அம்மா…

 

“அ…ம்…மா…” – இந்த சொல்லை அதற்கு முன்னும் அப்படி உச்சரித்ததில்லை. அதற்குப் பின்னும் அப்படி உச்சரித்ததில்லை. ஒரு சொல், அதன் பொருளின் உணர்வில் மீண்டும் உச்சரிக்கபடுவதற்கான வாய்ப்பு தீரும் பொழுது, அதன் ஆகிருதி அனைத்தையும் திரட்டி, பெரும்பலத்துடன் அடிவயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் போலும்…அப்படித்தான் அன்று அச்சொல் ஒரு கணத்த உருளையாய் என்னையறியாமல், வயிற்றிலிருந்து வாய்வழியே ஓலமாய் வெளியேறியேது. காலம், துயர்களின் வழி நம்மை துன்புறுத்தும் பொழுதுகளில் எழும் நம் ஆதங்கத்தின் ஒலிதானோ ஓலம்?

அம்மாவின் அசைவற்ற இருப்பை சொல்லொண்ணா இழப்பின் ஆதங்கத்துடன் நான் பார்த்தபடி இருக்கையில் வண்டி நகரத்துவங்கியது. எங்கள் வீடிருக்கும் தெரு முக்கு திரும்பியவுடன் வரும் “டி.எம் கோர்ட்” பஸ் ஸ்டாப் இருந்த முனையில் ஒரு மாவு மிஷின் உண்டு. அதை கடக்கையில் எப்போதும் மிளகாய் காரத்தின் மனம் மூக்கில் குறுகுறுவென்று ஏறும். நாற்பதாண்டுகளுக்கும் மேலாய் எவ்வித மாற்றமுமின்றி அதே மணத்துடன் அங்கேயே இருக்கிறது மிஷின். அந்த மிஷன் வாசலில் தான் எங்கள் பள்ளிப்பேருந்து நிற்கும். அது நிற்க வருமுன்பே அம்மா அங்கே நிற்பார். ஒரு நாள் சில நாட்கள், ஒரு மாதம் சில மாதங்கள் அல்ல…சுமார் எட்டு வருடங்கள் அம்மா நாள் தவறாது அங்கு நின்றிருக்கக்கூடும். அத்தினங்களின் நினைப்பு, நித்திரையில் கூட நீக்க முடியா சித்திரமாய் எனக்குள் படிந்திருக்கிறது. தெருமுனை திரும்பும் பொழுது பேருந்து ஜன்னலிருந்து தலையை நீட்டி அம்மாவை பார்த்து கையசைக்கவும் புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகி என்னை படிக்கட்டுக்களிலிருந்து கீழிறக்க தயாராவதும், சரியாக நடக்கும் தவறாத நிகழ்வாகும்.

அத்தகைய காலத்தில் ஒரு நாள், பலகாலமாக கண்டிராத மாமழை மதுரைக்கு வந்தது. குடைபிடித்திருந்தும் முழுவதுமாய் நனைந்திருந்து எனக்காய் காத்திருந்தார் அம்மா. என்னை அள்ளிக்கொண்டு மிஷின் உள்ளே நான் நனையாதவாறு ஒதுங்கினார். கூப்பிடு தொலைவில் வீடிருப்பினும் இரண்டு மணி நேரமேனும் எங்களை நகர விடாமல் கொட்டித்தீர்த்த அந்த பெருமழையின் வழியே ஒரு அரிய இழை எனக்கும் அம்மாவுக்கும் இடையே உண்டானது. ஆரம்பம் முதலே எனக்கு அறிவியலில் அதிக ஆர்வம் இல்லாத காரணத்தினாலோ என்னவோ, “எதனால் மழை பெய்கிறது” என்று கேட்பதற்கு பதில் “எப்போதெல்லாம் மழை பெய்யும்?” என்று கேட்டேன் நான். அன்பின் வருடலுடன் அம்மா சொன்ன பதிலை இன்று வரை என் வயதுடன் இழுத்து வந்து கொண்டிருக்கிறேன்…”நல்லவங்க இருக்கிற ஊருல அடிக்கடி மழை பெய்யும். அந்த நல்லவங்க சாமி கிட்ட போனாலும் மழை பெய்யும்” என்றார் அம்மா. இன்று வரை, தெரிந்தவர்கள் எவரின் மறைவுச்செய்தி கேட்டாலும், மழை பெய்கிறதா என்று பார்க்கும் ஆர்வம் எனக்குள் ஊறிப்போயிருக்கிறது.

நெரிசலான மேலமாசி வீதியின் வழியே எங்கள் வேன் நகர்ந்து கொண்டிருந்தது. அம்மாவின் கைப்பிடித்து கணக்கற்ற தினங்கள் களிப்புடன் நடந்த வீதியை இறுதியாய் ஒருமுறை அம்மாவுடன் ஊர்தியில் கடக்குபடி கட்டளையிட்டிருந்தது காலம். ஆரியபவன் பெரிதாய் இருந்த இடத்தை தாண்டிக் கொண்டிருந்தோம் நாங்கள். ஆரியபவனும் திண்டுக்கல் முருகன் கோயிலும் சந்திக்கும் சாலை முனையை எளிதில் மறக்க முடியாததற்கு ஏராளமான நொடிகள் நினைப்பிலிருப்பினும் மிகுந்த தாக்கம் தந்தவற்றில் ஒன்று அம்மாவுடனானது. இந்த சாலை இணைப்பில் ஆட்டோவில் நாங்கள் அமர்ந்திருந்த போதுதான் அம்மாவிடம் நான் ஒரு பொய் சொன்னேன். சிலபேரிடத்தில் வாழ்வின் எக்கட்டத்திலும் பொய் சொல்லக்கூடாது என்று வரையறுத்திருந்த என் கொள்கையை கோமாளித்தனமாக்கிய காலத்தின் பிடியில் பீடித்திருந்த ஒரு தினத்தில் தான் பொய் சொன்னேன்…”எனக்கு ஒண்ணும் ஆயிராது இல்லடா” என்று கேட்ட அம்மாவிடம், அவர் இன்னும் சில மாதங்களே இருக்கக் கூடும் என்ற அறிந்திருந்த நிலையிலும் “இல்லை, உனக்கு எல்லாம் சரியாயிடும்” என்று பொய் சொன்னேன். என் தொண்டைக்குழி திணறுவதை அம்மா கவனித்திருக்க வேண்டும் அல்லது தன் உதிரத்தின் உணர்வு பிறழல் தாய் அறியாது போகுமா என்ன?  “இல்ல. நீ எனக்காக சும்மா சொல்ற” என்றார் அம்மா. ஆரியபவன் கடந்து விட்டோம்…

மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பை நெருங்கி விட்டோம்…எங்கள் வீட்டினருகே சித்திரை திருவிழா தேரோட்டம் பார்த்தாலும் அம்மாவுக்கு திருப்தி இருந்ததில்லை. தேர் போகும் தெருவெங்கும் அதன் முன் சென்று ஆங்காங்கே தரிசனம் செய்யும் பழக்கம் அவருக்கு இருந்தது. “மீனாட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்குமா” என்பார். கடவுள் பற்றிய சந்தேகங்கள் வரும் வயது வரை கணக்கற்ற தேர்களை அவரின் கைப்பிடித்தபடி பார்த்திருக்கிறேன் நான். ஒரு முறை டிஎம் கோர்ட்டில் தேரை தவற விட்ட நாங்கள் வடக்கு மாசி சந்திப்பு வரை மூச்சிரைக்க ஓடினோம். ஏதேதோ சந்துபொந்துகளில் என் கையை பற்றியிழுத்தபடி ஓடிய அம்மா வடக்குமாசி வீதி பிள்ளையார் கோயில் முன் தேரை பிடித்து விட்டார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கன்னத்தில் போட்டுக்கொண்ட அம்மாவின் முகம் நினைவில் தோன்ற, அவரின் மூச்சற்ற முகத்தை நிகழ்காலத்தில் பார்த்தபடி இருந்தேன் நான். “எனக்கு இங்கிலீஷ் தெரியாதே” என்று சொல்லிக்கொண்டே அம்மா என்னுடன் எனக்காக உள்நுழைந்த “ஹிக்கின்பாதம்ஸ்” கடந்து விட்டோம் இப்போது.

வேன் மெதுவாய் தத்தநேரிக்குள் நுழைந்தது. நம் கர்வம் அனைத்தையும் கண்ணசைப்பில் பொசுக்கிவிடக்கூடிய காலம் கோலோச்சும் மையானம்…உணர்வின் தகிப்பில், உற்றார் உதவ, சடங்குகள் முடிய, இறுதிக்கட்டம் வந்தது. மின் தகனம் போன்று எளிதானதல்ல சிதை மூட்டுதல்…இரண்டுமே கூர்மிகு முள் தான். ஆனால் சிதை மூட்டுதல் என்பது பல ஊவா முட்களை நம் மேல் வைத்து பரபரவென தேய்ப்பது போன்றது. உயிரற்ற உடம்பு என்று அறிந்த பின்னும், அதன் மேல் ஆங்காங்கே தீ வைத்தல் என்பது அத்தனை எளிதன்று. அதற்கு சற்றே மிருகத்தனம் தேவைப்படுகிறது. அம்மாவின் மேல் தீவைக்கும் திடம் வேண்டும் என்பதற்காகத் தான் அனைவரின் மனதின் அடியிலும் வெவ்வேறு குணங்களின் வழியே சற்றேனும் கொடூரத்தை கொடுத்திருக்கிறதோ இந்த மனித பிறப்பு…? வெட்டியான் விறகை பரப்பி விரைவாய் தகனப்படுக்கையை தயார் செய்தார். எங்கெங்கு பற்ற வைத்தால் எளிதாய் எரியும் என்று வெட்டியானுக்கு நன்கு தெரியும் போலும்…அவர் கை காட்டிய‌ இடத்திலெல்லாம் காட்டுமிராண்டி போல் பந்ததை ஏந்தி பற்ற வைத்தேன் நான். வெளியே அம்மாவும் உள்ளே நானும் எரியத் துவங்கியிருந்தோம்.

சிதையின் அருகே தழலின் தகிப்பில் நிற்க நேரும் அந்த நிமிடங்கள்…சிந்தனை ஏதுமின்றி சலனங்கள் ஏதுமின்றி மனது முழுதும் மொத்தமாய் இயக்கம் நிறுத்தி, ஏதுமற்ற நிலைக்கு நம்மை ஏந்திச் செல்லும் அந்த நிமிடங்கள்…நம் துவக்கத்தின் பொழுதுகள் இப்படித்தான் இருந்திருக்குமோ? அதை மீண்டும் ஒருமுறை நம்முன் காட்டி விட்டுத்தான் அம்மாக்கள் எரிவரோ? அந்த நிமிடங்கள் போன்றே வாழ்வின் அனைத்து நிமிடங்களையும் ஆக்கிவிடத்தான் யோகிகளும் முனிகளும் விழைந்தனரோ?

கிளம்புவதற்காக சற்று நகர்ந்தபின் அம்மாவை திரும்பிப் பார்த்தேன். கூடாது என்று தடுத்த உறவினர்களையும் வெட்டியானின் சைகைகளையும் மீறி மீண்டும் திரும்பிப் பார்த்தேன். திரும்பிப் பார்க்கக் கூடாதா? திரும்பிப் பார்த்தல் அன்றி இங்கு வேறென்ன இருக்கிறது? அடுத்த நொடியின் மீதேறி நிற்க, அதனடியில் இந்த நொடியும், இதுவரையிலான நொடிகளும் தானே ஆதாரம்? திரும்பிப் பார்க்கக்கூடாதாம்…திரும்பிப் பார்த்தேன்…
திரும்பிப் பார்த்தலே காலத்தின் வினை என்பதால் விரும்பி மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். கர்மவெளியில் காற்றுவழியில் அம்மாவின் அடுத்த பயணம் துவங்கி விட்டது என்று அறிவிப்பது போல் புகை மேலெழும்பி பரவத்துவங்கியிருந்தது.

அடுத்த நாள் அதிகாலை… அதுவரையில் நான் பார்த்திராத வெறுங்காலை… ஊழ் தோன்றியது தொட்டு இருந்தது போலவே அன்றும் மயானம் உலகை உதறித் தள்ளி மெளனித்திருந்தது. காலத்தின் விருந்தோம்பல் முடிந்து அம்மா ஓரிரவில் வெறும் சாம்பல் ஆகியிருந்தார். எலும்புகள் மட்டும் எஞ்சியிருக்க அவரின் உடலும் உணர்வும் எங்கு போனதோ…? ஒரு சிறிய விறகினால் சாம்பல் மேட்டினுள் துழாவிய வெட்டியான் காட்டிய சில எலும்புத் துண்டுகளை எடுத்து பானையில் இட்டேன். ஓரிடத்தில் துழாவுகையில் “ணங்” என்ற ஒலி கேட்டது. அம்மாவின் இடுப்பெலும்பில் பொருத்தியிருந்த உலோகம் அது. ஊசியின் தடங்கள் நிரம்பிய அம்மாவின் அங்கத்தை அலுங்காமல் தூக்குவது போல் அதை மெதுவாக வாங்கிப் பார்த்தேன்…. ஊன் உறக்கம் தொலைத்து, மாதக்கணக்கில் உடலும் மனமும் மருத்துவமனைகளில் ஓடி அயர்ந்து, செய்வதறியாது நாங்கள் திகைத்து நிற்க, அம்மாவின் உடம்பு முழுதும் ஊர்ந்து, மெதுமெதுவாய் அவரைத் தின்று தீர்த்த நண்டுடைய கால்களை ஒத்திருந்தது அந்த உலோகத்தின் வடிவம்…என் கையில் தரப்பட்ட பானையில் அம்மாவை பத்திரமாய் ஏந்தியிருந்தேன். ஒட்டி உறவாடிய ஒரு கோடி நொடிகளை கட்டிப் பொட்டலமாய் கையில்  கொடுத்திருந்தது காலம்.

“இப்போ கிளம்பினால்தான் சரியாக இருக்கும்” என்ற உறவினரின் உந்துதலில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டோம் நாங்கள். வெயில் போல் துவங்கிய காலைப் பொழுது மதியத்திற்குள் இருட்டிக் கொண்டு வந்தது. மழை பெய்யக் கூடும் என்ற எண்ணமே அந்த பெருந்துயர் பொழுதிலும் மனதுக்கு ஒரு சிறு உவப்பு தந்தது. கையில் எஞ்சியிருந்த அம்மாவின் மிச்சத்தை கடலில் கரைத்தபின் கரையை ஒட்டியிருந்த திறந்தவெளி குளியலறையில் குளிக்கத் துவங்கிய போது வானிருந்து துளிகளும் வந்து விழத்துவங்கின…சிறுவயது முதல் எத்தனையோ உணர்வுகளில் என்னுடன் கைப்பிடித்து வந்த மழை, இந்த பெருந்துயரின் பொழுதில் மட்டும் எனக்குத் தோள் கொடுக்க வாராது போய் விடுமா என்ன? துளிகளாய் துவங்கிய மழை என் உள்ளம் அறிந்தது போல் பேய் மழையாய் மாறி மதுரை திரும்பும் வழியெங்கும் ஓலமிடுவது போல் ஓங்கிப் பெய்தது…”டி எம் கோர்ட்” மாவு மிஷினின் மிளகாய் வாசமும் அம்மாவின் வாசமும் அதிலிருந்து வீசுவது போல் தோன்றியது…

One Reply to “அம்மா…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.