சமீபத்தில் எனது இந்திய நண்பர் ஒருவர் வெகு நாட்களாக வயிற்று வலியில் அவதியுற்று எக்ஸ்ரே மூலம் பெருங்குடலில் புற்று நோய் இருப்பதையும் அது கல்லீரலுக்கு பரவியிருப்பதையும் கண்டறிந்து அறுவை சிகிச்சை,புற்று நோய் மருந்துகள் மூலம் தற்சமயம் குணமடைந்துள்ளார். இவர் சுத்த சைவ உணவை தவிர்த்து வேறெதையும் கண்ணால் கூட பார்க்காதவர். 7 வருடங்களுக்கு முன் பெருங்குடல் பரிசோதனையில் புற்று நோய்க்கான அறிகுறிகள் இல்லாததினாலும் 10 வருடங்கள் கழித்து இப்பரிசோதனையை திரும்ப செய்தால் போதுமென்று குடலியல் மருத்துவர் திட்ட வட்டமாக சொன்னதாலும் ஆறேழு மாதங்களாக வலியால் அவதிப்பட்டபோதும் இது புற்று நோயாக இருக்கக் கூடும் என்று நினைக்காததால் மருத்துவரிடம் செல்லாமல் சுய வைத்தியம் செயது கொண்டிருந்தேன் என்று பிறகு சொன்னார். மேலும் பெருங்குடல் புற்று நோய் இந்தியர்களிடையே அரியதாக உள்ளது என்பதும் இன்னொரு காரணம். சைவ உணவும் அதில் நார் சத்து அதிகமாக இருப்பதுமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக எல்லா நோயாளிகளையும் போலவே என்னை ஏன் இந்த புற்று நோய் தாக்கியது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லாததால் இவர் சிகிச்சை பெற்ற அமேரிக்காவில் புகழ் பெற்ற மருத்துவ மனை இவருடைய மரபணுக்களில் புற்று நோய் தாக்குதலை ஏற்படுத்திய மாற்றங்கள் உள்ளனவா என்றுபரிசோதித்ததில் ஒரு மாற்றமும் தெரியவில்லை. என்னிடம் அவர் இதை சொன்ன பின் மற்றவர்களிடம் கேட்ட கேள்வியையே என் முன் வைத்தார். சைவ உணவுக்காரராக இருந்தாலும் அமெரிக்காவில் உணவில் சேர்க்கப்படும் செயற்கை பொருட்கள் அவருடைய நோய்க்கு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று நான் கூறிய பதில் இருவருக்குமே திருப்திகரமாக இல்லை. ஆனால், நான் சமீபத்தில் மாசாசூசெட்ஸ் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனம் வெளியிட்ட வணிகக் கட்டுரையில் இந்த கேள்விக்கு கூடிய சீக்கிரமே பதில் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை படித்தபோது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.
முன் சொன்ன மாதிரி, அடி பாகத்தை (ரெக்டம்) தவிர பெருங்குடல் புற்று நோய் இந்தியர்களிடையே மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. ஆனால் இந்த புற்று நோய் சிறு வயதினரை தாக்குவதோடு நில்லாமல் மிகக் கடுமையானதாகவும் உள்ளது. குறைந்த அளவில் காணப்படுவதற்கு இந்தியர்களின் சைவ உணவு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், இந்திய நோயாளிகளிடம் காணப்படும் மரபணு மாற்றங்கள் மேற்கத்திய நாட்டு நோயாளிகளிடம் காணப்படும் மாற்றங்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மரபணுத் தொகுதி(ஜீனோம்)யில் உள்ள வேறுபாடுகள் இந்த இரண்டு வகையான புற்று நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்பதால் குளோபல் ஜீன் கார்ப்பரேஷன் என்னும் புதிய வர்த்தக நிறுவனம் இந்திய பெருங்குடல் புற்று நோயாளிகளின் மரபணுத்தொகுதியையும் உயிரணு(செல்)வில் உள்ள உட்கரு அமில(டிஎன்யே) த்தையும் புற்று நோய் உயிரணுக்களையும் பரிசோதித்து பார்க்க உளது இதன் மூலம் புதிய சிகிச்சை முறைகளுக்கான வழிகளையும் ஏற்படுத்த விழைகிறது. இதன் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய மருந்துகளை உற்பத்தி செய்ய உதவும்; இந்த நோய் நிவாரணத்துக்குரிய புதிய முடிவுகள் எடுக்க உதவும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மரபணு அமைப்புகளை ஆராய்வதன் மூலம் பெரும்பாலான இந்தியர்களை பாதிக்கும் சர்க்கரை வியாதி, வில்சன் வியாதி என்று அழைக்கப்படும் கல்லீரல் வியாதி மற்றும் இதர புற்று நோய்களுக்கான காரணங்களை கண்டு பிடிக்கலாம் என்று நம்புகிறது. அது மட்டுமல்லாமல், மேலை நாடுகளில் அதிக எடையுள்ளவர்களிடம் அதிகமாக காணப்படும் வியாதிகளான சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற வியாதிகள் எவ்வாறு மெலிந்த இந்தியர்களையும் அதிக அளவில் பாதிக்கிறது என்பதையும் ஆராய முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனம் 2013ல்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு மருத்துவர்களும் இரண்டு வர்த்தக நிர்வாகிகளும் சேர்ந்து பாஸ்டன் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்சமயம் சிங்கப்பூரை மையமாக கொண்டுள்ளது. இந்த நால்வரின் நோக்கம் எவ்வாறு மரபணு ஆராய்ச்சியின் மூலம் முன்னேறும் நாட்டினரின் உடல் நலத்தை முன்னேற்ற முடியும் என்பதே.இந்த வேட்கை இவர்களை இந்தியாவிற்கு கொண்டு சென்றுள்ளது . இதன் காரணம், அதிகமான மக்கள் தொகையிருந்தும், பலதரப்பட்ட மக்களை கொண்டிருந்தும் மரபணு சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்வதில் இந்தியா அதிக அக்கறை காட்டாமலிருத்தலும் மற்ற நாடுகளுடன் பரிமாறிக் கொள்ளாமலிருப்பதாலுமே ஆகும்.இந்தியாவிலிருந்து வெளி வரும் மரபணு செயதிகள் 0.2 சதவிகிதம். அறுபது சதவிகித ஜனத்தொகை அமெரிக்க, ஐரோப்பா, ஜப்பான் நாடுகளுக்கு வெளியே உள்ளது. ஆனால் இந்த நாடுகளிருந்து வெளி வரும் மரபணு தகவல் ஒரு சதவிகிதத்திற்கும் கீழாகும். இந்தியர்களோ மற்ற நாட்டினர்களோ இதை நினைத்து வெட்ககப்பட வேண்டியதில்லை. இந்தியா போன்ற நாடுகள் காச நோய் போன்ற தொற்று நோய்கள் தடுப்பிற்கும் ஒழிப்பிற்கும் அதிக அளவு பணத்தை ஒதுக்கவும் செலவழிக்கவும் வேண்டியுள்ளது. ஆகவே, இங்கிலாந்து அமேரிக்கா போன்ற நாடுகளை போல் மரபணு திட்டங்களையோ கழகங்களையோ நிறுவ முடியவில்லை.
எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் லாபத்தை எதிர் நோக்கியே தொடங்கப்படுகிறது. குளோபல் ஜீனும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் தொகை, புற்று நோய் புள்ளி விவரம், புதிய மருந்துகளை கண்டு பிடிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதி போன்றவைகளை கணக்கிட்டு இந்தியா புற்று நோய் மருந்து தயாரிப்பிற்காகவும், புற்று நோய் நிவாரரணத்திற்காகவும் வருடத்திற்கு 1.9 பில்லியன் டாலர் செலவழிக்கும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எதிர்பார்கின்றனர். இத்துடன், சீனா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளையும் சேர்த்துக் கொண்டால் ஒதுக்கப்படும் தொகை எட்டு பில்லியன் டாலருக்கும் மேலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வருடத்திற்கு 14 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இந்த சிறிய நிறுவனத்தின் தற்போதைய வருமானம் தெரியவில்லை. தனி நபரகளும் நாற்பதுக்கும் மேலான நிறுவனங்களும் குளோபல் ஜீன் நிறுவனத்தில் முதலீடு செயதுள்ளது என்று அறிய வரும்போது வருங்கால வருமானத்தில் ஒரு கணிசமான பங்கை அடைவதற்கே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை சுலபமாக நிர்ணயிக்கலாம். இந்த நிறுவனம் இந்தியாவில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு முக்கியமான காரணம் 10000த்துக்கும் மேலான இந்தியர்களின் உட்கரு அமிலத்தை சேமித்து வைத்துள்ளதே ஆகும் . இதன் மூலம் இந்தியர்களின் பொது மரபணுத் தொகுதியை அறிந்து வைத்துள்ளது, இந்தியர்களிடையே அதிகமாகக் காணப்படும் வியாதிகளில் உள்ள மரபணு வித்தியாசங்களை கண்டறிவது சுலபமாக இருக்கும் என்று எண்ணுகிறது.
குளோபல் ஜீனுக்கு போட்டியாக “ஜீனோம் 100 கே” எனும் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆசிய கண்டத்தில் உள்ள நூறாயிரம் நபர்களின் மரபணுக்களை சேகரித்து 50 முதல் நூறு வகைகளாக பிரிக்க உள்ளது. இக்கட்டுரையை படிப்பவர்கள் இதற்கு முன் யாருமே இத்துறையில் இறங்கவில்லை என்று நினைக்கலாம். “ஆயிரம் மரபணுத் திட்டம்” சிறிய அளவில் குஜராத் மாநில இந்தியர்கள் பாகிஸ்தான் பஞ்சாபியர்கள், மற்றும் தெற்காசியர்களின் மரபணுக்களிடையே வித்தியாசங்கள் இல்லை என்று கண்டறிந்துள்ளது.. இன்னொரு திட்டம் குஜராத் மாநில இந்தியர்களிடையேயும் மற்ற ஆசிய கண்ட மக்களிடையேயும் மரபணுக்களில் வித்தியாசமில்லை என்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தின் “ஜீனோம் 100000” திட்டமும், அமெரிக்காவின் “ப்ரெஸிஷன் இனிஷியேட்டிவ் கோஹார்ட்” திட்டமும் மரபணுக்களை ஆராயும்போது இனத்தன்மையையும் கணக்கிலெடுத்து கொள்ளும் என்று அறிவித்துள்ளது. குளோபல் ஜீன்ஸ் நிறுவனமும் ஜீனோம் 100கே நிறுவனமும் பல விதங்களில் அதி வேகமாக மரபணுக்களை சேர்க்க நினைத்துள்ளது மரபணு ஆய்வுக்கு நபர் ஒருவருக்கு சராசரி 75 முதல் 538 டாலர் வரை செலவாகும் என்று கணக்கிட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய செலவு நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது சந்தேகமே.பென்சில்வேனியா வார்ட்டன் பொருளாதார பள்ளியை சேர்ந்த லாடன் பர்ண்ஸ் இந்தியாவின் உடல் நல கவனிப்பு பொருளாதாரத்தைப் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார். 25 சதவிகித இந்தியர்கள்தான் உடல் நல காப்பீடு திட்டங்களில் பங்கேற்கின்றனர். இத்திட்டங்கள் மரபணு பரிசோதனைகளை அங்கீகரிக்காது . மரபணு பரிசோதனை திட்டங்கள் வெற்றிகரமாக நடை பெற இந்தியர்கள் தங்கள் மரபணுவை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும். அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய அவர்கள் கையில் பணம் இருக்க வேண்டும். அப்பணத்தை அவர்கள் இதற்காக செலவழிக்க தயாராயிருக்க வேண்டும். மேலும், இப்பரிசோதனையின் முடிவுகளை தெரிந்து கொள்வதால் அவர்களுக்கு என்ன பயன் என்றும் கேட்கிறார்.ஆனால் குளோபல் ஜீன் நிறுவனத்தின் மரபணு சோதனை இந்தியர்களின் மரபணுக்களில் தீங்கு விளைவிக்காத மாற்றங்களை நிராகரித்து தீய மாற்றங்களை மட்டும் வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது;.இப்பரிசோதனையின் மூலம் கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்புச் சத்து வியாதிகளுக்காக எடுத்து கொள்ளும் மருந்துகளால் உபாதை ஏற்படுமா என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகின்றது மார்பக,கருவக புற்று நோய்களை உருவாக்கும் மரபணுக்கள் உள்ளவர்களையும் இச்சோதனைகளின் மூலம் அறியலாம். இத்தகைய மரபணுக்கள் உள்ளவர்களை புதிய மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வசதியாக இருக்கும் என்றும் கூறுகிறது. மக்களின் உடல் நலத்தை வளப்படுத்த வேண்டுமென்றால் எல்லா வகையினரின் மரபணுக்களையும் கண்டிப்பாக ஆராய்ந்தே ஆக வேண்டும் என்கிறார் குளோபல் ஜீன்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மரபணு ஆராய்ச்சியாளருமான ஜோனாதன் பிக்கர் .
முடிவுரை
இந்தியர்களிடையே பெருங்குடல் புற்று நோய் அதிகமாககே காணப்படாவிட்டாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய விவரங்கள் எட்டு அட்டவணைகளில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன என்று 1999 ஜூலை மாதம் வெளிவந்த இந்தியா குடலியல் சஞ்சிகை(இண்டியன் ஜெர்ணல் ஆப் காஸ்ட்ரோ என்டெராலஜி)யில் சென்குப்தா தேசாய் என்ற இரு மருத்துவர்கள் எழுதியுள்ளனர். மேலும் நகரங்களில் இருப்பவர்களை விட கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இந்த நோயால் பாதியளவுதான் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாவுச் சத்து அதிகமாக உள்ள உணவும் குர்குமின் என்னும் பொருளடங்கிய மஞ்சள் உணவில் அதிகமாக சேர்க்கப்படுவதும் காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகிறது.மேற்கத்திய நாடுகளில் இந்த புற்று நோய்க்கு சிகப்பு இறைச்சி உண்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்தியர்களின் மரபணுக்களை ஆராய விழையும் நிறுவனங்கள் மேற்சொன்ன விவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அட்டவணைகளில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள நபர்களையணுகி அவர்களின் மரபணுக்களை சேகரித்தால் வெகு விரைவில் இக்காரியம் முடிந்து விடும். மேலும் சிகப்பு இறைச்சி உண்ணும் இந்தியர்களின் மரபணுக்களில் புற்று நோயை உண்டு பண்ணும் தீய மாற்றங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும். நகரவாசிகளுக்கும் கிராமவாசிகளுக்குமிடையே மரபணு மாற்றங்கள் வேறுபட்டுள்ளனவா என்பதையும் அம்மாற்றங்களுக்கும் அவர்களின் உணவு பழக்க வழக்கங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். மரபணு சோதனைகளால் கிடைக்கும் பயன்களை
மக்களிடையே பரவலாக தெரியுமாறு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இவையெல்லாவற்றையும் விட இப்பரிசோதனைக்காகும் செலவை எவ்வளுவுக்கெளவு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்தால்தான் இந்தியர்களிடையே எடுபடும் என நான் நினைக்கிறேன்.
ஆதாரம்: Taking Genomic Data Global by Elizabeth Woyke, MIT Technology Review July 25, 2016
Epidemiology of Digestive Tract Cancers in India ;Mohandas KM, Desai DC; Indian Journal of Gastroenterology 1999 July-Sep 18(3) 118-121