் காண முடிகிறது?
- எப்படி மனிதர்களால் (விலங்குகளால்) ஒலிகளைக் கேட்டு முடிவெடுக்க, மற்றும் மகிழ, கோபப்பட, சிரிக்க முடிகிறது?
- எப்படி மனிதர்களல் (ஓரளவிற்கு விலங்குகளால்) சொல்லிக் கொடுத்ததைச் செய்ய முடிகிறது?
இவை மிகவும் முக்கியமான அறிவு சார்ந்த கேள்விகள். ஏனென்றால், பிறக்கும் பொழுது, எந்தக் குழந்தையும் பொருட்களை அடையாளம் காட்டுவதில்லை, எந்த மொழியிலும் உரையாடுவதில்லை, எந்தக் காரையும் ஓட்டியதுமில்லை.
மனித அறிவு சார்ந்த விஷயங்களில், மூன்று விஷயங்கள் நமக்கு மிகவும் காரோட்டுதலுக்கு அவசியம்.
- நினைவாற்றல்
- காட்சிகளில் காரோட்டுதலுக்கான முக்கிய விஷயங்களைப் பிரித்தெடுக்கும் திறன் – இதைக் காட்சித் திறன் என்று சொல்வோம்
- சொல்லிக் கொடுத்ததைச், சரியாகப் பின்பற்றும் கற்றலியல். அதைவிட, மிக முக்கியமாக, சொல்லிக் கொடுத்ததைச் சற்று மாறுபட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தும் திறமை. எந்த ஒரு காரோட்டல் பயிற்றுனரும் எல்லாச் சூழ்நிலைகளையும் உங்களுக்குப் பயிற்சியின் பொழுது முன்வைக்க முடியாது. இவை அடிப்படைக் காரோட்டும் முறைகள் – இவற்றில் தேர்ந்து விட்டதால், சில மாறுபட்ட சூழ்நிலைகளையும் உங்களால் சமாளிக்க முடியும் என்பது எந்த ஒரு பயிற்சியின் நம்பிக்கை ஆகும்.
இந்த நம்பிக்கை விஷயத்தில் இயற்கையும் சிலவற்றைச் செய்கிறது. உதாரணத்திற்கு, விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு, இரண்டு வகை அடிப்படை அறிவை இயற்கை அவசியம் தருகிறது;
- தற்காப்பு (self-defense) மற்றும் எஞ்சுதலுக்காக (survival) அறிவுத் திறன்
- இனப்பெருக்கத்துக்கான (reproduction) அறிவுத் திறன்
மனிதர்கள் சமுதாயமாக வாழ்வதால், சமூக நன்மை மற்றும் தீமை சார்ந்த அறிவுத் திறன். இதில், சொல்லிக் கொடுக்கும் அறிவுத் திறன் அடங்காது. உதாரணத்திற்கு, உதவுபவருக்கு நன்றி சொல்வது என்பது சொல்லிக் கொடுக்கப்பட்ட அறிவில் சேறும். ஆனால், கண்பார்வையற்றவருக்கு உதவுவது என்பது நம்மில் பலருக்கும் சொல்லிக் கொடுக்காமலே வரும் அறிவுத் திறன்.
இதைத் தவிர, மனிதர்களுக்கு உள்ளார்ந்த அறிவு (innate intelligence) என்றும் ஒன்று உண்டு.
‘அவன் பார்வையே சரியில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கி விடலாம்’
இவ்வாறு பல பெண்கள் சொல்வது உள்ளார்ந்த அறிவு.
’சக்கரையா பேசறான். ஆட்சிக்கு வந்தால் கஜானாவைக் காலி பண்ணிருவான்’
இவ்வாறு நம்மில் பலர் சொல்வதும் உள்ளார்ந்த அறிவு.
இவ்வகை அறிவை இதுவரை எந்திரங்களுக்குச் சொல்லிக் கொடுப்பது என்பது இயலாத ஒன்று.
இவற்றைப் பற்றி இங்கு எழுதுவதற்குக் காரணம் உள்ளது. சில சமயங்களில், உள்ளார்ந்த அறிவு நம்மைக் காரோட்டும் பொழுது விபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறது. உதாரணத்திற்கு,
‘என் உள்மனம், இந்தக் கார் சிக்னல் பச்சையானவுடன் மிக வேகத்தில் சந்திப்பைக் கடக்கும் என்று சொன்னது. அந்தக் காரோட்டியின் முகத்தில் அத்தனை பதட்டத்தைக் கண்டேன். நல்ல வேளையாக, சந்திப்பிற்குள் என் காரை உடனே செலுத்தவில்லை. பின்னால் வரும் கார்களில் ஹார்ன் எரைச்சலைப் பற்றி எனக்குக் கவலை இல்லை’
சரி, எந்த வகைக் காரோட்டும் அறிவுத்திறன் இன்று எந்திரங்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியும் என்று பார்ப்போம்.
முதலில் நினைவாற்றல். கால்குலேட்டர்கள் வந்ததலிருந்து நமக்கெல்லாம், வாய்ப்பாடுகள் மறந்து விட்டன. வாய்ப்பாடுகள் நினவாற்றலின் மிகவும் முக்கியமான ஒரு வெளிப்பாடு. அதுவும், மிக முக்கியமான விஷயம், வாய்ப்பாடு என்பது இயற்கையான விஷயமல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. வாய்ப்பாடுகளை நாமெல்லாம் பயிற்சியினாலே நினைவில் கொண்டோம். திருக்குறளும் அப்படியே. இதைக் கணிணிகள் எளிதில் செய்துவிடும். ஆனால், நாம் இங்கு சொல்லும் நினைவாற்றல், காட்சி/பொருள் சார்ந்தது.
‘1972 –ல், கடைசியாக மவுண்ட் ரோடு ஸ்பென்ஸரில் உங்களைக் கடைசியாகச் சந்தித்தேன்’
இன்றும், இப்படிச் சில நண்பர்களைச் சந்திக்கும் பொழுது நினைவு கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி இவர்களால் முடிகிறது? மனித முகத்துடன் இப்படிச் சில முக்கியத் தகவல்களும் எப்படியோ இணைக்கிறார்கள்.
’அடுத்தத் திருப்பத்தில், ஏடாகூடமாக 6 சாலைகளுக்கு இடையில் ஒரு மேட்டின் மேலே ஒரு சிக்னல் இருக்குமே. சற்று கவனமாக இருக்கவும். நான் 2003 –ல் அமெரிக்கா வந்தபொழுது பாஸ்டனில் இந்த வகைச் சிக்னலைப் பார்த்ததாக நினைவு’
இப்படிச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வகை நினைவாற்றல் காரோட்டலுக்கு அவசியம் என்றாலும், இன்றைய ஜி,பி.எஸ். வாங்கிகள் பெரும்பாலும் இந்த வேலையைச் செய்து விடுகின்றன.
எந்த ஒரு கருவியும் செய்யாத ஒரு செயல், காட்சிகளிலிருந்து காரோட்டலுக்குத் தேவையான விஷயங்களைப் பிரித்தெடுத்தல்.
‘அட, இப்படியா அட்டைப் பெட்டிகளை நடு ரோட்டில் போட்டுப் போவது? காரில் நசுங்கினால் நானா பொருப்பு?’
இது, மிகச் சாதாரண மனித உரையாடல். ஆனால், எந்திரங்களுக்கு மிகச் சிக்கலான விஷயம். அட்டைப் பெட்டிக்கும் பெரிய சதுரப் பாராங்கல்லுக்கும் என்ன வித்தியாசம்? எப்படி, சர்வ சாதாரணமாகக், காரை அதன் மேல் எந்தக் குறையும் வராமல் ஏற்றிச் செல்ல முடியும்?
இன்றைய எந்திரங்களுக்குப் பல பொருட்களை அடையாளம் காட்டும் திறன் இருந்தும், இவ்வகை மனிதச் சாதாரணங்கள் மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகின்றது. அடுத்தப் பகுதியில், இவ்வகைச் சவால்களை விஞ்ஞானிகள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
‘சாயங்கால மங்கலான வெளிச்ச நேரத்தில், சாம்பல் நிற ஜாக்கெட் அணிந்து குறுக்கே ஓடினால், எப்படித்தான் விபத்தைத் தவிர்ப்பது?’
வட அமெரிக்காவில், குளிர் மாதங்களில் மிகச் சாதரண மனித உரையாடல். இது, மனிதர்களின் விழி மற்றும் அதன் வழியாகக் கிடைக்கும் ஒளியைச் செயலாக்கும் மூளைக்கும் உள்ள காட்சிப் பிரச்னை. பெரும்பாலும், மனித விழிகள் சுற்று வட்டாரத்தையும், தேவையான பொருளையும் சரியாகவே பிரித்து உணரும் தன்மை கொண்டது. இந்தப் பிரச்னைத் தானோட்டிக் கார்களுக்கு இருக்காது – காரணம், வெறும் காமிராவை மட்டும் வைத்து, இவை முடிவெடுப்பதில்லை. மற்ற உணர்விகளுக்கு ஒளி முக்கியமல்ல.
இரு பெரும் காட்சித் திறன் சவால் விஷயங்களை இங்கு சொல்ல வேண்டும். நகர் மத்தியில், குறுகிய சாலைகளில் காரோட்டும் பொழுது, நிறுத்தப்பட்ட காரின் கதவைத் திறந்து கொண்டு மனிதர் ஒருவர் வெளி வருவது மிகச் சாதாரண விஷயம். இந்தக் காட்சியைக் கண்ட நாம், சற்று வளைந்து, கதவைத் திறப்பவருக்கு இடஞ்சல் இல்லாமல் கார் ஓட்டுகிறோம். எந்திரத்திற்கு, இது ஒரு மிகப் பெரிய சவால் (machine vision challenge). கதவைத் திறந்த காருக்கும் கதவுத் திறக்காத காருக்கும் முதலில் வித்தியாசம் தெரிய வேண்டும். மேலும் திறந்த கதவிலிருந்து வெளியே வரும் மனிதரையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தானோட்டிக் கார்கள் ஏதோ ஒரு பெரிய பாறை சாலையின் நடுவிலே வந்தது போல நின்று விடும் ☺
கார் ஓட்டும் பொழுது, பாதசாரி ஒருவர் சாலையைக் கடப்பது சாதாரண விஷயம். சற்று மழை பெய்கிறது என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று, பாதசாரி ஒருவர் குடையைத் தன் உடலுக்கு முன் திறக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், தன் தலைக்கு மேல் சில நொடிகளில் அதை உயர்த்துவார் என்று நமக்குத் தெரியும். எந்திரங்கள் கதி கலங்கி விடும். இதென்ன முதலில் மனிதர் என்று கண்டு பிடித்தோம் – திடீரென்று எப்படி இவ்வாறு உரு மாறியது? இதனால் காருக்கு ஆபத்து என்று நின்றுவிடும் ☺
எந்திரக் காட்சித் திறன் என்பது பல வினோத சவால்கள் நிறைந்த ஒரு தொழில்நுட்ப உலகம். ஒரு காட்சியிலிருந்து, அக்காட்சியில் உள்ள பொருட்கள் என்னென்ன என்பதைத் தனித்து அடையாளம் காட்டுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம். பல வெள்ளை நிற வண்டிகள் ஒரு சந்திப்பில் பல கோணங்களில் நின்றிருக்கலாம் – கொளுத்தும் வெய்யிலில், பாலைவனச் சூழலில் (பாலைவனச் சூழலில், வெள்ளை நிறம் அதிகமாக இருக்கும்) இவற்றை அடையாளம் கண்டு கொள்வது ஒரு எந்திரத்திற்கு மிகவும் சவாலான விஷயம். இந்தச் சவாலை இன்று வெற்றிகரமாகத் தானோட்டிக் கார்கள் செய்து வருகின்றன. இதைப் பற்றி விரிவாக அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.
மாறுபட்டக் கற்றல் பற்றி ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்.
தமிழகத்தில் ஆரணியில் வசிக்கும் 10 வயது குமார், தன் வீட்டிற்கு ஓடினான். அவன் அம்மாவிடம்,
‘அம்மா, கடைத் தெருவில, நம்ம செல்வமணி, சென்னைலிருந்து, பெரிய பள பளன்னு ஒரு கார்ல வந்து இறங்கினாம்மா…’
’பெரிய வக்கீலாக இருக்கான்னு கேள்வி’
குமாரின் அண்ணன் ரகு, உடனே, குமாரிடம்,
‘காரை சரியா கவனிச்சயா? என்ன நிறம்? அதனுடைய தலை விளக்கு எப்படி இருந்தது? மாருதியை விட எத்தனை பெரிசு?” என்று அடுக்கினான்.
“பெரிய கார். அவ்வளவுதான் தெரியும். உன்னைப் போல நான் ஒன்றும் கார் பைத்தியம் இல்லை’
இந்த சாதாரண உரையாடலை/சம்பவத்தைச் சற்று அலசுவோம். செல்வமணியின் கார் ஒரு BMW X1 என்ற பெரிய கார். குமார் அதுவரை BMW –வைப் பார்த்ததில்லை. எப்படி அது ஒரு கார் என்று முடிவெடுத்தான்? அத்துடன், ஆரணியில் அவன் இந்த மாதிரியான காரைப் பார்த்ததில்லை. அவனுக்கு நிறமும் நினைவில்லை, மற்ற காரின் அம்சங்கள் அவனுக்குப் பரிச்சயமில்லை. ஆனால், பார்த்தது கார் என்று உடனே முடிவெடுத்து விட்டான். இத்தனைக்கும் அவனுக்குத் தெரிந்த மாருதி மற்றும் ஹூண்டாய் காரைப் போல இந்தக் கார் இல்லை. இவன் எப்படி முடிவெடுத்தான் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நான்கு சக்கரத்தை வைத்துக் கார் என்று முடிவெடுத்தானா? அல்லது, Windshield மற்றும் காரின் கண்ணாடிகளைக் கொண்டு முடிவெடுத்தானா? ஏன் செல்வமணி பள பள லாரியில் வந்ததாக குமார் சொல்லவில்லை?
குமாரின் கார் என்ற முடிவுக்கும், இன்றைய தானோட்டிக் கார்கள் எடுக்கும் முடிவுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. ஒரே வித்தியாசம், தானோட்டிக் கார், பளபளப்பைப் பற்றி அதிகம் கவலைப்படாது. அதன் பார்வையில், 1990 மாருதியும் இன்றைய BMW X1 -ம் ஒன்றுதான். சாலையைக் கவனித்துக் காரைச் செலுத்தும் பொழுது, காரின் விலை, அந்தஸ்து முக்கியமில்லை. அது கார் என்று தெரிய வேண்டும், அதன் இயக்க சமாச்சாரங்கள் (திசை, அகலம், நீளம், ஆழம், வேகம், இடைவெளி) முக்கியம். இந்த அணுகுமுறையையே இன்றைய தானோட்டிக் கார்கள் பின்பற்றுகின்றன.
அடுத்த பகுதியில், விரிவாகத் தானோட்டிக் கார்களின் மென்பொருள் பற்றி அலசுமுன், இத்துறையின் தந்தை என்று போற்றப்படும் Geoff Hinton என்ற கனேடிய செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானியுடன் ஒரு நேர்கானல்.
தமிழ்ப் பரிந்துரை
தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்
ஆங்கிலச் சொல் | தமிழ்ப் பரிந்துரை |
Survival | எஞ்சுதல் |
Innate intelligence | உள்ளார்ந்த அறிவு |
Machine vision challenge | எந்திரப் பார்வை சவால் |