தேறு மனமே, தேறு!

அந்த முதியவரிடமிருந்து உயிர் கசிந்து வெளியேறியது. வலி நிரம்பிய உலகங்களான மருத்துவ மனையிலும், பராமரிப்பு இல்லத்திலும் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாகப் படுக்கையில் கிடந்திருந்தார். துவக்கத்தில் சாவைக் கட்டுப்படுத்தி நிறுத்த அவர் போராடினார், பிறகு தன் வாழ்வின் மீது கட்டுப்பாட்டைப் பெற இன்னொரு முறை போராடினார். கடைசியில், கட்டுப்பாடு மீது தான் கொண்ட தீவிர ஆசையைத் தன்னால் ஆன மட்டில் கைவிட்டார். பார்க்க வருபவர்களிடம் செய்யப்பட வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொடுப்பதை இன்னமும் செய்து கொண்டிருந்தார், ஆனால் அந்த வேலைகள் செய்யப்பட்டனவா இல்லையா என்பதைக் கண்காணிப்பது தனக்கு இயலாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆகவே, மிகக் கவனமாக, அவர் கடந்த காலமெனும் மேற்கூரையை பிரித்துச் சீர் செய்தார். பழைய மர்மங்களுக்கும், புதிர்களுக்கும் திரும்பிச் சென்றார், எப்போதோ இறந்து போயிருந்த பலரின் வாழ்வுகளையும், மேலும் நோக்கங்களையும் பற்றி நீண்ட நேரம் யோசித்தார். சிறுவயதில் தன்னைச் சில்விஷமங்களால் வருத்திய அடாவடிக்காரர்களை விளங்கிக் கொள்ளச் சில கருதுகோள்களை உருவாக்கிப் பார்த்தார். ஒரு சிறு வீட்டை வாங்குவதற்கும், குவாதமலாவில் தன் நிலத்திற்கு மறுபடி உரிமை கோரவும், கட்டுரைகளை, கதைகளை, மேலும் உரைநடைச் சிதறல்களை வெளியிடவும், திட்டங்கள் தீட்டினார்.  வாழைப்பழங்களை, கம்பு ரொட்டியை, மேலும் தங்கியிருந்த அமைப்புகள் அளித்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டார், பார்வையாளர்கள் வரும்போது தன் பொய்ப்பற்களை வாயில் பொருத்திக் கொண்டார். தன்னால் தீர்வு காண முடியாதவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கத் தீர்மானித்தார், அந்தத் தீர்மானத்தைக் கடைப்பிடிக்க ஆன மட்டும் முயற்சி செய்தார்.

பிறகு அவருடைய இதயத்தின் தசைகள், மூன்று பில்லியன் தடவைகள் துடித்த பிறகு, நிமோனியாவாலும், நீரிழிவு நோயாலும், முன்கோபிக் குணத்தின் அழுத்தங்களாலும் சளைத்துப் போனதால், ஒரு கணம் தயங்கின, துடிப்பதைத் தொடர அவற்றுக்கு முடியவில்லை. நர்ஸ் உதவி கேட்டுக் கூவினாள், உதவியாளர்களின் குழுவோடு சேர்ந்து இயங்கி, அவரை மறுபடி உயிர்ப்பித்தாள். அவளுடைய கையை அவர் ஒருமுறை அழுத்தினார், அவருடைய இதயம் மறுபடிச் செயலிழந்தது, அவரை அவர்கள் போக விட்டு விட்டார்கள். அவருடைய நரம்பு மண்டலத்திற்கு உருக் கொடுத்து இயக்கிய மின்ரசாயன உந்துதல்களின் மெலிய ஓட்டம் மெதுவாகி, பிறகு நின்று போயிற்று. உலகின் மீது அவர் கொணர்ந்து இருந்த ஓர் ஒழுங்கு வெப்பத்தை விடுத்து, சிதறத் தொடங்கியது.

அவருடைய உடல் குளிர்ந்து போயிற்று. சவத்தைப் பாடம் செய்பவர் வந்து அதை அகற்றினார். நர்ஸின் உதவியாளர் ஒருவர், இவருடைய பொருட்களைச் சேகரித்தார், சில முக்கியமற்ற காகிதத் துண்டுகளைத் தூக்கி எறிந்தார், மீதத்தை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு வைத்தார். படுக்கையை மறுபடி சீரமைத்தார்கள்: ஒருவர் அதற்கென காத்துக் கொண்டிருந்தார்.

நண்பர்கள் பார்க்க வந்தனர், அவர் போய்விட்டதைத் தெரிந்து கொண்டனர். செய்தி பரவியது, ஜ்வலிக்கும் நகைச்சுவை உணர்வும், கூரிய மதியும் கொண்டவரும், தாராள குணமுடையவருமான ஒருவர் மறைந்தது குறித்து ஒரு வருத்த அலை எழுந்தது. ஒத்தி வைக்கப்பட்ட அன்பு காட்டுதல்கள் இனி நிகழ்த்தப்பட மாட்டாதவை ஆயின. கடும் சொற்கள், என்ன காரணம் பற்றி இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும், இனி ரத்து செய்யப்பட மாட்டாதவை ஆயின.

அவர் இறக்கும் முன்னால் அவருடைய புதுப் புத்தகம் ஒன்று வெளியாகியிருந்தது, பொதுஜனப் பத்திரிகையின் சமீபத்திய இதழில் ஒரு கட்டுரை பிரசுரமானது, இன்னொரு நன்கு தெரிய வந்த பத்திரிகையில் ஒரு கதையும் வெளியாகவிருந்தது. மதிக்கப்படத் தக்க அளவு படைப்புகளை அவர் விட்டுச் சென்றிருந்தார், இன்னும் வெளியாகாமல் இருந்த தயாரிப்புகளின் அடுக்கு ஒன்று காத்திருந்தது, அவை இவருடைய மரிப்பால் இப்போது இன்னும் கூடுதலான விற்பனை சாத்தியம் உள்ளனவாகின. இறந்து பல நாட்களுக்கு அப்புறமும், இவருடைய நண்பர்கள் இவருடைய கடிதங்களையும், அஞ்சலட்டைகளையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

பல வாரங்கள் கழிந்த பின், அவருடைய மகள், தன் அப்பாவின் இறப்பு குறித்து வருத்தப்பட்டாலும், மேற்கொண்டு பொறுப்புகளைத் தான் ஏற்க நேர்ந்தது பற்றிச் சிறிதும் ஏற்பில்லாதவளாக, அவருடைய ஆவணங்கள், புத்தகங்கள் ஆகியவற்றைப் பெட்டிகளில் அடைக்கவும், பிற பொருட்களை எப்படியோ கழித்துக் கட்டவும் என்று வெளி மாநிலத்திலிருந்து வந்தாள். கதவின் பூட்டைத் திறந்து, மௌனமான, பழைய வாடை அடிக்கும் அடுக்ககத்துக்குள் நுழைந்தாள்.

அங்கு கிழவரின் ஜீவரசச் சுவடு இன்னும் வலுவாகவே இருந்தது; எப்போதுமே தன் உடைமைகளில் பொருட்படுத்தத்தக்க எதன் மீதும் அவர் அதன் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை.

வாத்துத் தலையைப் போல வடிவமைக்கப்பட்ட கைப்பிடியோடிருந்த குடை ஒன்று, கதவுக்குப் பின்னே சுவரில் சாய்ந்து கொண்டிருந்தது. அதன் கழுத்திலிருந்து ஒரு சீட்டு தொங்கியது. அவள் அப்பாவின் கையெழுத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது: “ஆர்தர் டெட்வைலரின் அன்பளிப்பு, மார்ச் மாதத்தில் மழை பெய்த பின்மாலைப் பொழுதில், பொது நூலகத்தில் நான் சந்தித்தவர் இவர்.”

அவள் அந்த அடைசலான இரண்டு அறை அடுக்ககத்தைச் சுற்றிப் பார்த்தாள். அவளுடைய அப்பா, இறப்பதற்குக் கொஞ்ச காலம் முன்பு, தன் நாடோடி வாழ்வின் இறுதிக் கட்ட நிலையமாக இந்த அத்துவானத்து இருப்பிடத்துக்கு மாறி இருந்தார். கிழவருக்கு வீடு என்று அழைக்குமளவு இன்னும் பழகாத புது இடமான அது, தெளிவாகவே அலங்கோலமாகக் கிடந்தது. சில உடைமைகள் இன்னும் அட்டைப் பெட்டிகளிலேயே இருந்தன, சென்ற இருப்பிடத்திலிருந்தோ அல்லது அதற்கும் முந்தைய இடத்திலிருந்தோ அவை அப்படியே திறக்கப்படாத பெட்டிகளில் இருந்திருக்க வேண்டும்.

யாரோ இந்த இடத்துக்குள் அத்து மீறிப் பிரவேசித்துத் தன் அப்பாவின் சொற்ப உடைமைகளைக் கலைத்துப் போட்டுத் தேடி, எடுத்துப் போவதற்காக அட்டைப் பெட்டிகளில் சிலவற்றை அடுக்கி இருக்க வேண்டும் என்று சில கணங்களுக்கு அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. அவருடைய முந்தைய இடத்தில் கூட, ஒரு இளைஞன் கத்தியோடு வந்து அவருடைய பணப்பையிலிருந்து 40 டாலர்களை எடுத்துக் கொடுக்கும்படி அதட்டியிருந்தான். மருத்துவ மனையில் அவர் சாகக் கிடந்த போது, அவருடைய இடத்தில் நுழைந்து அவருடைய பொருட்களை நோண்டி எடுத்துக் கலைக்க ஒருவன் வந்திருந்தான் என்ற எண்ணமே அவளுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் என்ன, இனிமேல் அதெல்லாம் ஒரு பொருட்டுமில்லை, என்று அவள் நினைத்தாள். அவர் என்னவொ பணத்தை எடுத்துக் கொண்டு போயிருக்கவில்லை, அவர் விட்டுப் போனதும் அதிகமிராது. அவரிடம் மதிப்புள்ளதாக இருந்ததெல்லாம் அவருடைய புத்தியும், அவருடைய விடாப்பிடிவாதமான முயற்சியும், அவருடைய எழுத்துத் திறனும்தான், நிஜத்தில் அவற்றைத்தான், அவர் தன்னோடு எடுத்துக்கொண்டு போயிருந்தார்.

அவளுக்கு இந்தச் சுத்திகரிப்பு வேலை அசாத்தியமானதாகத் தெரிந்தது, அதுவும் எல்லாவற்றையும் உடனடியாக அவளே செய்வது ஆகாத காரியமாகத் தெரிந்தது. ஒருக்கால் அவள் தனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரித்துக் கொள்ளலாமோ என்னவோ. அங்கு தேயிலை இருக்குமானால்.

சமையலறையில், துண்டுக் காகிதங்கள் பல இடங்களில் பசை நாடாவால் ஒட்டப்பட்டு இருந்தன, இடுக்குகள், திறப்புகளிலெல்லாம் ஒட்டப்பட்டிருந்தன, டப்பாக்களில் நுழைக்கப்பட்டு இருந்தன. கோடு போட்ட மஞ்சள் காகிதத்தில் கிழிக்கப்பட்ட துண்டு ஒன்று, ரெஃப்ரிஜிரேட்டரின் முன்னால் நாடாவால் ஒட்டப்பட்டிருந்தது, அதில், “இத்தனை பெரிய ஃப்ரிட்ஜா! எதற்கு? நானோ ஒரு கிழவன், நான் சமைப்பதே இல்லை.”

இளைஞராக இருந்த போது மட்டும் சமைத்தீர்களா என்ன, என்று மகள் நினைத்தாள். அவள் வீட்டுக்கு வரும்போது ஒரு ஹாட் டாக் தான் கிட்டும், சீன உணவகத்திலிருந்து வாங்கப்பட்ட உணவுதான் அவள் இரவு உணவுக்குத் தங்கினால். அவள் பதின்ம வயதினளாக இருக்கையில், இந்த மாதிரி தத்தாரி அப்பாவுடன் ஒரு சாதாரண வாழ்வை உருவாக்க முயற்சி செய்து, தான் போகும்போதெல்லாம் அவருக்குச் சாப்பாடு சமைத்துக் கொடுத்தாள், ஆனால் அவள் செய்யக் கூடிய தவறுகளைச் சகிக்க அவருக்குப் பொறுமையிருக்கவில்லை.

அடுப்பின் மீது, கடிகாரத்தின் மேல் ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது, அதன் முகத்தை மறைத்தது, “இந்த கடிகாரத்தை கவனிக்க வேண்டாம். அடுப்புகளில் உள்ள கடிகாரங்கள் எப்போதுமே தவறாகத்தானிருக்கின்றன.”

அடுப்பின் மீது மேலும் பல காகிதத் துண்டுகள் பசைநாடாவால் ஒட்டப்பட்டிருந்தன.

“காலைகளில், என் வயிறு அனுமதித்தால், எனக்கென்று ஒரு குடுவை காஃபி தயார் செய்து கொள்கிறேன்.”

“கொழுப்பில் பொறிக்க ஆழமான வலைக் கரண்டி! இவர்கள் என்னைக் கொல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்களா என்ன?”

“இந்தச் சூளைஅடுப்பு சுத்தம் செய்யப்படணும். என் அம்மா முழங்காலிட்டு அமர்ந்து சூளையடுப்பை ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்வார், ஒவ்வொரு மாலையும் சூடான சாப்பாட்டைத் தயாரித்து மேஜையில் வைத்தார். காலைகளில் எங்களுக்கு ஓட்ஸைச் சமைத்துக் கொடுத்தார், இன்று போல வாட்டிய ட்விங்கிகளும், உடனடி தயாரிப்புக் காலைச் சிற்றுண்டிகளும் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. தன் துணிகளனைத்தையும் தானே தைத்துக் கொண்டார், என் சகோதரியுடையதையும் தைத்தார். அவர் இறந்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன, ஆனால் நான் அவரை இழந்ததற்கு இன்னமும் வருந்துகிறேன்.”

அந்த இளம்பெண் பெருமூச்சு விட்டாள். முப்பத்தைந்து வருடங்கள் கழிந்த பின், அவள் தன் அப்பா இல்லாததற்குத் தொடர்ந்து வருந்துவாளா? ஒருவேளை நமக்கு வயதாக வயதாக நாம் இழந்த மனிதர்களைப் பற்றி நிறைய யோசிக்கிறோமோ? ஆனால், அவள் பல வருடங்கள் முன்பே அவருடைய இல்லாமைக்கு மனதைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.

ஒரு வேலையை அல்லது பெண்ணைத் தேடி நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு அவர் இடம் பெயர்ந்தபோதே, அவருடைய மகள் என்ற உணர்வையே, தான் அவருடைய பாதுகாப்பில் இருக்கிற உணர்வையே அவள் இழந்து விட்டிருந்தாள்.  இப்போது அவர் இல்லாததை அவள் இன்னும் உணரத் துவங்கவில்லை. அவர் இல்லாமல் போய் விட்டது போலத் தெரியவில்லை, எங்கேயோ இடம் மாறிப் போயிருக்கிறார் என்பது போலத்தான் இருந்தது.

அவள் ஒரு சிறு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதைக் கொதிக்க வைத்தாள். அடுப்புக்கு அருகில் இருந்த ஒரு அலமாரியைத் திறந்தாள்: ஒரு சமையல் சோடாப் பொடி டப்பி, அட்டையால் செய்யப்பட்ட, மிளகு- உப்புத் தூளடங்கிய மேஜைக் குடுவைகள் கொண்ட பெட்டி, புளிப்புக் காடி, மசாலா சாமான்கள்…

ஒரு மணப் பொருள் ஜாடியை நகர்த்தினாள், மஞ்சள் காகிதத் துண்டு மிதந்து கீழே விழுந்தது. “காட்டுத் தைமின் மணம், பாம்புகளை விரட்டும் என்று ப்ளினி நமக்குச் சொல்கிறார். வேறு புறம், ஸைரக்யூஸைச் சேர்ந்த டியோனிஸியஸோ இதை ஒரு காம ஊக்கி எனக் கருதுகிறார். எகிப்தியர்கள் இதை உடலைப் பாடம் செய்யப் பயன்படுத்தினார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது, அதனால் கொஞ்சம் பெரியதாகவே உள்ள இந்தப் பொட்டலம் பூராவுமே எனக்கு வரும் நாளில் தேவைப்படலாம்.”

மூலிகைகளுக்குப் பின்புறம் கை நீட்டி அங்கிருந்து தேயிலைப் பைகள் கொண்ட ஒரு அட்டைப் பெட்டியைப் பற்றினாள், ஒரு பல்லங்காடியின் முத்திரையிட்ட பெட்டி. ஏதோ ஒன்றுமில்லாததற்கு இது மேல். பெட்டியின் மேல் எழுதப்பட்டிருந்தது: “என் அம்மா தன் வாழ்நாள் பூராவும் ரெட் ரோஸ் தேநீரை அருந்தினார்.  உலகத்தில் லாப்ஸாங் ஸூஷாங், கன்பௌடர், ரஷ்யன் காரவான் என்று வசீகரமான பெயர்கள் கொண்ட அத்தனை மணமுள்ள தேயிலை வகைகளும் இருக்கையில் இதை எப்படி அருந்திக் கொண்டிருந்தார் என்று நான் கூட வியந்திருக்கிறேன். இந்தப் பெட்டியை, சுவையில் புதுமைகளை விரும்பாத விருந்தாளிகளுக்கு என்று நான் வைத்திருக்கிறேன். ’சமையல் சோடா’ என்று பெயரிட்ட தகரப் பெட்டியில் நல்ல தேயிலை இருக்கிறது. ஏன் என்று கேட்க வேண்டாம்.”

அவள் சமையல் சோடா தகரப் பெட்டியைக் கீழே இறக்கினாள். மூடியின் உள்புறம் சிறிய மஞ்சள் காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது. சிறிய எழுத்துகளில் அதில் எழுதப்பட்டிருந்தது. “புகழ் பெற்ற ஊஜி பசுந்தேயிலை, சிவப்பு நிறக் காப்புத் துணியை கழுத்தில் அணிந்த, பாசி படிந்த கற்சிலைகளான நரிகளின் அணி சூழ்ந்திருக்க, இனாரிக்கு அங்கு ஒரு கோயில் இருக்கிறது.” அவள் அப்பா ஜப்பானில் ஜென் பற்றிப் படிப்பதற்காகப் பல வருடங்கள் செலவழித்திருந்தார். அந்த அனுபவம், அவரை அமைதியானவராகவோ, எல்லாவற்றையும் சமநிலையோடு ஏற்பவராகவோ, ககனவெளியின் சுருதியில் ஒன்றியவராகவோ, அல்லது கீழைத் தேச மதங்கள் வேறு என்ன மாறுதல்கள் கொணரக் கூடியன என்று அவள் நினைத்தாளோ அந்த மாறுதல்கள் எதையும் பெற்றவராகவோ ஆக்கவில்லை என்பது அவளுடைய எண்ணம்.

ஒரு தேயிலைச்  சுருளா? அவள் மேடைக்குக் கீழே இருந்த இழுப்பு அறையைத் திறந்தாள். அதில் குறிப்புகள் ஏதுமில்லை, ஆனால் கத்திகளுக்கும், துடுப்புக் கரண்டிகளுக்குமிடையே ஒரு மூங்கில் தேயிலை வடிகட்டி இருந்தது. அதை அவள் எடுத்துக் கொண்டாள். அதன் கையில், சிலந்தி இழையாகக் கருப்பு மசியில் “சல்லடை போல ஒழுகும்” என்று ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருந்தது.

அடுக்ககத்தின் புழங்கும் அறையில், பயன்பாட்டால் பழசாகி விட்டிருந்த சாய்வுநாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டவள், அதன் கைப்பிடியில் பசும் தேநீர் நிரம்பிய ஒரு கோப்பையை கீழே விழாதபடி ஜாக்கிரதையாக அமர வைத்து விட்டு, நிலைமை என்னவென்று யோசித்துப் பார்த்தாள். வீட்டுக்கு வாடகை ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரத்தில் புதுப்பிக்கப்பட வேண்டி இருந்தது, அந்த இடத்துக்கு இன்னொரு மாத வாடகையைக் கொடுக்க அவளுக்குச் சிறிதும் உத்தேசமில்லை. முதலாவதாக எல்லாப் புத்தகங்களையும் வகை பிரித்து பெட்டிகளில் அடுக்குவதுதான் சிறந்த வழி, பிறகு மற்றதை எல்லாம் பார்த்து எதை விற்கலாம், எதைத் தானமாகக் கொடுக்கலாம் என்று முடிவுகட்டலாம். அவள் அப்படி ஒன்றும் அதிகம் எடுத்துப் போவதாயில்லை. அவர் நிஜமாகவே இத்தனை புத்தகங்களையும் படித்திருப்பாரா?

சிறுமியாக இருக்கையில் அவளுக்குப் படிக்கப் பிடித்திருந்தது. ஆனால் படிப்பதோ அத்தனை நேரம் எடுத்துக் கொண்டது, எல்லாமே யாரோ ஒருத்தர் தலைக்குள் செலவழிக்கப்பட்ட நேரம். திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் என்றால், மற்றவர்களோடு சேர்ந்து நாம் பார்க்கலாம். இறுதியில் சாரம் அதுதான்: ஒரு புத்தகத்தை மட்டும் துணையாக வைத்துக் கொண்டு, தன்னந்தனியாக எத்தனை நேரம் செலவழிக்க நாம் தயாராக இருக்கிறோம்?

அங்கே, அப்பாவின் அடுக்ககத்தில், அவருடைய வாழ்வு எத்தனை தூரம் புத்தகங்களைப் பற்றியதாகவும், அவை கொடுத்த சகவாசத்திலும் கழிந்தது என்பதை அவளால் பார்க்க முடிந்தது.  அவர் புத்தகங்களைப் படைத்தார் என்பது மட்டுமல்ல – ஏதோ ஒரு விதத்தில், புத்தகங்களும் அவரைப் படைத்திருந்தன. அவர் யாரென்று பார்த்தால், தான் படித்த புத்தகங்களின், எழுதிய புத்தகங்களின் கூட்டுத் தொகைதான் அவர். இப்போதோ, மீதம் இருந்ததெல்லாம் புத்தகங்கள்தாம். அவளும்தான்.

இளம் வயதினளாக இருக்கையில் புத்தகங்களை, அவர் படித்தவை, எழுதியவை ஆகிய இரண்டு வகைகளையும், தன் மீது அவர் காட்டும் பாசத்துக்குப் போட்டி என்றுதான் அவள் பார்த்தாள். அந்தப் போட்டியை விட்டு அவள் விலகி வெகு காலம் ஆகி விட்டிருந்தது.

சுருக்கப்படாத அகராதியின் பெருந்தடிமனான புத்தகம் மூடப்பட்டு மேஜையில், தட்டச்சு எந்திரத்துக்கு அருகில் அமர்ந்திருந்தது.  வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதி. அவள் அதைத் திறந்தாள். புத்தகத்தின் கட்டமைப்பு உடைந்திருந்தது, அட்டை தொங்கி தலைப்புப் பக்கத்தில் திறந்தது. பதிப்பாசிரியரின் பெயர் சிவப்பு மசியால் நட்சத்திரக் குறியிட்டுக் காணப்பட்டது, அவளுடைய அப்பாவின் கையெழுத்து அந்தப் பக்கத்தின் அடிபாகத்தில் பரவி ஓடியது. “1940 ஆம் ஆண்டில், நியு யார்க் பல்கலையின் பழைய மெயின்லாண்ட் வளாகத்தில், எனக்கு முதலாமாண்டில் இங்கிலிஷ் போதனையாளராக இருந்தவர் டாக்டர் கோவ். அவரிடம் படித்த எல்லா மாணவர்களிலுமே சிறந்த, பிரகாசமான எதிர்காலம் கொண்ட மாணவன் நான் என்று என்னிடம் சொன்னார்,” என்று சிவப்பு மசியில் அந்தக் குறிப்பு இருந்தது. அதற்குக் கீழே கருப்பு மசியில்: “அவருடன் மறுபடியும் தொடர்பு கொள்ள நான் செய்த முயற்சிகளுக்கு ஏதும் பலனில்லை.”

பிற்பாடு, ஒரு மலிவான, ப்ளாஸ்டிக் அட்டையிட்ட ‘வெப்ஸ்டர்ஸ் நைன்த் கலீஜியேட்’ என்ற தலைப்பிட்ட அகராதியின் பிரதியில், பதிப்பாசிரியக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் பக்கத்தில், சிவப்பு மசியில் ஒரு குறிப்பை அவள் கண்டாள்: “விஷயம்: ப்பி.பி.கோவ்?” மறுபடி கருப்பு மசியில், ‘ப்பி.பி.கோவ் இறந்து விட்டார்.”

அவளுடைய அப்பாவும்தான்.  ஒருநாள் அவளும்தான் இறந்து போவாள், அவளுடைய உதிரிப் பொருட்கள் எல்லாவற்றையும் சுத்திகரிக்கும் வேலை வேறு யாருக்கோ கிட்டும். அதை மனதில் கொண்டால், இந்தச் சிறிய மஞ்சள் குறிப்புத் துண்டுகளுக்கு ஓர் அர்த்தம் கிட்டியது. அவருடைய புத்தகங்களைப் போலவே, இவையும் அவருடைய வாழ்வுப் பாதையை நீட்டும் முயற்சிதான். அவர் போன பின்பு வேறு யாருடைய வாழ்வுக்குள்ளேயோ நீண்டு பற்றிக் கொள்ளும் சிறு கொக்கிகள் அவை.

படுக்கையறையில் சில காலிப் பெட்டிகள் குவிக்கப்பட்டிருந்தன. “அந்தப் புத்தகங்கள் வெளியே எடுக்கப்பட்ட பெட்டிகளா இவை?” அவள் அவற்றில் பலவற்றை புழங்குமறைக்கு இழுத்து வந்தாள், புத்தகங்களை அவற்றில் இடத் துவங்கினாள். அவள் வைத்துக் கொள்ளப் போகும் புத்தகங்களுக்கு ஒரு பெட்டி, இன்னொன்று அவள் விற்கப்போகும் புத்தகங்களுக்கு, மூன்றாவது சுத்தமாகப் பிரயோசனம் இல்லாத புத்தகங்களுக்கு, அவை நன்கொடைப் பொருட்களை விற்கும் குட்வில் கடைக்கு.

அங்கு விற்கப்பட வேண்டிய புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றில் மஞ்சள் காகிதக் குறிப்புகள் இருக்கின்றனவா என்று அவள் எச்சரிக்கையோடு தேடினாள், ஆனால் சில பக்க ஓரத்துக் குறிப்புகளைத்தான் கண்டாள். அவள் அப்பா அவர் படித்த ஒவ்வொரு புத்தகத்தோடும், சில சமயம் ஒரு எழுத்தாளரின் சிந்தனைகளைத் தன் நினைவு கூரல்களால் இடையீடு செய்தபடி, ஒரு சம்பாஷணையை நடத்திக் கொண்டிருந்தார்.

“துருப்புகளை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலிலிருந்து கரையிறங்குவது ஒன்றும் இந்த வர்ணனையில் தெரிவது போல அத்தனை எளிதாக இருக்கவில்லை.”

“நான் 1969 இல் சாமர்கண்டில் இருந்தபோது இந்த மசூதி பொதுஜனத்துக்குத் திறந்து இருந்தது. இர்வானின் மஜொலிகா ஓடுகள், எல்லா இடங்களிலும் நான் பார்த்தவற்றிலேயே மிக அற்புதமானவை.”

“1357 தான் இந்த யுத்தம் நடந்த தேதி என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, ஆனால் சந்தேகமின்றி அது 1358இல்தான் நடந்திருக்கிறது.”

அந்தச் சிறு உருக் கொண்ட கிறுக்கல்களைப் பார்த்து அவள் முகம் சுளித்தாள். அவை நிச்சயம் அந்தப் புத்தகங்களின் மறு விற்பனைக்கான மதிப்பைக் குறைக்கும். இந்த மதிப்பு மிக்க புத்தகங்களில் எங்கே பார்த்தாலும் அவள் அப்பா ஏன் இப்படி எழுதித் தள்ளி இருக்கிறார்? அது அவற்றின் மீது மரியாதை இல்லை என்பது போலக் காட்டியது.

சாமுவெல் பீப்ஸின் ‘நாட்குறிப்புகளை’த் திறந்தாள், அவள் அப்பாவின் நீண்ட குறிப்பை, உள்பக்கம் இருந்ததைப் படித்தாள். “புத்தகங்கள் நினைவுகள்,” அது சொன்னது. “அவை தம் உள்ளடக்கத்தை நினைவு வைத்திருந்து கடத்தித் தருகின்றன. அவை யார் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பதை எல்லாமும், யாரால் அவை கொடுக்கப்பட்டன, என்ன நிகழ்ச்சிக்காக என்பனவற்றையும், தடயமாகப் பாதுகாக்கின்றன. அவற்றின் பக்கங்களின் விளிம்புகளில், வாசகருக்கும் எழுதியவருக்குமிடையே ஏற்பட்ட பூசல்களில் மத்தியஸ்தம் செய்கின்றன.” அவளுடைய அப்பாவின் புத்தகங்கள் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவளுக்கும் அவருக்குமிடையே இருந்த ஒரு பத்தாண்டுகால வெற்றிடம் பற்றி அவற்றால் மத்தியஸ்தம் செய்ய முடியுமா? இறந்து விட்ட ஒருவரோடு பிறகு நம்மால் சமாதானம் செய்து கொள்ள முடியுமா?

அவள் வேலை செய்து கொண்டிருக்கையில், ஏதோ ஒன்று அவளுக்குப் புதிராகத் தெரிந்தது. சாதாரணமாக அவள் அப்பா வசித்த இடங்களிலேயே புத்தக அலமாரிகள்தான் இருப்பதில் மிகுந்த ஒழுங்குடன் காட்சி தரும் இடங்களாக இருக்கும், ஆனால் இங்கு எல்லாம் தாறுமாறாகக் கிடந்தன. புத்தகங்களின் இடையே இடைவெளிகள் இருந்தன, ஆனால் படுக்கையருகே அல்லது மேஜை மீது மிகச் சில புத்தகங்களே இருந்தன. குளியலறையில் கிரேக்க எழுத்துகள் பற்றிய ஒரு புத்தகம்தான் இருந்தது, இஸ்லாமியக் கட்டடக் கலை பற்றி ஒன்றும், விலை மலிவான துணி மூடிய அட்டை கொண்ட என்சைக்லோபீடியா பிரிட்டானிகாவின் பதினொன்றாம் பதிப்பில், ஈடி யிலிருந்து எஃப்யு வரையான புத்தகம் ஒன்றும்தான் இருந்தன. என்ன காணாமல் போயிருந்தன? யாரோ அப்பாவின் பொருட்களைக் கலைத்துப் போட்டிருக்கிறார்களா என அவள் மறுபடியும் வியந்தாள்.

அடுத்த சில நாட்கள் அத்தனை வேகமாகப் போகவில்லை, ஆனால் அவை கடந்து சென்றன. அவள் தன் அப்பாவின் ஜப்பானியத் தேயிலையை முடித்திருந்தாள், கோப்பைகளுக்கான அலமாரியிலிருந்து இன்னும் திறக்கப்படாத க்ராக்கர் பொட்டலம் ஒன்றைத் திறந்து சாப்பிட்டாள். பீட்சாவை வரவழைத்தாள். மிக அதிகமாக டயட் பெப்ஸியைச் சாப்பிட்டாள்.

கான்ஸாஸ் மாநிலத்தில் ஒரு நூலகம் அவள் அப்பாவின் ஆவணங்களை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால், அதற்கு அனுப்ப கடிதங்களையும், தயாரிப்பு நிலையில் இருந்த பிரதிகளையும் பெட்டிகளில் அடுக்கினாள். அவளுக்குத் தெரிந்திராத பல நபர்களின் ஒளிப்படங்களைக் கண்டாள், சில அவளுக்கு அர்த்தமுள்ள படங்களாகவும் இருந்தன.

ஒரு கேவலமான ஆரஞ்சுநிற உடையில், கனமான தோல் பூட்ஸ்களோடு இருந்த அவள் அம்மாவின் ஒரு போலராய்ட் படம், ஒருவேளை இருபது வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம். குழந்தையான அவளை ஏந்திக் கொண்டு இருக்கும், ஏற்கனவே நடுவயதாகி விட்ட, அவள் அப்பாவின் இன்னொரு படம். அவர்களின் முகங்களில், எதிர்காலம் பற்றி நம்பிக்கையைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் வெளிப்படையாகத் தெரியவில்லை.

ஒரு அடுக்ககத்தின் முன் புல்தரையில் அவள் அப்பா உறங்கிக் கொண்டிருக்கும் சிறு குழந்தையாக இருக்கும் படத்தோடு ஜோடியாக அதே போல உறங்கும் குழந்தையாக அவளின் படமும், மடக்கப்படக் கூடிய ஒரு மலிவுவிலை சட்டத்தில் செருகப்பட்டிருந்தன. ஒல்லியாக, வெட்டப்பட்ட முடியோடு இருந்த சிறுகுழந்தைகளாக இருவரும் பார்க்க ஒரே மாதிரிதான் தெரிந்தனர் என்று அவள் நினைத்தாள். அதை அவரும் கவனித்திருந்தார் என்பது வேடிக்கைதான்.

ஒரு அங்குலச் சதுரமே இருந்த சிறு படமொன்றில் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த அவள் அப்பா இருந்தார்.  தோற்ற மயக்கம் கொணரும் கால்சராயும், தலைக் கவசமும் அணிந்த ஒல்லியான பதின்ம வயது இளைஞனாக, ஒரு எந்திரத் துப்பாக்கியுடன் காட்சியளித்தார். இன்னொரு இளைஞனுடன் அதே போன்ற காட்சியில் ஒரு படம்: அதன் பின்பக்கம், ‘உடி ஹெரால்ட்- குவாடல்கெனாலில் கொல்லப்பட்டான்.’ அவள் உடி ஹெரால்டைப் பற்றிக் கேட்டதே இல்லை, ஆனால் அவள் அப்பா அந்தப் படத்தை ஐம்பது வருடங்களாக வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறார்.

அவள் புத்தகங்களைப் பிரித்தாள், அவற்றைப் படிக்கவும் செய்தாள். தான் விரும்பிய அளவு வேலைகளைச் செய்து முடிக்கவும் அவளால் முடிந்தது. அவர் எத்தனையோ புத்தகங்களில் குறிப்புகளை எழுதி இருந்தார், அவற்றை வரிசை ஒழுங்கில்லாமல் அவள் படித்தாள்.

அவளுக்கும் அது தெரிந்தது, ஏனெனில் அவர் தன் குறிப்புகளில் தேதி இட்டிருந்தார். வேண்டுமானால் அவற்றை வரிசைப்படுத்தி அடுக்கி, தன் அப்பாவின் மனநிலைகளும், ரசனைகளும் வரிசையாக முன்னே விரிகையில் அவளால் அவற்றைப் படித்து அறிய முடிந்திருக்கும்.  ஒருவேளை உடி ஹெரால்ட் அந்தக் குறிப்புகளில் எங்கோ இருக்கக் கூடும். ஒருக்கால், அவளும், அவள் அம்மாவும் கூட அவற்றில் எங்காவது இருக்கலாம்.

அவள் மேலும் மஞ்சள் குறிப்புகளைக் கண்டு பிடித்த வண்ணம் இருந்தாள். அவருடைய பீரோவில் மேல்பக்க இழுப்பறையில், அவள் அப்பா பழைய பணப்பைகள், வேலை செய்யாத கைக்கடிகாரங்கள், மேலும் மணிக்கட்டுச் சங்கிலிப் பித்தான்கள் – இவற்றில் ஒரு டஜன் பெட்டிகள்- வைத்திருந்தார். அவர் எப்போது இந்த ஃப்ரெஞ்சு மணிக்கட்டுப் பித்தான்களை அணிந்திருப்பார் என்று நினைக்கிறாய், எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள். ஏதோ ஒரு பெட்டியைத் திறந்தாள். உள்ளே அதில் ஒரு மஞ்சள் துண்டுக் குறிப்பு இருந்தது: “ஒரு மனிதனின் சட்டையில் மணிக்கட்டுப் பித்தானை வைத்து அவருடைய வயது, சமூக அந்தஸ்து ஆகியனவற்றை நாம் சொல்லி விடக் கூடிய காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் அவருடைய மொத்தச் சட்டையைப் பார்க்க வேண்டி இருக்கும். அதுகூட அவர் அப்படி ஏதும் அணிந்திருந்தால்தானே?”

புத்தகங்களில் எழுதியிருக்கிறார் என்று அவள் அப்பாவின் பேரில் முதலில் எரிச்சல் கொண்டவள், மேன்மேலும் படித்த போது, ஒரு வகையில், வாழ்வில் தன்னை எங்கும் பகிராத அளவுக்குப் புத்தகங்களில் அவர் பகிர்ந்திருக்கிறார் என்று உணர்ந்தாள். ஒருக்கால் அவற்றை அவள் வைத்துக் கொள்ள வேண்டுமோ: உலகில் சிதற விடப்பட்டால்- விற்பனையிலோ அல்லது சும்மாவே கொடுத்து விடப்பட்டாலோ- அவை தம் அர்த்தங்களை இழந்து விடும், தம் உரிய இடங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டது போலாகும். யாருக்காக இந்தக் குறிப்புகளை அவர் எழுதி இருக்கிறார், அவள் வியந்தாள். எனக்காகவா? அவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் அவள் இவற்றை எல்லாம் படிப்பாள் என்று? எந்தப் புத்தகத்திலும் அவர் ஏதாவது எழுதி இருந்தால் அந்தப் புத்தகத்தை, விற்பதற்காகவோ, கொடுத்து விடுவதற்காகவோ பிரிக்கப்பட்ட குவியலில் வைக்காமல், அப்புத்தகத்தில் தனக்கு ஈடுபாடு இல்லாத போதும், தனக்கு அனுப்பப்படுவதற்காக இருக்கும் அடுக்கில்தான் வைக்கிறோம் என்பதாகத் தன்னைப் பார்த்துப் புரிந்து கொண்டாள்.

மூன்றாம் நாள் மாலை வந்த போது, அவள் மிகவும் சளைத்திருந்தாள், இன்னும் நிறையப் புத்தகங்கள் பிரித்து வைக்கப்படாமல் இருந்தன. இத்தனை நேரம் கொடுக்கப்பட வேண்டிய புத்தகங்களின் குவியல் பெரிதாகி இருக்க வேண்டும், ஆனால் அவைதான் மிகச் சிறிய குவியலாக இருந்தன.

த ஃபிஸிக்ஸ் ஆஃப் டைம் அஸிமெட்ரி. இதை வைத்துக் கொள்வதா வேண்டாமா?  அவள் புத்தகத்தைத் திறந்தாள்: காலம் பின்னோக்கி ஓடுவதில்லை என்பதை நிறுவும் சமன்பாடுகள் அடர்த்தியாக நிரம்பிய புத்தகம். அப்பா இதைப் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை, என்று அவள் நினைத்தாள். அதை அடுக்கில் மறுபடி வைத்தாள். இந்தப் புத்தகத்தை அவர் ஏன் வாங்கிக் கொண்டார்? சாய்வு நாற்காலியில் அவள் சாய்ந்தாள், கால் மணை மீது கால்களை உயர்த்தி வைத்துக் கொண்டாள், சற்றுக் கிறங்கியிருக்கத் தன்னை அனுமதித்தாள், கொஞ்சமே கொஞ்ச நேரம்.

அடுத்த அறையில் ஏதோ சத்தம் அவளுக்கு விழிப்பூட்டியது, ஜன்னலருகே ஏதோ சப்தம். ஜன்னல் கண்ணாடி பக்கவாட்டில் நகர்த்தப்பட்டது, ரோம காலத்துத் தேவதையான ஃபான் போல ஒரு சிறுவன் உள்ளே நழுவி இறங்கினான். அவனை விட அவள் எத்தனையோ பெரிய உரு, அதனால் பயப்படுவதை விட வியப்புதான் அவளுக்கு அதிகம் எழுந்தது. இவன் தான் அப்பாவின் காகிதங்களை எல்லாம் கலைத்தானா? இவன் அக்கம்பக்கத்திலிருக்கும் ஒரு சிறுவனாக இருக்கலாம், அவள் அப்பா இவனோடு பேசி இருந்திருக்கக் கூடும், மிட்டாய்கள் கொடுத்திருக்கலாம். இந்த எண்ணம் அவளைச் சிறிது தொல்லை செய்தது: என்ன மாதிரிச் சிறுவன், அதுவும் இத்தனை சிறு வயதுப் பையன், இறந்தவர்களிடமிருந்து திருடுவான்?

அந்த அறை தெருவிளக்கால் மட்டுமே ஒளியூட்டப்பட்டிருந்தது. புத்தகப் பெட்டிகளும், குப்பைகளும் இருந்த இடங்கள் என்று அவளுக்கும் தெரிந்த பகுதிகளைத் தவிர்த்தபடி, அவன் இருட்டினூடே மௌனமாக நகர்ந்தான். அவள் அப்பாவின் படைப்புகள் இருந்த அலமாரிக்குச் சென்றான், அதிலிருந்து எடுத்து அவள் இன்னும் பெட்டிகளில் அடுக்கவில்லை, ஒரு புத்தகத்தை எடுத்தான், திறந்தான், பார்க்கத் துவங்கினான், ஒவ்வொரு பக்கத்தையும் தனித் தனியாகப் புரட்டினான். அவன் என்ன தேடுகிறான், என்று அவள் வியந்தாள். படிக்க முடியாத அளவு அங்கு இருட்டாக இருந்தது. நிழலிலிருந்தவள், இருண்ட அறையின் மிக இருண்ட பகுதியிலிருந்தபடி அவள், அவனைக் கவனித்தாள், அவன் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டியபடி இருப்பதைப் பார்த்தாள். இறுதியில், அவள் பேசினாள்.

“நீ என்ன தேடுகிறாயோ தெரியாது, ஆனால் அது அங்கே இல்லை.”

அவன் திரும்பினான், கண்கள் பெரிதாக இருந்தன, இருட்டில் கூட பளபளப்பாக இருந்தன. நாற்காலியிலிருந்து எழுந்தாள், அவனை நோக்கி நகர்ந்தாள். “நீ என்ன செய்கிறாய்? உன்னால் எப்படிப் பார்க்க முடிகிறது?”

நெருக்கி வெட்டிய, கலகலப்பாகச் சுருளோடு இருந்த கருப்பு முடி, பெரிய கருப்புக் கண்கள். அவன் மெலிவாக இருந்தான், ஒன்பது வயதிருக்கலாம், ஏதோ பழக்கமானவன் போலத் தெரிந்தான். சுற்று வட்டாரத்தில் பதுங்கித் திரிபவனாக அவனைப் பார்த்திருக்கிறாளா?

“நீ யார்?”

அந்தச் சிறுவன் அசையாமல் நின்றான், நாம் கவனிக்கிறோம் என்பது தெரிந்து கொண்ட எலி அல்லது அணிலைப் போல. அவள் நெருங்கினாள். “பயப்படாதே. நீ என்ன தேடினாய்?” அவன் மூச்சு விடுகிற மாதிரித் தெரியவில்லை. “மற்ற புத்தகங்களை நீதான் எடுத்துக் கொண்டு போனாயா?” ஏதும் ஒலி இல்லை. அவன் கண்களில் ஒளி பட்டுச் சிதறியது.

அவன் ஊமையா? அவனால் அவள் பேசியதைக் கேட்க முடிந்ததா? ஒரு எச்சரிக்கையும் இல்லாமல் அவள் மேல் ஒரு குரங்கைப் போல அவன் தாவினான், அவளைக் கீழே தள்ளி, உதைத்து, பிறாண்டி, கடித்து, அவளுடைய கண்களைத் தேடிப் பிடித்து விடத் துழாவினான். முதலில் அவனைத் தன் மீதிருந்து விலக்க மட்டுமே அவள் போராடினாள், ஆனால் அது ஒரு கடினமான சண்டையாக இருந்தது. இத்தனை சிறிய குழந்தையால் இவ்வளவு ஆக்ரோஷமாகப் போராட முடியுமா. அவளுடைய குரல்வளையை அவன் நசுக்கினான், திடீரென்று அவளுக்குப் பயம் வந்தது. தன்னிடம் அப்படி ஒரு வலு இருப்பதாக அதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்த அவள், தன் வலுவை எல்லாம் திரட்டி, கைகளை மேலே கொணர்ந்து அவனுடைய கைகளுக்கிடையே நுழைத்து, முழங்கையருகே அவற்றை வெளிநோக்கித் தள்ளினாள், தன் கழுத்தில் அவனுக்கிருந்த பிடியை உடைத்தாள், அவனை நிலை தடுமாறுமாறு கீழே தள்ளினாள். தன் மேலிருந்து அவனைக் கீழே தள்ளி, விரிப்பில் அவன் முகம் பதியுமாறு ஒரே அடியில் வீழ்த்தி, அவன் மீது புரண்டு அமுக்கினாள். அவன் போராடுவதை நிறுத்தி விட்டான் என்பதை அறிந்தாள். ஜாக்கிரதையாக அவனுடைய முடியைப் பற்றி அவன் தலையை உயர்த்தியவள் அது தொங்கி விட்டது என்று புரிந்து கொண்டாள். அவனுடைய கழுத்தை அவள் முறித்திருக்கிறாள். அவள் எழுந்தாள், அவனருகே மண்டியிட்டு அமர்ந்தாள். அவன் வெறுமனே நினைவிழந்து இல்லை. அவன் இறந்து விட்டிருந்தான், முன்னெப்போதையும் விடச் சிறிதாகத் தெரிந்தான்.

இந்த நிலைமையில் ஒருத்தர் என்ன செய்ய வேண்டும்? அவள் காவல் துறையினரைக் கூப்பிட வேண்டும். அவனைக் கொல்ல அவள் எண்ணவில்லை. அவர்கள் அவளை நம்புவார்களா? ஏன் நம்ப மாட்டார்கள்? அவள் எழுந்திருந்தாள், தடுமாறினாள். இதை அவள் எப்படிச் சரி செய்ய முடியும்? அவளால் வித்தியாசமாக வேறு என்ன செய்திருக்க முடியும்?

விளக்கைப் போட அச்சப்பட்டு, அந்த இருண்ட அறை ஊடே ஜாக்கிரதையாக நகர்ந்து சமையலறைக்கு அவள் போனாள். குழாயிலிருந்து ஒரு கோப்பையில் நீரை நிரப்பி அதை மடக்மடக்கென்று குடித்தாள். ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடங்களோ அங்கேயே நின்றாள். பிறகு புழங்கும் அறைக்குச் சென்றாள், அவள் போலிஸைக் கூப்பிடப் போகிறாள்.

இறந்த சிறுவனைப் பார்க்கச் சென்றாள். இருட்டில், அந்த உடல் அங்கிருந்த புத்தகக் குவியலிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடி கிடந்தது. ஆனாலும் அது ஏனோ பழக்கமானதாகத் தெரிந்தது, சிறுவனாக இருந்த அவள் அப்பா மாதிரி இருப்பதாக அவள் நினைத்தாள். புல்தரையில் தூங்கிய அவரைப் போல.

அங்கே சிறுவனின் தலையருகே ஒரு மஞ்சள் குறிப்புக் காகிதம் கிடந்தது. அதை அவள் எடுத்தாள்.

“செகாவ் எழுதினார், ‘மூடர்களும், எத்தர்களும்தான் எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்து கொண்டும் இருப்பவர்கள்.”

“ஒத்துக் கொள்கிறேன்” அவள் சொன்னாள். “ஆனால் எதையுமே அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்தான் சாத்தியமா? கடந்த காலம் என்பது எப்போதுமே போனதுதானா? இறந்தவர்களோடு சமாதானம் செய்து கொள்வது சாத்தியமா?”

உடலருகே மண்டியிட்டு அமர்ந்தாள். அது அவள் அப்பா மாதிரி இருந்ததா? அவளை மாதிரியா? அங்கு எந்தப் பதிலும் கிட்டவில்லை. அங்கே எந்த உடலும் இல்லை. அடுக்கு மேல் அடுக்காகப் புத்தகங்கள்தாம் இருந்தன.

அவள் கீழே கை நீட்டி சிறுவனாக இருந்த ஒரு புத்தகக் குவியலிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். த ஃபிஸிக்ஸ் ஆஃப் டைம் அஸிமெட்ரி. ஒரு பேனாவைத் தேடி எடுத்தாள், புத்தகத்தைத் திறந்தாள், அதன் முதல் காப்புப் பக்கத்தில் எழுதினாள். “இயற்பியலுக்குத் தெரியாத பல காரணங்களால், காலம் ஒரே திக்கில்தான் ஓடுகிறது. புத்தியும், மனதும், விசித்திரமான வகையில், காலத்தை மீறி விடுகின்றன.”

(இங்கிலிஷ் மூலம்: ஐலீன் கன்

தமிழாக்கம்: மைத்ரேயன்/ ஃபிப்ரவரி/ மார்ச் 2017)

###