துறவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்? ஏன் மெய்மை தேடும் பயணத்தில் ஓர் ஆண் பெண்ணை இடைஞ்சலாகக் கருத வேண்டும்?. ஏன் பட்டினத்தார் போன்ற துறவிக்கே ’கண் காட்டும் வேசியர் தம் கண் வலையில் சிக்கி மிக அங்காடி நாய் போல் நெஞ்சம் அலைய’ வேண்டும்? ஏன் ஏக நாதனின் இறையடி இறைஞ்ச போக மாதரைப் போற்றுதல் ஒழிய வேண்டும்? காமம் கடைசி வரை தெரு நாயாய்த் துரத்தும் போலும். ஏன் பின் காமத்தை வெல்லும் தன் இயலாமையாய்ப் பாடாமல் பெண் மேல் ஏற்றி பழித்துப் பாட வேண்டும்? மனம் கடந்து மெய்மை தேடும் பயணத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? பட்டினத்தார் பெருந் துறவி. ‘பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது’ என்பார் தாயுமானவர். பெண்ணைப் பெண்ணென்பதற்காகப் பழிப்பது பட்டினத்தார் நோக்கமாக இருக்க முடியுமா? மெய்மை தேடி காமத்தைக் கடந்து போக வேண்டிய தன் மனப் பயணத்தில் அதற்கு இடைஞ்சலாய்ப் பெண்ணை வெறுக்கத் தக்க உடலாய் பாவித்து பாவித்து பாடிப் பாடி மனதைக் கடக்க வைக்கும் முயற்சியாய்த் தான் பட்டினத்தாரின் பெண்கள் பற்றிய வரிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறதா? இது ஓர் உளவியல் உத்தியாய் கையாளப்பட்டிருக்கிறலாமோ? அப்படியானால் ஒரு பெண் தன் மெய்மை தேடும் பயணத்தில் காமம் குறுக்கிடாமலா இருக்கும்? ஏன் ஆண் இடைஞ்சலாய் இருக்கக் கூடாது? ஏன் எதிர்மறை நிலையில் ஆணைப் பழித்துப் பாடக் கூடாது? இப்படியெல்லாம் சிந்தனைகளில் ஆழ்ந்து போக வைத்தது வாசித்த ஒரு பெண் துறவியின் கவிதை. அது எதார்த்தமாய் வித்தியாசமாய் இருந்தது. எந்த விதமான எதிர் நிலைப் பாடில்லாமல் முழுக்க முழுக்க தன்னை உள் விசாரணைக்குள்ளாக்கி, கடைசியில் தான் மெய்மையுணர்ந்த விதத்தை ஒரு பெளத்தப் பெண் துறவி சொல்லும் கவிதை அது.
’எனது தோற்றப் பொலிவாலும், மேனியாலும்,
எழிலாலும், கீர்த்தியாலும் போதையுற்று
இளமையின் திமிராலும்
ஏனைப் பெண்களைத் தாழ்ச்சியுடன் நோக்கினேன்.
இந்த உடலை அலங்கரித்தேன் ஆடை அணி பூண்டு.
முணு முணுத்தனர் அறிவீனர்.
வாசலில் ஒரு விலைமகளாய் நான்
வலை வீசும் ஒரு வேடனைப் போல்.
என் ஆபரணங்களைப் பகட்டினேன்
என் அந்தரங்க உறுப்புகளைக் காட்டுவது போல.
எப்போதும் ஜனங்களை இகழ்ச்சியாய்க் கருதிக் கொண்டே அவர்களுக்கு மயக்கத்தைத் தோற்றுவித்தேன்.
இன்று என் பிச்சை முடிந்தது.
தலை மழித்து, வெளி அங்கியைப் போர்த்திக் கொண்டு
இப்போது மரத்தடியில் அமர்ந்துள்ளேன்.
எதுவும் திட்டமிட்டல்ல நான் அடையப் பெறுவது.
தெய்வீகமானதோ, சாமான்யமானதோ,
சகல தளைகளும் அறுந்தன.
மனதை மாசுறுத்தும் எல்லாவற்றையும் களைந்தெறிந்து விட்டேன்.
நான் அமைதியுற்றேன்; விடுதலையுற்றேன்.’( Verses 72-76)
இதை இயற்றிய விமலா(Vimala) என்ற பெளத்தப் பெண் துறவி துறவுக்கு முன் ஒரு வேசியாய் இருந்தவள். புத்தரின் தலைமைச் சீடர்களில் ஒருவரான மொகல்லனாவை(Moggallana) மயக்க முன்று தோல்வியுற்று, மனம் வெட்கித் திருந்தி துறவியாகி விடுதலையுற்றவள். இவள் தன் வாழ்வைப் பின்னோக்கிப் பார்ப்பதில் எந்த ஒளிவு மறைவுமில்லை; இவளின் விடுதலை வெறும் சாமான்யத் தளைகளிலிருந்து மட்டுமல்ல; தெய்வீகத் தளைகளிடமிருந்தும் கூட; மனங் கடந்த தன் ஆன்மீக அனுபவத்தை இதை விடச் சிறப்பாக அதே சமயத்தில் எளிதாகப் பாசாங்கின்றி சொல்ல முடியுமா என்பது சந்தேகமே.
இக் கவிதை பெளத்தப் பெண் துறவிகள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பான தேரிகாதாவில்(Therigatha) இருக்கிறது. தேரி என்றால் பெளத்தப் பெண் துறவிகளில் மூத்த நிலையினர்( Senior ones)- ஞானமுற்றதால்; காதா என்றால் கவிதைகள்; தேரி காதா பெளத்தப் பெண் துறவிகள் தங்களின் துக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களைச் சொல்லும் உன்னதக் கவிதைகள். இவை இந்தியாவில் பெண்கள் முதலில் பாடிய கவிதைகளில் இவையும் சில என்பதாலும், பெண்கள் இயற்றிய கவிதைகளின் முதல் கவிதைத் தொகுப்பு என்பதாலும், பெளத்தத்தின் அடையாளமாய் மட்டுமன்றி பெண்ணியத்தின் அடிப்படையிலும் முதன்மை பெறுவதாய் எடுத்துக் கொள்ளலாம். இந்தக்
கவிதைகளில் காட்சியாகும் பெண்ணுலகம் பரந்த ஒன்று. பல் வேறு சமூகப் பொருளாதார நிலைகளைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தம் பின் புலங்களின் தளைகளையும் தடைகளையும் மீறி பெளத்த தம்மத்தில் ஈர்ப்புற்று, பயின்றொழுகித் தம் விடுதலையை அமைத்துக் கொண்டனர். பெண்ணிய நோக்கில் இவர்களின் விடுதலை தனித்த பரீட்சார்த்தமாய் இருக்கிறது. அது பெண்ணுடல் என்ற பிரக்ஞையைத் தாண்டியதாய் இருப்பின் அடிப்படைப் புரிதலில் அனுபவம் சார்ந்த பூரண விடுதலையாய் உள்ளது. அவர்களின் புரிதலில் இருப்பு என்பது கந்தம்(Khandha), தாது (Dhatu), ஆயாதான(Ayatana) என்ற காரணிகளின்(factors) அடிப்படையில் அமைந்திருக்கிறது. கந்தம் என்பது ஓர் ஆளுமையை (personality) உருவாக்கும் ஸ்தூல உடல்(Rupa), உணர்வுகள்(Vedana), கருத்தாக்கம்( Sanna), மன எதிர் வினைகள்(Sankhara), பிரக்ஞை(Vinnana) என்ற ஐந்து கூறுகளின் கட்டுமானம். தாதுக்கள் என்பன எல்லாவற்றுக்குமான மூலக் கூறுகளான நிலம், நீர், அக்கினி, வாயு என்பன. ஆயாதன என்பது ஐம்புலன்களும், மனமும் அடங்கியது. ஆக, இருப்பை கந்தம், தாது, ஆயாதன என்ற இந்த மூன்று காரணிகளின் இடையிலான தொடர்பில் ஒன்றையொன்று சார்ந்த கட்டுமானமாயும் , தனது ஆளுமையை ஓர் ஆளாய்க் (person) காணாமல் வினைச் சங்கிலியாயும் (processes) கண்டு, அது வெறும் கோட்பாட்டு ரீதியிலான வறட்டு அறிதலாயில்லாமல் அனுபவமாய் உணர்ந்து இந்தப் பெண்கள் இருப்பின் துயரத்திலிருந்து தங்கள் விடுதலையைப் பெற்றவர்களாகிறார்கள். இந்த நிலையில் எந்தக் கவிதைப் புலம்பலுக்கும்- பெண்ணைப் பழித்தோ அல்லது ஆணைப் பழித்தோ – இடமில்லை. எந்த தாபத்திற்கும், சபலத்திற்கும் புகலில்லை. தேரி கதாவில் பெரிய அத்தியாயத்தில்(Great Chapter) வரும் சுமேதாவின்(Sumedha) கவிதையிலும், தன்னைக் காமக் கண்ணோட்டத்தில் வழிமறிக்கும் ஓர் அறிவீனனை எதிர் கொள்ளும் சுபா(Subha) என்ற பெண் துறவியின் நீள் கவிதையிலும், இன்னும் பல பெண் துறவிகளின் கவிதைகளிலும் (e.g Mittakali(Verse 96), Sona (Verses 103-106), ) மேற் சொன்ன இருப்பின் உண்மை நிலை உணர்ந்த மனத்தின் தெளிவும் உறுதியும் வெளிப்படுகின்றன. இருப்பின் இந்த ஆழமான புரிதலில், கவிதைகள் யாக்கை நிலையாமை பற்றி பேசினாலும், ’காயமே பொய்யடா; வெறும் காற்றடடைத்த பையடா’ என்ற விரக்தியின் தொனியில்லை. நிலையில்லா உடலின் மாற்றங்களை அவற்றின் இயக்க கதியில்(dynamic) அங்கீகரிக்கும் விருப்பு வெறுப்பற்ற சமான நிலையை இந்தப் பெண் துறவிகள் பெற்றிருந்தனர். உதாரணமாக பிக்குணியாகும் முன் விலை மகளாய் இருந்த அம்பாபாலியின்(Ambapali) கவிதையில் கேசாதி பாதமாய் தன் இளமையையும், முதுமையையும் ஒப்பிட்டுச் சொல்லும் கவிதையில்
இந்தச் சமான நிலை தான் அடி சரடாய் இருக்கிறது. இந் நீள் கவிதையின் முதலில் வரும் பாடல் இது:
’ஒரு காலத்தில் என் தலை முடி சுருள் சுருளாயும் வண்டுகளின் நிறம் போல் கருமையாயும் இருந்தது.
இன்று முதுமையால்
அது சணல் போல் இருக்கிறது.
இது உண்மை உரைப்பவரான புத்தர் கூறியது போல
எதுவும் வித்தியாசமானதல்ல அதை விட.
(Verse 252)
தேரி காதாவில் வரும் சிறப்பு பெண் துறவிகள் சிலர் தாங்கள் ஞானமுற்ற கண்ணிமைக்கும் கணத்தின் அனுபவத்தைப் பதிவு செய்வது. சிகா(Siha) என்ற பெண் துறவியின் அனுபவம் எப்படி தற்கொலையின் கடைசிக் கணமும் விடுதலைக்கான கணமாய் விழிப்பு மனத்திற்கு சாத்தியமென்பதைக் காட்டுகிறது.
சஞ்சலத்திலும் தாபத்திலும் வருந்தி
எந்த மனக் கட்டுப்பாடுமின்றி
எப்பொழுதும் துன்புற்றிருந்தேன்.
போக எண்ணங்களில் செயல்பட்டு கிலேசங்களுக்கு ஆட்பட்டு
கிளர்ச்சியிலே கட்டுண்ட மனதால்
நிம்மதியின்றி இருந்தேன்.
இளைத்தும், வெளிறியும் ஏழாண்டுகள் அலைந்து திரிந்தேன்.
இராப் பகல் மகிழ்ச்சியில்லை எனக்கு.
ஆழ்ந்த துயரே நானுற்றது.
இந்த இழிந்த வாழ்வினும்
தூக்கிலிட்டுக் கொள்வதே சாலதென்று
கயிறொன்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றேன்.
சுருக்கை பலமாக்கி, கிளையில் கட்டி,
கழுத்தில் அதை மாட்டிக் கொண்ட அளவில்
என் மனம் விட்டு விடுதலையாகியது.(Verses 77-81)
அடுக்கடுக்கான துயரங்களில் பைத்திய நிலைக்குத் தள்ளப்பட்டு, புத்தரின் போதனைகளில் விடுதலையுற்ற பதசாராவின் (Patachara) அனுபவம் தான் கடந்து வந்த ஆன்மீக நிலைகளை நம்பகத் தன்மையோடு பதிவு செய்கிறது.
வயல்களில் உழுதும், நிலத்தில் விதைகளை விதைத்தும், பெண்டு பிள்ளைகளைப் பேணியும் இளைஞர்கள் செல்வம் சேர்க்கின்றனர்.
அப்படியானால்
நான் குணவதியாய் இருக்கும் போதும், ஆசான் போதித்தபடி நடக்கும் போதும், சோம்பியில்லாது அமைதி காக்கும் போதும்
ஏன் விடுதலையை உணர்கிலேன்?
என் பாதங்களைக் கழுவும் போது
தண்ணீரை இன்னொரு வகையில் உபயோகப்படுத்திக் கொண்டேன் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி அது பாய்வதை அவதானித்து.
பிறகு
ஒரு நல்ல ஜாதிக் குதிரையை இழுத்துப் பிடிப்பது போல மனதை இழுத்துப் பிடித்தேன்.
ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு குடிசைக்குள் நுழைந்தேன்.
முதலில் படுக்கையை நோக்கினேன்.
பின் இருக்கையில் அமர்ந்தேன்;
ஓர் ஊசியால் விளக்கின் திரியை இழுத்தேன்.
விளக்கணைந்ததும் தான் தாமதம், என் மனம் விடுதலையாயிற்று.(Verses 112-116)
இந்தத் தொகுப்பில் உள்ள பெண் துறவிகள் பலர் தத்தமது வாழ்வில் சந்தித்த துயரங்கள் உருக்கம் பெற்று இன்றைய கால கட்டத்திலும் பெண்கள் சந்திக்கும் துயரங்களைக் காட்சிப்படுத்துவதாய் உள்ளன. குழந்தைகள் இழந்த பெண்கள் (ஒரு பாடலில் 500 பெண்கள் குறிக்கப்படுகிறார்கள் (Verse127), இல்லற வாழ்வில் மகிழ்ச்சியின்மை, விலைமகள் வாழ்க்கை, உற்றோர் சாவு, பெற்ற
பிள்ளைகளின் புறக்கணிப்பு, உற்ற எல்லோரையும் இழந்து ஆதரவின்மை, பிச்சை வாழ்க்கை, கணவனால் கைவிடப்படல், தாயையும், மகளையும் சேர்த்து ஆண் பெண்டாளும் கொடுமை- இப்படி பெண்ணுலகின் துயரம் தீராத பாலையாய்த் தகித்து விரிகிறது. கிச கோதமி(Kisagotami) என்ற பெண் தன் குழந்தையின் சாவின் நிதர்சனத்தை ஏற்க மறுத்து, இறந்த மகனின் உடலைச் சுமந்து கொண்டு, மருந்து வேண்டித் திரிந்து, கடைசியில் புத்தரை அடைந்து, மருந்து செய்ய சாவு நிகழாத வீட்டிலிருந்து கடுகு கொண்டு வா என்று புத்தரால் பணிக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் எண்ணுவதற்கும் அதிகமான சாவுகளின் நிகழ்வின் நிதர்சனத்தை உணர்ந்து துறவியாகி புத்தரின் போதனைகளில் விடுதலையுற்றாள். தன் குழந்தையின் சாவின் துயரத்திலிருந்து ஒரு தாய் மீள்வது சாதாரணமானதல்ல. மீள்வது மட்டுமல்ல; அதற்கும் மேல் போய் அந்த தனிப்பட்ட துயரத்தை, அடிப்படையில் இருப்பின் துயரமாய்ப் புத்தரின் போதனைகளின் வழி கண்டு விடுதலை காண்பது இன்னும் சாதாரணமானதல்ல. தாழ்ந்த நிலையிலிருந்த பெண்கள் மட்டுமல்ல, அரச குலத்து, செல்வந்த வணிக குலத்துப் பெண்களும் துறவு பூண்டு துக்கத்தினின்று விடுதலை தேடியுள்ளனர் என்ற பதிவு தனிப்பட்ட, சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் மட்டுமல்ல இப் பெண்களின் துறவுக்குக் காரணம் என்பதை மேலும் வலியுறுத்துகிறது. (சண்டா( Chanda) என்ற ஒரு பெண் துறவி வயிற்றுக்காகத் துறவு பூண்ட தன் கதையைப் பதிவு செய்வாள்(Verses122-126)). ஆக, தனிப்பட்ட, சமூகப் பொருளாதாரக் காரணங்களை விட, அப்படியே இருந்ததாய் எடுத்துக் கொண்டாலும், தம் அன்றாட வாழ்வின் பயணத்தில் ஒரு கட்டத்தில் இருப்பின் அடிப்படைச் சிக்கலான துக்கத்தினின்று விடுதலையாக இப் பெண் துறவிகள் தேடிய தீவிரமான நேர்மையான தேடலைத் தான் இவர்களின் கவிதைகள் பதிவு செய்கின்றன என்று புரிந்து கொள்வது நியாயமானதாயிருக்கும். அந்த வகையில் இவர்களின் தேடல் பெளத்தம் சார்ந்திருந்தாலும், வெறும் மத ரீதியிலான வறட்டுத் தனமான நம்பிக்கைகளைச் சார்ந்ததாயில்லாமல் மேற் சொன்னது போல் வாழ்வின் அன்றாட கண்ணிமைக்கும் கணங்களில் விழிப்பு மனதில் உணர்ந்து, உணர்ந்த அனுபவங்களில் புத்தரின் தம்மத்தை உரைத்துப் பார்த்து சரியென்ற பட்டறிவார்த்ததில்(empirical) கட்டமைக்கப்பட்டதாய் நம்பகத் தன்மையுள்ளதாய் அமைகிறது.
இத் தொகுப்பில் புத்தரின் தலைமைச் சீடர்களில் ஒருவரான சரிபுத்தாவின்(Sariputta) இளைய சகோதரிகளில் ஒருத்தியான சிசுபச்லாவின் (Sisupachala)) கவிதை வரிகள் கவனிக்கத்தக்கதாய் உள்ளன.
மொத்த உலகமே தழலிருக்கிறது;
மொத்த உலகமே எரிகிறது.
மொத்த உலகமே கொழுந்து விட்டு எரிகிறது;
மொத்த உலகமே நடுங்குகிறது.( Verse 200)
இந் நெருப்பு வரிகள் , ‘எல்லாம் பற்றி எரிகிறது’ என்று ஆரம்பிக்கும் புத்தரின் நெருப்பு பற்றிய பேருரையை எதிரொலிப்பதாக இருக்கின்றன. எப்படி மனித அனுபவம் அனைத்துமே தாபத்தில், வெறுப்பில், மடமையில், வேட்கையில் பற்றி எரிகிறது என்பதை புத்தரின் நெருப்புப் பேருரை சொல்லும். அகவயப்பட்டுமல்ல புறவயப்பட்டும் இன்றைய சூழலில் இவ் வரிகளைப் புரிந்து கொள்வது தேவையாயிருக்கிறது. முன் எப்போதும் விட இப்போது தனி மனித உலகம் ‘உலகமயமாதலில்’ இணைக்கப்பட்டிருக்கிறது. முன் எப்போதும் விட இப்போது தனி மனித இயக்கமும் சமூக மன இயக்கமும் பரஸ்பரம் பாதித்துக் கொள்கின்றன. பெளத்தத்தின் வேட்கை என்ற கருத்தாக்கத்தை சமூக மன இயக்கத்தில் பொருத்திப் பார்க்கும் போது, ஏன் சர்வ தேசச் சந்தைப் போட்டிகளில், ஆதிக்கச் சண்டைகளில், இனம், மொழி, மதத்தின் அடிப்படையிலான மோதல்களில் இன்றைய உலகம் பற்றி எரிகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆக தனி மனித இருப்பின் சிக்கல் சமூக இருப்பின் சிக்கல்; சமூக இருப்பின் சிக்கல் தனி மனித இருப்பின் சிக்கல். தனி மனிதத் துக்கம் உலகத் துக்கம்; உலகத் துக்கம் தனி மனிதத் துக்கம். ஆக, அக வயத்திலும் புறவயத்திலும் சார்பில் கட்டப்பட்ட வலைப் பின்னல் தான் நாம் வாழும் உலகம். இந்த உண்மையின் வெளிச்சத்தில் தான், நாம் இவர்களின் கவிதைகளை வாசிக்கும் போது இவர்களின் துக்கங்களை நமக்கு நெருக்கமாய் உணர்கிறோம். அனுதாபம் கொள்கிறோம். தாம் விடுதலை பெற்ற செய்தியை அடங்கிச் சொல்லிச் செல்லும் இரத்தமும் சதையுமான இப் பெண் துறவிகளின் கவிதை வரிகளில் இவர்கள் நம் அகக் கண்களில் நிழலுருவம் கொள்வதைத் தவிர்க்காமல் இருக்க முடியவில்லை.
ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசியார் சார்ல்ஸ் ஹேலிஸியின் (Charles Halliesy) மொழி பெயர்ப்பில் தேரிகாதாவின் முன்னைய பதிப்புகளையும் ஆய்ந்து செப்பம் செய்யப்பட்டு தேரிகாதா- முதல் பெளத்தப் பெண்களின் கவிதைகள் ( Therigatha- Poems of First Buddhist Women) என்ற தலைப்பில் இந்தக் கவிதை நூல் வெளி வந்துள்ளது. பெளத்தப் பெண் துறவிகள் என்று சொல்லப்படாமல் பெளத்தப் பெண்கள் என்றே நூல் தலைப்பில் சுட்டப்படுகின்றனர். ஆங்கிலம் வழி வாசிக்கையில் மூல பாலி மொழி தெரிந்து
அதில் வாசித்தால் இக் கவிதைகளை இன்னும் நெருக்கமாக, செறிவாக உள் வாங்கிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் சற்று மேலோங்காமல் இல்லை.
Source: Therigatha, Poems of the First Buddhist Women- Translated by Charles Halliesy,
Murty Classical Library of India