உங்கள் பிள்ளைகளை பற்றிய உங்கள் கனவு என்ன ? எதிர்காலத்தில் அவர்கள் எப்படி வர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் .
“அவனுக்கு பிடித்த துறையில் ஒரு சாதனையாளரா வரணும் , சமுதாயத்தில் எல்லோரும் மதிக்கும் ஒரு பண்பானவனாய் பேர் , புகழ் எல்லாம் கிடைச்சு அன்பான மனைவி அழகான குழந்தைகள் அவன் வாழ்க்கைல செட்டிலானா போதும்” என்பது போன்ற பலவிதமான கனவுகள் , எதிர்பார்ப்புகள் பெற்றவர்கள் உங்களுக்கு இருக்கலாம்.
சரி! இப்போது உங்கள் பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?
அமைதியாக வீட்டில் அமர்ந்து கைபேசியிலோ, கணிணியிலோ விளையாடி கொண்டிருக்கிறார்களா ? கையை கொடுங்கள் ! வாழ்த்துக்கள் ! எதிர்காலத்தில் நடக்க இருக்கும் ஏதேனும் வன்முறை சம்பவத்தை அரங்கேற்றுபவர்களாக அல்லது அதில் பங்கேற்பவர்களாக மாறும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள் , பதற வேண்டாம்,உண்மை தான் ..
அமெரிக்க உளவியல் குழுமம் 2015 அறிக்கை இன்றைய கணினி மற்றும் கைபேசி விளையாட்டுகள் குழந்தைகளிடத்தில் அதீத வன்முறை மற்றும் பழிவாங்கும் உணர்வை விதைப்பது மட்டுமல்லாமல், சிறு ஏமாற்றங்களுக்கு கூட தாள முடியாத ஆத்திரத்தையும் அதன் வெளிப்பாடாக குடும்பம் மற்றும் சமூகம் மீதான விரோதத்தை ஏற்படுத்துகின்றன என அதிர்ச்சி அளிக்கிறது .
எல்லா விளையாட்டுகளும் வன்முறை களங்களாக இருப்பதில்லை, ஆனால் இன்று பெரும்பான்மையானவை வன்முறையையும் , பழிவாங்கும் உணர்வையும் பின்புலமாக கொண்டவாறே உருவாக்கப்படுகின்றன. அந்த மாதிரியான விளையாட்டுகள் எங்கள் கைபேசியிலோ கணிணியிலோ இல்லை. எங்கள் பிள்ளைகள் விளையாடுபவை எல்லாம் பொழுதுபோக்கான , வேடிக்கையான விளையாட்டுகள் மட்டுமே என்கிறீர்களா ? கண்டிப்பாக இல்லை .
சண்டை விளையாட்டுகள் மற்றும் சுடுதல் விளையாட்டுகள் அனைத்தும் நேரடி வன்முறை களங்கள், ஆதலால் இவற்றை தவிர்த்துவிட்டு குழந்தைகள் விளையாடி மகிழும் விளையாட்டுகளில் ஒளிந்திருக்கும் வன்முறையை காண்போம்..உதாரணமாக இன்று எல்லா ஆண்ட்ராய்டு கைபேசிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விளையாட்டுகள் சில.
Talking Tom– பூனையிடம் முதலில் எல்லோரும் பேசி, பாடி அது தனது வேடிக்கையான குரலில் திருப்பி சொல்வதை கேட்டு மகிழ்ந்தாலும் , இப்போதெல்லாம் அதன் தலையில் அடித்து , வயிற்றில் குத்தி , வாலை நசுக்கி அதை மரணபயத்தில் அலறவிட்டு மகிழ்பவர்களே அதிகம்.
Angry birds – முட்டைகளை திருடிசென்ற பன்றிகளை தற்கொலைபடையாய் தாக்கி பழிவாங்கும் பறவைகள் Tap Ants – திரையில் ஊரும் எறும்புகளை நசுக்கி கொல்லுதல், Fruit ninja – தொடுதிரையில் பறக்கும் பழங்களை சரமாரியாக வெட்டிதுண்டாடுதல் போன்றவையே , இவைகளினால் பெரிய அளவில் வன்முறையின் தாக்கமோ பழிவாங்கும் உணர்வோ ஏற்படுவதில்லை என்றாலும் , பிஞ்சு மனங்களில் மின்னணு விளையாட்டுகளின் மீதான ஈர்ப்பையும் , மெல்ல மெல்ல மின்னணு விளையாட்டுகளுக்கு அடிமையாய் மாறும் மனோ நிலைக்கான முதல் புள்ளி இங்கு தான் வைக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல.
இதை தொடர்ந்து சிறுவர்கள் இன்று பெரும்பான்மையாக விளையாடும் கைபேசி விளையாட்டுகள் சில
Clash of Clans – ஒரு குழுவாக சேர்ந்து குடிருப்புகளை தாக்கி தங்கம் திருடுவது ,Deer hunter – விலங்குகளை வேட்டையாடுவது அதிலும் குறிபார்த்து அதன் இதயம் அல்லது நுரையீரலில் சுடசெய்யும் விளையாட்டு ,GTA- போதைமருந்து கடத்தல் , மாபியா வில்லன்கள், குற்றவாளி ஹீரோ இன்னும் சிறப்பம்சமாக விளையாட்டில் எதிர்ப்படும் யாரைவேண்டுமானும் ஆயுதம் கொண்டு தாக்கலாம் , துரத்தி கொல்லலாம், என சட்டவிரோத சம்பவங்கள் மட்டுமே என கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சி விளையாட்டு இது.,
இதற்கு அடுத்தபடியாக வருகிறது பழிதீர்க்கும் வகை விளையாட்டுகள், இந்த குரூரவகையில் 50 லட்சத்திற்கும் மேல் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் தரவிறக்கப்பட்ட Whack your teacher இன்று பள்ளிசெல்லும் சிறார்களிடத்தில் பிரபலம். தனக்கு பிடிக்காத ஆசிரியரை ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொடூரமாக வெட்டி கொல்லலாம், Beat the boss மற்றும் Shoot your Ex எல்லாமே இதே வகையறாதான் பிரிந்து சென்ற காதலியை வெட்டி சித்ரவதை செய்து பழிதீர்க்கும் விளையாட்டு இது.
நீங்கள் நினைத்தே பார்க்காத மிககொடுரமான வகையில்தான் இந்த விளையாட்டுகளில் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன, பிற உயிர்களை துன்புறுத்தி மகிழும் ஒரு பிறழ்ந்த மன நிலையை இவ்வகை விளையாட்டுகள் உருவாக்குகின்றன.
இதெல்லாம் எங்கள் பிள்ளைகள் விளையாடுவதில்லை ,அவர்கள் விருப்பம் வெறும் கார் பந்தய விளையாட்டுகள்தான் என்கிறீர்களா? மன்னிக்கவும். ஏனெனில் அங்கும் வம்படியாக வந்து வரவேற்கிறது வன்முறை..
உலகளவில் அதிகமாக தரவிறக்கப்பட்ட கார்பந்தய விளையாட்டுகள் இவை – ஆண்ட்ராய்டு தரவிறக்கதளமான பிளேஸ்டோரில் 5 க்கு 4.8 மதிப்பீடு பெற்று முதலிடத்தில் தொடர்ந்து இருப்பது Carmageddon.
பந்தயத்தில் சகவீரர்களை கொல்வது மட்டுமல்லாமல் பாதசாரிகள் ,விலங்குகள் என எதிர்ப்படும் எல்லாவற்றையும் கார் ஏற்றி கொல்லவேண்டும் , இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக கார்கள் , ஆயுதங்கள் எனரத்தம் தெறிக்கும் ஒரு ரத்தசரித்திரம் இந்த விளையாட்டு இதே வகையில் Armoured Car 2, Death Race என பட்டியல் நீள்கிறது ,அடுத்த வகை சட்டவிரோத கார்பந்தயம், துரத்தும் காவலர்களின் தடுப்புகளை உடைத்து , அவர்கள் வாகனங்களை வெடிக்கசெய்து தப்பிக்கும் வகை , இந்த வகையில் வருவது –,NFS Most wanted, Smash cops heat , Bandits என தப்பு செய்து தப்பிக்கும் வகையறாதான், இந்த த்ரில் அனுபவம் தான் குழந்தைகளை மணிக்கணக்கில் இவ்விளையாட்டுகளுக்கு அடிமையாக்குகிறது.
இந்த தொடுதிரை வன்முறைக்கு கிடைத்த வரவேற்பையும் ,வருமானைத்தையும் கண்டு குதூகலித்த ஆண்ட்ராய்டு விளையாட்டு நிறுவனங்கள் , வன்முறையை அடுத்தநிலைக்கு எடுத்து செல்ல யோசித்தபோது உதயமான விபரீதம் தான் மனித இனத்தையே கூண்டோடு அழிக்கமுனையும் வகைவிளையாட்டுகள்.ஆம் நீங்கள் படித்தது உண்மைதான்.,இவ்வகை விளையாட்டுகளில் உலகில் ஒருவர் கூட மிச்சமில்லாமல் கொல்லப்பட்டால் தான் விளையாடுபவர் வெற்றி பெறமுடியும்.
இதில் ஒரு கோடிக்கும் அதிகமான முறை தரவிறக்கப்பட்டு ,ஆண்ட்ராய்டு தளத்தில் 4.5/5 மதிப்புகள் பெற்று இவ்வகையில் முதலிடத்தில் வரும் விளையாட்டு Plague Inc. ஒரு வைரசை உருவாக்கி , அதை ஒரு ஏழைநாட்டில் பரவசெய்து , பறவைகள் விலங்குகள் மூலம் அதை மற்ற நாடுகளுக்கும் பரப்பி ஒரு உயிர்கொல்லி நோயாக அதைமாற்ற வேண்டும் ,அந்தநோய்க்கு நீங்களே பேரை முடிவு செய்யலாம் , பேரை மட்டுமல்ல , எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாமல் மிக வீரியமாய் நோயை எப்படி வளர செய்ய வேண்டும் , எந்த உறுப்புகளை வைரஸ் செயலலிக்க செய்யவேண்டும் ,கடைசியில் மரணம் எப்படி நிகழவேண்டும் என வன்முறையின் உச்சமாய் அத்தனை அதிர்ச்சிகளும் நிறைந்ததே இந்த விளையாட்டு. இதேவகையில் Bio inc, Infection Bio war என பட்டியல் நீள்கிறது.
இப்போது சொல்லுங்கள் நாம் வன்முறையை வளர்க்கிறோமா இல்லையா, தம் வாழ்வே தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியில் தான் என வாழும் பெற்றோர்கள் விளையாட்டாய் கவனிக்க தவறும் விஷயம் இன்றைய மின்னணுவிளையாட்டுகள்.
இக்கட்டுரையில் நாம் விவாதித்த அனைத்து விளையாட்டுகளும் ஆண்ட்ராயிட் கைபேசிகளில் எவ்வித தணிக்கையும் இன்றி இலவசமாக கிடைப்பவையே , கணினி மற்றும் எக்ஸ்பாக்ஸ் , ப்ளெஸ்டேசன் விளையாட்டுகள் என இதைவிட தொழில்நுட்பத்திலும் , அதீத வன்முறையிலும் இருக்கும் விளையாட்டுகள் இன்னும் ஏராளம் .
ஆகவே உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில்படிக்கவேண்டும் ,அவர்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து முடிவு செய்யும் நீங்கள் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் சற்றே கவனியுங்கள்.
இவ்வகை விளையாட்டுகளின் தொழில்நுட்பத்தில் கவரப்பட்டு மின்னணு விளையாட்டுகளின் மீதான ஒரு தீரா மோகத்தையும் விளையாடியே ஆகவேண்டும் என்ற பிடிவாத குணத்தையும் ஏற்படுத்தும். இவைகளில் இருந்து அவர்களை மீட்பது கடினம் எனினும் புதிர்விளையாட்டுகள் ,ஓட்டம் மற்றும் சாகச விளையாட்டுகள் , கிரிக்கெட் , கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் மூலம் தற்காலிகமாக அவர்களை திசை திருப்பலாம். இவையும் ஒரு அளவுடன் இருந்தால் நலம் ,ஏனெனில் மின்னணு விளையாட்டுகள் அனைத்துமே மூளையை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டவையே.
அப்ப இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா என்றால் ,கண்டிப்பாக உண்டு. பெற்றோர்கள் நீங்கள்தான் தீர்வு,
கைபேசி மற்றும் கணினி விளையாட்டுகளை உடனடியாக நீக்கிவிட்டு , உங்கள் பிள்ளைகளின் கை பிடித்து கனிவுடன் பேசி விளையாடுங்கள். ஒரு உயிரின் மதிப்பையும் ,அதன் இழப்பு ஏற்படுத்தும் மன வலியையும் முடிந்தவரை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள்.
இல்லையெனில் விளையாட்டுகள் விதைக்கும் இந்த வன்முறை வளர்ப்பதைத்தான் நாளை அவர்கள் அரிவாளால் அறுவடை செய்வார்கள். மாறுவோம் , மாற்றுவோம்.
horrifying