கடலிற்கான உரம், இரும்பு

நாம் சின்னப்பிள்ளையாக இருக்கையில் எதையேனும் போட்டு உடைத்துவிட்டு‌, பின்னர் யாரும் பார்த்து திட்டப் போகிறார்களே என்று அதை மீண்டும் பழையபடி ஆக்க முயன்று, முடியாமற்போய் கையைப் பிசைந்தபடி நின்றிருப்போம் அல்லவா? அப்படித்தான் பூமியை செய்து வைத்திருக்கிறோம். ஆரம்பித்த ஜோரில் ஜே‌ ஜே என்று‌ எல்லாவற்றையும் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, அதன்‌ பின்விளைவுகள் தெரியும்போது, அய்யய்யோ உடைஞ்சிருச்சே என்று ஏதாவது செய்ய முயற்சிக்குறோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் புவி வெப்பமடைதல்.

காரணம் அதீதப் பெட்ரோலியப் பயன்பாடு. பை, கார், லாரி, பஸ், ட்ரெய்ன் ஏன் விமானம் வரை அதை எரித்துதான் பொழுது ஓடுகிறது. முதலில் அதன் வேகமும், செயல்திறனும் பிரமிக்க வைத்தன. பின்னாளில்தான் இந்தப் பிரச்சனைகளின் சுயரூபம் தெரிந்தது. நாம்‌ எரித்துத் தீர்த்த பெட்ரோலியம், கரியமில வாயுவாய் மாறி, பசுமைக்குடில்‌ விளைவினால் மொத்த பூமியின் சராசரி வெப்ப நிலையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. அதன் விளைவாக துருவங்களில்‌ பனிப்பாறை உருகுதல் போன்ற சிக்கல்கள் வந்துவிட்டன.

பூமி ஒரு மூடப்பட்ட பாத்திரம். எதுவும் வெளியே போயெல்லாம் தப்பிக்க முடியாது. அணுக்கள்‌ அழையாமைக் கோட்பாட்டின் படி இத்தனை பெட்ரோலியமாக திரவ நிலையில் இருந்த அத்தனை கார்பன்‌ அணுக்களும் இப்போது வாயு நிலையில் கரியமில வாயுவாய் இருக்கின்றன.

இந்த கார்பன் டை ஆக்ஸைடு‌ ஒரு பெரிய சுழற்சி. இதன் சுழற்சியைப் பார்ப்போம். பச்சையம் chlorophyll இருக்கிற உயிரிகள்‌, கரியமிய வாயுவையும் நோரையும் சேர்த்து ஒளிச்சேர்க்கை மூலம், கார்போஹைட்ரேட்டுகளைத் தயாரிக்கின்றன. அவை பிற உயிர்களால் உண்ணப்படுகின்றன. அவைகளின் உடலில் இந்தக் கார்பன் தசையாக, எலும்பாக, சதையாகச் சேரும். உணவுச் சங்கிலியில் அவை அப்படியே இன்னொரு உயிரினத்திற்கு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படித்தான் கார்பன் பூமிக்குள்ளேயே சுற்றித் திரிகிறது. நாம் கரியமில வாயுவை அதிகமாக்கினோம் ஆனால் பூமி அதனை கிரகித்துக்கொள்ளும் வேகம் மாறாமலே இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் இருக்கும் பூமியில் மரங்களால் நடக்கும் ஒளிச்சேர்க்கையை விட, மீதமிருக்கும் கடலில் நடக்கும் ஒளிச்சேர்க்கை அளவிற் பெரியது.

கடலில் செயல்படும் இந்தக் கார்பன்‌ சுழற்சி சற்றே மாறுபட்டது. அங்கே செடிகளெல்லாம் கிடையாது. வெறும் பாசிகளும், பாக்டீரியாக்களும்தான். அவற்றை சின்ன மீன்கள் சாப்பிடும், அதை ஒரு பெரிய மீன் இப்படியே போய்க்கொண்டிருக்கும். எதாலும் உண்ணப்படாத பாசி தான் உறிஞ்சிய கரியமில வாயுவோடு கடலுக்குள் ஆழ்ந்துவிடும். அது மேலே வருவதற்கு ஆயிரக்கணக்கில் ஆண்டுகள் ஆகும். பூமி இப்படித்தான் கார்பன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது‌. ஏதோ ஒரு காரணத்தால் திடீரென்று கடலின் மேற்பரப்பில் பாசி அல்லது பாட்டீரியாக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகும். அது கொஞ்ச நாளில் எக்கச்சக்க கார்பனை உறிஞ்சி கடலுக்கடியில் புதைக்கும். இதைக் carbon sequestration என்பார்கள்.

இந்த பாசிகள் கடலுக்கு அடியில் வளர்ந்து பயனில்லை. Photic zone எனப்படும் சூரிய ஒளி புகக்கூடிய ஒரு கிமீ ஆழ‌ம் வரை வளர்ந்தால்தான் பிரயோஜனம். கடற்பரப்பில் இயற்கையாக சில நேரம் பாசிகள், சூழல் சாதகமாக இருப்பின் ஏகபோகமாக வளர்ந்து கரியமில‌ வாயுவை உறிஞ்சி கடலாழத்தில் போய்விடும். இந்த மாதிரி திடீர் வளர்ச்சியை algal bloom என்கிறார்கள். இந்த முறை கரியமில ‌வாயுவைக் கவர்வது மட்டுமல்லாமல் உணவு நிறைய கிடைப்பதால் மீன்கள் பெருகவும், அதன்மூலம் மொத்த உணவுச் சங்கிலியில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்‌. மனிதர்களாகிய நமக்கு இதைச் செயற்கையாகச் செய்தால் என்ன என்ற குறுக்கு யோசனை வருமா இல்லையா?

1930களில் பிரிட்டிஷ் உயிரியல் அறிஞர் ஜோசப் ஹார், கடலில் சில இடங்களில் உயிர் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. ஆனால் உயிர்கள் இல்லை அம்மாதிரி இடங்களை desolete regions என்கிறார். அந்த இடங்களில் இரும்புச்சத்து குறைபாடு என்பதே அவரின்‌ ஊகம்.  மிகச்சரியாக, அதன் பொன்விழா ஆண்டான 1980ல், கடலியல் அறிஞர் john martin இந்த இரும்புச் சத்துக் குறைபாடு‌ என்னும் கருத்தைத் தோண்டி எடுக்கிறார். ஒளிச்சேர்க்கைக்கு இரும்பு ஒரு முக்கிய நுண்சத்துப்பொருள் micronutrient என்று நிரூபிக்கிறார். கடலில்‌ உள்ள desolate பகுதிகளை, அவர் இரும்புச் சத்து குறைந்தவையெனக் கணிக்கிறார்.இம்மாதிரி இடங்களில்‌ எல்லா சக்தியும்‌ இருந்தும் அங்கு உயிர் இல்லாமல் போக இரும்புச்சத்து குறைபாடே காரணம் என்கிறார். அம்மாதிரி இடங்களை HNLC(High Nutrient Low Chlorophyll) இடங்கள் என்கிறார்.
ஆக இரும்புச் சத்தை அந்த இடத்தில் சேர்த்தால் அவை பாசிகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி டன் கணக்கில் கரியமில வாயுவைக் கவர்ந்து கடலுக்குள் புதைக்கும் என்கிறார். கணக்குகள் சொல்லும் அளவு என்னவெனில் ஒரு கிலோ இரும்புச்சத்து சேர்ப்பதால் உருவாகும் பாசிக் கூட்டம் 83000 கிலோ கரியமில வாயுவை உறிஞ்சி கடலுள் புதைக்கும் எ‌ன்பதாகும். அப்படியெனில்‌ ஒரு டன்‌ இரும்பை கடலில் ‌கரைத்தால் எட்டு கோடியே முப்பதனாயிரம் டன் கரியமில‌ வாயுவை‌ வளிமண்டலத்தில் இருந்து பிரிக்க முடியும். வூட்ஸ் ஹோல் கடல்சார் நிறுவனத்தில்‌ மார்ட்டின் விட்ட சவால்‌ பிரபலம். “அரை லாரி இரும்பைக் கொடுங்கள். உங்களுக்கு‌ நான் மீண்டும் ஒரு‌ பனிக்காலத்தையே உருவாக்கிக் காட்டுகிறேன்” என்பதுதான் அது.

இது ஒன்றும் தானாய் உதித்த சிந்தனை இல்லை. பூமியில் இது தன்போக்கில்‌ அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.‌ நீர் அல்லது காற்று அரிப்பால்‌ பாறைகளில் இருக்கும் இரும்புச்சத்து நீரில்‌ கலந்து பாசிகள் பல்கிப்‌பெருகுகின்றன. 1991ல் பிலிப்பைன்ஸின் பினடுபோ எரிமலை ‌mount pinatubo வெடிக்கையில் வெளிப்பட்ட இரும்புச்சத்துள்ள‌ சாம்பல் கடலில்‌ போய் கலந்தது. சுமார் 40000 டன் இரும்புச் சத்து கலந்ததால் உலகம் முழுக்க கரியமில வாயுவின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. இது போன்ற நிகழ்வுகள்தான் இரும்பை கடலில் சேர்த்து பாசி வளரவிட்டு கரியமில‌ வாயுவை கவர்கிற யோசனையை உண்டாக்கியிருக்க வேண்டும். இப்படி இரும்பைச் சேர்க்கும் செயல்முறைக்கு iron fertilisation என்று பெயர்.

1993ல் ‌இருந்து இதுவரை பதிமூன்று ‌முறை பல்வேறு நாடுகளால் உலகம்‌ முழுக்க பல்வேறு‌ இடங்களில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறதஃப்‌009ல் இந்தியாவும் ஜெர்மனியும் கூட அட்லான்டிக்‌ கடலில் லோஹாஃபெக்ஸ் LOHAFEX என்ற‌ பெயரில் சோதனை‌ நிகழ்த்திப் பார்த்திருக்கிறது. ஆய்வு முடிவுகள்‌‌‌ நம்பிக்கை அளிக்கின்றன. கரியமில வாயுவை பிடிப்பதோடு மட்டுமின்றி, இவை கடல்‌உணவுச் சங்கிலியின் பிரதான உற்பத்தியாளர்களான பாசிகளைப் பெருக்குவதால் பிற உயிர்களின் எண்ணிக்கையும் பெருகும். முக்கியமாக திமிங்கிலங்களுக்கு இவை வரப்பிரசாதமாக இருக்கும்‌ என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் சூழியல் அறிஞர்கள்‌ இதனை‌ வேண்டாம்‌ என்று தடுக்கிறார்கள். காரணங்கள் இரண்டு.

நாற்பதாயிரம் டன் என்ன? நாலு லட்சம் டன் கரைத்தாலும் அது கடலில் பெருங்காயம் கரைக்கிற கதைதான். நம் தொழிற்சாலை, வாகனங்கள் இவையெல்லாம் ஊதித் தள்ளும்‌அளவை ஒப்பிட்டால் இந்தச் சோதனைகள் உறிஞ்சும் அளவு சொற்பமே. நம் குறிக்கோள் கார்பன் தடத்தை carbon foot print குறைப்பதில் இருக்க வேண்டுமே தவிர, இப்படி‌ கடலில்‌ இரும்பைக் கரைத்து விளையாடுவது தேவையில்லை
இம்மாதிரி உடைந்ததை ஒட்டவைக்கிறேன் பேர்வழி என்று கிளப்புகிற geoengineering திட்டங்கள்‌ எல்லாமே ஆபத்தானவை. எங்கு எதில்‌ தவறு நடக்கும்‌ என்றே தெரியாது. அதுவும் கடல்‌போன்ற பரந்த அதேசமயம் நெகிழ்ச்சித்தன்மை உள்ள‌ ஒரு சூழ்மண்டலத்தில் இதன் நெடுநாளைய விளைவுகள்‌‌ என்னவென்று‌ நம்மால் கணிக்க முடியாது. இரும்பைத் தின்று‌ பாசியைத்‌ தவிர‌‌ வேறு‌ ஏதேனும் மிகுதியாய் வளர்ந்து தொலைக்கக் கூடாது. ‌

London dumping convention 2008ல்‌ போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஆய்வுகளுக்காக அல்லாமல் செய்யப்படும் iron fertilisation செய்முறையை ஒப்பந்தத்திற்கு எதிரானதாகச் சொல்கிறது. மேலும் நாடுகள்‌ இதில் போடும் பணமும்‌ கடலில் கரைத்த பெருங்காயமே. அவ்வளவெல்லாம்‌ போகாமல் அடுத்த தெருவுக்கு போகையில் நடந்து போவோம். சிக்னலில் வண்டியை அணைத்து வைப்போம். சுங்கச்சாவடிகளில் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியோ மிதித்தோ உறுமாமல் இருப்போம்.

One Reply to “கடலிற்கான உரம், இரும்பு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.