நீண்ட நாட்களாக சுழன்று கொண்டிருந்த பதிவு தான் இது. நசீம் தாரிக் என்கிற பாகிஸ்தானிய நண்பர் குறித்தது, அவர் வீட்டிற்கு சென்று வந்த ஒரு மணிக்கும் குறைவான உயிர் நிறைந்த நிமிடங்கள் பற்றியது. நினைத்த மாத்திரத்தில் எதையும் எழுதிவிட முடிவதில்லை. காலமும் நேரமும் இருந்தாலும் ஏதோ ஒரு மகத்தான நொடி தான் வந்து விழுகிற எழுத்தை தீர்மானிக்கிறது, ஆயிரம் பக்கங்களாயினும், சில பத்திகளாயினும், இரட்டை வார்த்தைகளாயினும்.
நசீமும் ஏதோ ஒரு நாளில் வந்து விழுந்தது உன்னதமான நொடிதான். அந்த நொடியை மிகச் சுலபமாக நான் தவறவிட்டிருக்கவும் கூடும், நூடுல்சும் சிக்கனும் நிரம்பிய என் சாப்பாட்டு பௌலை லஞ்ச் ரூம் எனப்படுகிற சாப்பாட்டறையில் நான் தவற விட்டிருக்காவிட்டால்.
கையில் வைத்திருந்த தண்ணீர், சாப்பாடு, சிக்கன் துண்டுகள் எல்லாம் தரையில் சிதறி நான் சுத்தம் செய்து கொண்டிருந்த அவமானம் நிறைந்த நொடியில் தான் நசீம் உதவிக்கரம் நீட்டினார். பரிதாபம் நிறைந்த பார்வைகளின் மத்தியில் “இட் ஹப்பென்ஸ், நோ worries” என்று சமாதானம் செய்து – floor அட்மினை அணுகி சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். நான் “மிக்க நன்றி” என்று விடைபெறும் போது உணவு ஆர்டர் செய்திருந்தார்.
“பசியுடன் இருப்பீங்க இல்லியா”
நான் கூச்சத்தின் உச்சியில் டாலர்களை நீட்டிய போது “பரவாயில்லை, நீங்கள் தென் இந்தியராக இருந்தால் மசால் தோசை கொண்டுவந்து கொடுங்கள்” என்றார், சிரித்து கொண்டே. அவர் முகத்தை வைத்து வடஇந்தியராக இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.
“அதற்கு சாத்தியமில்லை. இது பிசினெஸ் ட்ரிப், மனைவி இந்தியாவில் இருக்கிறார். எஸ்ட்டெண்டெட் ஸ்டே அமெரிக்காவில் தங்கியிருக்கிறேன். தற்காலிக பேச்சுலர். அமெரிக்கா எனக்கு புதிது, இந்த குளிர் புதிது, இந்தியர்களை, இந்திய உணவை வெறித்து பார்க்கும் மனிதர்கள் புதிது, உரைக்கும் நீண்ட மால்பரோ புதிது, எல்லாமே புதிது. ஒரு நண்பரின் உதவியால் அலுவலகம் சென்று வருகிறேன். இன்னும் சில காலமே இருப்பேன். வாரஇறுதிகளில் எளிய உணவுகளை சமைத்து சமாளித்து கொண்டுள்ளேன்”
“மால்பரோக்களை சேமியுங்கள், உங்கள் இதயம் சேமிக்கப்படும். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு புதிதோ அப்படியே நீங்கள் அவர்களுக்கும். ஞாபகமிருக்கட்டும் நீங்கள் இருப்பது அவர்கள் தாய் நாட்டில் ” சிரித்தவாறு சொன்னார்.
அது பதினெட்டாவது அல்லது இருபதாவது நிமிடமாக இருந்திருக்கலாம் “இந்த சனிக்கிழமை எங்களோடு மதிய உணவுக்கு சேர்ந்து கொள்ளமுடியுமா ?”
நான் யோசித்துக்கொண்டிருந்த போது “சாராவும் நூரும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். I’ll pick up and drop you off at your place” என்றார்.
****************
வாரயிறுதிக்கு இடைப்பட்ட மூன்று நாட்களில் எங்கள் நட்பு சிறிது வலுப்பெற்றிருந்தது. அவர் எங்கள் குழு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டிடத்தில் தான் வேலை பார்த்து வந்தார். புகைக்கும் போது, உணவருந்தும் போது என அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.
“என் பெற்றோர் பெஷாவரை சேர்ந்தவர்கள், அவர்களின் முன்னோர்கள் இந்திய-பாகிஸ்தான் பிரிவின் போது எல்லை கடந்தவர்கள். நீங்கள் என் முகத்தில் இந்திய ரேகைகளை பார்க்கலாம் ”
“உண்மைதான், வட இந்தியர் என நினைத்தேன்”
“எங்களுக்கு ஒரு வகையில் அது பாதுகாப்புதான் – இந்திய வேஷம்” 9-11 தீவிரவாதம் நடந்து முடிந்திருந்த, இஸ்லாமிய முகங்களை அமெரிக்கர்கள் வெறுக்கத் துவங்கியிருந்த நேரம் அது.
அவர் எந்த கவலையிலிருந்தும் உடனடியாக விடுபட எத்தனிப்பவராக இருந்தார். “நீங்கள் எங்கள் வீட்டில் புகைத்தால் என் மனைவி 911- அவசர போலீசை அழைத்து விடுவாள். ஜாக்கிரதை !!!”
தூக்கிசுமக்கும் மால்பரோ பொட்டலத்தை விடுதியிலேயே விட்டு வாருங்கள் என்கிறார்.
*************
நசீமின் வீடு ரோசெஸ்டர் நகர எல்லையில் இருந்தது.
தனி வீடு, பக்கத்து வீடு கூப்பிடு தூரத்திற்கு சற்று கூடுதல் தொலைவிலேயே இருந்தது. நடுவில் அடர்ந்த காடு, ஆஸ்பின் மரங்கள் குளிர்கால முடிவில் சற்று துளிர்க்க துவங்கியிருந்தது. வீட்டின் எதிரில் உறைந்து போன வெண்பனி குட்டை. மனித இருப்பற்ற காற்றும் அது எழுப்பும் ஒலியும் மட்டுமே நிரம்பிக் கிடந்த ஓலம். நான் சற்று பயந்தது உண்மைதான்.
சிரித்துவாறு “எதுவும் சமூக விரோத செயல்கள் செய்கிறீர்களா நசீம் ??” என்று கேட்டே விட்டேன்.
அவர் சத்தமாக சிரித்தார். “நான் தாடி கூட வைக்கவில்லையே, how dare you can ask that ??”
பின்னர் அமெரிக்க விமான பாதுகாப்பு துறையை கிண்டல் செய்தார். “உதாரணத்திற்கு நீங்கள் ஆப்பிள் கொண்டு வரக் கூடாது என்பது சட்டம் என்றால், நீங்கள் கொண்டுவரும் ஆப்பிளை பேன்ட் பின் பாக்கெட்டிலோ, சூட்கேஸிலோ வைத்துக்கொண்டு – என்னிடம் ஆப்பிள் இல்லை எனவேண்டும். பாதுகாப்பு அதிகாரியின் எதிர்பார்ப்பும், அவர்களுக்கு இருக்கும் நேரமும் அவ்வளவுதான்”
“சாராவும் நூரும் நமக்காக காத்திருப்பார்கள், செல்லலாம் வாருங்கள்”
**********************
எனக்கு சாரா என்கிற தன் மனைவியை அறிமுகம் செய்தார். சாராவிற்கு அவரை போலவே வட இந்திய, சிரித்த, பழகிய, அன்பு நிறைந்த முகம். இந்தியரின் வருகையை ஒட்டி பாரம்பரிய உடையில் இருந்தார், என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
“இந்த ஆள் அரவமற்ற தனிமை சுந்தரை கலவரப்படுத்தி விட்டது”
“இருக்காதா, எனக்கு கூட கடுங்குளிர் காலங்களில் அமேசான் காடுகளில் வாழ்வது போன்ற தனிமை உணர்வு ஏற்படும்” என்றார் சாரா.
“சாரா is a social bee. அவருக்கு நண்பர்கள் அதிகம். வேலை, வாசிப்பு, இலக்கியம் என்று பறந்து விரிந்தது அவர் உலகம்” என்றார் நசீம். என்னால் அதை உணர முடிந்தது. சொல்லப் போனால் நான் கண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட கறுப்பு அங்கி அணிந்த பெண்ணையே நான் எதிர் பார்த்திருந்தேன். இலக்கியம் என்றதும் சாராவின் விரிந்த கண்கள் எல்லையற்ற ஒளி நிறைந்ததிருந்தாய் நானே நினைத்துக்கொண்டேன், ஆனால் உண்மையில் அவர் இயல்பாகவே இருந்தார்.
“உனக்கு தெரியுமா சாரா, சுந்தர் ஒரு எழுத்தாளர் ஆனால் bad developer” நசீம் சிரித்தார். எங்களுடைய மூன்று நாள் நட்பில் நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தோம்.
“அதெல்லாம் இல்லை. வாசிப்பை நிறுத்தி வருடங்களாகிறது. வாசித்துக்கொண்டிருந்த காலங்களில் சிறுகதைகள் சில பதிப்பிக்க பட்டிருக்கின்றன. வாசிப்பற்ற எழுத்தால் ஒரு வரிக்கு கூட இலக்கிய அந்தஸ்த்தை கொடுத்து விட முடியாது”
சாரா நிறைய இந்திய படைப்பாளிகளை பற்றி பேசினார் – மாதவிக்குட்டி பற்றி, மஹோத்ஸவதா தேவியின் ‘Breast Stories’ குறித்து, சமீபமாக தஸ்லீமாவின் சர்ச்சைகுரிய சுயசரிதையை வாசித்து வருவதாக சொன்னார்.
“நான் இலக்கியத்தை புத்தகமாக வாசிப்பவனில்லை, திரைப்படங்கள் பார்க்கிறவன்” என்றார் நசீம்.
***************
“நீங்கள் சுந்தராகதான் இருக்க வேண்டும். நமஸ்தே”
நூர் நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது வந்தாள், ஒரு எட்டு வயது இருக்கும். ஆனால் அதை மீறிய முதுமையும் பார்வையில் நுட்பமும் அவளுக்கு இருந்தது.
“உங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தார்களா இவர்கள் ?” என்று கேட்டாள் நூர்.
“பரவாயில்லை” என்றேன் நான். அவள் ஏதோ கொண்டுவர சமையலறை பக்கமாக சென்றாள்.
குழந்தையின் இருப்பு எப்பொழுதும் உற்சாகத்தை கூட்டும் இல்லியா, இங்கு நேர் எதிராக இருந்தது. அவள் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அளவுக்கு அதிகமான கவனிப்பு குழந்தைத்தனமற்று இருந்தது.
“நீ சிரிக்க மாட்டாயா ?? என்ன படிக்கிறாய் ?”
“அப்படியெல்லாம் இல்லை. நான் குமோன் பயிற்சிகளை முடிக்க வேண்டியதிருக்கிறது” என்று செயற்கையாக சிரித்தாள்.
அவள் அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் “அவளுக்கு உடம்புக்கு சரியில்லை” என்றார் நசீம்.
என்னால் அதற்கு மேல் கேட்க முடியவில்லை. உணவு நாற்காலியில் பேச்சு பாகிஸ்தானிய உணவை பற்றியதாக இருந்தது. “என் வாழ்வின் சந்திக்க நேர்ந்த மற்றொரு மகத்தான பிரியாணி இது” என்றேன் நான்.
“உங்கள் நண்பர் மிடில் ஈஸ்டர்ன் கடையில் சொல்லி வைத்து வாங்கிய ஆட்டு கறியில் செய்தார். நான் சால்னாவை செய்தேன். இதற்கு முன் நீங்கள் பாகிஸ்தானிய உணவை சாப்பிட்டதில்லையா ?”
“உண்டு, சிகாகோ நகரத்தில். தேவான் என்கிற வீதியில்”
“இந்திய கடைகள் அதிகம் உள்ள வீதியில்லயா அது… கேள்வி பட்டிருக்கிறேன்”
உணவிற்கு நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினேன்.
**********
நசீம் தான் என்னை அறைக்கு கொண்டு வந்து விட்டார். நீண்ட அரை மணி நேரப் பயணம். அவர் காலமான அவருடைய மூத்த மகள் பற்றி அப்பொழுது தான் பேச ஆரம்பித்தார்.
“நாங்கள் முதலில் டௌன் டவுன் அருகில் தான் இருந்தோம். ஆனால் என் மூத்த மகளுக்காக நாங்கள் நகர எல்லைக்கு மாற வேண்டியிருந்தது மற்றவர்களுக்கு தொங்கரவு இல்லாமல் இருக்க”
“அவளுக்கு கண் சரியாக தெரியாது, காதும் அப்படியே. எங்களை அவள் முழுமையாக பார்த்திருக்கிறாளா என்று தெரியாது. தீவிரமான கோபத்தில் இருந்த அவளை ஆசுவாசப் படுத்த அவளுக்கு மிகப்பெரிய ஒளிப் பிம்பகளையும் இரைச்சலான ஒலியையும் சேர்ப்பிக்க வேண்டி இருந்தது. 35mm திரை, மிக அதிக வோல்ட்ஸ்சில் அதிரும் போஸ் ஸ்பீக்கர்கள் மற்றவர்களை பாதிக்கு மில்லயா”
“தன்னை பற்றிய கழிவிரக்கமமும் இயலாமையும் அவளை கொன்று கொண்டிருந்தது. மனநல பயிற்சிகளும் சிகிச்சையும் பயனளிக்க வில்லை”
“பல முறை தற்கொலைக்கு முயன்றாள். சுவரில் மோதி, கழுத்தை துணியால் நெரித்து, கார் சத்தம் கேட்கும் போது தெருவில் ஓடி …..”
“கடைசியில் அவள் தான் வெற்றி பெற்றாள், எங்கள் வீட்டின் முன்னால் இருந்த சிறிய lake ஆழமானது”
அவர் சோர்வாக இருந்தார், தெளிவற்று புன்னகைத்தார்.
“நீங்கள் பேசவேண்டும் என்று நினைத்தால் நாம் அறையில் போய் புகைக்கலாம் அல்லது மது அருந்தலாம்” என்ற என் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
************
“இனி இந்த கதையில் சுவாரசியம் ஒன்றுமில்லை. இது எல்லாம் நூர் முன்தான் நடந்தது, அக்கா செய்ததை குழந்தைத்தனம் என்று நினைப்பதால் கூட தன்னை முதியவளாக காட்டிக் கொள்ள முயலலாம் என்கிறார் மருத்துவர். சில சமயம் நாமும் நாடகத்தனமாக நடந்து கொள்கிறோம், நீ தான் பின்னால் அக்காவுக்கு எல்லாம் என்று சொல்வது, நூர் உல் ஆன் என்று பெயர் வைப்பது….” என்று சிரித்துக் கொண்டே விடை பெற்றார் நசீம்.
கூகிள் தேடலில் நூர் உல் ஆன் என்றால் “ ஒளி” என்று வந்தது.
புதுமையான கதை. படித்து முடித்தபின் என்னவோ செய்கிறது. பாவம் அந்தக் குழந்தை.