பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த இடது கை சுழல்பந்து வீச்சாளர் யார் என்று கேட்டால், எந்தவொரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனும் உடனடியாக பிஷென் சிங் பேடி என்று சொல்லிவிடுவான். இன்னும் அதிக வயதானவர்கள், வினூ மன்காட்டின் பெயரைச் சொல்லக்கூடும். இவர்கள் இருவருக்கு பிறகுதான், திலீப் தோஷி, மனீந்தர் சிங், வெங்கடபதி ராஜு, பிரக்யான் ஓஜா, ரவி சாஸ்திரி, போன்றவர்களைச் சொல்ல முடியும். ரகுராம் பட், சுனில் ஜோஷி, போன்றவர்களும் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார்கள். இந்தியாவுக்காக ஆட முடியாமற் போன சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களும் உண்டு. அவர்களில் முக்கியமானவர்கள் ராஜேந்தர் கோயல், பத்மகர் ஷிவால்கர், ராஜிந்தர் சிங் ஹான்ஸ், சுனில் சுப்ரமணியம், வாசுதேவன், திவாகர் வாசு.

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வங்கர் பாலூ. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனைப் புள்ளிவிவரங்களே சாட்சி. மொத்தம் 33 முதல் தர ஆட்டங்களில் (இந்தியாவின் டெஸ்ட் மாட்ச் காலத்துக்கு முன்னால் விளையாடியவர்) 179 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். அதைவிட பிரமிக்கத்தக்கது, அந்த விக்கெட்டுகளுக்கான அவரது சராசரி வெறும் 15.21 ஓட்டங்கள்தான். இந்த 33 ஆட்டங்களில் 17 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேலும், ஒரு மேட்சில் 10 விக்கெட்டுகளை 4 முறையும் வீழ்த்திய சாதனை புரிந்தவர் அவர். இதை ஒரு மட்டையாளரின் சாதனையாக மாற்ற வேண்டுமென்றால், 33 ஆட்டங்களில் 17 சதங்களும் 4 இரட்டைச் சதங்களும் என்று சொல்லலாம்.

1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வங்கர் பாலூ. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். பாலூவின் கல்வி பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் 1892 வாக்கில் பூனா கிரிக்கெட் கிளப்புக்கு மாறியிருக்கிறார். அது ஐரோப்பியர்களுக்கான ஒன்று. அங்கும் அந்த கிளப்பின் ஆடுகளத்தை பராமரிக்கும் பணியையே அவர் செய்து வந்தார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் மாதம் ஒன்றுக்கு 4/-ரூபாய்,

அவ்வப்போது இடது கை சுழல் பந்து வீச்சிலும் ஈடுபட்ட பாலூவின் திறனைக்கண்ட திரு. டிராஸ் என்பவர், அவரை அங்கு நடைபெறும் வலைப் பயிற்சிகளில் தொடர்ந்து பந்து வீசச் சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, அப்போது அங்கு மிகத் திறமையான மட்டையாளராக இருந்த ஜெ.ஜி. க்ரெய்க் என்பவருக்கு அதிகமும் பந்து வீசுவதை ஈடுபடுத்தப்பட்டார். கிரெய்க்,  தன்னை பாலூ அவுட்டாக்கும் ஒவ்வொரு முறையும், அவருக்கு எட்டணா கொடுத்தாகச் சொல்லப்படுவதுண்டு. இப்படி ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக வலைப்பயிற்சியில் தன் பந்து வீச்சை சீராக்கிக் கொண்டார் பாலூ. ஆயிரக்கணக்கான பந்துகளை வீசிய பா லூவை, ஒரு முறைகூட மட்டை பிடிக்க அந்த ஐரோப்பியர்கள் அனுமதித்ததில்லை. ஏனெனில், அது உயர்குடிகளுக்கு மட்டுமேயான உரிமை. அதனாலேயே மட்டை பிடிக்கும் திறன் இருந்தும், இந்த அனுபவக் குறைவினால், அவரால் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராகப் பரிமளிக்க முடியாமற் போய்விடுகிறது. இது பாலூவை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது.

அச்சமயம், பூனாவில் இருந்த ஒரு இந்து கிரிக்கெட் கிளப், ஐரோப்பிய கிரிக்கெட் கிளப்புடன் ஒரு பந்தயத்தில் ஆட முனைந்திருக்கிறது. அந்த பந்தயத்தில், அந்த இந்து கிளப்பின் சார்பாக பாலூவை விளையாட வைக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அதிலிருந்த சனாதன பிராமண உறுப்பினர்கள் அதனை எதிர்த்திருக்கின்றனர். ஆனால், அங்கு உறுப்பினர்களாக இருந்த சில தெலுங்கு வகுப்பினர், மற்றும் முற்போக்கான சில பிராமணர்களின் பிடிவாதத்தால் பாலூ, அந்த இந்துக் கிளப்பிற்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பூனா கிளப்பின் இந்த செயல் அன்று பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. பூனாவின் முற்போக்கு சக்த்திகளுக்கு பெரும் உற்சாகத்தையும், பூனாவின் இளைஞர்களிடையே சமத்துவம் குறித்த புதிய விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது.

மைதானத்தில் மற்றவருக்கு சமமாக பாலூ விளையாடினாலும், அதற்கு வெளியே ஒரு போதும் மற்றவர்களுக்கு சமமாக நடத்தப்பட்டதில்லை. விளையாட்டு வீரர்களான ஐரோப்பியர்களும் இந்து உயர்சாதியினரும் பெவிலியனுக்குள்ளே உயர்தர பீங்கான் தட்டுகளிலும் கோப்பைகளிலும் உணவருந்தினாலும் பாலூவுக்கு எப்போதும் பெவியனுக்கு வெளியே மண் குடுவைகளும் தட்டுகளுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அவரது உயர் தர பந்து வீச்சும் அவர் எடுத்த விக்கெட்டுகள் தந்த வெற்றிகளும் அவரை அவரது அணிக்கு இன்றியமையாத ஒரு வீரராக்கியது. மெல்ல மெல்ல, அவரது திறன், அவரது சாதியின் காரணமாக அவர் இழிவுபடுத்தப்பட்ட மனோபாவத்தை மாற்றி அணிக்குள் அவருக்கு மற்றவர்களுக்கு சமமான அந்தஸ்தையும் வழங்கியது.

1896ம் ஆண்டு பாலூ தன் குடும்பத்துடன் பம்பாய் நகருக்கு குடிபெயர்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஓன்று. அப்போது பூனாவில் பரவிய பிளேக் நோய். இன்னொன்று அவரது விசேஷ திறனுக்கு ஒரு பெரிய நகரம் வழங்கக்கூடிய வாய்ப்புகள். பம்பாயில், ராணுவப் பணியில் சேர்ந்த பாலூ, அங்கு புதிதாக துவக்கப்பட்ட பராமனந்த தாஸ் ஜீவன்தாஸ் இந்து ஜிம்கானா கிளப்புக்காக விளையாட அதன் அணித்தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிச்சயமாக நிறைய எதிர்ப்புகளையும் மீறித்தான் என்பதை சொல்லவே வேண்டாம். ராணுவ சேவை முடிந்து, வெளியே வந்த பாலூவை பம்பாய் பிரார்- மத்திய இந்திய ரயில்வே கம்பெனி, அரவணைத்துக் கொண்டது. அதன் அணிக்காகவும் முன்சொன்ன கிளப்புக்காகவும் விளையாடினார் பாலூ.

அந்த சமயத்தில்தான், 1906ம் ஆண்டு துவங்கி 1942-43ம் ஆண்டு வரை, இந்திய கிரிக்கெட் அட்டவணையில் மிக முக்கியமாக விளங்கிய பம்பாய் நாற்தரப்பு போட்டி (Bombay Quadrangular ) எனும் தொடர் துவங்கியது. முதலில் பம்பாய் ஐரோப்பியர்களுக்கும் பார்ஸிகளுக்கும் இடையேயான போட்டியாகத் துவங்கி, பின் ஒரு இந்து அணியும் பங்கேற்க முத்தரப்பு போட்டியாக மாறியது. 1906ல் முதன் முறையாக, இந்து அணி ஒன்று பார்சி அணியை போட்டியில் சந்திக்க அழைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களால், பார்சி அணி அந்த அழைப்பை ஏற்கவில்லை. அப்போது பம்பாய் ஜிம்கானா அணி எனும் ஐரோப்பிய அணி அந்த அழைப்பை ஏற்று இந்து அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக, இந்து அணி, 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐரோப்பிய அணியை தோற்கடித்தது. அந்த அணியின் நட்சத்திரம் பாலூதான்.

அங்கிருந்து துவங்கிற்று பாலூவின் புகழ்ப் பயணம். 1907ல் இந்துக்கள் அணி, பார்சிக்கள் அணி, ஐரோப்பியர்கள் அணி ஆகியவற்றுக்கான முத்தரப்பு போட்டியாக மாறுகிறது இது. 1906-07ல் தொடங்கி, 1911-12 வரை தொடர்ந்து இந்துக்களின் அணியே வெற்றி பெற்றது. பிறகும் அதன் ஆதிக்கம் தொடர்ந்தது. இந்த அனைத்து வெற்றிகளின் பின்னும் மிக முக்கியமான சக்தியாக இருந்தவர் பாலூதான். இது தவிர 1911ல் இங்கிலாந்து சென்று விளையாடிய ஒரு இந்திய அணியிலும் இடம் பெற்றார் பாலூ. மிக மோசமாக விளையாடி படுதோல்வியடைந்த அந்த அணியிலும் மிகச் சிறப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்தி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது திறனுக்காக பல ஆங்கிலேய கவுண்ட்டி அணிகள் தமது அணியில் அவருக்கு வாய்ப்பளிக்க முன்வந்தபோதிலும், அவர் அவற்றை ஏற்கவில்லை. அதன் பின் பாலூ 1922ல் ஒய்வு பெறும் வரை, இந்து அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரராகத் திகழ்ந்து அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தார் பாலூ (இதற்கிடையே 1912ல் ஒரு முஸ்லீம் அணியும் சேர்க்கப்பட்டு நாற்தரப்பு போட்டியாக மாறுகிறது இந்த ஆட்டம்).

இத்தனை பெரிய சாதனையாளராக இருந்தும், அந்த அணியை தலைமை தாங்கி நடத்த தடையாக அவரது சாதி இருந்து வந்திருக்கிறது. 1913லிருந்தே பல குரல்கள் அவரை அந்த அணியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த எழுந்தாலும், பெரும்பாலும் பிராமணர்கள் நிறைந்திருந்த அந்த கிளப் அதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை.  1920ஆம் ஆண்டு அவர் வாழ்வில் முக்கியமான ஒன்று. அவரது சகோதரர், பல்வங்கர் கண்பத் காலமானார். அதே ஆண்டில், முஸ்லீம் அணிக்கு எதிரான போட்டியில் அவரது அணியில் இருந்து நீக்கப்படுகிறார். அதற்கு அவரது வயது காரணமாக சொல்லப்படுகிறது. அது பெரும் சர்ச்சையைக் கிளப்புகிறது. மக்களும் தேர்வாளர்களும் இந்த முடிவினை ஏற்றுக் கொள்வதில்லை. வேறு வழியில்லாமல் பார்ஸிகளுக்கு எதிரான அடுத்த போட்டியில் பாலூ சேர்க்கப்படுகிறார். அப்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கிறது. அணியின் வழக்கமான தலைவர் எம். டி. பய் உடல் நலம் குன்றிய நிலையில், அவருக்கு பதிலாக இன்னொரு பிராமண மட்டையாளரான ட.பி. தியோதர் (தியோதர் கோப்பைக்கு அந்தப் பெயர் வழங்கிட காரணமாக விளங்கிய ஆட்டக்காரர்), அணியின் தலைவராக அறிவிக்கப்படுகிறார். இதைக்கண்ட பாலூவின் சகோதரர்களும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் ஆட்டக்காரர்களுமான விட்டலும், சிவராமும் அணியிலிருந்து விலகுகின்றனர். இது பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்துகிறது. நல்ல வேளையாக, பந்தயத்துக்கு முன் உடல் நலம் தேறிய எம்.டி. பய் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கிறார். அவருக்கு பதிலாக தலைவராக அறிவிக்கப்பட்ட தியோதர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, பாலூ துணைத் தலைவராக இடம்பெற்றார் அணியின் தலைவராக இருந்த எம்.டி. பய் (இவரும் ஒரு பிராமணர்) அந்த ஆட்டத்தின்போது வேண்டுமென்றே நீண்ட நேரம் களத்தில் இறங்காமல், துணைத் தலைவரான பாலூ, களத்தில் தலைமை தாங்க வழி வகுத்தார். அதன் பின் பாலூவின் இளைய சகோதரரான பல்வான்கர் விட்டல் 1923ம் ஆண்டு இந்து அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1926 வரை வெற்றிகரமான தலைவராக விளங்கினார்.

பாலூவின் வாழ்வில் மிக முக்கியமாக விளங்கிய இந்தத் தொடர் இந்திய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முக்கியமாக மஹாத்மா காந்தி இந்தத் தொடருக்கு எதிராக குரல் கொடுத்தார். மத அடிப்படையிலான அணிகளைக் கொண்டு விளையாடப்படும் இந்த தொடர், வேற்றுமைகளையம், இந்து-முஸ்லீம் வெறுப்பையும் வளர்த்து வந்தது என்பது அவரது குற்றச்சாட்டு. 1937ல் இந்த நான்கு அணிகளின் கூடவே இதர பிரிவினர், பௌத்தர்கள், யூதர்கள், இந்திய கிறித்துவர்கள், ஆகிய பிரிவினரைக் கொண்ட இன்னொரு அணியும் இந்தத் தொடரில் பங்கேற்க, pentangular தொடராக மாறுகிறது. ஆனால், இந்திய சுதந்திரம் நெருங்கும் சமயத்தில் ஏற்பட்ட தீவிரமான மத வேற்றுமைகள், கலவரங்கள் போன்றவற்றுக்கு இந்தத் தொடரும் ஒரு காரணமாக் கருதப்பட்டு 1946ல் இந்தத் தொடர் கைவிடப்பட்டு, பிரதேச வாரியான அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது ஒரு தனி வரலாறு. அது ஓருபுறமிருக்க, நாம் பாலூவைத் தொடர்வோம்.

தன் விளையாடும் நாட்களின் இறுதிக் காலத்தில் அம்பேத்கரை சந்தித்து அவருக்கு நண்பராகிறார் பாலூ. அரசியல் ஆர்வமும் அவரைத் தொற்றிக் கொள்கிறது. தலித் சமூகத்தின் பெரும் நாயகனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பாலூவை அடையாளம் காண்கிறார் அம்பேத்கர். பம்பாய் சைடென்ஹாம் கல்லூரியின் அவ்வளவு பிரபல்யமில்லாத விரிவுரையாளரான அம்பேத்கர், பாலூவுக்கு பாராட்டு விழாக்கள் எடுத்து சிறப்பித்திருக்கிறார். ஆனால் காலப்போக்கில், அம்பேத்கரிடமிருந்து மெல்ல விலகி காந்தியின் ஆதரவாளராகிறார் பாலூ. 1932ல் வழங்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்திற்கெதிரான காந்தியின் உண்ணாவிரதத்தினை ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் பாலூ. சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரின் பாதையை விடவும் காந்தியின் வழியே சிறந்தது என்றும் நம்புகிறார் அவர். பின் இந்து மஹாசபாவில் ஐக்கியமாகிறார் பாலூ. பாலூவும் தமிழகத்தின் எம்.சி.ராஜாவும் இணைந்து அம்பேத்கரை எதிர்த்து ராஜா –மூஞ்சே ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட ஒன்றை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக, வேறு வழியின்றி காந்தியுடன், சமரசத்துக்கு இறங்கி வந்த அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். அதன் பின் 1933ல் பம்பாய் முனிசிபல் கவுன்சில் தேர்தல்களில் இந்து மகாசபாவின் வேட்பாளராக களத்தில் இறங்கும் பாலூ சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கிறார். பின் மீண்டும் 1937ல் புதிதாக உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியில், அம்பேத்கருக்கு எதிராக போட்டியிட்டு இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார்.

தலித்துகள் வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறை காரணமாக இந்து சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகி விடக்கூடாது என்றும் அந்த முறை அமலுக்கு வந்தால் அது நடக்கும் என்றும் தீர்மானமாகக் கருதிய காந்தியின் கருத்தை ஆதரித்த பாலூ,காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடாமல் ஏன் இந்து மகாசபையின் வேட்பாளராக நின்றார் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இன்று வலுப்பெற்றிருக்கும் இந்து அமைப்புகளும் அவரை ஒரு தலித் முன்னோடியாக ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை என்பதும் விடை இல்லாத கேள்வியாக இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் விடை அவரது முழுமையான ஒரு வாழ்க்கை வரலாறு வெளியாகும்போது தெரிய வரலாம். இப்போதைக்கு இவரைப்பற்றி நசிருதின் ஷா தொகுத்தளித்து சசி தரூர், போரியா மஜூம்தார் ஆகியோர் பங்கு பெற்றிருக்கும் ஒரு 6 நிமிட ஆவணப்படம்,ஒன்று யூ. ட்யுபில் உள்ளது..

இதற்குப் பிறகான பல்வங்கர் பாலூவின் வாழ்க்கை குறித்து அதிக விவரங்கள் பொது வெளியில் இல்லை. ஜூலை, 1955ல் அவர் மறைந்தபோது, இந்தியப் பாராளுமன்றத்தின் மற்றும் பம்பாய், மாநில சட்டசபையின் அனைத்து தலித் உறுப்பினர்களும் மும்பை சாண்டாக்ரூஸ் மயானத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர் என்ற தகவல் மட்டும் கிடைக்கிறது (இந்தக் கட்டுரையும் கூட ராமச்சந்திர குஹாவின் புத்தகம் ஒன்று மற்றும் விக்கிப்பீடியா கட்டுரையின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்கிறது. பாலுவைப் பற்றிய போதுமான தகவல்கள் ஆங்கில மொழியிலோ, தமிழிலோ பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை).

பல்வங்கர் பாலூவின் கிரிக்கெட் வாழ்வு/ சாதனைகள் குறித்து ராமச்சந்திர குஹாவின் சிறந்த விளையாட்டு எழுத்துக்கான பரிசு பெற்ற “A Corner of a Foreign Field — The Indian History of a British Sport” எனும் நூலில் விரிவாகக் காணலாம். இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றை விவரிக்கும் அந்த நூலில் பல்வங்கர் பாலூவே கதாநாயகன் என்றுகூட சொல்லலாம். சென்ற நூற்றாண்டின் மிகத் துவக்கத்திலேயே ஒரு தலித் வீரர் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்தியும், புகழ் பெற்று விளங்கியிருந்தும்கூட, இன்றளவும் இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தலித் வீரர்களின் எண்ணிக்கை ஒரு கை விரல்களின் அளவுகூட இருக்காது என்பதே உண்மை. பல்வங்கர் பாலூவின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் ஏதும் ஆங்கிலத்திலோ மராத்தியிலோ வெளிவந்திருக்கிறதா என்று தேடுவதும், அப்படி இருக்கும் பட்சத்தில் அது தமிழில் மொழி பெயர்க்கப்படுவதும் மிகவும் அவசியமானவை.

இன்றைய சூழலிலும் நிலவும் சாதிய உணர்வுகள் மற்றும் ஒடுக்குமுறையின் விளைவாக தன்னம்பிக்கையிழந்து மனமொடிந்து உயர்நிலைக் கல்வி பயிலும் தலித் மாணவர் தற்கொலைகள் சில செய்திகளாக வருகின்றன. தலித்துகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தபோதிலும் கல்வியிலும் வாழ்வாதார வளங்களிலும் முன்னேறும்போது பல்வகைப்பட்ட எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி உள்ளது. இதை பிறச் சமூக இளைஞர்களும் புரிந்து கொள்ளும் வகையில், பல்வங்கர் பாலூ போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.