ஓடு மீன் ஓட..

2017 ஆம் ஆண்டு, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ் போன்ற தொழிலதிபர்களை விடப் பெரிய பணக்காரர் ஒருவர் புதிதாக உருவாகியிருக்கிறார். அவர் ஒரு பலசரக்குக்கடை முதலாளி. மார்ச் மாதம் அவர் குழுமத்தின் பங்குகள் வெற்றிகரமாக பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு 100%க்கும் அதிகமான லாபம் ஈட்டித் தந்திருக்கிறது மும்பை டீமார்ட் என்னும் சில்லறை வணிகக் குழுமத்தின் தலைவர் ராதாகிருஷ்ண தமானி தான் அவர்.
இதைவிடப் பெரிய ஆச்சரியம் ஒன்று உள்ளது. உலகின் மிகப் பெரும் நிறுவனம் – ஒரு ஆகாய விமான தயாரிப்பு நிறுவனமோ / ஆயுதம் தயாரிக்கும் நிறுவனமோ / கார்கள் தயாரிக்கும் நிறுவனமோ அல்ல. அதுவும் ஒரு பலசரக்குக் கடைக் குழுமம் என்பதுதான். 1962 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தான் அது.
2004 ல் காங்கிரஸ், மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியேற்றவுடன், 1990 களில் துவங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மேலெடுக்கப்பட்டு பல புதுத் துறைகளில் அன்னிய முதலீடு வரலாம் என யூகங்கள் வரத்துவங்கின. சில்லறை விற்பனைத் துறையும் அதிலொன்று. பாரதத்தின் பெரும் தொழில் குழுமங்களான, ரிலையன்ஸ், பிர்லா, டாட்டா போன்ற பலரும் இதில் இறங்கினார்கள். அதே சமயத்தில் உலகின் மிகப் பெரும் குழுமங்களான வால்மார்ட், கார்ஃபோர், டெஸ்கோ, மெட்ரோ கேஷ் அண்ட் கேரி எனப்பலரும் உள்ளே பின்வழியாக வந்தார்கள் – அதாவது ஒரு இந்திய நிறுவனத்துடன் கூட்டாக அல்லது, மொத்த வியாபாரம் என.
அந்த சமயத்தில், தெற்கு / மேற்கு இந்தியாவில்தான் சில்லரை வணிகக் குழும நிறுவனங்கள் பெருமளவில் இருந்தன. சென்னையை மையமாகக் கொண்ட ஸ்பென்சர் நிறுவனமும், மும்பையை மையமாகக் கொண்ட அக்பர் அலீஸ் என்னும் நிறுவனமும் தாம் இந்தியாவின் முதல் நிறுவனப்படுத்தப் பட்ட சில்லறை அங்காடிக் குழுமங்கள் எனக் கூறலாம். தவிர, நீல்கிரிஸ், மார்ஜின் ஃப்ரீ, அமுதம், சிந்தாமணி அப்னா பஜார் எனச் சில்லரை அங்காடிக் குழுமங்கள் இயங்கிக் கொண்டு இருந்தன இருந்தன.
2006க்குப் பின், துவக்கங்களுக்கான ஆயத்தங்கள் சூடுபிடிக்கத் துவங்கின. ரிலையன்ஸ் தனது முதல் அஸ்திரமாக, அன்று தென் இந்தியாவின் பெரும் சில்லறைக்குழுமத்தின் தலவருக்கு இரு மடங்கு அதிக சம்பளம் கொடுத்து தலைவராக நியமித்தது. தனது இலக்கு ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் கோடி என பகிரங்கமாக அறிவித்தது. இது பல மாநிலங்களில் பெரும் சிக்கலை உருவாக்கியது. அரசியல் கட்சிகள் நிறுவனப்படுத்தப்பட்ட சில்லறைக்குழுமங்களை அனுமதிக்கக் கூடாது எனக் குரல் எழுப்பத் துவங்கின. பிர்லா, தென்னிந்தியாவில் சில்லறை விற்பனையில் இருந்த த்ரிநேத்ரா என்னும் குழுமத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை கிட்டத்தட்ட 150 கோடி கொடுத்து வாங்கியது. அதை ஒரு எதிர்மறை நோக்கில் சொன்னால், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் வாடகை ஒப்பந்தத்துக்குக் கொடுத்த பணம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு தமது சில்லறை விற்பனையைத் துவங்க அவ்வளவு அவசரம். சென்னை சரவணா ஸ்டோர்ஸைப் பார்த்து உந்தப்பட்ட கிஷோர் ப்யாணி, பிக் பஜார் என்ற பெயரில் பாரதமெங்கும் துவங்கினார். சென்னையில், ஐஐடி / ஐஐஎம் பட்டதாரியான ஆர்.எஸ் என்னும் ஆர்.சுப்ரமணியம், சுபிக்‌ஷா என்னும் பெயரில் தள்ளுபடி அங்காடிக் குழுமம் ஒன்றைத் துவங்கினார். 2004-2010 வரையான காலத்தை, சில்லரை வியாபாரப் போர்க்காலம் எனச் சொல்லலாம். சில்லறை வியாபாரக் குழுமங்களில் வேலை செய்து கொண்டிருந்த மேலாளர்களின் பொற்காலம் எனவும் சொல்லலாம்.
இந்தப் போட்டியில் இவர்கள் அனைவருமே செய்தது, முதலில் பாரதமெங்கும் கடைகளைத் திறந்தது. அதற்கான மேலாளர்களைப் போட்டிக் கம்பெனிகளில் இருந்து எடுத்து, அதிக சம்பளம் கொடுத்துப் பணியில் அமர்த்தியது. சரக்குக் கிடங்குகள் பெரும் நகரங்களில் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டன. தனியார் முதலீட்டாளர்கள் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தனர். முதல் பத்தாண்டுகளில், அநேகமாக அனைத்து நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். சில நிறுவனங்கள், சரியாக நடத்தப்படாமல் மறைந்தும் போயின.
80களில் பங்குச் சந்தையில் நுழைந்த ராதாக்ருஷ்ண தமானி, 90 களில் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் பொங்கிய பங்குச் சந்தையில் பெரும் பொருளீட்டினார். பங்குச் சந்தையில், இவரை ஒரு நிதானமான முதலீட்டாளர் என வர்ணிக்கிறார்கள். எந்த ஒரு பங்கையும், 5-10 வருடங்களுக்கான முதலீடாகப் பார்க்கும் தொலை நோக்குள்ளவர் என்கிறார்கள். 90 களில், அப்போதைய பிரபல பங்குச் சந்தைத் தரகராக இருந்த ஹர்ஷத் மேத்தாவுக்கு எதிரான குழுமத்தில் இருந்தார் என்கிறார்கள்.
2000 களின் துவக்கத்தில், தன் பங்குச் சந்தை நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, திடீரென, மும்பையின் புறநகரில், அன்று பிரபலமாக இருந்த அப்னா பஜாரின் இரண்டு கடைகளை ஃப்ராஞ்சைஸி (முகவர்) முறையில் எடுத்து இயக்கத் துவங்கினார். இரண்டு ஆண்டுகள் அவற்றை இயக்கிய தமானி, அவற்றை வாங்கி, டிமார்ட் எனப் பெயரிட்டு இயக்கத் துவங்கினார். மெல்ல மெல்ல மும்பையில் கிளைகளைத் துவங்கிய தமானி 2006-7 ஆண்டில், கிட்டத்தட்ட 300 கோடி வியாபாரம் செய்தார். 2012-13 ல், இது கிட்டத்தட்ட 50 கடைகள் என விரிந்து, வியாபாரம் 3000 கோடியைத் தாண்டியது. பெரும்பாலும் மும்பை, மஹராஷ்ட்ரா, குஜ்ராத் என ஒரு பிராந்தியத்துக்குள் தனது தொழிலை நிகழ்த்தி வந்த டீமார்ட், மெல்ல மெல்ல கர்நாடகம், ஆந்திரம், மத்தியப்பிரதேசம், தில்லி எனப் பரந்து, இன்று 120 அங்காடிகள் கொண்டு, 2016 ஆம் ஆண்டில் 8606 கோடி வியாபாரம் செய்து, 387 கோடி லாபமீட்டி இருக்கிறது.
பத்து ரூபாய் மதிப்புள்ள டீமார்ட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ரூபாய் 299 என மதிப்பிடப்பட்டு, இதன் பங்குகள் மும்பைப் பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையிலும் வெளியிடப்பட்டன. 1870 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க பலத்த போட்டி நிலவியது. முதலீட்டாளர்கள், 1870 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க கிட்டத்தட்ட 190000 கோடிப் பணத்தைக் கொட்டத் தயாராக இருந்தனர். மார்ச் 21 ஆம் தேதி மும்பைப் பங்குச் சந்தையில் 299 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட டீமார்ட்டின் பங்கு இரண்டு மூன்று நாட்களில், 650 வரை விலையேறியது. கடந்த 5-6 ஆண்டுகளின் மிகப் பெரும் பங்குச் சந்தை வெற்றி என்கிறார்கள்.
இன்று இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் ராதாக்ருஷ்ண தமானி. டீமார்ட் இந்தியாவின் மிக வெற்றிகரமான பலசரக்கு சில்லறைக் குழுமம். லாப சதவீதம் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் அதிகம் விற்கும் இந்தக் குழுமம், பெரும் நிறுவனங்களான ரிலையன்ஸ், பிர்லா, டாட்டா என எவரையும் விட மிக அதிக லாபமீட்டும் நிறுவனம். எவ்வாறு இது சாத்தியமானது?
இந்தியாவின் பலசரக்கு சில்லறை வியாபாரம் கிட்டத்தட்ட 40 லட்சம் கோடி என ஒரு மதிப்பீடு சொல்கிறது. கிட்டத்தட்ட 1.4 கோடி பலசரக்குக் கடைகள் இந்தியாவில் இருக்கலாம். இதில் 4 கோடி மக்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், இதில் 5-6 சதம் மட்டுமே இப்போது நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. 90 களுக்குப் பிறகு, இந்தியாவின் நகரங்கள் பெருமளவில் வளர்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம் பொங்கிப் பெருகுகிறது. இன்னும் 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி சீராக இருக்கும். எனவே, நிறுவனப்படுத்தப்படும் சில்லறை விற்பனைத் துறையின் வருங்காலம் பிரகாசமாக இருக்கும்.
டீமார்ட்டின் வெற்றிக்கு முக்கியமான காரணிகள் என்ன?
நுகர்வோர் நலன்: மும்பை இந்தியாவின் வியாபாரத் தலைநகர். அது, அங்கே பணிபுரியும் மத்திய / கீழ் மத்தியதர மக்களின் சொர்க்கம். அவர்களின் மிக முக்கியமான பிரச்சினை குடும்பச் செலவு. டீமார்ட், பொருட்களைத் தள்ளுபடியில் விற்கும் ஒரு நிறுவனம். சராசரியாக 6-7% வரை அங்கே விலை குறைவாகக் கிடைக்கும். மாதம் 5000 ரூபாய் வரை செலவு செய்யும் ஒரு குடும்பத்துக்கு, 300-400 ரூபாய் சேமிப்பு என்பது ஒரு முக்கியமான சேமிப்பு.
இது சென்னையின் சரவணா ஸ்டோர்ஸ் மாடலேதான்.
இது எப்படி சாத்தியமாகிறது?

வாடகை:
மும்பை போன்ற பெரு நகரங்களில், சில்லரை விற்பனைத் தொழிலின் மிகப் பெரும் செலவு – வாடகை. அநேகமாக அனைத்து டீமார்ட் அங்காடிகளும், அவர்களுக்குச் சொந்தமானவை. இதுதான் அவர்களின் மிகப் பெரும்முதலீடு. வாடகை என்பது ஆண்டுதோறும் அதிகரிக்கக் கூடிய ஒரு விஷயம். ஆனால், சொந்தக் கடை என்பது, முதலில் அதிக முதலீட்டைக் கோரும் விஷயமாக இருந்தாலும், 5-6 ஆண்டுகளில், வாடகை உயர்வைச் சரி செய்து விடும்.

குறைந்த விலையில் கொள்முதல்:
வழக்கமாக, சில்லறை விற்பனைக் குழுமங்கள், தங்கள் கொள்முதலுக்கான பணம் அளிப்பதற்கு 30-45 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார்கள். சில குழுமங்கள் 90 நாட்கள் வரை தருவதில்லை. ஆனால், டீமார்ட் தான் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு 10 நாட்களுக்குள் பணம் கொடுத்து விடுகிறார்கள். அதற்கான கழிவாக 2 சதம் வரை எடுத்துக் கொள்கிறார்கள். நவீன சில்லறை அங்காடிக் குழுமங்களில் இது பெரிய விஷயம். இது ஒரு முக்கியமான சேமிப்பு.
ஊழியர்கள் ஊதியம்:
சில்லறை விற்பனைப் போரின் துவக்கத்தில், மிகப் பெரும் நிறுவனம் ஒன்று, தனது முக்கியமேலாண் அலுவலருக்கு 5 கோடி சம்பளம கொடுத்தது. ஆனால், டீமார்ட், தனது அங்காடிகளில் வேலை செய்ய, கீழ் நிலை ஊழியர்களுக்கும், மேலாளர்களுக்கும் மிகக்குறைவான ஊதியமே அளிக்கிறார்கள். பல நிலைகளுக்கு 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களையே நியமிக்கிறார்கள். புள்ளி விவரங்கள் இல்லையெனிலும், உத்தேசமாக, டீமார்ட்டின் ஊதிய அளவு பெரும் நிறுவனங்களை விடப் பாதிதான் இருக்கும் என்கிறார்கள்.
பிராந்திய அணுகுமுறை:
டீமார்ட் முதலில், மும்பையில் துவங்கி, தனது அங்காடிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் முறையைச் சீராக்கினார்கள். உணவுப் பொருட்கள் கொள்முதலை, துவக்க காலத்தில், தமானியே நேரில் ஈடுபட்டு, கொள்முதல் கொள்கையை உருவாக்கினார் என்கிறார்கள். கிட்டத்தட்ட 50-60 கடைகளுக்கான கொள்முதலைச் செய்யும் போது, அது பெரும் மதிப்பாக இருக்கும். அந்த மதிப்புக்குக்கொள்முதல்செய்யும் போது, விலையைச் சில சதவீதம் வரை குறைத்து வாங்க முடியும்.
மட்டுமல்லாமல், மும்பையில், பல உணவுப் பொருள் ப்ராண்டுகளின் விற்பனையில் 20-30 சதம் டீமார்ட்டில் இருந்து வரும். எனவே, பெரும் நிறுவனங்கள், தமது விற்பனையை அதிகரிக்க, டீமார்ட்டில், நுகர்வோருக்கான இலவசங்கள் / தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். சில நேரங்களில், இன்னும் 2-3 மாதங்களில் காலாவதியாகும் பொருட்கள் / ப்ராண்டுகள் இருக்கும் – அவை காலாவதியாவதை விட, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்ற தந்திரங்களின் மூலம், அவற்றை சுலபமாக விற்க முடியும். இது போன்ற காரணங்களால், டீமார்ட்டின் விற்பனை பல மடங்கு அதிகரிக்கிறது.
நீங்கள் மும்பை மாநகரத்தில், பெரும் பன்னாட்டு உணவு நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என்றால் – உங்களது மிக முக்கியமான வியாபாரத் தொடர்பு டீமார்ட்டின் கொள்முதல்மேலாளர்.
அதிக வியாபாரம்:
மேற்சொன்ன அனைத்து காரணிகளின் மூலம் சேமிப்பதை, டீமார்ட் தனது நுகர்வோருக்கு விலை தள்ளுபடியாக, இலவசங்களாக அளிக்கிறது. எனவே, ஒவ்வொரு ஸ்டோரும் தனது போட்டிளாரை விட அதிக வியாபாரம் செய்கிறது. எடுத்துக்காட்டாக, ரிலையன்ஸ் 1450 கடைகளில் வருடம் 11000 கோடி வியாபாரம் செய்கிறது. பிக் பஜார், 1000க்கும் மேற்பட்ட கடைகளில் 14000 கோடி வியாபாரம் செய்கிறது. அதாவது ரிலையன்ஸ் ஒரு கடைக்கு 7.5 கோடியும், பிக் பஜார் ஒரு கடைக்கு 14 கோடியும் என வருட வியாபாரம் செய்கிறார்கள். ஆனால், டீமார்ட், 120 கடைகளில் 8600 கோடி என, ஒரு கடைக்கு சராசரியாக 70 கோடி வருட வியாபாரம் செய்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பிடுகையில், ஒரு சதுர அடி கடைப் பரப்பளவில், டீமார்ட் 10 மடங்கு அதிக வியாபாரம் செய்கிறது. இதனால், ஒரு கடையின் செலவுகள் 10 மடங்கு குறைந்து, லாப சதவீதம் அதிகரிக்கிறது.
குறைவான பொருட்சேதம்:
சில்லறை வணிகத் தொழிலில் மிகப் பெரும் நஷ்டம் – பொருள்சேதம் மற்றும் திருட்டு. கிட்டதட்ட 4-5 சத நஷ்டம் இதனால் வருகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இதைத் தடுக்க, நிறுவனங்கள் பல வழிமுறைகளை மேற்கொண்டாலும், இது, நிகழ்கிறது. பொதுவாக, இதில் பணி புரியும் ஊழியர்களும் இதற்குக் காரணமாக இருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால், 10 மடங்கு அதிக வியாபாரம் நடக்கும் மாதிரியில், பொருட்கள் கடை ஷெல்ஃபில் இருக்கும் காலம் மிகக் குறைவாக இருப்பதால், டீமார்ட்டில் பொருட்சேதம் குறைவாக இருக்கிறது
சீரான வளர்ச்சி வேகம்:
சில்லறை வணிகப் போர்கள் துவங்கிய காலத்தில், பெரும் அடிதடி நடந்தது. அதிகக் கடைகள், அதிக வணிகம் எனப் பெரும் போட்டி நடந்தது. அதிக சம்பள ஆட்கள் என. பலரும் குறுகிய காலத்தில், நாடெங்கும் கடைகளைத் திறந்தார்கள். இன்று அனைத்துப் பெரும் நிறுவனங்களும், நாடெங்கும் 1000 க்கும் மேற்பட்ட கடைகளை வைத்திருக்கிறார்கள்.
ஆனால், டீமார்ட் அப்படிச் செய்யவில்லை. 2002 ல் துவங்கி, 2016 ல், 120 கடைகள் மட்டுமே துவங்கியிருக்கிறார்கள். ஏனெனில், அவர்களின் வியாபார மாதிரி அப்படி. ஒவ்வொரு கடைக்கான இடத்தையும், சொந்தமாக வாங்குதல், அதிக முதலீடு பிடிக்கும் விஷயம். தமானி, கடன் வாங்கிக் கடைகளைத் திறந்திருக்கலாம் – ஆனால் செய்யவில்லை.
ஒருங்கிணைந்த தொழிற் பார்வை:
இதுதான் டீமார்ட்டின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் என்னும் ஒரு காரணமோ அல்லது, வாடகை இல்லை என ஒரு காரணமோ அல்ல இதன் வெற்றியின் பிண்ணணி. மேற் சொன்ன அனைத்துக் காரணிகளையும் இணைத்து, ஒவ்வொரு கடையும் லாபத்தை ஈட்ட வேண்டும் என்னும் ஒரு நிதானமான, பொறுமையான அணுகுமுறையே டீமார்ட்டின் இன்றைய வெற்றியின் பிண்ணனி.
பங்குச் சந்தை சாதகமாக இருக்கும் போது, பங்குகளை விற்றுப் பணம் அதிகம் ஈட்ட வேண்டும் என்பது போன்ற ஒரு லாபம் சார்ந்த அணுகுமுறை மட்டும் இல்லை இக்குழுமத்தில். துவங்கும் ஒவ்வொரு கடையும் நுகர்வோருக்கு குறைவான விலையில் பொருட்களை அளிக்க வேண்டும் – அதற்கான ஒட்டு மொத்த சூழலை உருவாக்க வேண்டும் என்னும் அணுகு முறையே இதற்கு முக்கிய காரணம்.
டீமார்ட், இந்தியாவின் வால்மார்ட் என்கிறார்கள். நுகர்வோருக்குக் குறைந்த விலையில் பொருட்களை அளிக்க வேண்டும் என்னும் கொள்கையில் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது. ஆனால், அதை அவர்கள் செயல்படுத்தும் முறையில் வேறுபாடு இருக்கிறது.
1962 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வால்மார்ட்டின் இன்றைய வியாபாரம் 478 பில்லியன் டாலர்கள், லாபம் கிட்டத்தட்ட 21 பில்லியன் (4.3%). டீமார்ட்டின் இன்றைய வியாபாரம் 1.34 பில்லியன் டாலர், லாபம் 0.05 பில்லியன்(3.7%). வால்மார்ட்டோடு ஒப்பிடுகையில், டீமார்ட் கொசு. ஆனால், எந்தப் பெரும் நிறுவனத்தின் தூக்கத்தையும் கலைத்துவிடும் கொசு.
வால்மார்ட்டின் கட்டமைப்பு, அமெரிக்காவின் பொருளாதார அலகுக்குச் சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஊருக்கு வெளியே, மிகப் பெரும் பரப்பளவில் அமைக்கப்பட்ட மால்கள். அங்கு நுகர்வோரின் கொள்முதல் அலகுகளும் பெரிது. அதற்கேற்றார்போல், பணம் சேமிக்கும் பெரும் பேக்குகள் என நுகர்வோருக்குத் தேவையான பொருட்கள் இருக்கும். இந்தியாவில், கொள்முதல் அலகுகள் மிகச் சிறியவை (அமெரிக்க நுகர்வோருடன் ஒப்பிடுகையில்). இங்கு ஊருக்கு வெளியே மால்களை அமைத்தால், நுகர்வோர் பெருமளவில் வருவது சிரமம். எனவே டீமார்ட், மக்கள் வசிக்கும் இடஙகளிடையே மால்களை அமைத்திருக்கிறார்கள். இது போன்ற கட்டமைப்பு வேறுபாடுகள் இருந்தாலும், மிகப் பெரும் ஒற்றுமை – இரு இடங்களிலும், மக்கள் பொருட்களை வாங்கினால், பணம் சேமிக்கப்படும் என்பதுதான். அதை இரு நிறுவனங்களும் தாம் இயங்கும் புவியியல் பரப்பில் மிக வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளனர். இதுவே அவர்களின் வெற்றியின் அடித்தளம்.
டீமார்ட், பங்குச் சந்தையில் திரட்டிய பணத்தை, தொழில் விரிவாக்கத்துக்கும், வங்கிக்கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது. அவர்கள் தம் செயல் திறன் மிக்க தொழில் மாதிரியில் இம்மியும் பிசகாமல், வியாபாரத்தை இந்தியாவெங்கும் விரிவு படுத்தினால், அடுத்த 15 ஆண்டுகளில், இந்தியாவின் மிகப் பெரும் சில்லறை வியாபாரக் குழுமாக எழுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இதுவரை அவர்களின் செயல்பாடுகள் அதை உறுதியாகச் சொல்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.