உரிமைதுறப்பு:
நூற்றுக்கு நூறு பாதுகாப்பான தொழில்நுட்பம் என்று எதுவுமே கிடையாது. அப்படிக் கொண்டு வரப்படும் எதுவும் உண்மையில்லை. தரை துடைக்கும் திரவங்களும் சோப்புகளும் கூட 99.9% கிருமிகளைத்தான் நீக்குகின்றன. நூறு சதவீதம் துல்லியம் என்பது பிரபஞ்சத்தில் எதுவும் கிடையாது. எந்த இயக்கமும் செயல்பாடும் நூறு சதம் துல்லியத்தை எட்டவே முடியாது என்பது பிரஞ்சம் பின்பற்றும் மதநூலான வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி.
“நீங்க குடுத்த காசுக்கு தென்ன மரச்சின்னத்துல ஒரு குத்து” என்று வாக்குச்சீட்டுகளில் சின்னத்தின் மேல் முத்திரையிட்டு பெட்டியில் போடும் தேர்தல் முறையை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தபின்பும் தோற்ற கட்சிகள் ஒரு தேய்ந்த ரெக்கார்டை ஓட்டுகின்றன. “எந்த பட்டன் அமுக்கினாலும் ஒரே கட்சிக்கு ஓட்டு விழும்படிச் செய்துவிட்டார்கள்” இந்தக் கூற்று எந்த அளவு சாத்தியம், அந்த வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. கொஞ்சம் பார்க்கலாம்
வாக்கு இயந்திரம் படம் வரைந்து பாகம் குறி என்னும் இரண்டு மார்க் கேள்விக்கு விடை ரொம்ப எளிதானது. வாக்கு இயந்திரம் இரு தனி பாகங்களைக் கொண்டது. நீங்கள் வாக்களிக்கும் ballot unit. மற்றொன்று வாக்குச்சாவடி அதிகாரி வைத்திருக்கும் control unit. இரண்டையும் இணைக்க ஒரு 5 மீட்டர் கேபிள். இவ்வளவுதான். அதற்குள் இருப்பது மின்னணு உபகரணம். ஒரு சிறிய அளவிலான கம்ப்யூட்டர். ஆனால் மானிட்டர்கள் இல்லாத ஒரு அடிப்படைக் கம்ப்யூட்டர். ஒரு ப்ராஸஸர் எனப்படும் மைய இயக்ககம். மிகச் சிறிய நினைவகங்கள். நினைவகங்கள் நம் மெமரி கார்டு போல அழித்து அழித்து பயன்படுத்துமாறு வைத்திருப்பார்கள். இதனை டெக்னிக்கலாக EEPROM (Electronically Erasable Programmable Read Only Memory) என்று அழைக்கிறார்கள்.
அந்த நினைவகங்களை நீங்கள் மின்சாரத்தைக் கொண்டு அழித்து மீண்டும் எழுத முடியும். நாம் அதோடு நிறுத்திக்கொள்வோம். அதற்கு மேல் MOSFET க்குள்ளேயெல்லாம் போகும். அதற்குத் தெரிந்ததெல்லாம் எண்ணிக்கையை பதிவு செய்து வைத்தல். அதற்கான அடிப்படை நிரல்களை அந்த சில்லுகளில் பொறித்திருப்பார்கள். அது தலையெழுத்து மாதிரி. ஒரே முறை எழுதப்படுவதுதான். அப்புறம் படைத்தவனே நினைத்தாலும் பாச்சா பலிக்காது. அந்த தலையெழுத்தை எழுதுதலை embedded programming என்பார்கள். கொஞ்சம் இஞ்சினியரிங் மாணவர்களிடம் கேட்டார் 8081 என்றெல்லாம் பேசுவார்கள். நினைவகம், செயலகம், பிற மின்னணு உறுப்புகள், அதன் நிரல்கள், ஒரு எல்.சி.டி திரை. இவ்வளவுதான். நீங்கள் வாக்கு இயந்திரத்தில் அழுத்தும் பொத்தானை அது எத்தனையாவது ஆள் என்பதற்கு நேராக குறித்துவைத்துக்கொள்ளும். அதன் பணி அவ்வளவே. ரொம்ப எளிமையான கருவி. ஆனால் என்னைக் கேட்டால் அந்த எளிமைதான் அதன் பலமே.
இப்போது குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்.
யாருக்கு வோட்டு போட்டாலும் ஒரே ஆளுக்கு விழுமாறு செய்துவிட்டார்கள் :
பாரபட்சம் இல்லாமல் சொல்வது இது.இதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த சுஜாதா ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார்தான். ஆனாலும் மீண்டும் சொல்கிறேன்.
எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களும், பிரதிநிதிகளும் இருக்கையில் அவர்கள் முன்னிலையில் ஒரு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அது சரிபார்க்கப்பட்டு மீண்டும் அவர்கள் கண்முன்னே நினைவகம் அழிக்கப்பட்டு அதன் பின்னரே வாக்குப்பதிவு நடைபெறும். நீங்கள் சொல்வதுபோல் ஒரே ஆளுக்கு ஓட்டு விழுமாறு செய்துவிட்டார்கள் என்றால் உங்கள் கட்சி வேட்பாளர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்? மாதிரி வாக்குப்பதிவு நடக்கும்போது அது தெரிந்திருக்கும் அல்லவா?
பூத்தைக் கைப்பற்றி விட்டார்கள்:
ஒரு நிமிடத்திற்கு ஐந்து வாக்குகளுக்கு மேல் அந்த அதிகாரி நினைத்தாலும் போட முடியாது. அதன் வடிவமைப்பு அப்படி. அப்படி இருக்கையில் ஒரு மணி நேரத்துக்கு பூத்தையே கைப்பற்றினாலும் உங்கள் ஏஜெண்டுகள் என்ன செய்தார்கள். இரண்டு மணி நேரம் கைப்பற்றினாலும் 600 வாக்குகள் தானே போட்டிருக்க முடியும். கணக்கு இடிக்கிறதே.
ஹேக் செய்து விட்டார்கள்:
முதலில் போட்ட டிஸ்கியை மீண்டும் படித்துப்பார்க்கவும். எந்தத் தொழில்நுட்பமும் நூறு சதம் பாதுகாப்பானதோ , துல்லியமானதோ இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு குறைபாடு இருக்கும். இந்த இயந்திரத்தைப் பொறுத்தவரையில் மின்னணுவியலில் ஜித்தராக இருக்கும் ஒருவரால் சில கூடுதல் பாகங்களை உள்ளே வைத்து முடிவுகளை மாற்ற முடியும். இரண்டு விதமாக அதைச் செய்யலாம் என்று இணையத்தில் தேடியதில் சொல்கிறார்கள்
முதலாவது முறையில் அந்த இயந்திரத்தில் இருக்கும் எல்.சி.டி திரையைக் கழற்றி, போலியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு சிப்பைப் பொறுத்தவேண்டும். அதனுள் ஒரு நினைவகமும் ஒரு ப்ளூடூத் மூலம் தொடர்பு கொள்ளும் கருவியும் இருக்கும். வாக்கு எண்ணும் இடத்தில் ஓரமாக ஒரு செல்போனுடன் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை மாற்ற முடியும். செல்போனில் இருந்து அனுப்புகிற எண்ணை அந்த போலி சிப் காண்பிக்கும்.
அடுத்த முறை அதன் நினைவகங்களிலேயே நமக்கு வேண்டிய எண்ணை ஏற்றிவிடுவது. அதற்கும் மின்னணுச் சாதனங்கள் தயாரிக்கலாம். கணநேரத்தில் வாக்குப் பதிவின் அசல் எண்களை அழித்து புது எண்களைச் சேமிக்க முடியும்.
ஆனால் பாருங்கள் இந்த இரண்டுக்குமே வாக்குப்பதிவு இயந்திரத்தை பிரித்து வேலை செய்ய வேண்டும். துணை ராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கும் இந்த இயந்திரத்தை பல அடுக்குப் பாதுகாப்பு அரணுக்குள் தான் வைத்திருக்கிறார்கள். ஒரு சின்ன குட்டிக் கதை. உங்கள் வீட்டை பத்திரமாக ஒரு உயர்தர பூட்டால் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுப் போகிறீர்கள். சாவியை நண்பர் வீட்டில் இருந்து நைசாக எடுத்து யாரோ கொள்ளை அடித்து விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பூட்டைக் குறை சொல்ல முடியுமா? முடியாதல்லவா? வாக்குச்சீட்டு முறையில் தில்லாலங்கடிகள் விதம் விதமாகச் செய்ய முடியுமே? சரியான பாதுகாப்பில் வைத்தால் தன் பணியை இவை செவ்வனே செய்யும். அப்படி மின்னணு உபகரணங்களில் முறைகேடு செய்திருந்தாலும் அதற்கு தொழில்நுட்பத்தை எப்படிக் குறை சொல்ல முடியும்
கடைசியாய் ஆனானப்பட்ட அமெரிக்காவே வாக்குச்சீட்டில்தான் ஓட்டெடுப்பு நடத்துகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அங்கு தோற்றுவிட்டது என்று ஒரு சாரார் கிளம்பியிருக்கிறார்கள். அங்கிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு ஏடிஎம் இயந்திரம் போல இருக்கும். முழுக்க முழுக்க அது ஒரு கணினி. விண்டோஸ் இயங்குதளத்தில், வைஃபை மூலம் இணையத்தோடு இணைந்து செயல்படும் வகை, ஹேக்கிங் செய்பவர்களுக்கு இந்த இரண்டுமே அல்வா சாப்பிடுகிற மாதிரி, அனாயாசனாக உள்ளே புகுந்து விளையாடுவார்கள். இன்னொன்று அவர்கள் மக்கள் தொகை என்ன? நம் மக்கள் தொகை என்ன? வாக்குச்சீட்டு முறையில் எவ்வளவு வாக்குச்சீட்டுகளை பிரித்து எண்ண வேண்டும் என்ன யோசிக்க வில்லை.ஆகையால் இப்போது இருக்கிற முறையே பரவாயில்லாமல் இருக்கிறது, பாதுகாப்பு சரியாக இருந்தால் துல்லியத்திற்கு கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம்.
ஆனால் அப்படியும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் போலி சிப்களைப் பொருத்தி விட்டால், அதை வேறு எதனோடாவது ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த சந்தேகமும் வராதல்லவா. தேர்தல் ஆணையம் அதற்கு VVPAT voter verified paper audit trail என்பதைத் தீர்வாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு கருவி வாக்காளர் அழுத்திய வேட்பாளரின் சின்னத்தை சிறு பேப்பர் துண்டில் அச்சடித்துக் காண்பிக்கும். ஆனால் துண்டுச்சீட்டு கைக்கு கிடைக்காது. இதன்மூலம் வாக்காளர் தான் அழுத்திய வேட்பாளருக்கு தான் வோட்டு விழுந்திருக்கிறது என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். முறைகேடு எனில் அந்தத் தொகுதியின் துண்டுச்சீட்டை எண்ணி கணக்கு பார்த்துக் கொள்ளலாம். விவிபாட் விரைவில் அமலுக்கு வரும் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது,
இவ்வளவு பெரிய ஒரு ஜனநாயக நாட்டில் வெற்றிகரமாக தேர்தல் முறைகளை மாற்றி அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் காண்பித்த தேர்தல் ஆணையத்தை, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் பங்காற்றிய நிறுவனங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அடுத்த முறையாவது அரசியலர் “டீச்சர்! இவன் என்னய கிள்ளுறான், தள்ளுறான்” என்று முறையிடும் சின்னப்பிள்ளைகள் போல் ~பேத்தி” தொழில்நுட்பத்தை அவமானப்படுத்தாமல் இருப்பார்களாக!