சித்திர சுவர் நெடுஞ்சேனை

தெருவில் வந்த யானையை, வாழ்க்கையில் முதன் முதலாக கண்ட குழந்தையின் வியத்தலைப் போலதான் கம்பரின் பல பாடல்களும், மிகையோ மிகைப்படுத்தி…கண்களை அகல விரித்து, கைகளை உயர்த்தி “எவ்வ்ளோ உசரம் தெரியுமா” பாணி.

இன்றைக்கு பரதன், ராமன் காட்டிற்கு சென்ற செய்தியை அறிந்து அதிர்ந்ததிலிருந்து கொஞ்சம் பார்க்கலாம்.

நீதான் இனி நாடாள வேண்டும் என்று முனிவர் சொன்னதைக் கேட்டவுடன், பரதன்

‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் – அருவிக் கண்ணினான்

அருவிக்கண்ணினாய் ஆகிறான்.

பின்னர், ராமனை தேடிச் சென்று, அழைத்து திரும்ப அயோத்திக்கு கூட்டி வரப்போகும் முடிவை அறிவித்தவுடன், அயோத்தி மக்களின் ஆரவார மனநிலை, உயிரில்லாத உடல், அச்சொல் – ராமனை அழைக்க போகப் போகிறோம் எனும் சொல் – அமிர்த சொல்லை கேட்டவுடன்/அறிந்தவுடன் அதுவரை உயிரில்லாத அயோத்தி எனும் உடல் அமிர்த சொல்லினால் துளிர்த்தது என்கிறார், கம்பர்,

ஒல்லென இரைத்தலால் – உயிர் இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே

ராமனை அழைத்து வர திரண்ட படை, “ஏழு கடல்களும் திரண்டு எழுந்தது போல்” பேரொலியோடு எழுந்தது.

பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்,
மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி
விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள்,
கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே

எப்படி?!
அலங்கரிக்கப்பட்ட தேர்கள், புரவிகள், யானைகள், வண்டிகள் இவையெல்லாம் ஏராளமாக திரண்டு தரையில் சிறு இடத்தையும் விட்டு வைக்காமல் முற்றிலும் மண்ணை மறைத்தன.
இப்படி தரைதான் மறைந்துவிட்டதெனில் அச்சேனைகளிடையே காணப்படும் நீண்ட, மிக நீண்ட கொடிகள், வானத்தையே மறைத்துவிட்டனவாம். அட, இவை கூட பரவாயில்லை, இந்த மாபெரும் சேனை நகர்ந்து செல்வதனால் எழுந்த தூசி, விண்ணையும் தாண்டி, அங்கு வீற்றிருக்கும் கமலத்தில் வீற்றிருக்கும் பிரம்மனின் கண்களை மறைத்துவிட்டனவாம்!

பின்னர் வரும் பாடல்களில் எல்லாம் இப்படித்தான் – கண்கள் அகன்ற குழந்தையின் அதீதம்தான்.

ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;

அந்த மாபெரும் சேனை எழுப்பிய ஒலி, சிவபெருமான் இவ்வுலகை அழிக்கும் நாளில் எழுப்பும் பேரொலியை விடவும் கூடவுமாம்.

கொடும் வேதனையைத் தரும் வெம்மையைத் தணிக்க (கொடும் வேதனை ராமனைப் பிரிந்ததனால் கூட இருக்கலாம்) அச்சேனையின் கொடிகள் மேகங்களை துளைத்து அல்லது தொட்டு மென் சாரலை தூவிச்சென்றன!

வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன

அச்சேனைகளைப் பற்றிய வர்ணணைகள் தொடர்ந்து கொண்டே போகின்றன.

வானத்திலிருந்து கீழ் நோக்குவருக்கு, எங்கும் சமுத்திரமாக தெரிகின்றன.
தேர் கடலும், யானை வீரர்களின் சமுத்திரமும், கரிய புரவிக்கடலும் பின் எங்கும், பார் மீது எங்கெங்கும் பரவியிருக்கும் காலாட்படையின் மாபெரும் சமுத்திரமும் தெரிகின்றன!

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்திது, பதாதிப் பௌவமே

அடுத்து வருவது இது போன்றே இன்னொரு “வானாளவிய” மிகைப்பு.

எல்லாதிக்குகளும் படைகள் பரந்து நிறைந்து இருக்கின்றபடியால் திசைகள் இடம் போதாமல் சிறியதாகி விட்டனவாம்! அடேயப்பா!

செல்லிய செலவினால், ‘சிறிய திக்கு’ எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே

இவ்வாறு, அம்மாபெரும் சேனைகளுடன் நகர மாந்தர்கள் எல்லாம், திருமகள், அறிஞர்கள், சிறியவர்கள் என அனைவரும் ராமனை அழைத்துவர காட்டை நோக்கி சென்ற படியால், அகத்தியன் கடல் நீரையெல்லாம் தன் வயிற்றில் அடக்கிய நாளில் வற்றிய கடல் போல் காட்சி அளிக்கிறது, அயோத்தி!

அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்
மறிகடல் ஒத்தது – அவ் அயோத்தி மாநகர்

இப்படியாக பிரமாண்டமாக போனாலும் அச்சமுத்திரங்களில் உயிர் இல்லை. பொலிவின்றும் மகிழ்ச்சியற்றும் சென்றது. ராமன் கூட இல்லை அல்லவா?

அச்சேனைகளுடன் செல்லும் பெண்களின் கோலத்தை “கொஞ்சம்” கோடிட்டு காட்டுகிறார்.
அலங்காரங்கள் எதுவும் செய்யாத பெண்டிர் – வாசனை புகை போடாத கூந்தல்கள், போர் முடிந்தபின் கறைகள் கழுவிய வாட்களைப் போன்று, மை எழுதா கண்கள்…
எப்போதும் மணிகள் பதிக்கப்பெற்ற வடங்களை கொண்ட அப்பெண்களின் இடைகள் இப்போது அவைகளை அணியாததால், பாரம் இறங்கி இளைபாறினவாம். கைகேயின் வரத்தால் பெற்ற பலன் இதுதானோ என்றான எரிச்சலான கிண்டல் தொனி!
தேவரையும் மருள் கொள்ளச்செய்யும் அழகுடைய பெண்கள், அணிகலன்கள் அணியாமல், பூக்களை உதிர்ந்து விட்ட, இலையுதிர் கால கொம்புகள் போல் அவ்வூர்வலத்தில் சென்றார்கள்.

தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.

இப்படி காட்சிகளை மாபெறும் உயரத்தில், பிரமாண்டத்தில், வானை மறைக்கும் அதிசய அணியாக சொல்லிவருகின்ற கம்பர், ஓர் இடத்தில் சரசரவென இறங்கி, இயல்பாக, எளிய ஆனால் புன்னகைக்க வைக்கும் ஓர் தன்மை நவிற்சி சித்திரத்தைக் காட்டுகிறார்.

மத்தளங்கள் முதலிய நிறைய வாத்தியங்களை அச்சேனை எடுத்துச்சென்றாலும், அவற்றை ஒலிக்காமல், அறிவிலர் கூட்டத்தில் இடையே இருக்கும் அறிஞர் போல் அமைதியாக, மௌனமாக எடுத்துச்செல்கிறன. அந்தக் காட்சிகள், ஓர் நெடும், நீண்ட சுவரில் வரைந்த சேனை சித்திரங்கள் போல இருக்கின்றன…

சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது – அப் படையின் ஈட்டமே

ஒரு கணம் வாசிப்பை நிறுத்திவிட்டேன்… ஶ்ரீரங்கம் அல்லது திருவானைக்காவல் அல்லது உங்களுக்கு தெரிந்த பெரும், அகல, நீண்ட சுவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் இச்சேனை சித்திரங்கள் வரைந்தால் எப்படியிருக்கும்? நாம் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அச்சுவரின் அருகே மெல்ல நடந்து கொண்டே அச்சேனை சித்திரங்களை பார்த்து வருகின்ற காட்சி மனதில் விரிகிறது…

ஓர் பொலிவற்ற, பிரமாண்ட சேனையின் மவுன பயணத்தை இத்தனை எளிமையான சித்திரத்தை தரும் பாடலை தாண்டி எப்படி நகர்வது?

முன்னரே குறிப்பிட்ட, கைகளை, கண்களை அகல விரித்து “எவ்ளோ உசரம் தெர்மா?” என்ற குழந்தை, மாலையெல்லாம் ஆடி, விளையாடி களைத்து, இரவு சிறு புன்னகையுடன் உறங்குவது போலிருக்கிறது, இச்சித்திரம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.